💘கண்மணி 9💘

சாந்திவனம்

வழக்கமாக மாமனார் அமரும் இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் அரிஞ்சயன். வீட்டினர் அனைவரும் பவானியின் நிச்சயதார்த்த விழாவுக்குச் சென்றிருந்தனர். அவரை செண்பகாதேவி அழைத்தார்.

“எதுக்கு நான் அங்க வரணும்? அந்தாளு ஜெகத்ரட்சகன் என்னை அலட்சியமா பாப்பான்… தனியா போனதால இன்னைக்கு உங்கப்பா கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுற அளவுக்கு வளந்துட்டான்… அந்தத் திமிரைக் காட்டி நம்மளை அவமானப்படுத்துவான்… வாலண்டியரா போய் அவமானப்படணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?” என்று அலட்சியமாய் மறுத்துவிட்டார்.

பவானிக்கு இவ்வளவு பெரிய இடத்தில் திருமணம் முடிவான எரிச்சல் அவருக்கு. கூடவே என்ன தான் பிரிந்து போனாலும் தமக்கை மகனிடம் தான் சுவாமிநாதனுக்குப் பாசம் அதிகம் என்ற எண்ணம் அரிஞ்சயனுக்கு. என்ன இருந்தாலும் தான் வெளியாள் தானே என அடிக்கடி எண்ணிக் கொள்வார்.

அவருக்குத் திருமணமான தினத்திலிருந்து எதெற்கெடுத்தாலும் “ஜெகாவ கூப்பிடு பூரணி” என்று சொல்லும் சுவாமிநாதனின் குரலில் அரிஞ்சயனுக்கு எரிச்சல் தான் வரும்.

அத்தோடு தனது அலுவலக அறைக்கான சாவியை மூத்த மருமகனிடம் ஒப்படைத்த போது தான் அரிஞ்சயன் கடுப்பானார். கூடவே எப்போதும் நீதி, நேர்மை, நியாயம் என்று பாடிய பாட்டையே பாடும் தனது மாமனாரும் மைத்துனரும் அவரைப் பொறுத்தவரைக்கும் பிழைக்கத் தெரியாதவர்களாக தெரிந்தனர்.

அச்சமயத்தில் ஜெகத்ரட்சகனும் தொழில் விசயத்தில் தன்னைப் போல தான் என்பதைத் தெரிந்து கொண்டவர் அவரை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவு ஜெகத்ரட்சகனுக்கும் தனது மாமாவுக்கு ஊரோடு ஒத்துவாழத் தெரியவில்லை என்ற எண்ணம் ஏற்பட அதுவே பின்னாட்களில் பல அனர்த்தங்கள் நிகழக் காரணமானது.

ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய ஜெகத்ரட்சகன் தனது வாத திறமையாலும் தொழில் தந்திரத்தாலும் இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்ததும் அரிஞ்சயனுக்கு அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இந்தப் பிழைக்கத் தெரியாத மாமானாரின் அடிமையாக இருந்து தனக்கு எதுவும் கிட்டப் போவதில்லை என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டவர் அவர்களறியா வண்ணம் வழக்கறிஞர் தொழிலில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றவர் இந்நாள் வரை அதை சாந்திவனத்தின் உறுப்பினர்கள் அறியாவண்ணம் திறமையாக மறைத்திருந்தார்.

சாந்திவனம் இருக்கும் திசைநாமத்துக்கே வராத ஜெகத்ரட்சகன் மகளுக்குத் திருமணம் என பழத்தட்டுடன் வந்து நின்றதாக மனைவி சொன்ன அன்றே அவர் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் அதை அஜாக்கிரதையாக விட்டதன் பலன் இன்று குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்தைச் சிறப்பிக்கச் சென்றுவிட்டனர்.

அவர் பொறுமும் போதே பணியாள் ஒருவர் காபியைக் கொண்டு வந்து அவரிடம் பணிவுடன் நீட்ட அதை வாங்கிக் கொண்டவரின் சிந்தனை எங்கெங்கோ செல்ல அவரது மொபைலும் அடித்தது.

போனை எடுத்தவர் தொடுதிரையில் மின்னிய பெயரைக் கண்டதும் சட்டென்று எழுந்தார்.

“சொல்லுங்க சார்” என்று பணிவுடன் பேசியவர் மறுமுனையில் உள்ளவர்கள் சொன்ன அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்டுவிட்டுப் போனை வைத்தவரின் முகத்தில் எல்லையற்ற ஆனந்தம்.

போனில் அழைத்தவர் சொன்ன விசயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவரின் மூளை இதனால் தனக்குக் கிட்டப்போகும் இலாபத்தைக் கணக்கிட்டுத் திருப்திப் பட்டுக்கொண்டது.

அதே மகிழ்ச்சியும் திருப்தியுமான மனநிலையில் அவர் இருக்க அன்று மாலை நிச்சயத்துக்குச் சென்ற பெண்கள் மட்டும் நிச்சயம் நின்று விட்டது என்ற தகவலுடன் வீட்டுக்கு வந்தனர். அதற்கு அரிஞ்சயன் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் மாமனாருக்குத் திடீரென ஸ்ட்ரோக் வந்தது ஜெகத்ரட்சகனின் பேச்சினால் தான் என்று வாதிட்டவர் குடும்பத்தினரிடம் தான் ஒரு சிறந்த மருமகன் என்று நிரூபித்துவிட்டுத் தனது அறைக்குள் சென்று முடங்கினார்.

அன்றைய தினம் மகள் தனியாய் அகப்பட்ட நேரத்தில் அவளைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார் அவர்.

“மினிஸ்டர் மகனை லவ் பண்ணுறேனு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானே அவர் கிட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருப்பேனே… இப்பிடி ஊமையா இருந்து உனக்கு வந்த அதிர்ஷ்டத்தை அந்தப் பவானிக்குத் தாரை வார்த்துட்டு இப்போ அவளுக்கும் இல்லாம உனக்கும் இல்லாம ஏமாந்து போய் நிக்குறியே” என மகளிடம் கடுகடுவென்ற முகத்துடன் கத்திய அரிஞ்சயனை வியப்பாய் ஏறிட்டாள் பாகீரதி.

“என்னப்பா உளறுறிங்க? அவன் மோனிகாவோட ரூம்ல கேமரா ஃபிக்ஸ் பண்ணி அவளோட ஆக்டிவிட்டிசை கண்காணிச்சிருக்கான்பா.. அதோட அந்த வீடியோல… சை… அவனை மாதிரி ஒரு பொறுக்கிய கொஞ்சநாள் காதலிச்சதுக்கே எனக்கு உடம்பெல்லாம் கரப்பான்பூச்சி நடக்கிற மாதிரி அருவருப்பா இருக்கு… நீங்க அவனைப் பிரேக்கப் பண்ணுனதுக்குத் திட்டுறிங்களே… உங்க கிட்ட இதை நான் எதிர்பாக்கல”

கடுகடுப்புடன் தந்தையிடம் கத்திவிட்டுச் சென்றுவிட்டாள். அரிஞ்சயன் தலையிலடித்துக் கொண்டவர் மகளிடம் பேசிப் பிரயோஜனமில்லை என அந்த விசயத்தை அத்தோடு மறந்துவிட்டார்.

அதன் பின்னர் சுவாமிநாதனும் உடல்நலம் பெற்று வீட்டுக்குத் திரும்பிவிட்டார். வந்த உடனே அவர் எடுத்த விசயமே பவானி மற்றும் சிவசங்கரின் திருமணம் பற்றி தான்.

குடும்பம் மீண்டும் சேர்வதற்கான சரியான சந்தர்ப்பம் இது தான் என்று ஞானதேசிகனும் லோகநாயகியும் மனப்பூர்வமாகவே சம்மதித்தனர்.

செண்பகாதேவியோ தமக்கை மகளும் தமையன் மகனும் இணையப்போகும் நாள் தான் மீண்டும் அனைத்துப் பிரச்சனைகளும் முடிந்து அவரது பிரியத்துக்குரிய அஞ்சு அக்காவும், ஜெகா மாமாவும் இந்தக் குடும்பத்தோடு சேரப் போவதற்கான நன்னாளாக இருக்கும் என்று மனம் பூரித்துப் போனார்.

பாகீரதியும் பெரியம்மா மகளுடன் முன்பு சிறுபிள்ளைத்தனமாக சண்டையிட்டிருந்தாலும் இப்போது அவள் தங்களுடன் வாழப்போகும் தருணத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

அவளும் வானதியும் திருமண ஏற்பாடுகளைத் தாங்கள் முன்னின்று கவனிக்கிறோம் என்று சொல்லிவிடவே அரிஞ்சயனைத் தவிர அனைவருக்கும் மிகவும் திருப்தி.

சாந்திவனத்தில் மீண்டும் பேத்தி உரிமையுடன் காலடி எடுத்து வைக்கும் நாளுக்காக அம்முதியத்தம்பதியினரும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தனர்.

****************

அஞ்சனா விலாசம்

ஹோட்டலில் இருந்து தனியாகத் திரும்பிய ஜெகத்ரட்சகன் வீட்டில் கூண்டுக்குள் அடைபட்ட புலியைப் போல கடுஞ்சினத்துடன் அமர்ந்திருந்தார்.

எந்தக் குடும்பம் அவரது தன்மானத்துக்கும் சுயகவுரத்துக்கும் மதிப்பளிக்காது பழிச்சொல் சொல்லி வெளியேற்றியதோ அதே குடும்பத்துக்காக இன்று அவரது பிரியத்துக்குரிய அஞ்சும்மாவும் பவாகுட்டியும் அவரைத் தனியாய் விட்டுச் சென்றுவிட்டனர்.

அவர்களாவது பெண்கள்; இளகியமனம் என்று விட்டுவிடலாம். ஆனால் இந்நாள் வரை அவரது வலக்கரமாக இருந்த அருணும் அவர்களுடன் பதறியடித்துக் கொண்டு சென்றது தான் அவரது உச்சபட்ச கோபத்துக்குக் காரணம்.

தான் மாமாவிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் தவறானவை என்பதில் அவருக்கு எவ்வித ஐயமுமில்லை. அம்முதியவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த போது ஜெகத்ரட்சகனுக்கும் உள்ளுக்குள் பதற்றம் தோன்ற தான் செய்தது.

என்ன இருந்தாலும் தாயுடன் பிறந்தவர். ஐந்து வயதிலிருந்து அவருக்குத் தந்தையாகவும் மாறிப் போனவர். இன்று தான் திறமையாக நடத்தும் தொழிலின் நுணுக்கங்களை அவருக்குப் போதித்த ஆசானும் சுவாமிநாதன் தானே!

அவருக்கு ஒன்று என்றால் ஜெகத்ரட்சகனின் இதயமும் நின்று தான் போகும். ஆனால் அவர் இறுதியாக வீட்டை விட்டு அனுப்பிய தினத்தில் தன்னிடம் நடந்து கொண்ட முறை தவறு என்பதால் உண்டான காயம் இன்று வரை ஆறாமல் இருந்தது தான் தனது கோபத்துக்குக் காரணம் என தனது செய்கைக்கு நியாயம் கற்பித்துக் கொண்டார் ஜெகத்ரட்சகன்.

அதே மனநிலையுடன் இருந்தவர் வீட்டுக்கு வந்த மனைவி மக்களிடம் அந்தச் சீற்றத்தைக் காட்ட அஞ்சனாதேவி எதுவும் பேசாது அமைதியாய் நின்றவர்

“என் அண்ணன் மகனுக்கும் பவானிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு நாங்க டிசைட் பண்ணிருக்கோம்… உங்க முடிவு என்ன?” என்று ஒரு வித விலகலுடன் பேசவும் ஜெகத்ரட்சகன் முதலில் அந்த விலகலில் தான் அதிர்ந்தார்.

பின்னர் தன் மகளுக்கு அந்த திமிர் பிடித்தவனுடன் திருமணமா என்ற ஆவேசம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் கோபத்தை ஆக்சிஜன் போல பாய்ச்சவும்

“யாரைக் கேட்டு என் மகளுக்கு அந்த ஆணவம் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செஞ்ச அஞ்சனா?” என்று கர்ஜிக்க அஞ்சனாதேவி கையுயர்த்தி அவரைத் தடுத்தார்.

“நீங்க யாரைக் கேட்டு ஒரு ஒழுக்கங்கெட்டவனுக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணுனிங்க? இதுக்குப் பதில் இருக்கா? இனியும் உங்கள நம்பி என் பொண்ணு வாழ்க்கையை ஒப்படைச்சா இதே மாதிரி தான் நடக்கும்… என் அண்ணன் மகனுக்கு கொஞ்சம் ஆணவமும் அகம்பாவமும் ஜாஸ்தி தான்… ஆனா உண்மையும் நேர்மையும் இருக்கிறவங்க கிட்ட கொஞ்சம் அகம்பாவம் இருந்தா எந்தத் தப்பும் இல்ல… என் பவாவுக்குச் சிவா தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்”

இது வரை தன்னிடம் இன்முகம் காட்டி தனது வார்த்தைகளை அன்போடு ஏற்றுக்கொண்ட மனைவியின் முதல் பிடிவாதத்தின் முன் முழுவதுமாய் தோற்றுப் போனார் ஜெகத்ரட்சகன்.

எனவே கடைசிப் புகலிடமாய் மகளை நோக்கியவர்

“பவாகுட்டி நீ அப்பா பொண்ணு தானேடா? உனக்கு அந்தச் சிவா வேண்டாம்டா… அப்பா உனக்கு ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை பாத்து ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… சின்ன வயசுல இருந்து உன்னோட கல்யாணம்கிறது என்னோட கனவு… அப்பா சொல்லுறத கேளுமா” என்று பாசமாய் இறைஞ்ச பவானி தந்தையைத் தீர்க்கமாய் பார்த்தாள்.

உடனே தாத்தாவின் சோர்ந்த முகம் நினைவுக்கு வர அதே தருணத்தில் சிவசங்கரின் அழுத்தமான பார்வையும் அவளுக்கு நினைவுக்கு வந்து இனம் புரியாத உணர்வைத் தோற்றிவித்தது.

“எனக்குச் சிவாவ கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம்பா… ஆனா உங்களுக்கு இஷ்டமில்லனா நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொல்லி நிறுத்த ஜெகத்ரட்சகனின் முகத்தில் வெற்றி பெருமிதம் மின்னியது.

என் மகள் எனது பேச்சை என்றும் மீறமாட்டாள் என்ற கர்வம் அவரது முகத்தில் மின்னியது.

அருணும் அஞ்சனாவும் திடுக்கிட பவானி நிதானமாகத் தந்தையின் முகத்தைச் சலனமின்றி பார்த்தாள்.

“அதே நேரம் சிவாவ தவிர வேற யாரையும் என் வாழ்க்கைல நான் என்னோட லைப் பார்ட்னரா நினைச்சுக் கூட பாக்க மாட்டேன்… வாழ்க்கை முழுக்க உங்க மகளா இந்த அஞ்சனாவிலாசத்துலயே இருந்துடுவேன்” என்று உறுதியானக் குரலில் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஜெகத்ரட்சகன் மகளின் முடிவைக் கேட்டவர் அதிர்ந்து சிலையானார். அவர் அறிந்த பவானிக்குத் தந்தை சொல்லே வேதம். அவரது ஆசையே அவளது இலட்சியம். இப்படிப்பட்ட மகளா தனது முடிவை எதிர்த்தது என நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றார்.

இவ்வளவு நாட்கள் தனக்கு எதிராய் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவளாய் இருந்த மகள் இன்று தனது முடிவை மறுதலிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

வாழ்க்கையில் நாம் அசையா நம்பிக்கை வைத்த ஒருவர் அதை உடைக்கும் போது உண்டாகும் வலி வாழ்நாள் முழுமைக்கும் தொடரும். அது தரும் வேதனை மரணவேதனையை விட கொடியது.

அப்படிப்பட்ட வலி தான் ஜெகத்ரட்சகனுக்கும். எந்த மகள் தான் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டாளென அவர் உறுதியாக நம்பினாரோ அவள் இன்று அவளது வாழ்வின் முக்கியமுடிவை எடுக்கும் உரிமையை அவரிடம் இருந்து பறித்துவிட்டாள்.

யோசிக்கும் போதே மனதில் வலியுண்டாக தடுமாறிப் போனவராய் தனது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார்.

அஞ்சனாவும் அருணும் அவரது தடுமாற்றத்தைக் கண்டு துணுக்குற்றாலும் பவானியின் முடிவை அவர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் சாந்திவனத்துக்கு அழைத்து திருமண ஏற்பாட்டைக் கவனிக்கும்படி சொல்லிவிட்டனர்.

அதே நேரம் தனது அறையில் குழம்பிப் போன மனதுடன் அமர்ந்திருந்தாள் பவானி. அவளது மடியில் கிடந்த டைரியில் இருந்த வரிகளில் அவளது விழிகள் பதிந்தது.

“இன்னைக்குத் தாத்தா வீட்டுக்குப் போனப்போ சித்தி மருதாணி அரைச்சு வச்சிருந்தாங்க… நான், நதி, பக்கி மூனு பேரும் மருதாணி வச்சிக்கிட்டோம்… அப்போ எனக்குத் தண்ணி தாகம் எடுத்துச்சு… ஆனா ரெண்டு கையிலயும் மருதாணி இருந்துச்சு… நான் தாகத்துல உதட்டை ஈரப்படுத்துனத பாத்துட்டுச் சிவா எனக்கு தம்ளர்ல தண்ணி கொண்டு வந்து குழந்தைக்குக் குடுக்குற மாதிரி புகட்டுனாரு தெரியுமா? அவர் ரொம்ப கேரிங்… இதுக்காகவே அவரை எக்ஸ்ட்ராவா லவ் பண்ணலாம்”

பதின்பருவத்தில் அவன் மீது தோன்றிய காதல் வேகத்தில் அவள் கிறுக்கி வைத்த வார்த்தைகள் தான். ஆனால் அன்று காதலாகத் தெரிந்த அவனது செய்கை இன்று படிக்கும் போது தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்த சகமனிதனின் செயலாகவே தெரிந்தது.  தான் புத்தி கெட்டவளாய் அவன் தன் மீது கொண்ட அக்கறையைக் காதலாய் பாவித்துப் பெருந்தவறு செய்துவிட்டதாக எண்ணியவள் இப்போது அவன் திருமணத்துக்குச் சம்மதித்தது கூட தாத்தாவுக்காகவும் குடும்பம் இணைவதற்காகவும் தான் என்பதை மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டாள்.

தொடரும்💘💘💘