💗அத்தியாயம் 4💗

துளசியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணாவின் உள்ளமும் உடலும் ஒருசேர களைத்துப் போய்விட்டது. பொன்நிறத்தகட்டில் ஆர்.கே பவனம் என்ற பெயருடன் கருப்புநிற இரும்புக்கம்பிகளுடன் ஓங்கி உயர்ந்த கேட் திறக்க அவனுக்கு வணக்கம் வைத்த காவலாளிக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு காரை பார்க்கிங்கில் நிறுத்திப் பூட்டினான்.

இரவின் கருமையை முடிந்தளவுக்கு விரட்ட முயலும் விளக்குகள் ஆங்காங்கு புல்வெளிக்கு நடுநடுவே மின்னிக் கொண்டிருக்க அதன் நடுவிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் கருங்கற்படிகள் வீட்டை நோக்கி மேலேற கார்ப்பார்க்கிங்கில் இருந்து மலைமேல் அமைந்திருப்பது போல உயரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது ஆர்.கே பவனம் என்ற மூன்றுமாடிகளைக் கொண்ட பழமையும் புதுமையும் கலந்த அந்த பங்களா.

பங்களாவுக்குள் செல்வதற்கான கருங்கற்படிகளில் மேலேச் செல்வதற்காக ஏறியவனின் பார்வையில் விழுந்தது சில சிற்பங்கள் சூழக் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய நீருற்று.

அதில் விழுந்து கொண்ட நீர் மெதுவாகச் சென்று சற்று தூரத்தில் அழகுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த செயற்கைக்குளத்தில் சென்று சேர அக்குளத்தை மாசுபடுத்தாவண்ணம் வளர்க்கப்பட்டிருந்த நீர்வாழ்த்தாவரங்களின் இடையிடையே அலர்ந்திருந்த அல்லிமலர்கள் வெளியிட்ட நாசியை உறுத்தாத நறுமணத்தை உள்ளிழுத்தபடியே தொலைவில் தெரியும் வீட்டை வெறித்தவன் அதை நோக்கிச் செல்லாமல் பங்களாவின் கிழக்குப்பக்கமாய் விரிந்த புல்வெளியில் நடைபோட்டபடி அங்கிருந்த சிறிய நீச்சல்குளத்தின் அருகே சென்று அமர்ந்தான்.

சூழ்ந்திருந்த வானுயர் மரங்களும் வாயிலுக்கு அரணாக அழகாக வளர்க்கப்பட்டிருந்த குட்டைப்புதர்ச்செடிகளுமாக ரம்மியமாகக் காட்சியளித்த அந்தப் பங்களாவில் பணிபுரியும் வேலையாட்கள் அனைவரும் கார்பார்க்கிங் இருக்கும் கீழே உள்ள நிலப்பகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு பணிமுடிந்ததும் சென்று விட அப்பங்களா மிகவும் அமைதியாக இருந்தது.

கிருஷ்ணா நீச்சல்குளத்தின் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்து சிறிதுநேரம் நீச்சல்குளத்தின் தண்ணீரில் விழுந்த நிலவின் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோ தோண அந்தப் பங்களாவின் புறம் திரும்பியமர்ந்தவன் பெருமூச்சுவிட்டபடி “மை டியர் ராதாகிருஷ்ணன் அவர்களே! உங்க பெயரைத் தானே எனக்கு வச்சிருக்காங்க… உங்களுக்குனு இருக்கிற ஒரே ஒரு பேரன் நான் தானே!… நான் படுற கஷ்டம்லாம் உங்களுக்குத் தெரியாதா தாத்தா? கோட்டை மாதிரி வீடு இருக்கு… எள்ளுனா எண்ணெய்யா நிக்கிற மாதிரி சர்வெண்ட்ஸ் இருக்காங்க….இன்னும் மூனு தலைமுறைக்குத் தேவையானச் சொத்து இருக்கு… ஆனா உங்கச் செல்லப்பேரனுக்கு மனநிம்மதி இல்லையே தாத்தா… இதெல்லாம் ஒருத்தியால மட்டும் தான் எனக்குத் தரமுடியும்.. ஆனா அவ என்னை விஷமா வெறுக்கிறாளே” என்று வாய்விட்டுப் புலம்பி மனவலியைக் குறைக்க முயன்றான்.

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவன் வெகுநேரமாகிவிட்டதை உணர்ந்து அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். ஒரு ராஜகுமாரனின் கம்பீரத்தோடு வந்தவனை எப்போதும் போல இன்முகத்தோடு வரவேற்றது அந்தப் பங்களா. அதன் ஆளுயர மரக்கதவைத் தாண்டி ஹாலின் தரைவிரிப்பில் காலை வைத்தவனின் காதில் விழுந்தது அந்தப் பேச்சுச்சத்தம்.

“ராகுல்! உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? உன்னைனு இல்லை, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு இல்லை… என் பேச்சைக் கேக்காம எல்லாருமா சேர்ந்து கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சு இப்போ நிச்சயதார்த்தத்துல கொண்டு வந்து நிறுத்திருக்கிங்க…. ஏன்டா என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்க? என் பிரச்சனை என்னனு தெரிஞ்ச நீயே இப்பிடி பேசுனா என்ன அர்த்தம்?” என்று தெளிவானக்குரலில் இயம்பியவளின் முன்னே சென்று நின்றான் கிருஷ்ணா.

அவனைக் கண்டதும் போனில் “நான் அப்புறமா பேசுறேன் ராகுல்.. பை… ம்ம்… குட் நைட்” என்று சொல்லி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைப் பார்த்தாள் அந்த இளம்பெண்.

கிட்டத்தட்ட அவனது சாயலில் அவனது உயரத்தில் அடர்ந்தச் சுருட்டை முடியுடன், அகன்ற தீட்சண்யமான விழிகளுடன், பார்த்தவுடன் மனதை அள்ளும் அழகுடன் அந்த வீட்டின் இளவரசிக்கே உரித்தான கம்பீரத்துடன் சிவப்பு நிற டீசர்ட், கருப்புநிற பட்டியாலா பேண்ட் சகிதம் நின்று கொண்டிருந்தாள் அவள். அவள் தான் சஹானா; கிருஷ்ணாவின் தங்கை.

தங்கை என்றால் உடன்பிறந்த தங்கை அல்ல. கிருஷ்ணாவின் சித்தப்பா மகள். அவனை விட மூன்று வயது இளையவள். அவர்களின் மருத்துவமனை நிர்வாகம் முழுவதையும் தனது மேற்பார்வையில் வைத்திருப்பவள். தெளிவானச் சிந்தனையும், கம்பீரமான அழகும் ஒருங்கே கொண்டவளான சஹானாவுக்கு இப்போதைக்கு இருக்கும் பெரும்பிரச்சனையே அவளுக்கும் கிருஷ்ணாவின் நண்பனான ராகுலுக்கும் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தமும் அதைத் தொடர்ந்து நடைபெற போகின்ற திருமணமும் தான்.

அவள் தன் எதிரே நிற்கும் தமையனைத் தவிப்புடன் பார்த்தபடி “கிரிஷ்… நான் மறுபடியும் சொல்லுறேன்.. இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு.. உன் ஃப்ரெண்ட் வாழ்க்கை என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதால நாசமாயிடும்னு தெரிஞ்சும் எப்பிடி உன்னால சாதாரணமா இருக்க முடியுது?” என்று கேட்க

கிருஷ்ணா அவளது சுருட்டை முடியை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தபடி “சஹா உன்னைக் கல்யாணம் பண்ணனும்கிறது ராகுலோட முடிவு… இதுக்கு இடையில நாங்க யார் என்ன சொன்னாலும் அவன் கேக்கிறதா இல்லை… அவன் உன்னை ரொம்ப காதலிக்கிறான்… அவனோட முழுக்காதலையும் உன் கிட்ட ஒப்படைக்கிற நாளுக்காக ஆவலா காத்திருக்கிறவன் கிட்ட போய் கல்யாணத்தை நிறுத்திடுனு சொன்னா நல்லாவா இருக்கும்?” என்று தங்கையைச் சமாதானம் செய்ய முயன்றான்.

சஹானா அவனது வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டவள் “எக்ஸாட்லி கிரிஷ், அதையே தான் நானும் சொல்லுறேன்… ராகுலோட உண்மையானக் காதலுக்கு நான் தகுதியானவ கிடையாது… என்னால ஒரு சாதாரணப் பொண்ணு மாதிரி நடக்கப் போற கல்யாணத்தை நினைச்சுச் சந்தோசப்படவோ, கனவு காணவோ முடியலை… காரணம் என்னன்னு உனக்கே தெரியும் கிரிஷ்.. எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்பிடி பேசுனா என்ன அர்த்தம் கிரிஷ்? நான் ராகுலுக்குப் பொருத்தமானவ இல்லை” என்று படபடவென்று வெடித்துத் தீர்த்தாள்.

கிருஷ்ணா கையைக் கட்டியபடி படபடவென்று பொரிந்து தள்ளும் தங்கையைப் பார்த்தபடி நின்றிருந்தவன் அவளைப் பேசுவதை நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு “லிசன்! இன்னொரு தடவை ராகுலோட காதலுக்கு நீ தகுதியானவ இல்லைனு என்னோட காது படச் சொல்லக் கூடாது சஹா! பிகாஸ் இந்த உலகத்துல பிறந்த ஒவ்வொரு உயிரும் உண்மையான காதலை அடையுற தகுதியுடையது தான்.. அதுல நீ மட்டும் விதிவிலக்கு கிடையாது… எனக்கு என்னோட காதல் கிடைச்ச மாதிரி உனக்கும் உன்னோட காதல் ராகுல் மூலமா கிடைக்கும்”

குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவன் சொன்னதைக் கேட்டு முடித்தவளுக்கு அவனது ‘எனக்கு கிடைத்தக் காதல்’ என்ற வார்த்தை மனதுக்குள் பெரும் நிம்மதியைக் கொண்டுவரவே இப்போது பேச்சை கிருஷ்ணாவின் விவகாரத்தைப் பற்றியதாய் மாற்றினாள் அவள்.

“கிரிஷ்! உன்னோட பிரின்சஸை மறுபடியும் பார்த்திட்டியா? அவ என்னடா சொன்னா? இன்னும் உன் மேல கோவமா தான் இருக்காளா? அவ போட்டோ வச்சிருந்தா காட்டேன் ப்ளீஸ்” என்று ஆர்வமாய்க் கேட்டவளைக் கண்டு விரக்தியுடன் புன்னகைத்தான் கிருஷ்ணா.

“சஹா! இப்போ விஷயம் என்னோட பிரின்சஸ் பத்தினது இல்லை… உன்னோட கல்யாணம் பத்தினது… நீ மட்டும் ராகுலை கல்யாணம் பண்ணிக்கத் தயங்கினனா கட்டாயமா டாட் என்னை மன்னிக்கவே மாட்டாரு… அவர் கடந்த சில மாசங்களா தான் என் கிட்ட முகம் குடுத்தே பேசுறாரு.. அதுவும் ராகுல் உன்னை கல்யாணம் பண்ணிக்க அவர் கிட்ட பெர்மிசன் கேட்டதால இந்தக் கல்யாணம் உன்னோட லைப்ல ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்கிற நம்பிக்கையில தான் அவர் என்னை மன்னிச்சு என் கிட்டப் பேச ஆரம்பிச்சாரு…

இப்போ நீ மட்டும் கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அவர் மறுபடியும் என் மேல கோவப்பட்டு என்னை ஒரேயடியா வெறுத்துடுவாரு சஹா… எப்போ ராகுல் மணமேடையில உன் கழுத்துல மூனு முடிச்சு போடுறானோ அப்போ தான் நான் என்னோட பிரின்சஸ் பத்தியும், எங்களோட காதலைப் பத்தியும் யோசிப்பேன்… சோ நீ கொஞ்சம் நிதானமா யோசிச்சு நடந்துக்கோ” என்று சொல்லிவிட்டு மேல்தளத்தில் இருக்கும் அவனது அறைக்குச் செல்ல மாடிப்படியில் ஏறியவன் அவள் கண்ணிலிருந்து மறையும் வரை சஹானா அங்கேயே தான் நின்றிருந்தாள்.

கிருஷ்ணாவின் வார்த்தைகளை அசை போட்டபடியே தனது அறையை அடைந்தவளை படுக்கை வரவேற்றது. அறையில் விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் அருகில் கிடந்த தலையணையைக் கட்டிக் கொண்டு எண்ண அலைகளில் நீந்த ஆரம்பித்தாள். என்ன தான் அவளது வாழ்க்கையில் நடந்தச் சம்பவங்களுக்கு கிருஷ்ணா அவனே பொறுப்பாளி என்று பழியேற்றாலும் நடந்த உண்மைகள் யாவும் சஹானா நன்கு அறிவாளே!

தனது வாழ்க்கை மட்டுமில்லை, இன்று கிருஷ்ணா அவனது காதலை இழந்து உயிரற்ற ஜீவனாய் வாழுவதற்கும் மூலக்காரணி தான் மட்டுமே என்பதும், அதை யாரிடமும் சொல்லக்கூட இயலாத வகையில் கிருஷ்ணாவுக்கு தான் அளித்த சத்தியமும் அவளை நிம்மதியின்றி பரிதவிக்க வைத்தது,

ஒவ்வொரு முறையும் அவளது பெரியப்பா ராகவேந்திரன், கிருஷ்ணாவின் தந்தை, தனது வாழ்வு பட்டமரமாகி விட்டதற்கு கிருஷ்ணா தான் காரணம் என்று அவனைக் குற்றம் சாட்டும் போது “எல்லாத்துக்கும் நான் தான் காரணம்” என்று கத்திவிடும் ஆவேசம் அவளுக்குள் எழும். ஆனால் அதைக் கண்டுகொண்ட கிருஷ்ணாவின் எச்சரிக்கைப்பார்வை அவளது வாயைக் கட்டிப்போட்டுவிடும்.

இவ்வாறு பல்வேறு சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டவள் “என்னால கிருஷ்ணா பட்ட அவமானம், கஷ்டம் எல்லாமே போதும்… இனிமே அவனுக்கும் பெரியப்பாக்கும் இடையில என்னால எந்த இடைவெளியும் வந்துடக்கூடாது… இதுக்காகவாச்சும் நான் ராகுலைக் கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்” என்ற முடிவை எடுத்துவிட்டு உறங்க முற்படுகையில் நேரம் பின்னிரவைத் தொட்டுவிட்டது.

**************

அதே நேரம் ஊட்டியில் துளசியும் கிட்டத்தட்ட அலைபாயும் மனநிலையுடனே உழன்று கொண்டிருந்தாள். அவள் அருகில் கள்ளம் கபடமற்ற முகத்துடன் உறங்கும் மகளை ஆதுரத்துடன் பார்த்தவளின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்.

கிருஷ்ணா எவ்வாறு இவ்வளவு உறுதியாக மித்ராவை அவனது மகள் என்று நம்புகிறான்? ஒருவேளை தனது வாழ்வில் மீண்டும் நுழைய அவன் மித்ராவை பகடையாக்குகிறானோ? தன்னைக் கண்ட தினத்திலிருந்து இன்று வரை தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதாக அவன் கூறுவது உண்மையாக இருக்குமோ?… இந்தக் கேள்விகள் அனைத்தும் பூதாகரமாகத் தோற்றமளிக்க துளசியால் நிம்மதியாகக் கண்ணயர இயலவில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்னர் காதல் என்னும் மாயநதியில் இறங்கியவள் கிருஷ்ணா என்னும் சுழலில் மாட்டிக்கொண்டு அரும்பாடு பட்டு வெளிவந்து இன்று ஒரு அமைதியான தெளிவான நீரோடை போன்ற வாழ்க்கையை அவளது செல்லமகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்க, தற்போது மீண்டும் கிருஷ்ணாவால் தனது மனம் அலை பாயத் தொடங்கிவிட்டது என்று எண்ணிக் குறைபட்டுக் கொண்டாள் துளசி.

ஆனால் ஆறு வருடத்துக்கு முன்னர் இருந்த துளசி வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவள். இன்று இருக்கும் துளசியின் அறிவுமுதிர்ச்சியில் ஒரு சதவீதம் கூட இல்லாத முட்டாள் பெண் அவள். இப்போது காலம் என்ற ஆசான் அவளுக்கு அளித்திருந்த வலிமிகுந்த அனுபவங்கள் அவளைப் பக்குவப்படுத்திவிட்டதால் இம்முறை அவள் அதிகம் சிரமப்படாமல் தன்னைக் கிருஷ்ணாவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்க முற்பட்டாள்.

அதன் முதல் படி இனி கிருஷ்ணாவே அவள் எதிரில் வந்தாலும் அவள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவளது வேலையைக் கவனிக்க வேண்டும். இரண்டாவது எக்காரணத்தைக் கொண்டும் மித்ராவை அவன் சொந்தம் கொண்டாட அனுமதிக்கக் கூடாது.

மூன்றாவது அவன் பொருளாதாரநிலையைச் சுட்டிக்காட்டி மித்ராவைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றால் அதை முறியடிக்கும் முயற்சியாக இனி தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஆர்டரையும் கவனமாகச் செய்து கொடுத்து தனது துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அவனுக்குச் சற்றும் குறையாத வசதி வாய்ப்புகளை மித்ராவுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இத்தீர்மானங்களைத் தனது ஆழ்மனதில் பதியவைத்துக் கொண்டவள் அவை கொடுத்தத் தைரியத்தில் கண்ணை மூடி நித்திராலோகத்தில் அடியெடுத்து வைத்தாள். மித்ரா தூக்கக்கலக்கத்தில் அன்னையைக் கட்டிக்கொள்ள மகளை அணைத்தபடி உறங்கத் தொடங்கினாள் துளசி.

************

“சுகி! அந்த லெஹங்காவைப் பேக் பண்ணிட்டியா? பொண்ணோட அம்மாவுக்கு ஒரு பிளவுஸ்ல ஸ்டோன் ஒர்க் பண்ணச் சொல்லிருந்தாங்க! அதுவும் இதுல இருக்கு தானே” என்று பரபரப்பாகப் பேசியபடி வேலைபாடுகள் முடிந்த ஆடைகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தும் பெரிய பேக்கை எடுத்துவைத்தாள் துளசி. நேற்றைய கலவரத்தில் தடைபட்டுப் போன கோயம்புத்தூர் திருமண ஆர்டருக்கான உடைகளை மணமகள் வீட்டில் ஒப்படைப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் துளசியும் சுகன்யாவும்.

சுகன்யா இன்னும் சில டிசைன்கள் வரையப்பட்ட கோப்புகளை எடுத்து பேக்கில் வைத்துவிட்டு, வேலைபாடுகள் முடிந்த உடைகளை கசங்காமல் அதற்கான பேக்கில் வரிசையாக வைத்துவிட்டு நிமிர்ந்தவள் “எல்லாம் பக்காவா இருக்கு.. அந்த மகாராணி இதைப் பார்த்துட்டு பிடிச்சிருக்கா, சேஞ்சஸ் பண்ணனுமானு மட்டும் தான் சொல்லணும்” என்று கூறிவிட துளசி நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

கையில் வைத்திருந்த மொபைலில் நேரத்தைப் பார்க்க காலை ஆறு மணியைக் காட்டியது அது. மித்ரா இன்னும் துயில் கலையாமல் இருக்க துளசிக்கும் சுகன்யாவுக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு வந்த மீனாவிடம் “மா! மித்ராவை ஸ்கூலுக்கு ரெடி பண்ணிடுங்க… நாங்க இந்த டிசைன்ஸ் எல்லாமே காட்டிட்டு மதியத்துக்குள்ள வீட்டுக்கு வந்துடுவோம்” என்று சொல்ல

மீனா “இதை நீ சொல்லணுமா துளசி? மித்ராவைப் பத்தி கவலைப்படாம வேலையில கண்ணா இருந்து முடிச்சுட்டு வாங்கடா.. அப்பிடியே அவ அடம்பிடிச்சாலும் உடனே உனக்கு போன் பண்ணுறேன்… நீ சொன்னதுக்கு அப்புறம் உன் பொண்ணு கப்சிப் தான்” என்று பாவனையுடன் செய்து காட்ட அதைப் பார்த்த துளசிக்கும் சுகன்யாவுக்கும் காலையிலேயே சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வர அந்த வீட்டைச் சிரிப்புச்சத்தம் சில நிமிடங்களுக்கு ஆக்கிரமித்திருந்தது.

அதே நேரம் கோயம்புத்தூரில் ஆர்.கே பவனம் பறவைகளின் கானத்தில் விழித்துக் கொண்டது. அந்த மாளிகையில் பணியாட்கள் பரபரப்புடன் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய ஆரம்பிக்க, வீட்டின் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவராக விழித்துக் கொண்டனர்.

கிருஷ்ணா உடற்பயிற்சி செய்வதற்காக கையில்லாத பனியன், ஷார்ட்ஸ் சகிதம் ஹாலுக்கு வர அவனது தங்கையும் டிசர்ட், யோகா பேண்ட் அணிந்தபடி ஹாலில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

படியிறங்கும் கிருஷ்ணாவைப் பார்த்ததும் உற்சாகமாய் “கிரிஷ் குட் மார்னிங்” என்று புன்னகையுடன் இயம்ப கிருஷ்ணா தங்கையின் சிரிப்பு கொடுத்த குதூகலத்துடன் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளது போனிடெயிலை இழுத்து குறும்பு செய்தபடி “என்ன நூடுல்ஸ் இன்னைக்கு காத்தாலேயே பிரிஸ்கா இருக்கு? இது சரியில்லையே” என்று கேலி செய்ய

சஹானா பொய்யாய் முகம் சுளித்தவள் “ஆவ்! வலிக்குதுடா கிரிஷ்… இவன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த இந்த ஆர்.கே பவன்ல யாரும் இல்லையா?” என்று விளையாட்டாய் கத்தினாள்.

அப்போது வெள்ளிச்சதங்கையைப் போல ஒரு சிரிப்பொலி கேட்க இருவரும் திரும்பி பார்த்துவிட்டு அங்கே நின்ற நடுத்தரவயதுப் பெண்மணியைக் கண்டதும் அவர்களும் அவருடன் சேர்ந்து நகைக்க ஆரம்பித்தனர்.

அவர் சாரதா… இந்த ஆர்.கே பவனத்தின் சொந்தக்காரரான ராதாகிருஷ்ணனின் இளைய மருமகள்… ஆனால் அதற்குரிய பகட்டோ, அலட்சியமோ, கர்வமோ எதுவுமில்லாமல் அனைவரிடமும் இன்முகத்தோடு பழகத் தெரிந்தவர்.

அவரது சகோதரியும் ஆர்.கே.பவனத்தின் மூத்த மருமகளுமான சாவித்திரியின் மறைவுக்குப் பிறகு தாயின்றி தவித்த கிருஷ்ணாவைத் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று தாய்க்குத் தாயாய் அவனைத் தாங்கியவர்… அவரது கணவரும் ராதாகிருஷ்ணனின் இளைய மகனுமான விஜயேந்திரனும் மனைவியைப் போல எளிமையும், பழகுவதற்கு இனிமையும் கலந்த மனிதர் தான்.

இப்போது மூத்தச் சகோதருடன் சேர்ந்து மாளிகையைச் சுற்றி பரந்திருக்கும் புல்வெளியில் நடைபயிற்சியில் இருந்தார் அவர்.

மனைவி மக்களின் சிரிப்புச்சத்தம் காதில் விழவே அந்த அற்புதக்காட்சியைத் தமையனுடன் சேர்ந்து ரசிக்க வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் விஜயேந்திரன். அவருடன் நடந்து வந்த உயரமான, வயதினால் ஏற்பட்ட நரையழகுடன் கம்பீரமான மனிதர் தான் ராகவேந்திரன். ராதாகிருஷ்ணனின் மூத்தப்புதல்வர்… சாவித்திரியின் கணவர்…

இவ்வளவுக்கும் மேலாக இப்போது அவர் உள்ளே வந்து தனது மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்தபடி பார்த்த பார்வையில் முகம் மாறி அமர்ந்த கிருஷ்ணாவுக்கு உயிர் கொடுத்து அவன் இப்பூவுலகுக்கு வரக் காரணமானவர்.

சில வருடங்களாக தந்தைக்கும் மகனுக்கும் சுமூகமான உறவு இல்லையென்றாலும் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இருந்தாலும் முன்பு போல இருவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்வதை முடிந்தமட்டும் தவிர்த்தனர்.

ராகவேந்திரன் வழக்கத்துக்கு மாறாக இன்று மகனும், தம்பி மகளும் சிறு பிள்ளைகள் போல சாரதாவுடன் சிரித்துப் பேசுவதைப் பார்த்துப் பூரித்தவர் சஹாவிடம் “குட்டிமா! என்னடா ஆச்சு? காலையிலேயே நீயும் உன் அண்ணனும் ரொம்ப குஷியா இருக்கிங்க போல” என்றபடி சோபாவில் அமர, அவரைத் தொடர்ந்து அமர்ந்தார் விஜயேந்திரன்.

சஹானா பெரியப்பாவுடன் கலகலப்பாக உரையாட ஆரம்பிக்க விஜயேந்திரன் பள்ளியில் நேற்றைக்கு நடந்த நிகழ்வுகள் குறித்து கிருஷ்ணாவுடன் விவாதிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையே பணியாள் பெரியவர்களுக்கு தேநீரும், சஹானாவுக்கு வெந்நீரில் எலுமிச்சைச்சாறு கலந்தும் கொண்டு வந்திருக்க சாரதா அதை எடுத்து அனைவருக்கும் கொடுக்க, கிருஷ்ணா தான் உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்வதாகக் கூறி அந்த மாளிகையின் வெளிப்புறத்தில் மேற்குப்பக்கமாக அவனுக்கென்று பிரத்தியேகமாகக் கட்டப்பட்டிருந்த அவனது உடற்பயிற்சிக்கூடத்தை நோக்கி நடையைக் கட்டினான்.

ராகவேந்திரன் சஹானாவிடம் “இன்னைக்கு நீ ஆபிஸுக்கு வர வேண்டாம் குட்டிமா! உன்னோட பிரைடல் டிரஸ்ஸை இன்னைக்கு டிசைனர் கொண்டு வர்றாங்கனு சாரு சொன்னா… சோ நீ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு.. சாரு! நீயும் கூடவே இருந்து டிரஸ்ல எதும் சேஞ்சஸ் வேணும்னா அவங்க கிட்ட இன்பார்ம் பண்ணிடும்மா” என்று சொல்லிவிட சாரதா சரியென்று தலையாட்டினார்.

சாரதாவும் சாவித்திரியும் ராதாகிருஷ்ணனின் உடன்பிறந்த தங்கை சுபத்ராவின் மகள்கள். சிறுவயதிலிருந்தே அத்தைக்குடும்பத்துடன் நல்ல உறவு இருந்ததால் ராகவேந்திரனும் சரி, விஜயேந்திரனும் சரி சாவித்திரியையும் சாரதாவையும் பெயர் சொல்லியே அழைப்பர்.

ராகவேந்திரன் சாவித்திரியின் திருமணம் முடிந்தபிறகு ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி ரங்கநாயகியும் எத்தனையோ முறை அண்ணன் மனைவியை பெயர் சொல்லி அழைக்காதே என்று விஜயேந்திரனை அதட்டியும் அவராலோ ராகவேந்திரனாலோ இப்பழக்கத்தை மாற்ற இயலவில்லை.

சாவித்திரியின் மறைவு வரைக்கும் அவர் என்றுமே விஜயேந்திரனுக்கும் ராகவேந்திரனுக்கும் “சவிம்மா’ தான். அதே போல சாரதா ‘சாரும்மா’ தான். அது இந்நாள் வரைக்கும் மாறவில்லை.

இதை அதட்ட வேண்டிய தாயாரான ரங்கநாயகியும் கணவரின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணியும், சம்பந்தியுமான சுபத்ராவுடன் அவர்களின் சொந்த ஊரான பொள்ளாச்சிக்குத் தனது ஜாகையை மாற்றிவிட அண்ணனும் தம்பியும் ஆர்.கே பவனத்தில் மன்னர்களைப் போல வாழ்ந்து வந்தனர்.

இருவருக்கும் இருக்கின்ற ஒரே குறை தங்களது புத்திரச்செல்வங்களின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்குகிறதே என்பது தான். அந்தக் கவலையின் ஒரு பாதியைப் போக்கும் விதமாகக் கிருஷ்ணாவின் உயிர்த்தோழன் ராகுல் சஹானாவைக் காதலிப்பதாகச் சொல்லி அவளை திருமணம் செய்துவைக்குமாறு பெரியவர்களுடன் வந்து பேச, இதோ அவர்களின் நிச்சயத்தார்த்தமும் அருகே வந்துவிட்டது.

அவர்களின் மீதிக் கவலையான கிருஷ்ணாவின் வாழ்க்கை குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் விடையாக வரக்கூடியவள் ஆர்.கே பவனத்தை நோக்கி தனது டாடா நானோவில் வந்து கொண்டிருந்தாள்.

தொடரும்💗💗💗