💘கண்மணி 10💘

சிவசங்கர் தனது வெள்ளைச்சட்டையின் காலர் பட்டனைப் போட்டவன் என்ன தோணியதோ தெரியவில்லை, அதைக் கழற்றிவிட்டு முழுநீளச்சட்டையை முழங்கை அளவில் மடித்துக் கொண்டான்.

சிகையைக் கோதும் போது மோதிரவிரலை அவனறியாது நோக்கிய விழிகள் எதேச்சையாக டிரஸ்சிங் டேபிளை நோக்க மூளையோ “அடேய் மோதிரத்தை அவ கையில திணிச்சு அனுப்புனதுலாம் மறந்து போச்சா?” என்று நினைவுபடுத்த அந்நாளின் நினைவில் சில நொடிகள் சிலையாய் நின்றான்.

 பின்னர் “சிவா கொஞ்சம் இங்க வாயேன்! பவாகுட்டி செலக்ட் பண்ணுன இன்விடேசன் டிசைன் உனக்குப் பிடிச்சிருக்கானு பாத்துச் சொல்லுடா” என்ற தாயாரின் அழைப்பு செவிப்பறையைத் தீண்ட வேகமாய் படிகளில் இறங்கியவன் தாயாரின் கையில் வைத்திருந்த திருமண அழைப்பிதழ் டிசைனைப் பார்த்தான்.

தங்கநிறத்தில் கடிதம் போல வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அழைப்பிதழின் இருமுனை திறப்பும் அரக்குநிறத்தில் இருக்க அதன் ஓரங்கள் பொன்னிறத்தில் பார்டரிட்டு அழகாய் கண்ணைப் பறித்தது. விழிகள் அதன் வடிவமைப்பை ரசிக்கும் போதே உதடுகள் அதைத் தேர்ந்தெடுத்தவளின் ரசனையைப் பாராட்டும் விதமாய் முணுமுணுத்து அடங்கியது.

“எனக்குப் பிடிச்சிருக்கும்மா… இதுவே ஃபைனலைஸ் பண்ணிடுங்க… அப்புறம் உங்க வருங்கால மருமகளைப் பாராட்டிப் பேசுனதுல நானும் டாடியும் ஆபிஸ் போகணுங்கிறது நியாபகம் இருக்குதா இல்ல மறந்து போயிடுச்சா? எங்களுக்கு நீங்க பரிமாறுனா தான் வயிறு நிறையும்மா” என்று சலுகையாய் கூறியபடியே அன்னையை உணவுமேஜையை நோக்கி நகர்த்திச் சென்றான்.

லோகநாயகியும் மகனுக்கு வழக்கம் போல பரிமாறியவர் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தார்.

“சிவா திடீர்னு கல்யாணம் பேசுனதால பவாகுட்டி டென்சனா இருப்பா… நீ கொஞ்சம் அவளை வெளியே ஷாப்பிங் கூட்டிட்டுப் போய் அவ கூட மனசு விட்டுப் பேசுடா… அவளும் உன்னைப் புரிஞ்சிக்க டைம் கிடைக்கும்”

சிவா சாப்பிட்டபடியே நிமிர்ந்து தாயாரை ஏறிட்டவன் “எனக்குக் கூட்டிட்டுப் போறதுல எந்தப் பிராப்ளமும் இல்லம்மா…. ஆனா உங்க வருங்கால மருமகளோட அப்பா அதுக்கு பெர்மிசன் குடுக்கணுமே” என்று கேலி விரவிய குரலில் கேட்க

“அதுல்லாம் அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டாரு… அவரு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாரே… நீ பவாவ கொஞ்சம் வெளியே கூட்டிட்டுப் போய் அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு கொஞ்சநேரம் மனசு விட்டுப் பேசி தெரிஞ்சுக்கோடா” என்றார் லோகநாயகி.

தாயின் பேச்சை ஒரேயடியாக மறுக்க விரும்பாதவன் சரியென தலையாட்டி வைத்தான். அவன் சாப்பிட்டுவிட்டு எழும்பவும் மற்றவர்கள் சாப்பிட வரவும் சரியாக இருந்தது.

சுவாமிநாதன் வழக்கமாய் தங்களுடன் சாப்பிடுபவன் இன்று சீக்கிரமாய் காலையுணவை முடித்ததை ஆச்சரியமாய் பார்க்க அவனோ

“உங்க மருமகள் அவங்க மருமகளை நான் ஷாப்பிங் கூட்டிட்டுப் போயே ஆகணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க தாத்தா… இப்போ நானே உங்க மருமகனோட வீட்டுக்குத் தனியா போகணும்… ஐ அம் ஹெல்ப்லெஸ்” என்று பரிதாபமாய் உரைக்க அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது.

அவர்களின் சிரிப்பைப் பார்த்தவன் இந்தச் சிரிப்பு என்றும் மறைந்துவிட கூடாது என எண்ணிக் கொண்டவனாய் கை அலம்பிவிட்டுத் திரும்பும் போது அரிஞ்சயனிடம் பேச்சைக் கேட்க வேண்டியதாயிற்று.

“மாமாவுக்கும் மருமகனுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… இதுல நீ ஏன்மா நம்ம சிவாவ அங்க போகச் சொன்ன? வேணும்னா பவாகுட்டிய போன் பண்ணி கூப்பிட்டா அவளே வந்துடப் போறா”

“இல்லண்ணா! அது சரியா வராது… இன்னும் கொஞ்சநாள்ல கல்யாணத்த வச்சிட்டு கல்யாணப்பொண்ண இப்பிடி தனியா வரச் சொல்லுறது நல்லா இருக்காது… சிவாவே கூட்டிட்டுப் போயிட்டு வீட்டுல டிராப் பண்ணுனா தான் அண்ணியும் தயக்கமில்லாம பவாவ அனுப்பி வைப்பாங்க”

அவர்களின் பேச்சு இப்படியே தொடர சிவசங்கர் பவானியை அழைத்துக் கொள்ள கிளம்பினான்.

அவனது கார் அஞ்சனாவிலாசத்தினுள் நுழையும் போதே ஒரு வித அலட்சியம் அவன் முகத்தில் கேட்காமல் வந்து ஒட்டிக் கொண்டது. காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு ஜெகத்ரட்சகனின் தரிசனம் தான் கிடைத்தது.

இந்த மனிதர் அலுவலகத்துக்குச் செல்லாமல் இங்கே என்ன செய்கிறார் என்று யோசித்தவனாய் ஹாலுக்குள் நுழைந்தான். கல்யாண வேலைகளைக் கவனிக்கிறேன் என்று சொன்னால் அதை நிச்சயமாக அவன் நம்பமாட்டான்.

ஏனெனில் அருண் அவர்கள் தரப்பு வேலைகள் அனைத்தையும் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தான். சற்று முன்னர் திருமணப்பத்திரிக்கை டிசைனைக் கொடுத்துவிட்டவர்கள் கூட அவர்கள் தான்.

பின்னே ஏன் இவர் இங்கே இருக்கிறார் என்ற யோசனையுடன் அவர் எதிரே நின்றான் சிவசங்கர்.

ஜெகத்ரட்சகன் அவனை நிமிர்ந்து ஏறிட்டவர் “வாங்க மருமகனே! ஏன் நிக்கிறிங்க? உக்காருங்க” என்று சோபாவைக் காட்டியவர் “விசாலாட்சிம்மா ஜில்லுனு அன்னாசி ஜூஸ் போட்டுக் கொண்டு வாங்க” என்று கட்டளையிட்டார்.

சிவசங்கருக்கு அவரது இந்த மாற்றம் ஏற்கெனவே அருண் வாயிலாகச் செவியை எட்டியிருந்தது தான். இருப்பினும் திருமணப்பேச்சுவார்த்தை ஆரம்பித்ததிலிருந்து அஞ்சனாவோ அருணோ தான் சாந்திவனத்துக்கு வருகை தந்தனரேயொழிய ஜெகத்ரட்சகனும் சரி; அவரது சீமந்த புத்திரியும் சரி, அந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

அதிலும் தன்னைக் கண்டாலே எரிச்சலுறும் மனிதர் வாய் நிறைய மருமகனே என்று அழைப்பது அவனுக்குச் சந்தோசத்துக்குப் பதிலாக சந்தேகத்தையே உண்டாக்கியது.

ஆனால் ஜெகத்ரட்சகன் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தார். சிவசங்கரை ஒரு பாசமான மாமனாராக வரவேற்றார். பழச்சாறு வந்ததும் தன் கையால் மருமகனுக்கு எடுத்துக் கொடுத்தார். மனைவியையும் மகளையும் அழைத்தவர் என்ன விசயமென வினவ சிவசங்கர் தன் அன்னையின் எண்ணத்தைக் கூற அவரும் அதை ஆமோதித்தார்.

ஆனால் பவானியோ “இப்போ எதுக்கு ஷாப்பிங் போகணும்பா? எனக்கு வேண்டியதுலாம் நான் லாஸ்ட் மன்த்தே பர்செஸ் பண்ணிட்டேன்” என்று மறுத்தாள்.

சிவசங்கரைக் காணும் போதெல்லாம் அவளுக்கு மோதிரத்தை அவளிடம் திணித்துவிட்டு அவன் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வர அவளால் அவனுடன் இயல்பாகப் பேசக் கூட இயலவில்லை.

ஆனால் அஞ்சனாவோ “ப்ச்… திடுதிடுப்புனு கல்யாணம்னு சொன்னதும் ரெண்டு பேருக்கும் ஒரு டென்சன் இருக்கும்… அது சரியாகணும்னா கொஞ்சம் மனசு விட்டுப் பேசணும் பவா… அடம் பிடிக்காம சிவா கூட கிளம்பு” என்று கட்டளையிட வேறு வழியின்றி உடை மாற்றிவிட்டு வந்தாள்.

வந்தவளிடம் ஜெகத்ரட்சகன் தனது கார்டை நீட்டை “இன்னைக்கு நீ பர்சேஸ் பண்ணுறது எல்லாமே அப்பாவோட செலவு தான்டா பவா” என்று சொல்ல

“தேவையில்ல! என் வருங்கால பொண்டாட்டிக்கு வேணுங்கிறதை நானே வாங்கிக் குடுத்துப்பேன்… நீ கிளம்பு பவா” என்று மறுத்தது சிவசங்கரின் குரல்.

பவானி வழக்கம் போல தந்தைக்கும் அவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்டவள் சமயோஜிதமாய் “ரெண்டு பேரும் உங்களோட கார்டை நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க… என்னோட ஷாப்பிங் செலவை நானே பாத்துக்கிறேன்” என்றவள் பர்சிலிருந்து ஏ.டி.எம் கார்டை எடுத்துக் காட்ட அஞ்சனாதேவி நிம்மதியுற இரு ஆண்களும் கப்சிப்பாயினர்.

பவானி மௌனமாய் பின் தொடர வெளியே வந்த சிவா கார்க்கதவை அவளுக்காக திறந்துவிட உள்ளே அமர்ந்தவள் வேடிக்கை பார்ப்பது போலக் காட்டிக் கொண்டாள்.

கார் கிளம்பிச் சாலையில் வேகமெடுத்தப் பின்னரும் அவளிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வராத காரணத்தால் சிவசங்கர் தானே பேச்சை ஆரம்பித்தான்.

“நார்மலா நீ எங்க ஷாப்பிங் பண்ணுவ?”

“எதுக்கு கேக்குறிங்க?”

“நீ ஷாப்பிங் பண்ணுற ப்ளேசுக்கே போகலாம்னு தான்”

அவள் வழக்கமாய் செல்லும் பல்பொருள் அங்காடியின் பெயரைச் சொல்ல காரை அங்கு நோக்கிச் செலுத்தினான் அவன்.

“பட் எனக்கு ஷாப்பிங் பண்ண வேண்டிய அவசியமே இல்ல… அதனால அங்க போனாலும் ஒன்னு தான்… போகாம இருந்தாலும் ஒன்னு தான்” என்றாள் அவள் அலட்சியத்துடன்.

“பட் அம்மா தான் உன்னை வெளியே கூட்டிட்டுப் போக சொன்னாங்க”

“ஓ! நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே! உங்க தாத்தா சொன்னாருனு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிங்க… உங்கம்மா சொன்னாங்கனு இப்போ ஷாப்பிங் கூட்டிட்டுப் போறிங்க… உங்களுக்குனு சுயபுத்தியே கிடையாதா?”

வார்த்தைகள் சற்று உஷ்ணத்துடன் வந்து விழவே சிவசங்கர் அலட்சியத்துடன்

“நீ கூட உங்கப்பா சொன்னாருனு அந்த நவீனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்ட… அப்புறமா தாத்தா சொன்னாருனு என்னை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்ட… உனக்கு ஸ்டெடி மைண்டே கிடயாதா?” என்று வேகமாக வினவ பவானி தான் வாயடைத்துப் போனாள்.

அவள் ஏன் நவீனைத் திருமணம் செய்ய சம்மதித்தாள் என்பதை அவன் அறியமாட்டான் அல்லவா! அவன் பேசிய வார்த்தைகளின் வெம்மை அவளின் கலங்கமற்ற இதயத்தில் ஊற்றாய் பொங்கிய காதலை வறண்டு போகச் செய்ததாலேயே அவள் ஜெகத்ரட்சகன் கைகாட்டிய மாப்பிள்ளைக்கு மாலையிடச் சம்மதித்தாள்.

அனைத்து பிரச்சனைக்கும் ஆதி காரணம் அவன் தானே. அப்படி இருக்க தனக்குக் கிடைத்த ‘அலைபாயும் மனதுக்குச் சொந்தக்காரி’ என்ற பட்டத்தை அவளால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கடுகடுத்த முகத்துடன் “நான் ஏன் நவீனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டேனு உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல… அண்ட் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சது என் தாத்தாவுக்காகவும் பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேரணும்கிறதுக்காகவும் மட்டும் தான்… மத்தபடி உங்க மேல காதல் கத்திரிக்கானு டயலாக் பேசுன பவானி எப்போவோ செத்துப் போயிட்டா” என்று கோபம் அடங்காத குரலில் உரைத்துவிட்டு மீண்டும் வெளிக்காட்சிகளில் கண் பதித்தாள்.

சிவசங்கர் ஒரு வார்த்தை கூட பிசகாமல் கேட்டவன்

“ரொம்ப நல்லது… எனக்கு இருக்கிற வேலைல உன்னைக் காதலிக்க எனக்கும் டைம் இல்ல… எங்க நீ பழையபடி லவ், அது இதுனு டயலாக் பேசுவியோனு பயந்துட்டேன்.. இப்போ நானும் நிம்மதியா இந்தக் கல்யாணத்துக்கு ரெடியாவேன்பா” என்று சொல்லவும் பவானிக்குள் முணுக்கென்ற வலி உண்டானது என்னவோ உண்மை! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள அவளது தன்மானம் அனுமதிக்கவில்லை.

அதே போல சிவசங்கருக்கும் உள்ளே மண்டிய எரிச்சலில் தான் வார்த்தைகளை விட்டுவிட்டான். அவன் தான் தன்னைக் காதலிப்பதாக கிட்டத்தட்ட ஆறு வருடங்களில் பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் பேசியவள் வசதியான சம்பந்தம் வந்ததும் காதலை உதறிவிட்டாள் என ஜெகத்ரட்சகனின் பேச்சை வைத்து மனதுக்குள் பவானி பற்றி வேறு விதமாய் சிந்தித்துக் கொண்டிருக்கிறானே!

அந்த ஒரு காரணம் தான் அவனையும் எதைப் பற்றியும் சிந்திக்காது வார்த்தைகளை அள்ளித் தெளிக்க வைத்தது.

இருவரும் ஒருவர் மனதிலுள்ளதை மற்றொருவர் புரிந்துகொள்ளாமலேயே அவரவர் கோணத்தில் தப்பாக சிந்தித்ததன் விளைவு தான் அவர்களின் இன்றைய கோபாவேசப்பேச்சுகள்.

சிவசங்கர் பவானி சொன்ன பல்பொருள் அங்காடி வந்ததும் காரை நிறுத்தியவன் வீட்டிலிருப்பவர்கள் கேட்பார்களே என அவளைச் சில பொருட்களை பெயருக்கு வாங்க சொல்லிவிட்டு அங்கிருந்த ஃபுட் கோர்ட் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

 போனை நோண்டியபடி நேரத்தைப் போக்கியவன் சிறிது நேரத்தில் சில பைகளுடன் திரும்பிய பவானியைக் கண்டதும் “ஓகே! ஷாப்பிங் முடிஞ்சுது தானே! இப்போ கிளம்பலாமா?” என்றபடி எழுந்திருக்க அவளோ அவனுக்கு எதிர்புற நாற்காலியில் அமர்ந்து அவனையும் அமருமாறு சைகை காட்டினாள்.

சிவசங்கர் யோசனையுடன் அமர தனது ஹேண்ட்பேக்கில் கை விட்டு எதையோ தேடி எடுத்தாள். அது வேறு ஒன்றுமல்ல! அவள் சிவசங்கருக்குப் பிறந்தநாள் பரிசாய் போட்டு விட்ட மோதிரம்.

அதைக் கண்டதும் சிவசங்கரின் விழிகள் இடுங்கவும் புன்முறுவல் பூத்தவள்

“இதை என் வருங்கால புருசன் கிட்ட குடுத்து லவ் டயலாக் பேசுனா அவரு மயங்கிடுவாருனு யாரோ கொஞ்சநாளுக்கு முன்னாடி சொன்னாங்க… ஆனா என் வாழ்க்கைல இனிமே யாரையும் காதலிக்கிற முட்டாள்தனத்தை மட்டும் நான் செய்யுறதா இல்ல… பட் நீங்க என்னோட வருங்கால கணவர்ங்கிற முறைல இதை உங்க கிட்டவே குடுக்கிறேன்” என்றவள் மோதிரத்தை அவன் உள்ளங்கையில் திணித்தாள்.

அழுத்தமான பார்வையுடன் அவனை நோக்கி “ஐ ஹேட் யூ சிவா… ஐ ஹேட் யூ அ லாட்” என்று இறுகிய குரலில் உரைத்துவிட்டு வேகமாய் எழுந்தவள் அவனை எதிர்பாராது அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

சிவசங்கர் அவள் சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்திய பாதிப்பில் உறைந்திருந்தாலும் சுதாரித்து அங்கிருந்து வெளியேறியவன் தரிப்பிடத்தில் நிறுத்திய காரை எடுத்துக்கொண்டு அவளைத் தேட வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த பவானி அவன் கண்ணில் பட்டாள்.

அவளருகே காரை நிறுத்தவும் ஏறிக்கொண்டவள் தப்பித் தவறியும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிவசங்கரும் தன்னை இவ்வளவு பேசியவளிடம் வார்த்தையாட விரும்பாமல் விட்டுவிட அஞ்சனாவிலாசம் வரை இருவரும் அமைதியுடனே வந்து சேர்ந்தனர். அவளை அங்கே இறக்கி விட்டவன் மௌனமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

தொடரும்💘💘💘