💞அத்தியாயம் 13💞

“ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ ஏரியா ரொம்ப அழகா இருக்கு… இந்த வீடும் ரொம்ப அழகா அமைதியா இருக்கு… நானும் தனுவும் மாடில உள்ள ரூம்ல தான் ஸ்டெ பண்ணிருக்கோம்… எங்க ரூம்ல ஒரு பெரிய விண்டோ இருக்கு… அந்த விண்டோவோட திண்டுல உக்காந்து பார்த்தா கீழ உள்ள புல்வெளி அழகா தெரியும்… டெய்லியும் இங்க உக்காந்து வேடிக்கை பார்த்துட்டே தான் நானும் தனுவும் மார்னிங் காபியையும் நைட் டின்னரையும் சாப்பிடுவோம்”

                                                                       -ஷான்வி

பிரைரி ட்ரெய்ல் வில்லேஜ் அப்பார்ட்மெண்ட், ஷெல்டன்…

கிளாராவுடன் சேர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்த ஃப்ளாட்டைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ஷான்வி. ஹூஸ்டனின் புறநகர்ப்பகுதியில் அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த அடுக்குமாடி குடியிருப்பு. இரண்டு படுக்கையறை குளியலறை, சமையலறை வசதியுடன் கார்பெட் டைல்ஸ் பதிக்கப்பட்ட ஹாலுடன் எளிமையாய் அழகாய் அமைந்திருந்தது.  

ஜன்னலில் இருந்து பார்த்தால் வீட்டைச் சுற்றி பரந்திருந்த வெற்றிடத்தில் புல்வெளி படர்ந்திருந்திருப்பதைக் காண முடிந்தது அஸ்வினியின் வீட்டைப் போலவே. வீட்டு உபயோகப்பொருட்களுடன் கூடிய சமையலறை, அங்கேயே சமைத்துச் சாப்பிட ஏதுவாய் அமைக்கப்பட்டிருந்தது. கராஜை பயன்படுத்த வேண்டுமென்றால் மட்டும் குடியிருப்புவாசிகள் தனியே கட்டணம் செலுத்தவேண்டும்.

ஷான்விக்கு அந்த ஃப்ளாட் மிகவும் பிடித்துப் போய் விட்டது. கிளாரா இங்கே தான் தங்கியிருக்கிறாள் என்பதை அறிந்த பின்னரே தன்வி தானும் ஷான்வியும் அந்தப் பகுதியில் குடிபுகுவதற்கு ஒப்புக்கொண்டாள். இருவரும் முதல் மாதச் சம்பளத்தை வாங்கிய பின்னர் எடுத்த முடிவே தனியே வீடு பார்த்துக் கொண்டு செல்வது தான்.

அஸ்வினியின் மீதுள்ள வருத்தத்தினால் எடுத்த முடிவல்ல. அமெரிக்காவுக்கு வரும் முன்னரே இது குறித்து தேஜஸ்வினியிடம் ஆலோசித்துவிட்டுத் தான் வந்திருந்தனர் இருவரும். தங்களின் செயல்பாடுகள் அடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென முன்னரே யோசித்திருந்தபடி தான் வீடு தேடும் படலத்தில் இறங்கினாள் தன்வி. ஆனால் ரிவர் ஓக்சில் அவர்கள் எதிர்பார்த்த குறைந்த வாடகைக்கு வீடுகள் இல்லாது போகவே கிளாராவிடம் விசாரித்தாள்.

கிளாராவும் மகிழ்ச்சியுடன் தனது ஃப்ளாட் இருக்கும் அமைதியான சூழலுடன் கூடிய அழகான அடுக்குமாடி குடியிருப்பின் புகைப்படத்தை அனுப்பியிருந்தாள். அன்றைய தினம் கிளாரா பல்கலைகழகத்துக்கு விடுப்பு எடுத்திருக்க ஷான்விக்கும் அன்று வார விடுப்பு நாள். எனவே கிளாராவுடன் சென்று வீட்டைப் பார்வையிட ஆரம்பித்தாள்.

சிறியதாக இருந்தாலும் அந்த வீடு அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வாடகை ஒப்பந்தம் பற்றி அடுக்குமாடி குடியிருப்பை மேலாண்மை செய்யும் நிறுவனத்திடம் போனில் கிளாரா பேசிவிட்டிருந்தாள். மற்ற வழிமுறைகளை முடித்துவிட்டுத் தன்வியிடம் கூறுவதாகச் சொன்னவளின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஷான்வி.

“தேங்யூ சோ மச் கிளாரா… நீ மட்டும் இல்லனா நானும் தனுவும் இன்னும் சங்கடப்பட்டுக்கிட்டே நாளை கடத்திருப்போம்… தேங்ஸ் அ மில்லியன்”

நன்றிப்பெருக்குடன் உரைத்தவளை அணைத்துக் கொண்ட கிளாரா “இதுல ஒரு சின்ன சுயநலமும் இருக்கு… நீங்க இங்க ஷிப்ட் ஆகிட்டிங்கனா நானும் தனுவும் வீடியோ கால்ல ஸ்டடீஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிக்க வேண்டாம்… நான் நினைச்சதும் இங்க வந்து அவ கூடப் பேசிக்கலாம்… எனக்கும் தனியா இருக்கிற ஃபீல் வராதுல்ல” என்று சொன்னவளை மெச்சுதலாகப் பார்த்த ஷான்வி

“வாவ்! உங்களுக்கு இருக்கிற மூளைக்கு நீங்க மெக்டொனால்ட்ல சர்விங்ல இருக்கவேண்டிய ஆளே இல்ல” என்று கேலி செய்ய கிளாரா நகைத்தபடி வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

ஷான்வி தானும் இன்று அவளுடன் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“மெக் மஃபின் சாப்பிட்டு நாளாச்சு” என்று சொன்னபடி கிளாராவுடன் காரில் அமர்ந்தவள் தங்களுக்கும் ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியபடி உபயோகித்தக் கார்கள் விற்பனைக்குக் கிடைத்தால் சொல்லும்படி கிளாராவிடம் சொல்லி வைத்தாள்.

**********

கிர்பி டிரைவ், ஹூஸ்டன்

 சந்தவண்ணப்பூச்சுடன் பக்கவாட்டில் கண்ணாடிகளுடன் ‘எம்’ என்ற எழுத்தை தனது மேல்பாகத்தில் தாங்கியபடி நின்றிருந்தது மெக்டொனால்ட் துரித உணவகம். கண்ணாடிக்கதவுகளில் மெக்டொனால்டின் விளம்பர அட்டைகள் ஒட்டப்பட்டிருக்க அதிலிருந்த குளிர்பானங்களும், துரித உணவு வகைகளும் அங்கே எதேச்சையாகச் செல்பவர்களைக் கூட உள்ளே இழுத்துவிடும்.

அன்றைய தினம் ஏதோ பிறந்தநாள் கொண்டாட்டம் அங்கே நடந்திருக்கும் போல. குறிப்பிட்ட சில மேஜைகளில் பலூன்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதை நோட்டமிட்டவாறே தன்னெதிரே அமர்ந்திருந்த ரேயானிடம் பேசிக் கொண்டிருந்தான் சித்தார்த். இன்று அவனுக்கு வாரவிடுப்பு. எனவே தோழி அழைத்தாள் என்று அங்கே வந்திருந்தான். ரேயானின் பேச்சு முழுவதும் அவளது வருங்காலம் பற்றியதாக இருந்தது. கூடவே அவளது காதலனோ இதைக் கண்டுகொள்ளாது தங்களின் காதல் வாழ்வைப் பற்றி மட்டுமே கவனத்தில் வைத்து நடந்து கொள்கிறான் என நண்பனிடம் புகார் செய்து கொண்டிருந்தாள்.

சித்தார்த் அதை முழுவதுமாக கேட்டுவிட்டு “அவனுக்குக் கொஞ்சம் டைம் குடு ரே… அவனை விட வேற எது மேலயும் உன் கவனம் திசை திரும்பக் கூடாதுனு நினைக்கிறான்… எல்லா பாய்சும் அப்பிடி தான் யோசிப்பாங்க… இட்ஸ் அவர் நேச்சர்” என்று தோழியைச் சமாதானம் செய்து கொண்டிருக்கையில் அவளது காதலன் வில்லியமின் அழைப்பு போனில் வரவும் அழைப்பை ஏற்குமாறு சொன்னான்.

ரேயான் முடியாது என பிடிவாதம் பிடிக்க, சித்தார்த் அவளை அதட்டி உருட்டி போனை எடுக்குமாறு சொல்லவே வேறு வழியின்றி பேச ஆரம்பித்தாள். மறுமுனையில் வில்லியம் என்ன சொன்னானோ அதற்கு அவள் வெகுண்டு பேச முற்பட சித்தார்த் கண்ணால் அவளை அமைதியாகப் பேசும்படி சைகை காட்டவும் மூச்சை இழுத்து கண்களை இறுக மூடிப் பொறுமையை வரவழைத்துக் கொண்டாள் அவள்.

நண்பனைப் பார்த்தபடியே பேசி முடித்துவிட்டுப் போனை மேஜையின் மீது வைத்தவள்

“இப்போவே என்னைப் பாக்கணுமாம்… நான் இன்னைக்கு வேற பிளான் வச்சிருந்தேன் சித்… பட்…” என்று இழுக்கவும் சித்தார்த் அவளை முறைத்தான்.

“லிசன்! ஹீ இஸ் லவ்விங் யூ அ லாட்… ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் ஹிம்? நமக்குப் பிடிச்சவங்களோட நேரம் செலவளிக்க சின்ன சான்ஸ் கிடைச்சாலும் அத மிஸ் பண்ணக்கூடாது ரே… அவனைப் போய் மீட் பண்ணு” என்று தோழிக்கு அறிவுரை சொன்னபடி கண்ணாடி வழியே வெளியே பார்த்தவன் அங்கே கிளாராவின் காரிலிருந்து இறங்கி அவளுடன் வந்து கொண்டிருந்த ஷான்வியைக் கண்டதும் அவன் கண்ணில் ஆர்வம் ஒட்டிக் கொண்டது.

“கண்டிப்பா நமக்கு பிடிச்சவங்களோட நேரம் செலவளிக்க சின்ன சான்ஸ் கிடைச்சாலும் மிஸ் பண்ணக் கூடாது தான்” என்று மறுபடியும் சொன்ன வார்த்தையையே திருப்பிச் சொன்னபடி நடைபாதையில் கிளாராவுடன் சிரித்துப் பேசி ஹைஃபை கொடுத்தபடி வந்தவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

ரேயான் நண்பனின் பார்வை வட்டமிடும் ஆளைப் பார்த்துவிட்டாள். ஒரு நமட்டுச்சிரிப்புடன் எழுந்தவள்

“இந்த அட்வைஸ் எனக்கா இல்ல உனக்கா சித்? பை த வே, ஆல் த பெஸ்ட்.. நான் வில்லியமை மீட் பண்ணப் போறேன்.. பை” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள்.

அவள் விடைபெறவும் கிளாராவும் ஷான்வியும் உள்ளே நுழைந்தனர். கிளாரா வேலையைக் கவனிக்கச் சென்றுவிட பீட்சா சுவைக்கும் ஆர்வத்துடன் வந்த ஷான்வி அங்கே சிரித்தமுகமாய் ஆர்வம் ததும்பும் விழிகளுடன் அமர்ந்திருந்த சித்தார்த்தைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.

பின்னர் அவனைக் கவனியாது போல அவனுக்கு முதுகு காட்டியபடி ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டாள். சித்தார்த் அவள் செய்த அனைத்தையும் கவனித்தவன் எதற்கும் அசராமல் அவள் அமர்ந்திருந்த அதே மேஜையில் சென்று அமர்ந்தான்.

ஷான்வி தன் தலையை உயர்த்தாது அவனைத் தவிர்க்க முயல அதற்கெல்லாம் இடம் தராதவனாய் அவள் முகத்தை மறைத்திருந்த மெனுகார்டைத் தணித்துவிட்டு “ஹாய் ஆங்ரிபேர்ட்” என்று கையை ஆட்டவும் கண்ணை இறுக மூடித் திறந்தவள் எதுவும் பேசாது அமைதி காத்தாள்.

“ஹவ் ஆர் யூ? இப்போலாம் உன்னை ஹோட்டல்ல பார்க்கவே முடியல… மேடம் அவ்ளோ பிசியா? தனா ப்ரோ தான் கிச்சன்ல ஆல் இன் ஆல்னு கேள்விப்பட்டேன்… உண்மைய சொல்லு… நீ சும்மா பட்டரை உருக்குறது, ஓவன்ல பேஸ்ட்ரி ஐட்டம்ஸை வைக்கிறதுனு தானே இருக்க” என்று அவளது வேலையைச் சொல்லிக் காட்டிச் சீண்ட அவள் சீற்றத்துடன் பதிலளிக்க ஆரம்பித்தாள்.

“வாட்? என்னோட ஜாப் நேச்சர் என்னனு தெரியுமா உனக்கு? சும்மா வாய்க்கு வந்தபடி உளறாத… இவ்ளோ பேசுறியே! நீ மட்டும் என்ன பண்ணுறியாம்? ஃபினான்ஸ் செக்சன்ல உக்காந்து வேலை செய்யுறேனு ஓப்பி அடிச்சிட்டு நீ கம்ப்யூட்டர்ல கேம் விளையாடுறது எனக்கும் தெரியும்”

அவளது பதிலில் அவன் சிரிக்கவும் “என்ன சொன்னாலும் ஒரு சிரிப்பு… உன்னால சிரிக்காம இருக்கவே முடியாதா?” என்று கேட்டவளுக்குக் கிளாரா பீட்சாவுடன் வரவும் கவனம் பீட்சாவின் மேல் சென்றது.

அவள் கிளாராவுக்கு நன்றி சொல்ல சித்தார்த்தும் அவளிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு ஆசையாக மஃபினை விழுங்கும் ஷான்வியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“நீ எதுக்கு செஃபா ஒர்க் பண்ண ஆசைப்பட்டேனு இப்போ தான் தெரியுது.. ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்” என்று கேலி செய்ய

“நீ என்ன டிரை பண்ணுனாலும் நான் சாப்பிடறப்போ கோவப்பட மாட்டேன்… சோ டோன்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி” என்றபடி சாப்பாட்டில் கண்ணாகிவிட்டாள் அவள்.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அவள் சாப்பிடுவதைப் பார்த்தபடி கோக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தவன் “ஓகே! நீ சாப்பிட்டு முடிச்சிட்டனா நம்ம கிளம்பலாமா?” என்று கேட்க

ஷான்வியோ “எங்க பேலர் அவென்யூக்கா?” என்று கேட்டுவிட்டுப் புருவத்தை உயர்த்த அவன் பக்கென்று நகைத்துவிட்டான்.

“உனக்கு அங்க தான் போகணும்னா கூட்டிட்டுப் போக நான் ரெடி” என்று சொல்லித் தோளைக் குலுக்க அவள் முறைத்துவிட்டு

“எங்க வீட்டுக்கு எப்பிடி போகணும்னு எனக்குத் தெரியும்… நீ ஒன்னும் டிராப் பண்ண வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் கிளாராவுக்கு அங்கிருந்தபடியே டாட்டா காட்டிவிட்டு நகர முற்பட வழியை மறிப்பது போல நின்றான் சித்தார்த்.

“அந்த வழியா தான் நான் போகணும்… நான் டிராப் பண்ணுறேன் ஷானு”

“தேவையே இல்லடா… உன் கூட வர்றதுக்கு நான் நடந்தே போய்டுவேன்”

விருட்டென்று திரும்பியவளின் கரம் அவன் பிடியிலிருக்க “இங்க இருந்து காருக்கு நடந்து வர்றியா? இல்ல தூக்கிட்டுப் போகணுமா?” என்று கேட்கவும் கையை உருவியவள் “வர்றேன்… இது தான் சாக்குனு நீ அடிக்கடி என் கையைப் பிடிக்காத” என்று பல்லைக் கடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அதன் பின்னர் சில நிமிடங்களில் சித்தார்த்தின் கார் அவளுடன் சேர்ந்து அங்கிருந்து கிளம்பியது.

*************

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்

கபேயின் சமையலறையில் பரபரப்புடன் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தான் தனஞ்செயன். அப்போது அலுவலகத்தில் இருந்து அவனை அழைக்கவும் அங்கே சென்றவனின் பாதையில் எதிர்பட்டாள் அஸ்வினி.

இருமியபடியே வந்தவள் அவனுடன் சேர்ந்து மின்தூக்கியில் ஏறினாள். மின்தூக்கி மூன்றாவது தளத்தில் நிற்கவும் இருவரும் சேர்ந்தே இறங்கினர். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாது அலுவலக அறையை நோக்கிச் சென்றனர்.

தனஞ்செயன் தன்னை அழைத்த அலுவலரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே அஸ்வினி இன்னொரு அலுவலரிடம் பேசியபடி சத்தமாக இரும ஆரம்பித்தாள். இப்போது தனஞ்செயன் அவளை யோசனையுடன் பார்த்தவன் அவள் மூச்சு விடச் சிரமப்படுவதைக் கண்டுகொண்டான்.

அவளிடம் வந்தவன் “உங்களுக்கு உடம்பு சரியில்லையா மேடம்?” என்று கேட்க அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவளது கரங்கள் அனிச்சை செயலாக சீருடையின் பாக்கெட்டுகளில் எதையோ தேடியது.

சிரமத்துடன் “என்னோட… இன்ஹேலர்…” என்றவள் அதற்கு மேல் பேச முடியாது சிரமப்பட அங்கிருந்த ஊழியர்களிடம் ரெஸ்ட்ராண்ட் சமையலறையில் அவளது இன்ஹேலர் இருந்தால் கொண்டு வருமாறு தகவல் சொல்ல கூறிவிட்டு அஸ்வினியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

ஆனால் அறையை விட்டு வெளியேறியதும் அவள் மூச்சுவிடச் சிரமப்பட்டவளாய் மயங்கிவிட அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டவன் விறுவிறுவென்று மின் தூக்கிக்குள் நுழைந்தான். கீழ்த்தளத்துக்கு அவர்கள் வந்து சேரும் போது அஸ்வினியின் சக ஊழியர் ஒருவர் இன்ஹேலருடன் காத்திருந்தார்.

அதை வாங்கியவன் அஸ்வினியை இறக்கிவிட்டு அவள் கன்னத்தில் தட்டி மயக்கத்தைப் போக்க முயல அரைகுறையாய் கண் விழித்தவள் அவனது கரத்தைப் பற்றிக் கொண்டு நிற்க முயன்றபடி இன்ஹேலரைத் தட்டுத்தடுமாறி வாங்கிக் கொண்டாள்.

அந்த ஊழியர் “வீ.கே சார் காரோட வெயிட் பண்ணுறாங்க… ஹாஸ்பிட்டலுக்குப் போனா தான் மேம் நார்மல் ஆவாங்கனு சொன்னாங்க” என்றதும் தனஞ்செயன்

“மேடம்! வாங்க ஹாஸ்பிட்டலுக்குப் போவோம்” என்று கையோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

சொன்னது போலவே காருடன் வந்த விஸ்வஜித் பின் கதவைத் திறந்துவிட அஸ்வினியுடன் தனஞ்செயன் அமரவும் காரை மருத்துவமனை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.

தனஞ்செயன் தன் தோளில் கண் மூடிச் சாய்ந்திருப்பவளை வருத்தத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் மூச்சு விட சிரமப்படும் போது அவனது தாயாரின் நினைவு வந்தது. அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு வரும் சமயங்களில் இதே போலத் தான் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவார். அப்போதெல்லாம் அவனும் இலக்கியாவும் தான் அவரைக் கவனித்துக் கொள்வர். பெருமூச்சுடன் பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவன் மனதில் இப்போதைக்கும் அஸ்வினி சரியாகி விட்டால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான் ஓடிக் கொண்டிருந்தது.