💘கண்மணி 26💘

சாந்திவனம்

பவானியின் முகத்தில் ஆயிரம் வாட்ச் பல்ப் எரிந்தது. முழுவதும் கோபம் போகாவிட்டாலும் தந்தை தன்னை வெறுக்காமல் சாதாரணமாய் பேசியதில் அவளுக்கு இன்று மனம் நிறைந்துவிட்டது.

கூடவே வானதி வேறு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வீடியோவையும் கட்செவியஞ்சலில் அனுப்பி வைத்திருந்தாள். அதில் தந்தையின் முகத்தில் தெரிந்த தெளிவும் மகிழ்ச்சியும் அவளை உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது.

பேத்தியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும் அவள் காட்டிய புகைப்படங்களையும் பார்த்த பின்னர் சுவாமிநாதனுக்கும் அன்னபூரணிக்கும் மீண்டும் ஒரு நம்பிக்கை துளிர்த்தது.

பேத்தியை மருமகன் மன்னித்து விட்டாரென்றால் வெகு விரைவில் அவர் மனம் மாறும் வாய்ப்பும் உள்ளது என்ற கோணத்தில் அவர்கள் சிந்தித்தனர்.

அருண் வேறு லோகநாயகியின் அன்னாசிப்பழ கேசரியைத் தந்தை புகழுவதை அவருக்குத் தெரியாது வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்துவிட அவருக்குச் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

“அண்ணனுக்கு நான் செஞ்ச கேசரினா எப்போவுமே உயிர்… ரொம்ப நாளுக்கு அப்புறமா இப்போ தானே சாப்பிடுறார்” என்று தனது நளபாகத்தின் சுவையைப் பற்றி சிலாகித்துக் கொண்டார்.

மதியவுணவுக்கான நேரம் இன்னும் ஆகவில்லையென்றாலும் அன்று சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார் ஞானதேசிகன். எப்போதும் அவருடன் வரும் சிவசங்கர் அன்று வரவில்லை.

பவானி யோசனையுடன் “நீங்க மட்டும் ஏன் தனியா வந்திருக்கிங்க மாமா? சிவா எங்க?” என்று கேட்கவும் பேத்தியின் இந்த அக்கறை சுவாமிநாதனுக்கும் அன்னபூரணிக்கும் மனதைக் குளிர வைத்தது.

ஞானதேசிகன் “இல்லடாம்மா! அவனை மீட் பண்ண கிளையண்ட் வந்திருக்காங்கனு என்னைப் போக சொல்லிட்டான்” என்றார் அவசரமாக.

அவரது அவசரம் பவானியை ஐயமுற வைத்தது. என்ன தான் வேலையென்றாலும் எப்போதுமே சிவசங்கர் தந்தையைத் தனித்து இல்லம் திரும்ப விட மாட்டான்.

அப்படி இருக்கையில் இன்று இவ்வாறு மாமனாரை எப்படி தனியாய் விட்டான் என்று யோசித்தபடியே அவருக்குக் குடிக்க தண்ணீரை எடுத்து வந்து நீட்டினாள்.

 அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பாகீரதியும் வானதியும் வீட்டுக்குத் திரும்பினர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இருவர் முகத்திலும் பிரதிபலித்தது.

வீட்டுக்குள் வந்ததும் பவானியைத் தனியே அழைத்துச் சென்றாள் பாகீரதி. வானதியும் அவர்களைத் தொடர மூவரும் மாடியின் வராண்டாவுக்குச் சென்று காற்றாட அமர்ந்தனர்.

பவானி என்னவென வினவ “இன்னைக்குப் பெரியப்பா கிட்ட என் மனசுல உள்ளத சொல்லிட்டேன்” என்று பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தாள் பாகீரதி.

இருவரும் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க மூச்சை எடுத்துவிட்டு “ஈஸ்வருக்கும் எனக்கும் செட் ஆகாதுனு  பெரியப்பா கிட்ட சொல்லிட்டேன்டி… ஆக்சுவலி இன்னைக்கு அவன் எனக்குக் கால் பண்ணுனப்போ நான் காலை கட் பண்ணிட்டேன்… பெரியப்பா அதை கவனிச்சு என்னனு கேட்டாரா, எனக்கு என்னமோ எந்த ஆம்பளைய பாத்தாலும் ஏமாத்துக்காரனை பாக்குற மாதிரியே ஃபீல் ஆகுதுனு அவர் கிட்ட சொல்லிட்டேன்… அவர் நம்ம வீட்டு ஆம்பளைங்கள பாத்துமா  உனக்கு அப்பிடி தோணுதுனு கேட்டார்… அதுக்கு மேலயும் மறைக்க முடியாதுனு அப்பாவ பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன்… பெரியப்பாக்கு அம்மாவ ரொம்ப பிடிக்கும்ல… நான் சொன்னத கேட்டதும் அவரோட முகம் மாறிப் போயிடுச்சு பவா… அவரால அப்பாவோட சுயரூபத்தை ஏத்துக்க முடியல போல” என்றாள் வருத்தமாய்.

“விடு பாகி! நீ சித்தப்பாவையும் ஈஸ்வரையும் ஒரே இடத்துல வச்சு பாக்காத.. ஈஸ்வர் சொக்கத்தங்கம் பாகி… ஏய் நதி ஈஸ்வரைப் பத்தி கொஞ்சம் சொல்லுடி” என்ற பவானி வானதியை முழங்கையால் இடிக்கவும் அவள் நண்பனின் புராணத்தை தன் வாய் வலிக்குமளவுக்கும் கேட்கும் பாகீரதியின் செவிகள் தீயும் அளவுக்கும் பாட ஆரம்பித்தாள்.

அந்தக் கதாகாலட்சேபத்துக்கு நடுவில் அதன் கதாநாயகனான ஈஸ்வரே பாகீரதியை அழைத்துவிட இருவரும் அவனிடம் அவள் மனதில் உள்ள ஐயங்களைக் கேட்டுத் தெளியுமாறு சொல்லிவிட்டு சற்று தூரம் சென்று அமர்ந்து கொண்டனர்.

பாகீரதி தயக்கத்துடன் பேச ஆரம்பித்தவள் எதற்காக ஈஸ்வரைத் தவிர்க்கிறாள் என்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.

தனது தோழி மோனிகாவுக்கும் நவீனுக்குமான காதல், அவர்களின் காதல் முறிவு, பின்னர் அவனைத் தேற்றுவதாக எண்ணி தான் அவனது காதல் வலையில் விழுந்தது, பின்னர் அவனது கேவலமான நடத்தையைக் காரணம் காட்டி அவனை விட்டு விலகியது என ஒன்று விடாமல் கூற அவன் கதை கேட்பது போல உம் கொட்டிக் கேட்டுவிட்டு “சோ வாட்?” என்றான் இலகுவாக.

“உங்களுக்குப் புரியலயா? என் மனசு இருக்குற நிலமைல என்னால எந்த டிசிசனும் இப்போதைக்கு எடுக்க முடியாது ஈஸ்வர்” என்று சொல்லவும்

“நான் ஒன்னும் நாளைக்கே கல்யாணம்னு சொல்லலயே… உனக்கும் எனக்கும் நிறைய டைம் இருக்கு பாகி… உன் மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருப்பேன்… அப்புறம் இன்னொரு விசயம்… சொன்ன மாதிரியே நான் நாளைக்கு இந்தியால இருப்பேன்” என்று முடிவாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவன் தாயாரின் வேண்டுகோளுக்காக இந்தியா வருவதாக ஒரு வாரத்துக்கு முன்னரே கூறியிருந்தான் தான். அவள் தான் அதை மறந்துவிட்டாள். அதைச் சொல்லத் தான் அவளை சில தினங்களாக போனில் அழைத்தான். அவள் தான் அவனது அழைப்பை கண்டுகொள்ளவே இல்லையே! இப்போது அவன் பேசியதைக் கேட்ட பின்னர் தான் அவளது மனமும் முன்பு போல அலை பாயாமல் அமைதியாய் இருந்தது.

அதே நேரம் கீழே ஹாலில் சளசளப்பு கேட்டது. என்ன திடீரென சத்தம் கேட்கிறதென மூன்று பெண்களும் வேகமாக கீழே வர அங்கே தலையில் சிறு கட்டுடன் அமர்ந்திருந்தான் சிவசங்கர். அவனது தலைக்காயத்தைக் கண்டதும் பவானி பதறியடித்துக் கொண்டு அவனிடம் ஓடினாள்.

“சிவா” என்ற கூவலுடன் அவனருகே அமர்ந்தவளின் கண்ணில் நீர் நிறைந்திருக்க அவனது கண்கள் அவளது முகத்தை வேகமாக அளவிட்டது.

“எனக்கு ஒன்னுமில்ல பவா… டோன்ட் க்ரை” என்று அவளைச் சமாதானம் செய்ய முனைந்தவனைத் தடுத்தவள்

“ஒன்னும் சொல்ல வேண்டாம் சிவா… டாக்டர் கிட்ட போனிங்களா? ரொம்ப வலிக்குதா?”

கேட்கும் போதே குரல் கம்மிவிட அவளது கரத்தை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்தவன் பெரியவர்களிடம் இது சின்ன விபத்து தான் என்று சொல்லி அவர்களைச் சமாதானம் செய்து முடித்தான். என்ன அவர்கள் சமாதானம் ஆவதற்கு முன்னர் அவனுக்குக் களைப்பு வந்து விட்டது!

ஞானதேசிகன் தனது பெற்றோரையும் மனைவி மற்றும் தங்கையையும் சமாதானம் செய்தவர் பவானியிடம்

“நீ இவனை ரூமுக்குக் கூட்டிட்டுப் போம்மா… நதிம்மா நீ இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடை அவங்க ரூம்ல கொண்டு போய் குடுத்துட்டு வா” என்று கட்டளையிட பவானி சிவசங்கருடன் அவர்களின் அறைக்குச் செல்ல படியேறினாள்.

அன்னபூரணியையும் சுவாமிநாதனையும் பாகீரதி அவர்களின் அறைக்கு அழைத்துச் செல்ல ஞானதேசிகன் மனைவியிடம் “அப்பா அம்மாக்கு பாகி கிட்ட சாப்பாடு குடுத்து விட்டுடு லோகா… நீயும் செண்பாவும் வாங்க… நம்ம டைனிங் டேபிள்ல சாப்பிடுறப்போ உங்களுக்கு எல்லாத்தையும் சொல்லுறேன்” என்று பொடி வைத்துப் பேசும் போதே இரு பெண்மணிகளுக்கும் வயிற்றில் ஏதோ பிசைந்தாற் போன்ற உணர்வு

இருந்தாலும் பாகீரதிக்கும் வானதிக்கும் சேர்த்தே பெரியவர்களின் அறையில் உணவை வைத்துவிட்டு டைனிங் டேபிளை அடைந்தனர். அங்கே ஞானதேசிகன் அவர்களை அமருமாறு பணித்தவர் சில மணி நேரங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் நடந்ததை கூறினார்.

அன்று அலுவலகத்தில் அவரும் சிவசங்கரும் நுழையும் போதே ரகளையாக இருந்தது. அங்கே அவர்களின் கிளையண்ட் மாதவ்வின் மாமனார் வந்திருந்தார்.

வந்தவர் ஞானதேசிகனைக் கண்டதும் எங்கே அரிஞ்சயன் என எகிற ஆரம்பித்தார். சிவசங்கருக்கும் ஞானதேசிகனுக்கும் அவர் யாரென்றே புரியவில்லை. தங்களின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே சென்றதும் அந்த மனிதர் தணிகாசலம் நடந்ததை ஒப்பிக்க ஆரம்பித்தார்.

“என் பொண்ணு ரதிய நான் எவ்ளோ அருமை பெருமையா வளத்தேன் தெரியுமா? ஆனா அவ அந்த மாதவ் தான் புருசனா வரணும்னு அடம்பிடிச்சு என்னை எதிர்த்து அவனை மேரேஜ் பண்ணுனா… அவனும் நல்லவன் மாதிரி என் சொத்து எதுவும் வேண்டாம்னு சொல்லி டிராமா போட்டு அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டான்… ஆனா என்னோட அப்பா என் பொண்ணு பேர்ல எழுதி வச்சிருந்த நிலநீச்சு, அவரோட பாரம்பரிய வீட்டைப் பாத்ததும் பணத்தாசை வந்து எனக்கு எதிரா கேஸ் போட்டான்…

அதை உங்க மகன் தான் ஏத்து நடத்துனார்… அப்போ தான் உங்க ஆபிஸ்ல உள்ள லாயர் அரிஞ்சயன் எனக்கு அறிமுகம் ஆனார்… அவர் கேசை நடத்துறது என்னோட மருமகன் தான், அவர் எந்த எவிடென்ஸ் கலெக்ட் பண்ணுனாலும் எனக்குத் தெரிஞ்சிடும்… நான் அது சம்பந்தப்பட்ட டீடெயிலை உங்களுக்குக் குடுக்குறேன்.. அதுக்குப் பதிலா எனக்கு இருபத்து அஞ்சு லட்சம் குடுங்கனு வாங்குனார்… ஆனா உருப்படியா அந்தாள் எனக்கு எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து தரல… கேசும் என் மருமகன் பக்கம் தீர்ப்பாயிடுச்சு… அந்தாள் என்னோட காசை திரும்ப தராம சுத்துறான்… உங்க கிட்ட கேக்குறதுக்கு எனக்குச் சங்கடமா தான் இருக்கு… ஆனா வேலை முடியாம எப்பிடி காசு குடுக்க முடியும்?”

அவர் சொன்னதைக் கேட்டதும் சிவசங்கருக்கும் ஞானதேசிகனுக்கும் அதிர்ச்சி! தாங்கள் சேகரித்த ஆதாரத்தைக் கொடுப்பதாக வாக்களித்து இந்த மனிதரை ஏமாற்றிய அரிஞ்சயனை பற்றி நினைக்கும் போதே இருவருக்குள்ளும் கோபாக்கினி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அத்தோடு அரிஞ்சயன் மீது இருந்த மரியாதை துடைத்தெடுத்தாற்போல காணாமல் போனது.

அதிலும் சிவாவுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அந்தத் தணிகாசலத்தைச் சமாதானம் செய்தவன் மாதவை போனில் அழைத்து தங்களின் அலுவலகத்துக்கு வரவழைத்தான்.

மாதவ் வந்த பின்னர் அவரது மாமனார் முதலில் எகிறினாலும் பின்னர் மகளின் பெயரைக் கேட்டதும் பெட்டிப்பாம்பாய் அடங்கினார். சிவசங்கர் மாதவ்விடம் அவரது பணத்தை வாங்கித் தர வேண்டியது தனது கடமையென வாக்களித்து இருவரையும் அனுப்பி வைத்தான்.

அவர்கள் சென்றதும் அவனுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. பவானி அவனிடம் சொன்ன விசயங்களை எல்லாம் மறைக்காது தந்தையிடம் கூறியவன்

“இந்த மனுசன் கிட்ட ஆல்ரெடி பணம் வாங்கியிருக்கார்… அதே நேரம் தாத்தா கிட்ட பணம் கேளுனு அத்தைய திட்டிருக்கார்… இன்னும் அவர் என்னெல்லாம் செஞ்சு வச்சிருக்காருனு தெரியலயேப்பா” என்று தலையில் கையை வைத்தபடி அமர்ந்துவிட்டான்.

ஞானதேசிகன் ஏதோ யோசனையுடன் இருந்தவர் “வெயிட் சிவா… அந்த தணிகாசலம் சொன்னத கவனிச்சியா? நீ கலெக்ட் பண்ணுற எவிடென்சை அரிஞ்சயன் அவர் கிட்ட குடுக்குறதா சொன்னார்னு அவர் சொன்னார்… இது எல்லாமே ஏற்கெனவே நடந்த மாதிரி உனக்குத் தோணலயா?” என்று கேட்க சிவசங்கர் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

“அப்பா நீங்க ட்வெல்வ் இயர்சுக்கு முன்னாடி நடந்த விசயத்தை இப்போ சொல்லுறிங்களா? பட் அது…” என்று யோசித்தவன் அந்நாளில் தாத்தாவின் அறையிலிருந்து வெளியேறிய ஜெகத்ரட்சகனை நினைத்துப் பார்த்து இல்லையென தலையை அசைத்து மறுத்தான்.

“அதுக்கு சான்சே இல்லப்பா… ஏன்னா நான் என் கண்ணால ஜெகத்ரட்சகன் தாத்தா ரூம்ல இருந்து வர்றத பாத்தேன்… நான் கண்ணால பாத்த விசயம் எப்பிடி பொய்யா இருக்கும்?” என்று குழப்பத்துடன் சொல்லி முடித்தான்.

ஞானதேசிகனோ “இல்லடா கண்ணா… அப்போவும் இதே மாதிரி ஏதோ நடந்திருக்கணும்… ஏன்னா ஜெகா அப்பாவுக்கு எதிரா இப்பிடி ஒரு காரியத்தைச் செஞ்சிருக்க மாட்டான்… அப்போவும் இதே மாதிரி தான் எவிடென்ஸ் லீக் ஆச்சு… நீ திறமையா காப்பாத்துன மாதிரி என்னாலயும் அப்பாவலயும் எவிடென்சைக் காப்பாத்த முடியலயே சிவா… இது எல்லாத்துக்கும் விடை தெரியணும்னா அதுக்கு அரிஞ்சயனே வாயைத் திறந்து நடந்ததை சொல்லணும்” என்றார் தீர்க்கமாக.

அப்போது சிவசங்கரின் உதவியாளன் அவனுக்குப் போனில் அழைத்தவன் அரிஞ்சயன் தற்போது ஹோட்டல் டெய்சியில் இருப்பதாகவும் அங்கே யாரையோ பார்க்க காத்திருப்பதாகவும் கூற சிவசங்கர் உடனே அங்கே வருவதாகச் சொல்லிவிட்டு எழுந்தான்.

“அப்பா நான் போய் அவர் அப்பிடி யாருக்காக தான் வெயிட் பண்ணுறார்னு பாத்துட்டு வர்றேன்” என கிளம்பியவன் தனக்காக காத்திராமல் வீட்டுக்குக் கிளம்பும் படி தந்தையிடம் கூறிவிட்டான்.

இந்த விசயம் மொத்தமும் ஞானதேசிகன் மூலம் தெரிந்ததும் லோகநாயகியும் செண்பகாதேவியும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர். அதிலும் செண்பகாதேவிக்குக் கணவரின் இந்தக் கயமைத்தனத்தை எண்ணி தலைகுனிவாக இருக்க கல் போல இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் அவர்.

ஆனால் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய சிவசங்கருக்கு என்னவாயிற்று, எதனால் அவன் இரத்தக்காயத்துடன் திரும்பி வந்திருக்கிறான் என்பதை இன்னும் ஞானதேசிகனோ சிவசங்கரோ யாரிடமும் சொல்லவில்லை.

தொடரும்💘💘💘