💗அத்தியாயம் 29💗

அகிலேஷின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண். பால்வண்ண மேனியுடன் பொன்னிறக்கேசம் தோளில் வழிய தனது பச்சை நிற விழிகளைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தவளின் முகத்திலிருந்த தீவிரமான பாவனைக்குக் காரணமான அகிலேஷோ தனது சுழல் நாற்காலியில் சாய்ந்து டேபிள் வெயிட்டைச் சுழற்றியபடி அவளை ஓரக்கண்ணால் கண்காணித்தபடி இருந்தான்.

மௌனம் கலைந்த அப்பெண் பெருமூச்சுடன் “சோ கிரிஷ்கு மேரேஜ் ஆயிடுச்சு… இனிமே நான் என்னால என்ன பண்ண முடியும்னு நினைக்கிற? அவனோட ஒய்ஃப் நான் ஆறு வருசத்துக்கு முன்னாடி பேசுனப்போவே பெருசா கண்டுக்கல… இப்போ மேரேஜே முடிஞ்சுருச்சு அகில்… இனிமேல் அவ என்னை நம்புவானு எனக்குத் தோணலை” என்றாள் அமெரிக்கா ஆங்கிலத்தில் விட்டேற்றியாக.

அவளது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அகிலேஷ் மனதிற்குள் “இவளை வச்சு கிருஷ்ணாவோட கல்யாணவாழ்க்கையை நான் ஆட்டம் காண வைக்கணும்னு பிளான் போட்டா, இவ எல்லாத்தையும் குழப்பிடுவா போல இருக்கே… ஏற்கெனவே தேவாவை இழந்துட்டேன்… இவளையும் அமெரிக்காவுக்குப் போக விட்டுட்டேனா என்னால கிருஷ்ணாவுக்கு எதிரா ஒரு சுண்டைக்கா அளவுக்குக் கூட பிளான் போட முடியாது… முதல்ல இவளை சமாதானப்படுத்தணும்” என்று எண்ணியபடி தன் எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணுக்குத் தைரியம் கொடுக்க ஆரம்பித்தான்.        

“கம் ஆன் கிரேசி, நீயா இப்பிடி விட்டேத்தியா பேசுற? அந்தப்பொண்ணும் கிருஷ்ணாவும் கிட்டத்தட்ட ஆறரை வருசமா பிரிஞ்சிருந்தாங்க… அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? நீ அனுப்புன போட்டோ… அதுக்கே அவ்ளோ பவர் இருக்குனா இப்போ நீயே நேர்ல வந்துருக்க… இந்த டைம் நீ முயற்சி பண்ணுனா கண்டிப்பா கிருஷ்ணா உனக்குக் கிடைச்சுடுவான்” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.

அவனது சமாதானத்தில் சலித்துக் கொண்ட அந்த கிரேசி “ப்ச்… நீ ஒவ்வொரு தடவையும் கிருஷ்ணா எனக்குச் சொந்தமாயிடுவானு நம்பிக்கை குடுக்கிற… ஆனா அவனோ என்னை விட்டு விலகிப் போயிட்டே இருக்கான்… முதல்ல ஏஞ்சலினா, இப்போ அவனோட ஒய்ஃப்னு யாராவது என்னை அவன் கிட்ட நெருங்க விடாம பண்ணிட்டே இருக்காங்க அகில்… ஒருத்தி போய் சேர்ந்துட்டானு நிம்மதி ஆனேன்… அதுக்குள்ள இன்னொருத்தி வந்துட்டா… என்னால முடியலை அகில்” என்று சோர்ந்து போனக் குரலில் சொல்லிமுடித்தாள்.

அகிலேஷுக்கு அவள் ஏஞ்சலினாவைக் குறிப்பிட்டதில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவன் தான் போட்டு வைத்திருக்கும் திட்டத்தை கிரேசியிடம் விளக்க ஆரம்பித்தான்.

அதைக் கேட்ட போது கிரேசியின் முகம் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலித்து இறுதியில் மலர்ந்தது.

“வாவ்! அகில் யூ ஆர் கிரேட்… இவ்ளோ அழகா பிளான் பண்ணுறதுல உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை… சீக்கிரமா பிளானை எக்ஸிகியூட் பண்ணு…. கிருஷ்ணா கோயம்புத்தூர் வரணும்… அப்போ தானே அவனை என்னோட கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்துட்டேனு அவன் ஒய்பை நம்ப வைக்க முடியும்” என்று தீவிரமானக் குரலில் கூறிய கிரேசியை மெச்சுதலாகப் பார்த்தான் அகிலேஷ்.

“இப்போ தான் நீ பழைய கிரேசி மாதிரி பேசுற… நம்ம எப்போவும் டயர்ட் ஆகக் கூடாது… எதிரியை டயர்ட் ஆக வச்சு அவனை நம்ம கன்ட்ரோலுக்குக் கொண்டு வரணும்… அதுல தான் நம்ம வெற்றி இருக்கு… புரிஞ்சுதா?” என்று கேட்க, கிரேசி உற்சாகமாத் தலையசைத்தாள்.

அகிலேஷ் அவளை நினைத்து மனதிற்குள் பரிதாபப்பட்டுக் கொண்டான். ஏனெனில் கிருஷ்ணாவின் மனதில் என்றுமே அவளுக்கு இடம் கிடைக்காது என்பது அவன் அறிந்த உண்மை. அவனைப் பொறுத்தவரை கிரேசி கிருஷ்ணாவைப் பழிவாங்க அவன் பயன் படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அக்கருவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.

குதிரைக்கு கேரட்டைக் காட்டுவது போல கிரேசிக்குக் கிருஷ்ணாவைக் காட்டியே அகிலேஷ் தன் காரியங்களைச் சாதித்துக் கொண்டான். ஏஞ்சலினாவின் புகைப்படத்திலிருந்து, ஆறரை வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணாவிடமும் துளசியிடமும் போனில் அவள் பேசியது வரை அனைத்துமே அவனது திட்டங்களே… ஆனால் அவை குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டித் தரவில்லை என்ற குறை அவன் மனதைக் குத்தியது.

இம்முறை கிரேசியின் துணையுடன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தும் வெறியுடன் காத்திருந்தான் அகிலேஷ் சக்கரவர்த்தி.

*****  

ஓவனிலிருந்து எடுக்கப்பட்ட பிஸ்கெட்டின் மணம் நாசியை நிறைத்தது சுகன்யாவுக்கு. மீனாவின் கைவண்ணத்தில் பொன்னிறத்தில் சற்று சூட்டுடன் இருந்த பிஸ்கெட்டுகளை அவர் ஒரு சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருந்தார்.

பாக்கெட் போட்டு முடித்ததும் வழக்கமாக அவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்ளும் பேக்கரிக்குப் போன் செய்து விவரத்தைத் தெரிவித்தவர் மாலை தான் கொண்டு வந்து தருவதாகச் சொல்லிவிட்டுப் போனை வைக்கும் போது சுவாசக்குழாயை யாரோ உள்ளிருந்து கவ்வுவது போன்ற உணர்வு.

அந்த உணர்வு தீவிரமடைய மீனாவுக்கு மூச்சு விடுவது சிரமமாகிவிட்டது. தனது இன்ஹேலரை தேடியவர் அது கையில் அகப்படாமல் போகவே மூச்சுக்கு ஏங்கியபடி கைகளால் சமையலறைத் திண்டில் தடவ அவரது கை பட்டு பாத்திரங்கள் கீழே விழுந்தன.

அந்த அரவம் கேட்டு சுகன்யா என்னவோ ஏதோ என்று பதறிப் போய் அங்கே வந்தவள் மீனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதைக் கண்டு அதிர்ந்தவளாய் அவரது இன்ஹேலரைத் தேட ஆரம்பித்தாள். பிஸ்கெட் பாக்கெட்டுகளின் மத்தியில் கிடந்ததை எடுத்து அவருக்குக் கொடுக்க அவர் வாயில் வைத்துக் கொண்டார்.

சில நிமிடங்களின் மூச்சுத்திணறல் மட்டுப்பட்டாலும் சுகன்யாவுக்குத் தாயின் உடல்நிலையை நினைத்து அச்சம் தோன்ற “ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்மா… இதோட மூனாவது தடவை இப்பிடி ஆகுது… லைட்டா மூச்சுத்திணறல் வந்தா கூட ஹாஸ்பிட்டல் வந்துடுங்கனு டாக்டர் சொன்னதை மறந்துட்டிங்களா? கிளம்புங்கமா” என்று தாயாரை அவசரமாக எழுப்பி மருத்துவமனைக்குச் செல்வதற்காகக் காரில் அமரச் சொன்னாள்.

தாயாரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டுக் காரை எடுத்தவள் ரியர்வியூ மிரரில் அவரது முகத்தைப் பார்த்தபடியே தான் காரை ஓட்டினாள். சிறிது தூரம் செல்லும் போது மீண்டும் மீனாவுக்கு மூச்சுத்திணறல் வரவே சுகன்யா பதறி விட்டாள். மீனா இன்ஹேலரை பயன்படுத்தியும் இம்முறை பலனில்லை.

சுகன்யா தாயாரை நினைத்துப் பதறியவளாய் காரை வேகமாய் ஓட்ட முயற்சிக்க, காரோ திடுமென்று வேகம் குறைந்து டகடகவென்ற சத்தத்துடன் சாலையில் நடுவில் நின்றுவிட்டது. சுகன்யா இதை எதிர்பார்க்கவில்லை. சாவியை முறுக்கிப் பார்த்தும் கார் கிளம்புவேனா என்று அடம்பிடிக்க, பின்னிருக்கையில் மீனா கொஞ்சம் கொஞ்சமாக மயக்கநிலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

சுகன்யாவுக்குக் கண்ணில் நீர் நிறைய காரை விட்டு இறங்கி அன்னையிடம் ஒடியவள் என்ன செய்யவென்று புரியாமல் அழுகைக்குத் தயாராக, அந்நேரம் பார்த்து ஆபத்பாந்தவனாய் அங்கே காரில் வந்து சேர்ந்தான் விஷ்வா.

அந்த மஞ்சள் நானோவைக் கண்டதுமே துளசியின் நினைவு வர, அதன் பின்னரே அந்தக் காரைச் சுகன்யா தான் பயன்படுத்துகிறாள் என்பது அவன் புத்தியில் உரைத்தது.

ஏன் பாதி வழியில் கார் நிற்கிறது என்று பார்ப்பதற்காகக் கீழே இறங்கியவன், அங்கே மூச்சுக்குப் போராடும் மீனாவையும் அவரைத் தோளில் சாய்த்துக் கொண்டு போனில் யாரையோ அழைத்தபடி கண்ணீருடன் இருந்த சுகன்யாவையும் கண்டு அவர்களருகில் விரைந்தான்.

மீரா மயங்கியிருப்பதைக் கண்டவன் என்னவென்று யோசிக்க கூட நேரமில்லை என்பதை உணர்ந்து சுகன்யாவிடம் எதுவும் பேசவில்லை.

மீனாவைக் கைத்தாங்கலாகத் தூக்கியவனை அவள் விழி விரிய பார்த்தபடி நிற்க, விஷ்வா மீனாவை பின்னிருக்கையில் அமர்த்தியவன்

“ஏன் அங்கேயே மசமசனு நிக்கிற? உங்க அம்மா கூட வந்து உக்காரு… ஹாஸ்பிட்டலுக்குச் சீக்கிரமா போகணும்” என்று அதட்ட அவள் ஓடோடி வந்து அன்னையுடன் அமர்ந்து கொண்டாள்.

விஷ்வா காரை வேகமாக ஓட்டியவன் சுகன்யா சொன்ன மருத்துவனைக்கு விரைந்தான். மருத்துவமனையில் கார் நின்ற போது மீனா கிட்டத்தட்ட மயக்கநிலைக்குச் சென்றுவிடவே அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிச் சென்றனர். சுகன்யா இதையெல்லாம் கண்டு அச்சத்தில் உடல் நடுங்க நின்றாள்.

அறியா வயதில் தந்தையையும் இப்படித் தான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை என்ற எண்ணம் அவள் மனதில் பயத்தை உண்டு பண்ணவே அவளை அறியாமல் அழத் துவங்கினாள் சுகன்யா.

விஷ்வா மீனாவுக்குச் சிகிச்சை ஆரம்பமாகிவிட்டதை உறுதி செய்துவிட்டு அதைச் சுகன்யாவிடம் தெரிவிக்க வந்தவன் அவள் கண்ணீரில் கரைவதைக் கண்டதும் திகைத்து நின்றான்.

சஹானாவின் திருமணத்தின் போது தன்னிடம் ஏட்டிக்குப் போட்டி பேசியவளா இப்பெண் என்ற ஆச்சரியத்துடன் அவளை அணுகியவன்

“ஹேய்! இப்போ எதுக்கு அழுற? அவங்களுக்கு சுவாசப்பிரச்சனை இருக்குனு தெரிஞ்சும் இவ்ளோ அஜாக்கிரதையா இருந்துருக்க கூடாது. இப்போ தான் டாக்டர் டிரீட்மெண்ட் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்கல்ல… சோ நீ பயப்படுற மாதிரி சீரியஸா எதுவுமில்ல” என்று அதட்டலும் அக்கறையும் கலந்த குரலில் கூறிவிட்டு அவளை அங்கே இருந்த இருக்கையில் அமருமாறு கை காட்டினான் விஷ்வா.

ஆனால் தான் அமர்ந்து சில நிமிடமாகியும் அவள் அமராததைக் கண்டு புருவம் சுழித்தவன், அவள் கரத்தைப் பற்றி அமர்த்த அது சாதாரண சமயமாக இருந்திருந்தால் சுகன்யாவின் இன்னொரு முகத்தைப் பார்த்திருப்பான் அவன்.

சுகன்யா அம்மாவுக்கு என்னவாகுமோ என்ற பதற்றத்தில் நடுங்கியபடி இருந்தவளுக்கு அவனது தொடுகை உறைக்கவே இல்லை. விஷ்வா அவள் இன்னும் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன்

“ஹலோ! அவங்களுக்கு எதுவும் ஆகாதுனு டாக்டர் சொல்லிட்டு தான் உள்ளே டிரீட்மெண்ட் குடுக்கவே போனாரும்மா… நீ ஏன் இப்பிடி ஷிவர் ஆகுற? ஃபர்ஸ்ட் நார்மல் ஆகு” என்று அதட்டவும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அப்பா….” என்று உதடுகள் தந்தியடிக்க அவள் முணுமுணுத்தது விஷ்வாவின் செவியில் விழுந்தது. இப்படியே விட்டால் இந்தப் பெண்ணுக்கு எதாவது ஆகிவிடக்கூடும் என்று எண்ணியவன் நடுங்கிக் கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி துளசிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டான்.

துளசி இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுகிறென் என்று சொல்லவும் போனை வைத்தான் விஷ்வா. தன்னருகில் இருந்த சுகன்யா இன்னும் நடுங்கியபடி சுவரை வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் ஒரு பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

சொன்னபடி சில நிமிடங்களில் துளசியும் கிருஷ்ணாவும் வந்துவிட துளசியைக் கண்டதும் உணர்வு வந்த சிலையென எழுந்த சுகன்யா அவளைக் கட்டிக்கொள்ள துளசி “ஒன்னும் ஆகாது சுகி… இது நார்மலா வர்ற வீசிங்கா தான் இருக்கும்… நீ வேணும்னா பாரு… அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடுவாங்க… அழாதேடி” என்று ஆறுதல் சொல்லவும் சுகன்யாவின் நடுக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது.

கிருஷ்ணா விஷ்வாவிடம் “நீ இவங்களை எங்கடா பார்த்த?” என்று கேட்க விஷ்வா முழுவிவரத்தையும் நண்பனிடம் கூறிவிட்டான்.

கிருஷ்ணா “அது சரி.. அந்த எல்லோ பென்ஸ் என்னாச்சு? ரிப்பேர் ஆனதை அங்கேயே விட்டுட்டியா?” என்று கேட்க

விஷ்வா “டேய் அந்த கம்பெனி கார் புரடக்சனை நிறுத்தியே வருசக்கணக்கு ஆகுதுடா… இந்தப் பொண்ணு இன்னும் இந்தக் காரைக் கட்டிகிட்டு அழறதை நினைச்சா எனக்குக் கோவம் தான் வருது” என்று எரிச்சலுடன் பதிலளித்தான்.

கிருஷ்ணா நண்பனின் தோளைத் தட்டிக்கொடுத்தவன் “சரி சரி! விஷ்வாமித்திரரே கொஞ்சம் கோவத்தைக் குறைச்சுக்கோங்க” என்று தாஜா செய்து அவனை சாதாரண மனநிலைக்குக் கொண்டு வர முயன்றான். 

சிறிது நேரத்தில் சிகிச்சை முடிந்ததும் வெளியே வந்த மருத்துவரும் இனி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறிவிடவே, நால்வரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர் எனலாம். சுகன்யா அன்று ஞாயிறு என்பதால் துளசியை அழைத்ததற்கு மன்னிப்பு கேட்கவே துளசி அவளை முறைத்ததில் அமைதியானாள்.

கிருஷ்ணாவும் “நீ ஏன் சாரி கேக்குற ஜிஞ்சர் பிரெட்? அவளுக்கு வீட்டுல ஒரு வேலையும் கிடையாது… மித்ராவை சித்தி பார்த்துப்பாங்க… சமையலுக்கு மத்த வேலைகளுக்கும் சர்வெண்ட்ஸ் இருக்காங்க… இதுல மேடம்கு சண்டே, மண்டே எல்லா டேயும் ஒன்னும் தான்… வீட்டுல பேப்பரும் பென்சிலுமா உக்காந்து பிகாசோ ரேஞ்சுக்கு கிறுக்கிட்டே இருப்பா… அவளோட கிறுக்கலைக் கசக்கிப் போட்டுப் போட்டே என் ரூம் குப்பைத்தொட்டி மாதிரி பேப்பரால நிரம்பி வழியுது தெரியுமா?” என்று சந்தடி சாக்கில் துளசியைக் கேலி செய்யவே, சுகன்யா வரிந்து கட்டிக் கொண்டு தோழிக்கு ஆதரவாகப் பேச ஆரம்பிக்கவும் தான் துளசிக்குப் புரிந்தது அவன் கிண்டல் செய்தது எதற்காக என்று.

யாரை என்ன செய்தால் தான் நினைத்தது நடக்கும் என்று கணக்கு போடுவதில் அவன் மன்னன் என்பது தான் ஆறு வருடங்களுக்கு முன்னரே தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக எண்ணிக் கொண்டாள் துளசி.

அதன் பின் சில மணி நேரங்களுக்குப் பிறகு மீனா விழித்துவிடவே துளசியும், சுகன்யாவும் அவரிடம் கம்மிப் போனக் குரலில் பேச ஆரம்பிக்க, மீனாவுக்கும் கண் கலங்கிவிட்டது. கிருஷ்ணா அவரிடம் இனிமேல் உடம்பை அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்ள அதற்கு சரியென்றவர் விஷ்வாவுக்கு நன்றி கூறவும் மறக்கவில்லை.

மீனா இன்று அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு அவனும் ஒரு காரணம் அல்லவா… சொல்லப் போனால் அவன் தான் முக்கியக்காரணம். சிறிது தாமதித்திருந்தாலும் அசம்பாவிதம் ஆகியிருக்கும் என்று மருத்துவர் சொன்னது சுகன்யாவின் காதிலும் விழுந்திருந்தது. அன்னையிடம் சகஜமாகப் பேசி சிரித்தவனிடம் சுகன்யாவும் தன் பங்குக்கு நன்றி கூறவே அதை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டான் அவன். எப்போதும் சிடுசிடுப்புடன் இருப்பவன் இன்று அவள் கண்ணுக்குப் புதியவனாகத் தோற்றமளித்தான். எப்படியாயினும் அன்னையைக் காப்பாற்றியவன் என்ற நினைவே விஷ்வா மீது அவளுக்கு ஒரு நன்மதிப்பை உண்டாக்கிவிட்டது.