💞அத்தியாயம் 6💞

எனக்கு இந்த சீரியஸா மூஞ்சிய வச்சிட்டுச் சுத்துறதுலாம் சுட்டுப் போட்டாலும் வராது. லைப் இஸ் ஃபுல் ஆப் சர்ப்ரைசஸ் அண்ட் மிராக்கிள்ஸ்சோ ஒவ்வொரு நொடியையும் என்ஜாய் பண்ணி வாழணும்முடிஞ்சளவுக்கு உதட்டுல இருக்கிற சிரிப்பைக் கழட்டி வச்சிடக் கூடாதுஇதான் என்னோட மோட்டோஇதை எப்போவுமே மாத்திக்கிற ஐடியா எனக்கு இல்ல

                                                              –சித்தார்த்

தன்னெதிரே அமர்ந்து காபியை உறிஞ்சி கொண்டிருப்பவளை சிரிப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சித்தார்த். இப்போது முகத்தில் இருந்த கலக்கம் அகன்றிருக்க தெளிவு பிறந்திருந்தது.

“ஆர் யூ ஓகே குட்டி பாப்பா?” என்று கேட்டவனுக்கு ஆமென்று தலையசைத்தவள் நன்றியாய் அவனைப் பார்த்தாள். கூடவே “நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்ல… ஐ அம் ட்வென்டி த்ரீ” என்ற அமர்த்தலான பதில் வேறு. சித்தார்த் அதை தலை குனிந்து பணிவோடு ஏற்றுக் கொண்டான்.

“லுக்! நான் கொஞ்சநேரத்துக்கு உன்னை பாத்தப்போ கிண்டர் கார்டன் போற குட்டிபாப்பா பூச்சாண்டியைப் பார்த்து பயப்படுற மாதிரி தான் நீ கண் மூடி சரிஞ்சு விழுந்த… இந்த உலகத்துல பூச்சாண்டி மட்டுமே இருக்க மாட்டாங்க குட்டி பாப்பா… நிறைய நல்லவங்களும் இருக்காங்க… நீ யாரை நினைச்சு பயப்படுற?

உனக்கு ஒன்னு தெரியுமா? நேத்து ஒரு பொண்ணைப் பார்த்தேன்… அவ அப்பிடியே ஃபயர் மாதிரி இருந்தா… என்ன ஆட்டிட்டியூட் தெரியுமா? அவ அளவுக்கு நீ டெரர் ஆக வேண்டாம்… பட் இனிமே எதுக்காகவும் யாருக்காகவும் பயப்படக் கூடாது… சரியா அமுல் பேபி?” என்று கேட்க அவன் கேட்ட விதம் சிரிப்பூட்ட கன்னம் குழிய புன்னகைத்தாள் தன்வி.

அவனிடம் “நீங்க இங்க தான் படிக்கிறிங்களா?” என்று கேட்க அதற்கு ஆமென்றவன்

“பட் நான் எம்.பீ.ஏ செகண்ட் இயர்… எனக்கு ஈவினிங் தான் கிளாஸ்…” என்று சொல்லி நிறுத்தியவன் மொபைலைப் பார்க்க அவன் செல்ல வேண்டிய நேரம் ஆகிவிட்டதால் கிளம்ப எத்தனித்தான் சித்தார்த்.

“ஓகே! நான் இப்போ கிளம்புறேன் அமுல் பேபி… டேக் கேர்” என்று  தன்வியிடம் சொல்லிவிட்டு எழுந்தான்.

தன்வியும் அவனுடன் எழுந்தவள் “தேங்க்யூ சோ மச் சார்” என்று சொல்லிப் புன்னகைக்க அவன் கிளம்பிவிட்டான்.

தன்வி அங்கிருந்து செல்பவனைப் புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள். அவன் சொன்னதைப் போல உலகம் என்பது சுயநலவாதிகளும், பேராசை பிடித்த மனிதர்களும், கயவர்களும் மட்டுமே நிறைந்தது இல்லை போல.

யாரென்றே தெரியாதவளுக்காக தனது நேரத்தை ஒதுக்கி இவ்வளவு தூரம் பேசி மனதை சரி செய்யும் இவனைப் போன்றவர்களும் இருக்கிறார்களே! தெளிந்த நிர்மலமான மனதுடன் மேலாண்மை வகுப்பு இருக்கும் கட்டிடத்தை அடைந்தாள் தன்வி.

 மூன்றாவது தளத்துக்குச் செல்லும் மின்தூக்கியில் ஏறியவள் ஷான்வியிடம் இருந்து போன் வரவும் கலகலப்புடன் பேச ஆரம்பித்தாள்.

**********

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்

காலை நேரத்தில் பணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர். ரெஸ்ட்ராண்டின் சமையலறையில் காலைநேரத்துக்கான உணவுவகைகள் தயாராகி கொண்டிருந்தது.

பீட்சா, பர்கர், ஹாட் டாக், ஹாம் பர்கர் என துரித உணவுகளும், சைனீஷ், இத்தாலியன் மற்றும் ஆசிய உணவுவகைகளும் தயாராகிக் கொண்டிருந்தன.

விஸ்வஜித் பீட்சாவுக்கான மாவை உயரே தூக்கிப் போட்டுப் பிடித்தவன் உற்சாகமாக அதை தட்டில் வைத்து டாப்பிங்கை பரத்தி வைக்க ஆரம்பித்தான்.

அஸ்வினியின் இத்தாலியன் உணவு வகைகளின் சுவை அந்த ஹோட்டலில் மிகவும் பிரசித்தி பெற்றது. அவள் அந்த வேலையில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.

மற்ற ஊழியர்கள் வறுப்பது, பொறிப்பது என தத்தம் வேலையில் மூழ்கிவிட்டிருந்தனர்.

அதே நேரம் கபேயின் சமையலறையும் பரபரப்பாகத் தான் இருந்தது. தனஞ்செயன் கேக்குகள் மற்றும் ப்ரெட் வகைகளில் இறங்கிவிட ஷான்வி டார்ட் மற்றும் பை வகை உணவுகளில் கவனம் செலுத்தினாள்.

அப்போது ஆப்பிள் பை கேட்ட அனிகாவின் நினைவில் அவளது இதழில் புன்னகை மலர்ந்தது. அப்போது அஸ்வினியிடம் இருந்து கால் வந்தது.

எடுத்துப் பேச ஆரம்பித்தவளிடம் எடுத்ததும் தன்வி ஏன் இன்னும் வரவில்லை என வினவினாள் அஸ்வினி. இன்று அவளது பகுதிநேரப்பணிக்கான நேர்க்காணல் வேறு இருக்கிறதே என்று எண்ணம் அவளுக்கு.

அவள் வந்துவிடுவாள் என்று சமாளித்த ஷான்வி அடுத்து அழைத்தது தன்விக்குத் தான்.

“ஹலோ தனு! எங்க இருக்க நீ? டைம் ஆகுது… இன்னும் நீ ஹோட்டலுக்கு வரலயே… லேடி ஹிட்லர் எனக்குக் கால் பண்ணுச்சு… சீக்கிரமா வா” என சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.

என்னவென்று வினவிய தனஞ்செயனிடம் நேர்க்காணல் பற்றிய விபரங்களைக் கூறவும் அவள் வந்துவிடுவாள் என ஷான்விக்குச் சமாதானம் சொல்லி அவளை வேலையைக் கவனிக்கச் சொல்லிவிட்டான்.

சிறிது நேரத்தில் தன்வி ஹோட்டல் ராயல் கிராண்டேவின் முன்னே நின்றிருந்தவள் நம்பிக்கை மின்னிய முகத்துடன் உள்ளே நுழைந்தாள். லாபியில் நேர்க்காணல் பற்றி கேட்க அவர்கள் மூன்றாவது தளத்தில் தான் அலுவலம் உள்ளதாகச் சொல்ல மின் தூக்கியில் நுழைந்து மூன்றாவது தளத்தில் இறங்கினாள் அவள். அஸ்வினி அங்கே அவளுக்காக காத்திருந்தாள்.

அவளை அலுவலக அறைக்குச் செல்லுமாறு கைகாட்டிவிட்டு நின்ற அஸ்வினிக்கு அனிகாவின் பள்ளியிலிருந்து போன் அழைப்பு வரவும் ஒரு ஓரமாக நின்று பேச ஆரம்பித்தாள்.

தன்வி அதற்குள் நேர்க்காணலை முடித்தவள் வெளியே வந்து அஸ்வினியைத் தேட அங்கே அவள் இல்லை. யோசனையுடன் மின்தூக்கியில் நுழைந்தவள் கீழ்த்தளத்தில் சென்று சமையலறை எங்கே உள்ளது என்று மொட்டையாக கேட்க அவர்கள் தன்வியை யாரென்று வினவவும் வெறுமெனே அசிஸ்டெண்ட் செஃபின் சகோதரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

அவள் அஸ்வினியுடன் மூன்றாவது தளத்துக்குச் சென்றதை பார்த்திருந்த ஊழியர் அஸ்வினியின் சகோதரி என்று எண்ணி ரெஸ்ட்ராண்டின் சமையலறை இருக்கும் பகுதியைக் கைகாட்டினார்.

தன்வியும் ஹோட்டலின் கலைநயமிக்க நாற்காலிகள், மேஜைகள் மற்றும் சுவர் ஓவியங்களை ரசித்தபடி சமையலறையை நோக்கி முன்னேறினாள். அச்சமயம் கிட்டத்தட்ட பதினோரு மணி என்பதால் சமையலறையில் இருந்த ஊழியர்கள் இடைவெளிக்காக வெளியேறியிருக்க விஸ்வஜித் மட்டுமே காய்கறிகளை நறுக்கியவண்ணம் இருந்தான்.

தன்வி தனக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தவனை பார்த்தபடி உள்ளே நுழைந்தாள். சமையலறையின் நடுவே இருந்த நீண்ட சமையல் மேடையில் எடுத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்க்கும் போதே இதனால் செய்யப்பட்ட உணவு அவளது கற்பனையில் உதயமாக அதை மனதிற்குள் ரசித்தபடி முன்னேறினாள்.

விஸ்வஜித்தை நெருங்கியிருந்தவளின் கைப்பட்டு சமையல் மேடையில் அஸ்வினி எடுத்து வைத்திருந்த இத்தாலியன் சீசனிங் பாட்டில் கீழே விழவும் பயத்தில் கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

அதே சமயம் விஸ்வஜித் அந்தப் பாட்டிலை எடுக்கத் திரும்பியவன் மேடையிலிருந்து விழ ஆரம்பித்த பாட்டிலை வேகமாய் பிடித்துவிட்டு நிமிரும் போது தன் எதிரே கண்ணை இறுக மூடி நின்றிருந்த பெண்ணைக் கண்டதும் யாரிவள் என்று திகைத்துப் போனான்.

நீண்ட கூந்தலை போனிடெயிலாகப் போட்டிருந்தவள் அதை முன்னே வழிய விட்டிருக்க, இறுக மூடிய கண்கள் குழந்தையை நினைவுறுத்த, வில்லாய் வளைந்த புருவங்களின் நடுவே கடுகு போல ஒரு பொட்டு ஒட்டியிருக்க எளிமையில் அழகாய் மிளிர்ந்தவளின் பயத்தில் அழுந்த மூடியிருந்த இதழ்களை ஒரு நிமிடம் ரசனையாய் பார்த்தவன் பின்னர் தன் தலையில் தட்டிக் கொண்டான்.

“ஹலோ! எக்ஸ்யூஸ் மீ! கண்ணை முழிங்க மேடம்” என்று குறும்புத்தனமாக கேட்டவனின் குரலில் கண் விழித்தாள் தன்வி.

வெள்ளைநிற சீருடையின் மீது ஏப்ரனையும் தாண்டி ஹோட்டலின் பெயர் பொறித்த அவனது பேட்ஜ் எட்டிப் பார்த்தது. அதில் வீ.கே என்ற ஆங்கில எழுத்துக்களைப் படித்தவள் இவனா தன் தங்கை மூச்சுக்கு முன்னூறு தடவை புகழ்ந்து பேசும் வீ.கே என்று வியந்து பார்த்தாள்.

இதற்கு முன்னர் அடிக்கடி அவனது புகைப்படத்தைப் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இப்போது போல மனதில் அவன் முகம் பதியவில்லை. தன் எதிரே தலையைச் சரித்து கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி குறும்பாகப் பார்த்தவனின் பார்வை அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வைத் தோற்றுவித்தது.

அதை எதிர்கொள்ள முடியாதவளாய் தன்னையே பார்த்தபடி நின்றிருந்தவனிடம் “அது நான்… அஸுக்காவ… இல்ல… ஷானுவ பார்க்க…” என்று பதற்றத்தில் உளறிக் கொட்ட ஆரம்பிக்கவும்

“ஹேய்! ரிலாக்ஸ்! எதுக்கு இவ்ளோ டென்சன்? பொறுமையா என்ன விசயம்னு சொல்லுங்க” என்று சொன்னவனின் கரத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி அருந்திவிட்டு அவனிடம் நீட்டியவள் சித்தார்த்தின் பேச்சை நினைவுறுத்திக் கொண்டு

“நான் ஷான்வியோட சிஸ்டர்… அவளைப் பார்க்குறதுக்குத் தான் இங்க வந்தேன்” என்று பள்ளிக்கூட மாணவி போலச் சொல்லிவிட்டு நிற்க அவன் சத்தம் போட்டு நகைத்தான்.

“அவங்க ஒர்க் பண்ணுறது கபேல… இது ரெஸ்ட்ராண்ட் கிச்சன் மேடம்” என்று சொல்லிவிட்டுப் புருவத்தை உயர்த்திய விஸ்வஜித்தைச் சங்கடத்துடன் பார்த்தாள் தன்வி. அவனோ இந்த இரு சகோதரிகள் வாழ்க்கையில் சந்தித்திருந்த சிரமங்களை ஏற்கெனவே அஸ்வினி மூலமாக அறிந்திருந்ததால் மரியாதையுடன் அவளை நோக்கினான்.

தான் அத்துமீறி நுழைந்தது போல உணர்ந்த தன்வி “சாரி சார்… நான் தெரியாம வந்துட்டேன்… ஐ அம் ரியலி சாரி” என்று மன்னிப்பு கேட்ட போதே மற்றப் பணியாளர்களுடன் அஸ்வினியும் உள்ளே நுழைந்தவள் தன்வியைக் கண்டதும் வேகமாக அவளிடம் வந்தாள்.

“தனு! உன்னோட இண்டர்வியூ என்னாச்சு?” என்று கேட்டவளிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என பேச ஆரம்பித்தவளை கவனித்த விஸ்வஜித்தின் கண்ணில் சுவாரசியம் மின்னியது.

கண்ணை விரித்து அழகாய் சொன்னவளை ரசித்தவன் எவ்வித செயற்கைத்தனமும் இல்லாத அவளது பேச்சில் அடிக்கடி ஷான்வி என்ற பெயர் வந்து போக அஸ்வினி சொன்னது போல இந்தப் பெண்ணுக்குத் தங்கையின் மீது அக்கறை அதிகம் தான்; தனக்கு சித்துவின் மீது இருப்பது போல என்று எண்ணிக் கொண்டான்.

அவளைப் புன்னகையுடன் ஏறிட்டவன் தன்வி அஸ்வினியுடன் வெளியேற தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். ஆனால் சற்று நேரத்துக்கு முன்னர் தன்னெதிரில் கண்களை இறுக மூடி நின்றவளின் தோற்றம் மனதில் பதிந்து போனது.

அஸ்வினி தன்வியை தன்னுடன் ஷான்வி வேலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். ஷான்வி அக்காவைக் கண்டதும் அவளது நேர்க்காணல் எப்படி இருந்தது என்று கேட்க அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் சரியான பதிலளித்ததாகச் சொன்னவள் தனக்குக் கட்டாயம் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையாக உரைத்தாள்.

முதல் நாள் கல்லூரி அனுபவம் பற்றி தனஞ்செயன் கேட்டதற்கு நன்றாக இருந்தது என்று பதிலளித்தவள் அவர்கள் வேலையைத் தொந்தரவு செய்ய வேண்டாமென அனைவரிடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.

வீட்டுக்கு வந்தவளின் நினைவில் இன்னுமே இன்று சந்தித்த இரு ஆடவர்களைப் பற்றிய சிந்தனை தான் ஓடியது. முந்தியவனை நினைக்கும் போது அவள் அறியாமல் அவளது இதழில் குறுநகை ஒன்று மலர்ந்தது. நல்ல மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள் என ஸ்டார்பக்சில் காலையிலேயே அவன் செய்த உபதேசம் வாழ்க்கை முழுவதும் அவளுக்கு மறக்காது.

அதே போல வீ.கேவின் துளியும் கர்வமற்ற இயல்பான பேச்சும் அவள் மனதை தீண்டியிருந்தது. கூடவே அவனது பார்வையும் தான். இப்போது நினைத்துப் பார்த்தாலும் காரணமின்றி அவளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்யும் குறும்புப்பார்வை அது.

அதோடு தங்கை அடிக்கடி சொல்லும் வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.

“வீ.கே ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹாண்ட்சம்… ஆனா அதுக்காக மட்டும் நான் அவரை ரோல்மாடலா எடுத்துக்கல… ஒரு மனுசன் புகழோட உச்சியில இருந்தாலும் தன்னோட இயல்புல இருந்து மாறாம இருக்கணும்… வீ.கே அதுக்கு ஒரு நல்ல உதாரணம் தனு… ரொம்ப சிம்பிளான மனுசன்… புகழ்ங்கிற கிரீடத்தைத் தலையில சுமந்துட்டு தலைக்கனத்தோட திரியுற எத்தனையோ பேருக்கு மத்தியில அவரு ஒரு ஜெம்”

உண்மையான வார்த்தைகள் தான். இதுவே அவன் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தனது வேலையிடத்துக்கு அனுமதியின்றி நுழைந்தவளைத் திட்டித் தீர்த்திருப்பார்கள். அல்லது தனது பணிக்கான அதிகாரத்தைக் காட்டி இருப்பார்கள். இது எதையும் செய்யாது எவ்வளவு அக்கறையோடு தண்ணீர் பாட்டிலை நீட்டினான்!

இத்தனை நாட்கள் தங்கை வீ.கே புகழ் பாடுவதைக் கேலி செய்த தன்வி, இன்று வீ.கேவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் வீடு திரும்பிய ஷான்வியிடம் இவை அனைத்தையும் ஒப்பித்தவள் சித்தார்த்தைப் புகழ ஷான்வியும் அக்காவுக்குத் தைரியம் கொடுத்த அந்த முகம் தெரியாதவனின் பேச்சை எண்ணி வியந்து தான் போனாள். மனிதர்களில் இவ்வளவு இயல்பாய் பழகுபவர்களும் உள்ளார்களே என்று எண்ணியவளுக்கு அக்கா சொன்ன அந்த சித்தார்த்தை நேரில் கண்டால் கட்டாயம் அவளுக்காக நன்றி கூற வேண்டும் என்று மனதில் தோன்றிவிட்டது.

அக்காவும் தங்கையும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது புயலைப் போல அந்த அறைக்குள் நுழைந்தாள் அஸ்வினி. அவள் கையில் ராயல் கிராண்டேவின் உணவுப்பொட்டலம்.

தன்வி அவளைப் புரியாமல் நோக்க அஸ்வினி ஷான்வியின் கையில் அந்தப் பொட்டலத்தை வைத்தவள் “என் பொண்ணுக்கு எதுவும் வேணும்னா செஞ்சு குடுக்கவோ வாங்கிக் குடுக்கவோ நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்… இது தான் கடைசி முறையா இருக்கணும்.. இனிமே அனிகாவுக்கு நீ எதுவும் வாங்கிக் குடுக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று படபடக்க

“இல்லக்கா! அனிகுட்டிக்கு ஆப்பிள் பை பிடிக்கும்னு தான் நானே என் கையால செஞ்சு எடுத்துட்டு வந்தேன்” என சொன்ன ஷான்வி இதில் என்ன தவறு இருக்க முடியுமென அவளைக் குழப்பத்துடன் நோக்க

“தேவையில்ல… என் பொண்ணுக்கு எந்த உரிமைல நீங்க வாங்கிக் குடுக்கிற ஷான்வி? நீயும் உன் அக்காவும் வெறும் பேயிங் கெஸ்ட் மட்டும் தான்… அதை மறந்துடாதிங்க… இது தான் லாஸ்ட் வார்னிங்” என்று வார்த்தைகளை அமிலமாய் அள்ளித் தெளித்துவிட்டு அகன்றாள் அஸ்வினி.

ஷான்விக்கு முகத்தில் அறைந்தாற்போன்ற அவளது செய்கையில் கோபம் வர தன்வியோ இன்று காலை தனக்கு நம்பிக்கை உண்டாகும்படி பேசியவளா இப்போது தங்கையிடம் இவ்வளவு கடினமான வார்த்தைகளை வெளியிட்டாள் என்ற திகைப்பு.

முகம் மாறி நின்ற தங்கையைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் அவள். அஸ்வினியைப் பற்றி எந்த முடிவுக்கும் வர இயலாத இரு சகோதரிகளும் அவள் வார்த்தைகள் ஏற்படுத்திய ரணத்தோடு உறங்க சென்றனர்.