💞அத்தியாயம் 26💞

“அப்பா அடிக்கடி என் கிட்ட சொல்லுற வார்த்தை உண்மையான அன்புக்குத் தடையே கிடையாது; அது நமக்கு கிடைக்கணும்னு இருந்தா எந்த வழியிலனாலும் கிடைச்சிடும்… அதே போல அன்புக்கு தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு வித்தியாசம் கிடையாது… எவ்ளோ உண்மையான வார்த்தை! இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் எங்க கூட இல்ல… ஆனாலும் எங்க வாழ்க்கைல அன்புக்குக் குறைச்சலே இல்ல”

                                                                   -தன்வி

அடர்சிவப்பில் ஜரிகைகள் உடலெங்கும் ஓடும் பட்டுப்புடவையில் அணிமணிகள் ஜொலிக்க வாசமலர்கள் கூந்தலை அலங்கரிக்க சர்வலங்கார பூஷிதையாக ஜொலித்த தனது பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள் தன்வி. இன்று அவளது திருமணநாள். நினைத்தாலே உடலெங்கும் சிலிர்ப்போடியது. மனதில் இனம்புரியாத உணர்வு சுகமாய் தாக்கி அடங்கியது.

காதலித்தவனை கைப்பிடிக்கப் போகும் நேரம் நெருங்கியதும் அக்காரிகையின் இதயத்தில் உண்டான இன்ப உணர்வுகள் அவளது முகத்துக்கு இன்னும் எழில் கூட்டியிருந்தது.

இப்போது விஸ்வஜித்தும் தயாராகிக் கொண்டிருப்பான். அவன் பட்டு வேஷ்டி சட்டையில் எப்படி இருப்பான்! அவனுக்கென்ன! எப்போதும் போல அவனது இயல்பான கம்பீரம் குறையாது அம்சமாய் தான் இருப்பான் என பலவாறான எண்ணக்குவியல்களுக்கிடையே இன்பமாய் சிக்கித் தவித்தவளின் செவியைத் தீண்டியது “தனு” என்று அழைத்தபடி வந்த மூன்று பெண்களின் சந்தோசக்குரல்.

மூவரும் ஒரே வண்ணப்பட்டுப்புடவையில் எழிலோவியமாய் வந்து நிற்க அஸ்வினி தன்வியின் முகத்தை வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள். தேஜஸ்வினியின் கரத்தைப் பற்றியபடி நின்றிருந்த அனிகாவோ

“தனுக்கா யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்! நானும் நீயும் சேம் டிரஸ் பாரு” என்று அவளது புடவை நிறத்திலேயே தான் அணிந்திருந்த பட்டுப்பாவாடையைக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

ஷான்வி தமக்கையின் மோவாயைப் பிடித்துக் கொஞ்சியவள் “அழகே பொறாமைப்படும் பேரழகி… அதுலயும் முகத்துல ஒட்டியிருக்கிற அந்த வெக்கச்சிவப்பு இருக்கே! அதுக்காக வீ.கே சார் அவரோட சொத்தை முழுசா எழுதிக் குடுக்கலாம்” என்று தனது அஞ்சனம் தீட்டிய கயல்விழிகளை உருட்டி சொல்ல அவளது கன்னத்தை உரசியது அழகான பொன்னிற ஜிமிக்கி.

தன்விக்கு இன்று தான் தங்கை எவ்வளவு அழகு என்பது தெரிந்தது. என்ன தான் நவநாகரிக உடைகள் அணிந்து விறைப்பாய் இருந்தாலும் தழைய கட்டிய புடவையில் அளவான அணிகலன்களுடன் பார்க்கும் போது அவள் பேரழகியாகத் தெரிந்தாள்!

தன் பங்குக்கு ஷான்விக்குத் திருஷ்டி கழித்தவள் தேஜஸ்வினியிடம் “இங்க ஒன்னு இல்ல, நாலு கல்யாணப்பொண்ணுங்க இருக்கிற ஃபீல்! நீங்க மூனு பேரும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கிங்க… எஸ்பெஷலி அஸுக்கா, நீங்க இனிமே வீக்லி ஒன்ஸ் ஹோட்டலுக்கு ஷேரி கட்டிட்டுப் போகலாம்… அவ்ளோ கியூட்டா இருக்கிங்க” என்று சொல்ல அஸ்வினியின் கன்னத்தில் வெட்கச்சிவப்பு.

தேஜஸ்வினிக்கு நீண்டநாள் கழித்து அக்காவை பழைய படி பார்த்த உணர்வு. மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ வரும் அரவம் கேட்க அங்கே வேஷ்டி சட்டையில் நெற்றியில் விபூதி கீற்றுடன் கம்பீரமாய் நின்றவன் தனஞ்செயன். அவனைக் கண்டதும் “அப்பாஆஆஆ” என்ற உற்சாக குரலுடன் ஓடினாள் அனிகா.

தனஞ்செயன் அவளைத் தூக்கிக் கொண்டவன் “அனிகுட்டி இன்னைக்கு பிரின்சஸ் மாதிரி இருக்கா” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட அவளும் பதிலுக்கு அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “மம்மி எப்பிடி இருக்காங்கப்பா?” என்று கேட்டுவிட்டு ஆவலாய் அவன் முகத்தை நோக்க தனஞ்செயன் ஒரு நிமிடம் திருதிருவென விழித்தான்.

அவன் விழித்த அழகில் மற்ற மூவருடன் அஸ்வினிக்கும் சிரிப்பு வந்துவிட அவளது சிரிப்பில் ஏதோ வித்தியாசமான உணர்வு இதயத்தில் ஆக்கிரமிக்க “பிரின்சஸோட மம்மி குயின் மாதிரி இருக்காங்க… அதுவும் பியூட்டி குயின் மாதிரி” என்று ஆழ்ந்த குரலில் சொல்லிவிட அஸ்வினியின் கன்னம் ஸ்ட்ராபெர்ரி வண்ணமானது.

மற்ற மூவரும் “என்னடா நடக்குது இங்க?” என்று மைண்ட்வாய்சில் வடிவேலு குரலில் பேசிக்கொள்ள தனஞ்செயன் அதைப் புரிந்து கொண்டவனாய் தொண்டையைச் செறுமிக் கொண்டான்.

“ஆங்! எல்லாரும் ரெடியாயிட்டிங்கனா நம்ம கிளம்பலாமா?” என்று அமர்த்தலாய் கேட்டவனிடம்

“ஒரு நிமிசம் தனா! பூஜை ரூம்ல விளக்கேத்திட்டு அப்புறமா கிளம்பலாம்” என்ற அஸ்வினி கையோடு தன்வியை பூஜையறைக்கு அழைத்துச் சென்று குத்துவிளக்கை ஏற்றச் சொல்ல அவளும் அவ்வாறே செய்துவிட்டு கண் மூடி இறைவனிடம் தனது வாழ்க்கைக்காக வேண்டிக் கொண்டாள்.

பின்னர் ஹாலுக்குச் சென்றவள் அங்கிருந்த பெற்றோரையும் வணங்கிவிட்டு அங்கே நின்ற தனஞ்செயனின் காலிலும் விழ அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தவன் “நீ நல்லா இருக்கணும்டா… நீ ஆசைப்பட்ட மாதிரி அழகான வாழ்க்கையை ஆசைப்பட்டவரோட வாழணும்” என்று மனதாற வாழ்த்தினான். உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் துளிர்த்துக் குரலும் கம்மிவிட்டது.

இன்றைய தினம் தன்வி அவன் கண்ணுக்கு இலக்கியாவாகத் தெரிந்தாள். தன்விக்கு பெற்றோரற்ற தங்களுக்கு வெளியுலகத்தில் கிடைத்த முதல் உறவான அந்தச் சகோதரன் தந்தை ரூபத்தில் தெரிந்தான்.

அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு நிற்க தேஜஸ்வினி நேரமாவதை சுட்டிக்காட்டி அனைவரையும் கிளம்ப துரிதப்படுத்தினாள். அவள் தன்வியின் கரத்தைப் பற்றிக் கொள்ள அனிகாவை தனஞ்செயன் தூக்கிக் கொண்டான்.

அஸ்வினியும் ஷான்வியும் வீட்டைப் பூட்டிவிட்டு அவர்களைத் தொடர்ந்தனர்.

*****************

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்

பார்த்தனுக்கு சாரதியான கோலத்தில் கண்ணன் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தில் தான் விஸ்வஜித்துக்கும் தன்விக்கும் திருமணம் நடக்கவிருந்தது. அவன் சார்பில் அவனது பெற்றோர், இளையச்சகோதரன் மற்றும் அஸ்வினியின் பெற்றோர் மட்டுமே வந்திருந்தனர்.

கமலா திருமணத்தை இவ்வளவு விரைந்து முடிப்பதற்கு என்ன அவசியம் என்று பொத்தாம் பொதுவாக கேட்க வள்ளி மூத்தமகனின் காதல் மற்றும் ஜாதகம் இரண்டுமே முக்கியக் காரணம் என்றார்.

“அவனுக்கு இந்த வருசம் கல்யாணம் தட்டிப்போச்சுனா இன்னும் மூனு வருசம் கழிச்சு தான் நடக்கும்னு ஜோசியர் சொல்லிட்டாரு… இவனும் தனுவ பத்தி எங்க கிட்ட சொன்னான்… பொண்ணும் பாக்குறதுக்குப் பதவிசா, அன்பான பொண்ணா இருந்தா… அவளோட அப்பாவித்தனம் எனக்கும், அவருக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு”

கமலாவால் இதற்கு மேல் வாய் திறக்க முடியாது போனது. அவருக்கு மகள் இத்தனை நாட்களில் தங்கள் வீட்டுக்கு வராமல் தன்வியின் வீட்டில் தங்கிய எரிச்சல் அவருக்கு.

அதே நேரம் மணமகளை அழைத்துக் கொண்டு தனஞ்செயன் வரவும் அனைவரின் கவனமும் அவர்களிடம் திரும்பியது. விஸ்வஜித் தேவதையாய் நடந்து வந்த தன்னவளை விழியெடுக்காது நோக்கி வசீகரமாய் புன்னகைக்க அவனது காந்தப்புன்னகையில் கவரப்பட்டவளின் விழிகள் பட்டு வேஷ்டி சட்டையில் மணமகனுக்குரிய சந்தோசம் முகமெங்கும் விகசிக்க நின்றவனைப் படம் பிடித்து இதயத்துக்குள் சேமித்துக் கொண்டது.

அதே நேரம் முதல் முறை ஷான்வியைப் புடவையில் பார்த்த சித்தார்த் இந்த உலகில் இல்லாமல் கனவுலோகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினான். ஷான்வியின் பார்வையும் அவன் புறம் நிலைத்திருக்க அஸ்வினியும் தேஜஸ்வினியும் அதை மனதில் குறித்துக் கொண்டனர்.

மணமகனும் மணமகளும் பெரியவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர். நல்லநேரத்தில் மங்கலநாதம் ஒலிக்க இறைவனின் ஆசியுடன் மங்கலநாணை தன்வியின் கழுத்தில் பூட்டினான் விஸ்வஜித்.

மூன்றாவது முடிச்சை அஸ்வினி போட திருமணம் இனிதே நிறைவுற்றது. அதன் பின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் தனஞ்செயனின் காலில் விழப்போக அவன் தடுக்கவும்

“ஏன்பா தடுக்குற? ரெண்டு பேரும் உனக்கு சின்னவங்க தான்… உன் ஆசிர்வாதம் அவங்களுக்கு வேணும்” என்றார் கார்த்திக்கேயன் புன்னகையுடன். அவரருகில் நின்றிருந்த குமரனும் கமலாவும் வந்ததில் இருந்து தங்களின் பேத்தி அவனை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்று அழைப்பதையும் மகள் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் இருப்பதையும் பார்த்துவிட்டு அவர்களுக்கு மனதில் ஒரு நப்பாசை.

திருமணம் முடித்தக் கையோடு ஹோட்டலில் உணவு சொல்லப்பட்டிருக்க மணமக்கள் இருவரும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வள்ளி ஆரத்தி எடுத்து மகனையும் மருமகளையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அதன் பின் அவளை பூஜையறையில் விளக்கேற்ற சொன்னார். பின்னர் பால் பழம் கொடுக்கும் சம்பிரதாயம் ஜரூராக நடந்தேறியது.

தன்வி நாணத்தில் தயங்கி தயங்கி அனைத்துச் சம்பிரதாயத்தையும் முடிக்க விஸ்வஜித் தம்பியின் கேலி கிண்டலுக்கு இடையே அனைத்தையும் செய்து முடித்தான்.

பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறும் பொறுப்பை ஷான்வியும் தேஜஸ்வினியும் எடுத்துக் கொண்டனர். புடவையை இழுத்துச் செருகிக் கொண்டு ஷான்வி பம்பரமாய் சுற்றி பரிமாறிய விதத்தில் சித்தார்த் மயங்கி போனான் என்பது உண்மை.

காதின் குடை ஜிமிக்கி அசைய பெரியவர்களுக்கு வேண்டியதை வைப்பதாகட்டும், விஸ்வஜித்துக்கு காரம் ஆகாது என்பதால் அவனுக்கு அளவு பார்த்து பரிமாறியதாகட்டும் அனைத்துமே அவன் கண்ணுக்கு இனிய விருந்தாய் அமைந்தது.

அவர்கள் சாப்பிட்டதும் தேஜஸ்வினியும் அவளும் உணவுமேஜையில் அமர்ந்து கதை பேசியபடியே சாப்பிட ஆரம்பித்தனர். விஸ்வஜித் குமரனுடனும், தந்தையுடனும் தனது பணியின் இயல்பையும் அஸ்வினி தனக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறாள் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தான்.

குமரன் இடையிடையே தனஞ்செயன் பற்றி விசாரிக்க அவனது வேலை பற்றியும் பெருமிதமாய் கூறினான் விஸ்வஜித். அவனது பொறுப்பான நடத்தை பற்றி விஸ்வஜித்தே கூறிவிட்டப் பிறகு அவருக்கு பெருத்த நிம்மதி.

சித்தார்த் தனது வழக்கமான குறும்புத்தனத்தால் பெரியவர்களைச் சிரிக்க வைத்ததோடு அவ்வபோது ஷான்வியை முறைக்கவும் வைத்தான். மதியவுணவும் கலகலப்பாகச் சென்றது.

மறுபடி பேச்சில் நேரம் கழிக்கலாம் என இளையவர்கள் எண்ண சற்று நேரம் ஓய்வெடுக்கச் சென்றனர் பெரியவர்கள். அதே நேரம் சித்தார்த் ஹோட்டலில் வரவேற்புக்கான ஏற்பாடுகள் நல்லபடியாக முடிந்துவிட்டதா என்று மேற்பார்வையிட ஷான்வியை அங்கே அழைத்துச் சென்றான்.

அங்கே சென்றதும் ஷான்வி தான் ஈவெண்ட் ப்ளானரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தாளே தவிர்த்து சித்தார்த் வாய் திறந்து பேசவில்லை.

ஷான்வி “வந்ததுக்கு எதாச்சும் பேசுடா” என்று அவன் காதைக் கடிக்க அவனோ “நீ கேட்டா நான் கேட்ட மாதிரி ஷானு” என்று சொல்லிவிட அவனை முறைத்தவள் தானே மற்ற விசயங்களையும் கேட்டு முடித்தாள்.

அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புகையில் “ஷானு உன் ரிசப்சன் ட்ரஸ் என்ன கலர்?” என்று கேட்க

“அன்னைக்கு ட்ரஸ் வாங்குறப்போ நீ இருந்தல்ல… அப்புறம் என்னடா கேள்வி?” என்று பதிலுக்கு அவள் கேட்க

“ஹான்! மறந்துட்டேன் பேபி… எனி ஹவ் உன் வாய்ல இருந்து உதிருற முத்துக்களை சேர்த்து வச்சுக்க தான் உன்னைப் பேச வச்சு வேடிக்கை பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுக் காரை எடுத்தான்.

ஷான்வி மனதுக்குள் “நல்லவேளை! கண் அடிக்க மறந்துட்டான்” என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பின்னர் வீட்டுக்கு வந்து சேர அங்கே அனைவரும் வரவேற்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். விஸ்வஜித்தும் தன்வியும் தயாராகி விட்டனர்.

கோட் சூட்டில் கம்பீரமாய் நின்றவனின் அழகில் வானத்து வெண்ணிலவு தரையிறங்கி விட்டதோ என ஐயமுறும் வண்ணம் க்ரீம் வண்ண லெஹங்காவில் ஆபரணங்கள் மின்ன நின்றிருந்தாள் தன்வி. அவனது கரத்தை இறுக்கமாய் பற்றியிருந்தவளின் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் அறியாதவனா அவன்!

இருவரும் காதலில் கசிந்துருகிக் கொண்டிருந்த வேளையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட சித்தார்த் தனஞ்செயனிடம் ஹோட்டலுக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டு ஷான்வியையும் தேஜஸ்வினியையும் அழைத்து அவர்கள் காதைக் கடித்தான்.

“இன்னைக்கு அவங்களுக்கு ஸ்பெஷல் டே… சோ நம்ம டிஸ்டர்பன்ஸ் இல்லாம அவங்க கொஞ்சம் நிம்மதியா டைம் ஸ்பென்ட் பண்ணணும்… உங்க ஃப்ளாட்ல அதுக்கு நம்ம அரேஞ்ச்மெண்ட் பண்ணிட்டு ஹோட்டலுக்குப் போவோம்” என்று சொல்ல

“அடேய்! ஃபர்ஸ்ட் நைட்டுக்கு டெகரேட் பண்ணணும்… அவ்ளோ தானே! அதுக்கு ஏன் காதைச் சுத்தி மூக்கைத் தொடுற” என்று தலையிலடித்துக் கொண்டாள் ஷான்வி.

சித்தார்த் நாக்கைக் கடித்துக் கொண்டான். தேஜஸ்வினி இருக்கிறாளே என்று அவன் இலைமறை காயாக சொல்ல ஷான்வி அதை நேரடியாகப் போட்டு உடைத்து விட்டாள்.

பெரியவர்கள் நமட்டுச்சிரிப்புடன் வெளியேற சித்தார்த்துடன் தேஜஸ்வினி காரிலேற ஷான்வி அஸ்வினியிடம் ஏதோ கிசுகிசுத்துவிட்டு தங்கள் ஃப்ளாட்டுக்குச் செல்ல சித்தார்த்தின் காரில் அமர்ந்தாள்.

சில நிமிடங்களில் இரு கார்கள் அந்த அப்பார்ட்மெண்ட் வளாகத்திலிருந்து வெளியேறின. ஒன்று நகரின் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கியும் மற்றொன்று மணிகண்டனின் ஃப்ளாட்டை நோக்கியும் விரைந்தன.

ஷான்வியும் தேஜஸ்வினியும் உள்ளே நுழைந்த போதே ஹாலில் மலர்க்கூடைகள் அடுக்கியிருக்க சித்தார்த் பார்த்தீர்களா எனது முன்யோசனையை என தனது கோட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டான்.

மூவரும் தன்வியின் அறையை அழகாய் அலங்கரிக்கையில் ஒரு மணி நேரம் முழுதாய் கடந்திருந்தது. எல்லாம் முடிந்ததும் திருப்தியாய் நோட்டமிட்டனர் மூவரும்.

“லேவண்டர் ரூம் ஃப்ரெஷ்னர் தானே வீ.கே சாருக்குப் பிடிக்கும்… ஒரு நிமிசம் இருங்க” என்ற ஷான்வி தனது அறைக்குள் சென்றவள் அறை நறுமணமூட்டியுடன் திரும்பினாள்.

அதை அடித்து விட்டு வாசம் பிடித்தவளை வினோதமாய் பார்த்த சித்தார்த் “அண்ணாக்கு இந்த ஃப்ளேவர் தான் பிடிக்கும்னு உனக்கு யாரு சொன்னாங்க?” என்று கேள்வியாய் நோக்க

“நான் வீ.கே சாரோட ப்ளாகை ரெகுலரா ஃபாலோ பண்ணுறேன்ல… சோ எனக்கு அவரைப் பத்தி ஓரளவுக்குத் தெரியும்” என்றாள் ஷான்வி பெருமிதத்துடன்.

அவன் அவளை மெச்சுதலாகப் பார்த்தவன் இன்னும் ஒரு முறை அலங்காரத்தை நோட்டமிட்டுவிட்டு இரு பெண்களுடன் அங்கிருந்து ஹோட்டலுக்கு விரைந்தான்.

அங்கே வரவேற்பு ஆரம்பித்து வள்ளியும் கார்த்திக்கேயனும் அழைப்பு விடுத்திருந்த உறவினர்களும், கார்த்திக்கேயனின் பணிக்கால நண்பர்களும், விஸ்வஜித்தின் கல்லூரிக்கால தோழர்களுமாய் அந்த ஹாலே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

காதை இதமாய் வருடும் மெல்லிசை, அழகான அலங்காரம், மனதுக்கு நெருக்கமானவர்களின் குறும்புத்தனமான சேட்டைகள், இது எல்லாவற்றுக்கும் மேலாக புதுமணமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில கேளிக்கை விளையாட்டுகள் என வரவேற்பு கலகலப்பாக நடந்து கொண்டிருந்தது.

இந்நிகழ்வுகளை தனது மொபைலில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஷான்வியிடம் வந்தான் சித்தார்த்.

“நம்ம மேரேஜ் பத்தி உனக்கு எதாவது எக்ஸ்பெக்டேசன் இருக்குதா?”

அவனது கேள்வியில் கேலியாய் சிரித்தவள் “நமக்கு மேரேஜ் ஆகும்னு கூட உனக்கு எக்ஸ்பெக்டேசன் இருக்குது பாத்தியா, யுவர் இமேஜினேசன் லெவல் இஸ் ஆசம்யா!” என்று ராகமாய் இழுத்தாள்.

“அழகான கற்பனைகள் தான் நிஜமா மாறும் ஷானு! நீ இந்த தேதிய உன் டைரில குறிச்சு வச்சுக்கோ… இன்னைக்கு தேதில இருந்து சரியா மூனு வருசம் கழிச்சு இதே போல ஒரு ஈவினிங் டைம்ல உனக்கும் எனக்கும் இதே ஹோட்டல்ல ரிசப்சன் நடக்கும்… அப்போ நம்மளும் அந்த மாதிரி போஸ்ட் வெட்டிங் போட்டோசூட்னு அதகளம் பண்ணுவோம்… வெயிட் அண்ட் சீ” என்று உரைத்தவனின் குரலில் காதலும் நம்பிக்கையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.

ஷான்வி எதுவும் பேசாது அவனை நோக்க அவளது பார்வையின் வீச்சில் ஈர்க்கப்பட்ட சித்தார்த் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு செல்பி எடுக்க அக்காட்சியை தன்வியும் விஸ்வஜித்தும் மட்டுமன்றி மொத்தக்குடும்பமும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி நின்றிருந்தனர்.

அது தெரியாது சித்தார்த்தும் ஷான்வியும் சுற்றம் மறந்து ஒருவரை ஒருவர் நோக்கியபடி வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்தனர்.