💗அத்தியாயம் 33💗

சஹானா ஏஞ்சலினாவைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிய பிறகு பெரும் மனபாரம் அகன்றதைப் போல உணர்ந்தாள் துளசி. உலகில் எந்தப் பெண்ணுமே தன்னுடைய முதல் காதல் பொய்த்துப் போவதை விரும்புவதில்லை. அது தோற்றுப் போனால் கூட அவளால் மனதைத் தேற்றிக் கொண்டு கடந்துச் செல்ல முடியும். ஆனால் தன்னைக் காதலித்தவனின் அன்பு தனக்குச் சொந்தமானது இல்லை என்று தெரியவந்தால் அதை விடப் பெரிய கொடுமை அவளுக்கு வேறு எதுவும் இல்லை.

துளசியும் இத்தனை நாட்கள் இந்த மனநிலையில் தான் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரியைப் போல அவள் கிருஷ்ணாவைக் காதலித்தாளே! அந்தக் காதலே பொய் என்றால் அவளால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? கடவுள் காட்டிய கருணையாக மித்ரா மட்டும் அவளுக்குக் கிடைக்கவில்லையென்றால் கிருஷ்ணாவை நினைத்து அவள் உண்மையானப் பைத்தியமாகவே மாறிவிட்டிருப்பாள்.

இப்போது அனைத்துமே சரியாகிவிட்டது என்று எண்ணியவளுக்கு அடுத்த அதிர்ச்சி கிருஷ்ணாவிடம் இருந்தே கிடைத்தது. ஆம்! கிருஷ்ணாவால் துளசி இன்னும் தன்னை நம்பவில்லை என்ற விஷயத்தை சீரணிக்கவே முடியவில்லை. எப்படி ராமமூர்த்தி எவ்வித ஆதாரமுமின்றி தன்னை நம்பி மகளையும் பேத்தியையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றாரோ அதே போல துளசியும் தன்னை நம்ப வேண்டும் என்றே அவன் எதிர்பார்த்திருந்தான்.

சமீப காலங்களில் அவள் தன் மீது அக்கறை எடுத்துக்கொண்டதைக் கூட ஒருவேளை அவளுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டதோ என்ற கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அன்றைய சண்டை மனதில் பலத்த காயத்தை உண்டு பண்ணிவிட்டது. அது ஆறுவேனா என்று அடம்பிடிக்கையில் அவனால் எப்படி துளசியுடன் சாதாரணமாகப் பேசிப் பழக முடியும்!

துளசிக்கு அவனைப் பற்றியும் ஏஞ்சலினாவைப் பற்றியும் எவ்வித சந்தேகமும் இல்லையென்பதை அவன் இன்று வரை அறியமாட்டான். அவன் தான் அப்பிரச்சனையின் போதே துளசியை வாயைத் திறக்கவிடவில்லையே. அவள் ஏஞ்சலினாவைப் பற்றி தன்னிடம் நம்பாமல் விளக்கம் கேட்க முனைகிறாள் என்று அவனே எண்ணிக் கொண்டு இனி அவளைப் பற்றி துளசி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்று ஆணை பிறப்பித்துவிட்டான்.

நல்லவேளையாக துளசியும் அதற்கு மேல் சஹானா தான் ஏஞ்சலினாவைப் பற்றிய உண்மையைக் கூறினாள் என்று வாயை விடவில்லை. இல்லையென்றால் சஹானா சொன்னதால் தானே நீ என்னை நம்பினாய் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருப்பான் கிருஷ்ணா.

இப்போது மட்டும் என்னவாம்… அந்த அறையில் கிடக்கும் மேஜை நாற்காலி, லேப்டாப் போல அவளையும் பாவித்தவன் துளசி கூறும் குட்மார்னிங்குக்கு கூட பதிலளிக்க முடியாதளவுக்கு பேச்சைக் குறைத்துக் கொண்டான். மகளிடம் மணிக்கணக்காய் அரட்டையடித்துவிட்டு மனைவி தூங்கிய பிறகு தான் அவர்களின் அறைக்கே வருவான். அதிகாலையில் துளசி கண் விழிக்கும் முன்னரே எழுந்துவிடுபவன் அவள் பார்வையில் படாமல் ஓசையின்றி அலுவலகம் சென்றுவிடுவான்.

இந்த ஒரு வாரகாலத்தில் துளசி கிருஷ்ணாவின் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் எரிச்சலுற்றாலும் “உனக்கு இதுல்லாம் கம்மி தான்… கொஞ்சநஞ்ச பேச்சா பேசுன நீ? அனுபவி” என்று தன்னையே திட்டிக் கொள்வாள். அவளால் மட்டும் வேறு என்ன தான் செய்துவிட முடியும்!

இதை நினைக்கையில் துளசிக்குச் சிலநேரம் கண்ணைக் கரித்துக் கொண்டு வரும். கிருஷ்ணாவை விட்டு விலகி இருக்கையில் கூட இப்படி வலிக்கவில்லை, ஆனால் ஒரே வீட்டில் ஒரே அறையில் அவன் தன்னைத் தவிர்ப்பதைக் கண்டு மனம் கலங்கிப் போயிருந்தாள் அவள்.

அந்நிலையில் தான் கோயம்புத்தூரில் ஒரு செல்வந்தக்குடும்பத்தின் திருமணத்துக்கான உடைகளை வடிவமைக்கும் ஆர்டர் அவர்களின் பொட்டிக்குக்குக் கிடைத்தது. இது சம்பந்தமாகப் பேசுவதற்கு அந்தக் குடும்பத்தலைவி ஜெயலட்சுமி துளசியை நேரில் வர முடியுமா என்று பணிவுடன் வேண்டிக்கொள்ளவே துளசி ஒரு வாரப்பயணமாகக் கோவை செல்ல முடிவெடுத்திருந்தாள்.

மாமனாரிடம் இது குறித்துப் பேசிவிட்டு “ஒன் வீக்ல திரும்பி வந்துடுவேன் மாமா… நான் போகட்டுமா?” என்று அனுமதி கேட்கவே ராகவேந்திரன் மகிழ்ச்சியுடன் அவளுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். மருமகள் தன்னை மதித்துக் கேட்டதில் அவருக்கு ஏகத்துக்கும் சந்தோசம்.

வழக்கம் போல துளசி அறையில் முடங்கும் நேரத்தில் வீடு திரும்பிய கிருஷ்ணாவிடம் இதைச் சொல்லிப் பூரித்துப் போனார் ராகவேந்திரன்.

“நீ இது வரைக்கும் எதாவது ஒரு விஷயத்துக்கு என் கிட்ட பெர்மிசன் கேட்டிருக்கியாடா? பெரியவங்களுக்கு எப்பிடி மரியாதை குடுக்கணும்னு என் மருமகளைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோ” என்று சொன்னவரிடம் எதுவும் பதிலளிக்காமல் ஒரு ஏளனமான உதட்டுவளைவுடன் அவரைக் கடந்தவன் சாரதாவிடம் மித்ரா உறங்கிவிட்டாளா என்று மட்டும் கேட்டுவிட்டு இரவுணவைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தான்.

வாய் தான் உணவை அசை போட்டதே தவிர அவன் கவனம் எல்லாம் துளசியைக் கோவை செல்லாமல் எப்படி தடுக்கலாம் என்று எண்ணுவதிலேயே இருந்தது. அகிலேஷும் கிரேசியும் ஏதோ திட்டம் வகுத்திருக்கும் இந்நேரத்தில் அவள் அங்கே செல்வது கிருஷ்ணாவுக்குச் சரியாகப் படவில்லை.

அதனால் அவளது கோவை பயணத்தைத் தள்ளிப் போடும்படி துளசியிடம் பேச எண்ணியவன் கையைக் கழுவிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். தங்களின் அறையை அடைந்தவனை எப்போதும் போல இருள் வரவேற்க டேபிள் விளக்கைப் போட்டவன் அதன் ஒளியில் வழக்கம் போல உடை மாற்றிவிட்டு அறையின் விளக்கைப் போட்டான். பளிச்சென்ற ஒளியில் துளசி கண் விழிப்பாள் என்று எண்ணியவன் அவள் கும்பகர்ணியாய் உறங்குவதைக் கண்டதும் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியபடி அவளை எழுப்பத் தொடங்கினான்.

“துளசி வேக் அப்!” என்று மென்மையாகத் தோளைத் தட்டியவனின் ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டவள் தன் எதிரே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் விழிகளை அகலமாக விரித்துப் பார்த்துவிட்டு “ஐஸ் பால்” என்று கூறவும் கிருஷ்ணாவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.

துளசி அவன் புரியாது விழிப்பதைக் கண்டதும் நமட்டுச்சிரிப்புடன் “இத்தனை நாளா நடந்த கண்ணாமூச்சி விளையாட்டுல நீ அவுட் ஆயிட்ட கிரிஷ்… அவுட் ஆனா ஐஸ் பால்னு சொல்லணும்” என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்ட அவள் சொன்ன அழகில் கரைந்து போனவனின் கை அவளது மூக்கைச் செல்லமாக நிமிண்ட எழும்ப அவள் பேசிய பேச்சுக்கள் நினைவில் தோன்றியதும் உயர்ந்த கை தானாய் இறங்கியது.

அவன் கை தணிந்த வேகத்தைப் பார்த்ததும் துளசிக்கு உள்ளுக்குள் வலித்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்
‘என்ன அதிசயமா இன்னைக்குக் கிருஷ்ணபரமாத்மா எனக்கு காட்சி குடுத்திருக்காரு? இதுல எதுவும் உள்கூத்து இருக்கா?” என்று கேட்கவும்

கிருஷ்ணா “நீ கோயம்புத்தூர் போக வேண்டாம் துளசி” என்றான் சட்டென்று. சொல்லியதோடு மட்டுமல்லாது உனக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போல விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவனை நினைத்து துளசிக்கு எரிச்சல் தான் வந்தது.

இவன் பெரிய மகாராஜா, இவன் சொல்லுவதை நான் கேட்க வேண்டுமா என்று நொடித்துக் கொண்டவள் விருட்டென்று எழுந்து அறையின் விளக்கைப் போடவும் இன்னும் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவன் எழுந்துவிட்டான்.

“ஏய்! இப்போ எதுக்குடி லைட்டை போட்ட? மனுசனை நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டியா?”

தூங்க முடியாத கடுப்பில் கத்தியவனைப் பார்த்து புருவம் உயர்த்தியபடி நின்ற துளசி “என்னைக் கோயம்புத்தூருக்குப் போக வேண்டாம்னு சொல்ல நீ யாரு கிரிஷ்?” என்று கேட்டுவிட்டுக் கைகளைக் கட்டிக்கொள்ள

கிருஷ்ணா தலையைக் கோதிக் கொண்டவன் எரிச்சலுடன் “நான் யாருனு உங்க கழுத்துல இருக்கிற தாலிசெயினைக் கேளுங்க மிஸ் துளசி ராமமூர்த்தி…அதுவே உங்களுக்குப் பதில் சொல்லும்” என்று ராமமூர்த்தியை அழுத்திச் சொல்லவே துளசிக்குக் கடுப்பில் கண் மண் தெரியாதளவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“அதான் நீயே சொல்லிட்டியே மிஸ் துளசி ராமமூர்த்தினு… ராமமூர்த்தியோட பொண்ணை அதிகாரம் பண்ணுறதுக்கு உனக்கு உரிமை இல்லை கிரிஷ்” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“பிரச்சனையோட சீரியஸ்னெஸ் புரியாம லூசு மாதிரி பேசாதடி… அங்கே அகிலேஷும் கிரேசியும் ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்காங்க… நீ அங்கே போனா அவங்க உன்னை வச்சு என்னைப் பழிவாங்க டிரை பண்னுவாங்க”

“அஹான்! அது யாரு அகிலேஷ்? இன்னொரு பேரு சொன்னியே…ஆங் கிரேசி… ஹூ இஸ் தட் கிரேசி?” என்று கேட்டுவிட்டு அமர்த்தலாக நின்றவளை தன் கூரியவிழிகளால் ஏறிட்டான் கிருஷ்ணா.

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்… நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி உனக்கு எந்த விளக்கத்தையும் நான் இனிமே சொல்லப் போறதில்லை” என்றவனின் பிடிவாதம் துளசிக்கும் கோபத்தை வரவழைத்தது.

“ஏய் போடா! நீ சொல்லுறதும் சொல்லாததும் உன் இஷ்டம்… அதே மாதிரி நான் கோயம்புத்தூர் போறதும் போகாம இருக்கிறதும் என் இஷ்டம்… இதுக்கு நான் ஒரு விளக்கமும் சொல்லப் போறது இல்லை” என்று அவனுக்கு ஈடான பிடிவாதத்துடன் கூறிவிட்டுப் படுக்க முயல

கிருஷ்ணா அவளது கரத்தைப் பற்றி நிறுத்தியவன் அவள் பார்வையைச் சந்தித்ததும் சட்டென்று கையை விட்டுவிட்டு

“சொன்னா புரிஞ்சுக்கோ துளசி… அவங்க ரெண்டு பேரும் ரொம்ப டேஞ்சர் ஆனவங்க… நேருக்கு நேரா அவங்களுக்கு மோதத் தெரியாது… என் கண் முன்னாடி நின்னா என்னால தைரியமா சண்டை போட முடியும்… ஆனா அவங்க முதுகுல குத்துற ஜாதி… அவங்க உன்னை எதாவது பண்ணிட்டா மித்ராவோட கதி என்னனு யோசிச்சியா?” என்று பொறுமையுடன் விளக்க

“மித்ராவைப் பார்த்துக்கத் தான் நீ இருக்கியே… என்னை விட அவளை நீ நல்லாவே பார்த்துப்பனு எனக்கு நம்பிக்கை இருக்கு கிரிஷ்… இதுக்கு மேல நம்ம இதைப் பத்தி பேச வேண்டாம்.. நான் நாளைக்குக் கோயம்புத்தூர் வர்றேனு என் கிளையண்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்… இனிமே போகாம இருந்தா அது என்னோட புரஃபசனுக்குத் தான் அசிங்கம்” என்று ஆணித்தரமாக உரைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்து கண்ணை இறுக மூடிக் கொண்டாள் துளசி.

கிருஷ்ணா எரிச்சலுடன் எழுந்தவன் அறை விளக்கை அணைத்துவிட்டு வெளியேறிவிட, தன்னிடம் முறைத்துக் கொண்டாலும் அக்கறையை மட்டும் விடாமல் இருப்பவனை எண்ணியபடி உறங்கத் தொடங்கினாள் துளசி.

கிருஷ்ணா மாடிவராண்டாவில் நின்றபடி யோசித்தவன் இதற்கு மேல் தன்னால் துளசியைத் தடுத்து நிறுத்த இயலாது என்பதைப் புரிந்து கொண்டவன் வேறு வழியில் தான் அவளுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

அப்போது அவன் நினைவுக்கு வந்தவள் சஹானா தான். சஹானாவின் மாமியாரும், ராகுலின் அன்னையுமான உமாவுக்குத் துளசி என்றால் கொள்ளைப்பிரியம். இந்த இளம்வயதில் தொழிலையும் கவனித்துக் கொண்டு, ஆண் துணையின்றி தைரியத்துடன் ஆறு வருடங்கள் அவள் வாழ்ந்ததை ராகுல் கதை கதையாய்க் கூறவே எப்போதுமே துளசியின் மீது மரியாதை உண்டு.

எனவே துளசியைச் சஹானாவின் பொறுப்பில் விட்டுவிட்டால் தான் நிம்மதியாக வேலையைக் கவனிக்கலாம் என்று எண்ணியவன் இவ்வளவு நேரம் இருந்த குழப்பநிலை மாறி தெளிவான மனநிலைக்கு வந்தான்.

அதே போல காலையில் எழுந்ததும் வேகமாய் கோவை செல்லத் தயாரானவளை ஓரக்கண்ணால் நோக்கியபடி “நீ ஒன் வீக் கோயம்புத்தூர்ல இருக்கப் போறேனு டாட் சொன்னாரு… சோ ராகுலோட வீட்டுல உன்னைக் கொண்டு போய்விடுறேன்… ஒன் வீக் அவங்களோட ஸ்பெண்ட் பண்ணிட்டு அப்பிடியே உன் வேலையையும் முடிச்சுட்டு வா” என்று கட்டளையிடும் பாணியில் கூறவே துளசி அதைக் கண்டுகொள்ளாமல் தனது உடைமைகள் அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டோமா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது அலட்சியம் கிருஷ்ணாவுக்குக் கடுப்பை உண்டாக்க “நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா துளசி? எதுவும் பேசாம இப்பிடியே அசமந்தம் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்?” என்றவனை நிதானமாகப் பார்த்துவிட்டு

“நீ சொல்லுற எதையும் நான் கேக்கப் போறதில்லைனு அர்த்தம் கிரிஷ்.. ப்ளீஸ் இது என்னோட புரஃபசன்… இதுக்கு நான் எங்கே போகணும், எங்கே தங்கணும், என்ன பண்ணனும்னு நீ எனக்கு லெக்சர் குடுக்காதே… உன்னோட வேலை விஷயத்துல நான் தலையிடுறேனா? அப்போ நீ மட்டும் ஏன் இவ்ளோ ஓவர் ரியாக்ட் பண்ணுற?

அப்பிடி அந்த அகிலேஷ் என்னை என்ன தான் பண்ணிடுவான்? மிஞ்சி மிஞ்சி போனா கொலை பண்ணுவானா? ஐ டோன்ட் கேர்… சாவைப் பார்த்து நான் பயந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு… இந்த ஒரு வாரமா நான் இருக்கேனா செத்தேனானு கூட கவலைப்படாத நீ இந்த விஷயத்தை நினைச்சு டென்சன் ஆகுறதைப் பார்த்தா எனக்குச் சிரிப்பா தான் இருக்கு” என்று இத்தனை நாள் அவன் உதாசீனப்படுத்தியதால் உண்டானக் கோபத்தை முழுவதுமாகக் கொட்டிவிட்டு தனது சூட்கேஸ் மற்றும் ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் துளசி.

அவள் கொட்டிவிட்டுச் சென்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அம்பாய் மாறி அவனைத் தாக்க “நான் நடிக்கிறேனா? நீ எப்போ தான் என்னைப் புரிஞ்சிப்ப துளசி? உனக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா அடுத்த நிமிசமே நானும் செத்துப் போயிடுவேன்டி.. இதைப் புரிஞ்சிக்காம எப்போவும் என் மேலக் கோவப்படுற… இந்த ஒரு வாரம் உன்னை அவாய்ட் பண்ணிட்டு நான் மட்டும் நல்லாவா இருந்தேன்?” என்று மனதிற்குள் புலம்பியவனுக்கு மனைவியைப் பாதுகாக்கும் மார்க்கம் மட்டும் புலப்படவில்லை.

முன்நெற்றியைத் தடவியபடி யோசித்தவனுக்கு ஒரு வழி புலப்பட தனது சூட்கேசை எடுத்தவன் அவசரமாக அவனது உடைகளை உள்ளே திணித்துவிட்டு படிகளில் இறங்கினான்.

கீழே துளசியுடன் நானும் வருவேன் என்று அடம்பிடித்த மித்ராவை அவள் சமாதானப்படுத்திக் கொண்டே சாப்பாட்டை ஊட்டிவிட்டுக் கொண்டிருக்க அவளைக் கவனித்தபடி படி இறங்கியவனின் கையில் இருந்த சூட்கேசை முதலில் கவனித்தவர் விஜயேந்திரன் தான்.

“எங்கே கிளம்பிட்ட கிரிஷ்? எதுவும் பிசினஸ் டிரிப்பா?” என்று கேட்டவரிடம்

“ஆமா சித்தப்பா! பட் என்னோட பிசினஸுக்கான டிரிப் இல்லை… உங்க மருமகள் பிசினஸுக்கான டிரிப்.. நான் அவளோட பாடிகார்டா போறேன் அவ்ளோ தான்” என்று அசராமல் சொல்லிவிட்டு பேண்ட்பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா.

உணவுமேஜையில் மகளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்த துளசிக்குக் கிருஷ்ணாவும் தன்னுடன் வருகிறான் என்று சொன்னதில் உற்சாகம் கொப்பளிக்க மித்ராவோ “அப்பாவும் இல்லைனா எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அம்மு… நானும் உங்களோட வருவேன்” என்று உதட்டைப் பிதுக்கி அழுகைக்குத் தயாராக

கிருஷ்ணாவோ “உங்க அம்மாவைப் பாதுகாக்கவே எனக்கு நாக்கு தள்ளுது… இதுல நீயுமா என் செல்லமகளே!” என்று எண்ணியபடி துளசியின் மடியில் அமர்ந்திருந்தவளைத் தூக்கிக் கொண்டான்.

“மித்தி குட்டி! அம்மாவும் அப்பாவும் ஜஸ்ட் ஒன் வீக்ல திரும்பிடுவோம்… வரும் போது அப்பா உனக்கு அந்த நியூ வீடியோ கேம் வாங்கிட்டு வருவேனாம்.. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா விளையாடுவோமாம்.. அது வரைக்கும் மித்தி குட் கேர்ளா பாட்டி, தாத்தாக்கள் கூட இருப்பாளாம்… சரியா?” என்று கேட்டுவிட்டு மகளின் கன்னத்தில் முத்தமிட

இவ்வளவு நேரம் அடம்பிடித்த மித்ரா வீடியோ கேம் என்றதும் அமைதியாகிவிட துளசியோ “இது தான் சாக்குனு அடுத்தச் செலவுக்குப் பிளான் போட்டுட்டான்… இருக்கிற வீடியோ கேம் பத்தாதா? அப்பனுக்கும் மகளுக்கும் காசைக் கரியாக்குறதே வேலை” என்று பொருமிக் கொண்டாள்.

அதன் பின்னர் துளசியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அவளின் சின்னமாமியாரும் சின்ன மாமனாரும் ஆயிரம் அறிவுரைகளை அள்ளிவிட, அவளது பெரியமாமனாரோ “என் மருமகள் என் கிட்ட பெர்மிசன் கேட்டாடா… ஆனா நீ கிளம்புறேனு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுற.. இது தான் உனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம்” என்று மற்றொரு முறை மருமகளை மெச்சிக் கொண்டார்.

அனைவரையும் சமாளித்துவிட்டுத் துளசியை அழைத்துக் கொண்டு காரில் அமர்ந்தவன் அவள் முகத்திலிருக்கும் புன்சிரிப்பைக் கண்டதும் “ஹலோ! மேடம்.. என்ன கனவா? நாம ஒன்னும் ஹனிமூன் போகலை தாயே… கோயம்புத்தூர்ல இருக்கிற நம்ம வீட்டுக்குத் தான் போறோம்…போயிட்டு ஜஸ்ட் ஒன் வீக்ல திரும்பிடுவோம்… இதை மனசுல வச்சுகிட்டு நடந்துக்கோ” என்று எச்சரிக்கவே

துளசி ஏற்கெனவே இருந்த உற்சாகம் அவன் வீடியோகேம் வாங்கிவருவதாகச் சொன்னதும் எரிச்சலாக உருமாறியிருக்க, இப்போது மீண்டும் அவன் தன் கரம் பற்றி அழைத்துவந்த தருணத்தில் அது காதலனின் அன்புச்செய்கையால் ஏற்பட்ட மகிழ்ச்சியாக மாறியிருந்தது.

அந்த மகிழ்ச்சி ஏற்படுத்திய உற்சாகத்தில் “இது வரைக்கும் நான் இதை ஹனிமூனா நினைக்கலை… பட் நீயே பாயிண்ட் எடுத்துக் குடுத்ததுக்கு அப்புறமும் நான் சும்மா இருக்க முடியுமா கிரிஷ்?” என்றபடி குறும்புடன் அவனை நெருங்க, அவளது கண்ணிலிருந்த குறும்பில் தன்னைத் தொலைத்திருந்தவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள் துளசி.

கிருஷ்ணா அவளது இதழின் ஸ்பரிசத்தில் உறைந்து போயிருக்க அவன் தாடையைப் பற்றி அடுத்தக் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டுவிட்டு “இது சும்மா சாம்பிள் தான் மை டியர் ஹப்பி… இதுக்கே வாயை பிளந்தா என்ன அர்த்தம்?” என்று சொல்லி அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சவும் உணர்வு வந்தவனாக விழித்த கிருஷ்ணா அவளது கரத்தைப் பட்டென்று தட்டிவிட்டான்.

தன்னை எவ்வளவு எளிதில் மயக்கிவிட்டாள் என்ற எரிச்சல் மிக “டோன்ட் டச் மீ.. ஃபர்ஸ்ட் கொஞ்சம் டிஸ்டென்ஸ் விட்டு உக்காருடி” என்று அடக்கப்பட்டக் கோபத்துடன் கத்தினான் கிருஷ்ணா.

துளசி “கிரிஷ் நீ இப்போ டிஸ்டென்ஸ் விட்டு உக்காரச் சொன்னது கூட எனக்கு என்னவோ உன் மடியில உக்காரச் சொன்ன மாதிரி தான் கேட்டுச்சு தெரியுமா?” என்று சொல்லி அப்பாவியாய் நடிக்க

கிருஷ்ணா “தாராளமா வந்து உக்காரு… ஆனா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் கோயம்புத்தூர் போக மாட்டோம்… நேரா பகவான் கிட்டவே போயிடுவோம்… ரோடு இருக்கிற லெட்சணத்துல மடியில உக்கார போறாளாம்? சில்லி கேர்ள்” என்று கடுகடுத்துவிட்டுக் காரை எடுத்தான்.