💘கண்மணி 21💘

சிவசங்கர் பேசிவிட்டுச் சென்ற விசயம் யாவும் பவானியின் மனதில் புயலை உண்டாக்க அதன் தாக்கத்தை எதிர்கொள்ள இயலாதவளாக விறுவிறுவென அறையை விட்டு வெளியேறியவள் தோட்டத்தைத் தஞ்சமடைந்தாள்.

இத்தனை நாட்கள் காதலிக்க நேரமில்லை என்று மட்டும் சொன்னவன் இன்று காதலிக்கிறேனா இல்லையா என தெரியவில்லை என்கிறான். பெரியளவில் முன்னேற்றம் ஒன்றுமில்லை. ஆனால் எப்படி அவனால் இவ்வளவு சாதாரணமாக அனைத்தையும் மறக்க முடிந்தது என யோசிக்கும் போது அவளுக்குள் எரிச்சல் மண்டியது.

அவன் பேசிய வார்த்தைகளுக்கும் அவனது செய்கைகளுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூட சிவசங்கருக்குத் தோணாதது தான் அவளது எரிச்சலுக்குக் காரணம்.

தன்னையும் தந்தையையும் ஏளனமாகப் பேசுவது கூட அவனுக்குக் கொள்கைக்கு மாறாக தாங்கள் நடப்பதால் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவனை உயிருக்கு உயிராக காதலித்தவளை என்னென்ன வார்த்தைகளைச் சொல்லி காயப்படுத்தினான் அவன்! அதற்கு கட்டாயம் அவன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் அல்லவா!

நேரடியாக அவனிடம் “நீங்க பேசுன வார்த்தை என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிடுச்சு சிவா… சோ நீங்க சாரி கேக்கலனா நமக்குள்ள என்னைக்குமே நல்ல ரிலேசன்ஷிப் உண்டாக வாய்ப்பே இல்ல” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடலாமா என்று யோசித்தவளை அவளது மனசாட்சி தான் தடுத்து நிறுத்தியது.

“அவன் பேசுன வார்த்தை உன்னை ஹர்ட் பண்ணுச்சுனு நீ சொல்லணும்னா நீ ஃபீல் பண்ணுன லவ்வ அவனும் ஃபீல் பண்ணிருக்கணும் பவா… இப்போவும் அவன் உன்னைக் காதலிக்கிறதா சொன்னானா? அவன் சொன்ன வார்த்தை எல்லாமே ஒரு சராசரி புருசன் பொண்டாட்டி கிட்ட சொல்லுற வார்த்தை தான்… இன்னைக்கு மேரேஜ்ல அப்பாவ பாத்ததும் சாருக்கு எங்க நீ மறுபடியும் உன்னோட அப்பாவுக்குச் சப்போர்ட்டா நடப்பியோனு சந்தேகம் வந்துடுச்சு போல.. அதான் அவனுக்கும் உனக்கும் இடைல யாரையும் வரவிட மாட்டேனு இவ்ளோ பிடிவாதமா சொல்லுறான்… இதுல லவ்வும் இல்ல; ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… ஒரு சராசரி ஆணோட இன்செக்யூரிட்டிக்காக நீ தேவை இல்லாம உன்னை அவன் முன்னாடி தாழ்த்திக்காத”

அதன் பின்னர் அவனது வார்த்தைகள் தன்னைக் காயப்படுத்தியதைச் சொல்ல பவானியும் விரும்பவில்லை. ஏனெனில் தன்னைக் காதலிக்காத ஒருவனிடம் அவ்வாறு சொல்லித் தானே ஏன் தனது பலகீனத்தைப் படம் போட்டு அவனுக்குக் காட்ட வேண்டுமென அனைத்தையும் மனதிலேயே போட்டுப் புதைத்துக் கொண்டாள்.

எப்போதும் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து கதை பேசும் கல் பெஞ்சில் இன்று தன்னந்தனியளாக அமர்ந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள் பவானி.

அவள் மீண்டும் பழையபடி ஆகவேண்டுமென்றால் அவளுக்கு ஜெகத்ரட்சகனின் அன்பும், சிவசங்கரின் காதலும் கட்டாயம் தேவை. ஆனால் இந்த இரண்டுமே இந்த ஜென்மத்தில் இனி அவளுக்கு வாய்க்காது என்பது தெள்ளத்தெளிவாகி விட்டது.

கிடைக்காததை பற்றி யோசிக்காதே என மனதுக்கு அறிவுரை வழங்கியபடி அமர்ந்திருந்தவளை நோக்கி வந்தார் சுவாமிநாதன். அவரது கனிவும் ஆதுரமுமான முகம் அவளது துன்பத்தைச் சற்று குறைத்தது.

அவர் அமரவும் தோளில் சாய்ந்து கொண்டவளின் சிகையை வருடிக் கொடுத்தபடியே “பவாகுட்டிக்கு இன்னைக்கு என்னாச்சு? கல்யாணவீட்டுக்குப் போயிட்டு வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லயே… ஏன்டா சிவா எதாச்சும் சொன்னானா?” என்று வினவ இல்லையென மறுத்தாள்.

“நான் இன்னைக்கு மேரேஜ் ஃபங்சன்ல அப்பாவ பாத்தேன் தாத்தா… ஆனா அவர் என்னைக் கண்டுக்கவே இல்ல… இன்னும் என் மேல கோவமா தான் இருக்கிறார் தாத்தா… ஒருவேளை லைப்லாங் என்னை மன்னிக்காமலே இருந்துடுவாரோனு பயமா இருக்கு… ஐ மிஸ் ஹிம் அ லாட்”

பேசும் போதே பவானியின் குரல் கம்மி கண்களின் கண்ணீர் சுரப்பிகள் வேலையைத் தொடங்கிவிட்டது.

சுவாமிநாதனும் மருமகனை நன்கு அறிந்தவர் தானே. பேத்தியின் முதுகில் தட்டிக் கொடுத்தவர்

“த்சு.. ஒன்னும் இல்லடா பவாகுட்டி… உங்கப்பாவுக்கு சிவா மேல கோவம்… அவனை மேரேஜ் பண்ணிக்கிட்டதால உன் மேலயும் கோவம்.. அவ்ளோ தான்… தன்னோட நம்பிக்கைய பெத்த பொண்ணு உடைக்கிறப்போ எல்லா தகப்பனுக்கும் வர்ற தார்மீக கோவம் தான் இது…

நீ அவனை மேரேஜுக்குச் சம்மதிக்க வைக்க சொன்ன வார்த்தை தான் அவனோட முழுக்கோவத்துக்கும் காரணம்டா… அவனோட சம்மதம் இல்லனா சிவாவ மேரேஜ் பண்ணிக்க மாட்டேனு சொன்னதோட வாழ்க்கை முழுக்க ஜெகத்ரட்சகனோட பொண்ணாவே வாழ்ந்துடுவேனு சொல்லிருக்க…

நீயே சொல்லு! எந்தத் தகப்பன் தன்னோட பொண்ணு கல்யாணம் ஆகாம வீட்டோட இருக்கணும்னு நினைப்பான்? வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்… ஆனா சிவாவுக்காக இவ்ளோ தூரம் தன்னை இறங்கி வர வச்ச உன் மேல அவனுக்குக் கோவம்… அதைத் தான் இப்பிடி காட்டுறான்…

கொஞ்சநாள்ல அவனே மனசு மாறிடுவான், அஞ்சு விசயத்துல நான் மாறுன மாதிரி” என்று சொல்லவும் பவானி அவரைப் புருவச்சுருக்கத்தோடு நோக்கினாள்.

“உங்களுக்கு எப்பிடி தாத்தா அம்மா மேல உள்ள கோவம் போச்சு?” என்று கேட்க அந்த முதியவர் வெள்ளையாய் சிரித்தார்.

கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடியே “எல்லாம் பேரப்பிள்ளைங்கள நினைச்சு தான்… உன்னையும் அருணையும் பாத்து பாத்து தான் மனசுக்குள்ள இருந்த கோவம் வெளியே ஓடிடுச்சு… ஒரு கொள்ளுப்பேரனோ பேத்தியோ வந்தா கண்டிப்பா ஜெகா அவங்கள பாத்து உன் மேல இருக்கிற கோவத்த வாபஸ் வாங்கிடுவான்” என்றார் சாதாரணமாக.

அவர் அவ்வாறு சொல்லவும் பவானி மூக்கைச் சுருக்கி தனது அதிருப்தியைப் பவானி காட்டிக் கொண்டிருக்கும் போதே “சூப்பர் ஐடியா தாத்தா… இதுக்குத் தான் வீட்டுல பெரியவங்க இருக்கணும்னு சொல்லுறது” என்றபடி வந்தான் சிவசங்கர்.

அவன் கடந்த சில நிமிடங்களாகச் சற்று தூரத்தில் நின்றபடி கையைக் கட்டிக்கொண்டு நின்றபடியே தாத்தாவும் பேத்தியும் உரையாடுவதை தானே கேட்டுக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் பவானி எழும்பிச் செல்ல முயல அவளருகே அமர்ந்தவன் தோளை அழுத்தி அவளையும் அமரச் செய்தான்.

“தாத்தா எனக்கு ஜெகத்ரட்சகன் சார் என்னை மருமகனா ஏத்துக்கிட்டே ஆகணும்னு ஒன்னும் பெரிய கனவுலாம் இல்ல… அவரோட மகளை வெறுக்காம இருந்தா அதுவே எனக்குப் போதும்… ஆனா இதுல்லாம் நடக்க வாய்ப்பு இல்ல”

சோகமாய் சொல்லி முடித்தவனை ஏன் என்று சுவாமிநாதன் கேலியாய் ஏறிட பவானியோ அவனது முந்தைய பேச்சையும் இப்போது சொன்னதையும் ஒப்பிட்டுவிட்டு எங்கே தங்களின் கருத்துவேறுபாடுகளை தாத்தாவிடம் சொல்லிவிடுவானோ என பயந்தவளாய் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

“நீங்க தானே சொன்னிங்க தாத்தா… பேரப்பிள்ளைங்களுக்காக பெரியவங்க மனசு மாறுவாங்கனு… அப்பிடி ஒரு பேரப்பிள்ளை பிறக்கணும்னா எப்பிடியும் பத்து மாசமோ ஒரு வருசமோ டைம் தேவைப்படும்… சோ உடனே அவர் மனசு மாறுறதுக்கு வாய்ப்பு இல்ல தாத்தா” என்று சொன்னதும் தான் பவானிக்கு மூச்சே வந்தது.

சுவாமிநாதன் பேரனின் தோளைத் தட்டிக் கொடுத்தவர் “எல்லாத்தயும் ஈசன் பாத்துப்பான்… அவன் மனசு வச்சா நடக்காததுனு எதுவும் இல்ல… பவாகுட்டியும் நீயும் வாழ்க்கைல ஒன்னு சேரணும்னு நானும் பூரணியும் வச்ச வேண்டுதலை எப்பிடி நிறைவேத்துனானோ அதே மாதிரி ஜெகாவும் அஞ்சுவும் பழைய படி நம்ம வீட்டு மனுசங்களோட ஒன்னு சேருற நல்ல காரியத்தையும் அவனே நடத்தி வைப்பான்” என்றார் நம்பிக்கையுடன்.

அவரது பேச்சு கொடுத்த நம்பிக்கையுடனே சிவசங்கர் பவானியின் குடும்பவாழ்க்கையின் நாட்கள் நகர்ந்தது. முன்பு போல அவளை எள்ளி நகையாடாமல் ரசனையுடன் பார்க்கும் அவனது மாற்றம் அவளுக்குள் தடுமாற்றத்தை உண்டாக்கியது என்னவோ உண்மை.

சிவசங்கர் தனது மனைவியின் காதலைப் பெற விரும்பினானேயன்றி அவளுக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கும் என்பதைச் சிந்திக்கவில்லை. முடிந்தவரை அவளுடன் ஏட்டிக்குப் போட்டி பேசி நெருக்கமாக உணரவைத்தான்.

அடிக்கடி பெரியவர்களின் பேச்சில் ‘பேரன்’ ‘பேத்தி’ என்ற வார்த்தை வரும் போது அவளை நோக்கிப் புருவம் உயர்த்தி அவளின் கண்டனப்பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டான்.

தனிமையில் அவளின் கோபச்சீற்றத்தைப் பொறுத்துக் கொள்வதோடு “நீ கோவப்பட்டா செம அழகு பவா… இதுக்காகவே உன்னை அடிக்கடி ஆங்ரி மோடுக்குக் கொண்டு போகணும்னு தோணுது” என்று சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான்.

பவானி அவனது சீண்டல்களுக்குப் பதிலடி கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் அவனது திடீர் அணைப்புகளும் நெற்றியில் இடப்படும் முத்தங்களும் அவளை மெதுமெதுவாய் அவளது பிடிவாதத்திலிருந்து இறங்க செய்துவிடுமோ என்ற பயந்தாள்.

அவன் மீதான காதல் இன்னும் மனதில் மிச்சம் இருப்பதாலோ என்னவோ அவனது அணைப்பில் அடிக்கடி நெகிழ்ந்து விடுவாள். எல்லாம் சில வினாடி நெகிழ்ச்சி மட்டுமே. அதன் பின்னர் சுதாரிப்பவளின் விழிகள் வீசும் கத்திகளை சிவசங்கர் தாங்கிக் கொள்வான்.

இவ்வாறு கணவனின் அருகாமையை ஒரு புது மனைவியாய் அனுபவிக்கவும் முடியாமல், தன் மனதிலுள்ளதை அவனிடம் தெரிவிக்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் தவிப்புடன் கழித்தாள் பவானி.

அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் பாகீரதியைத் தேடி செண்பகாதேவியின் அறைக்குச் சென்றவளுக்கு அங்கே சித்தியிடம் சித்தப்பா எரிந்து விழும் குரல் காதில் விழுந்தது.

“ஒன்னுக்கும் உதவாத உன்னைக் கல்யாணம் பண்ணி நான் எவ்ளோ பெரிய தியாகம் பண்ணிருக்கேன்டி… எனக்காக உங்கப்பா கிட்ட பேசிப் பாத்து இருபத்தஞ்சு லட்சம் வாங்கித் தர மாட்டியா? சரியான அசமந்தம் பிடிச்சவ… உன் மூஞ்சிய பாத்தா அன்னைக்கு நாள் உருப்பட்ட மாதிரி தான்”

இந்த வார்த்தைகளைக் கேட்டவளுக்கு வந்த கோபத்தில் விருட்டென்று அறைக்குள் அடியெடுத்து வைக்க அவளைக் கண்டு அதிர்ந்தனர் செண்பகாதேவியும் அரிஞ்சயனும்.

“பவாகுட்டி நீ இங்க என்ன பண்ணுற?” என்ற சித்தியைக் கையமர்த்தியவள் நேரே அரிஞ்சயனிடம் வந்தாள்.

கையைக் கட்டிக் கொண்டு அவரை நேருக்கு நேராகப் பார்த்தபடியே “எங்க சித்திய மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி நீங்க ஏதோ தேர்ட் ரேட்டட் மேன்சன்ல வாடகை குடுக்க வழியில்லாம ஒவ்வொரு லாயர் ஆபிசா ஏறி இறங்கி வேலை தேடுனிங்கனு அத்தைப்பாட்டி ஒரு தடவை சொன்னாங்க…

அவங்களுக்காக தான் தாத்தா எங்க சித்தியை உங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சாங்கனு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு… எங்க சித்திய கல்யாணம் பண்ணுனதால தான் இந்த வீட்டுல வாழுறதுக்கு, சொசைட்டில உங்களுக்குனு ஒரு அடையாளத்த உண்டாக்குறதுக்கு, இவ்ளோ ஏன் மூனு வேளை சாப்பாட்டுக்கு உங்களுக்கு வழி பிறந்துச்சுனு எங்கம்மா சொல்லுவாங்க…

இவ்ளோவுக்கும் காரணமா இருக்குற சித்தி உங்க பார்வைக்கு ஒன்னுக்கும் உதவாதவங்களா தெரியுறாங்களோ? என்ன சொன்னிங்க தாத்தா கிட்ட பேசணுமா? எதுக்கு உங்களுக்குக்காக தாத்தா கிட்ட சித்தி பேசணும்?

இத்தனை வயசாகியும் மாமனார் காசுக்கு ஆசைப்படுற டிபிக்கல் ஆம்பளை புத்தி இருக்குற உங்கள போய் எப்பிடி எங்க சித்திக்குத் தாத்தா மேரேஜ் பண்ணி வச்சார்?” என்று சாட்டையாய் வார்த்தைகளைச் சுழற்றினாள்.

செண்பகாதேவி அவளை அமைதிப்படுத்த முயல “விடுங்க சித்தி… உங்கள மாதிரி பொண்டாட்டிங்க இருக்கிறதால தான் இவரை மாதிரி ஆம்பிளைங்க மாமனார் வீட்டுப் பணத்துக்குப் பேயா அலையுறாங்க.. இவ்ளோ வயசாகுது… உழைச்சு வாழ என்ன கேடு? மாசாமாசம் லா கன்சர்ன்ல கிடைக்குற சேலரிய என்ன பண்ணுறார் இவர்?” என்று அவள் எகிறியதில் அவரும் கப்சிப்பானார்.

இந்த விசயத்தில் பவானி அஞ்சனாதேவியைப் போல. அவளுக்கு அவ்வளவு எளிதில் கோபம் வராது. ஆனால் வந்துவிட்டால் அவள் எதிரே யாரும் நிற்க முடியாது.

அரிஞ்சயன் இத்தனை நாட்கள் மனைவியை யாரும் அறியாதவண்ணம் அதட்டி உருட்டி தனது காலடியில் வைத்திருந்தது எல்லாம் இவளுக்குத் தெரிந்துவிட்டதே என விக்கித்துப் போய் நின்றார்.

செண்பகாதேவி பவானியைச் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் சாந்தமானவள் அரிஞ்சயனிடம்

“இனிமே எங்க சித்தி கிட்ட வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுறது, வாடி போடினு மரியாதை இல்லாம வேலைக்காரி மாதிரி டிரீட் பண்ணுறது, எங்க ஃபேமிலிய மட்டம் தட்டுறது, மாமனார் காசுல சொகுசா வாழ பிளான் போடுறதுலாம் நடக்காது மிஸ்டர் அரிஞ்சயன்… சித்தி சொல்லுறதால நான் தாத்தா கிட்ட உங்கள பத்தி சொல்லாம விடுறேன்.. ஆனா இன்னொரு தடவை இதே மாதிரி எதாச்சும் நடந்துச்சுனா ஜென்மத்துக்கும் இந்த சாந்திவனத்துல நுழைய முடியாதபடி தாத்தா கிட்ட சொல்லி ஒரேயடியா உங்களை பேக் பண்ணி வெளிய அனுப்பிடுவேன்” என்று மிரட்டிவிட்டு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டாள். அவள் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது அரிஞ்சயனுக்கு. இப்போதைக்கு பவானி தன்னைப் பற்றி புகார் செய்ய மாட்டாள் என்பதில் சிறு நிம்மதி உண்டானது. ஆனால் தனக்கு இப்போது இருக்கும் பணத்தேவைக்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார் அரிஞ்சயன்.

தொடரும்💘💘💘