💗அத்தியாயம் 36💗

சில மணிநேரங்களுக்கு முன்பு…

மெரிடியன் ஹோட்டலின் ஏ.சி காற்றை வாங்கியபடி எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கிரேசியும் கிருஷ்ணாவும். அவள் கிருஷ்ணாவை நீண்டநாள் கழித்துச் சந்திக்கும் ஆர்வத்தில் சிறிது சிரத்தையுடன் அலங்கரித்து வந்திருந்தாள்.

அந்தப் பொன்னிறக் கூந்தலழகியின் கவனமெல்லாம் தன் எதிரே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதே காந்தமாய் கவரும் தோற்றத்துடன் கருநீலவண்ண முக்கால் கை போலோ ஷேர்ட்டும், கருப்பு ஜீன்சும் அணிந்து மேஜை நடுவில் இருக்கும் பூஜாடியில் தன் கவனம் முழுவதையும் வைத்தபடி புருவச்சுளிப்புடன் அமர்ந்திருந்த கிருஷ்ணாவின் மீது தான் இருந்தது.

இருவரும் ஆர்டர் செய்த காபி வந்துவிடவே கிருஷ்ணா கிரேசியிடம் எதுவும் பேசாமல் காபியை அருந்துமாறு சைகை செய்தவன் தானும் மிடறு மிடறாக விழுங்கத் தொடங்கினான். கிரேசியின் பார்வை அவனை அளவிடுவதைக் கண்டபடியே காபி கோப்பையை மேஜை மீது வைத்தவன் இங்கே அழைத்ததற்கான காரணத்தை வினவினான்.

கிரேசி முகத்தைச் சீர்படுத்திக் கொண்டவள் “உனக்கு மேரேஜ் ஆயிடுச்சுனு கேள்விப்பட்டேன் கிரிஷ்… அதான் விஷ் பண்ணலாம்னு கூப்பிட்டேன்” என்றாள் நுனிநாக்கு ஆங்கிலத்தில்.

கிருஷ்ணா அவளை நம்பமுடியாத பார்வை பார்க்க, மேஜை மீது இருந்த அவன் கரத்தின் மீது தனது கையை வைத்து அழுத்தியவள் “ஆர் யூ ஓகே கிரிஷ்? ஹவ் இஸ் யுவர் மேரேஜ் லைஃப்?” என்று கேட்க, கிருஷ்ணா விருட்டென்று தன் கரத்தை அவள் பிடியிலிருந்து விலக்கிக் கொண்டான். கிரேசி அதில் முகம் மாறினாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டாள்.

கிருஷ்ணா அவளை ஆர்வத்துடன் பார்த்தபடி “என் லைஃப்க்கு என்ன கிரேசி, செம ஹேப்பியா போகுது… ஒவ்வொரு நாளும் எங்களோட காதல் இன்னும் அதிகமாயிட்டே போகுது… ஆக்சுவலி எங்க காதலோடச் சின்னமா அழகா ஒரு குட்டித்தேவதை இருக்கா.. கூடிய சீக்கிரம் அவளுக்குத் தம்பி, தங்கச்சி பிறக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு… இவ்ளோ நாள் அவ பெரியவளாகட்டுமேனு வெயிட் பண்ணுனோம்” என்று சொல்லிக் கொண்டே போக, கிரேசிக்கு யாரோ அவள் காதில் அமிலத்தை ஊற்றியது போல இருந்தது.

தான் இவனைத் தன் காதல்வலையில் வீழ்த்தலாம் என்று எண்ணி அழைத்தால், இவன் அவனது காதல் வாழ்க்கையைப் பற்றி பேசி தன்னை சோகத்தில் ஆழ்த்திவிடுவான் போலயே என்று உள்ளுக்குள் குமுறியவள் அதைச் சாமர்த்தியமாக மறைத்துவிட்டுப் புன்னகை முகமாய் இருந்தாள்.

“நீங்க ஆறு வருசமா பிரிஞ்சிருந்திங்கனு நான் கேள்விப்பட்டேன் கிரிஷ்… ஆனா நீ வேற மாதிரி சொல்லுற?”

“யா! நானும் துளசியும் வெளியுலகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆறு வருசம் பிரிஞ்சு தான் இருந்தோம்.. பட் எங்களோட வாழ்க்கை சீக்ரேட்டா போயிட்டிருந்துச்சு… எல்லாத்துக்கும் அகிலேஷ் தான் காரணம்.. என்ன பார்க்குற? அவன் என்னைக் கொலை பண்ண டிரை பண்ணுனான்… எங்கே துளசியைப் பத்தி தெரிஞ்சா அவளையும் எதுவும் பண்ணிடுவானோனு யோசிச்சு தான் நான் எங்க காதலை, கல்யாணத்தை இவ்ளோ ஏன் என் பொண்ணு பிறந்ததையே இரகசியமா வச்சிருந்தேன்”

“பட் அகில்… ப்ச்… ஓகே! லீவ் இட்… உன் ஒய்ஃப் என்ன பண்ணுறாங்க?” என்று அகிலேஷின் பெயரைச் சாமர்த்தியமாய் மறைத்தவளை நோக்கிக் குறுநகை சிந்தினான் கிருஷ்ணா.

“அகில் உன் கிட்ட துளசி என்ன பண்ணுறானு சொல்லாம விட்டுட்டானா?” என்று கேட்டு கிரேசியை அதிரவைத்தான் கிருஷ்ணா.

தானும் அகிலேஷும் கூட்டு என்ற விபரம் இவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று எண்ணியவள் பதற்றத்துடன் “அ… அது… அவனை நான் பார்த்தே பல வருசம் ஆச்சு கிரிஷ்” என்று உளறிக் கொட்டி முடிப்பதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனாள் கிரேசி.

கிருஷ்ணா கேலியாகச் சிரித்தபடி மேஜை மேல் இருந்த டிஸ்யூவை எடுத்தவன் தன் கையாலேயே அவள் நெற்றியிலுள்ள வியர்வையை ஒற்றி எடுத்தபடி

“ஓ! மை புவர் லிட்டிள் கேர்ள்! அப்போ நம்ம கொஞ்சபேருக்கு மட்டுமே தெரிஞ்ச ஏஞ்சலினாவோட மரணப்படுக்கை விஷயம் இந்தியா வரைக்கும் எப்பிடி வந்துச்சு? ஒரு வேளை போட்டோ இருந்த கவருக்குக் கால் முளைச்சு வந்திருக்குமோ?” என்று கேலியாகக் கேட்டுவிட்டு டிஸ்யூவை வீசி எறிந்தான்.

கிரேசி இன்னும் எச்சிலை விழுங்கியபடியே தான் அமர்ந்திருந்தாள்.

“ஆங்! நம்ம ஏஞ்சலினா அவங்க ப்ரோவுக்கு சொல்ல நினைச்சதை வீடியோ தானே எடுத்தோம்… அப்போ போட்டோ எடுத்தது யாரு? அதை இந்தியாவுக்கு அனுப்புனது யாரு? துளசி கிட்ட எனக்கு ஆயிரம் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிற மாதிரி ஒரு சீனை கிரியேட் பண்ணுனது யாரு?” என்று கேள்விகளை அடுக்கும் போதே அவனது குரல் கேலித்தொனியிலிருந்து கோபத்துக்கு மாறியிருந்தது.

கிரேசியின் பச்சைநிற விழிகள் பயத்தில் மின்ன “நான்…. தெ…தெரியாம… உன் மேலே உள்ள லவ்ல…” என்று வார்த்தைகளைத் தந்தியடித்தாள்.

கிருஷ்ணா முறைத்த முறைப்பில் அதிர்ந்தவள் “நான் தான் அந்த போட்டோவை எடுத்தேன் கிரிஷ்… வீடியோவை எடுக்கிறப்போவே அதை ஸ்னாப்சா சேவ் பண்ணிட்டேன்… அகிலேஷ் உன்னை அடையறதுக்கு எனக்கு வழி சொல்லுறேனு ஆசை காட்டுனான்… அதனால தான் நான் அவனுக்கு அந்த போட்டோசை அனுப்புனேன்… அப்புறம் துளசி கிட்ட நான் சொன்னது அவ உன்னை விட்டு விலகுனா தான் நீ எனக்குக் கிடைப்பங்கிற எண்ணத்துல தான் இதையெல்லாமே பண்ணுனேன்… என்னை மன்னிச்சுடு கிரிஷ்” என்றவளை அருவருப்புடன் பார்த்தான் கிருஷ்ணா.

இறுகிப் போன குரலில் “உன் கிட்ட இதைப் பத்தி நான் ஆறு வருசத்துக்கு முன்னாடி கேட்டதுக்கு நீ என்ன சொன்ன? அப்போவே எனக்குத் தெரியும், இந்தக் கேவலமான வேலையைச் செஞ்சது நீ தான்னு… நான் உன்னை வார்ன் பண்ணுனேனா இல்லையா? இருந்தும் உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா நீ இந்தியாவுக்கு வந்திருப்ப?” என்று கேட்கவும்

கிரேசி “இது எல்லாமே உன் மேல உள்ள லவ்ல நான் பண்ணுன தப்பு கிரிஷ்… எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்று அழுகையினூடே சொல்ல

கிருஷ்ணா கோபத்துடன் மேஜையின் மீது ஓங்கியடித்தவன் “யூ ஷட் அப் இடியட்! லவ்னா என்னனு தெரியுமா உனக்கு? நான் இஷ்டமில்லைனு சொல்லியும் நீ இப்பிடி பின்னாடி வர்றதுக்குப் பேரு லவ் இல்லை… ஏஞ்சலினா உன்னை எவ்ளோ நம்புனா? உன்னால செத்தும் அவளுக்குக் கெட்டப்பெயர்…

நீ உன் ஃப்ரெண்டுக்கும் உண்மையா இல்லை, உனக்கு ஹெல்ப் பண்ணுறானே அகிலேஷ் சக்கரவர்த்தினு ஒரு கடைஞ்செடுத்த முட்டாள் அவனுக்கும் நீ உண்மையா இல்லை” என்று சொல்லவும் கிரேசி திடுக்கிட்டவளாய் தலை நிமிர்ந்தாள்.

கிருஷ்ணா அலட்சியத்துடன் அவளைப் பார்த்தவன் “என்ன பார்க்குற? இன்னும் ஏஞ்சலினாவோட வீடியோ என் கிட்ட இருக்கு… அதை அகிலேஷுக்குப் போட்டுக் காட்டுனா அவன் பண்ணுற முதல்வேலையே உன்னைப் பரலோகம் அனுப்புறதா தான் இருக்கும்… அவன் பைத்தியக்காரன், என்னை மாதிரி உன்னை ஐயோ பாவம்னு விடுற ஜாதி இல்லை அவன்… சோ இன்னைக்கு ஈவினிங்கோட கோவைக்கு ஒரு குட் பை சொல்லிட்டு உன் மூட்டை முடிச்சோட நீ யூ.எஸ் கிளம்பலைனா, டுமாரோ சரியா காலையில எட்டு மணிக்கு நான் அகிலேஷ் வீட்டுக்குப் போவேன், ஏஞ்சலினாவோட வீடியோவைக் காட்டுறதுக்கு… உனக்கு எப்பிடி வசதி?” என்று சொல்லிவிட்டுக் கையை மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டான்.

அவன் சொல்லும் போதே கிரேசியின் முகத்தில் கலவரம். ஏனெனில் அந்த வீடியோ வெளியானால் தன் குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயம் அவளுக்கு. தனக்கு இந்தியாவில் உதவி செய்ய அந்தப் பழிவெறி பிடித்தப் பைத்தியக்காரனின் உதவி வேண்டுமென்பதால் அப்படி ஒரு வீடியோ இருக்கிறது என்பதையே அவனிடம் சொல்லாமல் மறைத்திருந்தாள் கிரேசி.

இப்போது மட்டும் அது வெளியானால் கிருஷ்ணா சொன்னபடி அகிலேஷ் கட்டாயமாக அவளுக்கு இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்து விடுவான் என்பதை அவள் அறிவாள்.

அவன் கிருஷ்ணாவைப் போல ஈவு இரக்கம் பார்ப்பவன் அல்ல; கோபம் வந்தால் கொலை கூட செய்யத் துணிந்த மூர்க்கன் என்று எண்ணி அஞ்சியவள் நடுங்கியக் குரலில்

“கிரிஷ் நான் யூ.எஸ்கு திரும்பி போயிடுறேன்… இனிமே இந்தியாவுக்கு வர்றதை பத்தியோ உன்னை டிஸ்டர்ப் பண்ணுறதை பத்தியோ யோசிச்சுக் கூடப் பார்க்க மாட்டேன்…ப்ளீஸ் அகிலுக்கு இது தெரியவேண்டாம்” என்று கெஞ்ச ஆரம்பிக்கவே, அவளை வெறித்தவன்

“இப்போவே என் கண்ணு முன்னாடி நிக்காம போயிடு கிரேசி… உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை” என்று ஒரு அலட்சியமானக் கையசைப்புடன் சொல்லிவிடவும், கிரேசி நீர் நிரம்பிய விழிகளால் அவனை ஏறிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் சென்றபிறகு பெருமூச்சு விட்ட கிருஷ்ணா “ஒரு பிரச்சனை முடிஞ்சுது” என்று எண்ணியபடி அங்கிருந்து வெளியேறியவன் வாசலில் நின்று கொண்டிருந்த அகிலேஷைப் பார்த்துவிட்டான். அவனுடன் யாரோ ஒரு இளம்பெண் நிற்க யாரென்று கூர்ந்து நோக்கியவன் அங்கே நின்றவள் துளசி என்று அறிந்ததும் திகைப்பூண்டை மிதித்தவன் போலானான்.

அகிலேஷால் துளசிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற கவலையுடன் வேகமாகச் சென்று துளசியைக் கரம்பற்றியவன், அகிலேஷை நேரடியாகத் தன்னிடம் மோதும்படி எச்சரித்துவிட்டுக் கிளம்பும் போது அகிலேஷ் சொன்ன வார்த்தை தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பிள்ளையார் சுழி.

அவன் ஏஞ்சலினாவைப் பற்றி பேசுவதற்காகத் துளசி தான் தன்னிடம் உரையாட வந்தாள் என்ற ரீதியில் சொல்லிவைக்க, கிருஷ்ணாவுக்குத் தன் மனைவி போயும் போயும் தன் பரம எதிரியிடமா தனது காலம் சென்ற நண்பியைப் பற்றி கேட்டுவைக்க வேண்டும் என்ற ஆத்திரம் ஒரு புறம்.

இன்னும் தன்னை நம்பாமல் சந்தேகப்படுகிறாளே என்ற ஆதங்கம் ஒரு புறம். அவனால் தெளிவாக எதையும் யோசிக்கமுடியவில்லை. காரை அதிவேகத்துடன் வீட்டை நோக்கிச் செலுத்தியவன் கார்பார்க்கிங்கில் விட்டுவிட்டு விறுவிறுவென்று கருங்கல் படிகளில் ஏற ஆரம்பித்தான். துளசியும் அவனுக்கு ஈடான வேகத்துடன் பின்னே ஓடினாள்.

வீட்டினுள் சென்றதும் துளசி “கிரிஷ் கொஞ்சம் நில்லு! நான் உன் கிட்டப் பேசணும்” என்று கூறவும் அவன் நடை தடைப்பட்டது. அறைக்குள் செல்லாமல் ஆத்திரத்தில் சிவந்திருந்த முகத்துடன் அவளை ஏறிட்டவனிடம்

“கிரிஷ் நான் அங்கே போனது என் கிளையண்டைப் பார்க்கிறதுக்கு தான்… அந்த அகிலேஷ் இடையில வந்து அவரா தான் பேச ஆரம்பிச்சாரு”

“ஓ! அவனா பேச ஆரம்பிச்சதும் நீயும் ஏஞ்சலினாவைப் பத்தி அவன் கிட்ட விசாரிக்க ஆரம்பிச்சிட்ட… அப்பிடி தானே” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வார்த்தைகள் வெளிவந்தன அவனிடமிருந்து.

துளசி தலையாட்டி மறுத்தவள் “இல்லை கிரிஷ்! நான் ஏஞ்சலினாவைப் பத்தி அவர் கிட்ட எதுவும் கேக்கலை… ஏன்னா எனக்கு ஆல்ரெடி ஏஞ்சலினாவைப் பத்தியும் அவங்க மரணத்தைப் பத்தியும் தெரியும்” என்று சொல்லிவிடவே கிருஷ்ணா அவள் சொன்ன வார்த்தைகளை நம்பமுடியாமல் திகைத்தான்.

“பிலீவ் மீ கிரிஷ்… அன்னைக்கு மித்ரா பிரச்சனையில நான் உன்னைத் திட்டுறதைக் கேட்டுட்டு சஹானா தான் என் கிட்ட ஏஞ்சலினா யாரு, உனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம், கிரேசியும் அகிலும் உன் வாழ்க்கையில என்னென்ன பிரச்சனை பண்ணி வச்சிருக்காங்கனு எல்லாத்தையும் எனக்குப் புரியவைச்சாங்க… நான் இப்போ உன்னை முழுசா நம்புறேன் கிரிஷ்… எப்போவும் நம்புவேன்” என்று பரிதவிப்புடன் சொல்லி முடித்துவிட்டு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எண்ணி கணவன் முகத்தைக் கண்ணீருடனும் நம்பிக்கையுடனும் ஏறிட்டாள் துளசி.

ஆனால் அவள் அதிர்ச்சியடையும் வகையில் அவள் சொன்னதைக் கேட்டதும் தான் கிருஷ்ணாவின் கோபம் இன்னும் அதிகரித்தது.

“அப்போ சஹானா சொல்லலைனா இன்னும் நீ என்னை ஒழுக்கம் கெட்டவன்னு தான் நினைச்சிட்டிருப்ப இல்லையா? நான் எப்பிடிப்பட்டவனு என் கூட ஒரே ரூம்ல இருந்த இத்தனை நாள்ல கூடவா உன் மனசுக்குப் புரியலையா துளசி?” என்று உணர்ச்சியற்றக் குரலில் வினவினான் கிருஷ்ணா.

துளசி அதைக் கேட்டு அதிர்ந்தவள் கண்ணீர் பெருக அமைதியாய் தலை குனிய அவளது தாடையை ஆள்காட்டி விரலால் நிமிர்த்தியவன்

“உன்னோட நம்பிக்கை எனக்குக் கிடைக்கணும்னு நான் ஏங்காத நாள் இல்லை… ஆனா இப்போ இந்த நிமிசம் நீ என்னை நம்புறேனு சொல்லுறதைக் கேட்டா எனக்குச் சந்தோசம் வரலை துளசி… இனியும் வராது” என்று தீர்மானமானக் குரலில் சொல்லிவிட்டு ஆள்காட்டிவிரலை எடுத்துக் கொண்டான்.

“இனிமே உன்னோட காதலோ நம்பிக்கையோ எனக்குத் தேவை இல்லை துளசி… என் மனசுல உனக்கு மட்டுமே கொட்டிக் கிடந்த காதலை உன்னோட வார்த்தைகள் துடைச்சுப் போட்டுட்டுச்சு… இனி நீயும் நானும் என்னைக்குமே இணைகோடுகள் தான்… நம்மளால ஒன்னு சேர முடியாது… உனக்கு இஷ்டம்னா நீ என்னோட இருக்கலாம்… இல்லைனா என்னை விட்டுப் பிரிஞ்சு போயிடலாம்… ஆனா மித்ராவை மட்டும் என்னை விட்டுப் பிரிச்சிடாதே”

இவ்வாறு சொல்லும் போது கிருஷ்ணாவின் குரலும் உடைந்துவிட்டது. கண்ணீரை அவளிடம் காட்ட விரும்பாதவன் அவளிடமிருந்து விலகி தங்கள் அறையை நோக்கிச் சென்றுவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றவனின் உருவம் துளசியின் கண்ணீர் நிறைந்த விழிகளுக்கிடையே தெளிவற்று தெரிந்து சிறிதுநேரத்தில் மறைந்தது.