💘கண்மணி 6💘

பவானி சிவசங்கரின் மனதிலுள்ளதை அறிய விரும்பி மனம் புண்பட்டுத் திரும்பிய தினத்தன்று இரவில் அவள் தந்தை சொன்னபடி நவீனை மணக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டாள்.

ஜெகத்ரட்சகனுக்குத் தன் மகள் தனது பேச்சைத் தட்டமாட்டாள் என்ற எண்ணம் மீண்டும் ஒரு முறை வலுப்பட அஞ்சனாதேவியும் அருணும் பவானிக்கு அமையப் போகும் நல்வாழ்வை எண்ணி மகிழ்ந்தனர்.

அதன் பின்னர் அனைத்துமே வேகமாக நடந்தது. ஒரு நல்ல நாளில் அமைச்சர் செழியனும் அவரது மனைவி கயல்விழியும் பவானியைப் பார்த்துவிட்டுப் பூ வைத்துச் சென்றனர். அன்றைய தினத்திலேயே நிச்சயதார்த்த தேதியையும் குறித்துவிட்டனர்.

நவீன் இருமுறை போனில் அழைத்தவன் நாகரிகமாய் நாசூக்காய் பழகினான். ஆனால் பவானியால் தான் இயல்பாய் அவனுடன் ஒன்றி பேச முடியவில்லை.

ஏனெனில் சிவசங்கரின் பேச்சு அவளை அந்தளவுக்கு உயிரற்ற ஜடமாக மாற்றிவிட்டிருந்தது. ஆறு வருடக் காதல் அவனால் மறுதலிக்கப்பட்டதன் அதிர்ச்சி இன்னும் முழுவதுமாக நீங்காத நிலையில் அவளது தந்தையின் மகிழ்ச்சிக்காக மட்டுமே அவள் இத்திருமணத்துக்குச் சம்மதித்தாள்.

முடிந்தவரை தனது மன உணர்வுகளை டைரியில் எழுதித் தீர்த்துக் கொள்வாள். இனி அவளால் மட்டும் என்ன செய்ய இயலும்?

நிச்சயதார்த்தம் உறுதியானதால் ஜெகத்ரட்சகன் சொன்னதற்கு இணங்க வேலையையும் ராஜினாமா செய்தவளிடம் அவ்வபோது வானதி பேசி அவளது மனதை மாற்ற முயன்று கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் திருமணமே உறுதியான பின்னர் இனி பேசி என்ன பலன்!

ஜெகத்ரட்சகனோ திருமணம் என்றதும் பெண்களுக்கு இயல்பாக வரும் பயம் தான் மகளுக்கும் வந்துவிட்டது என எண்ணினாரேயன்றி அப்போது கூட மகளின் மனதில் இன்னொருவன் இருப்பானோ என யோசிக்கவில்லை. தன்னைக் கேட்காது மகள் எதையும் செய்யமாட்டாள் என்ற நம்பிக்கை அவருக்கு.

அஞ்சனாதேவி மகளுக்கு என ஆசையாய் நகைகளும் புடவைகளும் பார்த்துப் பார்த்து வாங்கி வைக்க ஆரம்பித்தார். அப்போது தான் ஜெகத்ரட்சகன் அந்த விசித்திரமான கருத்தை வெளியிட்டார்.

“நம்ம பவாகுட்டி என்கேஜ்மெண்டுக்கு உங்கப்பாவையும் உன் அண்ணன் குடும்பத்தையும் இன்வைட் பண்ணலாம்னு இருக்கேன் அஞ்சும்மா”

தந்தையுடன் அமர்ந்து காபி அருந்தியபடி வழக்குக்கான கோப்பு ஒன்றினை புரட்டிக் கொண்டிருந்த அருணுக்கு குடித்த காபி புரையேறியது. கோப்பில் சிந்திவிடாமல் அதை நகர்த்தியவன் தந்தைக்கு உடல்நலமில்லையோ என்று சந்தேகமாய் நோக்கினான்.

அவரோ “ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறிங்க? அவங்களோட ஆதரவு இல்லாமலேயே நான் எவ்ளோ பெரிய லெவலுக்கு வளந்திருக்கேனு அவங்களுக்குக் காட்டுறதுக்கு இது தான் எனக்குக் கிடைச்ச வாய்ப்பு… அதனால இன்னைக்கு ஈவினிங் ரெடியா இரு அஞ்சும்மா… நம்ம ரெண்டு பேரும் நிச்சயதார்த்தத்துக்கு அவங்கள இன்வைட் பண்ணிட்டு வந்துடுவோம்” என்றார் தீர்மானமாய்.

அஞ்சனாதேவிக்கு பல வருடங்கள் கழித்து கணவருடன் பிறந்தவீட்டுக்குச் செல்லப் போகும் மகிழ்ச்சி ஒரு புறம்; இன்னும் பழைய கோபம் தீராமல் போட்டி மனப்பான்மையுடன் இருக்கும் கணவரின் குணாதிசயம் கொடுத்த வருத்தம் ஒரு புறம்.

கலவை உணர்வுடன் தயாரானவர் கணவருடன் சாந்திவனத்தில் காரில் சென்று இறங்கினார். ஜெகத்ரட்சகன் கையில் பழங்கள் அடங்கிய தட்டை ஏந்தியவர் அந்த வீட்டின் முன்முகப்பில் பொறிக்கப்பட்ட சாந்திவனம்என்ற பெயரை ஒரு முறை வாசித்துக் கண் கலங்கினார்.

அது அவரது அன்னையின் பெயர் அல்லவா! ஜெகத்ரட்சகனின் தாத்தா மகளின் பெயரில் கட்டிய இல்லம் அது. ஆனால் அவரது பேரனுக்கு அங்கே இடமில்லை. கடந்த பன்னிரண்டு வருடங்களாகத் தானே இப்படி என எண்ணும் போதே மனம் சோககீதம் வாசிக்க ஆரம்பிக்கவும் அந்நினைவுகளை ஒதுக்கியவராய் உதட்டில் புன்னகையைப் பூசிக்கொண்டு கர்வத்துடன் தனது தாய்மாமனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அது அனைவரும் ஓய்ந்திருக்கும் சமயம் என்பதை அறிந்து தான் மனைவியுடன் அங்கே வந்திருந்தார் ஜெகத்ரட்சகன். ஹாலில் பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஞானதேசிகன் தான் முதலில் தங்கையையும் அவரையும் கவனித்தார்.

ஜெகத்ரட்சகனும் ஞானதேசிகனும் அடிக்கடி நீதிமன்றவளாகத்தில் சந்தித்துக் கொள்வது வழக்கம் தான். அச்சமயங்களில் ஒருவரையொருவர் கண்டும் காணாதது போல கடந்துவிடுவர்.

ஆனால் இந்த வீட்டுக்கு அவர் வந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. அவரது இந்தத் திடீர் வருகை ஞானதேசிகனுக்கு வினோதமாய் தோணியது.

சுவாமிநாதன் மகளும் மருமகனும் பழங்கள் நிரம்பிய தாம்பளத்துடன் புன்னகை பூத்த முகத்தினராய் வருவதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். நீண்டகால காத்திருப்புக்குக் கடவுள் மனம் இரங்கிவிட்டார் என அன்னபூரணியும் மகிழ்ந்தார்.

அதற்குள் ஜெகத்ரட்சகன் வீட்டுக்குள் வந்துவிட்டார். குறுநகை பூசிய முகத்துடன் அங்கே குழுமியிருந்தவர்களை நோக்கியவர் அனைவருக்கும் பொதுவான வணக்கம் வைத்தார்.

அங்கே மொத்தக் குடும்பமும் குழுமியிருந்ததாலும் அவரது கண்கள் நிலைத்து நின்றது சிவசங்கர் மீதே. அவனோ அலட்சியம் ததும்பும் விழிகளால் அவரை ஏறிட சுவாமிநாதனும் அன்னபூரணியும் மகளை மீண்டும் தங்கள் வீட்டில் கண்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயினர்.

செண்பகாதேவியும் லோகநாயகியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. வானதி மகிழ்ச்சியுடன் மாமாவுக்கும் அத்தைக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் என சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஜெகத்ரட்சகன் ஒரு நொடி சுவாமிநாதனை ஏறிட்டவர் பழைய நினைவில் கண்கள் பனிக்க குனிந்து அவரது காலைத் தொட்டு வணங்கினார். அதை சுவாமிநாதனோ அன்னபூரணியோ எதிர்பார்க்கவில்லை.

சிவசங்கரும் தான். எப்போதும் அவரைச் சந்தேகத்துடன் பார்ப்பவன் தான். ஆனால் இம்முறை ஜெகத்ரட்சகனின் கண்களில் உண்மையான பாசத்தைத் தான் அவன் கண்டான்.

அன்னபூரணியும் சுவாமிநாதனும் அவரை ஆசிர்வதித்தவர்கள் கண் கலங்க ஆரம்பிக்கவும் அஞ்சனாதேவி நெகிழ்ந்தவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அன்னபூரணி மகளின் கரத்தை வருடிக் கொடுத்து அவரை உச்சி முகர்ந்தவர் “நம்ம வீட்டுல மறுபடியும் நீ எப்போ காலடி எடுத்து வைப்பனு ஏங்கிப் போயிருந்தேன் அஞ்சு” என்று சொன்னபடியே கண்ணீர் வடித்தார்.

சுவாமிநாதன் “அதான் வந்துட்டாள்ல… இன்னும் ஏன் அழுற? அவங்க ஏதோ நல்ல விசயம் சொல்ல வந்திருக்கிறப்போ அழுதுகிட்டிருந்தா நல்லா இருக்காது பூரணி” என்றார் வழக்கமான அக்கறை தொனிக்கும் குரலில்.

பின்னர் கணவனும் மனைவியும் தாம்பளத்தைப் பெரியவர்கள் வசம் கொடுத்தவர்கள்

“எங்க பொண்ணு பவானிக்கு மினிஸ்டர் செழியனோட பையன் நவீன் கூட மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிருக்கோம்… வர்ற புதன்கிழமை ஹோட்டல் டெய்சில நடக்கப் போற என்கேஜ்மெண்ட்ல நீங்க எல்லாரும் குடும்பத்தோட கலந்துக்கணும்” என்று பணிவுடன் வேண்டிக் கொண்டனர்.

அதைக் கேட்டதும் செண்பகாதேவியின் அருகில் அமர்ந்திருந்த பாகீரதியின் முகத்தில் அதிர்ச்சியும் வேதனையும் அப்பட்டமாகத் தெரிய அதைச் சிவசங்கரின் கண்கள் கவனித்துவிட்டது.

அப்போது காபியுடன் வந்த வானதிக்கு இத்தகவல் வருத்தத்தைக் கொடுத்தாலும் அதை முகத்தில் காட்டாது அவர்களை அமரச் சொல்லி காபி கோப்பைகளை நீட்டினாள்.

ஞானதேசிகன் பொத்தாம் பொதுவாக “பவாகுட்டிக்கு நல்ல இடமா தகைஞ்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்… நாங்க எல்லாரும் குடும்பத்தோட வந்துடுவோம்” என்று சொல்ல லோகநாயகியும் இதை ஆமோதித்தார்.

ஜெகத்ரட்சகன் அவரது முகத்தைப் பார்த்தவர் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே ஹாலில் தான் தலைகுனிந்து நின்ற நிகழ்வு நியாபகம் வரவும் முகம் மாறினார்.

அவர் அருகில் அமர்ந்திருந்த அஞ்சனாதேவி கணவரின் மனம் அறிந்தவராய் அவரது கையை அழுத்தவும் இயல்பானார்.

ஞானதேசிகன், லோகநாயகி, செண்பகாதேவி, அன்னபூரணி, சுவாமிநாதன் என அனைவரும் அவர்களுடன் கலந்து பேச ஆரம்பிக்க சிவசங்கரும் பாகீரதியும் மட்டும் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

வானதியோ தாத்தா பாட்டி கட்டிய மனக்கோட்டையும் தோழியின் காதல் கோட்டையும் முற்றிலுமாகத் தகர்ந்து போவதைத் தடுக்க இயலாதவளாய் கையைப் பிசைந்தபடி நின்றாள்.

ஜெகத்ரட்சகன் அதிர்ந்து போயிருந்த பாகீரதியை நோக்கியவர் “பாகி என்னடாம்மா ஆச்சு?” என்று வினவ

“ஒன்னுமில்ல பெரியப்பா” என்றவள் மருண்டு விழிக்க சிவசங்கரின் பார்வை மீண்டும் அவளை ஆராய்ந்தது.

“சகலை எங்க போயிருக்காரு?” என்று அரிஞ்சயனைப் பற்றி விசாரிக்க

“அவரு கிளையண்டை மீட் பண்ண போயிருக்காரு மாமா” என்று பதிலளித்தார் செண்பகாதேவி.

சில மணி நேரங்கள் இயல்பான பேச்சில் கழிய அஞ்சனாதேவியும் ஜெகத்ரட்சகனும் கிளம்பினர்

அவர்கள் கிளம்பியதும் சாந்திவனத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி நிறைந்திருந்தது. பெரியவர்கள் பழைய நினைவுகளில் மூழ்கினர்.

அன்னபூரணியும் சுவாமிநாதனும் வாய் நிறைய “ஜெகா தேசிகனைக் கூட்டிட்டு வாடா” என்று அழைக்க இளவயது ஜெகத்ரட்சகனும் ஞானதேசிகனும் துள்ளலுடன் ஓடி வரும் காட்சி அவர்கள் நினைவிலாடியது.

பின்னர் அஞ்சனாதேவி ஜெகத்ரட்சகனைக் காதலிப்பதாகச் சொன்னதும் இதே ஹாலில் வைத்து தான். அவர்கள் புதுமணமக்களாக வந்து இதே ஹாலில் வைத்து பால் பழம் அருந்திய காட்சியும் கண்ணில் நிழலாடியது.

அதன் பின்னர் லோகநாயகியும் ஞானதேசிகனும் தாம் பெற்றோராகப் போகும் செய்தியை குடும்பத்திடம் தெரிவித்த போது ஜெகத்ரட்சகன் “எனக்கு மருமகன் பிறக்கப் போறான்” என்று குடும்பத்தினருக்குச் சந்தோசத்துடன் இனிப்பு வழங்கியதும் இதே ஹாலில் தான்.

சிவசங்கரும் பவானியும் ஓடி பிடித்து விளையாடியதும் இதே ஹாலில் தான். அருணும் வானதியும் ஒருவரோடுவர் சண்டை பிடித்ததும் இதே ஹாலில் தான். இந்த ஹாலுக்குள் தான் எத்தனை நினைவுகள் அடங்கியிருக்கிறது!

ஒரு பெருமூச்சுடன் அனைவரும் நகர்ந்துவிட்டனர். பாகீரதியின் முகம் இன்னும் கலக்கமும் அதிர்ச்சியுமாய் இருக்க சிவசங்கர் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.

“என்ன விசயம் அத்தான்? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திங்க?” என சோர்ந்த குரலில் கேட்டவளை நோக்கியவன்

“நீ முன்ன மாதிரி இல்ல பாகி… என்னாச்சு உனக்கு? பவா கல்யாண விசயம் சொன்னப்போ ஏன் நீ ஷாக் ஆன? இல்லனு பொய் சொல்லாத… நான் உன்னைத் தான் அப்போ பாத்துட்டிருந்தேன்… என் கிட்ட நீ எதையும் மறைக்க மாட்டேனு நினைக்கேன்” என்று கட்டளையிடும் குரலில் சொல்ல பாகீரதி விசித்து அழ ஆரம்பித்தாள்.

அழுகையும் வேதனையுமாய் அவள் உரைத்த விசயங்களைக் கேட்டவனுக்கு இரத்தம் கொதித்தது. கோபத்தில் சிவந்த முகத்துடன்

“இவ்ளோ நடந்திருக்கு… எங்க யாரு கிட்டவும் நீ ஒரு வார்த்தை கூட சொல்லல… நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்? இப்பிடி செஞ்சவனை…” என்று பல்லைக் கடித்தவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் பாகீரதி.

“அத்தான் அவங்களை நம்மளால ஒன்னும் பண்ண முடியாது… அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க… நான் இத யாரு கிட்டவும் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்… ஆனா இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா நல்லது இல்லனு புரிஞ்சுது”

சொல்லும் போதே கண்ணில் நீர் பெருகி வழிய சிவசங்கர் அவள் கண்ணீரைத் துடைத்தவன்

“அசட்டுத்தனமா அழாத பாகி! இதுக்கு என்ன பண்ணலாம்னு நான் யோசிக்கிறேன்… நீ எதையும் நினைச்சு உடைஞ்சு போக கூடாது… இந்த அழுமூஞ்சிய விட எடுத்ததுக்குலாம் அடம்பிடிக்கிற பாகிய தான் எனக்குப் பிடிக்கும்” என்று அதட்டலும் கேலியுமாகச் சொல்ல பாகீரதி முகம் தெளிந்தாள்.

ஆனால் அவளது பழையப் பிடிவாதமோ குறும்போ இனி திரும்பி வர வாய்ப்பில்லை. சிவசங்கர் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுச் செய்த முதல் வேலையே பவானியைப் போனில் அழைத்தது தான்.

அழைக்கும் போதே அவளது அழைப்பைத் தான் துண்டித்தது போல அவளும் துண்டித்துவிடுவாளோ என்ற சந்தேகம் அவனது உள்ளத்தில் உதயமானது என்னவோ உண்மை!

ஆனால் அவனது எண்ணம் பொய்யாகும்படி பவானி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ” என்றவளின் வெறுமையான குரல் அவனுக்குள் குற்றவுணர்ச்சியைக் கிளறினாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டான்.

“உன்னோட நிச்சயத்தை நிறுத்திடு பவா… இந்த என்கேஜ்மெண்ட்ட நான் நடக்கவிட மாட்டேன்”

மறுமுனையில் அமைதி நிலவியது. சில வினாடி மௌனத்துக்குப் பின்னர்

“முடியாது சிவா… இது என் அப்பா ஆசைப்பட்டுப் பேசுன சம்பந்தம்… யாருக்காகவும் இத உடைக்க நான் விரும்பல… முக்கியமா என்னைப் பாக்கவோ பேசவோ விரும்பாத உங்களுக்காக நான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்… எனக்கு ஷாப்பிங் போற வேலை இருக்கு… ப்ளீஸ்! போனை கட் பண்ணுறிங்களா?” என்றவள் அவன் துண்டிப்பதற்கு முன்னர் தானே இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

சிவசங்கர் தனது அழைப்பைப் புறக்கணித்தவளின் மீது கோபம் வர மொபைல் போனை வீசப் போனவன் எதையும் உடைப்பதோ தூக்கி வீசுவதோ அவனது இயல்பல்ல என்பதால் சிகையைக் கோதிக்கொண்டபடியே தரையை உதைத்துத் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டான்.

அதே நேரம் பவானியும் நீண்டநாள் கழித்து செவியில் விழுந்த அவனது குரல் ஏற்படுத்திய பாதிப்பில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

சிவசங்கரின் கோபத்துக்கும் பவானியின் கண்ணீருக்கும் காரணம் என்னவோ அவர்களிடையே இலைமறை காயாக இருக்கும் காதல் தான் என அவர்கள் புரிந்துகொள்ள விதி எடுத்து வைக்கும் அடுத்த அடி என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

தொடரும்💘💘💘