💘கண்மணி 23💘

அன்றைய சம்பவத்துக்குப் பின்னர் அரிஞ்சயனை கண்காணிக்க ஏற்பாடு செய்தான் சிவசங்கர். அவரைப் பற்றி எந்த வித எதிர்மறை எண்ணமும் இது வரை அவன் மனதில் இருந்தது இல்லை. ஆனால் பவானி சொன்ன விசயம் அவனுக்கு அவரது நடவடிக்கைகளைச் சந்தேகிக்க வைத்தது.

அவர் அடிக்கடி தனியே சென்று யாரையோ சந்திப்பதாக அவனது உதவியாளன் சொன்ன தகவலையும் மனதில் ஒரு ஓரமாகப் போட்டு வைத்துக் கொண்டான்.

அதே நேரம் பவானி செண்பகாதேவியை அரிஞ்சயன் நடத்தும் விதத்தை பாகீரதியிடம் கூறிவிட்டாள். தந்தையின் சுயரூபத்தை அவளும் தான் தெரிந்து கொள்ளட்டுமே என்று செண்பகாதேவி முன்னிலையிலேயே விசயத்தைப் போட்டு உடைத்துவிட்டாள்.

பாகீரதிக்கு அவள் சொன்ன அனைத்தும் மிகப் பெரிய அதிர்ச்சியே. தந்தை அவ்வபோது தாயாரை அதட்டுவதை அவளும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவை எல்லாம் கணவன் மனைவிக்குள் நடைபெறும் சின்ன சின்ன சண்டைகள் என நினைத்து அதில் தலையிடாமல் ஒதுங்கி விடுவாள்.

அவ்வாறு ஒதுங்கியது தவறோ என்று முதன் முதலாய் அவள் மனதில் ஒரு குற்றவுணர்ச்சி தலை தூக்கியது. தன் தந்தையின் சுடுசொற்களின் வெம்மை தாக்கி எத்தனை நாட்கள் தாயார் வாடிப் போன முகத்துடன் கழித்திருப்பார்!

அதைக் கண்டும் காணாதவளாய் ஷாப்பிங், சினிமா என்று தோழிகளுடன் காலத்தை எவ்விதக் கவலையுமின்றி நாட்களைக் கடத்தியிருக்கிறோமே என்ற குமைச்சலுடன் பவானியைத் தலை நிமிர்ந்து பார்க்க வெட்கி தலை குனிந்தாள்.

பவானி அவளைச் சமாதானம் செய்தவள் “இத்தனை நாள் கண்டுக்காம விட்டதுக்கும் சேர்த்து வச்சு இனிமே லேடி ஜேம்ஸ் பாண்டா மாறி உன்னோட டாடியோட நடவடிக்கைய வாட்ச் பண்ணு பக்கி” என்று செல்லமாய் அதட்ட அவள் முகம் தெளிந்தாள்.

சொன்னதைப் போலவே தந்தை அறியாது அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் செய்தாள். தந்தையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் புதிராகவும் சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலும் இருக்கவே அவளுக்குச் சிறிது சிறிதாக ஆண்களின் மீதிருந்த நம்பிக்கை அகலத் தொடங்கியது.

கண் எதிரில் உள்ள தந்தையின் குணமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மாறிக் கொண்டிருக்கிறது. இதில் ஈஸ்வர் என்பவன் மேற்கத்திய நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து கொண்டு தன் நினைவுடன் நாட்களைக் கழிப்பான் என்பதில் அவளுக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

ஏற்கெனவே புதிய புராஜக்டில் இணைந்திருப்பதால் தன்னால் அடிக்கடி அவளிடம் பேச முடியாது என்று ஈஸ்வர் சொல்லியிருந்தாலும் இனி அவன் பேச வேண்டிய அவசியம் எப்போதுமே இல்லை என தீர்மானித்துக் கொண்டாள் அவள்.

இந்த முடிவுகள் அனைத்தையும் தன் மனதோடு வைத்துக் கொண்டவள் பவானியிடமோ வானதியிடமோ இது குறித்து மூச்சு கூட விடவில்லை.

இவ்வாறு தந்தையின் செய்கையால் எதிர்கால வாழ்க்கை பற்றிய முடிவை அவசரமாய் எடுத்தாள் ஒருத்தி. மற்றொருத்தியோ தந்தையின் அன்பு கிட்டும் காலம் எப்போது வருமென்ற ஏக்கத்துடன் கணவனின் அருகாமை தந்த ஆறுதலையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

மூன்றாமவளோ இத்தனை நாட்கள் யாரோ ஒருவனாய் தெரிந்த அத்தை மகன் அடிக்கடி சாந்திவனத்துக்கு வருகை தந்ததில் அவனது மரியாதையான நடவடிக்கை, இலகு பேச்சு முக்கியமாக அவளை ஸ்தம்பிக்கச் செய்யும் குறும்புப் புன்னகையில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அவனைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கியிருந்தாள்.

இவ்வாறு வீட்டின் மூன்று இளம்பெண்களும் வெவ்வேறு விதமான மனநிலையுடன் உலாவ பெரியவர்களோ அவர்களின் எதிர்காலம் பற்றி எண்ணற்றக் கனவுகளை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வருத்தம் ஜெகத்ரட்சகனின் பிடிவாதக்குணம் மட்டுமே. அதை உதறிவிட்டுப் பவானியைத் தன் மகளாக மீண்டும் ஏற்றுக்கொண்டு இந்த வீட்டோடு தனது உறவை அவர் என்று ஏற்படுத்திக் கொள்வார் என காத்திருந்தனர் பெரியவர்கள் அனைவரும்.

அவ்வாறு இருக்கையில் ஜெகத்ரட்சகனின் பிறந்தநாளுக்கு ஒரு வாரம் இருக்கும் போதே பவானி முகம் சுணங்கி காணப்பட்டாள். கருத்துவேறுபாடுகள் தீர்ந்து ஓரளவுக்கு இயல்பான கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் நல்ல நண்பர்களாக இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்த வைத்து சில நாட்கள் ஆன நிலையில் மனைவியின் இந்த திடீர் முகவாட்டம் சிவசங்கரை வருத்தியது.

என்னவென விசாரித்தவனிடம் தந்தையின் பிறந்தநாள் வருகிறது என்று சொன்னாள் பவானி. சிவசங்கர் அதற்கு என்ன என்பது போல தோளை அலட்சியமாகக் குலுக்கவும்

“நான் ஜாப்கு போக ஆரம்பிச்சதுல இருந்து எல்லா வருசமும் நான் வாங்கிக் குடுக்குற டிரஸ்சை தான் அப்பா பர்த்டேக்கு போட்டுப்பார் தெரியுமா? ஆனா இந்த வருசம் என்னால எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லி கண் கலங்க அமர்ந்திருந்தாள் அவள்.

சிவசங்கர் அவளை அழுத்தமாகப் பார்த்தபடியே “யெஸ்.. நீ எதுவும் செய்ய முடியாது… என்னைக் கேட்டா நீ எதுவும் செய்யாம இருக்கிறது உனக்கும் நல்லது; அவருக்கும் நல்லது… ஏன்னா நீ எதாச்சும் பண்ணப் போய் அவரோட கோவத்தை இன்னும் அதிகப்படுத்திட்டனா ரொம்ப கஷ்டம் பவா…. அதுவுமில்லாம நீ பிறந்தநாளுக்கு விஷ் பண்ணுனா கூட மிஸ்டர் ஜெகத்ரட்சகன் உன்னை அவமானப்படுத்த தான் செய்வார்… சோ தேடிப் போய் அவமானப்படுறத விட அமைதியா இரு” என்று சொல்லிவிட்டான்.

பவானி அப்போதைக்குத் தலையாட்டி வைத்தாலும் அவளால் தான் வாங்கிக் கொடுக்கும் ஆடையைப் போட்டுவிட்டு “பவாகுட்டி அப்பாக்கு இந்த டிரஸ் எப்பிடி இருக்கும்மா?” என்று கேட்கும் தந்தையின் முகம் அவ்வபோது கண்ணுக்குள் வந்து செல்ல சோகமாய் வளைய வந்தாள் அவள்.

அவளது இந்த சோக முகத்தைப் பார்க்க சகிக்காத சிவசங்கர் ஒரு நாள் அருணை வீட்டுக்கு அழைத்தான். அன்று வார விடுமுறை என்பதால் வானதியும் வீட்டில் இருக்க இளையவர்கள் மட்டும் மாடி வராண்டாவில் வட்டமேஜை மாநாடு போட்டனர்.

அருண் தங்கையின் முகம் வாடியிருப்பதைக் கண்டுவிட்டு “எதுவும் பிரச்சனையா பவா? என் உன்னோட ஃபேஸ் டல்லா இருக்கு?” என்றவன் உடனே சிவசங்கரைக் கேள்வியாய் நோக்க

“அதுக்கு ஏன் என்னை லுக் விடுற மேன்? உன் தங்கச்சியோட இந்த சோகமுகத்துக்குக் காரணம் உன் டாடி தான்… மீதி விசயத்த அவ கிட்டயே கேட்டுக்கோ” என்று முடித்தான் சிவசங்கர்.

வானதியும் பாகீரதியும் தங்கள் அனைவருக்கும் குடிக்க பழச்சாறு எடுத்து வந்தவர்கள் மூவருக்கும் நீட்டிவிட்டுத் தாங்களும் ஆளுக்கொரு தம்ளருடன் அமர்ந்தனர்.

பவானி பழச்சாறை அருந்தியபடியே “அப்பாக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே வருதுல்லண்ணா… ஆனா என்னால அவருக்கு கிப்ட் எதுவும் வாங்கிக் குடுக்க முடியாதுல்ல… அவருக்குத் தான் இப்போ என்னைப் பிடிக்காம போயிடுச்சே” என்றவள் கண்ணீரை மறைக்கும் விதமாய் குனிந்து கொண்டாள்.

அருண் தங்கையின் முகத்தை நிமிர்த்தியவன் “இதுக்கு ஏன் இவ்ளோ வருத்தப்படுற? நீ எப்போ இருந்து இப்பிடி சின்ன விசயத்துக்குலாம் அழ ஆரம்பிச்ச பவா? என்னைப் பாரு… நீ அப்பாக்கு என்ன கிப்ட் குடுக்கணும்னு ஆசைப்படுறியோ அத என் கிட்ட… ப்ச்.. அது சரியா வராது… ஹான்… நதி கிட்ட குடுத்து விடு… நதியும் பாகியும் பர்த்டே அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட கிப்டை குடுத்துடுவாங்க” என்று சொல்லவும் முகம் தெளிந்தாள் பவானி.

வானதியும் “குட் ஐடியா… நீ மாமாவுக்கு என்ன கிப்ட் குடுக்கணும்னு ஆசைப்படுறியோ அத வாங்கி என் கிட்ட குடுடி… நானும் பாகியும் அத குடுத்துடுறோம்… இதுக்குப் போய் என்ன அழுகை? பாரு… உன் ஆத்துக்காரர் உன்னோட அழுமூஞ்சிய பாத்து மனசுக்குள்ள ரத்தக்கண்ணீர் விடுறார்” என்று சகோதரனை இழுத்துவிட

அவனும் “யூ ஆர் ரைட் நதிம்மா… எல்லாரை மாதிரியும் என் பொண்டாட்டி அழுதாலும் சிரிச்சாலும் எனக்கு அழகி தான்னு என்னால பொய் சொல்ல முடியாது… உண்மைய சொல்லணும்னா பவாவோட ஃபேஸ் அழுறப்போ பாக்க சகிக்காது.. அதான் அவளை அழாம பாத்துக்கணும்னு இவ்ளோ பிரயாசை படுறேன்” என்று சோகமாய் சொல்ல பவானி கடுப்புடன் தன் மடியில் இருந்த குஷனை அவன் மீது வீச அதை இலாவகமாய் கேட்ச் பிடித்துக் கொண்டான் சிவசங்கர்.

“என் முகம் அழுறப்போ தான் நல்லா இல்ல… ஆனா உங்க மூஞ்சி சாதாரணமாவே நல்லா இல்ல… என்ன மூஞ்சியோ? சந்தோசமா இருந்தாலும் ஒரே ரியாக்சன், சோகமா இருந்தாலும் ஒரே ரியாக்சன்… ரோபோ மூஞ்சி” என்று கடுகடுத்தவளைக் கேலியாக நோக்கியவன்

“சந்தோசம் துக்கம் ரெண்டையும் ஈக்வலா ஹேண்டில் பண்ணத் தெரிஞ்ச மெச்சூரிட்டியான மனுசன் நானு… உன்னை மாதிரி சின்னதா ஒரு நல்லது நடந்தாலும் ஆஹா ஓஹோனு ஓவர் ரியாக்ட் பண்ண மாட்டேன்.. பெருசா கெட்டது நடந்தாலும் ஐயோ போச்சேனு அழுது கரைய மாட்டேன்” என்றான் சிவசங்கர் அமர்த்தலாக.

இவர்களின் பேச்சின் இடையில் பாகீரதியின் மொபைல் ரிங்டோன் ஒலிக்க அருண் போனை எடுக்குமாறு சொல்லவே அவள் தொடுதிரையில் வந்த பெயரைக் கவனித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

“ராங் நம்பர்ணா” என்று அவனிடம் சொன்னவளைக் கேள்வியாய் நோக்கிய அருண் அழைப்பைத் துண்டித்ததும் அவள் முகத்தில் தெரிந்த உணர்வற்றத்தன்மையைக் கவனித்துவிட்டான்.

அதைப் பற்றி வினவுவதற்குள் வானதி பேச்சை ஜெகத்ரட்சகனின் பிறந்தநாள் பரிசை பற்றியதாய் மாற்ற ஐவர் குழுவின் தற்போதைய திட்டம் அங்கே விவாதிக்கப்பட்டது.

அதாவது ஜெகத்ரட்சகனுக்கான பரிசுப்பொருளை சிவசங்கருடன் சேர்ந்து பவானி அன்று மாலை வாங்கிவிட்டால் போதும் என்றும்’ பிறந்தநாள் அன்று காலை பாகீரதியும் வானதியும் நேரே அஞ்சனாவிலாசத்துக்குச் சென்று ஜெகத்ரட்சகனை வாழ்த்திவிட்டுக் கையோடு பவானியின் பரிசை தங்களிருவரின் பரிசு என்று சொல்லி அவருக்கு அளித்துவிடுவார்கள் என்றும் திட்டமிட்டனர்.

அருண் தந்தைக்குச் சந்தேகம் வரக் கூடாது என்பதால் இந்த வாரம் முழுவதும் அடிக்கடி வானதியும் பாகீரதியும் அஞ்சனாவிலாசத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்றான். ஏனெனில் அப்போது தான் அவர்கள் பிறந்தநாளுக்குப் பரிசளித்தால் அவர் வித்தியாசமாக கருத மாட்டார் என்றான்.

சிவசங்கர் மைத்துனனின் தோளில் தட்டியவன் “உங்கப்பாவ நல்லா புரிஞ்சு வச்சிருக்க அருண்” என்று கேலியாய் பாராட்ட அதற்கு அருண் ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்து நெற்றியில் தொட்டுக் காட்டி சலாமிட்டுச் சிரிக்க வழக்கம் போல வானதிக்குத் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் மறைந்துப் போயினர்.

தானும் அவனும் மட்டும் மாடி வராண்டாவில் அமர்ந்திருப்பதாக பிரம்மையில் மூழ்கியவள் சிரிக்க அருண் அதை வினோதமாய் நோக்கிவிட்டு கண்ணைச் சுருக்கி அவளை நோட்டமிட்டான்.

அவனது கூரிய விழிவீச்சில் தடுமாறி முகம் சிவந்தவள் “எதுக்கு இப்பிடி பாக்குறிங்க?” என்று தடுமாற்றத்துடன் வினவ அவனோ ஒன்றுமில்லை என தோளைக் குலுக்கிக் கொண்டதோடு மைத்துனனுடன் தொழில் குறித்து பேச ஆரம்பித்து விட்டான்.

அவர்களின் பேச்சில் எதுவும் புரியாமல் போக பெண்கள் மட்டும் தனியே சென்றுவிட அருண் சிவசங்கரிடம் பேச ஆரம்பித்தான்.

“உனக்கு அப்பா மேல நல்ல ஒபீனியன் இல்லனு எனக்குத் தெரியும் சிவா… ஆனாலும் நீ அவரோட பொண்ணுக்காக இவ்ளோ தூரம் யோசிக்கிறது எனக்குச் சந்தோசமா இருக்குடா… இனிமே எனக்கோ அம்மாவுக்கோ பவானிய பத்தி எந்தக் கவலையும் இல்ல”

“நீ இவ்ளோ எமோசனல் ஆக இதுல ஒன்னுமே இல்ல அருண்… ஷீ இஸ் மை ஒய்ப்… அவளோட சந்தோசமும் துக்கமும் என்னையும் பாதிக்கும்… என் மேல கண்மூடித்தனமான பாசத்தை வச்சிருக்கா பவா… அவளுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லடா” என்று மனைவியைத் தூக்கி வைத்துப் பேசினான் சிவசங்கர்.

அவனது பேச்சில் நிஜமாகவே மனம் நெகிழ்ந்தான் அருண். தங்கையின் முகத்தில் சிறு சுணக்கம் வந்தாலும் சிவசங்கரின் நெற்றியில் யோசனைக்கோடுகள் விழுவதைக் கண்டவனுக்கு மனம் நிறைந்து போனது. இவ்வளவு அருமையான கணவனைத் தாங்களே தேடினாலும் பவானிக்குப் பார்த்திருக்க முடியாது.

அத்தோடு சிவசங்கர் தொழில் வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, தன் மீது சிறு கரும்புள்ளி கூட விழவிட்டது இல்லை என்பதையும் விசாரித்து அறிந்திருந்தான். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தந்தை ஏன் தனது பிடிவாதத்தை விட்டு இறங்கி வரக் கூடாது என அடிக்கடி தோண ஆரம்பித்தது அவனுக்கு.

ஆனால் இதெற்கெல்லாம் மையப்புள்ளியான ஜெகத்ரட்சகன் அவ்வளவு எளிதில் மனம் மாறிவிட மாட்டார் என்பதை அவரது மருமகனான சிவசங்கர் நன்கு அறிவான். எனவே தான் அவரைப் பற்றி அவன் பெரும்பாலும் யோசிப்பதில்லை.

இருந்தாலும் மனைவியின் வருத்தத்தை ஒரு கணவனாய் போக்கிவிட எண்ணியதால் தான் அருணையும் மற்ற இளையவர்களையும் ஒன்றாய் அழைத்து பவானியின் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினான். இப்போது தீர்வு கிடைத்து விட மனைவியின் முகம் தெளிய ஆரம்பிக்கவும் அவனும் மகிழ்ந்து போனான்.

சொன்னபடி பவானியோடு அன்று மாலை வெளியே சென்று ஜெகத்ரட்சகனுக்குப் பரிசு வாங்கவும் முடிவு செய்தான்.

தொடரும்💘💘💘