💞அத்தியாயம் 17💞

“தனுவ பார்க்கிறப்போ மனசுல ஏதோ ஒரு புது ஃபீல் உண்டாகுது… அவளோட அப்பாவித்தனம், தங்கச்சி மேல அவ வச்சிருக்கிற பாசம், இது எல்லாத்துக்கும் மேல சொந்த உழைப்புல வாழணும்னு நினைக்கிற குணம் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு… ஒர்க்ல கூட அவ ரொம்ப பெர்ஃபெக்ட்னு சித்து சொன்னான்… கொஞ்சம் பயந்த சுபாவம் போல… அதை மாத்த முடியாது… பட் ஷீ இஸ் ஸ்பெஷல்”

                                                                    -விஸ்வஜித்

பல்கலைகழகத்திலிருந்து அப்போது தான் ஹோட்டலுக்கு வந்தாள் தன்வி. உள்ளே நுழையும் போது ஹோட்டலின் டைனிங் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை கவனித்தபடி விறுவிறுவென்று மின்தூக்கியில் நுழைந்து மூன்றாவது தளத்தை அடைந்தாள்.

அலுவலகத்தில் நுழைந்தவளுக்காக அங்கே காத்திருந்தான் சித்தார்த். அவனிடம் பேச்சு கொடுத்தபடி கணினியின் திரையை உயிர்ப்பித்தவளிடம்

“அமுல் பேபி! இன்னைக்கு உனக்கு ஒர்க் கொஞ்சம் ஏர்லியலரா முடிஞ்சிடும்… ஒர்க் முடிஞ்சதும் விஸ்வாவுக்கு வெயிட் பண்ணு… அவன் உன் கூட பேசணும்னு சொன்னான்” என்று சொன்ன சித்தார்த்தை விழி விரித்து நோக்கினாள் அவள்.

“வீ.கே சார் என் கிட்ட என்ன பேசணும் சித்து? எனக்கு ஒரு மாதிரி நெர்வசா இருக்கே” என்று இப்போதே பதற ஆரம்பித்தாள்.

“இவ்ளோ நெர்வஸாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே! அவன் உன்னை பொண்ணு பாக்க வரப் போற மாப்பிள்ளையா?”

“சித்து” என்று முகம் சுருக்கியபடி அவனது புஜத்தில் அடித்தவளைக் கண்டு நகைத்தவன் “நத்திங் டு ஒரி… ஜஸ்ட் பேசணும்னு சொன்னான்… அவ்ளோ தான்… நீ அவனுக்கு வெயிட் பண்ணு… ஓகேவா?” என்று அவளது தலையில் செல்லமாகத் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

அவன் சென்ற பின்னர் கைகள் தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் விஸ்வஜித் தன்னிடம் என்ன பேச நினைக்கிறான் என்பதிலேயே உழன்றது.

கூடவே அவனுடனான மற்ற சந்திப்புகளின் போது நடந்த நிகழ்வுகள் வேறு நினைவுக்கு வந்து அவளை இம்சித்தது. போதாக்குறைக்கு ஒவ்வொரு முறையும் அவனது பார்வையும் சிரிப்பும் அவனது கரங்களின் ஸ்பரிசமும் அவளைத் தடுமாறச் செய்து கன்னம் சிவக்க வைக்கத் தவறுவதில்லை.

தங்கையின் ரோல்மாடல் என்றளவில் மட்டும் அவனைப் புகைப்படங்களில் பார்த்திருந்தவளுக்கு நேரில் சந்தித்ததும் புதியவனாய் தோன்றினான் அவன். அவனிடம் சகஜமாகப் பேச அவளால் இயலாது. காரணம் கேட்டால் புதியவர்களிடம் பேச தயக்கம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் சித்தார்த் அவளது தயக்கத்தைத் தவிடுபொடியாக்கி வெகுநாளாகி விட்டது.

சொல்லப் போனால் அலுவலகத்தில் அவளது சகப்பணியாளர்கள், ஷான்வியுடன் பணிபுரியும் பாரிஸ்டா கென் கூட அவளுக்குப் புதியவர்கள் தான். அவர்களுடன் சாதாரணமாகப் பேசுபவளுக்கு விஸ்வஜித்திடம் மட்டும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றியது.

இவற்றை எல்லாம் மனதிற்குள் அசை போட்டபடி வேலைகளை முடித்தவள் கணினியில் நேரத்தைப் பார்க்க அது மாலை ஐந்து மணியைக் காட்டியது. மிசஸ் டேவிஸிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியவள் கீழ்த்தளத்தை அடைந்த போது மாலை நேர ஜனச்சந்தடியுடன் ஹோட்டல் நிரம்பி வழிந்தது.

சித்தார்த் சொன்னபடி விஸ்வஜித்துக்காக காத்திருப்பதா இல்லை சென்றுவிடலாமா என்று யோசித்தபடி மொபைல் போனை நோக்க அதில் தவறிய அழைப்புகள் நிறைய இருக்கவே யார் அழைத்தது என்று பார்க்க அதில் புதிய எண்ணைக் காட்டவே யாராக இருக்க கூடுமென்ற யோசனையுடன் அந்த எண்ணுக்கு அழைத்தாள்.

இணைப்பு துண்டிக்கப்படவே போனின் திரையை வெறித்தபடி நின்றவளிடம் வந்தான் விஸ்வஜித். வழக்கம் போல அவனது வசீகரப்புன்னகை மனதைச் சுண்டியிழுக்க தன்வி தடுமாறாமல் தன்னைச் சமாளித்துக்கொள்ள பெரும் பிரயத்தனப்பட்டாள்.

அவளை நெருங்கியவன் “எனக்குத் தானே கால் பண்ணுன? நானே வந்துட்டேன்.. ஷால் வீ கோ?” என்று கேட்க

“இது உங்க நம்பரா? சாரி வீ.கே சார்… எனக்கு உங்க நம்பர் தெரியாது… அது சரி! என் நம்பர் உங்க கிட்ட எப்பிடி வந்துச்சு?” என்று கேட்டுவிட்டுப் புருவம் சுருக்க

“சித்து கிட்ட வாங்குனேன்… அதுக்கு ஏன் இந்த ஐ ப்ரோவ சுருக்கி வில்லத்தனமா பார்க்குற?” என்றவனது கரங்கள் அவளது புருவங்களை நீவி விட நெருங்கவும் சட்டென்று விலகி நின்றாள் தன்வி.

விஸ்வஜித் பக்கென்று நகைத்தவன் “ஓகே! இப்போவாச்சும் போகலாமா?” என்று கேட்க தன்வி அவன் எங்கே அழைக்கிறான் என்று கூட கேட்காது விறுவிறுவென்று ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

தரிப்பிடத்தில் நின்ற காரை எடுத்துவந்தவன் அவளுக்குக் கதவைத் திறந்துவிட தன்வி அமரவும் கார் கிளம்பியது. கார் செல்லும் வழியைப் பார்த்தவாறே “சார் இப்போ நம்ம எங்க போறோம்?” என்று கேட்டவளிடம்

“உங்க ஃப்ளாட்டுக்குத் தான் மேடம்… ஹவுஸ் வார்மிங்குக்கு வந்தது.. அதுக்கு அப்புறம் நீங்களும் கூப்பிடல… நானும் வரல” என்று பதிலளித்தபடி ஸ்டீரியங் வீலை வளைத்தான் விஸ்வஜித்.

அவர்களின் ஃப்ளாட்டுக்குத் தான் செல்லப் போகிறோம் என்று விஸ்வஜித் சொன்னதும் தன்விக்கு இருப்பு கொள்ளவில்லை. இது வரை அந்த வீட்டில் அவளும் ஷான்வியும் மட்டும் தான். இவனுடன் அங்கே எப்படி தனியாகச் செல்வது என்ற ரீதியில் யோசித்தவளின் கண் முன்னே இரு விரல்கள் சொடுக்குப் போடவும் திடுக்கிட்டுத் திரும்பியவள் மெதுவாக அவனிடம் “சார் வேற எங்கயாச்சும் போகலாமே” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திருந்தாள்.

விஸ்வஜித் அவளைக் குறும்பாக நோக்கிவிட்டு “ம்ம்.. போகலாமே! ஆனா உன்னோட ஃப்ளாட் தான் எனக்கு வசதியா இருக்கும் தனு… அங்க போயிட்டு அப்புறமா வேற எங்கயாச்சும் போகலாம்! சரியா?” என்று சொல்லிவிட இதற்கு மேல் அவனிடம் வாதிட விரும்பாமல் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் தன்வி.

அவர்களின் ஃப்ளாட் வந்துவிடவும் இருவரும் இறங்கி புல்வெளியில் நடக்க ஆரம்பித்தனர். அப்போது தன்வி தனது காலணிகளைக் கழட்டிவிட்டு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தாள். கேள்வியாய் நோக்கியவனுக்கு “எனக்கு இப்பிடி நடக்க ரொம்ப பிடிக்கும் சார்” என்ற பதில் வேறு!

மேல்தளத்தை அடைந்தவர்கள் ஃப்ளாட்டுக்குள் நுழைய தன்வி  முகம் கழுவி விட்டு வருவதாகச் சொன்னவள் அவனை ஹால் சோபாவில் அமருமாறு கைகாட்டிவிட்டுச் சென்றாள.

விஸ்வஜித் அங்கே அமர்ந்தவன் கார்பெட் டைல்சைப் பார்த்தாவாறே நேரம் கடத்தினான். சில நிமிடங்களுக்குப் பின்னர் காபி கோப்பைகளுடன் வந்தாள் தன்வி. அவனிடம் நீட்டியவள் தானும் ஒரு கோப்பையும் அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து காபியை மிடறு மிடறாக ரசித்து அருந்த தொடங்கினாள்.

விஸ்வஜித் தானும் அருந்தியவன் அவளை அழைக்கவும் திரும்பிய தன்வி என்னவென்பது போல பார்க்க “ஐ லவ் யூ தனு” என்று அவன் சொல்லவும் அவளுக்குக் குடித்த காபி புரையேறி அவளது உடையில் சிந்திவிட வாயை மூடிக் கொண்டு குளியலறையை நோக்கி ஓடினாள் அவள்.

திரும்பி வந்தவளின் முகத்தில் ஈரம் துடைக்காமல் இருக்கவே விஸ்வஜித் எழுந்தவன் தனது கர்சீப்பை எடுத்து அவளது முகத்தைத் துடைக்கவும் தன்வியின் விழிகள் அகலமாய் விரிய ஆரம்பித்தன.

திடுக்கிட்டவள் அவன் கையைத் தட்டிவிட விஸ்வஜித் “வாட் ஹேப்பண்ட்? இப்பிடி ஈரமுகத்தோட இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கும்மா” என்று அக்கறையாய் கேட்கவும் தலையாட்டி மறுத்தாள் தன்வி.

“நீங்க இப்பிடி திடுதிடுப்புனு பேச காரணம் என்ன? ஏன் இந்த மாதிரிலாம் பேசுறிங்க சார்? உங்களுக்கு என்னை பாத்தா எப்பிடி தெரியுது? இந்தப் பொண்ணு பயந்த சுபாவம் தானே, இஷ்டத்துக்குக் கிண்டல் பண்ணலாம்னு நினைச்சிங்களா?” என படபடவென பொரிய ஆரம்பித்தாள்.

“ஹேய்! மனுசன் சீரியஸா பிரபோஸ் பண்ணுறேன்… அது உனக்குக் கிண்டல் பண்ணுற மாதிரி தோணுதா?  எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… நாம இப்போ லவ் பண்ணலாம்… கொஞ்சநாள் கழிச்சு லவ் பண்ணுறது போரடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறேன்… புரியுதா மேடம்?” என்று அவள் நெற்றியில் தட்டிக் கேட்க தன்வியால் அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

தலையை இடவலமாக ஆட்டி தனது இரு கைகளாலும் பிடித்துக் கொண்டபடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள் அவள். கண்ணாடிக்கதவைத் திறந்ததும் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி சில நிமிடங்கள் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர் அவன் புறம் திரும்பி “நீங்க நிஜமாவா சொல்லுறிங்க சார்?” என்று கேட்டு உறுதிப்படுத்தவும் விஸ்வஜித்துக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

ஆயினும் சிரிப்பைக் கட்டுப்படுத்தியவனாய் அவளருகில் சென்றவன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டபடி நின்று அந்த பெரிய ஜன்னல் வழியே வெளியே தெரிந்த ஆகாயத்தை நோக்கியபடி பேச ஆரம்பித்தான்.

“காதல் வர்றதுக்கு பெருசா ஒரு காரணமும் தேவை இல்ல… எனக்கு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பாத்ததுமே மனசுக்குள்ள ஒரு ஸ்பார்க் அடிச்ச மாதிரி தோணுச்சு… உன் கூட பேசுன சில சந்தர்ப்பங்கள்ல உன்னோட அப்பாவித்தனம், உன் தங்கச்சி மேல நீ வச்சிருக்கிற அக்கறை, அஸுவை நீ கவனிச்சிக்கிட்ட விதம், இது எல்லாத்துக்கும் மேல சித்து கூட உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்னு உன்னை மீட் பண்ணுற ஒவ்வொரு டைமும் நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருந்தே… சரி இதெல்லாம் மனசுலயே வச்சிட்டிருந்து என்ன பண்ண? அதான் உன் கிட்ட கொட்டிட்டேன்… ஐ மீன் பிரபோஸ் பண்ணிட்டேன்”

காற்றில் சிகை நெற்றியில் புரள காதல் என்ற மிகப்பெரிய விசயத்தை அவன் சர்வசாதாரணமாக சொன்னவிதம் கூட தன்வியை அவன்பால் ஈர்க்க தன் எண்ணம் போகும் போக்கை அறிந்து ஓங்கி தன் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

பின்னர் கண்களை இறுக மூடித் திறந்து தன்னைச் சமன் செய்து கொண்டவளாய் பெருமூச்சை எடுத்து விட்டாள்.

“என்னால உங்கள மாதிரி ஸ்பீடா முடிவெடுக்க முடியாது சார்… உங்களுக்கே நல்லா தெரியும் எனக்கும் ஷான்விக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல… இருக்கிற சில சொந்தங்களும் துரோகிகளா மாறி ரொம்ப நாள் ஆச்சு… அவளை விட மூத்தவளா இருந்தும் அவ தான் ஒவ்வொரு தடவையும் எனக்குத் தைரியம் சொல்லி உறுதுணையா நின்னுருக்காளே தவிர நான் இப்போ வரைக்கும் அவளுக்குனு எதையும் செஞ்சது இல்ல…

அவளோட லைப் செட்டில் ஆகாம என்னால லவ், மேரேஜ், ஃபேமிலினு சுயநலமா யோசிக்க முடியாது சார்… அது போக இந்தியாவுல தீர்க்கப்பட வேண்டிய சில கணக்கு பாக்கி இருக்கு… அதை அப்பிடியே விட்டுட்டு நீங்க காதல்னு சொன்னதும் உங்க பின்னாடி வர என்னால முடியாது”

உறுதியாய் தெளிவாய் தனது நிலையை அவள் சொன்ன விதம் அவனுகுப் பிடித்திருந்தது. ஜன்னலின் கைப்பிடிச்சுவரில் சாய்ந்து கொண்டபடியே

“எனக்கு உங்க ரெண்டு பேரை பத்தியும் ஆல்ரெடி அஸு சொல்லிட்டா… என்னை காதலிக்கிறதாலயோ கல்யாணம் பண்ணிக்கிறதாலயோ நீ உன் தங்கச்சிக்கு அக்கா இல்லனு ஆகிடுமா? அப்புறம் இந்தியால எதோ கணக்கு தீர்க்கணும்னு சொன்னியே! அது என்னவா இருந்தாலும் அதுக்கு நான் உனக்குத் துணையா நிப்பேன்… சோ இதை காரணமா வச்சு என் பிரபோசலை ரிஜெக்ட் பண்ணாம கொஞ்சம் யோசி… உனக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று சொன்னவனை கையைக் கட்டியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

பின்னர் முடிவுக்கு வந்தவளாய் “ஆமா! எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்… ஷானு ஃபர்ஸ்ட் டைம் மாஸ்டர் செப் காம்படிசன்ல நீங்க கலந்துக்கப் போறிங்கனு சொல்லிட்டு உங்க போட்டோவை அவ ரூம் சுவத்துல ஒட்டுனப்போவே பிடிக்கும்… இப்போவும் இவ்ளோ சிம்பிளா மரியாதையா காதலைச் சொன்ன விதம் பிடிச்சிருக்கு… ஆனா எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் குடுங்க வீ.கே சார்” என்று தலையைச் சாய்த்துக் கேட்டாள் தன்வி.

“எவ்ளோ நாள்ல யோசிச்சு முடிவு சொல்லுவ?”

“நீங்க என்ன பேங்க் லோனுக்கா அப்ளை பண்ணிருக்கிங்க? இன்னும் ஒரே மாசத்துல அலாட் ஆகிடும்னு நான் கேரண்டி குடுக்கிறதுக்கு?”

“நாட் பேட்! நீ இவ்ளோ கேசுவலா பேசுவியா?”

“பேசுவேனே! எனக்கு குளோஸ் ஆனவங்க கிட்ட மட்டும்… உடனே நீங்க எனக்கு குளோஸ்னு அர்த்தம் எடுத்துக்காதிங்க… நீங்க இப்போ பிரபோஸ் பண்ணிட்டங்கல்ல, அதான் கேசுவலா பேசுறேன்”

இவ்வாறு சொன்னவளை குறுகுறுவென பார்த்தவன் “இது தெரிஞ்சிருந்தா நான் கொஞ்சநாள் முன்னாடியே உன் கிட்ட பிரபோஸ் பண்ணிருப்பேனே!” என்று சொன்னபடி அவளைத் தன்னருகில் இழுத்துக் கொண்டவனை விலக்க மனமின்றி நின்றாள் தன்வி.

கண்ணோடு கண் பேசும் அந்நொடிகளில் வாய்ச்சொல்லுக்கு வேலையின்றி போக விஸ்வஜித்தின் விழியில் மின்னும் காதலில் கரைந்து போக தொடங்கினாள் தன்வி. நொடிகள் மணிநேரமாய் மாறி நீண்டதை போன்ற மாயை! அனைத்தும் ஒரு சில நிமிடங்கள் தான்.

திடீரென்று “இங்க என்ன நடக்குது?” என்ற ஷான்வியின் உஷ்ணக்குரல் அவளையும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்திருந்த விஸ்வஜித்தையும் கனவுலகில் இருந்து பூவுலகிற்கு அழைத்து வந்தது.