💞அத்தியாயம் 2💞

அப்பாக்கு நான் அப்ராட் போய் எம்.பி. பண்ணணும்னு ரொம்ப ஆசைபொண்ணுங்க சொந்தக்கால்ல நின்னா தான் வருங்காலத்துல அவங்களால சுதந்திரமா செயல்பட முடியும்னு அடிக்கடி சொல்லுவார்நான் யூ.எஸ்ல ஹூஸ்டன் யூனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணிருக்கேன்என்னோட மார்க்ஸ் அண்ட் ஸ்கோர்ஸ் எல்லாமே ஹையா தான் இருக்குஇன்னும் யூனிவர்சிட்டில இருந்து லெட்டர் வர வேண்டியது தான் பாக்கிஅங்க அட்மிசன் கிடைச்சிட்டா கூட தேஜூவோட அக்கா வீட்டுல பேயிங் கெஸ்டா ஸ்டே பண்ணிட்டு ரெண்டு வருச கோர்ஸை கம்ப்ளீட் பண்ணிடுவேன்

                                                                   –தன்வி

வேவ்ஸ் ரெஸ்ட்ராண்ட், ஹூஸ்டன்

கருப்புநிற கண்ணாடி மூடிய மூன்று மாடி கட்டிடம் இசைவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. டிஜேவின் இசைக்கேற்ப இளசுகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இடையிடையே குளிர்பானங்கள் அடங்கிய தட்டுகளுடன் சர்வர்கள் நடமாடினர். வந்த அனைவரும் இளம்வயதினர் மட்டுமல்ல. சில நடுத்தர வயதினரும் அவர்களிடையே அடக்கம்.

ஹூஸ்டனின் மிகப்பெரிய வணிகரான டேனியலின் மகளான ரேயானின் பிறந்தநாள் பார்ட்டி அது. தந்தையின் தொழில் வட்டாரத்திலிருந்து வந்திருந்த பலருடன் ரேயானின் உடன்பயிலும் தோழிகளும், அவளது நண்பர்களும் வந்திருக்கவே பார்ட்டி களை கட்டியிருந்தது.

கருப்புநிற நீள கவுனில் வெள்ளைக்கற்கள் ஆங்காங்கே மின்ன பொன்னிற குதிகால் உயர்ந்த காலணிகளுடன் நடமாடிக் கொண்டிருந்த ரேயான் அங்கே டிஜேவின் இசைக்கு லாவகமாக நடனமாடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டதும் ஒரு வசீகரப்புன்னகை சிந்தியபடி அவனை நோக்கிச் சென்றாள்.

“ஹேய் சித்” என்ற அவளின் அழைப்புக்குத் திரும்பியவனின் நெற்றியில் அன்று பூசிய ஹேர் ஜெல்லுக்கும் அடங்காத அலையான கூந்தல் சரிந்திருக்க கூர்நாசியும், சினேகப்புன்னகை தவழும் இதழும், குறும்பு வழியும் கண்களுமாய் அவளை நோக்கினான் சித்தார்த் கார்த்திக்கேயன். அவனது அமெரிக்க நண்பர்களுக்கு மட்டும் சித்.

“கம் ஆன் பர்த்டே பேபி… ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று தனது இரு கைகளையும் விரித்துக் கேட்க ரேயான் தனது பொன்னிற கூந்தல் அசைய ஆமென்றாள்.

அதற்குள் அவர்களின் வகுப்புத்தோழர்கள் அங்கே குழுமிவிட அரட்டைக்கச்சேரி ஆரம்பமானது.

“வாட் அபவுட் யுவர் இண்டர்ன்ஷிப் சித்?” என்று ஆர்வமாய் கேட்டவர்களுக்குப் பதிலளிப்பதற்காக அங்கே இருந்த சோபாவில் சரிந்தவன்

“டுமாரோ மார்னிங் ராயல் கிராண்டேல இண்டர்வியூ… ஐ ஹோப் நான் கிளியர் பண்ணிடுவேன்” என்று சொல்லிச் சிரித்தவனின் புன்னகைக்கு மற்றவர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் மாயம் இருந்தது என்னவோ உண்மை.

அவன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும், கலகலப்புக்கும், உற்சாகத்துக்கும் குறைவில்லாது பார்த்துக் கொள்வான். அனைவரிடமும் இயல்பிலேயே இலகுவாகப் பேசிப் பழகும் சுபாவம் கொண்டவன். எதையும் தீவிரமாக யோசிக்காது தன்னைச் சார்ந்தவர்களை மகிழ்ச்சியுடன் காணவேண்டும் என்று மட்டும் எண்ணும் ரகம் அவன்.

“சிரிக்கிறதுக்கு என்ன டாக்ஸா பே பண்ணப் போறோம்? தாராளமா மனசு நிறைஞ்சு சிரிக்கலாமே! மனுசனுக்கு கடவுள் ஃப்ரீயா குடுத்த ஒரு ஜூவல் தான் சிரிப்பு… அதைப் போட மனுசங்க ஏன் இவ்ளோ தயங்குறாங்க?” என்ற எண்ணம் தான் அவனை மற்றவர்களின் கவலையைப் போக்கி அவர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் கலகலப்பான குறும்புத்தனமானவனாக மாற்றியது எனலாம்.

அவனும் அவனது தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் ஹூஸ்டன் யூனிவர்சிட்டியில் உள்ள பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை இறுதியாண்டு படிப்பவர்கள். இறுதியாண்டின் இந்த செமஸ்டரில் அவர்களுக்கு வகுப்புகள் மாலையில் தான். எனவே பகல் நேரத்தில் வெட்டிப்பொழுது போக்காமல் ஹூஸ்டனின் மிகப்பெரிய நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.

சித்தார்த் ஹூஸ்டனின் பிரபலமான ஹோட்டலான ராயல் கிராண்டேவில் விண்ணப்பித்திருந்தான். நாளை நேர்முகத்தேர்வு.

நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவனின் மொபைலில் அழைப்பு வரவே தோழர்களிடம் சொல்லிக் கொண்டு டிஜேவின் இசை தொந்தரவு செய்யாத வண்ணம் தள்ளி வந்துவிட்டான்.

“சொல்லுடா அண்ணா” என்றான் எடுத்ததும்.

மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அதற்கு சத்தமாக நகைத்தவன் தோட்டத்தின் புல்தரையை தன் ஷூ கால்களால் செதுக்கியபடியே

“டேய் அண்ணா! நீ எப்பிடி ஸ்ரீராமசந்திரமூர்த்தி மாதிரி உனக்கு வரப் போற சீதாதேவிக்காக காத்திருக்கியோ அதே போல நானும் லெட்சுமணன் மாதிரி எனக்கு வரப் போற ஊர்மிளாக்காக காத்திருக்கேன்டா… அவங்க எல்லாருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ்… இந்தியாவை விட்டுத் தான் வந்திருக்கேனே தவிர நானும்  உன்னை மாதிரி இந்தியன் கல்சரை விட்டுட மாட்டேன்டா.. பிலீவ் மீ ப்ரோ” என்று சொல்லிவிட்டு ஜீன்சின் பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டான்.

மறுமுனையில் இருந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு மீண்டும் நண்பர்களுடன் கலந்து கொண்டான்.

ரேயான் கேலியாக “வீ.கே தானே கால் பண்ணுனாரு?” என்று கேட்க ஆமென்றவன்

“இந்த ஹூஸ்டன்ல என்னை கேள்வி கேக்குற ஒரே ஜீவன் அவன் மட்டும் தான்மா” என்று தோளைக் குலுக்க

“வீ.கே இஸ் சோ ஹம்பிள் அண்ட் டவுன் டு எர்த்” என்று சிலாகித்தாள் ரேயான்.

அதைக் கேட்டதும் சித்தார்த்துக்குப் பெருமைபிடிபடவில்லை. அவர்கள் புகழ்வது அவனது உடன்பிறந்த மூத்தவனை அல்லவா!

இத்துணை பெருமைக்கும் புகழுக்கும் ஏற்றவன் தான் அவன்; இருபத்து நான்கு வயதில் அமெரிக்காவுக்கு வந்தவன் வெகு சீக்கிரத்திலேயே அவனது சமையல் திறமையால் பிரபலமாகி விட்டான். எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக அவனது இருபத்தியேழாம் வயதில் ‘மாஸ்டர் செஃப் புரொபஷனல்’ என்ற டிவி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று மொத்த உலகுக்கும் இந்தியச்சமையலின் சிறப்பை உணர்த்திவிட்டான்.

இன்று இந்தியாவில் சமையல்கலையைப் பயிலும் இளம் சமையல் கலை வல்லுனர்கள் அனைவருக்கும் அவன் ஒரு ரோல் மாடல் ஆகிவிட்டிருந்தான் என்றால் அது மிகையில்லை. அப்படிப்பட்டவனின் தம்பி என்ற பெருமையும் அண்ணன் மீதான அளவுக்கதிகமான அன்பும் தான் அவனையும் அண்ணனுடன் இங்கே வர வைத்தது.

சித்தார்த் இங்கே யாரை நினைத்து மனம் நிறைகிறானோ அவன் ரிவர் ஓக்சில் உள்ள அவர்களின் அபார்ட்மெண்டில் மடிக்கணினியில் முக்கியமான சில சமையல் குறிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

சீராக வெட்டப்பட்ட தலைமுடி, மடிக்கணினியின் திரையை துளையிடும் கூரிய பார்வை, கிளீன் ஷேவ்வில் பளபளத்த முகம், அழுத்தமான இதழ்கள் என கம்பீரத்தின் மறுவுருவாய் இருந்தவன் மடிக்கணினியை மூடிவைத்துவிட்டு கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்து சோபாவில் சாய்ந்து கொண்டான். அவன் தான் வீ.கே என்று அழைக்கப்படும் விஸ்வஜித் கார்த்திக்கேயன்.

இளம்வயதில் பெரும்புகழ் கிடைத்தாலும் அதை தலையில் ஏற்றிக்கொண்டு தலைக்கனமாய் திரியும் எத்தனையோ நபர்களுக்கு மத்தியில் எளிமையும் அமைதியும் நிறைந்தவன். அவனது தொழில் நேர்த்தியும், ஆர்வமும் தான் அவனை இந்த இளம்வயதில் இவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

சோபாவில் சாய்ந்திருந்தபடி தம்பியின் வருகைக்காக காத்திருந்தவனை மொபைல் சிணுங்கி தன் பக்கம் ஈர்த்தது. அழைப்பு அவனது அன்னையிடம் இருந்து தான் வந்திருந்தது. உடனே இதழ்கள் ஒரு குறுநகையைச் சிந்த போனை எடுத்து காதில் வைத்தான்.

“சொல்லுங்கம்மா! சித்து வழக்கம் போல போனை எடுக்கலயா?” என்று எடுத்ததும் கேலி செய்தவனிடம் மறுமுனையில் புலம்ப ஆரம்பித்தார் அவனது அன்னை வள்ளி.

“நான் என்ன பண்ணுறது விஸ்வா? இருபத்தஞ்சு வயசு ஆகுது… இன்னும் விளையாட்டுப்பையனாவே இருக்கானேடா… உங்கப்பா கிட்ட சொன்னா அவரும் அவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணுறாரு… நீ கிண்டல் பண்ணுற… கடைசில மூனு பேருமா சேர்ந்து என்னை புலம்ப விடுறிங்கடா”

“மம்மி இப்போ நீங்க ‘டா’ போட்டது அப்பாவுக்கும் சேர்த்து தானே! எங்க போனாரு மிஸ்டர் கார்த்திக்கேயன்? அவரோட தர்மபத்தினி அவரை ‘டா’ போட்டு கூப்பிடுறது கூட தெரியாம என்ன பண்ணிட்டிருக்காரு?”

“டேய் நீ இந்த வயசான காலத்துல எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சிண்டு முடிஞ்சு விட பார்க்குறியே! நல்லா வருவடா மகனே”

மறுமுனையில் தந்தை  எதுவோ கேட்டபடி அன்னையிடம் இருந்து போனை வாங்கிக் கொள்ள அவரிடம் ‘டா’ போட்ட விசயத்தை ஒப்பித்தான் விஸ்வஜித்.

அவனது தந்தை கார்த்திக்கேயன் மத்திய அரசு அதிகாரியாக இருந்தவர். மூத்தமகன் தலை எடுத்ததும் அவனது கட்டாயத்தால் விருப்ப ஓய்வு பெற்றவர். இரு மகன்களுக்கும் எந்தக் குறையும் வைக்காத தந்தை அவர். இன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்தக் குறையுமில்லாது பார்த்துக் கொண்ட மூத்தமகனை நினைத்து வழக்கம் போல இப்போதும் கர்வப்பட்டுக் கொண்டார்.

தான் முன்னுக்கு வந்ததோடு தம்பியையும் தன்னுடன் அழைத்துச் சென்றவன் அவனைப் பொறுப்பாய் பார்த்துக் கொள்வதால் கார்த்திக்கேயனுக்கும் வள்ளிக்கும் இரு மகன்களின் வருங்காலத்தைப் பற்றிய கவலை என்பது கிஞ்சித்தும் இல்லை, அவர்களின் திருமணம் பற்றிய கனவுகளைத் தவிர.

கார்த்திக்கேயன் மறுமுனையில் கடகடவென சிரித்தவர் “நான் ஜாப்ல இருந்து வி.ஆர்.எஸ் வாங்குன மாதிரி உங்கம்மாவோட பதிபக்தியும் வி.ஆர்.எஸ் வாங்கிடுச்சு போலடா விஸ்வா… அதை விடுடா கண்ணா! சித்துவும் நீ ஒர்க் பண்ணுற ஹோட்டல்ல தான் இண்டர்ன்ஷிப் ஜாயின் பண்ணப்போறதா சொன்னான்… அண்ணனும் தம்பியும் ஒரே இடத்துல வேலை பார்த்தா சரியா வருமா?” என்று தன் கவலையைச் சொல்லிவிட

“அதுக்கு அவசியமே இல்லப்பா.. அவனுக்கு அட்மினிஸ்ட்ரேசன் சைட்ல ஒர்க்… எனக்கு என்னோட கிச்சன் கிங்டம்ல ஒர்க்… சோ நீங்க ஒரி பண்ணிக்கிற மாதிரி எதுவும் நடக்காதுப்பா… இங்க ஒர்க் பண்ணுற டிசிசன் அவனோடது… அவனா முடிவெடுத்துப் பழகட்டும்பா… அப்போ தான் உலகத்த சமாளிக்க கத்துப்பான்” என்று சொல்லி கார்த்திக்கேயனின் கவலையைப் போக்கிவிட்டான் அவரது மூத்தப்புதல்வன்.

ஆம்! விஸ்வஜித் தான் ஹோட்டல் ராயல் கிராண்டேவின் ரெஸ்ட்ராண்ட் பகுதிக்கான தலைமை சமையல்கலை நிபுணன். அங்கே அவனுக்குக் கீழே ஏராளமானவர்கள் வேலை செய்து வந்தனர். சித்தார்த்துக்கு இளம்வயதிலிருந்தே அண்ணனுடன் இருப்பது தான் உவப்பு. எனவே தான் அமெரிக்காவில் படிக்கிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு  இங்கே வந்து விஸ்வஜித்துடன் தங்கிவிட்டான். இப்போதும் விஸ்வஜித்தின் அருகாமையில் இருக்க திட்டமிட்டு தான் அங்கேயே இண்டர்ன்ஷிப்புக்கும் விண்ணப்பித்திருந்தான். சிபாரிசு செய்யக்கூடாது என விஸ்வஜித்துக்கு வேண்டுகோள் விடுத்தது எல்லாம் வேறு விசயம்.

இவையனைத்தையும் பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் போனை வைத்தவன் நாளைய மெனுவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.

அதே நேரம் இதே ரிவர் ஓக்சில் இன்னொரு ஜீவன் விஸ்வஜித்தின் புகைப்படத்தை ஆர்வத்துடன் நோக்கிக் கொண்டிருந்தது.

அது வேறு யாருமல்ல! ஷான்வி தான்.

சமையல்கலை பயில ஆரம்பித்த காலத்திலிருந்தே அவளுக்கு வீ.கே என்ற விஸ்வஜித் கார்த்திக்கேயன் தான் ரோல் மாடல். சென்னை வீட்டில் அவளது அறை முழுவதும் அவனது புகைப்படங்கள் நிறைந்திருக்கும். அதிலும் அவன் மாஸ்டர் செஃப் புரபஷனல் என்ற டைட்டிலை வென்றதற்கு தானே வென்றது போல கொண்டாடியவள் அவள்.

இப்போது அவனது புகைப்படத்தை கண்ணில் நட்சத்திரங்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளை இடித்தாள் அவளது அக்கா தன்வி.

“இன்னும் உன்னோட வீ.கே பைத்தியம் குணமாகலயாடி?”

“அது இப்போதைக்கு குணமாகாது தனு! பாரேன் வீ.கே செம க்யூட்ல… நாளைக்கு ஹோட்டல் போனதும் முடிஞ்சா அவரைப் பார்த்துடணும்”

“ஆமா! எப்போ மிஸ் ஷான்வி மணிகண்டன் வருவாங்கனு அந்தாளு பொக்கேயோட காத்திருப்பான் பாரு” என்று தன்வி சாதாரணமாய் கேலி செய்யவும் ஷான்வி ஆதுரத்துடன் தமக்கையை நோக்கினாள்.

இந்த இரண்டு மாதங்களில் இந்த மாதிரி கேலிப்பேச்செல்லாம் அவர்களுக்கு மறந்து போயிருந்தது. இப்போதும் தங்கையை இயல்புநிலைக்குக் கொண்டு வரவே தன்வி இப்படி வாயாடினாள் எனலாம்.

அவளது தங்கைக்கோ அக்கா தன்னைக் கேலி செய்யுமளவுக்கு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட மகிழ்ச்சி.

இருவரும் வீ.கேவை பற்றி பேசியவண்ணம் தங்கள் உடமைகளை வார்ட்ரோபில் அடுக்கி வைத்தனர். புகைப்படங்களை எடுத்தவர்களின் கண்கள் கலங்கிவிட்டது. ஏனெனில் அதில் சிரித்தவண்ணம் இருந்தவர்கள் இச்சகோதரிகளின் பெற்றோரான மணிகண்டனும் பூர்ணாவும்.

இருவருமே எதிரிகளுக்குக் கூட தீங்கு எண்ணாத உள்ளத்தினர். அவர்களின் தயவால் வாழ்ந்தவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் பெற்ற பெண்களோ யாருக்கும் தெரியாது சொந்தநாட்டை விட்டு ஓடிவந்திருக்கின்றனர். யாருமறியா இந்த அன்னிய தேசத்தில் கிட்டத்தட்ட அனாதைகளாய் நிற்கின்றனர்.

ஆனால் தன்விக்கு தன் பெற்றோரின் புண்ணியம் தான் தங்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடும், ஷான்விக்கு அவளுக்குப் பிடித்த வேலையும் கிடைக்க காரணம் என்ற நம்பிக்கை. கூடவே இனி நடக்கவே நடக்காது என்று எண்ணியிருந்த அவளது படிப்பு இப்போது சாத்தியமானதும், பெற்றோர் செய்த நற்காரியங்களின் பலன் தான் தங்களுக்கு இப்போது கை கொடுத்திருக்கிறது என்று நம்பினாள் அவள்.

அவர்கள் என்றுமே தங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இரவுணவு எடுத்துவரச் சென்றாள்.

இந்த ஒரு மாதத்துக்கு மட்டும் அவள் சமைத்ததை சாப்பிட்டுக்கொள்ளலாம், அடுத்த மாதத்தில் இருந்து அவர்களுக்குத் தேவையான உணவை அவர்களே செய்து கொள்ளவேண்டும் என அஸ்வினி வீட்டுக்குள் வந்ததுமே சொல்லிவிட்டாள்.  இப்போதும் இரவுணவு தயாராகிவிட்டதாக அனிகா ஒரு புன்சிரிப்புடன் சொல்லிவிட்டுப் போக தன்வி சாப்பாட்டை அறைக்கே எடுத்து வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

தன்விக்குமே அஸ்வினியின் தாமரை இலையின் தண்ணீராய் இருக்கும் போக்கு சங்கடத்தைத் தான் கொடுத்திருந்தது. ஆனால் அவள் முசுடு இல்லை. தானும் தன் மகளும் மட்டும் தன் உலகில் போதுமென கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டு வாழும் இக்குணம் அவளது இயல்பு என எண்ணித் தங்கள் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டனர் ஷான்வியும் தன்வியும்.