💘கண்மணி 27💘

சிவசங்கரின் பேச்சை முழுவதுமாக கேட்ட பவானியின் உள்ளம் சித்தப்பாவின் திருட்டுத்தனங்களை அறிந்ததும் கொதிக்க ஆரம்பித்தது. அவள் அறிந்த வரையில் அவளது தந்தையும் சரி, சகோதரனும் சரி, கிளையண்டுகள் ஜெயிக்க சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் செய்வார்கள். மற்றபடி அவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.

“ஆப்போசிட் பார்ட்டிய ஜெயிக்கிறதுக்கு சட்ட அறிவோட கொஞ்சம் ராஜதந்திரம் இருந்தா போதும்டா அருண்… மத்தபடி நமக்குனு ஒரு ஸ்டாண்டட் இருக்கு… அதுல இருந்து கீழ இறங்குறது அசிங்கம்” என்று அடிக்கடி அவள் காது படவே ஜெகத்ரட்சகன் மகனுக்குத் தொழிலில் அறிவுரை வழங்குவார்.

ஆனால் அவர்கள் சொல்வது போல சட்டத்தை வளைப்பது கூட பெருந்தவறு என்று சொல்பவர்கள் தாத்தாவின் குடும்பத்தினர். அப்படிப்பட்டவர்கள் இங்கேயே ஒரு கறுப்பு ஆடு உறவினர் என்ற போர்வையில் மறைந்திருந்து வழக்கின் ஆதாரங்களைத் திருடி தருவதாகச் சொன்னதைக் கவனியாது எப்படி விட்டார்கள் என்ற ஆதங்கம் கூட தோன்றியது அவள் மனதில்.

அத்தோடு மாதவ்வின் வழக்குக்காக இரவு பகல் பாராது சிவசங்கர் உழைத்ததை பவானி கூடவே இருந்து பார்த்திருக்கிறாள். பல இரவுகளில் அவளது உறக்கம் கலையக் கூடாதென அவன் பால்கனியில் அமர்ந்து சட்டப்புத்தகத்தில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான் என அவள் அறிவாள்.

அவனது அந்த உழைப்பு மட்டும் தான் சீக்கிரம் முடியாமல் ஜவ்வாய் இழுக்கும் அந்த சிவில் வழக்கை வெற்றிகரமாய் ஜெயிக்க வைத்தது எனலாம். அதைக் கூறு கெடுக்க எண்ணிய அரிஞ்சயன் எப்படிப்பட்ட பணத்தாசை பிடித்த நபராக இருக்க வேண்டும் என வெறுப்புடன் மனதில் எண்ணிக்கொண்டாள்.

தன் எதிரே படுக்கையில் கண் மூடி யோசனையுடன் சாய்ந்திருப்பவனின் நலுங்கிய தோற்றத்தில் அவளுக்கு மனம் வலித்தது. அவன் இப்போது அரிஞ்சயனின் செயலை பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து தவிக்கிறான் என புரிந்து கொண்டவள் அவன் கரத்தை ஆதுரத்துடன் பற்றினாள்.

“ரொம்ப யோசிக்காதிங்க சிவா… உண்மைய ரொம்ப நாளுக்கு மறைச்சு வைக்க முடியாது…. சீக்கிரமே அது வெளிச்சத்துக்கு வந்துடும்”

“ப்ச்… இன்னைக்கே வந்துருக்கும்… ஆனா நான் ஹோட்டலுக்குப் போற வழிலயே இந்த மைனர் ஆக்சிடெண்ட் நடந்துடுச்சு… இல்லனா அவரைக் கையும் களவுமா பிடிச்சிருப்பேன்… ஒரு வேளை அப்பா சந்தேகப்படுற மாதிரி பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்கும் சின்ன மாமா தான் காரணம்னா என் மனசாட்சியே என்னை மன்னிக்காது பவா… பிகாஸ் தாத்தா அன்னைக்கு அவ்ளோ கோவப்பட்டதுக்குக் காரணம் அவரோட ரூம்ல இருந்து உங்கப்பா வெளிய வர்றத நானே பாத்தேனு சொன்னதால தான்… ஒருவேளை நான் பாத்தப்போ அவர் கேசுவலா கூட அங்க வந்திருப்பாரோ? என்னால தான் அவர் அன்னைக்குத் தேவையில்லாம தாத்தா முன்னாடி தலை குனிஞ்சு நின்னாரா? அப்போ நம்ம குடும்பம் இப்பிடி பிரிஞ்சதுக்கு என்னோட அவசரப்புத்தி தான் காரணமா? இதெல்லாம் யோசிச்சாலே தலைல யாரோ கல்லைத் தூக்கிப் போடுற மாதிரி இருக்கு பவா… நான் பெரிய தப்பு பண்ணிட்டேனோனு கில்டியா இருக்கு”

இது வரை தாத்தா போதித்த அறநெறிகளுக்குட்பட்டே தொழிலையும் சொந்த வாழ்க்கையையும் வாழ்ந்தவனுக்கு, தான் பெரிய அநீதி இழைத்துவிட்டோமோ என்ற குழப்பம் தலைக்குள் வண்டாய் குடைந்தது.

தலையைப் பிடித்தபடி அமர்ந்தவனின் முகத்தை நிமிர்த்தியவள் “ஏன் இவ்ளோ யோசிக்கிறிங்க சிவா? இந்த உலகத்துல தப்பு பண்ணாதவங்கனு யாருமே கிடையாது… நூறு சதவீதம் நம்ம பண்ணுறது எல்லாம் கரெக்ட்னு சொல்லவே முடியாது சிவா… எனக்கு நல்லதுனு தோணுற ஒரு விசயம் உங்களுக்குத் தப்பா தோணலாம்… இதால நமக்குள்ள ரெண்டு தடவை மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்ததை மறந்துட்டிங்களா? அப்போ நீங்க இவ்ளோ தூரம் யோசிச்சு கவலைப்படலயே? இப்போ மட்டும் ஏன் இந்த அளவுக்கு ஒரி பண்ணிக்கிறிங்க?” என்று கேட்க

“ஏன்னா நான் சொன்னதுக்காக நீ கோவப்பட்டியே தவிர என்னை வெறுக்கல… நீ வாய் வார்த்தையா ஹேட் யூனு சொன்னியே தவிர உண்மையா உனக்கு என் மேல வந்தது கோவம் மட்டும் தான்…. ஆனா பெரிய மாமா விசயத்துல அவர் நடந்த சம்பவத்தால மொத்தக் குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கிட்டார்… சப்போஸ் அவர் மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்துல முழு குற்றவாளி நான் தான் பவா” என்றான் சிவசங்கர் வலி நிறைந்த குரலில்.

பவானி அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டவள் “இன்னும் எதுவும் தெளிவா தெரியாம இவ்ளோ அதிகமா யோசிச்சு ஏன் இருக்குற தலைவலிய அதிகப்படுத்திக்கிறிங்க? ரிலாக்ஸ் சிவா… அப்பிடியே நீங்க தப்பா சொல்லிருந்தாலும் அது ஒன்னும் அவ்ளோ பெரிய மிஸ்டேக் இல்லயே… அப்போ உங்களுக்கு வெறும் பதினைஞ்சு வயசு தான்… அப்போ நீங்க சொன்னது அப்பாவுக்கு ஷாக்கா இருந்துருக்குமே தவிர உங்கள வெறுத்திருக்க மாட்டார்… இப்போவும் உங்கள பத்தி பேசுனா அவருக்கு எரிச்சல் வருமே தவிர வெறுப்பு வந்து நான் பாத்தது இல்ல” என்று பொறுமையாகப் பேசிய பிறகு அவன் கொஞ்சம் அமைதியானான்.

ஆனால் அவனது மனம் இன்னும் புயல் நேரத்து ஆழியாய் குமுறிக் கொண்டு தான் இருந்தது.

அதே நேரம் கீழே உணவுமேஜையில் அமர்ந்திருந்த மனைவியிடமும் தங்கையிடமும் அரிஞ்சயனைக் காண ஹோட்டலுக்குச் சென்ற வழியில் தான் சிவசங்கருக்கு இந்த சிறு விபத்து நிகழ்ந்து விட்டது என ஞானதசிகன் கூறவும் இருவருக்கும் வருத்தம்.

“அப்போ அவர் யாரை பாக்கப் போனார்னு தெரியலயா அண்ணா?” என்று கேட்கும் போதே செண்பகாதேவியின் குரலில் அவமானக்குன்றல் நிறைந்திருந்தது.

“இல்ல செண்பா… பாதி வழில போறப்போவே ஒரு டூவீலர் மேல இடிக்கக் கூடாதுனு காரை ஓரங்கட்டுனதுல சிவாவுக்கு இந்த ஆக்சிடெண்ட் நடந்துடுச்சு… இருக்கட்டும்… அவர் எங்க போயிட போறார்? வீட்டுக்கு வந்து தானே ஆகணும்… வந்தா நடந்த எல்லாத்தையும் பொறுமையா விசாரிப்போம்… ஏன்னா பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி அவசரத்துலயும் கோவத்துலயும் நமக்குச் சொந்தமானவங்கள நம்ம இழந்துட்டோம்… ஒரு வேளை அரிஞ்சயன் மேல தப்பு இல்லாம கூட இருக்கலாம்… பாப்போம்” என்றார் ஞானதேசிகன் தங்கையைத் தேற்றும் விதமாக.

கூடவே “அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தப் பிரச்சனை எதுவும் தெரிஞ்சிடக் கூடாது லோகா… எல்லாம் சுமூகமா முடிஞ்சதும் நானே அவங்க கிட்ட பொறுமையா சொல்லுறேன்… செண்பா உனக்கு அரிஞ்சயன் கால் பண்ணுனார்னா பொறுமையா பேசு… கோவத்துல வார்த்தைய விட்டுடாதம்மா” என்று சொல்லிவிட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

வீட்டில் குடும்பத்தினரும் அலுவலகத்தில் ஞானதேசிகனும் அரிஞ்சயனுக்காக காத்திருக்க அவரோ ஹோட்டல் டெய்சியின் ஏசி போட்ட அறையில் அமைச்சர் செழியனின் சதி திட்டத்தைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“உங்க மச்சினரும் அவரோட மகனும் வீட்டு லேடிசுக்குப் பாதுகாப்பை பலப்படுத்திருக்காங்க போலயே… ப்ச்… அதை விடுங்க அரிஞ்சயன்… நான் இப்போ ஜெகத்ரட்சகனுக்கும் சிவசங்கருக்கும் பலத்த அடிய குடுக்கணும்… என் மகனைப் பிரிஞ்சு நான் துடிக்குற மாதிரி அவங்க ரெண்டு பேரும் துடிச்சு அழணும்… ரெண்டு கல்லுல ஒரு மாங்கா அடிக்குற மாதிரி ஒரு ஐடியா வச்சிருக்கேன்… அதுக்கு எப்போவும் போல நீங்க சின்ன ஹெல்ப் பண்ணுனா போதும்” என்றார் செழியன் வஞ்சக எண்ணத்துடன்.

அரிஞ்சயனோ “உங்களுக்குப் பண்ணாம வேற யாருக்கு நான் ஹெல்ப் பண்ண போறேன் மினிஸ்டர் சார்! நம்ம ஃப்ரெண்ட்ஷிப் இன்னைக்கு நேத்து உருவானதா என்ன? ட்வெல்வ் இயர்சுக்கு முன்னாடி உங்களுக்காக என் மாமனார் கலெக்ட் பண்ணி வச்சிருந்த எவிடென்ஸ் ஃபைலைத் தூக்குனப்போ உருவானது சார்… இப்போ கூட அந்த ஃபார்மர்ஸ் விவகாரத்துல என் மருமகனை ஈசியா ஏமாத்திடலாம்னு நினைச்சு தான் அவன் சாட்சிக்கு வரச் சொன்னவங்க பத்தின டீடெயிலை உங்களுக்குக் குடுத்தேன்… நீங்களும் என் சகலை கிட்ட அதை நீங்களா கலெக்ட் பண்ணுன டீடெயில் மாதிரி குடுத்து கேஸ்ல ஜெயிச்சிட்டிங்க…

ஆனா என்ன, அதுக்கு அப்புறம் சிவா ரொம்ப உஷாரா ஆயிட்டான்… அதான் தணிகாசலம் கேட்ட எவிடென்சை என்னால அவர் கிட்ட குடுக்க முடியாம போயிடுச்சு… இப்போ அந்தாளுக்கு நான் பணத்தைத் திருப்பித் தரலனா என்னைப் பத்தி ஞானதேசிகன் கிட்ட சொல்லிடுவேனு மிரட்டுறார்… உங்களுக்கும் இப்போ என் உதவி வேணும்னு சொல்லுறிங்க… அதுக்குப் பதிலா…” என்று இழுக்க செழியன் புரிந்து கொண்டவரைப் போல தலையாட்டினார்.

“புரியுது சார்… நல்லா புரியுது… நீங்க செய்ய வேண்டியது ஒரு சின்ன வேலை தான்… அந்த சிவாவோட ஒய்ப் அதான் நம்ம ஜெகத்ரட்சகனோட மகள் தனியா வீட்டை விட்டு எப்போ போவானு எனக்குத் தகவல் சொல்லணும்… அவ்ளோ தான்… அதைச் சொல்லிட்டு உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க, யோசிக்காம நான் குடுக்கிறேன்” என்றார் அமைச்சர் செழியன்.

அரிஞ்சயன் மனதுக்குள்ளே “ப்பூ… இவ்ளோ தானா? அந்த மகாராணி தான் நாளைக்கு அவளோட வெத்துவேட்டு அமெரிக்கா ஃப்ரெண்ட் இந்தியாவுக்கு வந்ததும் அவனைப் பாக்க அவன் வீட்டுக்குப் போவாளே.. அதைச் சொன்னா இருபத்தஞ்சு லட்சம் கிடைக்குமே… ஆனா அதுக்கும் இவர் பழி வாங்குறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று யோசித்தவர் அதை வாய்விட்டுக் கேட்டும் விட்டார்.

ஆனால் அடுத்த நொடியே “உங்களுக்குக் காரணம் வேணுமா? இருபத்தஞ்சு லட்சம் பணம் வேணுமா?” என்ற செழியன் வீசிய தூண்டிலில் வசமாய் சிக்கிக் கொண்டார் அவர்.

பவானி ஈஸ்வரின் வீட்டுக்குச் செல்வதாக செண்பகாதேவியிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒட்டுக்கேட்டதை ஒரு வரி விடாது செழியனிடம் சொல்லிவிட்டார்.

“எனக்கு அந்தப் பையனை சுத்தமா பிடிக்கல… என் பொண்ணுக்கும் அந்தப் பையனுக்கும் ஒரே வயசு… இப்பிடி இருந்தா சரியா வருமா சார்? ஆனா எனக்கு வாய்ச்ச பைத்தியக்கார பொண்டாட்டியோட கண்ணுக்கு என்னமோ அவன் ஒருத்தன் தான் மருமகனா தெரியுறான்… என் பொண்ணுக்கும் இதுல பெருசா இஷ்டமில்ல.. ஆனா இந்த பவானி பொண்ணு தான் அவன் வீட்டுலயும் எங்க வீட்டுலயும் மாறி மாறி பேசி இந்தச் சம்பந்தத்தை ஒத்துக்க வச்சா… நாளைக்கு அவ போறது கூட அவன் அம்மா கிட்ட சம்பந்தத்த பேசி முடிக்கத் தான்” என்று அனைத்தையும் கொட்டி விட செழியன் அவர் சொன்னதை மனதில் பதியவைத்துக் கொண்டார்.

கூடவே தனது திட்டத்தைச் செயல்படுத்தி முடிக்கும் வரை அரிஞ்சயனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சிறந்தது என எண்ணிக் கொண்டார். எனவே அவரை இன்றும் நாளையும் தனது கிழக்கு கடற்கரைச்சாலை பங்களாவில் தன்னுடன் தங்கிக் கொள்ளும் படி சொல்லிவிட்டார்.

ஆனால் அரிஞ்சயனோ அவரது மகன் உள்ளே செல்ல முக்கியச் சாட்சியாக இருந்தவள் தனது மகள் பாகீரதி என்பதையே மறந்து போனார். கூடவே என்றைக்கு இருந்தாலும் நவீன் வெளியே வந்துவிடுவான். அப்படி வந்துவிட்டால் அவனையே மகளுக்கு மணமுடித்து விட்டால் தான் அமைச்சரின் சம்பந்தி ஆகிவிடுவோம் என பகல் கனவு வேறு கண்டு கொண்டிருந்தார். அத்தோடு நவீன் ஒரு பெண்பித்தன் என்று மகள் சொன்னதைக் கூட வயதுக்கோளாறு என ஒதுக்கித் தள்ளிவிட்டார் அந்தச் சந்தர்ப்பவாதி.

எனவே செழியனுடன் அங்கேயே தங்க சம்மதித்து விட்டார். கூடவே சாந்திவனத்தின் பணியாட்களில் அவரது விசுவாசியாய் இருந்தவனிடம் பவானி நாளை வெளியே செல்லும் போது அழைக்கும்படி சொல்லி விட்டார்.

அவரது மனக்கோட்டைகள் பற்றி அறியாத செழியன் தனது ஆட்களைச் சாந்திவனத்தைச் சுற்றிலும் கண்காணிக்கச் சொல்லிவிட்டார். சிவசங்கரின் மனைவி காரில் வெளியே வந்தால் அவளைத் தொடர்ந்து சென்று ஆளரவமற்ற சாலையில் அவளது கார் செல்லும் போது அதைத் தாக்கி நடந்தது விபத்து என்ற போர்வையில் அவளைக் கொன்று விடுங்கள் என அவர்களுக்குக் கட்டளையும் இட்டுவிட்டார்.

****************

அஞ்சனாவிலாசம்

ஜெகத்ரட்சகன் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தார். அருணுக்கும் அஞ்சனாவுக்கும் அவரது இந்தப் போக்கு விசித்திரமாக இருக்க இருவரும் அவரிடம் என்னவென வினவ பாகீரதி அரிஞ்சயனைப் பற்றி சொன்ன அனைத்தையும் மகனிடமும் மனைவியிடமும் ஒப்பித்தார்.

“நான் அவரை என் கூடப்பிறந்த தம்பி மாதிரி நினைச்சிருந்தேன் அஞ்சு… ஆனா செண்பா கிட்ட இத்தனை வருசமா இவ்ளோ ரூடா பிஹேவ் பண்ணிருக்கார்னு தெரிஞ்சதும் மனசு விட்டுப் போச்சு… செண்பாக்கும் அவருக்கும் மேரேஜ் ஆன புதுசுல இருந்து அவர் என் கிட்ட சொன்னது எல்லாமே உங்கப்பாவுக்கும் அண்ணனுக்கும் உலகத்தோட ஒத்து வாழத் தெரியாது; சும்மா நீதி நியாயம்னு வெட்டிக்கதை பேசி பிழைக்கத் தெரியாம இருக்காங்கங்களேங்கிறது மட்டும் தான்… கொஞ்சநாள்ல எனக்கும் அப்பிடி தோண ஆரம்பிச்சிடுச்சு… சொல்லி வச்ச மாதிரி செழியன் பிரச்சனைல செய்யாத தப்புக்கு ஒரு சின்னப்பையன் சொன்னத நம்பி என்னைச் சந்தேகப்பட்டது என்னோட சுயமரியாதைக்கு விழுந்த அடி தான்…

அதான் உங்களை கூட்டிட்டு நான் தனியா வந்ததுக்குக் காரணம்… ஆனா அதுக்கு அப்புறம் ஒவ்வொரு தடவை நான் சகலைய மீட் பண்ணுறப்போவும் சாந்திவனத்துலையும் நாதன் அசோசியேட்சிலயும் அவரை ஒரு அடிமை மாதிரி உங்கப்பாவும் அண்ணனும் நடத்துறாங்கனு சொல்லுவார்… நானும் அதை நம்புனேன்… ஆனா பாகி சொல்லுறது வேற மாதிரி இருக்கு… மாமாவுக்கும் தேசிகனுக்கும் தெரியாம அவங்க ஆபிசுக்கு வர்ற கிளையண்டை சைடுல மீட் பண்ணி பணம் சம்பாதிக்கிறார்னு அவ சொன்னதும் என்னால நம்பவே முடியல அஞ்சு… அந்த மனுசன் பேச்சை நம்புனது தப்போனு முதல் தடவை எனக்குச் சந்தேகம் வருது” என்றார் குழப்பம் நிறைந்த குரலில்.

அஞ்சனாதேவிக்குத் தங்கை கணவரின் சுயரூபம் தெரிந்த அதிர்ச்சியோடு பணியாளர்களைக் கூட கௌரவமாய் நடத்தும் தந்தை மற்றும் சகோதரன் மீது அரிஞ்சயன் சுமத்திய பழி எரிச்சலை உண்டாக்கியது. அருணுக்கும் இது பெரிய அதிர்ச்சியே!

இருவரும் சேர்ந்து அந்தச் சுயநலம் பிடித்தவரைப் பற்றி யோசிக்காதீர்கள் எனக் கூறி ஜெகத்ரட்சகனைச் சமாதானம் செய்து உறங்க அனுப்பினர்.

அவரும் குழப்பத்துடனே உறங்க சென்றவர் இடையிடையே துர்ச்சொப்பனம் வந்ததில் உறக்கம் தொலைத்தார். யாருக்கோ எதுவோ நேரப் போகிறது என்ற உள்மனதின் அறிவிப்பு அவரது உறக்கத்தை தூர துரத்தி விட்டது.

சரியான தூக்கமின்றி சிவந்த விழிகளுடனே மறுநாள் விழித்தவர் வழக்கம் போல மனைவி மகனுடன் இயல்பாகப் பேசி காலையுணவை உண்டுவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானார்.

அருண் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட அவரும் தனது காரில் அலுவலகத்துக்குக் கிளம்பினார். அவ்வாறு செல்லும் வழியில் வழக்கமாய் வாகனங்கள் மட்டும் சர்ரென பாய்ந்தபடி இருக்கும் ஆளரவமற்ற சாலையின் ஓரத்தில் மக்கள் கூட்டத்தைக் கண்டதும் துணுக்குற்று உள்மனதின் உந்துதலால் காரை ஓரம் கட்டினார்.

காரிலிருந்து இறங்கும் போதே “பாவம்… சின்னப்பொண்ணுங்க…. நிறைய இரத்தம் போயிருக்கு போல… ஆம்புலன்ஸ் இன்னும் வரலயே” என்று சுற்றியிருந்தவர்களின் பரிதாபக்குரல் அவர் நெஞ்சை பிசைய கூட்டத்தை விலக்கி என்னவென ஜெகத்ரட்சகன் பார்த்த போது அங்கே சாந்திவனத்தில் நிற்கும் ரெனால்ட் க்விட் தலை கீழாய் கிடந்தது.

அதன் அருகே உடைந்த கண்ணாடிகளும் உறைந்த உதிரமும் கலந்து கிடக்க உள்ளே இருந்து சிரமத்துடன் பாகீரதியின் உதிரம் வழியும் உடலை எடுத்துக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

அதைப் பார்த்து அதிர்ந்தவருக்கு உச்சபட்ச அதிர்ச்சியாய் அங்கே ஓரமாய் இரத்தக்காயங்களுடன் கிடத்தப்பட்டிருந்த பவானி பார்வைக்குக் கிடைத்தாள்.

இரு பெண்களையும் இந்தக் கோலத்தில் கண்டவர் அதிர்ச்சியில் அவர்கள் அருகே ஓட ஆம்புலன்ஸ் வரும் சத்தமும் கேட்டது. அங்கே இருந்தவர்களிடம் இருவரும் தனது மகள்கள் என்று சொல்லி அவர்கள் துணையுடன் பெண்களை ஆம்புலன்சில் ஏற்றியவர் ஆம்புலன்ஸ் முன்னே செல்ல வலியில் துடிக்கும் இதயத்துடன் காரில் அதைத் தொடர்ந்தார். என்றோ ஒரு நாள் அருணிடம் வைராக்கியத்துடன் “செத்தாலும் ஜெகத்ரட்சன் இந்த விசயத்துல இறங்கி வர மாட்டான்” என சபதம் செய்தது நினைவில் வரவும் “ஆண்டவா என் பொண்ணுக்கும் பாகிக்கும் எதுவும் ஆகாம காப்பாத்துப்பா” என்று மனதுக்குள் இறைவனிடம் இறைஞ்சியவாறு காரைச் செலுத்தினார் ஜெகத்ரட்சகன்.

தொடரும்💘💘💘