💞அத்தியாயம் 14💞

“இன்னைக்கு யூனிவர்சிட்டில கிளாஸ் முடிஞ்சதும் நான் கிளம்பிட்டேன்… அப்பிடி இருந்தும் ஹோட்டலுக்கு வர்றதுக்கு டிலே ஆயிடுச்சு… நான் டென்சனோட அவசரமா உள்ள வந்தேனா டைனிங் ஏரியால உள்ள டேபிள்ல கால் இடிச்சிடுச்சு… பெருவிரல்ல இடிச்சதும் வலி தாங்காம அங்கேயே உக்காந்துட்டேன்… அப்போ தான் வீ.கே சார் எதேச்சையா அங்க வந்தவரு எனக்கு என்னாச்சுனு கேட்டதும் நான் அவரோட குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்… அக்கறையான அவரோட குரலைக் கேட்டதும் வலி பறந்து போயிடுச்சு… கொஞ்சம் வியர்டா தான் இருக்கு… ஆனா ஒவ்வொரு தடவை அவரைப் பார்க்கிறப்போவும் என்னோட கவலை, வலி தூரமா ஓடிப் போயிடுது”

                                                                         -தன்வி

அஸ்வினி சோர்வாய் உணர்ந்தவள் கண் விழிக்கையில் அவள் அருகே அனிகா அமர்ந்திருந்தாள். மகளின் கரங்களின் ஸ்பரிசம் நெற்றியை இதமாக்க எழுந்து அமர்ந்தாள். அனிகாவின் முகம் சோர்ந்திருக்க அதே அறையின் ஓரமாக கிடந்த மோடாவில் அமர்ந்திருந்த தன்வி அஸ்வினி எழுந்ததை பார்த்ததும் படுக்கைக்கு அருகில் வந்து

“என்னாச்சுக்கா? எதுவும் வேணுமா? இப்போ உடம்பு எப்பிடி இருக்கு? ப்ரீத்திங் ஈசியா இருக்குதா? நான் வேணும்னா டாக்டரை கூப்பிடவா?” என்று படபடவென்று கேள்விகளை கொட்டவும் அஸ்வினி அவளது கரத்தைப் பற்றி தன்னருகில் அமரச் சொன்னாள்.

அவள் அமர்ந்ததும் “எனக்கு மூச்சு விடுறதுல ஒரு பிரச்சனையும் இல்ல… ஆனா உனக்குத் தான் இப்போ மூச்சு வாங்குது… எவ்ளோ ஸ்பீடா கேள்வி கேக்குற நீ? அம்மாடி” என்று அவளைக் கிண்டல் செய்யவும் தன்விக்கு அவள் இயல்பாகிவிட்டாள் என்பது உறுதியாகி விட்டது.

நிம்மதி பெருமூச்சு விட்டவள் “தேங்க் காட்! உங்களுக்குச் சரியாயிடுச்சு… டூ டேய்ஸா அனிகுட்டி பயந்துட்டாக்கா… நாங்களும் தான்” என்று வருத்தமாய் சொல்லும் போதே அந்த அறைக்குள் நுழைந்தாள் ஷான்வி.

அஸ்வினியை நோக்கி புன்னகைத்தவள் அனிகாவிடம் “அனிகுட்டி! கம் ஹியர்… ஸ்கூலுக்குப் போக வேண்டாமா?” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டாள்.

அஸ்வினியிடம் “நீங்க ரொம்ப சிரமப்பட்டுக்காதிங்க… தனு எல்லா வேலையும் பார்த்துப்பா! அனிகுட்டியை நான் ஸ்கூல்ல டிராப் பண்ணிடுறேன்… நீங்க ரெகவர் ஆனதுக்கு அப்புறம் மத்த விசயத்தைப் பாத்துக்கலாம்” என்று இதமாக உரைத்துவிட்டு அனிகாவுடன் அந்த  அறையிலிருந்து வெளியேறினாள்.

அஸ்வினிக்கு அந்த இரு சகோதரிகளின் முகத்தைக் காணவே சங்கடமாக இருந்தது. தான் பேசிய பேச்சுக்கு வேறு யாராக இருந்தாலும் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசியிருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால் இரு தினங்களாக அவர்கள் தான் அவளையும் அவள் மகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.

ஆஸ்துமாவுக்கு மருந்து எடுத்துக் கொள்ளாமல் கவனக்குறைவாக இருந்துவிட்டதால் அஸ்வினிக்கு மூச்சிரைப்போடு சேர்த்து நெஞ்சுக்குள் வலியும் இருக்க வேலை எதையும் இழுத்துப் போட்டுச் செய்யக் கூடாதென்பது மருத்துவரின் அறிவுரை. அன்றைக்கு மருத்துவமனையிலிருந்து தனஞ்செயனுடன் வந்த கணத்திலிருந்து அவள் கண் மூடி சயனித்த நேரமே அதிகம்.

அனைத்து வீட்டுவேலைகளையும் தன்வி கவனித்துக் கொண்டாள். இரு தினங்களாக அவள் வகுப்புக்கும் ஹோட்டலுக்கும் விடுப்பு எடுத்தது வேறு விஷயம். தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தனஞ்செயனுக்கு நன்றி சொன்னவள் இரு தினங்களாக மகள் அவனது காரில் ஷான்வியுடன் தான் சென்று வருகிறாள் என்பது தெரிந்தும் முன்னர் போல அவள் மறுக்கவோ அவர்களை வார்த்தைகளால் வருத்தவும் இல்லை.

மூன்றாவது மனிதர்களை நம்பமாட்டேன் என்ற அவளது பிடிவாதத்திலிருந்து அவளை இறங்கி வரவைத்து விட்டன இந்த இரண்டு நாட்கள். மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்தவள் அவளது அறையின் ஃப்ரெஞ்சு விண்டோவின் வழியே தனஞ்செயனின் காரில் மகளும் ஷான்வியும் ஏறுவதைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அதற்குள் தன்வி அவளருகே வரவே அவளைப் பார்த்தவள் பெருமூச்சுடன் “நீங்க மூனு பேரும் இல்லனா நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன் தனு… என்னால உங்களுக்குச் சிரமம்” என்று சொல்ல

“ஏன் பெரிய வார்த்தை பேசுறிங்க அக்கா? எங்களுக்கு ஒன்னுனா நீங்களும் இதே தான் பண்ணிருப்பிங்க” என்று சாதாரணமாகச் சொல்லிவிட

“நீங்க கண்டிப்பா புது வீட்டுக்குப் போய் தான் ஆகணுமா? இங்கேயே இருந்துடுங்களேன்” என்று சொன்ன அஸ்வினியின் குரலில் இருந்த ஏக்கம் தன்விக்குப் புலப்படாமல் இல்லை.

 ஆனால் ஷான்வியும் அவளும் இன்னும் ஒரு வாரத்தில் அங்கே குடிபெயரும் முடிவுக்கு எப்போதோ வந்து விட்டனர். அஸ்வினியின் உடல் தேறுவதற்கு மட்டும் தான் காத்திருந்தனர். ஷான்வி சொன்னாளே என்று கிளாரா இவர்களுக்காக ஃப்ளாட்டை சுத்தப்படுத்தியும் வைத்துவிட்டாள்.

தன்வி அதையெல்லாம் யோசித்தவளாக அஸ்வினியின் கையைப் பற்றிக் கொண்டபடி “தப்பா எடுத்துக்காதிங்க அக்கா! ஷானு டிசைட் பண்ணிட்டா.. இதுக்கு மேல அவ பேச்சை என்னால தட்ட முடியாதுக்கா… நாங்க இங்க வர்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் தேஜூ கிட்ட பேசி டிசைட் பண்ணிட்டுத் தான் வந்தோம்” என்று சொல்லிவிட இதற்கு மேல் வற்புறுத்தப் பிரியமின்றி புன்னகையுடன் அவளுடன் வேறு விசயங்களைப் பேச ஆரம்பித்தாள்.

அதே நேரம் அனிகாவைப் பள்ளியில் இறக்கிவிட்டான் தனஞ்செயன். குழந்தை காரில் இருந்து இறங்கும் முன்னர் அவனது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “பை அங்கிள்… பை ஷானுக்கா” என்று சொல்லிவிட்டுத் துள்ளிக் குதித்தபடி உற்சாகமாக ஓடினாள்.

அவள் செல்வதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த தனஞ்செயனின் தோளில் தட்டிய ஷானு “என்னாச்சு அண்ணா? இலக்கியா நியாபகமா?” என்று கேட்க அவன் கலங்கிய கண்களை மறைத்தபடி

“ஒன்னுமில்ல குட்டிம்மா! பழசை நினைச்சு கலங்குனா இப்போ நடக்கிற சந்தோசமான விசயங்களை மனசுல நிறைச்சுக்க முடியாதுடா… இப்போலாம் இலக்கியாவையும் அம்மாவையும் பத்தி யோசிச்சா அவங்க கூட சந்தோசமா இருந்த மொமண்ட்ஸ் மட்டும் தான் நியாபகப்படுத்திப் பாத்துக்கிறேன்… சோகத்தை மனசுல வச்சுக்கிட்டே இருந்தா அது நாள்பட நாள்பட காயமா மாறிடும்… அந்தக் காயத்தோட வலி நம்மளையும் பாதிச்சு நம்மளை சுத்தி இருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்திடும்” என்று தெளிவாகப் பேச ஷான்வி எப்போதும் போல அவனது வார்த்தைகளை மூளையில் பதிய வைத்துக் கொண்டாள்.

அவளை நோக்கிப் புன்னகைத்தவன் காரை ஹோட்டலை நோக்கிச் செலுத்த தொடங்கினான்.

************

பேலர் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்….

காலை நேரத்தில் ஹோட்டலுக்குச் செல்லும் அவசரத்துடன் தயாராகிக் கொண்டிருந்தான் விஸ்வஜித். அவனது அறையில் உள்ள சோபாவில் சரிந்தபடி போனை நோண்டிக் கொண்டிருந்த சித்தார்த் திடீரென்று போனைப் பார்த்துச் சிரிக்கவும் புருவமுடிச்சுடன் தம்பியைத் திரும்பிப் பார்த்தான்.

“என்னடா தனியா சிரிக்கிற? அன் டைம்ல வெளியே சுத்தாதேனு நான் அட்வைஸ் பண்ணுனப்போ கேக்காம சுத்துனியே! மோகினி பிசாசு எதுவும் அடிச்சிடுச்சா?”

சிகையை வாரியபடி கேட்டவனின் முகத்தில் கேலியான பாவனை நிறைந்திருக்க சித்தார்த் அவனுக்கு எதிரே உள்ள கண்ணாடியில் அண்ணனது பிம்பத்தைப் பார்த்தவன் கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொண்டான்.

“ஆமாடா அண்ணா! மோகினி தான்… பட் அடிக்கல… அடிக்கடி திட்டுதுடா… கடவுள் அதை உருவாக்குறப்போ கோவத்தை மட்டும் கொஞ்சம் அதிகமான ரேசியோல வச்சிட்டாருனு நினைக்கிறேன்… கிட்டப் போனாலே அனல் அடிக்குது”

“அஹான்! மோகினினு சொன்னியே! அது அமெரிக்கன் மோகினியா? இல்ல இந்தியன் மோகினியாடா தம்பி?” என்று கேட்டவன் தம்பியின் தோளில் அடித்துவிட்டு மேஜையின் மீது வைத்திருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டான்.

அண்ணனுடன் ஹோட்டலுக்குச் செல்ல எழுந்த சித்தார்த் “எந்த நாட்டு மோகினினு தெரிஞ்சுகிட்டே கேள்வி கேட்டா எப்பிடிடா அண்ணா?” என்று உணவுண்ணும் அறையை நோக்கி நடந்தபடியே கேட்க

“எல்லாம் கன்ஃபர்மேசனுக்குக் கேக்குறது தான்… நீ தனியா சிரிக்கிறதுலாம் ஓகே! பட் ஷானுக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று தமையனிடம் கேட்டவாறே சற்று முன்னர் செய்து வைத்திருந்த ப்ரெட் ஆம்லெட்டை இருவருக்கும் தட்டுகளின் எடுத்துவந்து மேஜையின் மீது வைத்தான் விஸ்வஜித்.

சித்தார்த் ப்ரெட்டை வாயருகே கொண்டு சென்றவன் இல்லையென்று தோளைக் குலுக்கவும் விஸ்வஜித் யோசனையுடன் தம்பியை நோக்கினான்.

“சப்போஸ் அவளுக்கு உன்னைப் பிடிக்கலைனா? ஐ மீன் நீ அவளை நினைச்சு ஃபீல் பண்ணுற மாதிரி அவளும் உன்னைப் பத்தி ஃபீல் பண்ணனும் தானே”

சித்தார்த் அதைக் கேட்டு அசட்டையாகத் தமையனை நோக்கிவிட்டு “ப்ரோ எதுக்கு நீ இவ்ளோ டீப்பா போற? நானே என் மனசுல அவ மேல இருக்கிற ஃபீலிங் என்ன மாதிரியானது, அது சரியா தப்பானு இன்னும் யோசிக்கலடா… இப்போ நம்ம கண் எதிர்ல படபடனு பட்டாசு மாதிரி வெடிக்கிற ஒரு பொண்ணு அடிக்கடி வந்துட்டுப் போனா நம்ம விரும்பலனாலும் நம்மளோட கவனம் அவ பக்கம் திரும்பும்… நானும் இப்போ அந்த நிலமைல தான் இருக்கேன்டா அண்ணா… பெருசா எடுத்துக்க ஒன்னுமில்ல” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டான்.

இது வெறும் ஈர்ப்பு தான். ஒரு வேளை இந்த ஈர்ப்பு காதலாக மாற வேண்டுமென்றால் அதற்கு புரிதல் அவசியம். இரு நபர்களுக்கு இடையே புரிதல் வரவேண்டுமென்றால் அதற்கு முதலில் அவர்கள் பேசிப் பழக வேண்டும்.

சந்தித்த நான்கைந்து முறைகளிலும் சண்டை மட்டுமே போட்டுக் கொள்ளும் தங்களிடையே என்று நல்ல புரிதல் வருகிறதோ அன்று மற்ற விசயங்களைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது சித்தார்த்தின் எண்ணம். காதலில் கசிந்துருகி கனவு மட்டும் கண்டு வாழ்வைத் தொலைக்கும் இளைஞன் அல்ல அவன்.

வாழ்க்கையை வாழ காதல் மட்டும் போதாது என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டவன் ஷான்வியின் மீதான தனது ஆர்வம் வெறும் பிடித்தம் மட்டுமே என்பதை தனது தமையனுக்கும் புரியவைத்து விட்டான்.

இவன் தான் எவ்வளவு யோசிக்கிறான் என்ற ஆயாசத்துடன் காலையுணவை முடித்துவிட்டு அவனுடன் காரில் ஏறிய விஸ்வஜித் யோசனையுடன் காரை ஓட்டினான்.

சித்தார்த் அண்ணனின் தோளைத் தட்டியவன் “டேய் அண்ணா இன்னுமா அதை பத்தியே யோசிக்கிற?” என்று அவனது மனநிலையைத் தெரிந்து கொள்வதற்காக கேட்டுவைத்தான்.

ஒன்றுமில்லை என்று தோளைக் குலுக்கிய விஸ்வஜித்தின் மனக்கண்ணில் தன்வியை முதலில் சந்தித்த தருணம் ஒரு கேள்விக்குறியுடன் வந்து சென்றது. இளையவன் அளவுக்குத் தான் தெளிவு இல்லையா என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ! நீ தான் முன்னாடியே சொல்லிட்டியே… நான் ஸ்ரீராமசந்திரமூர்த்தி மாதிரி உன்னோட சீதாதேவிக்காக காத்திட்டிருக்கேனு… சோ உனக்கு ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ ரீதியில காதல் வரலாம்… ஆனா நான் அப்பிடி இல்லையே” என்று அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவனைப் போல சித்தார்த் சொல்லவும் அவன் சொல்வதும் சரி தான் என்பது போலத் தலையசைத்தபடி சாலையில் கண் பதித்தான் விஸ்வஜித்.

கார் ஹோட்டலை அடைந்ததும் தரிப்பிடத்தில் அதை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். ஹோட்டலின் கண்ணாடிக்கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தவர்களின் பார்வையில் விழுந்தாள் டைனிங் பகுதியின் மையமாய் இருந்த கண்ணாடி சூழந்த அடுக்குகளில் இருக்கும் கேக்குகளையும் இதர பேஸ்ட்ரி இனிப்பு கார வகைகளையும் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஷான்வி.

கையில் வைத்திருந்த டேபில் இன்னும் எதுவோ குறித்துக் கொண்டிருந்தவள் உள்ளே நுழைந்த விஸ்வஜித்தைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் “குட் மார்னிங் வீ.கே சார்” என்று சொல்ல அவன் அவளுக்குப் பதிலுக்குக் காலை வணக்கம் சொல்லிவிட்டு அந்தக் கண்ணாடி அடுக்குகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பேஸ்ட்ரி வகைகள் பற்றி எதுவோ குறிப்பு சொல்ல அதையும் கவனமாய் டேபில் குறித்துக் கொண்டாள்.

சித்தார்த் விஸ்வஜித்திடம் ‘குட் மார்னிங்’ சொன்ன போது ஜொலித்த அவளது கண்கள், அவன் குறிப்பு கொடுத்த போது ஆர்வத்துடன் அதை ஆமோதித்து டேபில் குறிப்பெடுத்துக் கொண்ட அவளது தளிர் விரல்கள், பக்கவாட்டில் வழிய விட்டிருந்த அவளின் கூந்தல், சிரிக்கும் போது மின்னும் இதழ்கள் என ஒவ்வொன்றாய் படம் பிடித்தவன் அவளின் பார்வை அவன் புறம் திரும்பவும் உஷாரானான்.

அந்தக் கண்ணாடி அடுக்குகளில் உள்ள ஒரு பேஸ்ட்ரி வகையறாவைக் காட்டி “இந்த டோனட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே? ஏன்?” என ஏதாவது கேட்டுச் சமாளிக்கவேண்டுமே என கேட்டுவைக்க

“அது கிரானட்… கிராய்சண்ட்டும் டோனட்டும் சேர்ந்த மாதிரியான மிக்சட் வெரைட்டி பேஸ்ட்ரி” என்று பதிலளித்தாள் ஷான்வி, ஒரு பொறுப்பான பேஸ்ட்ரி செஃபாக.

ஆனால் கேள்வி கேட்டவனுக்கு அது என்னவாக இருந்தாலும் அக்கறை இல்லையே! அது தெரிந்த விஸ்வஜித் நமட்டுச்சிரிப்புடன் தம்பியை நோக்கியவன் அவனிடம் “உனக்கு டைம் ஆகுதே சித்து… நீ கிளம்புடா” என்று அனுப்பிவைக்க முயல

“ஆமாடா அண்ணா! இந்த கேக்கையும் ப்ரெட்டையும் எண்ணுறத விட எனக்கு முக்கியமான வேலை நிறைய இருக்கு” என்று ஷான்வியைக் குறிப்பிட்டுக் கேலி செய்துவிட்டு அவளை நோக்கிக் கண் சிமிட்டவும் அவள் சட்டென்று வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

அந்த இடத்தின் சீதோஷ்ணம் திடீரென்று மாறியதில் இருந்து அவள் அவனது கேலியால் கொதிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த சித்தார்த் திருப்தியுடன் அங்கிருந்த மின்தூக்கியை நோக்கிச் செல்ல விஸ்வஜித்தும் அவளிடம் விடை பெற்றான்.

ஷான்வியின் மீதான சித்தார்த்தின் ஈர்ப்பும் பிடித்தமும் காதலாய் மாறும் நாள் எந்நாளோ?