💞அத்தியாயம் 16💞

“ஷானுவும் தனுவும் ரொம்ப அன்பானவங்க… ஆனா அவங்க எங்க கூடவே இருக்க முடியாதே! அவங்களுக்கு அடுத்தவங்க ஆதரவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கணும்னு ரொம்ப ஆசை… அவங்க ஆசைப்படியே படிப்பு, வேலைனு எல்லாமே பெஸ்டா கிடைச்சதைப் போல வீடும் பெஸ்டா கிடைச்சிடுச்சு… கிளாராவும் அதே அப்பார்ட்மெண்ட் தான்… சோ அவங்க அங்க தனியா இருக்கப் போறது இல்ல… இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு”

                                                                     -அஸ்வினி

பிரைரி ட்ரெய்ல் வில்லேஜ் அப்பார்ட்மெண்ட், ஷெல்டன்

சுவரில் படமாகத் தொங்கிய மணிகண்டனையும் பூர்ணாவையும் ஒரு பெருமூச்சுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் தன்வி. இன்றுடன் அவர்களின் புதிய ஃப்ளாட்டுக்கு வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. அஸ்வினிக்கு உடல் நலமானதும் இங்கே குடிவந்துவிட்டனர் இருவரும். இந்த ஒரு வாரத்தில் ஷான்வியும் அவளும் இந்தப் புதிய வாழ்க்கைக்குப் பழகிவிட்டனர்.

கிளாராவின் காரில் இருவரும் ஹூஸ்டனுக்குப் போய் வந்து கொண்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன்னர் தான் அஸ்வினியும் அனிகாவும் வீட்டுக்கு வந்திருந்தனர். அதே நேரம் தனஞ்செயனுக்கும் வாரவிடுப்பு என்பதால் அவனும் வந்திருந்தான். ஷான்வி மட்டும் ஹோட்டலில் இருந்தாள். ஆனால் தன்வியும் விருந்தோம்பலில் அவளுக்குச் சற்றும் இளைத்தவள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளது சமையல் சுவை இரு நாட்கள் நாவிலேயே நிற்பதாக அஸ்வினி சொல்ல தனஞ்செயனும் அதை ஆமோதித்தது ஒன்றே அதற்கு சான்று. அதை நினைத்தபடி அன்னை தந்தையின் புகைப்படத்தைத் தடவியவள்

“நானும் இப்போ பொறுப்பான பொண்ணா மாறிட்டிருக்கேன்மா… முன்ன மாதிரி எதுக்கெடுத்தாலும் தயக்கப்படுறதோ யோசிக்கிறதோ இல்ல.. புது மனுசங்க கிட்ட பேச பயப்படுறதும் இல்லம்மா… எனக்கும் ஷானுக்கும் சொந்தங்கள் வேணும்னா மோசமானவங்களா அமைஞ்சிருக்கலாம்.. ஆனா ஃப்ரெண்ட்ஸ் விசயத்துல நாங்க ரொம்ப லக்கி…

அஸுக்கா, தனா அண்ணா, கிளாரா, அனிகுட்டி, சித்து, வீ.கே சார் எல்லாருமே எங்க மேலே ரொம்ப பாசமா நடந்துக்கிறாங்க தெரியுமா? இன்னொரு நாட்டுல தனியா இருக்கோம்னு இப்போலாம் தோணுறதே இல்லப்பா… உங்க பொண்ணுங்க இங்க ரொம்ப பாதுகாப்பா சந்தோசமா இருக்கோம்பா” என்று சொல்லும் போதே குரல் மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தது.

ஷான்வி ஹோட்டலுக்குக் கிளம்பியிருந்தவள் தன்வியின் தோளை அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு “இது எல்லாமே நம்ம அப்பா அம்மாவோட ஆசிர்வாதம் தான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. இனிமே நம்ம லைப்ல அந்தத் துரோகிகளோட நிழல் கூட விழாது… நீ உன் ஸ்டடீசை முடிச்சதும் நீயும் நானும் இந்தியாவுக்குப் போறோம்… அந்த துரோகிகளுக்கு மணிகண்டனோட பொண்ணுங்கனா யாருனு காட்டுறோம்” என்று தனது சட்டையின் காலரைத் தூக்கிவிட்டுப் கர்வத்துடன் சொல்லவும் தன்வியின் மனதிலும் அதே உறுதி தான்.

ஒன்றா இரண்டா! கிட்டத்தட்ட அறுபது நாட்கள்!  பெற்றோரை இழந்து வாடிய தங்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று வந்து வீட்டில் தங்கியவர்கள் அடுத்த அறுபது நாட்களில் தங்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமில்லையே!

முன்னர் எப்படியோ, இப்போது அதை நினைத்தால் தன்வியின் இரத்தம் கொதித்தது. மணிகண்டன் பூர்ணா தம்பதியினரின் மகள்களாக அவர்களுக்கு இன்னும் இரு கடமைகள் பாக்கி இருந்தன. அதை முடிப்பதற்கு அவர்கள் கூடிய விரைவில் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும். அப்போது அந்தத் துரோகிகளின் முகம் எப்படியெல்லாம் மாறும் என்பதைச் சிந்திக்கும் போதே உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்த்து அவளுக்கு.

ஷான்வியும் இவ்விசயத்தில் தன்வியைப் போலவே யோசித்தாள். முதலில் அந்த இரு வேலைகளை முடித்துவிட வேண்டும். ஆனால் அதற்கு பின்னர் தன் வாழ்வில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. விரும்பிய படிப்பை படித்துவிட்டாள். விரும்பிய துறையில் பிடித்த வேலையும் கிடைத்துவிட்டது. சுயச்சம்பாத்தியத்தில் வாழ்க்கையைத் தனித்து எதிர்கொள்ளும் நிலமையையும் அடைந்துவிட்டாள்.

இனி பாக்கி இருப்பது என்ன என்று சிந்தித்தவளின் மனக்கண்ணில் சம்பந்தமே இல்லாமல் சித்தார்த்தின் உருவம் வந்து கண் சிமிட்டிவிட்டுச் சென்றது. அடுத்த நொடி ஓங்கி தன் தலையில் குட்டிக்கொண்டாள் ஷான்வி. ஏற்கெனவே தன்வியின் வாழ்வில் திருமணம் என்ற பெயரில் நடக்கவிருந்த கொடுமையிலிருந்து மிகவும் சிரமப்பட்டு அவளையும் மீட்டு, தானும் தப்பித்து வெளிநாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் தனது மனதில் திருமணம், குடும்பம் என்ற எண்ணம் எழலாமா என தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

கூடவே தன்விக்கு ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை வருவான் என்று கனவு கண்ட தந்தையும், தனக்கேற்ற கத்திச்சண்டை போடும் ஒருவன் எங்கிருக்கிறானோ என்று கேலி செய்த அன்னையும் நினைவடுக்குகளில் வலம் வரத் தொடங்க அந்த நினைவுகளைச் சிரமத்துடன் ஒதுக்கிவிட்டுக் காலையுணவை தன்வியுடன் சேர்ந்து விழுங்க தொடங்கினாள்.

அதன் பின்னர் கிளாரா வந்து அழைக்க மூவரும் அவளது காரில் ஹூஸ்டனை நோக்கிப் பயணித்தனர்.

*********

சுடச் சுடத் தயாரான லசாக்னா அடங்கிய பெரிய தட்டை ஓவனில் இருந்து எடுத்துச் சமையல் மேடை மீது எடுத்துவைத்தாள் அஸ்வினி. அப்போது அவளது மொபைல் போன் சிணுங்கவும் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவள் இன்னொரு ஊழியரிடம் லசாக்னாவைக் காட்டி விட்டு சமையலறையின் ஒரு மூலைக்குப் போனுடன் நகர்ந்தாள்.

விஸ்வஜித் அதைக் கவனித்தபடி வேலையைச் செய்து கொண்டே அவளது போன் பேச்சில் காதைப் பதித்திருந்தான்.

“சொல்லு தேஜூ… இங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கோம்டி… வாட்? திடீர்னு அவனுக்கு எப்பிடி சந்தேகம் வந்துச்சு? நீ அவன் கிட்ட எதையும் உளறலயே?….ம்ம்… சரி… டேக் கேர்… பை”

இவ்வளவு தான் அஸ்வினி பேசிய பேச்சின் சுருக்கம். இதில் அவனால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அஸ்வினி போனைத் தனது ஏப்ரனின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடி அவனிடம் வந்தவள் யோசனையுடன் “தேஜூ தான் கால் பண்ணுனா விஸ்வா… தாரகேஷ் அவளை மீட் பண்ணி தனு, ஷானுவ பத்தி கேட்டானாம்” என்று சொல்ல விஸ்வஜித்தின் மனதில் முதலில் உதயமான கேள்வி யாரவன் என்பதே.

அதை உணர்ந்தவளாய் அஸ்வினி தன்னிடம் தங்கை இதற்கு முன்னர் தன்வி மற்றும் ஷான்வி பற்றி சொன்ன விபரங்கள் அனைத்தையும் அவனிடம் கூற ஆரம்பித்தாள்.

இருவரும் சமையலறையை விட்டு வெளியேறி ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டனர். அது மாலை நேரம் என்பதால் இன்னும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவில்லை.

அஸ்வினி ஷான்வி மற்றும் தன்வியின் பெற்றோர் ஒரு விபத்தில் மரணித்தது பற்றி கூறியவள் அதன் பின்னர் வந்த நாட்களில் அவர்களின் அத்தையும் சித்தப்பா குடும்பத்தினரும் அவர்களை நடத்திய விதத்தையும் விளக்கினாள். பெற்றோர் இறந்து இரண்டு மாதங்களில் எந்த மகள் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வாள்?

ஆனால் தன்வியை மிரட்டி தனது மகன் தாரகேஷுக்கு மணமுடித்தால் தன்வியின் பெற்றோர் தன்வியின் பெயரில் வாங்கிப் போட்டிருக்கும் நிலம், சென்னையிலுள்ள ஃப்ளாட் எல்லாமே மகனுக்குச் சொந்தமாகி விடும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தினர் இரு குடும்பத்தினரும்.

ஆனால் இரு பெண்களும் புத்திசாலித்தனமாக முன்னரே அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்து வைத்திருந்தனர். கூடவே இச்சம்பவத்துக்குப் பின்னர் தேஜஸ்வினியின் உதவியால் ஷான்விக்கு அஸ்வினி மூலம் வேலையும், தன்வி முன்னரே ஹூஸ்டன் பல்கலைகழகத்துக்கு விண்ணப்பித்திருந்ததால் அவளுக்குப் படிப்பும் எளிதாகிவிட மணிகண்டனும் பூர்ணாவும் உயிருடன் இருக்கும் போதே விண்ணப்பித்திருந்த விசாவும் கிடைத்துவிட அத்தைக்குடும்பமும், சித்தப்பா குடும்பமும் தெய்வவழிபாட்டுக்காக திருப்பதி சென்ற இடைவெளியில் சகோதரிகள் இருவரும் அமெரிக்காவுக்கு விமானம் ஏறிவிட்டனர்.

இவ்வளவையும் கேட்ட பின்னர் “ஓ! இப்போ ப்ராப்பர்ட்டி கை விட்டுப் போயிடுச்சேனு இவங்க ரெண்டு பேரையும் தேடுறாங்களா?” என்று கேட்டான் விஸ்வஜித்.

அஸ்வினி ஆமென்றவள் “எனக்குத் தெரிஞ்சு இவங்க ரெண்டு பேரும் இந்தியாவுக்குப் போய் அந்த கும்பல் மேல லீகல் ஆக்சன் எடுக்கணும்… இல்லனா சரி வராது விஸ்வா” என்றாள் தெளிவாக. இதைக் கட்டாயம் தன்வியிடம் சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

விஸ்வஜித் அவள் சொன்னதை கேட்டுவிட்டு “நீ சொல்லுறது கரெக்ட் அஸு… தப்பு பண்ணுறவங்களே தைரியமா இருக்கிறப்போ இவங்களுக்கு என்ன? கண்டிப்பா அந்த ஃபேமிலில உள்ளவங்களுக்கு தகுந்த பதிலடி குடுக்கணும்… இல்லனா வருங்காலத்துல இவங்கள தொந்தரவு பண்ண சான்ஸ் இருக்கு” என்றான் யோசனையுடன்.

அஸ்வினிக்குத் தோழனிடம் பிரச்சனையைப் பகிர்ந்ததில் மனபாரம் இறங்கிவிட்டது. அதை அவள் விஸ்வஜித்திடம் பகிர்ந்து கொண்டதற்கு காரணம் உள்ளது.

விஸ்வஜித்தின் கண்கள் எப்போதுமே தன்வியை ஆர்வத்துடன் நோக்குவதையும், அதற்கு தன்வியும் நேர்மறையாக எதிர்வினை ஆற்றுவதையும் அவள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் தானே! வெறுமெனே விழிமொழி பேசி, நாலைந்து நாடக வசனங்களுடன் ஆரம்பிக்கும் உறவு வாழ்நாள் முழுவதும் நிலைப்பது கடினம்.

எனவே தான் தன்வி என்ற பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்பதையும் விஸ்வஜித் தெரிந்து கொள்ள வேண்டுமென அஸ்வினி விரும்பினாள். அப்படி தெரிந்து கொள்ளும் போது அவன் அவளுக்குத் துணையாக நின்று வழிகாட்டுவானா அல்லது இந்தப் பிரச்சனையைத் தான் ஏன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டுமென ஒதுங்குவானா என்பதை தெரிந்து கொள்ளும் எண்ணம் அவளுக்கு.

இவர்களின் இந்த ரசனைப்பார்வை மாற்றங்கள் காதலாக பரிணாமிக்கும் போது கட்டாயம் ஒருவர் மற்றொருவரின் பிரச்சனையை உணர்ந்திருக்க வேண்டும்; அப்போது தான் எவ்வித சவாலையும் வாழ்க்கையில் சேர்ந்தே எதிர்கொள்ளும் வாழ்க்கைத்துணையாய் அவர்களால் வாழ முடியும். இதில் தோற்றுவிட்டால் வாழ்வே அர்த்தமற்றதாகி விடும் என்பது அஸ்வினியின் நிலைப்பாடு.

இனி நண்பன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காணும் ஆர்வத்துடன் காத்திருந்தாள் அவள்.

இவர்கள் அனைவரும் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்களோ அதே நபர்கள் ஷான்வியும் தன்வியும் மாயமானதை காவல்துறையில் புகார் அளிக்கலாமா என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

“போலீசுக்குப் போனா அவங்க நம்மள டார்கெட் பண்ணிடுவாங்கடா மடையா… கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ணு… உனக்குப் பெரியவள கட்டிவச்சு அந்த நிலத்தோட ஃப்ளாட்டையும் நம்ம கைவசம் கொண்டு வரலாம்னு இருந்தேனே… எல்லாமே மண்ணா போச்சே… இப்பிடி முட்டாள் பிள்ளைய பெத்துட்டு பவுசான வாழ்க்கைக்கு நான் ஆசைப்படலாமா?”

சந்திரகலா ஒப்பாரி வைக்காத குறையாக பேச காவல்துறையில் புகார் செய்வோம் என்ற அவரது மகன் தாரகேஷின் யோசனைக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

“அண்ணி சும்மா பிள்ளைய திட்டாதிங்க… அவனும் தான் அவளுங்கள வலை வீசி தேடுறான்… ரெண்டு கழுதைங்களும் மாயமந்திரம் மாதிரி எங்க போய் தொலைஞ்சுதுனே தெரியலயே! நமக்கு இருந்த  ஒரே நம்பிக்கை தேஜூ தான்… அவளும் எனக்கு எதுவும் தெரியாதுனு கையை விரிச்சுட்டா… அடுத்து என்ன செய்யப் போறோம்னு யோசிப்போம்”

இது வதனா. ஷான்வி மற்றும் தன்வியின் சித்தப்பாவான சச்சிதானந்தத்தின் மனைவி. இவர் சொன்ன யோசனையின் படி தான் தேஜஸ்வினியின் வீட்டுக்குச் சந்தானமூர்த்தியும் சச்சிதானந்தமும் சென்றதே. அவள் தனக்கு எதுவும் தெரியாத என்று மறுக்கவே தாரகேஷின் மூலம் முயன்று பார்த்து மூக்குடைப்பட்டு நிற்கின்றனர்.

சந்தானமூர்த்தியும் சச்சிதானந்தமும் தங்களுக்குத் தெரிந்த சார்பதிவாளர் ஒருவரை நிலவிவகாரத்துக்காகச் சந்திக்கச் சென்றுவிட சந்திரகலாவும் வதனாவும் தாரகேஷின் முயற்சி தோற்றுப் போனதில் புலம்பிக் கொண்டிருந்தனர். இத்தனைக்கும் அந்த திருப்பூர் நிலமோ, ஃப்ளாட்டோ குடும்பச்சொத்து இல்லை. இவை அனைத்துமே மணிகண்டனின் உழைப்பில் அவர் வாங்கிப் போட்டவை. இதற்காக தான் இந்த அற்பப்பதர்கள் அடித்துக் கொள்கின்றனர்.

பூர்ணா இருந்த வரை தேவதையாகத் தெரிந்த அவரது மகள்கள் இன்று இவர்களின் கண்ணுக்குக் கழுதையாகத் தெரிகிறார்கள். பணத்தாசை கண்ணை மறைக்கும் என்று சொல்வார்கள்! இங்கேயோ உருவமாற்றத்தை உண்டு பண்ணிவிட்டது போல!

இவர்கள் புலம்பி வெதும்பி காலத்தைத் தள்ள ஷான்வியும் தன்வியும் அமெரிக்காவின் வாழ்க்கையோட்டத்தில் மெதுவாக கலக்க ஆரம்பித்துவிட்டனர். படிப்பு, வேலை, நண்பர்களுடன் அரட்டை என்று இருந்தவர்களுக்கு இந்த துரோகிகளைப் பற்றி நினைக்க இப்போதெல்லாம் நேரமில்லை.

அதே நேரம் சகஜமாக உரையாடும் அளவுக்கு விஸ்வஜித்துக்கும் தன்விக்கும் இடையே ஒரு அழகான உறவு துளிர் விட ஆரம்பித்தது. ஆனால் அவன் இன்னுமே அவளது வாழ்வின் கசப்பான சம்பவங்கள் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.

இயல்பாக படிப்பு, வேலை, வீ.கே மீதான ஷான்வியின் கண்மூடித்தனமான அபிமானம், அஸ்வினி சொன்ன ஜோக், அனிகாவின் போன் பேச்சு, தனஞ்செயனும் ஷான்வியும் சமையலறையில் மற்ற ஊழியர்களுடன் எடுக்கும் செல்பிக்கள், கிளாராவின் நாய்க்குட்டி என அவர்களுக்குப் பேசுவதற்கா விசயங்கள் இல்லை!