💞அத்தியாயம் 11💞

“இப்போ ஒவ்வொரு தடவை இத்தாலியன் சீசனிங் யூஸ் பண்ணுறப்போவும் என் முன்னாடி கண்ணை இறுக்கமா மூடிட்டு தப்பு பண்ணி மாட்டுன குழந்தை மாதிரி நின்ன அந்தப் பொண்ணோட முகம் தான் நினைவுக்கு வருது… அவ நேம் தன்வினு அஸு சொன்னா… அவளுக்கும் அவளோட தங்கச்சிக்கும் தான் எவ்ளோ வித்தியாசம்… எது வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிற தங்கச்சிக்கு, மத்தவங்களை எப்பிடி ஃபேஸ் பண்ணுறதுனே தெரியாத அக்கா… கொஞ்சம் அப்பாவி பொண்ணு போல”

                                                                    -விஸ்வஜித்

அன்றைய தினம் முழுவதும் அஸ்வினிக்கும் தனஞ்செயனுக்கும் மனம் சரியில்லை. அனிகாவுக்கும் அவள் அன்னையிடம் வருத்தம் தான். அவர்கள் இருவரும் கூட பேசிக்கொள்ளவில்லை.

தனஞ்செயன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பது ஷான்விக்குச் சரியாகப் படவில்லை. எனவே மாலையில் வீட்டுக்குக் கிளம்பும் போது அவனுடன் பேச்சு கொடுத்தபடி காரில் ஏறிய ஷான்வி தன்வியிடம்

“இன்னைக்கு நைட் டின்னருக்கு தனா அண்ணாவும் நம்ம கூட இருந்தா நல்லா இருக்கும்ல” என்று சொல்ல தன்விக்கு அஸ்வினி எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்ற கவலை. ஆனாலும் தனஞ்செயன் மீதுள்ள பிரியத்தில் அவனிடம் தங்கள் வீட்டுக்கு வரும்படி சொல்ல அவனோ

“இல்லடா தனு! நான் இன்னொரு நாள் வர்றேன்… நீங்க எனக்காக கஷ்டப்பட்டு இதுக்கு மேல சமைச்சு முடிக்கிறதுக்குள்ள டயர்ட் ஆகிடுவிங்க… நாளைக்கு நீ யூனிவர்சிட்டிக்குப் போறப்போ இன்னும் டயர்டா ஃபீல் பண்ணுவ” என்று தண்மையாய் மறுக்க இரு சகோதரிகளும் பிடிவாதமாய் அவன் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

வீடு வந்ததும் அவன் உள்ளே வந்தால் தான் வீட்டுக்குள் செல்வோம் என்று அவனைப் போலவே கையைக் கட்டிக் கொண்டு நின்றுவிட்டனர் இருவரும்.

“ஓகே கேர்ள்ஸ்! நான் வர்றேன்… ஆனா லேடி ஹிட்லர் வீட்டுக்குத் திரும்பி வர்றதுக்குள்ள எதாவது சிம்பிளா ரெடி பண்ணுங்க… நம்ம சாப்பிடுவோம்” என்று ஒப்புக்கொள்ள ஷான்வி தனது ஷோல்டர் பேக்கில் இருந்து உணவுப்பொட்டலங்களை எடுத்து அவன் கண் முன்னே காட்டினாள்.

“பார்த்திங்களா? நான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் வாங்கிட்டு வந்துருக்கேன்… அதுவும் வீ.கே அவரோட கையால பண்ணுனது.. சோ நீங்க சொல்லுற மாதிரி டயர்ட் ஆக வாய்ப்பே இல்ல அண்ணா… அண்ட் லேடி ஹிட்லர் வர்றதுக்கு முன்னாடி சாப்பிட்டு முடிச்சிடலாம்… எப்பிடி என் அறிவு?” என்று கேட்டுவிட்டுத் தன் சட்டைக்காலரை பெருமிதமாய உயர்த்திக் காட்ட தனஞ்செயன் அவளை மெச்சுதலாய் பார்த்தபடி வீட்டுக்குச் செல்லும் நடைபாதையில் நடக்கத் தொடங்கினான்.

***********

“நீ ஹாரி, ரேயானை மீட் பண்ணிட்டு டேரக்டா அஸு வீட்டுக்கு வந்துடு… நான் அங்க உனக்காக வெயிட் பண்ணுறேன்” என்ற விஸ்வஜித்திடம் இருந்து கார் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினான் சித்தார்த். அவனது காரை சர்வீசுக்கு அனுப்பியிருந்தான்.

அஸ்வினி அனிகாவுடன் கிளம்ப விஸ்வஜித் தானே அவளது காரை ஓட்டுவதாகச் சொல்லிவிடவே அம்மாவும் மகளும் பின்னிருக்கையில் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

விஸ்வஜித் அனிகாவின் முகம் வாடியிருப்பதைப் பார்த்துவிட்டு அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“அனி பேபி! லாஸ்ட் டைம் அங்கிள் கூட லாங் ட்ரைவ் வந்தப்போ எவ்ளோ ஜாலியா பேசிட்டு வந்த? இன்னைக்கு பேபிக்கு என்னாச்சு?” என்று அவளிடம் கேட்க அவள் அன்னையின் கோபத்தில் முகத்தைத் தூக்கி வைத்தபடியே

“மம்மியால ஷானுக்கா என் கிட்ட பேசவே மாட்றா… இன்னைக்கு பனானா புட்டிங் குடுத்த அங்கிளையும் மம்மி திட்டிட்டாங்க” என்று சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

விஸ்வஜித் ரியர்வியூ மிரரில் அஸ்வினியிடம் என்ன இது என்பது போல புருவம் உயர்த்த அவளோ ‘விடு பார்த்துக் கொள்ளலாம்’ என சைகையால் தோழனுக்குப் பதிலளித்தாள்.

மகளைப் போல அவளும் வெளியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து கொள்ள விஸ்வஜித் இருவரையும் பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டபடி காரைச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டனர் மூவரும். காரை கராஜில் விடப்போன விஸ்வஜித்துக்குப் போன் வரவும் அவன் பேசியபடியே புல்வெளியில் நின்று கொண்டான்.

அஸ்வினி மட்டும் மகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கே ஹாலை அடுத்து உள்ள உணவு மேஜையில் யாரோ ஆடவன் பேசும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு அங்கே சென்றவளின் பார்வையில் விழுந்தனர் தனஞ்செயனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷான்வியும் தன்வியும்.

தனஞ்செயனைக் கண்டதும் அனிகா அன்னையின் கையை உதறிவிட்டு சிரித்தபடியே அவர்கள் மூவரும் இருந்த உணவுமேஜையை நோக்கிச் செல்ல அஸ்வினிக்கு மகள் தன் கையை உதறிச் சென்ற கோபம், இன்றைய தினம் ஹோட்டலில் தனஞ்செயனிடம் கத்திய கோபம், எல்லாவற்றுக்கும் மேலாய் தன் வீட்டுக்குத் தனது அனுமதியின்றி வெளியாளை வரவழைத்த சகோதரிகள் இருவர் மீதும் உண்டான கோபம் எல்லாமுமாய் சேர்ந்து “அனி! உன் ரூமுக்குப் போ” என்று அவளைச் சினத்துடன் சீற வைத்தது.

அனிகா அன்னையின் குரலில் தூக்கி வாரிப் போட்டவள் மருண்டு போய் அங்கிருந்து தனது அறையை நோக்கி ஓடிவிட்டாள்.

அவள் சென்றதும் மூவரையும் உறுத்து விழித்தவள் “இது வீடா? இல்ல சத்திரமா? உங்களை பேயிங் கெஸ்டா தங்க வச்சதுக்கு கண்டவங்களையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவிங்களா? என்ன நினைச்சிட்டிருக்கிங்க நீங்க ரெண்டு பேரும்? உங்க ரெண்டு பேரோட லிமிட்டை தாண்டாதிங்கனு இன்னும் நான் என்ன லாங்வேஜ்ல சொன்னா உங்களுக்குப் புரியும்?” என்று வெடிக்க ஆரம்பிக்க தனஞ்செயனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதே சமயம் தான் ஏதாவது பேச போக, அது ஷான்விக்கும் தன்விக்கும் பிரச்சனையாகி விடக் கூடாதே என்ற தயக்கம் அவனைத் தடுத்தது.

எனவே இரு சகோதரிகளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் அஸ்வினியிடம் “உங்களுக்கு என் மேல கோவம்னா என்னை மட்டுமே திட்டிருக்கலாமே.. ஏன் அவங்களை இப்பிடி வார்த்தையால கஷ்டப்படுத்தணும்?” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு வெளியேறினான்.

ஷான்வி தன்னால் தானே இதெல்லாம் என்று எண்ணியவள் இன்று அஸ்வினி பேசியது அதிகப்படி என்பதால் தனது பொறுமையை இழந்துவிட்டாள்.

“நாங்க இங்க பேயிங் கெஸ்டா தான் தங்கியிருக்கோம்… அதனால நாங்க ஒன்னும் உங்களுக்கு அடிமை இல்ல… எங்களுக்குப் பிடிச்சவங்கள நாங்க இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரக் கூடாதா?”

“கூட்டிட்டு வரக் கூடாது… ஏன்னா இது என் வீடு… போனா போகுதேனு தங்க வச்சா நீ உன் இஷ்டத்துக்குத் தெருவுல போறவனைலாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வருவியா?”

“தனா அண்ணா ஒன்னும் தெருவுல போறவரு இல்ல… இந்த ஊருல எங்க மேல அக்கறை உள்ள ஒரே ஆளு அவர் மட்டும் தான்.. மத்தவங்க மாதிரி செஞ்ச உதவிய சொல்லிக் காட்டுறவரு இல்ல தனா அண்ணா”

“ஓ! அவ்ளோ நல்லவருனா நீ அந்த அண்ணாவோட வீட்டுலயே தங்கிக்கலாமே! இது என் வீடு… இங்க இருக்கணும்னா நான் சொன்னத கேட்டு இருக்கணும்… இல்லனா இப்போவே கிளம்பி போயிடு”

அஸ்வினியின் வார்த்தையில் இரு சகோதரிகளும் அதிர்ந்து விழிக்க தன்விக்கு இப்படி ஒரு நிலை தங்களுக்கு வந்ததை எண்ணி அழுகை வர ஷான்வியோ இதற்கு மேல் இங்கே இருந்தால் தனது தன்மானம், சுயகவுரவம் இரண்டையும் இந்த அஸ்வினியிடம் அடகு வைத்தது போலாகி விடும் என எண்ணியவளாய் விருட்டென்று தங்களின் அறையை நோக்கிச் சென்றாள்.

அஸ்வினிக்குத் தன்வியின் கண்ணில் கண்ணீரைப் பார்த்ததும் தலையில் யாரோ ஓங்கி அடித்தது போன்ற உணர்வு. அவளிடம் சமாதானமாய் பேச நெருங்கியவளை கை உயர்த்தி தடுத்த தன்வி

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்கா… எங்களுக்கு இப்பிடி பேச்சு வாங்கி பழகிடுச்சு… எங்க அம்மாவும் அப்பாவும் எங்களை தனியா விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம் நாங்க மனசளவுல ரொம்பவே நொறுங்கி போயிட்டோம்கா… நாங்க உங்க வீட்டுல தங்கிக்கலாம்னு தேஜூ சொன்னப்போ எங்களுக்கு ஒரு அக்கா கிடைச்சிட்டாங்கனு தான் உரிமையா இங்க தங்கிக்கலாம்னு வந்தோம்… நாங்க வெறும் பேயிங் கெஸ்ட்னு நீங்க சொன்னப்போ கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. ஆனா இன்னைக்கு நீங்க பேசுனது ரொம்பவே கஷ்டமா இருக்குக்கா… இதுக்காக நாங்க உங்க கிட்ட கோவப்பட்டா நானும் ஷான்வியும் நடுரோட்ல தான் நிக்கணும்… கொஞ்சம் பொறுத்துக்கோங்க… இந்த மாசம் முடிஞ்சதும் ரெண்டு பேரோட சேலரியும் வந்துடும்… நாங்க இதே ஏரியால வேற வீடு பாத்துட்டுப் போயிடுவோம்” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல வேகமாகத் திரும்பியவள் விஸ்வஜித்தின் மீது மோதிக் கொண்டாள்.

தன்வி கண்ணீருடன் பேச ஆரம்பித்தே போதே அங்கே வந்துவிட்டான் அவன். அவள் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் கேட்டவனுக்கு மனம் வலித்தது. இது வரை அவளை அவன் பார்த்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கள்ளமற்று புன்னகைப்பவளின் இன்றைய கண்ணீர் அவனது மூளையை ஸ்தம்பித்துச் செயல்பட விடாது தடுத்தது.

தன்வி அவனை நிமிர்ந்து பார்க்காது அங்கிருந்து அகன்றுவிட்டாள். நேரே அவர்களின் அறைக்குச் சென்றவள் அங்கே வார்ட்ரோப் திறந்திருக்க ஷான்வியின் உடைகள் எதையும் காணவில்லை என்றதும் அதிர்ந்து போனாள். சில நொடிகளில் சுதாரித்து மாடியின் மற்ற அறைகளில் அவளைத் தேட ஆரம்பித்தாள். மாடியில் அவர்களின் அறையிலிருந்து பார்த்தால் தரையில் உள்ள புல்வெளி தெளிவாகத் தெரியும்.

அங்கே எட்டிப்பார்த்தவள் ஷான்வி அங்கேயும் இல்லாமல் போகவே கீழ்த்தளத்தில் வந்து தேடினாள். அவளைக் காணவில்லை என்ற எண்ணமே மனதில் இடியை இறக்கியது.

“ஷானு!” என்று அழுதபடி வீட்டை விட்டு வெளியே வந்து தங்கையைத் தேட ஆரம்பித்தாள். எங்கு தேடினாலும் அவள் கண்ணில் படாமல் போகவும் முதுகுத்தண்டு சில்லிட்டது. வீட்டை விட்டுப் போனவள் எப்படியாயினும் வந்துவிடுவாள் என சமாதானம் ஆவதற்கு, இது ஒன்றும் சென்னை இல்லையே!

புல்வெளியில் அமர்ந்துவிட்டவள் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்கவும் உள்ளே அஸ்வினிக்கு அவள் செய்த தவறை புரியவைத்துக் கொண்டிருந்த விஸ்வஜித் தன்வியின் குரலைக் கேட்டதும் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு வீட்டின் வெளியே இருக்கும் புல்வெளியை நோக்கிச் சென்றான். அஸ்வினியும் கலங்கிப் போனவளாய் அவனைத் தொடர்ந்து ஓடினாள்.

அங்கே அழுது கொண்டிருப்பவளின் அருகில் சென்று காலை மடித்து முழங்காலிட்டவன் “தனு! என்னாச்சு? ஏன் அழுற?” என்று கேட்டது தான் தாமதம், அவள் அவன் கரங்களைப் பற்றியபடி கதற ஆரம்பித்தாள்.

“ஷானுவ காணும் சார்! அவளோட டிரஸ் எதுவும் இல்ல… எங்க போனானு தெரியல”

அஸ்வினிக்கு இதயம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. இந்த நேரத்தில் அவள் எங்கே சென்றிருப்பாள்? இங்கு அவளுக்கு யாரையும் தெரியாதே! இன்று தான் பேசியது மிகவும் அதிகப்படி என விஸ்வஜித் சொன்ன அடுத்த நொடியே தன் தவறைப் புரிந்து கொண்டவளுக்கு ஷான்வி வீட்டை விட்டுச் சென்றதும் பயம் சூழ ஆரம்பித்தது.

இதே போல ஒரு நாள் இரவில் அவளது முன்னாள் கணவன் அவளைத் துன்புறுத்தி வீட்டை விட்டுத் துரத்திய நினைவுகள் கண் முன் வந்து செல்ல அன்றைய தினம் உடலும் மனமும் இரணப்பட்டுத் தான் பேருந்து நிலையத்தில் அழுத அழுகை இப்போது நினைத்தாலும் மனம் வலித்தது.

அப்போது எத்தனை மோசமான கண்கள் அவளை வட்டமிட்டது என்பதையும் அவள் அறிவாள்! திருமணமான அவளுக்குச் சொந்த தேசத்தில் அன்றைய இரவில் நடந்த கசப்பான சம்பவங்கள் அவளை மருட்டியிருக்க ஷான்வி போன்ற இளம்பெண்ணுக்கு அன்னிய தேசத்தில் என்னவாகுமோ என்று நினைக்கும் போதே பதபதைத்தது அவளுக்கு.

இவர்கள் பயத்தில் அழுது கொண்டிருக்க இதற்கு காரணமானவள் தனது ரோலர் சூட்கேசை உருட்டியபடி எங்கே செல்வது என்று தெரியாது கால் போன போக்கில் விருவிருவென்று நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அஸ்வினியின் வீடு இருந்த ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூவைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தவள் அதன் முடிவில் நின்றாள். அங்கேயே அமர்ந்துவிட்டவளுக்கு அடுத்து என்ன என்பது புரியாத நிலை. தான் மட்டும் வந்து விட்டோமே! தன்வியின் நிலை என்ன? என்றெல்லாம் யோசித்தவளுக்கு எந்தக் கேள்விக்கும் விடை தெரியவில்லை.

அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து விட்டாள். அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. தெருவிளக்குகள் மட்டும் மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தன. யாருமற்ற தனிமை மிரட்ட செய்வதறியாது திகைத்தவள் அப்போது சாலையில் வந்த காரைப் பார்த்ததும் இந்தக் காரை எங்கேயோ பார்த்த நினைவில் உறைந்தபடி அமர்ந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் கார் நிற்க, அதிலிருந்து இறங்கினான் சித்தார்த். இந்நேரத்தில் இங்கே ஷான்வி என்ன செய்கிறாள் என்ற கேள்வியுடன் இறங்கியவன் காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு முகத்தில் கேள்வியுடன் அவளை நெருங்கினான் அவன்.