💗அத்தியாயம் 46 (Final & Epilogue)💗

கிருஷ்ணாவும் துளசியும் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பி இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. கிருஷ்ணா வந்த அன்றே சொல்லிவிட்டான் ‘மித்ராவை நினைத்துக் கண்ணீர் வடித்தால் என்னை மறந்துவிடு’ என்று. அவனுக்காகக் குழந்தையை எண்ணி கண்ணீர் வடிப்பதை நிறுத்திக் கொண்டாள் துளசி. அதே போல மறுநாள் காலையில் பொட்டிக்குக்குக் கிளம்பாமல் மாடிவராண்டாவில் வெளியே உள்ள மரங்களை வெறித்தபடி அமர்ந்திருந்தவளை அதட்டி உருட்டிப் பொட்டிக் செல்லத் தயார் படுத்தினான் அவன்.

பின்னர் தான் அலுவலகம் செல்லும்போது அவனுடனே அழைத்துச் சென்றான். இடைவிடாமல் அவளுக்குப் போன் செய்து பேசி அவளுக்கு வருத்தமாக இருப்பதற்கு நேரமில்லாமல் பார்த்துக் கொண்டான். இவ்வளவையும் துளசிக்காகச் செய்த அவனாலேயே மகளின் நினைவில் ஏக்கம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இரண்டு நாட்களாக எப்படியோ நெட்டித் தள்ளியவர்கள் அன்று ஞாயிறு என்பதால் துளசி கேட்டுக்கொண்டாள் என்பதற்காக அவளை வியூபாயிண்டுக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் அங்கே கிடந்த மரபெஞ்சில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அமர்ந்திருந்தனர். அப்போது பார்த்து ராமமூர்த்தி அழைத்தார். மகளிடம் வழக்கம் போல அவர் பேச ஆரம்பிக்கவும் கிருஷ்ணாவுக்கு மித்ராவின் நினைவு வந்துவிட்டது.

அவன் முகம் சோகத்தில் சுருங்கியிருக்க, துளசி தன் தந்தையிடம் நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறிவிட்டாள். மித்ரா பிரிந்து சென்றதில் அவருக்கும் வருத்தம் தான். ஆனால் அவரது மகள் நியாயவாதி என்பதால் அடுத்தவர் துன்பத்தில் இன்புறமாட்டாள் என்று அவர் அறிவார். எனவே துளசி செய்த காரியம் சரியானதே என்று கூறியவர் மித்ரா சஹானாவுடன் தானே இருக்கிறாள்; இஷ்டப்பட்டால் போய் பார்த்துவிட்டு வருவது தானே என்று சொல்லி மகளையும் மருமகனையும் சாதாரண மனநிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

பின்னர் பேசிய மீரா ராமமூர்த்தி விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு ஊட்டிக்கே வந்துவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகக் கூற கிருஷ்ணாவும் துளசியும் அமைதியாக அதைக் கேட்டு உம் கொட்டினர். இன்னும் சில விஷயங்களைப் பேசிவிட்டு சுகன்யா, மீனா, சாரதாவின் நலனை விசாரித்துவிட்டு மீரா போனை வைத்துவிட்டார்.

அந்த போன் அழைப்புக்குப் பிறகு மீண்டும் அமைதியே இருவரிடையும் ஆட்சி செய்தது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு “அம்மு” என்ற குரல் கேட்கவும் துளசிக்கும் கிருஷ்ணாவும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து யாரென்று திரும்பிப் பார்க்க, அவர்களிடமிருந்து சற்றுத் தொலைவில் கார்கள் நிற்க, சஹானாவும் ராகுலும் பின்னே நடந்து வர கிருஷ்ணாவையும் துளசியையும் நோக்கி ஓடிவந்தாள் மித்ரா.

அவளைக் கிருஷ்ணா அள்ளிக் கொள்ள துளசி மகளின் கையைப் பற்றி முத்தமிட்டவள் “மித்திகுட்டி” என்று கண் கலங்கவே

சஹானாவும் ராகுலும் அவர்களிடம் வந்தவர்கள் “டூ டேய்சா எப்போ அம்மு கிட்டப் போவோம்னு கேட்டுக் கேட்டே உன் பொண்ணு ஒரு வழியாகிட்டா துளசி” என்று செல்லமாக அலுத்துக் கொண்டபடி பேச கிருஷ்ணாவும் துளசியும் திகைத்தனர்.

“இல்லை சஹானா.. நான் அவளை…” என்று தடுமாறிய துளசியைக் கையமர்த்திய சஹானா ராகுலைக் கண் காண்பிக்க அவன் கிருஷ்ணாவிடம்

“கிரிஷ்! மொத்த பேமிலியும் அங்கே உனக்காக வெயிட்டிங்டா.. உனக்கு ஸ்பெஷல் பொங்கல் காத்திருக்கு… யார் கிட்டவும் சொல்லாம ராத்திரியோட ராத்திரியா துளசியை ஊட்டிக்குக் கடத்திட்டு வந்தேல்ல, இப்போ வந்து உன் அப்பா, சித்தப்பா, சித்தி, பாட்டிகள் கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்லு” என்று கிண்டல் செய்தவன் மித்ராவையும் தங்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றான்.

அவர்கள் அகன்றதும் துளசி சஹானாவிடம் படபடவென பேச ஆரம்பித்தாள்.

“மித்ரா உங்க பொண்ணு தான்… அதனால தான் நான் உங்க கிட்ட அவளை ஒப்படைச்சுட்டு வந்தேன்” என்று சொல்ல

சஹானா “அவளைப் பெத்தது மட்டும் தான் நான் துளசி… நான் அவளோட அம்மா இல்லை… ஒரு அம்மாவா அவளுக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சவ நீ! இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிக்காம அவளுக்காக நீயும் கிருஷ்ணாவும் நிறைய தியாகங்களைப் பண்ணிருக்கிங்க… பெத்தா மட்டும் அம்மாவா ஆக முடியாது துளசி.. மித்ராவோட மனசுல அம்மாவா உன் முகம் தான் பதிஞ்சிருக்கு… அவளுக்கு அப்பானா அது கிரிஷ் மட்டும் தான்… நானும் ராகுலும் அவளுக்கு எப்போவுமே அத்தை மாமாவா மட்டும் தான் இருக்க முடியும் துளசி…

நான் ஆறு வருசத்துக்கு முன்னாடி இதே இடத்துல தெரிஞ்சோ தெரியாமலோ உனக்காக விட்டுட்டு போனேன்… இப்போ தெரிஞ்சே உன் கிட்ட விடுறேன்… மித்ரா எப்போவுமே உன்னோட பொண்ணு தான்… இந்த உண்மை தெரிஞ்சதால நானும் என்னோட மனசை இத்தனை நாளா அழுத்திட்டிருந்த குற்றவுணர்ச்சி இல்லாம நிம்மதியா இருப்பேன் துளசி.. நான் பெத்தக் குழந்தை என்னை விட நல்லா பார்த்துக்கிற ஒருத்தி கிட்ட பாதுகாப்பா இருக்கா.. இது போதும் எனக்கு” என்று தன் மன எண்ணத்தைத் துளசியிடம் கூறினாள்.

ஆனால் துளசியால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. அவள் இன்னும் தயங்குவதைக் கண்ட சஹானா,

“ஓகே துளசி! நீ வேணும்னா உன் பொண்ணு மித்ராவைச் சுமந்த வாடகைத்தாயா என்னை நினைச்சுக்கோ துளசி… வாடகைத்தாய்க்குக் குழந்தை என்னைக்குமே சொந்தமில்லை.. உன்னோட மித்ராவைத் தான் நான் சுமந்தேனு நினைச்சுக்கோ.. இதுக்கு மேலேயும் பிடிவாதம் பிடிக்காதே பிளீஸ்” என்று முடிவாய்ச் சொல்லிவிட துளசிக்கு இதற்கு மேல் வேறு எனன் வேண்டும்?

சஹானாவை இறுக்கமாக அணைத்தவள் “தேங்க்யூ சோ மச் சஹானா.. நீங்க என் உயிரை எனக்குத் திருப்பிக் குடுத்திருக்கிங்க” என்று கண்ணீருடன் கூற சஹானா அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் காரை நோக்கி அவளை அழைத்துச் சென்றாள்.

அங்கே கிருஷ்ணாவிடம் மித்ரா ஏதோ சொல்ல அதைக் கேட்டு இரு குடும்பத்தினர் முகமும் விகசிப்பதைப் பார்த்து ஆனந்தமடைந்த துளசியும் சஹானாவும் தாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாக விரைந்து அவர்களை நோக்கிச் சென்றனர்.

கிருஷ்ணா மகளைத் தன் கைக்குள்ளே வைத்துக் கொண்டவன் துளசியைக் காரை ஓட்டுமாறு பணித்தான். இரண்டு நாட்களாகத் தான் அம்முவையும் அப்பாவையும் தேடியதாகக் குழந்தை சொல்லவும் இருவருக்குமே அவளை விட்டுத் தனிமையில் தாங்கள் அடைந்த துன்பத்தை நினைத்துக் கண் கலங்கிவிட்டது. இதே இனியமனநிலையுடன் வீடு வந்து சேர்ந்தவர்கள் எல்லா குழப்பமும் அகன்றதால் அனைவரின் முகமும் தெளிவுடன் இருந்தது.

இந்தச் சந்தோசத்துக்கெல்லாம் உச்சமாகச் சில மாதங்களுக்குப் பின்னர் துளசியின் இருபத்தைந்தாவது பிறந்தநாளும் வந்தது. அச்சமயத்தில் ராமமூர்த்தியும் மீராவும் மும்பையிலிருந்து நிரந்தரமாகவே ஊட்டிக்குத் திரும்பியிருந்தனர்.

வழக்கம் போல புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்ட துளசி கிருஷ்ணாவுடன் குழந்தை இயேசு சிறார் இல்லத்துக்கு மித்ராவையும் அழைத்துக்கொண்டு சென்றாள். அங்கிருந்த குழந்தைகளுக்குப் புத்தாடை, இனிப்பு வழங்கிவிட்டு வழக்கம்போல அந்த மாதம் கொடுக்கவேண்டிய டொனேசனையும் இரண்டுமடங்காகக் கொடுத்துவிட்டு வந்தனர்.

அன்றிலிருந்து சில நாட்களில் துளசி ஆசைப்பட்டது போலவே மித்ராவைச் சட்டப்படி தங்களின் மகளாகத் தத்தெடுத்துக் கொண்டனர் துளசியும் கிருஷ்ணாவும். கிருஷ்ணாவால் வேலைப்பளுவைச் சமாளிக்க இயலாததால் ராகவேந்திரனின் முழுக்குடும்பமும் மீண்டும் கோவை ஆர்.கே பவனத்துக்கே தங்களது ஜாகையை மாற்றிக் கொண்டனர். துளசியின் மித்தி பொட்டிக்கும் கோவைக்கு மாற்றப்பட்டது.

விஷ்வாவுக்கும் சுகன்யாவுக்கும் திருமணப்பேச்சுவார்த்தை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, அச்சமயத்தில் தான் துளசி கருவுற்றாள். அதை அறிந்ததும் இரு குடும்பத்தினரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இச்சந்தோசத்தினூடே விஷ்வா சுகன்யாவின் திருமணமும் முடிந்தது.

துளசி கருவுற்ற நாட்களில் பெரும்பாலான நேரங்கள் கிருஷ்ணா துளசியுடன் தான் கழித்தான். மீரா ஒரு புறம் அறிவுரைகளை அள்ளித் தெளிக்க, பொள்ளாச்சியிலிருந்து ரங்கநாயகியும் சுபத்ராவும் மாதம் ஒரு முறை தவறாது துளசியைப் பார்க்க வந்துவிடுவர். வரும் போதே ஒரு கல்யாணவீட்டுக்குத் தேவையான அளவு காய்கறிகளும், பழங்களும் வந்து இறங்கும் அவர்களுடன்.

கேட்டால் “இதெல்லாம் சாப்பிட்டா தானே மாசமா இருக்கிற பொண்ணுக்கு நல்லது… ஆறு மாசம்னு சொல்லுற… ரெட்டைப்பிள்ளைகளை வேற சுமக்கிற.. ஆனா இன்னும் நீ ஈர்க்குச்சி மாதிரி தானே இருக்க” என்று கேலி செய்து துளசியின் வாயை அடைத்துவிடுவர். இது போதாது என்று மீனாவும் சாரதாவும் சேர்ந்து சூப்பும் ஜூசுமாகக் கொடுத்தே தன்னைக் குண்டோதரியாக்க திட்டமிடுகின்றனர் என்று துளசி   கிருஷ்ணாவிடம் புலம்புவாள்.

அவளுக்கு வளைகாப்பு சமயத்தில் சஹானாவும் இரண்டாம் முறை கருவுற இம்முறை ராகுலின் அன்னையும் சித்தியும் அவளைத் தரையில் கூட விடாமல் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டனர்.

போதாக்குறைக்கு சுகன்யாவும் இப்போது அதே வீட்டிலிருக்கவே சஹானா வேகமாக நடந்தால் கூட “என்னக்கா இவ்ளோ ஸ்பீடா நடக்குறிங்க? பாப்பாக்கு வலிக்கப் போகுது” என்று பிறக்கப்போகும் குழந்தை மேல் அக்கறை எடுத்துக் கொள்வாள்.

அதைக் கண்டு விஷ்வா பொறாமையுடன் “நான் ஒருத்தன் நேத்து கீழே விழுந்து எழுந்திருச்சேனே.. என்னைக் கண்டுக்கிட்டியா நீ? இப்போ நூடுல்ஸ் தும்முனா கூட அக்கா ஏன் தும்முனிங்கனு ஒரு நாள் முழுக்க அதுக்காக வருத்தப்படுற.. எல்லாம் என் நேரம்” என்று புலம்புவான்.

துளசியின் வளைகாப்பும் முடிந்து அவளுக்குப் பிரசவதேதி நெருங்கவே கிருஷ்ணா அலுவலகத்துக்குக் கூடச் செல்லாமல் துளசியுடனே இருந்து கொண்டான். திடீரென்று அவளுக்கு வலி வந்து, அந்நேரம் பார்த்துத் தான் அவளுடன் இல்லாது போய்விட்டால் என்னாகும் என்று யோசித்து இம்முடிவுக்கு வந்திருந்தான் அவன்.

அவன் நினைத்தது போலவே நள்ளிரவில் அவளுக்கு வலி எடுக்க, அவள் துடித்ததை விட கிருஷ்ணா தான் துடித்துப் போய்விட்டான்.

மித்ராவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு பாட்டிகளிடம் சொல்லிவிட்டு துளசியுடன் மருத்துவமனைக்கு விரைந்தான். கூடவே சாரதா, விஜயேந்திரன், ராகவேந்திரனும் செல்ல, அங்கே அவர்களுக்கு முன்னரேமருத்துவமனையில் சேர்த்து வெகுநேரமாகியும் துளசிக்கு வலி மட்டும் தான் எடுத்ததே தவிர குழந்தைகள் வெளிவருவது போலத் தெரியவில்லை.

ஒரு புறம் துளசிக்கு வலி வருவதும் போவதுமாக இருக்க, மறுபுறம் மித்ரா காலையில் எழுந்ததும் தாங்கள் இருவரும் வீட்டில் இல்லையென்றால் தேடுவாளே என்ற கலக்கம் வேறு. கிருஷ்ணாவுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குள் துளசிக்குப் பிரசவவலி வந்தே விட்டது.

அவளை வார்டுக்குள் அழைத்துச் செல்லும்போது கிருஷ்ணாவுக்கு திக்திக்கென்று இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்ட குழந்தையின் சத்தத்தில் அவன் ஆசுவாசம் அடைந்தான். இரட்டைக்குழந்தைகள் என்பதால் அடுத்தக் குழந்தை வெளியே வரும் வரை மீண்டும் திக்திக்… ஆனால் அதிகநேரம் காக்க வைக்காமல் அவனது இரண்டாவது மகள் பூமிக்கு வந்துவிட்டாள்.

ஆம்! இரட்டையரில் முதலில் பிறந்தது ஆண்குழந்தை. அடுத்து தான் பெண் குழந்தை வெளிவந்தது.

நர்ஸ் குழந்தைகளைக் கிருஷ்ணாவிடம் காட்ட இரண்டு குழந்தைகளும் கண்களைப் பொடிய பொடிய விழித்துக் கொண்டு படுத்திருந்தன. குழந்தைகளின் அழகில் மெய்மறந்தவன் அவர்களைத் தனக்குப் பரிசாய் அளித்துவிட்டு கண் மூடிக்கிடப்பவளின் நெற்றியில் முத்தமிட்டபடி “மை டியர் பிரின்சஸ்! ஐ லவ் யூ சோ மச்” என்று முணுமுணுத்தான்.

சில நாட்களில் நல்லபடியாகத் துளசி தன் புத்திரச்செல்வங்களுடன் வீட்டுக்கு வந்துவிட்டாள். அதன் பின்னர் ராமமூர்த்தி, மீரா, மீனா, சாரதா, விஜயேந்திரன் மற்றும் ராகவேந்திரன் என அனைவரின் கவனமும் குழந்தைகளைக் கொஞ்சுவதிலேயே கழிந்தது.

சுகன்யா சஹானாவுக்குத் துணையாக இருப்பதால் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட ராமமூர்த்தியும் ராகவேந்திரனும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் பொழுது குழந்தைகளுடனே கழிய, மீரா, மீனா மற்றும் சாரதா துளசியைக் கவனிப்பதிலும் மித்ராவுக்கு வேண்டியதைச் செய்வதிலுமாகப் பொழுதைப் போக்கினர்.

துளசியை ஓய்வாக இருக்கச் சொன்ன ரங்கநாயகியும் சுபத்ராவும் அவளுடன் சேர்ந்து பழங்கதைகளைப் பேசிவிட்டு, பேச்சோடு பேச்சாக அவளைச் சத்தான ஆகாரங்களை உள்ளே தள்ளவைத்தனர்.

**************

ஆர்.கே பவனம்…

இரவின் அமைதி நிறைந்து காணப்பட்டது அந்த மாளிகையில். வெளிப்புறத்தில் நிற்கும் மரங்கள் எல்லாம் காற்றுடன் கதை பேசிக்கொண்டிருக்க துளசி பிள்ளைகளுக்குப் பசியாற்றிவிட்டு மித்ராவையும் தூங்க வைத்தவள் கிருஷ்ணா வரும் வரை டைரியில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்

அவன் கார் வரும் சத்தம் கேட்டதும் டைரியை மூடிவைத்தவள் அவனுக்காகச் சமைத்து வைத்ததை உணவுமேஜையில் எடுத்துவைத்துவிட்டு அந்த இடத்தின் விளக்கைப் போட்டு வைத்தாள்.

கிருஷ்ணா வீட்டுக்குள் வந்தவன் உணவுமேஜையில் அவள் தனக்காகக் காத்திருக்கவே “ஏன் துளசி லேட் நைட் கண் முழிக்கிற? போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல?” என்று அக்கறையுடன் கூற

துளசி “பெரியவங்க எல்லாருக்கும் நிறைய வேலை கிரிஷ்… டயர்டா இருப்பாங்கல்ல… அதான் நானே எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டேன்.. நீ ஃப்ரெஷ் அப் ஆயிட்டு வா… சாப்பிடலாம்” என்று புன்னகையுடன் கூறவே கிருஷ்ணா தங்களின் அறைக்குச் சென்றான்.

அங்கே கொசுவலை போர்த்திய தொட்டில்களில் கண்ணுறங்கும் இரு பூங்கொத்துகளையும் அவர்கள் தூக்கம் கலையாத வண்ணம் கொஞ்சிவிட்டு இரவுடைக்கு மாறியவன் கீழே சென்றான்.

நீண்டநாள் கழித்து மனைவி பரிமாறச் சாப்பிட்டவனுக்கு வயிறோடு சேர்ந்து மனதும் நிறைந்து போயிற்று. இருவரும் அவர்களின் அறைக்குத் திரும்பியதும் துளசியின் டைரி கிருஷ்ணாவின் கையில் சிக்கிக் கொண்டது. அதைப் பிரித்தவன் அவள் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று குறித்திருந்ததைப் பார்த்துவிட்டான்.

துளசி குழந்தைகள் ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்துவிட்டு அமர அவன் அவளிடம் டைரியின் ஒரு பக்கத்தில் பேனாவை வைத்து மூடி அவளிடம் கொடுத்தான்.

“ஓப்பன் பண்ணி பாரு.. நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்”

“என்ன கிரிஷ் அது?” என்றபடி டைரியைத் திறந்தவள் அதில் இரண்டு பெயர்களை அவன் எழுதியிருக்கவும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“எப்பிடி கிரிஷ் இவ்ளோ அழகா நேம் செலக்ட் பண்ணுன?”

“இதெல்லாம் ஐயாக்கு ஜுஜூபி… நேம் எப்பிடி இருக்கு?”

“சூப்பரா இருக்கு கிரிஷ்… ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்.. ரியலி சூப்பர்”

“ம்ம்… நீ மித்ராவுக்கு நேம் வச்சதுக்கான காரணத்தை என் கிட்ட சொன்னேல்ல… உன்னோட தனிமையான வாழ்க்கைக்குக் கிடைச்ச தோழிங்கிற அர்த்தத்துல நீ மித்ரானு நேம் வச்ச… நான் நம்ம கடல் மாதிரியான காதலோட அடையாளமா பிறந்தவங்கங்கிற அர்த்தத்துல இந்த நேமை செலக்ட் பண்ணிருக்கேன்” என்றவனை அணைத்துக் கொண்டாள் துளசி.

 “நேம் செலக்ட் பண்ணுனதுக்கு கிப்ட் எதுவும் கிடையாதா பிரின்சஸ்?”

“கிப்ட் தானே! குடுத்துட்டா போச்சு” என்றபடி அவனை நெருங்கியவளின் கவனத்தைக் குழந்தைகளின் அழுகுரல் ஈர்க்கவே அவனிடமிருந்து விலகிய துளசி

“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று கண் சிமிட்டி விட்டு குழந்தைகளிடம் நகரவே அவளின் காதல் கணவன் படுக்கையில் சாய்ந்தான். இவ்வாறான குறும்புப்பேச்சுக்களுடன் நாட்கள் நகர்ந்தன.

**********

அன்று தான் கிருஷ்ணா துளசி தம்பதியினரின் இரட்டைக்குழந்தைகளுக்கு பெயர்ச்சூட்டுவிழா. துளசியின் குடும்பத்தினர், சஹானாவின் புகுந்தவீட்டினர் மட்டுமே கலந்து கொள்ளும் அவ்விழாவில் விமலாதித்தனின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நேரம் வரவே கிருஷ்ணா தேர்வு செய்த தனது மகனுக்கு “சாகரன்” “சமுத்திரா” என்ற பெயர்களே குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது.

பெயர் தேர்வை குடும்பத்தினர் சிலாகிக்கவும், விழாவுக்குப் பெற்றோருடன் வந்திருந்த அகிலேஷ் தம்பதியினரை வாழ்த்தியவன் குழந்தைகளையும் கொஞ்ச ஆரம்பித்தான். சாரதா அவனது தாயார் பிரேமாவிடம் “அடுத்து அகிலோட கல்யாணம் தான் பிரேமி” என்று சொல்லவே

பிரேமா “உங்க வாய்க்குச் சர்க்கரை தான் போடணும்கா… அப்பிடி ஒரு நல்ல காரியம் நடந்தா நானும் சந்தோசப்படுவேன்” என்றார் ஏக்கத்துடன்.

சாரதா “எல்லாத்துக்கும் காலநேரம் கூடணுமில்ல பிரேமி.. நல்லதே நடக்கும்” என்று அவருக்கு நன்மொழியைக் கூறினார்.

மகனும் மருமகளும் அவர்களின் மூன்று பிள்ளைகளுடன் நிற்கும் காட்சியைக் கண்டு ராகவேந்திரன் உள்ளுக்குள் மகிழ்ந்தவர் “சவிம்மா இருந்திருந்தா இதைப் பார்த்து எவ்ளோ சந்தோசப்பட்டிருப்பா?” என்று ஏக்கப்பெருமூச்சுடன் கூற அவரருகில் அமர்ந்திருந்த விஜயேந்திரன்

“அண்ணி இப்போவும் நம்ம கூட தான் இருக்காங்கண்ணா… இல்லைனா இவ்ளோ பிரச்சனைகள் வந்தச் சுவடு தெரியாம மறைஞ்சிருக்குமா?” என்று தமையனுக்கு ஆறுதல் கூறினார்.

அதே நேரம் அண்ணன் குழந்தைகளுக்குப் பரிசைக் கொடுத்துவிட்டு ஓய்வாக அமர்ந்த சஹானா தன்னுடன் இருபத்து நான்குமணி நேரமும் சுற்றும் சுகன்யாவுடனும் மாமியார்களிடமும் ஏதோ பேசிக்கொண்டிருக்க மித்ரா அவளிடம் ஓடி வந்தாள்.

வந்தவள் சஹானாவின் காதுக்குள் “அத்தை விஷ்வா மாமா உங்களை நூடுல்ஸ்னு சொல்லி கிண்டல் பண்ணுறாரு” என்று சொல்லவே

சஹானா கடுப்புடன் “அப்பிடியா சொன்னான் அவன்? அவனை…” என்று எழும்ப தந்தை, சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த ராகுல் வேகமாக அவள் அருகில் வந்தவன்

“ஏய்! என்னடி இது ஒலிம்பிக்ல ரன்னிங் ரேஸ்ல கலந்துக்கிற மாதிரி வேகமா போற? கொஞ்சம் கவனம் சஹானா” என்று கோபத்துடன் ஆரம்பித்துக் கெஞ்சலுடன் முடிக்க சந்திரசேகரும் தியாகராஜனும் கொல்லென்று நகைக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் அமர்ந்திருந்த ரங்கநாயகியிடமும் சுபத்ராவிடமும் வந்து அமர்ந்து கொண்டான் விஷ்வா. இம்முறை பேத்தியின் பிரசவம் தடையின்றி நடைபெற குலதெய்வத்தை வேண்டிக் கொண்டனர் அவ்விரு மூதாட்டிகளும்.

மறுபக்கம் ராமமூர்த்தி, மீரா, மீனா, உமா, மகேஷ்வரி என ஒரு பட்டாளமே சாகரனையும் சமுத்திராவையும் கொஞ்சிக் கொண்டிருக்க துளசியும் கிருஷ்ணாவும் கண்களால் இரகசியமொழியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இவ்வாறு பெயர்சூட்டுவிழா இனிதே நிறைவுற்றது.

இரவின் தனிமையில் கீழே உள்ள நீச்சல்குளத்தைப் பார்த்தபடி மாடியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணாவும் துளசியும். குழந்தைகள் மூவரும் கீழே பெரியவர்களுடன் இருக்க மித்ரா பேசும் சத்தம் அவர்களின் காதை நனைத்தது.

துளசி கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டவள் “வாழ்க்கை எவ்ளோ அழகா மாறிடுச்சுல்ல கிரிஷ்? நீ நான் நம்ம குழந்தைங்கனு நமக்கே நமக்குனு ஒரு அழகானக் குடும்பமும் உருவாகிடுச்சு” என்று சொல்லிவிட்டு அவனைக் கட்டிக்கொண்டாள்.

கிருஷ்ணா மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன் “இது எல்லாமே துளசிங்கிற என் பிரின்ஸ் என்னோட வாழ்க்கையில ரீ என்ட்ரி குடுத்ததால தான்” என்று உணர்ச்சிப்பூர்வமாக உரைத்துக் கொண்டிருக்க

“கிரிஷ்! நாளைக்கு வியூபாயிண்டுக்குப் போகணும்டா.. அங்கே போயி குழந்தைங்களுக்கு நம்ம வச்ச நேமை சத்தம் போட்டுக் கத்தணும்” என்று கண்ணை உருட்டியபடி கூறினாள் துளசி.

“என் பிரின்சஸ் சொன்னதுக்கு அப்புறம் அப்பீலே கிடையாது.. கண்டிப்பா மார்னிங் போவோம்… இப்போ நேம் வச்சதுக்கு கிப்டா எனக்கு எதாவது குடு” என்று கேட்டுவிட்டு துளசியை நெருங்கவும்

“அம்மு! சாகர் பாப்பா அழுறான்” என்ற மித்ராவின் குரல் இருவரையும் விலகவைத்தது.

“உன் பையனுக்கு பசிக்குதாம்.. வா போவோம்” என்று துளசி கணவனை எழுப்பிவிட

“ஹூம்! வர்றேன்டி.. என்னோட சீமந்தப்புத்திரா சாகரா! இப்போ தான் நீ அழணுமாடா?” என்று பொய்யாக அலுத்தவண்ணம் மகனைக் காணும் ஆவலுடன் துளசியின் கரத்தைக் கோர்த்துக் கொண்டு கிளம்பினான் அவளது கிருஷ்ணா.

முதல் பார்வையிலேயே காதலித்து, வாழ்க்கை கொடுத்த அக்னிபரிட்சைகளையும், ஆறு வருடப்பிரிவையும் தாங்கிக் கொண்டு வாழ்வில் இணைந்த கிருஷ்ணாவும் துளசியும் அவர்களின் அழகுச்செல்லங்களுடனும், அன்பான நண்பர்களுடனும், அருமையான குடும்பத்தினருடனும் ஒரு இனிய வாழ்வைக் கிருஷ்ணதுளசியாய் இன்புற்று வாழ நாமும் அந்தப் பரம்பொருளை வேண்டிக்கொள்வோம்.

கிருஷ்ணதுளசி இனிதே நிறைவுற்றது!!!