💘கண்மணி 19💘

பவானியின் வாழ்க்கை சாந்திவனத்தில் எவ்வித குறைவுமின்றி இனிமையாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்பான தோழிகள், அரவணைக்கும் தாத்தா பாட்டி, அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் அத்தை, மாமா மற்றும் சித்தியுடன் அவளது வாழ்க்கை ஜெகஜோதியாகச் சென்றது.

அங்கே அவளுக்கு இருந்த இரு நெருடல்கள் அரிஞ்சயனும், சிவசங்கரும் மட்டும் தான்.

அரிஞ்சயனிடம் அவளுக்குச் சிறுவயதிலிருந்தே ஒட்டவில்லை. பெரியவளானதும் அவரது குத்தல் பேச்சுகளை அடையாளம் கண்டுகொண்டவளுக்கு அவருடன் இயல்பாகப் பேசிப் பழக தோணவில்லை.

சிவசங்கரைத் தான் எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று அவளுக்குப் புரியவில்லை. ஒரு சமயம் கேலியாய் பேசினால் மறு சமயம் குத்தலாய் பேசுவான். அதை அவளும் வாய் மூடிக் கேட்பதில்லை. ஆனாலும் ஒரு காலத்தில் அவனை உயிருக்குயிராய் காதலித்தவளுக்கு இருவரும் இப்படி ஒருவரையொருவர் மாறி மாறிக் காயப்படுத்திக் கொள்வதில் சற்றும் பிடித்தமில்லை.

ஏனெனில் அவனுக்கு ஒவ்வொரு முறை பதிலடி கொடுக்கும் போதும் அவள் அல்லவா காயப்படுகிறாள்!

ஆனால் ஒன்று அவர்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்குமென முன்பே அவன் சொன்ன ஆருடம் தான் பலித்துக் கொண்டிருக்கிறது என எண்ணிக் கொள்வாள் பவானி.

இப்படி இருக்கையில் ஈஸ்வர் அடிக்கடி சாந்திவனத்துக்கு வருகை தரலானான். அவனது வருகையைப் பெரும்பாலும் வீட்டிலுள்ளவர்களும் எதிர்பார்த்தனர்.

அதிலும் அன்னபூரணியோ “அந்தப் பையனோட கலகலப்பான பேச்சை கேட்டாலே மனசுக்கு தெம்பா இருக்குங்க” என்று சுவாமிநாதனிடம் சொல்ல அதை அவர் ஈஸ்வரிடம் சொல்லிவிட அன்றிலிருந்து அவனுக்கு அன்னபூரணி மிகவும் செல்லமாகிப் போனார்.

இதைக் கண்டு சிவசங்கர் பொறுமினால் “அவங்களோட ரெண்டு பேரனுக்கும் சிரிப்புனா என்னனு தெரியாது… முக்கியமா ஒரு மூட்டை மிளகாயை ஒன்னா சாப்பிட்ட மாதிரி மூஞ்சிய விரைப்பா வச்சிக்கிட்டே சுத்துனா யாருக்குத் தான் அந்த மூஞ்சிகளை பாக்க பிடிக்கும்?” என்று கேலி செய்வாள் பவானி.

அதே நேரம் ஈஸ்வர் வரும் போதெல்லாம் பாகீரதியிடம் வம்பு வளர்ப்பதை குறிக்கோளாக வைத்திருந்தான். அவள் கடுப்பில் காச்மூச்சென்று கத்துவது கூட அவன் காதுக்கு இன்னிசையாக ஒலிக்கும் போல. கேட்டு நகைத்துவிட்டு அகலுவான் அவன்.

அதே நேரம் பவானிக்கு வீட்டில் இருப்பது போர் அடிக்கவே மீண்டும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து விட்டாள். அதனால் அவளது நாளின் எட்டு மணி நேரங்கள் பரபரப்பாய் கழிந்தது. மீதமிருந்த பதினாறு மணி நேரத்தில் பாதியைத் தூக்கம் பறித்துக் கொள்ள மீதி நேரம் குடும்பத்தினருடன் சந்தோசமாய் கழித்தாள்.

அதைப் போலவே சிவசங்கரும் ஏதோ தனது அறையை யாரோ ஒருத்தியுடன் பகிர்ந்து கொண்டவனைப் போல நடந்து கொண்டானேயொழிய மனைவி என்ற கனிவோ காதலோ அவன் மனதில் தப்பித் தவறிக் கூட எட்டிப் பார்க்கவில்லை. ஒரு முறை அவளது காதல் என்ற வார்த்தையில் மதிமயங்கியது போதுமென எண்ணிக் கொண்டவன் இப்போதெல்லாம் கவனமாக நடந்து கொண்டான்.

ஆனால் கணவனும் மனைவியும் தங்களின் இந்த பிரச்சனைகள் குடும்பத்தினரை எட்டாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களின் பார்வைக்கு சிவசங்கரும் பவானியும் மனமொத்த தம்பதியினராகத் தெரிந்தனர்.

நாட்கள் இவ்வாறு கடக்க ஈஸ்வர் மீண்டும் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. சாந்திவனத்திலுள்ள பெரியவர்களிடம் விடைபெற வந்தவனைக் கண்டதும் அன்னபூரணிக்கு அழுகை வந்துவிடவே அவரைச் சமாதானம் செய்தான்.

இங்கே நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல நின்று கொண்டிருந்த பாகீரதியிடம் மெதுவான குரலில் பேசியவன் சொன்ன வார்த்தைகள் அவளை அதிர வைத்தது.

“நான் இப்போ யூ.எஸ்சுக்குப் போனா இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சுத் தான் இந்தியாவுக்கு வருவேன்… எனக்கும் உனக்கும் ஒரு வயசு வித்தியாசம் தான்… இந்த வயசுல எனக்கு மேரேஜ் பண்ணி வைங்கனு எங்கம்மா அப்பா கிட்ட நான் கேக்க முடியாதுல்ல… அவங்க பண்ணிக்கத் தான் சொல்லுறாங்க… ஆனா நான் இன்னும் லைப்ல செட்டில் ஆகலயே… சோ எனக்காக டூ இயர்ஸ் வெயிட் பண்ணுவியா பாகி?”

திகைத்துப் போய் அவனை நோக்கியவள் “இங்க பாருங்க சார்… எனக்கு யாரையும் மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இல்ல… நான்.. நான் என்ன காரியம் பண்ணிருக்கேனு உங்களுக்குத் தெரியுமா? அது தெரிஞ்சா நீங்க இப்பிடி பேச மாட்டிங்க” என்று படபடத்தாள்.

“எல்லாம் தெரியும்… நதி எல்லா விசயத்தையும் என் கிட்ட ஆல்ரெடி ஷேர் பண்ணிட்டா…  நான் உன்னை லவ் பண்ணுறத அவ கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொன்னேன் பாகி… அப்போ தான் எனக்கு அந்த விசயம் தெரிஞ்சுது… இந்தக் காலத்துல இதுல்லாம் சகஜம்.. ஒரு தடவை தப்பானவனை காதலிச்சா வாழ்க்கை முழுக்க நீ இப்பிடியே குற்றவுணர்ச்சியோட கழிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு? நல்லா யோசி… உனக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

பாகீரதியிடம் அவன் பேசுவதை லோகநாயகியும் செண்பகாதேவியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அவன் சென்றதும் வீடே அமைதியில் உறைய பாகீரதியின் மனமோ உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருந்தது.

அவன் தன்னிடம் சொன்ன அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் வானதியிடமும் பவானியிடமும் சொல்லிவிட்டாள் அவள். இருவரும் அவளுக்குத் தான் அறிவுரை சொல்லிவிட்டு அகன்றனர்.

அவள் சிவசங்கரிடம் இது குறித்து ஆலோசனை கேட்க அவனும் யோசனையுடன் தான் இருந்தான். வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்தவன் தோட்டத்தில் தாத்தாவும் பாட்டியும் அமரும் கல் பெஞ்சில் அமர்ந்திருக்க அலுவலகத்திலிருந்து திரும்பிய பவானி அவனைக் கேள்வியாய் நோக்கியபடியே வீட்டுக்குள் சென்றாள்.

முகம் கழுவி உடை மாற்றியவளுக்கு செண்பகாதேவி காபியை நீட்ட அதைப் பருகியபடியே தோட்டத்துக்கு வந்தவள் அவனிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“என்னாச்சு லாயர் சார் ரொம்ப டீப்பா யோசிக்கிறிங்க?”

“எல்லாம் உன் ஃப்ரெண்டோட திருவிளையாடலைப் பத்தி தான்… ஒரு சின்னப்பொண்ணு கிட்ட என்னென்ன வார்த்தைலாம் பேசி குழப்பிட்டுப் போயிருக்கான் அவன்?”

தனது நண்பனைக் குற்றம் சாட்டியதும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட ஆரம்பித்தாள் பவானி.

“ஏன்? அவன் அப்பிடி என்ன சொல்லிட்டான்? அவனோட லவ்வ டீசண்டா எக்ஸ்ப்ரஸ் பண்ணுனான்… பாகிய ஒன்னும் அவன் கட்டாயப்படுத்தலயே… யோசிச்சு முடிவு பண்ணுனு தானே சொல்லிருக்கான்… இதுல என்ன தப்பு இருக்கு?”

“அவ இப்போ இருக்கிற நிலமைல யார் மேலயும் குறிப்பா பசங்க மேல அவளுக்கு நம்பிக்கை வராது”

சிவசங்கர் இவ்வாறு உரைக்கவும் பவானி அவனை மேலும் கீழுமாக பார்க்க அவனோ “ஏன் இப்பிடி பாக்குற?” என்று குழப்பத்துடன் வினவினான்.

“பசங்க மேல நம்பிக்கை இல்லனு சொல்லுறிங்களே… ஆனா அவ உங்கள நம்பி விசயத்தை ஷேர் பண்ணிருக்காளே.. அப்போ நீங்க பையன் இல்லயா?”

“ஏய்… லூசு மாதிரி உளறாதடி” என்றவனின் ‘டி’யில் அவளுக்குச் சினமுண்டாக

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்… அது என்ன ‘டி’? திருப்பி நானும் ‘டா’ போட்டுப் பேச ஒரு செகண்ட் ஆகாது பாத்துக்கோங்க” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி எச்சரித்தாள்.

சிவசங்கர் சிகையைக் கோதிக் கொண்டவன் “ஓகே! சாரி ஃபார் தட் ‘டி’… எனி ஹவ் பாகிக்கு நான் அண்ணன் மாதிரி… நீ எப்பிடி அருணை நம்புவியோ அதே மாதிரி பாகி என்னை நம்புறா… இதுலாம் உனக்கு எங்க புரியப்போகுது? அப்பனை மாதிரியே ஞானசூனியம்” என்று கடைசி வார்த்தையை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“கடைசியா என்னமோ சொன்னிங்க… அது என் காதுல விழல… இட்ஸ் ஓகே! நீங்க என்ன தான் சொன்னாலும் என்னோட முழு சப்போர்ட்டும் ஈஸ்வருக்குத் தான்… பாகி தெரியாம ஒரு தடவை கேடுகெட்ட ஒருத்தனை நம்பிட்டானு வாழ்க்கை முழுக்க அவ சன்னியாசினியா வாழணும்னு என்ன அவசியம் இருக்கு? என் ஃப்ரெண்ட் அவளை மகாராணி மாதிரி பாத்துப்பான்… நம்பி பொண்ணைக் குடுங்க லாயர் சார்” என்று குத்தலாய் பேசி முடித்தவள் காலி கப்புடன் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.

அவள் சொல்வதும் சிவசங்கருக்கு நியாயமாகவே பட்டது. ஆனால் ஈஸ்வரைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் தீர விசாரித்துவிட்டு தான் பெரியவர்களிடம் இது குறித்துப் பேச வேண்டுமென முடிவு செய்தவன் எழுந்து வீட்டுக்குள் சென்றான்.

பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு வந்த லோகநாயகி மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“பாகியும் செண்பா அண்ணியும் தான் போறதா இருந்தாங்கடாம்மா… ஆனா பாகிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு… அதான் நீயும் சிவாவும் போயிட்டு வாங்கனு சொல்லுறேன்”

“ஆனா அத்தை நான் ஆபிஸ்ல லீவ் சொல்லவே இல்லயே… திடீர்னு போன் பண்ணி லீவ் சொன்னா எங்க டி.எல் என்னைக் கடிச்சு முழுங்கிடுவாரே”

பவானி கண்ணை உருட்டி பாவனையுடன் சொல்லிக் கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தவன் “அடேங்கப்பா நீ ஒர்க் பண்ணுற ஃபார்சூன் ஃபைவ் ஹன்ட்ரெட் கம்பெனில எப்பிடி லீவ் குடுப்பாங்க? நீ ஒருத்தி லீவ் எடுத்துட்டா அங்க மில்லியன் டாலர் புராஜெக்ட் அப்பிடியே நின்னுடுமே” என்று மனைவியைக் கேலி செய்ய

“நீங்க டெய்லியும் போற மன்னார் அண்ட் மன்னார் கம்பெனிக்கு எங்க கம்பெனி எவ்ளோவோ மேல்” என்று அவனுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்த பவானி உதட்டைச் சுழித்து அழகு காட்ட லோகநாயகி மகனும் மகளும் விளையாட்டாய் வாதிடுவதாக நினைத்து நகைத்தார்.

“போதும்… குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுக்காதிங்க… ரெண்டு பேரும் நாளைக்கு சுதர்சன் அண்ணா மகளோட கல்யாண முகூர்த்தத்துக்குப் போறிங்க… அவ்ளோ தான்” என்று கட்டளையிட்டுவிட சரியென தலையாட்டி வைத்தனர் இருவரும்.

சொன்னது போலவே மறுநாள் சிவசங்கர் தயாராகி ஹாலுக்கு வந்துவிட்டான். சுவாமிநாதன் பேத்தி எங்கே என வினவ அவனோ “இதோட செவன்த் டைம் ஃபேஸ்ல அடிச்ச பெயிண்டை கரெக்ட் பண்ணிட்டிருக்கா தாத்தா… அந்த பெயிண்ட் டப்பா காலியானா தான் கீழ வருவா போல” என்று சலித்துக் கொண்டான்.

ஆனால் அவன் சொன்னபடியெல்லாம் காலம் தாழ்த்தாது கீழே வந்த பவானியைக் கண்டதும் சுவாமிநாதன் புன்னகைக்க வீட்டுப்பெண்களோ “இன்னைக்கும் சுடிதாரா? ஏன் பவா ஒரு நல்ல பட்டு ஷேரிய கட்டிக்கலாமே” என்று மனத்தாங்கலாக சொல்லிவிட பவானி திருதிருவென விழித்தாள்.

பின்னர் மெதுவாக “எனக்கு ஷேரி கட்ட தெரியாது” என்றவளை நமட்டுச்சிரிப்புடன் பார்த்தான் சிவசங்கர்.

அவன் கையில் அடித்த லோகநாயகி “சும்மா சிரிச்சுக் கிண்டல் பண்ணாதடா… எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல” என்றவர் பவானியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

சில நிமிடங்களில் பார்டரில் சின்ன ஜரிகையிட்ட மாந்துளிர் வண்ணப்பட்டில் தேவதையாய் அவளைத் தயார் செய்து ஹாலுக்கு அழைத்து வந்தார்.

சிவசங்கர் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “ஓகே! மேக்கப் அண்ட் டிரஸ்சிங் எல்லாம் முடிஞ்சுதுனா இப்போவாச்சும் போகலாமா? ஏன்னா இதுக்கு மேலயும் உங்க மருமகள் அகெய்ன் பெயிண்ட் அடிக்க உக்காந்தானா அங்க மாப்பிள்ளையும் பொண்ணும் கல்யாணம் முடிச்சுட்டு ஹனிமூனே போயிடுவாங்கம்மா” என்று கிண்டலடித்தவாறே எழுந்தான்.

பவானி கண்ணைச் சுருக்கிப் பார்த்துவிட்டு அவனுடன் கிளம்பினாள். இருவரது ஜோடிப்பொருத்தத்தையும் நெட்டி முறித்த லோகநாயகி அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

காரில் அமர்ந்த பவானி சிவசங்கரிடம் “எல்லாம் சரி… பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கிப்ட் வாங்கணுமே” என்று யோசனையாக கேட்க அவனோ பின்னிருக்கையில் இருந்த வண்ணக்காகிதமும் ரிப்பனும் சுற்றிய சிறிய பெட்டிகளைக் காட்டினான்.

“பிளான் பண்ணாம எந்த வேலைலயும் நான் இறங்க மாட்டேன்” என அமர்த்தலாய் உரைத்தபடி காரைக் கிளப்பினான். செல்லும் வழியெங்கும் அவன் ப்ளூடூத்தில் யாரிடமோ சட்டப்பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் சொல்லிக் கொண்ட வர பவானி சற்று பிரமித்து தான் போனாள்.

“சரியான படிப்சா இருப்பார் போல.. எல்லா செக்சனையும் மனப்பாடமா சொல்லுறாரே… அது சரி… நம்ம கூட தான் முக்கியமான கோடிங்கை கேட்டா அழகா சொல்லுவோம்… அது மாதிரி தானே இதுவும்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

திருமண மண்டபம் வந்ததும் காரை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி உள்ளே செல்ல ஆரம்பித்தனர்.

வரவேற்புக்கு நின்று பன்னீர் தெளிக்கும் இளம்பெண்களின் பார்வை சிவசங்கரைத் தொட்டு மீள அவனோ இதைக் கவனியாதவனாய் ப்ளூடூத்தில் “செக்சன் தேர்ட்டி டூ…” என்று இன்னும் தொழில் பேச்சில் மூழ்கியிருந்தான்.

பவானிக்கு வந்த கடுப்பில் அந்த ப்ளூ டூத்தைக் கழற்றித் தலையைச் சுற்றி தூர எறிய வேண்டுமென தோண முயன்று எரிச்சலை அடக்கியவளாய் அவனது புஜத்தைச் சுரண்டினாள்.

“நீங்க பெரிய அப்பாடக்கர் லாயர் தான்… அதுக்குனு இப்போவும் ப்ளூ டூத்ல பேசி சீன் போடணுமா? அப்புறமா பேசிக்கோங்க… அந்த கேர்ள்ஸ் உங்கள தான் நோட் பண்ணுறாங்க” என்று கண்ணால் அந்தப் பெண்களைக் காட்டிப் பேச சிவசங்கரும் பேச்சை முடித்துவிட்டு ப்ளூடூத்தைச் சட்டைப்பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

புன்முறுவலுடன் “உனக்கு நான் ப்ளூடூத்ல பேசுனது பிராப்ளமா? இல்ல அந்த கேர்ள்ஸ் என்னை நோட் பண்ணுனது பிராப்ளமா?” என்று புருவம் தூக்கி அவன் வினவிய விதத்தில் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவளின் கரத்தைக் கோர்த்துக் கொண்டபடி அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

பவானி திடீரென அவன் காட்டிய அன்னியோன்யத்தில் நெகிழ்ந்தவள் சிரித்தபடி மணமேடையை நோக்கி நடைபோட்டாள். ஆனால் அருகில் வந்த பின்னர் தான் அங்கே அவளது தந்தை ஜெகத்ரட்சகன் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பதைக் கவனித்தாள்.

அவரைப் பார்த்தவளின் விழிகள் சிவசங்கரின் மீது படிய அவனோ இன்னும் புன்முறுவல் மாறாதவனாய் “உக்காரு பவா” என்று சொல்லிவிட்டு ஜெகத்ரட்சகனை கேலியாய் ஒரு பார்வை பார்த்தான்.

அவரும் அவனை வெட்டுவதைப் போல முறைக்க அவர் எதிரிலேயே மனைவியைத் தோளோடு அணைத்தபடி அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் சிவசங்கர்.

பவானியோ அப்போது தான் தந்தை மற்றும் கணவனின் பார்வை பரிமாற்றங்களைக் கவனித்தவள் இவ்வளவு நேரம் அவன் புன்முறுவல் பூத்தபடி கரம் கோர்த்து நடந்தது, இப்போது தோளோடு சேர்த்து அணைத்தபடி அமர்ந்திருப்பது எல்லாம் தந்தையை எரிச்சலூட்டுவதற்கு தானா என வேதனையுடன் நினைத்தபடியே உடல் இறுக அமர்ந்திருந்தாள்.

தொடரும்💘💘💘