💗அத்தியாயம் 37💗

கிருஷ்ணாவும் துளசியும் கோவையிலிருந்து திரும்பிய பிறகும் கிருஷ்ணா மனம் மாறாமல் இன்னும் அதே கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே சுற்றினான். துளசியிடம் சகஜமாகப் பேசுவதைத் தவிர்த்தவன் அவளது முகம் பார்ப்பதையே முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டான்.

அவனது மனநிலை இவ்வாறிருக்க துளசியோ கிருஷ்ணாவின் காதலைத் திரும்பப் பெறும் முயற்சியில் என்னென்னமோ செய்து பார்த்தாள். பதிலுக்குக் கிருஷ்ணா அவளிடம் ஒரு புன்னகையைக் கூடச் சிந்தவில்லையே.

கண்ணம்மா தடுத்தாலும் கேட்காமல் அவனுக்குப் பிடித்ததாகச் சமைத்துவைத்தால், அந்த நாளில் தான் அவனுக்குத் தொழில்முறை பேச்சு ஹோட்டலில் இருப்பதாகப் போன் வரும். உடனே கிளம்பிவிடுவான்.

சரி மித்ராவுடன் இருக்கும் போதாவது பேசுவான் என்று எண்ணினால், அப்போதும் மகளை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவளுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாட ஆரம்பித்துவிடுவான்.

அவனது புறக்கணிப்பைத் துளசியால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தாள். வீட்டுப்பெரியவர்களிடம் சொல்லிவிடலாமா என்று யோசிக்கும் போதே அது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் என்று அவளது மனசாட்சி தட்டிக் கழித்துவிடும்.

சுகன்யாவிடம் யோசனை கேட்கலாம் என்றால் அவளே இப்போது தான் மீனா அவளுக்கு வரன் பார்ப்பதாகச் சொன்னதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறாள். இப்போது துளசி தங்களின் பிரச்சனையை அவளிடம் சொல்லி வைக்க, அவளுக்கு மீண்டும் திருமணம் மீது தவறான அபிப்பிராயம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்துவிட்டுச் சுகன்யாவிடமும் அதை மறைத்துவிட்டாள்.

இவ்வாறு துளசி நிலைகொள்ளாமல் இருப்பதைக் கிருஷ்ணாவும் அறிவான். ஆனால் அவனால் சில விஷயங்களை இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே துளசியைத் தினமும் பார்த்து பேசினால் உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக உள்ள கோபம் மீண்டும் வெடித்துவிடுமோ என்று பயந்தவன் முடிந்தவரை அவளுடன் இருக்கும் நேரத்தைத் தவிர்த்தான்.

அதே நேரம் அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பெரியவர்கள் அறியாவண்ணம் கிருஷ்ணா தொடர்ந்தான். இது எல்லாவற்றுக்கும் மேலாக, கிரேசி அமெரிக்கா திரும்பிவிட்டதால் அகிலேஷின் குறுக்குப்புத்தி அடுத்து என்ன திட்டம் தீட்டியிருக்கும் என்று நண்பர்களுடன் கலந்தாலோசிப்பதிலேயே அவனது ஓய்வுநேரமும் கழிந்தது.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் இரவு கிருஷ்ணாவுக்கு அவனது மில்லின் சேமிப்புக்கிடங்கு காவலாளியின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. ராகுல் தான் அழைத்திருந்தான்.

“ஹலோ” என்று தூக்கக் கலக்கத்தில் பேசிய கிருஷ்ணாவுக்கு அவன் அடுத்தடுத்துச் சொன்னதைக் கேட்டதும் தூக்கம் பறந்தது. விருட்டென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தவன் அருகில் உறங்கிக் கொண்டிருப்பவளின் உறக்கம் கலையாமல் மெதுவாக அறையை விட்டு வெளியேறினான்.

எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக கோவையை நோக்கிக் காரைச் செலுத்தியவன் போய் நின்ற இடம் ஆர்.கே. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்.

அங்கே தான் சேமிப்புக்கிடங்கின் காவலாளி தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அனுமதித்தவன் ராகுல் தான். கிருஷ்ணா விறுவிறுவென்று உள்ளே சென்றவன் ராகுலிடம்

“சீரியசா எதுவும் இல்லையே ராகுல்? அவர் எப்பிடி இருக்காரு?” என்று வினவ

ராகுல் தயக்கத்துடன் “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாதுனு டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க… அவரோட வலது கையில காயம் கொஞ்சம் ஆழமா பட்டிருக்கு கிரிஷ்… நிறைய பிளட் லாஸ் வேற… நான் தான் டொனேட் பண்ணுனேன்… எல்லாம் அந்த அகிலேஷோட வேலை… இப்போவும் நீ அமைதியா தான் இருக்கப் போறியா கிரிஷ்?” என்று கிருஷ்ணாவைக் கேட்க

கிருஷ்ணா “நான் பிராமிஸ் பண்ணிருக்கேனேடா… சாகுற நேரத்துல என் கிட்ட சத்தியம் வாங்கிட்டுப் போனவளை என்னால ஏமாத்த முடியாது ராகுல்… ஆனா அகிலேஷை இந்தத் தடவை நான் சும்மா விடமாட்டேன்… அவன் பண்ணுற காரியத்தோட விளைவு இன்னைக்கு எனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆளைப் பாதிச்சிருக்கு.. அவரோட மனைவி, பிள்ளைங்க என்னடா பாவம் பண்ணுனாங்கனு அவன் சட்டையைப் பிடிச்சுக் கேக்குறேன்… நீ அந்த ரவுடிபசங்களை போலிஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டல்ல?” என்று கேட்க

ராகுல் “ஆமாடா! நான் எப்போவும் போல ரவுண்ட்ஸ் போயிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்னு ரெடியானப்போ தான் செக்யூரிட்டி கையில காயத்தோட ஓடிவந்தாரு.. அவர் விஷயத்தைச் சொல்லிட்டு மயங்கவும் நான் போலிஸ்கு கால் பண்ணிட்டேன்… போலிஸ் வர்றதுக்கு முன்னாடி அவங்க தப்பிக்காம இருக்கிறதுக்காக இவர் நம்ம மில்லைச் சுத்தி வைச்சிருந்த சேஃப்டி அலார்மை ஆக்டிவேட் பண்ணிட்டுத் தான் வந்திருக்கார்.. நல்லவேளையா ரொம்ப லேட் பண்ணாம போலிசும் வந்துட்டாங்க” என்று கூறவும் நிம்மதியுற்ற கிருஷ்ணா


‘அப்போ அவனுங்க போலிஸ்ல அகிலேஷை மாட்டி விட சான்ஸ் இருக்கா?” என்று நிதானமாகக் கேட்க

ராகுல் எரிச்சலுடன் “இப்போவும் அவனைப் பத்தி யோசிக்கிறியா? டேய் அவன் உன்னைக் கொல்லப் பார்த்தான், உன் பொண்ணை ஆள் வச்சு கடத்துனான், இப்போ உன் கிட்ட வேலை பார்த்த ஒரே காரணத்துக்காக அந்த செக்யூரிட்டி ஐ.சி.யூல கஷ்டப்பட்டுட்டிருக்காரு… இனியும் நீ அவனைப் பத்தி மட்டுமே யோசிச்சேனா உன்னை விடச் சுயநலக்காரன் யாரும் இருக்க மாட்டாங்க” என்று சற்று உரக்கவே கூறினான்.

கிருஷ்ணாவுக்குத் தெரியும் ராகுல் தன் மீதுள்ள அக்கறையில் தான் இப்படி கோபப் படுகிறான் என்று. எனவே சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பியவன் விமலாதித்தனின் வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தினான். ராகுல் சொன்னது போல இம்முறை அகிலேஷின் ஆட்டம் எல்லையைக் கடந்துவிட்டது தான்.

எப்போதும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் குறிவைப்பவன் இம்முறை அவனது முட்டாள்தனத்தால் சம்பந்தமற்ற ஒரு நபரின் உயிருடன் விளையாடிவிட்டான். இனியும் அவனை விட்டுவைத்தால் நல்லதன்று என்று புரிந்து கொண்ட கிருஷ்ணா காரை அவனது வீட்டின் கேட்டில் அருகில் நிறுத்தியவன் காவலாளியிடம்

“விமல் அங்கிள் கிட்ட கிருஷ்ணா வந்திருக்கேனு சொல்லுங்க… நான் வெயிட் பண்ணுறேன்” என்று சொல்ல

அவரும் விமலாதித்தனுக்கு இண்டர்காமில் அழைத்து கிருஷ்ணாவை உள்ளே விடவா என்று கேட்க விமலாதித்தன் இந்த நேரத்தில் ராகவேந்திரனின் மகனுக்குத் தன் வீட்டில் என்ன வேலை என்ற கேள்வியுடன் அவனை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு மனைவியை எழுப்பி விஷயத்தைச் சொன்னவர் அவருடன் ஹாலுக்கு வந்தார்.

பிரேமா, விமாலாதித்தனின் மனைவியும் அகிலேஷின் அன்னையுமான அப்பெண்மணி ஹாலில் விளக்குளை ஒளிரச் செய்தபோது கிருஷ்ணா கதவைத் தட்டினான். விமலாதித்தன் கதவைத் திறந்தவர் “கிரிஷ்! என்னப்பா ராத்திரி நேரத்துல வந்திருக்க? எதுவும் பிரச்சனையா?” என்று நிதானமாகக் கேட்க

கிருஷ்ணா “அகில் எங்கே அங்கிள்? நான் அவன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற அவர் தனது மனைவியை நோக்கினார்.

பிரேமா ஒரு தலையசைப்புடன் மகனது அறையை நோக்கிச் செல்ல விமலாதித்தன் கிருஷ்ணாவிடம் திருமணவாழ்க்கை எப்படி செல்கிறது என்று விசாரிக்க ஆரம்பித்தார். ராகவேந்திரனும் அவரும் ஒரே பூர்வீகம் என்பதால் எப்போதுமே இருவருக்குமிடையே ஊர்க்காரன் என்ற பாசம் இழையோடும்.

எனவே கிருஷ்ணாவிடம் அவர் உண்மையான அன்புடனே பேசுவார் எப்போதும். பொள்ளாச்சியில் சந்தித்துக்கொண்டால் இன்னும் குஷியாகி விடுவார் மனிதர். வியாபாரத்தில் புலி தான். ஆனால் வியாபாரத்தந்திரங்கள் எதையும் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரியாத வெள்ளையுள்ளம் கொண்ட மனிதர். அவருக்கேற்ற வாழ்க்கைத்துணையாய் வந்தவர் பிரேமா.

இருவரும் குணத்தில் குன்று தான்… ஆனால் அவர்கள் பெற்றெடுத்தப் புதல்வன் தான் காதலியின் மரணத்தாலும் இயல்பான பொறாமையாலும் கொடூரனாகி விட்டான்.

கிருஷ்ணாவின் எண்ண ஓட்டங்கள் தடைபட மாடிப்படியில் அன்னையுடன் இறங்கி வந்த அகிலேஷ் மீது அவன் பார்வை பதிந்தது. அகிலேஷ் முகத்தில் மருந்துக்குக் கூட குற்றவுணர்ச்சி இல்லை.

கிருஷ்ணா அவனைக் கண்டதும் முகம் இறுகியவன் சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வந்தான்.

“அஸ் யூஸ்வல் உன்னோட இந்தப் பிளானும் ஃப்ளாப் ஆயிடுச்சு அகில். ஆனா வழக்கமா நீ என்னையோ எனக்கு நெருக்கமானவங்களையோ தானே டார்கெட் பண்ணுவ? இந்தத் தடவை ஏன்டா சம்பந்தமே இல்லாம வேர்ஹவுஸ் செக்யூரிட்டியை அட்டாக் பண்ண சொன்னே?” என்று புருவச்சுழிப்புடன் ஏறிட்டவனைக் கண்டதும் அகிலேஷுக்குள் வெறி பிறந்துவிட்டது.

இம்முறையும் இவனிடம் தான் தோற்றுவிட்டோமா என்று குமுறியவனின் முகம் கோபத்தில் சிவக்க, இரு கைகளையும் இறுக்கியவன் தங்கள் இருவரையும் தன் பெற்றோர் கவனிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டான்.

“அந்த ஆளு ஒன்னும் செத்துப் போகலையே? நான் தான் நாலு தட்டு தட்டச் சொன்னேன்… ரொம்ப விசுவாசமா இருந்தான்… அதான் இப்போ வாழ்வா சாவானு ஐ.சி.யூல உயிருக்குப் போராடுறான்… உன் சரக்குக்கு எதுவும் ஆகலைனாலும் உன் ஸ்டாஃப்கு ஒன்னுனதும் நீ பதறி என்னைத் தேடி வந்திருக்கல்ல, இது போதும் எனக்கு… இனிமே நீ அடிக்கடி என்னை இப்பிடி பார்க்க வர வேண்டியதா இருக்கும் கிருஷ்ணா” என்று பழிவெறி மாறாமல் கூற விமலாதித்தனுக்கும் பிரேமாவுக்கும் மகனின் இந்த இன்னொரு முகத்தைக் கண்டு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

கிருஷ்ணா அகிலேஷின் பேச்சைக் கேட்டு நகைத்தவன் “நான் வருத்தப்பட்டு உன் கிட்ட வந்தேனு நினைச்சியா? நெவர்… நீ ஒரு முக்கியமான சீனை பார்க்கணும்… அதை உனக்குக் காட்டிட்டுப் போகத் தன் வந்தேன்” என்றபடி தன் மொபைலை எடுத்தவன் அகிலேஷிடம் அதை நீட்ட அவனோ ஆர்வமின்றி வாங்கியவன் அதில் ஓடிய வீடியோவில் பேசுபவளைக் கண்டதும் முகம் முழுவதும் சந்தோசமா துக்கமா என்று அடையாளம் காணாத உணர்வு எழ கண் கலங்க அந்த வீடியோவைப் பார்க்கத் தொடங்கினான்.

அதில் ஏஞ்சலினா படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க சுவாசம் மேலேறி இறங்கியது. மருத்துவர் உதட்டைப் பிதுக்குவது வீடியோவின் பிண்ணனியில் தெளிவாகத் தெரிந்தது.

மூச்சு வாங்கியபடி பேசினாள் ஏஞ்சலினா. அவள் அருகில் அவளது கரத்தைப் பற்றியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.

அவளது அண்ணன் மார்க்கின் மீது அவளுக்கு எவ்வளவு அன்பு என்று சிரமத்துடன் பேசிச் சிரிக்க கிருஷ்ணாவின் கண்களும் கலங்கியிருந்தது. அவளுடன் இருந்த நர்ஸ், அவளது தோழிகள் அனைவருமே கலக்கத்துடனே இருக்க அவள் அகிலேஷின் பெயரை உச்சரித்தாள்.

அதைக் கேட்டதும் வீடியோவில் அனைவருக்கும் அதிர்ச்சியானது போலவே அகிலேஷுக்கும் அதிர்ச்சியே.

ஏஞ்சலினா “அகில் என்னை ரொம்ப காதலிக்கிறான் கிரிஷ்… ஆனா எனக்கு அவனோட காதலை அடையுற பாக்கியம் இல்லை… உனக்கு ஒன்னு தெரியுமா? நானும் அண்ணாவும் சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போறப்போ எங்க ரெண்டு பேரையும் ‘கருப்பு பூதம்’னு சொல்லி வெள்ளைக்காரப்பசங்க கிண்டல் பண்ணுவாங்க… அப்போ நான் நினைப்பேன் நான் அழகில்லையா, அண்ணாவும் நானும் கருப்பினத்துல பிறந்தது எங்களோட தப்பானு நிறைய தடவை கண்ணீர் விட்டிருக்கேன் கிரிஷ்….

நம்ம காலேஜ்ல என்னை அப்பிடி நினைச்சு ஒதுக்காதவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸான நீங்களும், அகிலேஷும் மட்டும் தான்…. அவன் என் கிட்ட காதலைச் சொன்னப்போ என்னால அதை நம்பமுடியலை… அவனோட கம்பீரத்துக்கு முன்னாடி நான் பொருத்தமானவளா தெரியமாட்டேனு தான் நான் அவனை அவாய்ட் பண்ணுனேன்… என் ஹெல்த் கண்டிசனும் ஒரு காரணம்…

எனக்கு அகிலேஷை ரொம்ப பிடிக்கும் கிரிஷ்… உன் கிட்ட கடைசியா கேக்குறது ஒன்னு தான்…  நீயும் அவனும் ஒரே பகுதியைச் சேர்ந்தவங்க தானே… நீ எப்போவும் அவன் கூட சண்டை போடாதே ப்ளீஸ்… அவன் அவசரபுத்திக்காரனா இருக்கலாம்… ஆனா நீ தெளிவானவன்… எந்த மாதிரியான சமயத்திலயும் அகிலேஷைக் காயப்படுத்திடாதே கிரிஷ்…

ஏன்னா நான் அவனை நேசிக்கிறேன்… இது என்னோட கடைசி ஆசை… உன் ஃப்ரெண்டுக்காக இதைச் செய்வியா?” என்று தன் கரத்தைக் கிருஷ்ணாவிடம் நீட்ட அவன் அதைப் பற்றிக் கொண்டான்.

“நான் எப்போவும் அகிலேஷைக் காயப்படுத்த மாட்டேன்… இது என் மேல சத்தியம் ஏஞ்சல்” என்று அவன் உதடுகள் சத்தியத்தை உதிர்க்க ஏஞ்சலினாவின் கண்ணில் பெரிய நிம்மதி.

“எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு கிரிஷ்… என் அண்ணனை என்னால பார்க்க முடியுமானு தெரியலை… கடைசியா நான் அவனுக்கு என்னோட அன்பான முத்தத்தைக் குடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.. அவன் வர்ற வரைக்கும் நான் இருப்பேனானு எனக்குத் தெரியலை கிரிஷ்” என்று சொல்லும் போதே மூச்சு விடுவதில் சிரமம் உண்டானது ஏஞ்சலினாவுக்கு.

அவளது தோழிகள் வாயைப் பொத்திக் கொண்டு ஒரு ஓரமாகச் சென்று கண்ணீர் விட ஆரம்பிக்கவே, கிருஷ்ணாவின் கண்ணிலும் நீர் பெருகியிருந்தது.

“உன்னை நான் என்னோட சகோதரனா தான் நினைக்கிறேன்… நான் உன் கன்னத்துல கிஸ் பண்ணவா?” என்று கேட்ட தோழியின் கண்கள் சொருக ஆரம்பிக்கவும் பதறியவன் அவள் அருகே குனிந்தான்.

ஏஞ்சலினா கண்ணீருடன் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள். அவள் மூடியிருந்த கண்ணிலிருந்து கண்ணீர்த்துளிகள் கிருஷ்ணாவின் கன்னத்தை ஈரமாக்க அக்காட்சியைக் கண்ட அகிலேஷுக்கு அதில் சிறிதளவேனும் மற்ற உணர்வுகள் எதுவும் தோணவில்லை.

எப்படி ஒரு குழந்தை தன் பெற்றோருக்குக் கொடுக்கும் முத்தத்தில் அன்பு மட்டுமே கொட்டிக் கிடக்குமோ அதே போல ஏஞ்சலினா என்ற பெண்ணின் சகோதரப்பாசம் மட்டுமே கிருஷ்ணாவுக்குக் கொடுத்த முத்தத்தில் அகிலேஷுக்குத் தெரிந்தது.

அந்த வீடியோவில் அதற்கு மேல் ஏஞ்சலினாவின் உடலில் அசைவு இல்லாது போனதைக் கண்டதும் கண்ணீருடன் போனை கிருஷ்ணாவிடம் நீட்டியவன் தொப்பென்று தரையில் அமர்ந்தான்.

அமர்ந்தவன் “ஏஞ்சலினாஆஆஆ!” என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கவும் தான் அவனது பெற்றோருக்கு உணர்வு வந்தது.

பிரேமா மகனிடம் ஓடியவர் “அழுதுடுடா! மனசுக்குள்ளேயே வச்சு வச்சு இவ்ளோ நாளா கஷ்டப்பட்டியே! இன்னைக்கு அழுது எல்லாத்தையும் கொட்டிடு” என்று மகனைக் கட்டிக் கொண்டார்.

விமலாதித்தன் சிலை போல நிற்க கிருஷ்ணா அவரிடம் வந்தவன்

“அங்கிள்! ஹீ நீட்ஸ் அ சைக்கியாடிரிஸ்ட்… அவன் மனசுல ஏஞ்சலினா மேல இருந்த அளவுக்கடந்த காதல் தான் அவன் செஞ்ச எல்லா தப்புக்கும் காரணம்… எனக்கு நடந்த பிரச்சனை எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்னு எனக்குத் தெரியும் அங்கிள்… ஆனா என் ஃப்ரெண்டுக்கு பண்ணுன பிராமிஸை நான் காப்பாத்தணும்னு நினைக்கிறேன்… இந்த கேசை நான் வாபஸ் வாங்கிக்கிறேன்… அவனைத் திட்டிடாதிங்க… உங்க ரெண்டு பேரோட பாசம் தான் அவன் மனக்காயத்துக்கு மருந்து” என்று சொல்லிவிட்டு இன்னும் அழுகை அடங்காத அகிலேஷை வலியுடன் ஒரு முறை நோக்கியவன்

“நான் கிளம்புறேன் அங்கிள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். வீட்டுக்குள் இன்னும் அகிலேஷின் “ஏஞ்சலினா நானே உன்னை அசிங்கப்படுத்திட்டேனே” என்ற புலம்பல் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. ஒருவர் மீது நாம் வைக்கும் கண்மூடித்தனமான பாசம் பைத்தியக்காரத்தனமாக உருமாறியதன் விளைவு தான் அகிலேஷின் இன்றைய நிலை.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்கையில் காதல் மட்டும் எம்மாத்திரம்!