💗அத்தியாயம் 35💗

காலையில் கண் விழித்த கிருஷ்ணாவின் கரங்கள் துளசி இருக்கிறாளா என்று துளாவ, அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. சீக்கிரமாக எழுந்துவிட்டாள் போல என்று எண்ணியபடி படுக்கையில் அமர்ந்தவன் இன்று பணியாட்களின் சத்தமின்றி வீடே அமைதியாக இருக்க அந்த அமைதியை உள்வாங்கியபடி குளியலறைக்குள் சென்றான்.

வழக்கம் போல உடற்பயிற்சிக்கூடத்துக்குச் சென்றவன் கண்ணாடி ப்ரெஞ்ச் விண்டோ வழியே தெரிந்த தோட்டத்தைப் பார்த்தபடி உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான். சிந்தனை முழுவதும் தொழிலில் இருக்க வியர்வை வழிய நின்றவன் கண்ணை இறுக மூடித் தன்னைச் சமன் செய்து கொண்டான்.

அங்கிருந்து வெளியேறியவனைத் தோட்டத்தில் இளம்தென்றல் வரவேற்க சிறிதுநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தவன் போன் அடிக்கவும் எடுத்துப் பேச ஆரம்பித்தான். மித்ரா தான் சாரதாவின் போனிலிருந்து அழைத்திருந்தாள்.

எடுத்தவுடன் “அப்பா அம்மு எங்கே போனாங்க? என் போனை அட்டெண்ட் பண்ணவே இல்லை” என்று மகள் செல்லமாகக் கோபித்துக் கொள்ள, கிருஷ்ணா குழந்தையிடம் போனில் பேசாமல் இவள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டிருக்கிறாள் என்ற எரிச்சலுடன் மகளிடம் பேசிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

சமையலறையில் இருந்து சத்தம் கேட்கவே அங்கே சென்றான் கிருஷ்ணா. அந்த மாடுலார் கிச்சனில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள் துளசி. காலையுணவைத் தயாரிக்கும் மும்முரத்தில் இரவில் சுவிட்ச் ஆஃப் செய்த போனை அப்படியே அவர்களின் அறையில் வைத்துவிட்டிருந்தாள்.

கிருஷ்ணா மகளுடன் பேசியபடி உள்ளே வந்தவன் கண்ணாலேயே அவளிடம் பேசுமாறு சைகை செய்ய, துளசி வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்ததால் கை முழுவதும் வெங்காயத்தின் தோலும், சாறுமாக இருக்கவும் கிருஷ்ணா போனை அவள் காதில் வைத்தபடி பேசு என்று சைகை காட்டினான்.

துளசி அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி “மித்திகுட்டி என்னடா பண்ணுறிங்க?” என்று மகளிடம் கொஞ்ச ஆரம்பித்தாள். அரைமணி நேரம் நீண்ட உரையாடலில் மித்ரா நேற்று வீட்டில் என்ன நடந்தது என்பதிலிருந்து அவளது டெடியின் ஒரு கண் விழுந்த கதை வரை சொல்லி முடித்தாள்.

மகளின் கதையைப் பொறுமையாகக் கேட்டபடி வேலையிலும் கண் பதித்தவள் “மித்தி பாட்டி சொல்லுறதை கேட்டு குட் கேர்ளா இருக்கணும்… அம்மு போனை வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு இவ்வளவு நேரம் சாய்ந்திருந்த கழுத்தை நிமிர்த்திக் கொண்டாள்.

கிருஷ்ணா இணைப்பைத் துண்டித்துவிட்டுத் துளசி நறுக்கிவைத்திருந்த கேரட் துண்டில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

“சோ இன்னைக்கு உன்னோட சமையல் தானா துளசி?”

“ம்ம்”

“என்னச் சமையல் பண்ணிட்டிருக்க?”

“இட்லி, சாம்பார் பிரேக்பாஸ்டுக்கு.. லஞ்சுக்கு ரைஸ் வித் சாம்பார் அண்ட் கேரட் பீன்ஸ் பொறியல்”

“எல்லாமே வெஜிடேரியனா?” என்று உதடு பிதுக்கி அதிருப்தி காட்டியவனை ஏறிட்டுவிட்டு

“ம்ம்” என்று மட்டும் உரைத்தவளின் ஒற்றைவார்த்தை பதிலில் கிருஷ்ணா எரிச்சலுற்றான்.

அவள் அதைக் கண்டுகொண்டால் தானே! துளசி வேலையில் கவனமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டவள் அவனிடம் மேற்கொண்டு எந்த வாக்குவாதமும் செய்யத் தயாராக இல்லை.

கிருஷ்ணா அதை அறியாதவனாய் விருட்டென்று அங்கிருந்து வெளியேற, துளசி மீதமுள்ள வேலையையும் முடித்துவிட்டுத் தங்களின் அறைக்குத் திரும்பினாள். அங்கே கிருஷ்ணாவைக் காணாது தேடியவள் அவனது லேப்டாப்பும் காணாமல் போயிருக்கவே வேலை விஷயமாக வீட்டுக்குள்ளேயே எங்கேயாவது லேப்டாப்புடன் அமர்ந்திருப்பான் என்று ஊகித்தபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்து முடித்து வெள்ளை நிற பளாசோ பேண்ட்டும் நீண்ட இளம்ரோஜாவண்ண டாப்புமாகத் தயாரானவள் கூந்தலைச் சீவிச் சரிசெய்து விட்டு தனது ஹேண்ட்பேகைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

உணவுமேஜைக்குச் சென்றவள் தனக்கு ஒரு தட்டில் போட்டுக்கொண்டுச் சாப்பிடத் தொடங்கினாள்.

கிருஷ்ணா அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வரவும் “பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடலையா கிரிஷ்?” என்று கேட்டவளுக்கு

“ம்ம்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாக அளித்தவன் டிசர்ட்டின் முக்கால் கையை மேலேற்றிக் கொண்டபடி தட்டில் உள்ள இட்லிகளைக் கபளீகரம் செய்வதில் கவனமானான்.

துளசி “ஓ! நான் பேசுனதை நீ திருப்பி எனக்கே பேசிக்காட்டிறியா? இருடா வெளியே போயிட்டுவந்து நான் உன்னை வச்சிக்கிறேன்” என்று கறுவியபடி சாப்பிட்டு முடித்தாள்.

கை கழுவிவிட்டு ஹேண்ட்பேகை எடுத்தவள் கிருஷ்ணாவிடம் “நான் மெரிடியன்ல ஒரு கிளையண்டை பார்க்க கிளம்புறேன் கிரிஷ்… ஆஃப்டர் நூன் திரும்பிடுவேன்” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறினாள்.

அவளைத் தொடர்ந்து சென்றவன் கீழே வாயில் கேட்டின் அருகே அவள் ஏற்கெனவே அழைத்திருந்த ஓலா கேப் வந்து அவளுக்காகக் காத்திருக்க, அதில் ஏறிச் சென்றவளை எண்ணி கிருஷ்ணாவின் மனதில் அச்சம் முகிழ்த்தது.

எங்கே முன்பு போல அவள் தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்ற அச்சம் எழவே “அவ ஒரு வார்த்தை ‘கிரிஷ் நான் உன்னை மனசாற நம்புறேனு’ சொல்லட்டும். அடுத்த நிமிசம் நான் உயிரைக் கூட அவளுக்காகக் குடுப்பேன்… ஆனா அவளால அப்பிடி ஒரு வார்த்தையைச் சொல்ல முடியலையே” என்று எண்ணியவனாகப் பெருமூச்சுவிட்டபடி வீட்டினுள் சென்றான் கிருஷ்ணா.

ஆனால் அதே வார்த்தையை அவள் ஆயிரம் முறை சொன்னாலும் அவன் ஏற்றுக்கொள்ளாத ஒரு காலமும் மிக அருகில் வந்துவிட்டது என்பதை அவன் எவ்வாறு அறிவான்?

வீட்டினுள் சென்றவன் சோபாவில் சாய்ந்து லேப்டாப்பை மடியில் வைத்த நேரத்தில் கிருஷ்ணாவுக்கு யாரோ போனில் அழைத்தார்கள்.

போனின் தொடுதிரையைப் பார்த்தவன் அது ஏதோ அறியாத எண்ணாக இருக்கவே அழைப்பை ஏற்று “ஹலோ” என்று சொல்ல

மறுமுனையில் “ஹவ் ஆர் யூ கிரிஷ்? ஐ மிஸ் யூ சோ மச்… ஷால் வீ மீட்?” என்ற வெண்ணெயில் குழைத்தக் குரல் ஒன்று அமெரிக்க ஆங்கிலத்தில் கொஞ்ச ஆரம்பிக்கவுமே

கிருஷ்ணாவின் உதடுகள் “கிரேசி” என்ற பெயரை ஒருவித அழுத்தத்துடன் உச்சரித்து அடங்கின.

************

ஹோட்டல் மெரிடியன்….

ஊட்டியின் குறிப்பிடத்தக்க ஹோட்டல்களில் ஒன்று. அதன் உரிமையாளரின் மனைவி தான் ஜெயலெட்சுமி. அவரது மகளின் திருமணத்துக்கான வேலைகளை ஜரூராக ஆரம்பித்துவிட்டார் அவர். திருமணத்துக்கு இன்னும் மூன்று மாதங்கள் இடைவெளி இருந்தாலும் அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் திருப்திகரமாக முடித்துவிட்டால் தான் நிம்மதியாக திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்ற எண்ணம் அவருக்கு.

சொன்ன நேரத்துக்குத் துளசியும் அங்கே வந்துவிட்டாள். ஜெயலெட்சுமிக்கு அவள் கொண்டு வந்த டிசைன்களில் பெரும்பாலானவை பிடித்துப்போய்விட்டது. பழமையும் புதுமையும் கலந்த அவளது டிசைன்கள் அவரது உள்ளத்தையே கவர்ந்ததென்றால் அவரது மகள் மட்டும் எம்மாத்திரம்…

தொழில்முறை பேச்சுக்கள் வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியில் ஜெயலெட்சுமி தனக்கும் துளசிக்கும் பாதாம் கீர் ஆர்டர் செய்தவர் “நான் அட்வான்ஸ் அமவுண்டை உன் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுறேன் துளசி… அப்புறம் ஹவ் இஸ் யுவர் டாட்டர்? எப்பிடி உன்னை விட்டுத் தனியா இருக்க ஒத்துக்கிட்டா?” என்று அக்கறையுடன் கேட்க

துளசி “அத்தை அவளைப் பார்த்துப்பாங்க… அவளுக்கும் பாட்டினா அவ்ளோ இஷ்டம்… சின்னமாமாவுக்கும் பெரியமாமாவுக்கும் அவளைப் பிரிஞ்சு இருக்க முடியாது… அதனால தான் அவளை அழைச்சிட்டு வரலை” என்றாள் பெருமிதத்துடன்.

“உன்னோட இன் லா ஃபேமிலி உனக்கு நல்லா சப்போர்ட் பண்ணுறாங்கம்மா… நீ இன்னும் நல்ல உயரத்துக்குப் போவ” என்றார் ஜெயா மனதாற.

பாதாம் கீரும் வந்துவிட இருவரும் அருந்திக் கொண்டிருக்கையில் “மிசஸ் கிருஷ்ணா” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு ஜெயலெட்சுமி யாரென்று திரும்பி பார்த்தவர்

“வாவ்! அகில்… நீ ஏதோ மீட்டிங் போறேனு சொன்னியே” என்று கேட்கவும், அந்த அகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“இல்லை சித்தி… மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சு… ரேஷ்மா மேரேஜ் அரேஞ்ச்மெண்ட்டை ஆரம்பிச்சிட்டிங்க போல” என்று அவரிடம் கேட்டுவிட்டுத் துளசியின் புறம் திரும்பினான் அவன்.

“மிசஸ் கிருஷ்ணாவுக்கு என்னை அடையாளம் தெரியலை போல” என்று பேச ஆரம்பிக்க, துளசி யார் இவன்.. ஏன் தன்னிடம் பேசுவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறான் என்று குழப்பம் எழ அவனைத் திரும்பிப் பார்க்க

அவனோ ஜெயலெட்சுமியிடம் “சித்தி இவங்க நம்ம ராகவ் அங்கிள் மருமகள் தான்… கிருஷ்ணாவோட ஒய்ஃப்… இவங்களை நான் சஹானா கல்யாணத்துல பார்த்திருக்கேன்… ஆனா மேடமுக்கு என்னைத் தெரியாது போல” என்று சொல்லவும் ஜெயலெட்சுமிக்கு பெருத்த நிம்மதி.

“ஹப்பாடா! ராகவ் அண்ணனோட மருமகளா? கிரிஷ்கு கல்யாணம் ஆனது எனக்குத் தெரியாதுடா… ஃப்ரீயா இருந்தா ஒரு நாள் கிரிஷ், நீ, குட்டிமா எல்லாரும் வீட்டுக்கு வரணும்” என்று சந்தோசமாகப் பேச ஆரம்பிக்க துளசியும் உண்மையான மகிழ்ச்சியுடன் அவருடன் உரையாட ஆரம்பித்தாள்,

ஆனாலும் அகிலேஷின் பார்வை தன்னை துளையிடுவதை உணர்ந்தவள் ஜெயலெட்சுமி கிளம்பவும் தானும் கிளம்ப எத்தனித்தாள். அகிலேஷ் அவளிடம் “பை த வே ஐ அம் அகிலேஷ் சக்கரவர்த்தி… உங்க ஹஸ்பெண்டோட வெல்விசர்” என்று கேலிவிரவியக் குரலில் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

துளசிக்கு அவன் யாரென்று தெரிந்ததும் எரிச்சல் அடங்கவில்லை. இவனால் அல்லவா தானும் கிருஷ்ணாவும் ஆறு ஆண்டுகளாகப் பிரிந்திருந்தோம் என்ற ஆங்காரம் உள்ளுக்குள் எழ அதைத் திறமையாக மறைத்துக் கொண்டாள்.

“ஓ! யா! கிரிஷ் சொல்லிருக்கார்… யூ.எஸ்ல அவரோட படிச்ச ஒரு இடியட் அவர் ஃப்ரெண்ட் ஏஞ்சலினாவை லவ்ங்கிற பேருல டிஸ்டர்ப் பண்ணுனானு… அவன் நேம் கூட அகிலேஷ் தான்…. அந்த ராஸ்கல் இன்னும் என் கிரிஷ் கூடப் போட்டி போட்டுத் தோத்துக்கிட்டே தான் இருக்கான்னும் கேள்விப்பட்டேன்… பை த வே, அந்த அகிலேஷ் நீங்க இல்லையே?” என்று கேட்டுவிட்டு ‘அது நீ தான் என்று எனக்குத் தெரியும்’ என்று அவனுக்கு உணர்த்தும் ஒரு வித அலட்சியத்துடன் உதட்டை வளைத்தவளை மெச்சுதலாகப் பார்த்தான் அகிலேஷ்.

“வாவ்! ஜாடிக்கேத்த மூடி… அதே திமிர், அதே ஆணவம்… புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் இதுல நல்ல ஒற்றுமை தான்… எனி ஹவ் இனிமே நீ ஏஞ்சலினாவைப் பத்தி எதுவும் சொல்லாம இருந்தா நல்லது” என்று எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே

“துளசிஈஈஈஈ!” என்ற கிருஷ்ணாவின் கர்ஜிக்கும் குரல் திடீரென்று கேட்கவும் துளசிக்குத் தூக்கிவாரி போட்டது.

பதற்றத்துடன் திரும்பிப் பார்த்தவளின் கண் முன்னே ருத்திரமூர்த்தியாகக் கோபத்தில் முகம் சிவக்க நின்று கொண்டிருந்தான் அவளது ஆருயிர்க்காதலனும் கணவனுமான கிருஷ்ணா. அவனது கோபத்தில் துளசி திகைத்துப் போக, அகிலேஷும் இந்நேரத்தில் கிருஷ்ணாவை அங்கே எதிர்பார்க்கவில்லை போல. அவனுக்கும் இது அதிர்ச்சி தான்.

கிருஷ்ணா அழுத்தமான காலடிகளுடன் இருவரையும் நெருங்கியவன் துளசியின் கையைப் பற்றிக்கொண்டு அகிலேஷை நோக்கி “இனிமே என் பொண்டாட்டி, பிள்ளைனு முதுக்குக்குப் பின்னால குத்தாம தைரியமான ஆம்பிளையா என் கிட்ட மோதுடா” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு துளசியை அழைத்துச் செல்ல எத்தனிக்க

அகிலேஷ் ஏற்கெனவே துளசி ஏஞ்சலினாவை வைத்துத் தன்னை மட்டம் தட்டிய எரிச்சலில் இருந்தவன் இப்போது கிருஷ்ணாவின் பேச்சில் உச்சக்கட்ட கோபத்துடன்

“அதை உன் பொண்டாட்டி கிட்ட சொல்லு கிருஷ்ணா.. ஏஞ்சலினாவைப் பத்தி பேச ஆரம்பிச்சது அவ தான்” என்று சொல்லவும் இவ்வளவு நேரம் துளசியின் கரத்தைப் பற்றியிருந்த கிருஷ்ணாவின் கரம் சட்டென்று அவள் கரத்தை உதறியது.

எதுவும் பேசாமல் விறுவிறுவென்று அவன் கார் பார்க்கிங்கை நோக்கி நடக்கவே, துளசி அவனது செய்கைக்கு அர்த்தம் புரியாமல் அவன் பின்னே ஓடினாள். கிருஷ்ணா காரை ஸ்டார்ட் செய்யவும் வேகமாக முன்னிருக்கையில் அமர்ந்தவளுக்கு கிருஷ்ணாவின் இறுகியமுகத்தைப் பார்க்கவே உள்ளுக்குள் அச்சமாக இருந்தது.

ஸ்டீயரிங் வீலின் மீது அழுத்தமாகப் பதிந்திருந்த கைகளில் வெடித்த நரம்புகளே அவனது கோபத்தின் அளவைச் சொல்லாமல் சொல்ல, துளசி வீட்டுக்குச் சென்றதும் அவனிடம் பேசி சமாதானம் செய்துவிடுவோம் என்று எண்ணியபடி அமைதியுடன் சிலை போல் அமர்ந்திருந்தாள். கிருஷ்ணாவோ அகிலேஷின் கடைசி வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டான். ஏஞ்சலினாவைப் பற்றி தெரிந்து கொள்ள துளசி போயும் போயும் அகிலேஷையா அணுகியிருக்க வேண்டும் என்று கடுங்கோபத்துடன் எண்ணியவன், தான் அவ்வளவு கூறியும் தன்னை நம்பாது எவனோ ஒரு மூன்றாவது மனிதனிடம் தான் பேசக்கூடாது என்று சொன்ன விஷயத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறாள் என்றால் இவள் தன்னைப் பற்றி என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கசப்புணர்வுடன் காரைச் சாலையில் இயக்க ஆரம்பித்திருந்தான்.