💞அத்தியாயம் 9💞

புதுசா என் வாழ்க்கைக்குள்ள வர்ற எந்த மனுசங்களையும் நம்ப முடியலயாரை பாத்தாலும் முதல்ல சிரிச்சுப் பேசிட்டு அப்புறம் வார்த்தையால வதைக்க ஆரம்பிச்சிடுவாங்களோனு பயமா இருக்குஇத்தனை வருசம் கழிச்சும் உடல் ரீதியாவும் மனரீதியாவும் ரோஹன் குடுத்த காயம் இன்னும் ஆறாத ரணமா உள்ளுக்குள்ள வலிக்குதுஅந்த வலி என்னைக்கு நின்னு போகுதோ அன்னைக்குத் தான் என்னால சக மனுசங்களோட இயல்பா பழக முடியும்

                                                             –அஸ்வினி

முதல் நாள் வேலை சீக்கிரமாக முடிந்துவிட்டது தன்விக்கு. தனஞ்செயனுக்கும் ஷான்விக்கும் வேலை முடிய இன்னும் அரைமணிநேரம் ஆகும் என்ற நிலையில் அவள் அலுவலக அறையின் வெளிவராண்டாவில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.

மேல்தளத்தின் வரவேற்பு பகுதியில் இருந்த பெண் கிளம்பிவிட அந்த தளம் முழுவதும் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது. பளீரென பால் ஒளியைச் சிதறச் செய்த விளக்குகள் அந்த இடத்தில் இருளின் கால்தடம் பதியாமல் பார்த்துக் கொள்ள இந்த வெளிச்சமும் அமைதியுமே தான் படிப்பதற்கு போதுமென நினைத்த தன்வி இன்றைய தினத்தில் நடத்தப்பட்ட பாடங்களை ஒரு முறை திருப்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவளும் கிளாராவும் நூலகத்தில் எடுத்து வந்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டவள் தனது டேப்லெட்டில் அவளையும் வீடியோவில் இணைத்துக் கொண்டாள். ஏனெனில் மெக்டொனால்டில் அவளது வேலைநேரம் முடிவடைந்து ஓய்வாக இருப்பதாக கிளாரா சற்று முன்னர் தான் செய்தி அனுப்பியிருந்தாள்.

இருவரும் புத்தகத்தில் உள்ள எதையோ குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் அவள் பின்னே “ஹலோ ப்யூட்டிஃபுல்” என்ற குரல் கேட்கவும் தன்விக்குத் தூக்கி வாரி போட்டது.

வீடியோவில் கிளாரா “தனு சம் ஒன் இஸ் ஸ்டேண்டிங் பிஹைண்ட் யூ” என்று சொல்லவும் விருட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே நிதிப்பிரிவில் பணியாற்றும் ஆலிவர் நின்று கொண்டிருந்தான். அவனது சிரிப்பும் ஊதாநிற கண்கள் ஒளிரும் விதமும் அவளுக்குக் கிஞ்சித்தும் பிடிக்கவில்லை.

“என்ன? எதுக்கு என்னை கூப்பிட்டிங்க மிஸ்டர் ஜோன்ஸ்?” என்று அவனிடம் கேட்க

“தனியா இங்க உக்காந்திருக்கிங்களேனு ஒரு அக்கறைல கேட்டேன் மிஸ் தன்வி” என்று அமெரிக்க ஆங்கிலத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய ஆலிவர் ஜோன்ஸின் பார்வை அவள் மீது படிந்த விதமே தன்விக்கு அவன் மேலுள்ள மரியாதையைத் தகர்த்தெறிந்தது.

“உங்களோட அக்கறைக்கு ரொம்ப நன்றி… ஆக்சுவலா நான் என் ஃப்ரெண்டோட ஸ்டடீஸ் பத்தி பேசிட்டிருக்கேன்… நீங்க கிளம்புனிங்கனா நல்லா இருக்கும்”

எப்படியோ தைரியத்துடன் பேசிவிட்டாள். அவளது வெளிப்படையான பேச்சில் தெரிந்த பிடித்தமின்மையில் அவன் முகம் கறுக்க அங்கிருந்து கிளம்பிவிட்டான். அவன் சென்றதும் அஸ்வினி அன்றே சொன்னது நினைவுக்கு வந்தது.

“தப்பு பண்ணுறவங்க தான் பயப்படுவாங்க… நீ இங்க படிக்க தான் வந்திருக்க… அப்போ ஏன் பயப்படுற? எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு ஷான்வி மாதிரி தைரியமா இரு” என்ற அவளது வார்த்தைகள் தான் எவ்வளவு சரியானது!

இப்போது தான் தைரியமாக அவனிடம் பேசியதால் அவனே விலகிச் சென்றுவிட்டான். இதையே சென்னையில் இருந்த போதும் செய்திருக்கலாமோ என்ற யோசனை காலம் சென்ற பின்னர் வந்தது.

இப்போது யோசித்து பிரயோஜனமில்லை என்று பெருமூச்சு விட்டபடி திரையில் தெரிந்த கிளாராவிடம் பேச ஆரம்பிக்க அவளோ

“இப்போ வந்துட்டுப் போனானே அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு… அவனோட பார்வை சரியில்ல தனு” என்று எச்சரித்தாள். அவளது எச்சரிக்கையை மனதில் குறித்துவைத்துக் கொண்டவள் அதன் பின்னர் பாடத்தில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.

 சரியாக அரைமணிநேரம் கழிய தனது ஷோல்டர் பேக்கில் டேபை வைத்தவள் கீழ்த்தளத்துக்குச் சென்றாள். ஷோல்டர் பேக்குடன் நின்றிருந்தவள் விஸ்வஜித்துடன் பேசியபடி வந்து கொண்டிருந்த அஸ்வினியில் பார்வையில் விழ இருவரும் அவளருகே சென்றனர்.

முகம் முழுவதும் அப்பாவித்தனத்தைப் பூசியபடி கைகள் ஷோல்டர் பேக்கின் வார்களைப் பிடித்திருக்க ஒற்றைக்காலை மடித்தபடி மேஜை மீது சாய்ந்து நின்றவள் அங்கே விழுந்த சரவிளக்கின் ஒளியில் பொன்னிற சிற்பம் போல நின்றிருக்க விஸ்வஜித்தின் ரசனைப்பார்வை அவளைத் தழுவுவதை அறிந்த அஸ்வினி தொண்டையைச் செறுமி அவனைக் கேலியாய் நோக்க அவன் அசட்டுப்புன்னகையுடன் அவளுடன் நடந்தான்.

 தன்வியின் அருகில் இருவரும் வர அவள் அப்போது தான் அவர்களைக் கவனித்தாள் போல. அஸ்வினியைக் கண்டதும் மரியாதையுடன் கூடிய புன்னகை முகத்தில் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் அவள் அருகே தன்னைக் குறும்பாய் நோக்கிய விஸ்வஜித்தின் கண்களைச் சந்தித்ததும் அவளது வதனம் செவ்வண்ணம் பூசிக் கொண்டது.

அதற்குக் காரணம் என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஆலிவர் ஜோன்ஸை போலவோ, அத்தைமகன் தாரகேஷை போலவோ விஸ்வஜித்தின் பார்வையில் விரசம் இல்லை என்பது மட்டும் தெரியும்.

அம்மா சோறு ஊட்டும் போது வானில் வெண்ணிலவைக் கண்டு ரசிக்கும் சிறுபிள்ளைக்கே உரித்தான ரசனைபாவம் தான் அவன் விழிகளில் நிரம்பி இருந்தது. அது தன்விக்குள் ஒருவித மாற்றத்தை உண்டு பண்ணியது என்னவோ உண்மை.

ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் இருக்க முயன்றபடியே “உங்க ஒர்க் முடிஞ்சுடுச்சா அஸுக்கா? வீட்டுக்குக் கிளம்பிட்டிங்களா?” என்று அஸ்வினியிடம் மட்டும் பேசியவள் தனஞ்செயனும் ஷான்வியும் வருவதைக் கவனிக்கவில்லை. அவளுடன் பேசிக் கொண்டிருந்த அஸ்வினியும் தான்.

அஸ்வினி தன்வியிடம் அவளது முதல் நாள் வேலையனுபவம் மற்றும் சகப்பணியாளர்கள் பற்றி கேட்க அவள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். வீட்டுக்குச் செல்லவில்லையா என்று அஸ்வினி கேட்கும் போது அவர்களுக்கு மிக அருகாமையில் வந்து விட்டனர் ஷான்வியும் தனஞ்செயனும்.

“உங்களுக்கு தனு மேல இவ்ளோ அக்கறை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல மிஸ் அஸ்வினி” என்றவனின் குத்தல் குரலில் அஸ்வினி திரும்பிப் பார்த்தாள். அவளைக் கண்டுகொள்ளாது விஸ்வஜித்தை நோக்கிப் புன்னகைத்தவன் தன்வியிடம்

“கிளம்பலாமா தனும்மா? ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு பாரு… நாளைக்கு யூனிவர்சிட்டிக்குக் கிளம்ப மார்னிங் சீக்கிரம் எழுந்திருக்கணும்ல?” என்று ஆதுரத்துடன் கேட்க தன்வியும் ஷான்வியும் அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினர்.

மூவரும் கிளம்பிச் சென்ற பின்னர் தனஞ்செயனின் குத்தல் கலந்த பேச்சில் அதிர்ந்திருந்த அஸ்வினி விஸ்வஜித்திடம்

“நான் ஷானுவ ஃபர்ஸ்ட் டே கால் டாக்சி பிடிச்சுப் போனு சொன்னது அவங்களோட தனா அண்ணாக்குப் பிடிக்கலயாம்… அதனால தான் இப்பிடி பேசிட்டுப் போறாரு… நான் சொன்னத அவரு தப்பா புரிஞ்சிக்கிட்டாருனு நினைக்கேன் விஸ்வா.. எத்தனை நாள் அவரு இவங்களுக்கு பாடிகார்டா இருக்க முடியும்? அந்தப் பொண்ணுங்க உலகத்துல தனியா வாழ கத்துக்க வேண்டாமா?” என்று ஆதங்கத்துடன் சொல்லிவிட அவனும் தனஞ்செயனின் பேச்சே சரியென வாதிட்டான்.

“ஹூஸ்டன்ல ஒரு நாளுக்கு எத்தனை ரேப் கேஸ் ஃபைல் ஆகுதுனு கூகுள் பண்ணி பாரு அஸு… அவரோட கவலை நியாயமானதுனு உனக்குப் புரியும்… இன்னைக்கு நிலமைக்கு நீ தான் அவங்களோட கேர்டேக்கர்… தெரிஞ்சோ தெரியாமலோ அவங்கள உன் வீட்டுல தங்க வச்சிட்ட… அப்போ அவங்க பாதுகாப்புக்கு நீ தானே பொறுப்பு… அவங்கள பத்திரமா பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு… எப்பிடி அனிய பாத்துக்கிறியோ அதே மாதிரி” என்று நீண்ட உரையை ஆற்றி முடித்தான் விஸ்வஜித்.

“பட் விஸ்வா அனி நான் பெத்தப்பொண்ணு… அவ கிட்ட நான் உரிமை எடுத்துக்கிறது வேற.. இவங்க மூனாவது மனுசங்க”

“வாட்? நீ தானே சொன்னே அஸு! சின்னப்பொண்ணு உன்னை ஏர்ப்போர்ட்ல பாத்தப்போ ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக்கிட்டானு… அவங்க பேரண்ட்சை இழந்தவங்க… இந்த நிலமைல பெத்தவங்களோட அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்குவாங்க… அதை உன்னால குடுக்க முடியாதா? நீ அவங்கள கேரிங்கா பாத்துப்பனு தான் தேஜூ உன் கிட்ட அவங்கள அனுப்பி வச்சிருக்கா அஸு” என்று முடித்தவன் அவ்வளவு தான் என்பது போல வெளியே செல்லும் வழியைக் காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

அவன் சொன்னபடி வந்த முதல் நாள் ஒட்டுதலாகப் பேசிய ஷான்வி அதன் பின்னர் வந்த இரு நாட்களிலும் பேச்சைக் குறைத்துக் கொண்டதோடு அந்த ஆப்பிள் பை விவகாரத்துக்குப் பின்னர் சுத்தமாக அஸ்வினியிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.

அதைக் கண்டும் காணாமலும் கடந்து போன அஸ்வினியால் விஸ்வஜித் சொன்னதை அப்படி ஒதுக்க இயலவில்லை. அவள் இன்று வாழும் அமைதியான வாழ்க்கை அவனது உதவியால் அமைந்ததே. அந்த இரு பெண்கள் விசயத்தில் தான் கொஞ்சம் அக்கறையின்றி இருக்கிறோமோ என்று யோசித்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே அவளுக்காக காத்திருந்த அனிகாவைக் கண்டதும் மற்ற விசயங்கள் அனைத்தும் மறந்து போய்விட்டது அவளுக்கு. ஆனால் அன்று விஸ்வஜித் இருந்த நிலையில் தான் இன்று தான் இருக்கிறோம் என்பதை உணர மறுத்தது தான் அஸ்வினி செய்த தவறு.

வீட்டினுள் நுழைந்தவளுக்குத் தனிமையில் அமர்ந்திருந்த மகளின் வாடிய முகம் கண்ணில் படவே உற்சாகத்தை வரவழைத்தபடி

“அனி செல்லம் ஏன் இவ்ளோ சோகமா இருக்கா?” என்று கொஞ்சியபடி மகளை அள்ளிக் கொள்ள

“நான் லூடோ விளையாடலாம்னு போனேனா, தனுக்கா ஹோம்ஒர்க் பண்ணிட்டிருந்தா… அதான் ஷானுக்காவ கூப்பிட்டேன்… ஷானுக்கா என் கூட விளையாட மாட்டேனு சொல்லிட்டா மம்மி” என்று உதடு பிதுக்கி அழத் தயாராக அஸ்வினிக்குத் தான் அன்று நடந்து கொண்ட விதத்தாலேயே ஷான்வி அனிகாவைத் தவிர்க்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது.

ஆனால் அவளிடம் சென்று பேசவும் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே மகளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

“அனி பேபிக்கு லூடோ தானே விளையாடணும்? வா! அம்மாவும் அனியும் லூடோ விளையாடுவோமா?” என்று கொஞ்சியபடியே மகளைத் தூக்கிக் கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அங்கே தன்வி ஷான்வியைக் கடிந்து கொண்டிருந்தாள்.

“அனி சின்னப்பொண்ணு! அவ உன்னை விளையாடத் தானே கூப்பிட்டா… அவ எவ்ளோ ஆசையா வந்தா தெரியுமா? நீ இப்பிடி குழந்தை கிட்ட ரூடா பிஹேவ் பண்ணிருக்க வேண்டாம் ஷானு”

“நம்ம இங்க வெறும் பேயிங் கெஸ்ட்னு அவங்கம்மா தானே சொன்னாங்க… அதாவது நம்மளும் அவங்களோட ஸ்டைல்ல எங்க என்ன நடந்தாலும் கண்டுக்காம போகணும்னு அர்த்தம்… இப்போ அனி ஆசைப்படுறாளேனு நான் விளையாடப் போனேனு வையேன், அவங்க அதுக்கும் எதாவது மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுவாங்க… ஏற்கெனவே குழந்தை ஆசைப்படுறாளேனு என் கையால ஆப்பிள் பை செஞ்சுட்டு வந்து குடுத்ததுக்கு எவ்ளோ மோசமா பேசுனாங்க… என்னால உன்னை மாதிரி மத்தவங்க பேசுறதை மனசுல வச்சுக்காம பழக முடியாது தனு”

பிடிவாதமாக உரைத்துவிட்டுப் போனை நோண்ட ஆரம்பித்த தங்கையை இதற்கு மேல் வற்புறுத்த எண்ணாதவள் புத்தகத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அதே நேரம் தனஞ்செயனும் தான் அஸ்வினியிடம் பேசிய விதம் தவறோ என்று எண்ணியபடி பால்கனியில் உள்ள சோபாவில் சரிந்திருந்தான். அவனது நண்பன் மோகனிடம் இதைப் பகிர்ந்து கொள்ள அவனோ

“நீ சொன்னது தப்புனு எனக்குத் தோணலடா… இதுக்கு மேலயாச்சும் அவங்க அந்தப் பொண்ணுங்கள கொஞ்சம் அக்கறயா பாத்துப்பாங்க… உனக்கும் உன் உடன்பிறவா தங்கைகளை நினைச்சு பி.பி ஏறாதுடா நல்லவனே” என்று கேலியாகச் சொன்னபடி அவன் தோளில் அடித்துவிட்டுச் சென்றான்.

இவர்கள் அனைவரும் இந்தப் பிரச்சனையை எண்ணி உழல, விஸ்வஜித்தும், சித்தார்த்தும் தனியுலகில் மிதந்து கொண்டிருந்தனர். மூத்தவன் சற்று முன்னர் ஹோட்டலில் தன் கண் முன்னே பொற்பாவையென நின்றவனின் நினைவில் சாளரம் வழியே தெரிந்த வானத்தைப் பார்த்தபடி தனது அறையின் சோபாவில் சாய்ந்திருந்தான்.

தன்னிடம் அவள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் அவளது நினைவுகளுக்கிடையே தோன்றியது என்னவோ நிஜம்!

அதே நேரம் அவனது இளைய சகோதரனோ அவன் தோழி ரேயானிடம் நாளை மாலை வகுப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான். அவள் என்னவோ சொன்னதற்கு சித்தார்த் கடுப்பாக உடனே அவள்

“ஏன் இதுக்கு இவ்ளோ கடுப்பாகுற? வர வர நீ ஆங்ரி பேர்ட் ஆகிட்டு வர சித்” என்று சொல்லி அவனே மறக்க நினைத்த ஆங்ரி பேர்ட் ஷான்வியைப் பற்றி அவனுக்கு நினைவுபடுத்தி விட்டாள்.

சித்தார்த் அவளைச் சமாதானம் செய்த பின்னர் விளக்கை அணைத்துப் படுக்கையில் சரிந்தவன் கண்ணை மூட அவனது மனக்கண்ணில் அவன் அணைத்தபோது சிலையாய் உறைந்து அதிர்ச்சியில் கண்களை விரித்துப் பார்த்தபடி, சிறுவனுக்கு மோமோவை கொடுத்துவிட்டு அவனது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டபடி, அவளை விழாமல் தாங்கிய தன்னிடம் சண்டை பிடித்தபடி என பல்வேறு அவதாரங்களில் ஷான்வி வலம் வர தலையணையில் முகம் புதைத்துக் கொண்டான் அவன்.