💗அத்தியாயம் 34💗

ஆர்.கே பவனம்…      

மதிய வெயிலின் வெம்மை தெரியாதவண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் அம்மாளிகைக்குக் குடை பிடித்திருந்தன. மாளிகையின் சின்ன எஜமானன் மனைவியுடன் ஊட்டியில் தான் தங்கப்போவதாகச் சொல்லிவிட்டுக் குடும்பத்துடன் அங்கேயே சென்றுவிட்டவர், மனைவியுடன் திரும்பி வந்த பரபரப்பில் பணியாட்கள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்.

துளசியும் கிருஷ்ணாவும் மதியவுணவைக் கொறித்தபடி உணவுமேஜையில் எதிரெதிராக அமர்ந்திருக்க பணியாளர் ஒருவர் பவ்வியமாகப் பரிமாறினார். துளசி அவரைச் செல்லுமாறு பணித்தவள் தங்கள் இருவருக்காக ஏன் இத்தனை நபர்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டாள்.

கிருஷ்ணா ஒரு புருவச்சுழிப்புடன் இதைக் கண்டும் காணாதது மாதிரி இருந்துவிடவே, துளசி “கல்லுளிமங்கன்! வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டைனு இருப்பான்… ஒன்னு ஓவரா லவ்வுல மூழ்குறது, இல்லைனா எக்கேடோ கெட்டுப் போனு கண்டுக்காம இருக்கிறது.. எல்லாம் இன்னும் எத்தனை நாளுக்கு கிரிஷ்? ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் உனக்கும் என்னோட மனசு புரியும்… அது வரைக்கும் உன்னோட உதாசீனத்தைப் பார்த்து நான் கோவப்பட்டுடக்கூடாதுனு கடவுளை வேண்டிக்கிறேன்” என்று எண்ணிக்கொண்டாள்.

கிருஷ்ணாவும் ‘உருகினால் மெழுகு; இறுகினால் இரும்பு’ என்று சொல்லுமளவுக்குத் தான் துளசியிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கே புரிந்தது அவன் செய்யும் அனைத்தும் துளசியின் மனதை வருத்தம் கொள்ளச் செய்யுமென்று. ஆனால் அவளுக்குத் தன் மீது நம்பிக்கை இல்லையே என்ற ஒரு எண்ணம் அவனது மற்றத் தயக்கங்கள் யாவற்றையும் நொறுக்கிவிடுவதால் அவனால் இறுக்கமாக மட்டுமே நடந்து கொள்ள முடிகிறது.

துளசி அவனது இந்தக் கோபத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்லவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தால் அவன் நிலை என்னவாகும் என்பது கிருஷ்ணா மட்டுமே அறிந்த ஒன்று.

பலவிதச் சிந்தனை ஓட்டங்களுடன் சாப்பிட்டு முடித்தவர்கள் ஆளுக்கொரு திக்காய்ச் சென்றுவிட்டனர். துளசி தரைத்தளத்தில் தோட்டத்தைப் பார்த்தபடி அமைந்திருந்த அவர்களின் இப்போதைய அறைக்குள் புகுந்து கொள்ள, கிருஷ்ணா தனக்கு அலுவலகத்தில் வேலை இருக்கிறது என்று முணுமுணுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

அவனது கார் சென்ற இடம் ஆர்.கே காட்டன் மில் பிரைவேட் லிமிட்டட். அவனது தாத்தா சிறியளவில் ஆரம்பித்த பஞ்சாலை அது. இது போன்ற எண்ணற்ற பஞ்சாலைகளும், நூற்பாலைகளும் தான் கோயம்புத்தூருக்கு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தவை.

ஆனால் இன்றைய நிலையில் அரசின் வரிக்கொள்கை, தொழிலாளர்களின் போராட்டம், ஏற்றுமதியில் கெடுபிடி இவையெல்லாம் தாண்டி நல்ல இலாபத்துடன் நடந்து வரும் காட்டன் மில்களில் ஆர்.கே காட்டன் மில்லும் ஒன்றாகும். அதன் உற்பத்தி சரிபாதியாக அவர்களின் நூற்பாலைகளுக்குச் செல்ல, மீதி ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஏற்றுமதி செய்யவேண்டிய சரக்கு பரந்து விரிந்த அந்த மில் வளாகத்தின் வடக்கு மூலையில் உள்ள சேமிப்புக்கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ராகுலின் எச்சரிக்கைக்குப் பிறகு அந்த சேமிப்புக்கிடங்குக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா அதன் நான்கு பக்கங்களிலும் இருந்த சிசிடிவி கேமராவுடன் அதன் வாயில் கேட்டில் காவலுக்கு நின்றவர்களைத் திருப்தியுடன் பார்த்துவிட்டுத் தனது அலுவலக அறைக்கு விரைந்தான்.

தனது அறையில் அமர்ந்து கோப்புகளைப் புரட்டியவன் மேலாளரை அழைத்தான். அவரிடம் அந்த ஏற்றுமதி ஆர்டரைப் பற்றி விவரங்களைக் கேட்டவன் இந்த ஆர்டரைப் பெற எந்தெந்த நிறுவனங்கள் போட்டி போட்டன என்ற தகவல் தனக்கு இன்னும் சில மணி நேரத்தில் தெரியவேண்டும் என்று ஆணையிடவே மேலாளர் விழித்தார்.

“முழிக்காதிங்க ஜெகதீசன் சார்… இந்த ஃபாரின் கம்பெனியோட நமக்கு டீல் பேசுன அந்த மீடியேட்டரை பிடிங்க… அவன் கண்டிப்பா நம்ம கிட்ட மட்டும் பேசிருக்க மாட்டான்… அவன் யார் கிட்டலாம் பேசுனான், யாரெல்லாம் இதுல இன்ட்ரெஸ்டா இருந்தாங்கனு ஃபுல் டீடெய்ல்ஸ் என் டேபிளுக்கு வரணும்… அண்ட் இனிமே ஒவ்வொரு எக்ஸ்போர்ட் ஆர்டருக்கும் இதே மெத்தட்டை ஃபாலோ பண்ணுனா நல்லது” என்று கட்டளையிட்டவன் கோப்புகளில் மீண்டும் மூழ்கிவிட்டான்.

அவனது கட்டளையின் படி சில மணிநேரத்தில் அந்த விவரங்கள் அடங்கியக் கோப்பு அவனது மேஜையின் மீது சமர்ப்பிக்கப்படவே கிருஷ்ணா எதிர்பார்த்தவனது பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. ஆம்! சக்கரவர்த்தி குழுமத்தின் பெயரும் அதில் இடம்பெற்றிருக்கவே கிருஷ்ணாவுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அவனுக்குக் கிடைக்காத ஆர்டரைத் தங்களது நிறுவனம் கைப்பற்றிவிட்டதே என்ற காழ்ப்புணர்ச்சியும், கிருஷ்ணா மீதான அவனது கண்மூடித்தனமான வெறுப்பும் தான் அகிலேஷ் இந்த ஏற்றுமதி சரக்கை அழிக்க நினைப்பதற்கான காரணம்.

அந்தத் தகவல் அவனிடமிருந்து கசிந்து எப்படியோ நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் ராகுலின் காதை அடைந்தது. அவனது எச்சரிக்கைக்குப் பிறகு தான் அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இருந்தாலும் ராகுல் திருப்தியடையாமல் ஒரு யோசனையைக் கூறினான் கிருஷ்ணாவிடம். அந்த யோசனையும் பணச்செலவுகளைப் பொருட்படுத்தாமல் உடனே ஏற்றுக்கொள்ளப் பட்டது. கிருஷ்ணாவைப் பொறுத்தவரை இது அவனது மானப்பிரச்சனை.

அந்த அகிலேஷால் தன்னை ஜெயிக்கவே முடியாது என்று அவனது உச்சந்தலையில் அறைந்தாற்போன்று அவனுக்குப் புரியவைக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான் கிருஷ்ணா.

************

துளசி தனது அறையில் அமர்ந்திருந்தவள் சுகன்யாவிடம் இந்த ஆர்டரை எப்படியாவது திருப்திகரமாகச் செய்து காட்டிவிடவேண்டும் என்ற உத்வேகத்துடன் பேசிக் கொண்டிருந்தபடியே டிசைன்கள் வைக்கப்பட்டிருந்த கோப்பைப் புரட்டிக் கொண்டிருந்தாள். மிகவும் நுணுக்கமானவை லேப்டாப்பில் மென்பொருள் உதவியால் வரையப்பட்டு சேமித்துவைக்கப்பட்டிருந்தது.

கையில் உள்ள கோப்பையும், லேப்டாப் திரையில் தெரிந்த டிசைனையும் ஒப்பிட்டுப் பார்த்தவள் கையில் வைத்திருந்த குறிப்பேட்டில் விவரங்களைக் குறித்துக் கொண்டாள். அதன் பின்னர் ஜெயலட்சுமியிடம் போன் செய்து நாளை எத்தனை மணிக்கு அவரைச் சந்திக்க வரவேண்டும் என்று பேச ஆரம்பித்தவள் போனிலேயே சில டிசைன்கள் பற்றிய விவரங்களை அவர் கேட்கவும் ஆர்வத்துடன் கேட்ட அப்பெண்மணிக்குப் புரியும்படி விளக்கம் கொடுத்தாள்.

அதன் முடிவில் “வாவ் துளசி! நான் கேட்ட கேள்விக்குலாம் நீங்க டென்சன் ஆகாம ஆன்சர் பண்ணுனதிலேயே தெரியுது உங்களோட ஒர்க் டெடிகேசன்… ஐ அம் ஈகர்லி வெயிட்டிங் டு சீ யூ மை டியர் யங் லேடி” என்று நெகிழ்ச்சியுடன் கூறவும் துளசிக்கு உள்ளுக்குள் உற்சாகக்குமிழ்.

“நீங்க ஆர்வத்தோட கேக்கிறப்போ நான் எப்படி மேம் எரிச்சல்படுவேன்? அதுவும் இல்லாம இது என்னோட புரஃபசன் மட்டும் இல்லை, என்னோட சின்னவயசுக் கனவும் கூட… ஒவ்வொரு டிசைனும் வியாபார நோக்கத்துக்குனு உருவாக்குறதை விட நாங்க ரசிச்சு முழுமனசோட வரைய ஆரம்பிப்போம்.. இங்கே நாங்கனு சொல்லுறது நான், என்னோட ஃப்ரெண்ட் அண்ட் என்னோட ஹார்ட் ஒர்க்கிங் எம்ப்ளாயிஸ்…. அவங்களை மாதிரி எம்ப்ளாயிசும், உங்களை மாதிரி கிளையண்டும் கடவுள் எனக்குக் குடுத்த வரம்னு நினைக்கிறேன்” என்று மனப்பூர்வமாகக் கூறிவிட்டுப் போனை வைத்தாள்.

ஜெயலெட்சுமியை ஓரிருமுறை வீடியோ கால்களில் பார்த்திருக்கிறாள் தான். மேல்தட்டுப் பெண்மணியாக இருந்த போதிலும் எளிமை, கனிவு, திடம் நிறைந்தவராகவே தோன்றினார் அவர். உருவம் எப்படியோ அப்படியே பேச்சும். அதிர்ந்து பேசாத அப்பெண்மணியின் ஒரே செல்வமகளின் திருமணத்துக்கான உடைகளைத் தான் துளசி வடிவைமைக்கவிருக்கிறாள்.

நினைத்தாலே மனதுக்குள் இனம்புரியாத சந்தோசம் எழுந்தது அவளுக்கு. தையல் படிக்கவேண்டும் என்ற எண்ணம் அவளது பதினைந்தாவது வயதில் உதித்தது. அவளுடன் சேர்ந்து சுகன்யாவையும் இழுத்துக் கொண்டு பொதுத்தேர்வு விடுமுறையின் போது தையல் வகுப்பில் சேர்ந்தாள் துளசி. சுகன்யா முதலில் துளசிக்காக என்று சென்றாலும் பின்னர் அவளுக்குமே வெட்டுவது, தைப்பதில் ஆர்வம் உண்டாக, அவளும் ஒரு திறமை வாய்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என கனவு காண ஆரம்பித்தாள்.

ராமமூர்த்தி துளசிக்கு தையல் இயந்திரம் ஒன்றை வாங்கித் தந்துவிட அவளும், சுகன்யாவும் எதையாவது வெட்டித் தைப்பது என்று பொழுதைப் போக்கிக் கொள்வர்.

பதினெட்டாவது வயதிலேயே தங்களுக்கான உடையையும் தங்கள் குடும்பத்தினருக்குமான உடையையும் இரு பெண்களும் வடிவமைக்கத் தொடங்கவே ராமமூர்த்திக்கு வருடந்தோறும் அவரது பிறந்தநாளுக்கு இருவரும் குர்தா அல்லது சட்டையை பரிசாக அளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது.

அப்படி ஆரம்பித்தவர்கள் இன்று ஊட்டியில் பெயர் சொல்லுமளவுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றனர். ஆனால் அப்படி இடம்பெற்ற பிறகு தான் துளசியின் கவலை அதிகரித்தது எனலாம்.

அது குறித்து சுகன்யா வினவினால் “நமக்கு ரொம்பச் சீக்கிரமே இவ்ளோ பெரிய பப்ளிசிட்டி கிடைச்சதுல சந்தோசம் தான் சுகி… இந்த இடத்துக்கு வந்தது நம்ம சாதனை கிடையாது… இதுல நிலைச்சிருக்கிறது தான் நம்ம சாதனை… அதுக்கு நம்ம இன்னும் ஹார்ட் ஒர்க் பண்ணனும்” என்று சொல்லிவிடுவாள்.

எப்படி தேவையற்ற பயம் அபாயகரமானதோ அதே போலத் தான் சின்னஞ்சிறிய அலட்சியமும். பல நாள் சேர்த்து வைத்திருந்த மொத்தப்பெயரையும் கெடுத்துவிடும் வல்லமை அலட்சியத்துக்கு உண்டு. எனவே தான் துள்சி ஒவ்வொரு ஆர்டர் கிடைக்கும்போதும், அது சிறியதோ பெரியதோ முழுமனதுடன் உடையை வடிவமைப்பாள். சுகன்யாவும் அவளைப் போலவே தான். ஒத்தச் சிந்தனையுடைய அத்தோழிகளின் கடின உழைப்பு தான் இன்று மித்தி பொட்டிக்காக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறான சிந்தனைகளுக்கிடையே மகளின் நினைவு வரவும் ஊட்டிக்குப் போன் செய்து அவளிடம் மனம் விட்டுப் பேசி சிரித்தாள். இந்த வீட்டின் அழகிய குளத்தைப் பற்றி மகள் ஆர்வத்துடன் விசாரிக்கவே “நெக்ஸ்ட் டைம் வர்றப்போ மித்தியையும் அழைச்சுட்டு வரணும்” என்று எண்ணிக்கொண்டாள் துளசி.

இப்படியே மாலை நேரம் வந்துவிடவும் சின்ன எஜமானியம்மாளுக்காக சிற்றுண்டி தயாரானது. தேநீருடன் அதைச் சுவைத்தவண்ணம் இருந்த துளசி, கிருஷ்ணா அலுவலகம் முடிந்து திரும்பியதை ஓரக்கண்ணால் கண்டுவிட்டுக் கவனியாததைப் போல அசைப்போட்டுக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா அவர்களின் அறைக்குச் சென்று உடைமாற்றிவிட்டுத் தோட்டத்தை நோக்கிச் சென்றதை ஓரக்கண்ணால் பார்த்தவள் “ஒரு வார்த்தை என் கிட்ட பேசுனா குறைஞ்சா போயிடுவான்?” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

ஈகோ பிடித்தவன் என்று கிருஷ்ணாவைத் திட்டிவிட்டு தங்களின் அறைக்குள் முடங்கியவளுக்கும் சிறிதுநேரம் வேலையில் கழிந்தது. தங்கள் அறையிலிருந்து வெளியே வந்தவள் தலைமைப்பணியாளரிடம் அனைவரையும் கிளம்புமாறு சொல்லிவிட்டு நாளைக்கு அனைவருக்கும் விடுமுறை என்றும் கூறிவிட்டாள். எதற்கும் ஒரு வார்த்தை கிருஷ்ணாவைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் உதிக்கவே இல்லை.

அனைவரும் கிளம்பிவிடவே கிருஷ்ணாவுக்குப் பிடித்ததாக இரவுக்குச் சமைக்க ஆரம்பித்தவள் வழக்கம் போல தந்தையிடம் பேசியபடியே இரவுச்சமையலை முடித்துவிட்டு தங்களின் அறைக்குத் திரும்பினாள். சமையலறையின் வெம்மை கசகசப்பை உண்டாக்க அது போக குளித்து உடை மாற்றியபிறகு தான் மூச்சு விட்டாள்.

கிருஷ்ணா மாலையில் தோட்டத்துக்குச் சென்றவன் இன்னும் வீட்டினுள் வரவில்லையே என்று அவளுள் கவலை எழவே தோட்டத்தில் அவனைத் தேடத் துவங்கினாள் துளசி. எங்கு தேடியும் அவன் கிடைக்காமல் போகவே சுற்றிமுற்றி பார்த்தவள் நீச்சல்குளத்தின் மரச்சாய்வு இருக்கையில் சாய்ந்திருந்தவனைக் கண்டதும் அவனிடம் சென்றாள்.

அங்கே இருகைகளையும் தலைக்குத் தலையணையாக்கிக் கால் நீட்டிப் படுத்திருந்தவனின் பக்கவாட்டுப்பார்வையில் துளசி விழவே எழுந்து அமர்ந்தான். அவனது விழிகள் எதிர்புறம் வெறித்திருக்க துளசி அவனுக்கு அருகில் கிடந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தவள் அன்று முழு நிலவுக்கு முந்தைய நாள் என்பதால் வெள்ளைப்பந்து போல உருமாறத் தொடங்கியிருக்கும் நிலவைச் சுட்டிக் காட்டியபடி

“ரொம்ப அழகா இருக்குல்ல கிரிஷ்… வானத்துக்கு அழகே நிலா தான்… இந்த ஸ்டார்ஸ் எல்லாமே ஒப்புக்குச் சப்பாணி மட்டும் தான்” என்று பேச ஆரம்பிக்க

கிருஷ்ணா “ம்ம்… நிலாவோட ஒரு பக்கம் ரொம்பவே அழகு தான்… ஆனா மனுசங்க கூடப் பார்க்காத அதோட இன்னொரு பக்கம் ரொம்பவே ஆபத்தானதுனு சொல்லுவாங்க… அது எந்த மாதிரியான பகுதினு இது வரைக்கும் யாருக்கும் புரியலை… சில மனுசங்களும் நிலா மாதிரி தான்… வெளியாட்களுக்கு அவங்களோட அழகானப் பக்கம் மட்டும் தான் தெரியும்… ஆனா கூடவே இருக்கிறவங்களுக்குத் தான் அவங்களோட இன்னொரு பக்கம் தெரிஞ்சிருக்கும்” என்று மறைபொருள் வைத்துப் பேச, துளசிக்கு உள்ளே எழுந்து சென்றுவிடுவோமா என்று தோன்றியது என்னவோ உண்மை.

ஆனால் “நீ மட்டும் அவனைக் கம்மியாவா பேசுன? வார்த்தைக்கு வார்த்தை ஒழுக்கம் கெட்டவன்னு சொல்லி நீ அவனைச் சாகடிக்கலை? பதிலுக்கு அவன் பண்ணுறான்… நியாயப்படி உனக்கு கோவமே வரக்கூடாது துளசி” என்று அவளது மனசாட்சி அறிவுறுத்தவே துளசி அதை ஆமோதித்த வண்ணம் பேச்சை மாற்றினாள்.

“நான் நாளைக்கு சர்வெண்ட்ஸ் யாரையும் வர வேண்டாம்னு சொல்லிட்டேன் கிரிஷ்” என்றவளைப் பார்வையாலேயே கேள்வி கேட்டனிடம்

“நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் மட்டும் தானே! சோ நம்மளே எதாவது சிம்பிளா செஞ்சு சாப்பிட்டுக்கலாம்னு நினைச்சேன்”

“உன்னைப் பத்தி முடிவெடுக்கிறதுக்கு உனக்கு உரிமை இருக்கு துளசி… எனக்கும் சேர்த்து நீ எப்பிடி முடிவு பண்ணலாம்?” என்று இறுகியக்குரலில் கேட்டவனின் பார்வையில் இருந்த அன்னியத்தன்மை ஒரு நிமிடம் துளசியை அதிரவைத்தது.

ஆனால் அவளது கலங்கிய முகத்தைப் பார்த்த அடுத்த நொடி கிருஷ்ணாவின் முகம் சீராகிவிட்டது. துளசி கூட தனது கண்ணில் தான் பிரச்சனையோ என்று எண்ணுமளவுக்கு அவனால் விரைவாக மனவுணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைக்க முடிந்தது,

இருந்தாலும் அவனது கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை தனக்குள்ளதால் தொண்டையைச் செருமிக் கொண்ட துளசி “இட்ஸ் ஓகே! நான் வேணும்னா மார்னிங் அவங்களை லேட்டா வரச் சொல்லிடுறேன்” என்று உணர்ச்சியற்றக் குரலில் சொல்லிவிட்டு எழுந்து வீட்டினுள் ஓடி மறைந்தாள்.

இப்போது கூட அவள் தன்னிடம் ஆதுரத்துடன் பேசவில்லையே என்று வருந்தியவன் மீண்டும் அந்த இருக்கையிலேயே சாய்ந்து கொண்டான். எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை தான் அச்சாணி. அது கழன்றுவிட்டால் எப்பேர்ப்பட்ட உறவையும் குடைகவிழச் செய்துவிடும். இதை அவர்கள் இருவரும் உணர்ந்திருந்தும் மனதளவில் பிரிந்திருந்தது தான் விந்தை.