💘கண்மணி 18💘

சாந்திவனம்…

மாலை நேரம் பெரியவர்கள் அவரவர் வேலையில் ஆழ்ந்துவிட தனித்து விடப்பட்ட பாகீரதியும் பவானியும் வீட்டின் முன்பக்க வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அன்னபூரணியும் சுவாமிநாதனும் அன்று பிரதோசம் என்பதால் கோவிலுக்குச் சென்றுவிட லோகநாயகியும் செண்பகாதேவியும் இரவுணவுக்கான வேலைகளில் ஆழ்ந்திருக்க இளம்பெண்கள் இருவரும் பொழுது போகாமல் கதை பேசிக் கொண்டிருந்தனர்.

“நம்ம கிச்சனுக்குப் போய் அத்தைக்கும் சித்திக்கும் குக்கிங்ல ஹெல்ப் பண்ணுவோமா பாகி?” என்ற பவானியிடம்

“நோ நோ… கிச்சன் கிங்டம் அவங்களோடது… அங்க போய் நம்ம என்ன பண்ண போறோம்?” என்று மறுத்தாள் பாகீரதி.

“நீ சொல்லுறதும் சரி தான்… எங்க வீட்டுலயும் நைட் டின்னர் அம்மா தான் சமைப்பாங்க… அப்போ ஹெல்ப் பண்ணலாம்னு போனா வெஜிடபிளை ஏன் இவ்ளோ பெருசா கட் பண்ணுற? வெங்காயத்தைச் சின்னதா கட் பண்ணுனு ஓராயிரம் குறை சொல்லுவாங்க பாகி… அதுக்கு நம்ம சும்மா இருக்கிறதே பெட்டர்” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள் பவானி.

இவர்களின் அரட்டைக்கு இடையே வானதியும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். தனது அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு வந்தவளும் அவர்களின் பேச்சில் இணைந்து கொண்டாள்.

பேச்சு ஈஸ்வரைப் பற்றியதாய் மாறும் போது பாகீரதி முகத்தைச் சுளித்தாள்.

“எங்கே இருந்துடி இப்பிடி ஒரு வானரத்தை ஃப்ரெண்டா பிடிச்சிங்க? இன்னைக்கு அவனால எனக்கு ஹார்ட் அட்டாக் மட்டும் தான் வரல” என இன்றைய சம்பவத்தையும் அவன் பேசிய விதத்தையும் கூற பவானியும் வானதியும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“நல்ல வேளை நான் தப்பிச்சேன்பா” என்று சொன்ன வானதியிடம்

“ரொம்ப சந்தோசப்படாத… நதிக்கு வீக்கெண்ட் மட்டும் தான் ஆஃப்னு கேள்விப்பட்டேன்… நான் கண்டிப்பா வருவேன்… அவளைப் பாக்காம என் மனசு என்னவோ பண்ணுதுனு அந்த வானரம் சொல்லிட்டுப் போயிருக்கு” என்றாள் பாகீரதி கேலியாக.

“அடியே எங்க ஃப்ரெண்ட் மாதிரி ஹேண்ட்சமான பையனை இந்தச் சென்னை சிட்டி முழுக்க வலை வீசி தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாதுடி பக்கி.. அவனைப் போய் வானரம்னு மனசாட்சி இல்லாம கலாய்க்கிறியே” என்று கேலி செய்து கொண்டிருந்த போதே பவானிக்கு ஈஸ்வரிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது.

“திங்கிங் ஆஃப் டெவில் அண்ட் இட்ஸ் ஹியர்” என்று அவர்களிடம் போனின் தொடுதிரையில் மின்னிய அவனது பெயரைக் காட்டி கேலியாக உரைத்த பவானி அவனுடன் பேச ஆரம்பித்தாள்.

“சொல்லுடா… என்ன விசயம்?” என்று ஆரம்பித்தவளிடம் மூச்சு விடாமல் பேச ஆரம்பித்தான் அவளது நண்பன்.

அவனது தாயார் கீறல் விழுந்த ரெக்கார்டரைப் போல அவனைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் அவன் இன்று இரவுணவை இரண்டு சப்பாத்திகளோடு முடித்துக் கொள்ளும் துயரமான முடிவுக்கு வந்துள்ளதை ஏற்ற இறக்கங்களுடன் விவரித்த அழகில் பவானி நிறுத்தாமல் நகைக்க ஆரம்பித்தாள்.

“டேய் இதுலாம் டூ மச்டா… அவ்ளோ கோவக்காரனா இருந்தா சாப்பிடாம இருடா பாப்போம்” என்று சவாலாய் மொழிந்தவளைப் போனிலேயே காய்ச்சி எடுத்தான் அவளது ஆருயிர் நண்பன்.

“சாப்பாட்டுக்கும் ரோசத்துக்கும் சம்பந்தமே இல்ல… நீ ஏன் சம்பந்தப்படுத்துற?” என்றவன் திடீரென தீவிரமான குரலில் பேச்சை மாற்ற ஆரம்பித்தான்.

“பவா நான் உன்னோட குளோஸ் ஃப்ரெண்ட் தானே… நீ மட்டும் மேரேஜ் பண்ணிட்டுக் குடியும் குடித்தனமுமா இருக்க… உன் ஃப்ரெண்ட் நானும் இன்னும் சிங்கிளா இருந்தா நல்லாவா இருக்கும்? இன்னைக்கு அம்மா பேசுன மாதிரி நாலு பேரு நாலு விதமா பேசுறதுக்குள்ள நான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”

அவன் போனில் பேசும் போதே பக்கத்தில் இருந்து அவனது தாயார் திட்டுவது பவானியின் காதில் விழுந்தது. அவரை வெறுப்பேற்றி விளையாடுகிறான் போல என எண்ணி நகைத்தவள்

“கவலைப்படாதடா… இன்னும் நாலு வருசம் வெயிட் பண்ணு.. உனக்கேத்த பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க நானாச்சு” என்றாள் பவானி அமர்த்தலாக.

“ஐயோ தெய்வமே! அப்பிடி எதையும் பண்ணிடாத… நானே அம்மா கிட்ட இருந்தாங்கனு சும்மா பீலா விட்டேன்… நானாவது மேரேஜ் பண்ணுறதாவது… என் வாழ்க்கை முழுக்க நான் சிங்கிளாவே இருக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்” என்றான் சபதமெடுப்பது போல.

“நல்ல முடிவுடா நண்பா… ஒரு பொண்ணோட வாழ்க்கை தப்பிச்சுது.. இப்பிடியே கடைசி வரைக்கும் மெயிண்டெயின் பண்ணு” என்று கேலி செய்தவளிடம் சிறிது நேரம் வளவளத்துவிட்டுப் போனை வைத்தான் ஈஸ்வர்.

அவன் வைத்ததும் அடுத்து ரேணுகா அழைக்கவே என்னவென வினவினாள் பவானி.

“சாரி பவா… புதுசா கல்யாணம் ஆனவள டிஸ்டர்ப் பண்ண ஒரு மாதிரியா தான் இருக்கு… ஆனா எனக்கு இப்போ உன்னோட சஜெசன் வேணும்டி” என்று கேட்டவள் விசயத்தைக் கூறினாள்.

தனது திருமணச்சான்றிதழ் தொலைந்து விட்டதாகச் சொன்னவள் இப்போது ஆன்சைட் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதால் திருமணச்சான்றிதழ் தேவைப்படுவதாகச் சொல்லவும் பவானி யோசனையுடன்

“ரேணு உனக்கு ஃபைவ் காப்பிஸ் குடுத்தாங்களே! எல்லாமுமா தொலைஞ்சு போச்சு?” என்று வினவ

“ஆமாடி… என் ஃபேமிலிய பாக்க போனப்போ ட்ரெயின்ல மிஸ் பண்ணிட்டேன் பவா.. இப்போ டூப்ளிகேட் அப்ளை பண்ணனும்டி… உனக்குத் தெரிஞ்ச புரோக்கர் இருக்காருல.. அவர் கிட்ட கேட்டுச் சொல்லுடி” என்றாள்.

“சரிடி… நீ ஒன்னும் ஒரி பண்ணிக்காத… அவருக்கு ஒரு டூ தவுசண்ட் ருபீஸ் பே பண்ணுனா போதும்… காரியம் பக்காவா முடிஞ்சிடும்… நம்மளே அப்ளை பண்ணுனா ப்ரோஜிசர் தெரியாம எதாச்சும் தப்பு பண்ணிடுவோம்… இல்லனா அலைய வைப்பாங்க… அதுக்கு அவருக்குக் குடுக்க வேண்டியத குடுத்துட்டா வேலை ஈசியா முடிஞ்சிடும்” என்று ஆலோசனை சொன்னவள் தன்னருகில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க கண்ணில் கூர்மையுடன் அவளை நோக்கியபடி நின்றிருந்தான் சிவசங்கர்.

அவனைக் கண்டதும் “இந்த நேரத்துல தான் இவர் வரணுமா? ஐயோ இன்னைக்கு எனக்கு லெங்தா ஒரு லெக்சர் குடுப்பாரே… பகவானே ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று மனதுக்குள் இஷ்டதெய்வம், குலதெய்வம் என ஒன்று விடாமல் அனைவரிடமும் வேண்டிக் கொண்டாள் பவானி.

அவன் எதுவும் பேசாது உள்ளே சென்றுவிட்டான். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அன்னபூரணியும் சுவாமிநாதனும் கோயிலிலிருந்து திரும்பி வந்தனர். அவர்கள் பேத்திக்கு விபூதியைப் பூசிவிட மனதுக்குள் அந்தச் சிவபெருமானிடமும் ஒரு வேண்டுதலை முன் வைத்தாள்.

இரவுணவு நேரத்திலும் அவனது பார்வை அதே கூர்மையுடன் அவளைத் தீண்ட முடிந்தவரை அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள். இரவுணவுக்குப் பின்னர் எப்போதும் தாத்தாவின் அலுவலக அறைக்குச் சென்று தந்தை, தாத்தா மற்றும் சித்தப்பாவிடம் அன்றாட அலுவல்களைப் பகிர்ந்து கொள்வது சிவசங்கரின் வழக்கம்.

எனவே அவன் வரும் முன்னர் உறங்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்று சமயோஜிதமாக யோசித்தவள் மெதுவாய் அறைக்குள் சென்று பார்க்க அங்கே படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து மடிக்கணினியில் முகம் புதைத்திருந்த கணவன் அவள் பார்வையில் பட்டுவிட்டான்.

அவன் பார்ப்பதற்கு முன்னர் அங்கிருந்து நழுவ முயன்றவள் சட்டென்று அவன் நிமிரவும் வாயிலிலேயே சிலையாய் சமைந்தாள். சிவசங்கர் அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன்

“ஏன் அங்கயே நின்னுட்டிருக்க? உள்ள வா” என்று அதட்ட அவளுக்கு அவன் கடுப்பில் இருப்பது புரிந்துவிட்டது.

தயங்கியபடியே உள்ளே வந்தவள் “நீங்க ஒர்க் பண்ணிட்டிருந்திங்களா, அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாமேனு நான் அங்கயே நின்னுட்டேன் சிவா” என்று சமாளித்தபடி தூங்க முயல பழக்கமற்ற நீண்ட டாப் அவளுக்கு உறுத்தியது.

உடனே வாட்ரோபில் இருந்து இரவுடையை எடுத்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். தான் குளித்து உடை மாற்றுவதற்குள் அவன் அலுவலக அறைக்குச் சென்றுவிடுவான் என்று வேண்டுமென்றே நேரம் கடத்தி வெளியே வந்தவளுக்கு ஏமாற்றம் தான்.

ஏனெனில் சிவசங்கர் அங்கேயே இருக்க அவன் இனி இந்த அறையை விட்டு எங்கும் செல்ல மாட்டான் என்பதற்கு அறிகுறியாய் அவர்களின் அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.

இன்று சரியான மண்டகப்படி காத்திருக்கிறது என்று யோசித்தபடியே வந்தவள் அவன் மடிக்கணினியை மூடி வைக்கவும் போருக்குத் தயாராவதைப் போல தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்.

சிவசங்கர் மடிக்கணினியைத் தனது மேஜை அறையில் வைத்துப் பூட்டியவன் “சில பேருக்கு என்ன தான் படிச்சுப் படிச்சுச் சொன்னாலும் நல்ல விசயங்கள் எதுவும் புத்தில ஏற மாட்டேங்குது… ஏன் பவா அப்பிடி?” என்று குதர்க்கமாய் கேட்க

“சில பேருக்கு எதார்த்த வாழ்க்கை புரிய மாட்டேங்குதே சிவா.. அது போல தான் இதுவும்” என்றவள் அவனது கூரியப்பார்வையில் அமைதியுற்றாள்.

“டூப்ளிகேட் மேரேஜ் சர்டிபிகேட் வாங்குறது ஒரு பெரிய விசயமே இல்ல… ஆனா அதையும் லஞ்சம் குடுத்துத் தான் செய்யணுமா?” என்று கேட்டவனை விசித்திரமாய் நோக்கினாள் அவள்.

“இது லஞ்சமில்ல… அந்தப் புரோக்கருக்குக் குடுக்கிற கமிசன் தான் சிவா” என்று தன் தரப்பை நியாயப்படுத்தினாள். ஆனால் திருமணச்சான்றிதழ் வாங்குவதற்கு கல்யாணப்பத்திரிக்கையின் பிரதி இல்லையென ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஒரே ஒரு கல்யாணப்பத்திரிக்கை மட்டும் அச்சிட்டு வாங்கி அதை திருமணப்பத்திரிக்கை என சார்பதிவாளரிடம் சமாளித்த புரோக்கரின் சாதுரியமும் நினைவுக்கு வந்தது.

ஒரு வேளை இது தவறு தானோ என்று ஒரு நொடி யோசித்தவள் பின்னர் வழக்கம் போல தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

“அந்தாளு ரிஜிஸ்ட்ரார் முன்னாடி சொல்லப் போற பொய்கு நீங்க குடுக்குற லஞ்சம் தான் அது” என்றான் சிவா பிடிவாதக்குரலில்.

பவானி அவனருகில் சென்றவள் “சாணக்கிய நீதி படிச்சிருக்கிங்களா? ரொம்ப நேரா இருக்கிற மரத்தைத் தான் வெட்டுவாங்க; அதே போல ரொம்ப நேர்மையா இருக்கிற மனுசங்க தான் பிரச்சனைல மாட்டுவாங்க” என்றாள் முடிவாக.

சிவசங்கர் படுக்கையில் அமர்ந்தவன் தனது கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்துச் சாய்ந்து கொண்டான். பின்னர் மூச்சு வாங்க நின்றவளைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்துவிட்டுப் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்.

“இசிட்? எனக்குச் சாணக்கியநீதில உடன்பாடு கிடையாது மேடம்”

“ஏன் சிவா புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்க? சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறது ஒன்னும் தப்பு இல்லயே”

“நீ சொல்லுற சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போற குணத்துக்கு என்னோட டிக்ஸ்னரில சந்தர்ப்பவாதம்னு பேர்… நான் எல்லார் கிட்டயும் வளைஞ்சு குடுத்து சந்தர்ப்பவாதியா இருக்கிறத விட திமிரு பிடிச்சவனாவே இருந்துட்டுப் போறேன்”

“இம்பாசிபிள்… தி கிரேட் சிவா அண்ட் ஹிஸ் யூஸ்லெஸ் டிக்ஸ்னரி.. ரெண்டுமே என்னைப் பொறுத்த வரைக்கும்  திருத்த முடியாத கேஸ்.. இதுக்கு மேல உங்க இஷ்டம்… எப்பிடியோ போங்க”

சலித்துப் போன குரலில் சொல்லிவிட்டுப் படுக்கையில் அமர்ந்தவளைத் தன் புறம் திருப்பியவன் “திருந்த வேண்டியது நான் இல்ல… நீ தான்.. நீ சொல்லுற ஷாட்கட்லாம் ஜெகத்ரட்சகனோட மகளா இருந்தவரைக்கும் உனக்குத் தப்பா தெரியாம இருந்திருக்கலாம் பவா… ஆனா இப்போ நீ என்னோட ஒய்ப்… சோ என்னோட பிரின்சிபிள்சை நீ கொஞ்சமாச்சும் ஃபாலோ பண்ண டிரை பண்ணு” என்று சொல்ல

அவனது கைகளைத் தன் தோளிலிருந்து எடுத்தவள் “இல்லனா நீங்க இந்தியன் தாத்தா மாதிரி பொண்டாட்டினு கூட பாக்காம பரலோகம் அனுப்பிடுவிங்களோ?” என்று நக்கலாய் கேட்க

“சேச்சே! நான் அப்பிடிலாம் பண்ண மாட்டேன்… நேரா நம்ம தாத்தா கிட்ட போய் உங்க பேத்தி வளந்த லட்சணம் இது தான் தாத்தானு சொல்லிடுவேன்” என்றவன் சொல்லட்டுமா என்பது போல புருவத்தை உயர்த்தி சைகையால் வினவ பவானி கப்சிப்பானாள்.

இவனிடம் சந்தர்ப்பவாதி என்ற பட்டம் வாங்குவதைப் பற்றி அவள் வருத்தப்படவில்லை. ஏனெனில் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கிறது. ஆனால் தாத்தா அப்படி இல்லையே!

அவர் மீது பவானி தன் உயிரையே வைத்திருந்தாள். அவர் தன்னைப் பற்றி குறைவாக நினைப்பதை அந்தப் பாசக்கார பேத்தியால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை சிவசங்கர் நன்கு அறிவான்.

எனவே பவானியின் இந்தச் சிறு சிறு தப்பெண்ணங்களை மாற்றுவதற்கு இனி தாத்தாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டபடி படுத்தான்.

பவானி தான் அவன் எங்கே தாத்தாவிடம் இதைச் சொல்லிவிடுவானோ என பயந்தவளாய் தூக்கமின்றி தவித்தாள்.

அரை குறை உறக்கத்தில் சிவசங்கரை அணைத்தவள் அவனது தோளில் முகம் புதைத்தபடி உறங்கிப் போனாள். அவளது ஸ்பரிசத்தில் உறக்கம் களைந்தவன் அவளை விலக்க கையுயர்த்தினான்.

ஆனால் கள்ளமற்ற முகத்தோடு உறங்குபவளின் தூக்கம் கெட்டுவிடுமே என யோசித்து அமைதியாய் உறங்க முயற்சித்தான்.

அவன் மனதில் காதல் இருக்கிறதோ இல்லையோ மனைவி என்பவளின் குணநலன்கள், அவளது நன்மை தீமைகள் மீது அக்கறை இருக்கிறது. அந்த அக்கறை காதலாகப் பரிணாமிக்கும் நாள் எதுவோ!