💗அத்தியாயம் 7💗

துளசி அன்று வீடு திரும்பும் போது வெகுநேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டின் முன்னே இருக்கும் சிறுதோட்டத்தில் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சுகன்யா அவளது டாடா நானோவின் சத்தம் கேட்டதும் “மித்தி! உன் அம்மு வந்துட்டானு நினைக்கிறேன்” என்று கூற அதே போல அந்த மஞ்சள் வண்ண நானோ வீட்டின் முன்னே இருக்கும் இடத்தில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய துளசியின் முகம் சோர்ந்து போயிருக்க, சுகன்யா எதுவும் பேசாமல் தோழியின் மகளைத் தூக்கிக் கொண்டவள் துளசியுடன் வீட்டுக்குள் சென்றாள். துளசி தொப்பென்று சோபாவில் அமர மித்ரா சுகன்யாவின் கையிலிருந்து இறங்கியவள் சமையலறையை நோக்கி ஓடினாள்.

சுகன்யா தோழியிடம் “என்னாச்சு துளசி? இன்னைக்கு ஃபுல்லா நீ சரியில்லை.. எதுவும் பிரச்சனையா?” என்று ஆதுரமாய்க் கேட்க துளசி உள்ளத்தின் சோர்வு குரலில் தெரிய உச்சுக் கொட்டினாள்.

“பெருசா ஒன்னும் இல்லை சுகி.. கிருஷ்ணா தான் என்னோட பிரச்சனையே… அதான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகிறதுக்காக வியூ பாயிண்ட்டுக்குப் போயிட்டு வந்தேன்” என்றாள் துளசி.

சுகன்யா “இருட்டுற நேரம் அங்கே தனியா போகாதேனு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் துளசி?” என்று அக்கறையுடன் அதட்ட

துளசி “டோன்ட் ஒரி சுகி… பேய் பிசாசு வதந்தியால அங்கே யாரும் வர மாட்டாங்கடி… அதனால தான் அந்த இடம் இன்னும் அதோட அழகு கெடாம அப்பிடியே இருக்கு… அங்கே போனா அம்மாவோட அலைபாயுதே கண்ணா பாட்டு, அப்பாவோட துளசிக்குட்டிங்கிற அன்பான அழைப்பு, கோதை பாட்டியோட இருமல் சத்தம் இதுலாம் கேக்குற மாதிரி ஒரு எனக்கு ஒரு ஃபீல் சுகி… அதைக் கேட்டுக்கிட்டே அவங்க மூனு பேரும் இருக்கிற மாதிரி இமேஜின் பண்ணிப் பேசிட்டு வந்துடுவேன்..” என்று சொல்லிவிட்டு தோழியின் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

சுகன்யா கண்ணில் சோகத்துடன் தோழியைப் பார்க்க, அவளோ “என்னடி துளசிக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சோனு டவுட்டா? உண்மையைச் சொல்லணும்னா அங்கே போய் இப்பிடி பேசலைனா நான் பைத்தியமாயிடுவேன்டி… எல்லாத்தையும் அங்கே போய் கொட்டிட்டேன்னா மனசு தெளிஞ்ச குளம் மாதிரி ஆயிடுது” என்று கூறித் தோழியிடம் அவள் வியூ பாயிண்டுக்குச் செல்வதற்கானக் காரணத்தை எப்போதும் போல விளக்க முயல, அதற்குள் மித்ரா சமையலறையிலிருந்து திரும்பவே மகளைக் கண்டதும் புன்னகைக்க முயன்றாள் துளசி.

மித்ரா தண்ணீர் நிரம்பிய தம்ளரை துளசியிடம் நீட்டி “அம்மு தண்ணி குடிங்க” என்று கூற மகளின் கூந்தலைத் தடவிக் கொடுத்தபடி அவள் நீட்டிய தம்ளரை வாங்கிக் கொண்டாள் துளசி.

தண்ணீரைக் குடித்து முடித்தவள் மகளைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள, இப்போது மனச்சோர்வு சற்று அகன்றது போன்ற உணர்வு அவளுக்கு. எவ்வளவு பெரிய சோகம், மனவருத்தம் என்றாலும் மித்ராவின் பிரசன்னம் அதை மறக்கடித்துவிடும்.

மகளின் முன்நெற்றிக்கூந்தலை வருடியபடி அவளிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைக் கேட்கத் தொடங்கும் நேரம் அவளின் மொபைல் சிணுங்கியது. யாரென்று பார்த்தவள் சஹானாவின் பெயர் வரவே முகத்தில் இனமறியா உணர்வுடன் போனை எடுத்து “ஹலோ” என்றாள் துளசி.

சஹானா முதலில் துளசி, சுகன்யாவின் நலனை விசாரித்தவள் மறக்காமல் துளசியின் குட்டித்தேவதை என்ன செய்கிறாள் என்று கேட்க, துளசி அவள் தன் மடியில் சமத்தாக அமர்ந்திருப்பதாகக் கூறிவிட்டு என்ன விஷயம் என்று கேட்டாள்.

சஹானா தனது நிச்சயம் மற்றும் திருமண உடைகளைப் பார்த்த ராகுலின் பக்க உறவினர்களில் சில பெண்களுக்கு அதே மாதிரி பிரத்தியேக உடைகள் வேண்டும் என்று கூறியதாகச் சொல்லிவிட்டு துளசியின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

துளசிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. வழக்கமான அலங்கார வேலைகள் என்றால் வெறுமெனே உடைகளை அவர்களிடமிருந்து வாங்கி அதில் வேலைபாடுகளை மட்டும் செய்தால் போதுமானது. அதற்கு அவள் அங்கே சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் பிரத்தியேகமாக முழு உடையையும் அவர்களே வடிவமைக்க வேண்டும் என்றால் கட்டாயமாக அவள் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து கொண்டு அவர்களின் தோற்றத்திற்கேற்ப உடையை வடிவமைக்க முடியும்.

ஆனால் இதற்காகக் கோயம்புத்தூருக்கு மீண்டும் செல்ல வேண்டுமே என்ற தயக்கம் இருந்தாலும், இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மூளையின் அறிவுரைக்குச் செவி சாய்த்து, தான் நாளையே கோயம்புத்தூர் வந்து அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டாள் துளசி.

சஹானா அவள் ஒப்புக்கொண்டதில் மகிழ்ந்தவள் கடைசியாக “துளசி இட்ஸ் மை ரெக்வெஸ்ட். நீங்க வர்றப்போ உங்க டாட்டரையும் அழைச்சிட்டு வர்றிங்களா? எனக்கு ஒயிட் நூடுல்ஸ் கேட்டு அடம்பிடிச்ச அந்தக் குறும்புக்காரப் பொண்ணைப் பார்க்கணும் போல இருக்கு… ப்ளீஸ்” என்று கெஞ்சலுடன் வேண்ட

துளசி, எவ்வளவு பெரிய நிறுவனங்களைத் தனது மேற்பார்வையில் வைத்திருப்பவள், பார்வையிலேயே பணியாட்களுக்குக் கட்டளையிடுபவள் தன்னிடம் வேண்டிக் கேட்பதைக் கண்டு நெகிழ்ந்துப் போனவளாய் “ரெக்வெஸ்ட்னு பெரிய வார்த்தைலாம் சொல்லாதிங்க மேம்.. நான் கண்டிப்பா மித்தியைக் கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட சஹானா மகிழ்ச்சியுடன் அவர்களுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லி போனை வைத்தாள்.

தன் அருகில் அமர்ந்திருந்த சுகன்யாவிடம் விஷயத்தைக் கூற, அவள் யோசனையுடன் “மறுபடியும் கோயம்புத்தூருக்கு, அதுவும் அவனோட வீட்டுக்குப் போறது சரியா வருமா துளசி?” என்று துளசியிடம் கேட்க

துளசி “இவ்ளோ நாள் புலி வருது, புலி வருதுனு பயந்துட்டே இருந்து இப்போ தான் புலியை அடிக்கடி சந்திக்க வேண்டியதா இருக்கே! இதுல அவனை வீட்டுல மீட் பண்ணுனா மட்டும் என்ன பெரிய இஸ்யூ ஆகப் போகுது சுகி? சேம் டயலாக்கைப் பேசுவான். இந்தச் சில்லறைப் பிரச்சனையை மனசுல வச்சுட்டு நம்ம வேலையை கோட்டை விட்டுடக் கூடாது… நாளைக்கு நம்ம மூனு பேரும் கோயம்புத்தூர் போறோம்…” என்று முடிவாகச் சொல்லிவிட்டாள்.

சுகன்யா அரைமனதுடன் தலையாட்ட, துளசி மித்ராவிடம் “மித்திக்குட்டி! இன்னைக்கு மீனா பாட்டி கூட தூங்குவியாம்… அம்முக்கும், சுகிக்கும் நிறைய வேலை இருக்கு” என்று கூற மித்ரா சரியென்று தலையாட்டியவள் தனது பொம்மைகளில் சிலது மற்றும் மப்ளர் சகிதம் மீனாவைத் தேடிச் சென்றுவிட்டாள்.

அதன் பின் இரு தோழியரும் பொறுமையாக அமர்ந்து லேப்டாப்பில் அவர்களின் கற்பனையைத் திரட்டி டிசைன்களாக வரைய ஆரம்பித்தனர். அவ்வபோது மனதில் தோன்றுவதை அவர்கள் பேப்பரில் வரைந்து வைத்துக் கொள்வர். ஆனால் தொழில்முறைப்பேச்சுக்கு கணினி உதவியுடன் வரைந்த டிசைன்கள் தான் வசதி.

இரவு முழுவதும் கண் விழித்து வரைந்தவர்கள், உறங்கச் செல்லும் போது நேரம் நள்ளிரவு இரண்டு மணியைத் தொட்டது. காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு ஹாலிலேயே படுத்தவர்கள், அங்கே எரிந்து கொண்டிருந்த கணப்பின் வெப்பம் வெளியே அடிக்கும் குளிருக்கு இதமாக இருக்க படுத்தச் சில நிமிடங்களிலேயே உறங்கியும் விட்டனர்.

*************

காலையில் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தனர் சுகன்யாவும், துளசியும். மித்ராவை மீனா தயார் செய்து அழைத்து வந்தவர் இரு பெண்களுக்கு தேநீரும், மித்ராவுக்கு பூஸ்டும் சுடச்சுட ஆற்றி கோப்பையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அக்கடாவென்று அமர்ந்தார்.

மித்ரா பூஸ்டைக் குடித்தபடியே துளசியிடம் “அம்மு உங்களோட லாங் ஃப்ராகுக்கு மேட்சா தான் நானும் டிரஸ் போடுவேன்” என்று அமர்த்தலாகக் கூறிவிட துளசி வார்ட்ரோபிலிருந்து தான் அணிந்திருக்கும் லேவண்டர் நிற லாங் டாப்பைப் போல மித்ராவுக்கு அவளே வடிவமைத்திருந்த லேவண்டர் வண்ண ஃப்ராகை எடுத்தாள்.

மகளுக்கு அதை அணிவித்துவிட்டவள் மித்ராவின் கூந்தலைச் சீவி அழகான லேவண்டர் வண்ண ஹேர்பேண்டை மாட்டிவிட்டு அவளது முன்புற பேங்க்ஸை ஒழுங்குப்படுத்திவிட்டாள்.

மீனா மித்ராவைத் துளசி தயார் செய்யும் பாங்கை ரசித்தபடி அமர்ந்திருந்தவர் “அப்பிடியே அம்மாவும் பொண்ணும் ஜெராக்ஸ் காப்பி மாதிரி இருக்கிங்க போங்க.. என்ன மித்ராவுக்கு இப்போவே முடி இடுப்பைத் தொடுது… அவங்க அம்மா இன்னும் சின்னப்பொண்ணாட்டம் கழுத்தை விட்டு முடியை இறங்கவிட மாட்டேங்குறா” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

சுகன்யா துளசியின் கழுத்தைத் தீண்டிக் கொண்டிருக்கும் அவளது குட்டைமுடியைக் கலைத்துவிட்டபடி

“மா! பொண்ணுனா ஆறடி கூந்தலைச் சீவி முடிச்சு, பூ வைக்கணும்கிற ஸ்டீரியோடைப்ல இருந்து வெளியே வாங்க… என் துளசியோட ஹேர்ஸ்டைலுக்கு என்னவாம்? ஓ பேபி மூவியில வர்ற சமந்தா மாதிரி அழகா இருக்கா… ஊட்டியோட டாப் மோஸ்ட் ஃபேஷன் டிசைனர் அதுக்கேத்த மாதிரி ஸ்டைலிஷா இருக்க வேண்டாமா?” என்று கூற துளசியின் உதட்டில் குறுநகை எட்டிப் பார்த்தது.

அதோடு “துளசி உன்னோட இந்த அலைபாயுற முடி இருக்கே.. இது தான் என்னை ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸ் பண்ணுனது…. நீ மட்டும் லேயர் கட் பண்ணுனா உன்னோட ஹேருக்கு அது செமையா ஸூட் ஆகும்” என்று அவளிடம் சொன்னவனின் நினைவும் எழ, அவன் சொன்னதற்காகப் அது வரை சென்றிடாத அழகுநிலையத்தின் வாசலை மிதித்து லேயர் கட் செய்து கொண்டு அவனிடம் சென்று “நல்லா இருக்கா பிரின்ஸ்?” என்று கூந்தலைக் காட்டிப் பெருமைப்பட்டதும் நினைவுக்கு வந்தது.

அவனது பொய்நேசத்தின் சாயம் வெளுத்த நொடியில் தன்னில் அவன் ரசித்த அனைத்துமே துளசிக்கு அருவருப்பாகத் தெரிய ஆரம்பிக்க, அவள் செய்த முதல் காரியம் இடையைத் தாண்டி அலை அலையாக நெளிந்த கூந்தலை வெட்டியது தான்.

அப்போதிலிருந்து இந்தக் கழுத்தளவு முடி தான் அவளுடைய கூந்தல் அலங்காரமே… இவையனைத்தும் நினைவுக்கு வந்து எங்கே துளசி வருந்தத் தொடங்கிவிடுவாளோ என்று பதறிப்போய்த் தான் சுகன்யா அவளது ஹேர்ஸ்டைலைப் புகழ்ந்தபடி பேச்சை மாற்றியதே…

தோழியின் முயற்சியை அறிந்து கொண்ட துளசியும் அதை ரசித்தவளாய்க் காட்டிக்கொண்டு லேப்டாப், டிசைன்களுடன் கூடிய கோப்புகள் என அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு பொட்டிக்கில் பணிபுரியும் நால்வருள் ஒருத்தியான பிருந்தாவுக்குப் போன் செய்தாள்.

அவளிடம் உள்ள சாவியை வைத்து பொட்டிக்கைத் திறந்து வேலையைப் பார்க்குமாறு கூறியவள் தங்களுக்கு விரைவில் மிகப்பெரிய ஆர்டர் கிடைக்கப் போகும் நற்செய்தியைத் தெரிவிக்கவே அவள் உற்சாகத்துடன் போனை வைத்தாள்.

துளசியும் போனை வைத்துவிட்டு சுகன்யாவிடம் “பிருந்தா போய் இன்னைக்கு ஷாப்பை ஓப்பன் பண்ணிப்பா… அவ கிட்ட ஆர்டர் டீடெயிலும் சொல்லிட்டேன்… இந்த ஆர்டர் மட்டும் கிடைச்சா அவங்க எல்லாரோட சேலரியையும் டபிள் ஆக்கிடலாம்..” என்று கண்ணில் கனவு மின்னக் கூறியபடி ஹேண்ட்பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டாள்.

இருவரும் மீனாவிடம் சொல்லிக் கொண்டு வெளியேற சுகன்யா நானோவில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்துவிட்டு “மா! நாங்க வர்றதுக்கு லேட் ஆகும்.. நீங்க எங்களுக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டிட்டுங்க” என்று கூற

மித்ரா “டாட்டா மீனு பாட்டி” என்று கையசைக்க துளசியும் அவரிடம் கவனமாக இருக்கும்படி சொல்லவே கார் அவர் தலையசைக்க, கார் கிளம்பியது.

*********

ஆர்.கே பவன்…

கோயம்புத்தூரின் இதமான வானிலையும், அந்த மாளிகையைச் சுற்றியிருக்கும் மரங்களில் தஞ்சமடைந்த பறவைகளின் நாதமும், சுற்றியிருந்த மலர்ச்செடிகளிலிருந்து புறப்பட்ட நறுமணமும் அந்தக் காலை பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருக்க அவனது பிரத்தியேக உடற்பயிற்சிக்கூடத்தில் ட்ரேட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

வெளிப்புறத்தின் சத்தங்கள் அனைத்தும் அவன் செவியில் விழ அவனுக்கு எதிர்புறமாய் இருந்த பெரிய கண்ணாடிக்கதவுகளின் வழியே தெரிந்த பரந்த தோட்டத்தை ரசித்தபடி ஓடிக்கொண்டிருந்தவனின் மனம் காரணமின்றி அன்று குதூகலத்தில் திளைத்திருந்தது.

நேற்றைக்கு துளசியுடனான அவனது உரையாடல் மனதுக்குப் பெரும் சோர்வை அளித்திருந்தாலும் இன்றைக்கு முளைத்த உற்சாகம் அதை அழித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதோடு அவனுக்கும் நன்றாகவே தெரியும், தன்னை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டுச் சென்றவள் எங்கே சென்றிருப்பாள், என்ன செய்திருப்பாள் என்று.

துளசியும் தானும் இப்போது அனுபவிக்கும் இந்த வேதனைக்கான மூலக்காரணி தான் மட்டுமே என்று அறிந்தவனுக்குத் தன்னை நேசித்த ஒரே காரணத்துக்காகத் துளசியும் வீணாக மனவருத்தத்துக்கு உள்ளாகிறாளே என்ற கவலையும் ஒருசேர எழாமல் இல்லை.

இவை அனைத்துக்குமான முற்றுப்புள்ளி மித்ரா மட்டுமே.. அவனது செல்லமகளால் மட்டுமே இவர்கள் இருவரின் பிணக்கைத் தீர்க்க இயலும். அவள் ஒருத்தி மட்டுமே இத்தனை வருட கருத்துவேறுபாடுகளை மறக்கடிக்கக் கூடியச் சக்தி படைத்தவள் என்று எண்ணியவனுக்கு முதலில் மகளைக் கண்டு அவளிடம், தானே அவளது தந்தை என்ற விஷயத்தைக் கூற வேண்டும் என்று உள்ளுக்குள் உறுதியாகத் தோன்றிவிட்டது.

இவ்வாறு அவன் சிந்தனைக்கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்த போது கிண்கிணி நாதமாய் ஒரு சிரிப்பொலி கேட்க ட்ரேட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தவன் அதை நிறுத்திவிட்டு என்னவென்று வெளியே சென்றுப் பார்க்கக் கிளம்பினான்.

வெளியே சென்றவளின் கண்ணில் விழுந்தாள் லேவண்டர் வண்ண உடையணிந்த அவனது குட்டி தேவதை. சுகன்யா ஏதோ சொல்ல, அதற்கு மித்ரா சத்தமாக நகைத்தபடி நடந்து வர, இவர்களுடன் சேர்ந்து வந்த துளசியின் முகத்திலும் குறுஞ்சிரிப்பு மலர்ந்திருந்தது.

இந்தச் சிரிப்பைக் கண்டு எத்தனை நாட்களாயிற்று என்று ஏங்கியவாறே, அவளை ரசித்தவனின் கால்கள் அவர்களை நோக்கி நடைபோட்டது. துளசி பக்கவாட்டில் பார்வையைத் திருப்பியவள் கிருஷ்ணாவைக் கண்டதும் சிரிப்பை மறந்தவளாய், தனது முழங்கையால் சுகன்யாவை இடித்து அவன் வருவதைச் சுட்டிக்காட்டினாள்.

ஆனால் கிருஷ்ணாவோ மகளைத் தவிர வேறு யாரையும் கண்டுகொண்டால் தானே! உற்சாகத்துடன் அவள் முன்னே சென்று நின்றவன் மித்ராவிடம் “ஹாய் மித்தி! என்னை நியாபகம் இருக்கா?” என்று கேட்கவும் மித்ரா கண்ணைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தாள்.

கிருஷ்ணா மகள் யோசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, மித்ரா உற்சாகத்துடன் “நியாபகம் வந்துடுச்சு அங்கிள்! நீங்க அம்முக்கு மெடல் போட்ட அங்கிள் தானே” என்று கேட்க

கிருஷ்ணா பொய்யான திகைப்புடன் வாயைப் பொத்திக் கொண்டபடி “அம்மாடி! மித்திக்கு எவ்ளோ ஸ்ட்ராங்கான மெமரி பவர் இருக்கு!” என்று சொன்னபடி மித்ராவை அள்ளித் தூக்கிக்கொள்ள அச்சிறுமி கலகலவென்று சிரித்தாள்.

பொதுவாக மித்ரா அனைவருடனும் இன்முகத்துடன் பழகும் சிறுமி என்றாலும், புதியவர் என்றால் அவர்களிடம் சேரத் தயங்குவாள். அவளின் இத்தயக்கம் கூட அவளுக்குப் பாதுகாப்பு தான் என்பாள் துளசி.

ஏனெனில் தன்னைப் போல அறிந்தவர் அறியாதவர் அனைவரிடமும், பார்த்த உடனே பசைப்போட்டாற் போல ஒட்டிக் கொள்ளும் குணம் இருந்தால் அவளும் தன்னைப் போலவே வருங்காலத்தில் நல்லவர், தீயவர் என்று பிரித்தறிய இயலாநிலைக்குத் தான் ஆளாவாள் என்பது துளசியின் எண்ணம்.

ஆனால் அதற்கு மாறாய் கிருஷ்ணா தூக்கியவுடன் எவ்வித மறுப்புமின்றி அவனுடன் சேர்ந்து பேசத் தொடங்கியவளைக் கண்டு சுகன்யாவும் துளசியும் தான் ஆயாசமடைந்தனர்.

துளசி கண்டிக்கும் குரலில் “மித்தி! கீழே இறங்கு… அம்மு என்ன சொல்லிருக்கேன், அன்னோன் பெர்சன் கிட்டப் பேசக்கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லையா?” என்று அதட்ட

மித்ரா அன்னையை விழிவிரித்துப் பார்த்தபடி “பட் அம்மு, அங்கிள் ஒன்னும் அன்னோன் பெர்சன் இல்லையே! அவரைத் தான் நம்ம அன்னைக்கு ஸ்கூல்ல மீட் பண்ணுனோமே” என்று சொல்ல

கிருஷ்ணா மகளின் நாடியைப் பிடித்துக் கொஞ்சியவன் “புத்திச்சாலிப்பொண்ணு! உன் அளவுக்கு உங்கம்மாவுக்கு மெமரி பவர் இல்லை பிரின்சஸ்… வயசாயிடுச்சுல்ல” என்று சொல்லிக்கொண்டே துளசியைக் கேலியாகப் பார்க்க அவளோ இவனை என்ன தான் செய்வது என்ற எரிச்சலுடன் நின்று கொண்டிருந்தாள்.

சுகன்யா தோழியின் நிலையை உணர்ந்தவளாய் கிருஷ்ணாவிடம் “ஹலோ! உனக்கு என்ன பிராப்ளம் இப்போ? குழந்தையைத் துளசி கிட்டக் குடு…. மத்ததை வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்” என்று எரிச்சலை அடக்கியக் குரலில் அமைதியாய்க் கூற

கிருஷ்ணா அவளைக் கண்டு நக்கலாய் சிரித்து “அஹான்! நீ என் கிட்ட இவ்ளோ பொலைட்டா பேச மாட்டியே ஜிஞ்சர் பிரெட்? உனக்கு உடம்பு, கிடம்பு சரியில்லையா?” என்று கேட்டுவிட்டு

மகளிடம் திரும்பி “ஏன் ஏஞ்சல், இந்த சிடுமூஞ்சி சுகிக்கு உடம்பு சரியில்லையா?” என்று பொய்யான வருத்தத்துடன் கேட்க துளசியும் சுகன்யாவும் கொதிநிலைக்கு மெதுமெதுவாய்ச் சென்று கொண்டிருந்தனர்.

மித்ரா தலையை இடவலமாய் ஆட்டி மறுத்தவள் “இல்லை அங்கிள்… சுகி ஆன்ட்டி இஸ் ஆல்ரைட்” என்று பெரியமனுசி மாதிரி கூற கிருஷ்ணா மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன் “நீ சொன்னா அப்…. அங்கிள் நம்புறேன்… இப்போ நம்ம வீட்டுக்குள்ள போவோமா?” என்றபடி மகளைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட

சுகன்யா துளசியை அவன் பின்னே வேகமாகச் சென்று மித்ராவை வாங்கிக் கொள்ளுமாறு கண் காட்ட, துளசியும் தனது லாங் டாப்பை விரலால் பிடித்தபடி “கிரிஷ் கொஞ்சம் மெதுவா போடா.. நானும் வர்றேன்” என்றபடி அவனைத் தொடர்ந்தாள்.

அவன் துளசியைக் கண்டுகொள்ளாமல் மகளுடன் பேசியபடி வீட்டுக்குள் நுழைய அங்கே சஹானா, சாரதாவுடன் சஹானாவின் புகுந்தவீட்டு உறவுகளில் சில பெண்களும் இருக்க அனைவரின் பார்வையும் கிருஷ்ணா தூக்கி வைத்திருந்த குழந்தையின் மீது தான்.

துளசி மூச்சிரைக்க ஓடிவந்தவள் கிருஷ்ணாவை முறைத்துவிட்டு சஹானாவை நோக்கித் தர்மசங்கடத்துடன் புன்னகைத்தவள் மித்ராவைச் சுட்டிக்காட்டி “என்னோட பொண்ணு மித்ரா” என்று கூற சஹானா மற்றும் சாரதா அதைக் கேட்டதும் குழப்பம் நீங்கிப் புன்னகைத்தனர்.

மற்றப் பெண்மணிகளின் கவனம் முழுவதும் சுகன்யா, துளசி மற்றும் மித்ராவின் உடைகளின் மீதே இருக்க அதில் இளம்பெண் ஒருத்தி “மேம் நீங்க வியர் பண்ணிருக்கிற டிரஸ், பேபியோடது எல்லாமே உங்களோட டிசைன்ஸா?” என்று கேட்க சுகன்யா ஆமென்று தலையாட்டினாள்.

சாரதா “ஏன் நின்னுட்டே இருக்கிங்கம்மா? உக்காருங்க” என்றபடி அவர்களை அமரச் சொல்லிவிட, சஹானாவின் கவனம் துளசியை நீங்கி, மித்ராவின் மீதே முழுவதுமாகப் படிந்தது.

கிருஷ்ணாவின் அருகில் சென்று “பேபியோட டிரஸ் கியூட்டா இருக்கே? உங்க மம்மியோட டிசைனா?” என்று பேச்சை ஆரம்பிக்க, மித்ராவுக்கு அன்னையின் பெருமையைக் கூற ஒரு ஆள் கிடைத்துவிட்டதால் அவளும் தடையின்றி சஹானாவிடம் பேசத் தொடங்கினாள்.

அண்ணனும், தங்கையும் தொழில்பேச்சை குழப்பாமல் மித்ராவுடன் அகன்றுவிட, துளசியும் சுகன்யாவும் தாங்கள் கொண்டு வந்த டிசைன்களை அந்த உறவுக்காரப்பெண்மணிகளுக்குக் காட்டத் தொடங்கினர்.

தொடரும்💗💗💗