💘கண்மணி 1💘

கதிரவனின் பொற்கதிர்களின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்றைய தினம் அழற்கதிரவன் கொஞ்சம் கருணை காட்டியதால் வெயிலின் கடுமை சற்று குறைந்திருந்தது.

அந்தச் சிவாலயத்தில் உலகாளும் ஈசனுக்கும் உமையவளுக்கும் அபிசேகம் நடந்து கொண்டிருக்க கருவறைக்கு வெளியே பக்தர்கள் கூட்டத்துடன் நின்றாலும் தன் உயரத்தால் தனித்துத் தெரிந்த அந்த எழுபது வயது முதியவர் கரம் கூப்பி விழி மூடி உருக்கத்துடன் ஈசனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

வயோதிகத்திலும் கம்பீரம் மின்னும் முகத்தில் திருநீற்றுப்பட்டை ஜொலிக்க, கழுத்தில் ருத்திரனின் அம்சமான ருத்திராட்சத்தைப் பொன்பூணிட்டு அணிந்திருந்தவரின் உதடுகள் சிவ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கற்பூர கௌரம் கருணாவதாரம்

சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்

சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே

பவம் பவானி சஹிதம் நமாமி!

அவர் அருகே நின்றிருந்த முதியப்பெண்மணி பார்க்கும் போதே மங்களகரமாய் கையெடுத்துக் கும்பிடத் தோணும் கருணை தவழும் வதனத்துடன் முதுமை கொடுத்த வரமாய் கருநிறச்சிகையின் நடுவே வெள்ளிக்கம்பிகளாய் மின்னும் நரையுடன் கணவரைப் போலவே கண் மூடி நீலகண்டனிடம் மானசீகமாய் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்.

அர்ச்சகர் அவர்கள் கொடுத்திருந்த அர்ச்சனைத்தட்டுடன் வந்தவர் அந்த முதியவரிடம் புன்னகை தவழும் முகத்துடன்

“இந்தாங்கோ சுவாமிநாதன் சார்! உங்க பேரனோட பேருக்கு அர்ச்சனை பண்ணியாச்சு… இன்னைக்கு அவரோட பிறந்தநாள்னு சொல்றேளே! அவரையும் அழைச்சிண்டு வந்திருக்கலாமோன்னோ” என பல்லாண்டு பழக்கத்தால் உண்டான உரிமையுடன் கேட்க புன்னகைத்தார் சுவாமிநாதன்.

அர்ச்சகர் அவரது மனையாளிடம் திரும்பியவர் “நீங்களாச்சும் உங்க பேரனண்ட சொல்லி அழைச்சிண்டு வந்திருக்கப்படாதா அன்னபூரணி மாமி?” என்று கேட்க அவரோ

“அவன் தாத்தாவுக்குத் தப்பாத பேரனாச்சே! காத்தாலயே ஆபிசுக்குக் கிளம்பிப் போயிட்டான்… பிறந்தநாளும் அதுவுமா கோயிலுக்கு வந்துட்டுப் போடானு சொன்னா செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்லுறானே! அவனோட பேச்சுத் திறமைக்கு முன்னாடி நானும் சரி; இவரும் சரி, நிக்கவே முடியாது” என்று சொன்னவர் அர்ச்சகர் நீட்டிய அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டார்.

மீண்டும் ஈசனிடம் கோரிக்கை வைத்த அந்த வயோதிகத் தம்பதியினர் சற்று ஓய்வாய் பிரகாரத்தின் ஒரு ஓரம் அமர்ந்தனர். சிவாலயத்துக்கு வந்தவர்கள் சற்று நேரம் அமர்ந்துவிட்டுத் தானே செல்ல வேண்டும்!

அப்போது சுவாமிநாதனின் விழிகளை மூடியது ஒரு தளிர்க்கரம். ஒரு கணம் தடுமாறியவர் பின்னர் குதூகலத்துடன்

“பவாக்குட்டி தானே!  தாத்தா எப்போவும் போல உன்னைக் கண்டுபிடிச்சிட்டேனா?” என்று சொல்ல அவர் அருகில் அமர்ந்திருந்த அன்னபூரணியோ கணவரின் கண்களை மூடிய அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரியிடம் பேசலானார்.

“ஒலிம்பிக்ல ஓடி மெடல் வாங்குனவன் கூட இவ்ளோ பெருமைப்பட மாட்டான்! ஆனா உன் தாத்தாவுக்குப் பெருமையைப் பாரேன்” என்று போலியாக அலுத்துக்கொள்ள அந்தக் குறும்புக்காரி தனது கரங்களை விலக்கிவிட்டு சுவாமிநாதனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அவள் பவானி! இருபத்து நான்கு வயது இளம்பெண். சுவாமிநாதன் அன்னபூரணியின் மகள் வயிற்றுப் பேத்தி! அது மட்டும் தானோ! மற்ற உறவுகளைச் சொல்லும் அளவுக்கு இன்றைய நிலை இல்லை என்ற நிதர்சனம் இப்போது அன்னபூரணியின் முகத்தில் சுணக்கத்தை உண்டாக்கியது.

களையான வட்ட முகத்தில் குறும்பு மின்னும் விழிகளுடன் வெண்ணிற முழுநீளக்கை வைத்த சுடிதார் அணிந்து கூந்தலைப் பக்கவாட்டில் பின்னலாய் போட்டு, புருவமத்தியில் கடுகு அளவில் அழகாய் ஒரு வட்ட பொட்டும் அதன் மேலே விபூதிக்கீற்றுமாய் அமர்ந்திருந்தவளை வாஞ்சையுடன் தோளணைத்தார் சுவாமிநாதன்.

“விடு பாட்டி! தாத்தாவுக்கும் எனக்கும் எப்போவும் நடக்கிற கேம் தானே! என்ன மிஸ்டர் நாதன், பேத்தி வந்திருக்கேன்… எனக்கு எதாச்சும் வச்சிருக்கிங்களா?” என்று குறும்பாய் விளிக்க

“இந்தத் தாத்தாவோட முழு பாசமும் உனக்கு தான்டி என் ராஜாத்தி” என்று பெருமையாய் உரைத்தவரின் கன்னத்தைக் குறும்பாய் இழுத்தவள்

“அப்பிடி சொல்லுங்க தாத்தா! இந்தப் பாசத்துல உங்க பேரனுக்கோ பேத்திக்கோ, அந்தப் பக்கிக்கோ ஷேரிங் கிடையாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க” என்று அன்புக்கட்டளையிட இருவரும் பேத்தியின் உரிமையுணர்வை ரசித்தனர்.

“பேத்திகளை விடு! பேரனுக்கும் பாசத்தை ஷேர் பண்ணக் கூடாதா?” என்று பேத்தியின் குறும்புக்குப் போட்டியாய் பாட்டி கேட்க அவரது பேரனின் நினைவில் பவானியின் வதனம் ஒரு நொடி நாணச்சிவப்பில் ஜொலித்து அடங்கியது.

பின்னர் “ம்ஹூம்! அவருக்கும் சேர்த்துத் தான் இந்த டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன் எல்லாமே!” என்று அமர்த்தலாய் மொழிந்தவளின் தோளைத் தட்டியபடியே

“அதுல்லாம் சரி! நீ என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா கோயிலுக்கு வந்திருக்க?” என்று கேட்டார் அன்னபூரணி.

தனது துப்பட்டாவை நீவியபடியே “ஏன் பாட்டி உனக்குத் தெரியாதா? நான் வருசாவருசம் இந்த ஒருநாள் கோயிலுக்கு வர்றது தெரிஞ்சும் நீ இப்பிடி கேக்கிறியே? உன்னைலாம் மிஸ்டர் நாதன் எப்பிடி இத்தனை வருசம் வச்சுக் காப்பாத்துனாரோ? அவருக்கு அவார்ட் குடுக்கணும்” என்று கேலியாய் உரைத்தாள் பவானி.

சொன்னபடியே இந்த நாள் அவளுக்கு மிகவும் முக்கியமானது! அந்த நாளில் பிறந்தவனுக்கு அவளது மனதில் உள்ள இடம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இந்நாளும்!

அதை அன்னபூரணியும் அறிவார்! ஆனால் இதைச் சொல்லும் போது பேத்தியின் கண்ணில் ஜொலிக்கும் ஆர்வம் அவருக்குக் காண காண சலிக்காது.

பவானி சுவாமிநாதனிடம் “ஏன் தாத்தா அந்தக் கடமை கண்ணாயிரம் இன்னைக்குக் கூடவா ஆபிசுக்கு லீவ் போடல? அது சரி! எந்த வருசம் தான் லீவ் போட்டாரு உங்க பேரன்?” என்று சத்தமாய் சொன்னவள்

“க்கும்! இன்னைக்கு இங்க வந்திருந்தா என் கையால விபூதி வச்சு விட்டுருப்பேன்… வழக்கம் போல நான் வருவேனு தெரிஞ்சு பார்ட்டி எஸ்கேப் ஆயிடுச்சு போல” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

பவானியின் முகம் சுணங்கவும் பொறுக்காத சுவாமிநாதன் “விடுடா ராஜாத்தி! அவன் எங்க போயிருக்கான், நம்ம ஆபிசுக்குத் தானே! ஒரு எட்டு போய் பாத்துட்டு அவன் கிட்ட பேச வேண்டியத பேசிடு” என்று சொல்லவும் அவள் முகத்தில் போன ஒளி திரும்பி வந்தது.

ஆனால் அடுத்த நொடியே அது மறைய “ஆனா தாத்தா நான் அப்பா கிட்ட கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்துடுவேனு சொல்லிட்டேனே! என்னோட ஐடிகார்ட், மொபைல கூட எடுத்துட்டு வரல… அப்பா கிட்ட என்ன சொல்லுறது?” என்று விழிக்க அவளைக் காணும் போது அன்னபூரணிக்கும் சுவாமிநாதனுக்கும் மனதைப் பிசைந்தது.

அதை மறைத்தவர்களாய் அவளுக்குத் தைரியம் சொல்லி அவர்களின் பேரன் இருக்கும் அலுவலகத்துக்கு அவளை அனுப்பி வைத்தனர் இருவரும்.

அவள் சென்ற பிறகு காரில் ஏறியவர்களுக்கு மனதில் பாரம் ஏறியது. ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட பாரம் அது! அந்தப் பாரத்தின் சுமை பழுத்த இலைகளான தங்களைத் தான் மூச்சு திணற வைத்தது என்றால், சமீப காலங்களில் இளந்தளிரான அவர்களின் பேத்தியின் மீதும் அந்தச் சுமை ஏறிவிடும் போல் உள்ளதே!

இதற்கெல்லாம் விடிவுகாலத்தை அந்த ஈசன் தான் கொடுக்கவேண்டும் என மனதாற அவரை வேண்டிக்கொண்டபடி வீட்டை நோக்கி பயணித்தனர் இருவரும்.

அந்த ஈசன் யார் மூலமாய் இதையெல்லாம் நிகழ்த்தவிருக்கிறாரோ அந்த பவானி தனது ஸ்கூட்டியை அதற்குரிய தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அந்த இரண்டு மாடி கட்டிடத்தைக் கர்வத்துடன் நிமிர்ந்து நோக்கினாள்.

நாதன் அண்ட் அசோசியேட்ஸ் என்ற எழுத்துக்கள் வெள்ளியில் மின்னியது. அவளது தாத்தாவும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சுவாமிநாதன் ஆரம்பித்த நிறுவனம் அது! இப்போது அவரது மைந்தனும், மருமகனும் முக்கியப் பொறுப்பில் இருந்தனர். கடந்த மூன்று வருடங்களில் பவானி இப்போது யாரைத் தேடி வந்தாளோ அவன், தாத்தாவின் பிரியத்துக்குரிய பேரன் அந்நிறுவனத்தின் முக்கியப்புள்ளி ஆகியிருந்தான்.

அவனைப் பற்றி எண்ணும் போதே அந்தக் கொளுத்தும் வெயிலிலும் உள்ளுக்குள் இளஞ்சாரல் அடிக்கும் உணர்வு! அதே உணர்வுடன் அந்நிறுவனத்தின் வரவேற்பறைக்குள் அடியெடுத்து வைத்தவள் வரவேற்பு பெண்ணுக்குப் புன்னகையை வீசிவிட்டு வரவேற்பறையைத் தாண்டிய பகுதிக்குள் பிரவேசித்தாள்.

உள்ளே வருங்கால சட்டவல்லுனர்களும், வழக்கறிஞர்களும் பரபரப்புடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கண்ணாடித் தடுப்புகளில் அமர்ந்து வழக்குகளின் விவரங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஹாலின் சென்ட்ரல் ஏசியின் குளிர் இதமாய் உடலை வருடிக் கொடுக்க அதைத் தாண்டி சென்றவள் வழக்கம் போல மின் தூக்கியை விடுத்து படிக்கட்டுக்கள் வழியாக மேல்தளத்துக்குச் சென்றாள்.

அந்தத் தளத்தில் தான் நிறுவனருக்கும் அவரது குடும்பத்தினருக்குமான அலுவலக அறைகளும் கலந்துரையாடலுக்கென ஒரு பெரிய கான்பரன்ஸ் ஹாலும் அமைந்திருந்தது.

மேல்தளத்தில் நுழைந்தவளை அங்கே இருந்த பெண்டுலம் வைத்த கடிகாரம் வரவேற்றது. அது அங்கே இருப்பது நேரம் காட்டுவதற்கு அல்ல! சுவாமிநாதனைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு கலைப்பொருள்! அவ்வளவே!

அதில் உள்ள பொன்னிற பெண்டுலம் பவானிக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒன்று. அவளது தாத்தாவுக்குப் பிடித்த எதுவுமே அவளுக்கும் பிடித்தது தான்! கூடவே அதை ஒரு காலத்தில் வாங்கி அந்த இடத்தில் மாட்டிவைத்தவர் அவளின் தந்தை என்பதுவும் அவளுக்கு அந்தக் கடிகாரத்தின் மீதுண்டான அபிமானத்துக்கு முக்கியக் காரணம்.

அதை ரசித்தபடியே கடந்தவள் நேரே சென்று நின்ற இடம் கான்பரன்ஸ் ஹால். ஏனெனில் கீழ்த்தளத்தில் வரும் போதே பெரும்பான்மை ஊழியர்கள் அங்கே இல்லாததை நோட்டமிட்டுவிட்டாள். அவர்கள் கட்டாயம் கான்பரன்ஸ் ஹாலில் தான் இருக்க வேண்டும் என்ற அவளது ஊகம் அவளை அங்கே வர வைத்தது.

இவ்வளவு காலையில் அங்கே கலந்துரையாடல் நடைபெறுமாயின் அதற்கு காரணமானவன் ஒருவன் தான்! அவனைத் தானே அவள் தேடி வந்திருக்கிறாள்!

அந்த அறையின் கதவைத் தட்டியவள் கதவு திறக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் தானே உள்ளே சென்றுவிட்டாள். அந்த அறை இருளில் மூழ்கியிருக்க புரொஜெக்டரிலிருந்து வரும் ஒளி அங்கே இருக்கும் பெரிய திரையில் விழுந்திருக்க அதன் அருகில் வளர்ந்த ஒருவனின் வரிவடிவம் மட்டும் தெரிந்தது.

அவன் தான் அவள் தேடி வந்தவன்! வேலைநேரத்தில் யாரும் இடையிட்டால் அவனுக்குப் பிடிக்காது. பிறந்தநாளும் அதுவுமாய் அவனைக் கோபமாய் பார்க்க விரும்பாதவள் விறுவிறுவென அந்த அறைக்குள் நுழைய இருட்டில் எதிலோ இடித்துக் கொண்டு கீழே விழப் போக அதற்குள் அவளைத் தாங்கின இரு கரங்கள்.

அதோடு அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன் “லைட் ஆன் பண்ணுங்க” என்று சொல்லவும் அறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. தனது கரத்தில் சரிந்திருந்தவளை நேரே நிறுத்திவிட்டு மற்றவர்களிடம் “எல்லா விசயமும் நான் சொல்லி முடிச்சிட்டேன்… ஆல் ஆப் யூ மே கோ  பேக் டூ யுவர் சீட்” என்று அழுத்தமாய் கட்டளையிட சில நிமிடங்களில் அந்த கான்பரன்ஸ் ஹால் காலியானது.

அனைவரும் சென்ற பிறகு அவளிடம் கோபத்தைக் காட்ட முயன்றவனாய் “வாட் இஸ் திஸ் பவா? முக்கியமான விசயம் பேசிட்டிருக்கிறப்ப ஏன் இண்டர்பியர் பண்ணுற?” என்று அழுத்தமாய் கேட்க

“நான் நேத்து கால் பண்ணுனப்போ கோயிலுக்கு வருவேனு சொல்லிட்டு இன்னைக்கு வராம ஏமாத்துனதுக்கு உங்களுக்குப் பனிஷ்மெண்ட் இது தான்!” என்று சொன்னவளின் பேச்சைக் கேட்டவன் தனது சிகையைக் கோதிக் கொண்டபடி நிற்க அவனை வைத்த கண் அகற்றாமல் நோக்கினாள் பவானி.

ஆழ்ந்த குரலில் “சிவா கோவமா? ப்ளீஸ்! என்னைப் பாருங்க” என்று சொன்னவளிடம் அவனாலும் கோபப்பட இயலாது போக அவள் புறம் திரும்பினான் அந்தச் சிவா என்று அழைக்கப்பட்ட சிவசங்கர். அவளை விட நான்கு வயது மூத்தவன்.

சுவாமிநாதன் அன்னபூரணியின் மகன் வயிற்றுப் பேரன். இன்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை நாதன் அண்ட் அசோசியேட்ஸின் முக்கியப்புள்ளி அவன் தான்.

கற்றக் கல்வியும் செய்யும் வழக்கறிஞர் தொழிலும் அவனுக்குக் கொடுத்த தெளிவும் முதிர்ச்சியும் அவனது முகத்துக்கு தனி கம்பீரத்தைக் கொடுத்திருக்க வெண்ணிற ஸ்லிம் ஃபிட் முழுக்கை ஃபார்மல் சட்டையை முழங்கை வரை மடித்திருந்தவன் கருப்புநிற பேண்ட்டிலும் அதே வண்ணத்தில் பளபளத்த ஷூவிலும் நிமிர்வுடன் தனது கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டபடி அவளை ஏறிட ஆரம்பித்தான்.

இன்றைய தினம் அவனது பிறந்தநாள். அவனை நேரில் கண்டு வாழ்த்த விரும்பிய பவானி முந்தையநாள் இரவே அவனுக்கு அழைத்துச் சிவாலயத்துக்கு வரச் சொன்னாள். ஆனால் அவனது பணிச்சுமை காரணமாக அவளுக்குக் கொடுத்த வாக்கை அவனால் காப்பாற்ற இயலாது போனது.

இப்போது தன்னெதிரே தலை சரித்து கோபமா என்று கேட்டவளை நோக்கி இளநகையை வீசிவிட்டு “உன் கிட்ட யாராலயும் ரொம்ப நேரம் கோவமா இருக்க முடியாதுனு உனக்கே நல்லா தெரியும்! அப்புறம் என்ன கேள்வி மேடம்?” என்று கேட்க

அவளோ “அது எனக்கும் தெரியும்! ஆனா அட்வகேட் சிவசங்கரோட கோவத்துக்கு முன்னாடி யாருமே நிக்க முடியாதுனு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க” என்றாள் கேலியாக.

சிவசங்கர் அதற்கு இதழை வளைத்தவன் “இஸிட்? அப்பிடி சொல்லுறது யாரு உங்கப்பா தானே?” என்று நக்கலாய் கேட்க பவானியின் முகம் கூம்பிப் போனது.

“எங்கப்பாவ கிண்டல் பண்ணலனா உங்களுக்குத் தூக்கமே வராதே!”

“நோ நோ! டெய்லி ஒரு தடவையாச்சும் என்னைத் திட்டித் தீர்க்கலனா உங்கப்பாவுக்குச் சாப்பாடு டைஜெஸ்ட் ஆகாதுனு நான் கேள்விப்பட்டேனே”

வழக்கம் போல சாதாரணமாய் ஆரம்பித்த பேச்சு வந்து நின்ற இடம் சரியில்லை. இது எப்போதும் நடப்பது தான். ஆனால் முழுமையாய் அவன் பக்கம் சாயாது அவளது தந்தைப்பாசம் பவானியைக் கட்டிப் போட்டிருந்தது.

அதே தந்தைப் பாசம் தான் இப்போதும் அவன் முன்னே முகத்தைத் தூக்கியபடி நிற்க வைத்தது.

“ஓகே! அவரோட பேச்சை விடு! இப்போ மேடம் எதுக்கு வந்திங்களோ அந்த வேலையைக் கவனிங்க” என்றவனது விழிகள் ஆர்வத்துடன் ஜொலிக்க பவானி முகத்தைச் சீர் செய்து கொண்டாள்.

“கவனிச்சிட்டா போச்சு” என்று சொன்னவள் தனது பர்சிலிருந்து சிறிய நீலநிற வெல்வெட் பெட்டியை எடுத்தாள். சிவசங்கர் அதை நெற்றியைச் சுருக்கியபடி  பார்த்தபடி நிற்க அவனிடம் புன்னகை முகமாய் “ஹேப்பி பர்த் டே சிவா” என்று பிறந்தநாள் வாழ்த்து கூறினாள் பவானி.

அவன் சிரித்தமுகமாய் அவளது வாழ்த்தை ஏற்றுக்கொள்ளவும் அவனது வலக்கரத்தைப் பற்றிக் கொண்டவள் மோதிரவிரலில் தன் கையிலிருந்த பெட்டியிலிருந்து எடுத்த பிளாட்டினம் மோதிரத்தை மாட்டிவிட சிவசங்கர் திணறிப்போனான்.

“ஏய் வாட் இஸ் திஸ் பவா?”

“பாத்தா தெரியலயா? இது தான் ரிங்… இதை மோதிரம்னு தமிழ்ல சொல்லுவாங்க”

“அது தெரியுது… ஆனா இந்த ரிங்கை…” என்று இழுத்தவனை முறைத்தவள்

“இது என்னோட சேவிங்ஸ்ல இருந்து வாங்குனது தான்… எங்கப்பாவோட நயா பைசாவ கூட இந்த ரிங் வாங்க யூஸ் பண்ணல லாயர் சார்” என்று நொடித்துக் கொள்ள அவன் மறுப்பாய் தலையசைத்துப் புன்னகைத்தான்.

“நான் அதுக்குக் கேக்கல… இந்த ரிங் வாங்குனது உங்கப்பாக்குத் தெரியுமா?”

“தெரியாது சிவா… அப்பா கிட்ட நான் சொல்லல”

தலையைக் குனிந்தபடி சொன்னவளைக் காண அவனுக்கே வருத்தமாகத் தான் இருந்தது.

இப்படி அவள் தனக்கும் அவளது தந்தைக்கும் இடையே கிடந்து அல்லாடக் கூடாது என்று எண்ணித் தான் அவளிடம் கூடியமட்டும் பழகுவதைத் தவிர்த்துப் பார்த்தான் சிவசங்கர்.

ஆனால் பவானியின் அன்பும் அக்கறையும் எதிரியைக் கூட கரைத்துவிடும். அப்படி என்றால் சிவசங்கர் மட்டும் எம்மாத்திரம்!

அவளது அன்பு வெறும் மாமன் மகன் மீது முறைப்பெண் வைத்த அன்பு மட்டும் தானா என்பது தான் அவனது சமீப கால சந்தேகம். அது வெறும் அன்பு மட்டுமல்ல என்பதை அவனது கடந்த வருட பிறந்தநாளின் போதே சொல்லிவிட்டாள் பவானி!

ஆம்! பவானி அவனைக் காதலிக்கிறாள்! அதிலும் அவளது பதினெட்டாவது வயதிலிருந்து என்று கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ந்தவன் அவளுக்குச் சொன்ன அறிவுரையே

“எனக்கும் உன் அப்பாவுக்கும் ஒத்து வராது… இந்த லாயர் புரபசன்ல எனக்குனு சில எதிக்ஸ் இருக்கு… அதை கால்தூசியா நினைக்கிறவரு உங்கப்பா… உன்னோட இந்தக் காதல் உனக்குத் தேவையில்லாம கஷ்டத்தை மட்டும் தான் குடுக்கும் பவா… வீணா எங்க ரெண்டு பேருக்கும் இடைல மாட்டிக்கிட்டு நீ முழிக்க வேண்டாம்” என்பது தான்.

ஆனால் அன்றும் சரி! இன்றும் சரி! பவானி தனது காதலை விட்டுக்கொடுக்கவில்லை. கூடவே தந்தைக்காக அவனையும், அவனுக்காக தந்தையையும் விட்டுக்கொடுக்கும் எண்ணமும் அவளுக்கு இல்லை!

சிவா இருவரது கருத்துக்களும் ஒத்துப்போக இந்த ஜென்மத்தில் வாய்ப்பில்லை என்று எத்தனையோ முறை சொல்லிச் சொல்லிச் சலித்துப் போனான். ஆனால் அவள் கேட்கவே இல்லை.

இதோ அவளது காதலுக்கு வயது ஆறு! ஆனால் அவளால் காதலிக்கப்படுபவனிடம் இருந்து இன்று வரை அவளுக்குச் சம்மதம் கிடைக்கவில்லை!

இப்போதும் கூட அவள் போட்ட மோதிரத்தைத் திருப்பிப் பார்த்தவனிடம் “எஸ் ஃபார் சிவா அண்ட் பி ஃபார் பவா… சிவா வெட்ஸ் பவா… கேக்கவே செமயா இருக்குல்ல..” என்று குதூகலித்தவளிடம்

“நல்லா தான் இருக்கு… ஆனா இது நடக்கிறதுக்கான சாத்தியக்கூறு ரொம்பவே கம்மி பவா… நீ தேவையில்லாத ஆசைய உன் மனசுல வளத்துக்காத… உனக்குனு ஒருத்தன்…” என்று பேசிக்கொண்டே சென்றவனின் வாயைத் தனது கரங்களால் மூடினாள் பவானி.

“எனக்குனு ஒருத்தன் நான் பிறக்கிறதுக்கு நாலு வருசத்துக்கு முன்னாடியே எங்க அத்தையோட வயித்துல பிறந்துட்டான்… அவன் தான் என்னோட வாழ்க்கைனு நான் முடிவு பண்ணி ஆறு வருசம் ஆகுது… என்னோட இந்த முடிவை நான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன்… இன்னொரு தடவை இதே வார்த்தைய சொன்னா அப்புறம் நான் சத்தியமா சும்மா இருக்க மாட்டேன்” என்று கேலியோடு முடித்தாள்.

அவளது கரத்தை விலக்கியவன் மூச்சுவிடாது இவ்வளவு நேரம் பேசியவளைக் கனிவாய் நோக்கினான்.

பார்த்த உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் குறும்புக்கார முகவெட்டு அவளுடையது. அவளைப் போல காதல் கத்திரிக்காய் என்று சிறுபிள்ளைத்தனமாய் உளறாவிட்டாலும் அவளைச் சிவாவுக்கு மிகவும் பிடிக்கும். அதில் சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால் அவளது தந்தை என்ற பெரிய மனிதர் உள்ளாரே! அவரை நினைத்தால் தானாய் அவனது முகம் கடுகடுக்கும். வீணாய் அவள் முன்னே கடுகடு முகத்துடன் நிற்க வேண்டாமென முடிவு செய்தவன் கிளம்பத் தயாரானவளிடம்

“உன்னோட கிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பவா” என்று சொல்ல அவள் முகம் பூவாய் மலர்ந்து விகசித்தது.

சந்தோசத்தில் அவன் எதிர்பாரா வண்ணம் அவனைக் கட்டி அணைத்தவள் “தேங்க்யூ சோ மச் சிவா… ஐ லவ் யூ” என்று உரைக்க சிவசங்கர் அதிர்ந்தான்.

பின்னர் சுதாரித்தவனாய் வழக்கம் போல புன்னகை மட்டும் செய்ய உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் பவானி.

“பதிலுக்கு ஒரு தடவை ஐ லவ் யூ சொன்னா குறைஞ்சு போயிடுவிங்களோ? ரொம்ப தான் சீன் போடுறிங்க லாயர் சார்… இது நம்ம எதிர்காலத்துக்கு நல்லது இல்ல… இதுக்குலாம் நான் பின்னாடி வட்டியும் முதலுமா குடுப்பேன்… நியாபகம் வச்சுக்கோங்க” என்று மிரட்டிவிட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் நமட்டுச்சிரிப்புடன் அங்கிருந்த மேஜையில் கேட்பாரற்று கிடந்த தனது மொபைலைக் கையில் எடுத்துக் கொண்டவன் அங்கிருந்து வெளியேறி தனது அலுவலக அறையை நோக்கிச் சென்றான்.

அங்கே சென்றதும் போனில் அவனுக்கு வந்த அழைப்பில் முகம் இறுகி கையை மேஜையின் மீது குத்திக் கொண்டவனது உதடுகள் உச்சரித்த வார்த்தை “மிஸ்டர் ஜெகத்ரட்சகன்”.

அவர் வேறு யாருமல்ல! சற்று முன்னர் வந்து அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டுச் சென்ற பவானியைப் பெற்றெடுத்த தந்தை! பின்னாட்களில் அவனுக்கும் அவருக்கும் இடையே உண்டாகப் போகும் பெரும் பிரச்சனைகளுக்கு அன்றைய தினம் ஜெகத்ரட்சகனால் பிள்ளையார் சுழி போடப்பட்டிருந்தது. அப்படி பிரச்சனை வருமாயின் இவர்களில் யார் பக்கம் பவானி ஆதரவாய் நிற்பாள் என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்!

தொடரும்💘💘💘