💗அத்தியாயம் 43💗        

துளசிக்குப் பொள்ளாச்சி மிகவும் பிடித்துப் போயிற்று. அவர்கள் அங்கே வந்து அன்றோடு இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. காலையில் கண் விழித்ததும் எங்கோ கேட்கும் சேவல் கூவும் ஓசையும் வெளியே வாசலைத் தெளிக்கும் சத்தமும் கேட்கும். அதைக் கேட்டபடி குளித்துவிட்டு உடைமாற்றி வாசலுக்குச் சென்றால் அங்கே லெட்சுமி பெரியக் கோலத்தை இட்டுக்கொண்டிருப்பார். பண்ணைக்கு வேலையாட்கள் வந்து கொண்டிருப்பார்கள். லெட்சுமியின் கோலத்தையும் பண்ணையாட்களின் கொங்குத்தமிழையும் ஒரு சேர ரசிப்பாள்.

அதைப் பொறுமையாக ரசித்து முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றால் சமையலறையிலிருந்து காபியின் நறுமணம் சீக்கிரமாக என்னை அருந்து என்று அவளை அழைக்கும். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் விழித்த பிறகு காலையுணவு தயாராகும். துளசி அந்த வீட்டில் ஓய்வேயின்றி உழைக்கும் வேலையாட்களிடம் இன்முகமாக இரண்டு வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக்கி விட்டிருந்தாள். அதனால் வீட்டுக்கு வந்த புதுமருமகள் அவர்களுக்கும் பிரியமானவள் ஆகிவிட்டாள்.

சுபத்ராவுக்கும் ரங்கநாயகிக்கும் காலையில் குளித்துவிட்டு ஏழுமலையானுக்குப் பூஜை முடித்தப் பின்னர் தான் சாப்பிட அமர்வர். அந்நேரத்தில் துளசியும் அவர்களுடன் சேர்ந்து பூஜையில் கலந்துகொள்வாள். சிறுவயதில் கோதை பாட்டியுடன் சேர்ந்து நாச்சியார்திருமொழி பாடியது எல்லாம் நினைவுக்கு வந்துவிடும். அந்த மூதாட்டிகளுடன் சேர்ந்து மனதாற பூஜையை முடித்துவிட்டு வெளியே வரவும் கிருஷ்ணாவும் விஷ்வாவும் வாக்கிங் சென்று விட்டுத் திரும்பவும் சரியாக இருக்கும்.

அதற்குள் மற்றவர்களும் விழித்துவிடவே இரண்டாம் கட்டமாக இவர்களுக்காக காபி தயாராகும். அப்போது அனைவருக்கும் காபியை எடுத்துச் செல்லும் வேலை துளசியுடையது. சுகன்யாவும் அவளுடன் சேர்ந்து கொள்வாள் அந்நேரத்தில். பின்னர் இருவரும் பொட்டிக்குக்குப் போன் செய்து வேலை எப்படி நடக்கிறது என்று விசாரித்துக் கொள்வர்.

சஹானாவுக்கு பாலும், மித்ராவுக்கு பூஸ்டும் சுடச்சுடத் தயாராகும் போது தான் அத்தையும் மருமகளும் கண்விழிப்பர். கருவுற்றச் செய்தி அறிந்த தினத்திலிருந்து மித்ராவைத் தன்னுடனே வைத்துக் கொண்டாள். மித்ராவுமே சஹானாவுடன் ஒட்டிக்கொண்டாள்.

துளசி ஓரிருமுறை அழைத்துக் கூட அவள் “அம்மு! நான் அத்தை கூடவே இருந்துக்கிறேன்… அத்தையோட குட்டிப்பாப்பா வர்ற வரைக்கும் நான் தான் அவங்களைப் பத்திரமா பார்த்துக்கப் போறேன்” என்று பெரியமனுசி தோரணையில் கூறவே

சஹானா “ஆமா துளசி! மித்தி என்னோடவே இருக்கட்டும்… அத்தை சொன்னாங்க கர்ப்பமா இருக்கிறப்போ நம்ம யார் கூட அதிகநேரம் செலவளிக்கிறோமோ அதைப் பொறுத்து தான் நம்ம மனநிலை இருக்குமாம்… எனக்கு மித்ரா கூட இருக்கிறப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு துளசி… அவ என்னோடவே இருக்கட்டும் ப்ளீஸ்!” என்று சொல்லிவிட இனி துளசியால் தடுக்க முடியுமா என்ன!

ஆனால் மகளைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்கு அவளது கணவன் தான் அவளை அனுமதிக்கவில்லையே. பகலெல்லாம் தன் குறும்புப் பார்வையாலும் இரவெல்லாம் தன் காதலாலும் துளசியை வசப்படுத்திய கிருஷ்ணா தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் சிந்திக்க அவளுக்கு அவகாசம் அளிக்கவில்லை.

அன்றைய தினம் அனைவருமே பகல்நேரப் பூஜைக்குக் கோயிலுக்குச் செல்லவேண்டிய நாள். ஆண்கள் அனைவரும் வேஷ்டி சட்டையில் தயாராகிவிட, பெண்கள் பட்டுச்சேலையும் ஆடை ஆபரணமுமாகத் தயாராகி நின்றிருந்தனர்.

துளசியால் அந்த நகைகளின் பாரத்தைச் சுமக்க இயலவில்லை.

“இவ்வளவு நகை எதுக்கு அத்தை? சிம்பிளா போட்டுக்கிட்டா நல்லா இருக்குமே” என்று சாரதாவிடம் கூற

அவரோ “நேத்து அந்த வசந்தி என்ன பேச்சு பேசுனானு உனக்கு நியாபகம் இல்லையா துளசி?” என்று நினைவூட்டவே துளசிக்கு அந்த வசந்தி என்ற பெண்மணியின் பேச்சு நினைவுக்கு வந்தது.

கிருஷ்ணாவின் ஒன்றுவிட்ட அத்தை தான் அவர். கிருஷ்ணாவுக்குத் தன் தங்கை மகளை முடித்தால் பெரியகுடும்பத்தின் சம்பந்தி என்று ஊருக்குள் சொல்லிக்கொள்ளலாம் என்ற அவரது கனவுக்கோட்டையைத் தகர்த்தெறிந்த துளசியை அவருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதிலும் தழையத் தழைய புடவை கட்டி மகாலெட்சுமி போல வந்து நின்றவளை எதில் மட்டம் தட்டுவது என்று யோசித்த அப்பெண்மணிக்கு துளசியின் எளிமையான ஆபரணங்கள் சாக்காய்ப் போயிற்று.

“என்ன சாரதா உன் மருமகளுக்கு அவங்கப்பா அம்மா நகை எதுவும் பெருசா பண்ணிப் போடலையா? இப்பிடி துடைச்ச மாதிரி இருக்காளே” என்று நக்கலாய்ச் சொன்னது இன்னும் சாரதாவுக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டு தான் இருந்தது.

இத்தனைக்கும் துளசியின் கழுத்தில் கனத்த தாலிச்சங்கியும், கையில் அணிந்திருந்த கட்டிவளையலுமே கிட்டத்தட்ட பத்து சவரனுக்கு மேலிருக்கும். இது இவருக்குத் துடைத்து எடுத்த மாதிரியா என்று துளசி கூட அங்கலாய்த்துக் கொண்டாள்.

சாரதா அதனால் தான் தனது தமைக்கையின் நகைகளில் கழுத்தை நிறைப்பதாய் பார்த்து துளசிக்கு அணிவித்தவர் பேத்தி மற்றும் சுகன்யாவையும் விட்டுவைக்கவில்லை.

மித்ரா அலங்கார பொம்மை போல அந்த ஆபரணங்களை அணிந்து பட்டுப்பாவாடையும் இரட்டைப்பின்னலில் சூடப்பட்ட மல்லிகைச்சரமுமாய் வலம் வந்தாள். ஆனால் சுகன்யா தான் வேண்டாமென்று மறுத்தவண்ணமாய் இருந்தாள்.

மீனா கூட “சாருக்கா! இவளுக்கு நகையைப் பத்திரமா பார்த்துக்கத் தெரியாது… இவ்ளோ வெயிட்டான நகையெல்லாம் இவ போட்டதும் கிடையாது” என்று சொல்ல

சாரதாவோ “நான் சுகியை என் பொண்ணா நினைச்சுத் தான் இந்த நகையை அவளுக்குப் போட்டுவிட்டிருக்கேன்” என்று ஒற்றை வார்த்தையில் அவரையும் வாய்மூடச் செய்துவிட்டார்.

சுகன்யா அந்தப் பட்டுச்சேலையும் நகைக்குவியலுமாய் வீட்டுக்குள் உலா வந்தவள் வேஷ்டியை ஒற்றைக்கையால் பிடித்தபடி மித்ராவுடன் ஏதோ பேசிக்கொண்டே வந்த விஷ்வாவின் பார்வையில் விழுந்துவிட்டாள்.

விஷ்வாவின் பார்வை அவள் மீது சுவாரசியமாய் பட்டு மீண்டது. மனதிற்குள் “இன்னைக்குக் கொஞ்சம் அழகா தான் இருக்கா… ஆனாலும் அன்னைக்கு திருடன்னு சொன்னதுக்காகவாச்சும் இவளைக் கலாய்க்கணும்” என்று சூளுரைத்தவனுக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அனைவரும் பொள்ளாச்சி கிளம்பியச் சமயத்தில் திடீரென்று ஏதோ மீட்டிங் என்ற தகவல் வர சந்திரசேகர், தியாகராஜனுடன் விஷ்வாவும் கோயம்புத்தூரிலேயே தங்கவேண்டியதாயிற்று.

தாங்கள் மறுநாள் காலை வருவதாகச் சொல்லி குடும்பத்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு மீட்டிங்கை முடித்துவிட்டு சீக்கிரமாகவே பொள்ளாச்சிக்குக் கிளம்பிவிட்டனர். அவர்கள் வந்து சேரும் போது திருவேங்கடம் மட்டுமே விழித்திருந்தார். யாருக்கும் தொந்தரவு தராமல் அமைதியாக இரவுணவை முடித்துவிட்டு பெரியவர்கள் இருவரும் உறங்கச் சென்றுவிட விஷ்வா மட்டும் தூக்கம் வராததால் மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் பார்த்து சுகன்யா அவளது அறையில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால் தண்ணீர் குடிக்கச் சமையலறையை நோக்கி வந்தவள் ஹாலில் யாரோ நடமாடுவதை அறிந்து திடுக்கிட்டாள்.

பயத்துடன் அந்த உருவத்தை நெருங்கியவள் தனது பக்கத்தில் கிடந்த மேஜை மீது வீற்றிருந்த பூஜாடியை ஓசைப்படாமல் எடுத்து அவன் தலையில் அடிக்கப்போன சமயம் விஷ்வா உள்ளுணர்வின் உந்துதலால் திரும்பியவன் தன்னை அடிக்க வந்தவளின் கையைப் பிடித்துக் கொண்டான்.

அவன் கையைப் பிடித்ததும் “ஐயோ திருடன் திருடன்! எல்லாரும் வாங்க” என்று சுகன்யா கத்தத் துவங்கவும், விஷ்வா

“ஏய் கத்தாதடி! நான் தான் விஷ்வா” என்று சொல்லி அவள் வாயைப் பொத்த முயலும்போது அந்த ஹாலின் விளக்கு போடப்பட்டது. குடும்பத்தினர் அனைவரும் அங்கே கூடிவிட, விஷ்வா தன் கைப்பிடியில் இருந்த சுகன்யாவை விடுவித்தான்.

வெளிச்சத்தில் அவன் முகத்தைக் கண்டதும் சுகன்யாவுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. குடும்பத்தினர் அனைவரும் என்ன பிரச்சனை என்று கேட்டுவைக்க, சுகன்யா தான் விஷ்வாவைத் திருடன் என்று எண்ணிவிட்டதாய் சொல்லிச் சமாளித்தாள்.

அனைவரும் அதைக் கேட்டுவிட்டு மீண்டும் அவரவர் அறைக்குத் திரும்ப மீனா “என்ன பொண்ணோ போ… சீக்கிரமா தண்ணி குடிச்சிட்டுத் தூங்க வா” என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

அனைவரும் சென்றதும் விஷ்வா சுகன்யாவை எரிப்பது போல முறைத்தவன் அதன் பின்பு வந்த நாட்களில் அவளைக் காணும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே திரிந்தான்.

இப்போதும் அவளை முறைத்தவனைக் கண்டு “நான் என்ன இவனோட சாப்பாட்டுல உப்பை அள்ளி போட்டேனா? ஏன் இப்பிடி முறைச்சிக்கிட்டே திரியுறான் இவன்?” என்று பொருமியபடி அங்கிருந்து நழுவ முயன்றாள்.

விஷ்வா அதற்கு இடமளிக்காமல் “ஏன் இப்போ அருந்ததி அனுஷ்கா கெட்டப்ல சுத்துற நீ? பார்க்கவே ஃபன்னியா இருக்கு” என்று கிண்டல் செய்யவும்

சுகன்யா “வாட்? அருந்ததியா? பட்டுப்புடவை கட்டி ஜுவல்ஸ் போட்டா எல்லாரும் இப்பிடி தான் இருப்பாங்க.” என்று சமாளித்தாலும் உள்ளுக்குள் “இதுக்குத் தான் நான் இவ்ளோ ஜுவெல்ஸ் போட மாட்டேனு சொன்னேன்” என்று வருந்திக் கொண்டாள்.

விஷ்வா மறுப்பாய் தலையசைத்தவன் “மத்தவங்க எல்லாருக்கும் அம்சமா அழகா இருக்கு… உனக்கு மட்டும் தான் இவ்ளோ பயங்கரமா இருக்கு… ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்… ஒன் ருபி காயின் சைஸ்ல ஒரு பொட்டு வைச்சா பக்காவா அருந்ததியா மாறிடுவ” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சுகன்யா கடுப்பை வெளிக்காட்டிக் கொள்ள இயலாமல் கோபத்தை அடக்குவதை ரசனையுடன் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தவனின் மனம் “அழகா அம்சமா கல்யாணப்பொண்ணு மாதிரி இருக்கேடி” என்று அவளை வர்ணித்ததை அவள் அறியாள்.

அனைவரும் தயாரானதும் கார்கள் அந்தப் பண்ணை வீட்டிலிருந்து கோயிலை நோக்கி விரைந்தன. கோயிலின் வெளிப்புறத்தில் காரை நிறுத்தியவர்கள் இறங்கி கால்நடையாய் கோயிலை நோக்கி நடந்தனர்.

திருவிழா என்பதால் வழியடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலும் சுற்றிலும் புதிதாய் முளைத்திருந்த கடைகளுமாய் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மறுநாள் திருவிழா என்பதால் வேளை தவறாமல் பூஜைகளும் யாகங்களும் நடந்து கொண்டிருக்க, யாகச்சாலையில் உச்சரித்த மந்திர உச்சாடனங்கள் ஒலிபெருக்கி வாயிலாக கோயிலுக்கு வருவோரின் செவியை அடைந்து அவர்கள் மனதை அமைதிப்படுத்தின.

கிருஷ்ணா மகளைத் தூக்கிக் கொண்டவன் துளசியிடம் கடைவீதியைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டே வர, ராகுல் சஹானாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு அவளைக் கவனமாய் அரவணைத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடை போட்டான்.

இதில் தனித்துவிடப்பட்ட சுகன்யாவும் விஷ்வாவும் பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ரங்கநாயகியுடனும் சுபத்ராவுடனும் உரையாடிக்கொண்டே வந்த இருவரது விழிகளும் ஒருவரை ஒருவர் காரணமின்றி தொட்டு மீள அதைப் பெரியவர்கள் கண்டுபிடித்துத் தமக்குள் கண்களால் பேசிக்கொண்டனர்.

மீனா, சாரதா, உமா மற்றும் மகேஷ்வரி கோயிலின் அழகையும் தெய்வீகத்தன்மையையும் சிலாகித்துப் பேசிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தனர்.

யாகச்சாலை பூஜை ஆரம்பித்துவிட்டிருந்ததால் ஆண்கள் அனைவரும் ஒரு புறமாய் சென்றுவிட, பெண்கள் மற்றொரு புறத்தில் அமர்ந்துகொண்டனர். பூஜை முடியவும் அம்பிகைக்கு தீபாராதணை காட்டப்பட ராகவேந்திரன் பயபக்தியுடன் ஆரத்தியை எடுத்துக் கொண்டார்.

மனதிற்குள் “என் சவிம்மாவை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டனு நான் உன் மேலே கோவமா இருந்தேன் தாயே… ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து என் கிருஷ்ணாவுக்கு இப்பிடி ஒரு அருமையான மனைவியைக் குடுத்திருக்கியே! இது போதும்… என் பிள்ளைங்க ரெண்டு பேரும் அவங்க வாரிசுகளோட எந்தக் குறையுமில்லாம வாழணும்” என்று மனதாற வேண்டிக்கொண்டார்.

கிருஷ்ணா அங்கிருந்த ஊர்க்காரரகளிடம் உரையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த துளசி அவனிடம் “கிரிஷ்! நீயும் இந்த ஊர் ஸ்லாங்ல பேச ஆரம்பிச்சிட்டியே” என்று ஆச்சரியப்பட

கிருஷ்ணா “நானும் இந்த ஊர்க்காரன் தானே துளசி… இந்த மண்ணை மிதிச்சதும் பாஷையும் மாறிடுது” என்று ஊர்ப்பற்றோடு உரைக்கவே துளசி மூன்று விரல்களை அபிநயம் பிடித்து அருமை என சைகை செய்தாள்.

பின்னர் பெரியவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணாவும் துளசியும் தம்பதிசமேதராய் அம்பிகையை மனமுருக வேண்டிக்கொண்டனர். இருவரது வேண்டுதலின் சாராம்சமும் ஒன்று தான். சஹானாவுக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டும். கிருஷ்ணா அப்படி வேண்டிக்கொள்ள ஒரு பலமான காரணம் இருந்தது. ஆனால் துளசி வேண்டிக் கொண்டதற்கு முக்கியக்காரணம் கருவுற்றதிலிருந்து சஹானாவின் முகத்தில் தெளிவில்லை என்பதே. ஏதோ ஒன்று அவள் மனதைக் குழப்புகிறது, அது என்ன என்று அவளிடம் தூண்டித் துருவிக் கேட்பது நாகரிகமாகாது என்பதால் அவளுக்கு மனஅமைதியைக் கொடுக்குமாறு அந்த லோகநாயகியிடமே வேண்டிக்கொண்டாள் துளசி.