💗அத்தியாயம் 27💗

என்றைக்கும் இல்லாமல் அன்று மாலையில் வீடு திரும்பிய கிருஷ்ணாவை ஆச்சரியத்துடன் பார்த்தார் சாரதா. வழக்கமாக அவன் அலுவலகத்திலிருந்து திரும்ப இரவு வெகுநேரம் ஆகிவிடும். அதிலும் பல நாட்கள் இரவுணவைத் தியாகம் செய்துவிடுவான்.

சாரதா மொபைலைச் சுற்றியபடி விஷ்வாவிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டு வந்தவனிடம் “கிரிஷ்! ஆச்சரியமா இருக்கு, சீக்கிரமா வந்துட்ட? என்னடா விஷயம்?” என்று கேலி செய்ய கிருஷ்ணா அவருக்கு ஒரு மெல்லிய புன்னகையை வீசிவிட்டு, ஹாலில் ராகவேந்திரனுடன் சேர்ந்து சதுரங்கம் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்த ராமமூர்த்தியின் அருகில் அக்கடாவென்று அமர்ந்தான்.

துளசி அவனுக்கு முன்னரே வீடு திரும்பியிருந்தவள் மித்ராவை ஹோம் ஒர்க் செய்யவைத்தபடி வீட்டின் மூத்தப்பெண்மணிகளுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்க, பென்சிலுடன் ஒட்டியிருக்கும் இரப்பர் போல அவளுடன் இணைபிரியாது அமர்ந்திருந்தாள் சுகன்யா.

அவளது சிரிப்பில் மெய்மறந்தாலும் காலையுணவின் காரம் நினைவுக்கு வரவும் அதற்கு எதாவது பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களின் அறைக்கு ரெஃப்ரெஸ் செய்து கொள்வதற்காகச் சென்றான் கிருஷ்ணா.

குளித்து உடைமாற்றி விட்டு டிரஸ்ஸிங் டேபிளின் அருகில் சென்று கண்ணாடியில் முகம் பார்த்தவனின் பார்வை வட்டத்தில் விழுந்தது துளசி அந்த டேபிளில் அடுக்கி வைத்திருந்த அவளது சில பொருட்கள். அதில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்தவனின் மூளை அவசரமாகத் திட்டம் தீட்டிவிட்டு துளசி எப்போது அறைக்கு வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தது.

அதற்குள் ராகுலும் சஹானாவும் திரும்பிவிட, ராகுல் பெருங்குரலெடுத்து கிருஷ்ணாவை அழைத்ததும் அவன் கீழே இறங்கிச் சென்றான். ராகுல் அவனையும் விஷ்வாவையும் தனியாக அழைத்தவன் அகிலேஷை பற்றி எச்சரிக்க ஆரம்பித்தான்.

“கிரிஷ்! அவன் வேற எதோ பிளான் பண்ணுறான்டா.. எனக்குத் தெரிஞ்ச வட்டாரத்திலிருந்து கிடைச்ச தகவல் படி அவனோட கண்ணு முழுக்க நம்ம எக்ஸ்போர்ட் யூனிட் மேல விழுந்திருக்கு… சோ அந்த இடத்துல செக்யூரிட்டியை டைட் பண்ணுடா… ஸ்டாஃப்ஸ் பாதுகாப்பும் நமக்கு முக்கியம்”

ராகுலின் எச்சரிக்கையை மனதில் குறித்துக் கொண்ட கிருஷ்ணா விஷ்வாவிடம் “அவனை என்ன தான்டா பண்ணுறது? என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறான்டா அவன்… ஏதோ ஏஞ்சலினாவை இழந்த சோகத்துல லூசுத்தனமா நடந்துக்கிறானு நினைச்சா அவன் எல்லை மீறி போறானே” என்று எரிச்சலுற விஷ்வா நண்பனைச் சமாதானப் படுத்தியவன் அண்ணனுடன் சேர்ந்து அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

மூவரும் வெளியே சென்று அகிலேஷைப் பற்றி தீவிரமாகப் பேசிவிட்டு வீட்டுக்குள் திரும்பவும் ராமமூர்த்தி மெதுவாக தானும் மீராவும் மும்பை திரும்பவேண்டியதை அனைவரிடமும் கூற துளசியின் முகம் வாடிவிட்டது. மித்ராவும் பாட்டியின் காலைக் கட்டிக்கொண்டு “பாட்டி அப்போ டெய்லி இனிமே நீங்க கதை சொல்ல மாட்டிங்களா?” என்று கேட்க

மீரா அவளது கூந்தலை வருடியபடி சாரதாவைக் காட்டியவர் “இனிமே இந்தப் பாட்டி உனக்கு எல்லா கதையும் சொல்லுவாங்க… மித்தி குட்டி நல்லப்பொண்ணா சாரு பாட்டி சொல்லுறதைக் கேட்டு நடந்துக்கணும்.. அவங்க என்னை விட சூப்பரா கதை சொல்லுவாங்கடா” என்று சொல்லவும் மித்ரா சமாதானமாகிவிட்டாள்.    

துளசி தான் புலம்பிக் கொண்டே இருந்தாள். ஏனெனில் ராமமூர்த்தி மற்றும் மீராவுடன் மீனாவும் சுகன்யாவைத் தங்களின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியதன் விளைவே அது. துளசி ஒரே நேரத்தில் தாய் தந்தையர் மற்றும் தோழியின் அருகாமையை இழக்கப்போகிறோமா என்று வருந்த தொடங்கவே சஹானா துளசியைச் சமாதானப்படுத்தினாள்.

“டோன்ட் ஒரி துளசி… நானும் ராகுலும் இன்னும் ஒன் வீக் இங்கே தான் டேரா போடப்போறோம்… சோ ரொம்ப ஃபீல் பண்ணாதே… குட்டிமா அம்மாவைச் சமாதானப்படுத்துடா” என்று மித்ராவைக் காட்டி துளசியை வாய் மூடச்செய்தாள்.

அதன் பின்னர் துளசி மித்ராவுக்கு இரவுணவு ஊட்டிவிட்டு, தானும் சாப்பிட்டவள், மீராவின் பொறுப்பில் அவளை விட்டுவிட்டுத் தானும் உறங்கச் சென்றாள்.

கிருஷ்ணா அவள் படியேறுவதைப் பார்த்தவன் மனதிற்குள் ஒன்றிலிருந்து எண்ணத் துவங்கினான். சரியாக அவன் இருபது வரை எண்ணி முடிக்கவும் மாடியில் அவர்களின் அறையிலிருந்து “கிருஷ்ணாஆஆஆ!” என்று கோபத்துடன் துளசி கத்தும் சத்தம் கேட்க

ரங்கநாயகியும் சுபத்ராவும் ஒரு நிமிடம் தூக்கிவாரிப்போட திரும்பிக் கிருஷ்ணாவைப் பார்க்கவே, அவன் சாதாரணமாகப் புன்னகைத்துவிட்டு “நான் தான் காலையிலேயே சொன்னேனே பாட்டி, துளசிக்கு எப்போவும் கிருஷ்ணாவோட நியாபகம் தான்… ஐ மீன் லார்ட் கிருஷ்ணாவைச் சொன்னேன்…” என்று கிண்டலடிக்கவும்

அந்த ஹாலில் குழுமியிருந்த அனைவரும் இதைக் கேட்டுக் கொல்லென நகைக்க

ராமமூர்த்தி மட்டும் மகளை விட்டுக்கொடுக்காதவராய் “இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு? என் பொண்ணு என்னை மாதிரியே ரொம்ப பக்தியானவ” என்று சொல்லிவிட்டுப் பெருமிதத்துடன் மூக்குக்கண்ணாடியைச் சரி செய்து கொண்டார்.

சஹானா அவரிடம் “ஓகே மாமா! உங்கப் பொண்ணு பக்திப்பழம் தான்… ஒத்துக்கிறேன்…. ஆனா இப்போ அவ கத்துனது எந்த கிருஷ்ணனுக்காகனு நம்ம யாருக்கும் தெரியாது, ஒரே ஒருத்தனை தவிர” என்று சொல்லிவிட்டு தமையனை ஓரக்கண்ணால் பார்த்து வைத்தாள்.

சஹானாவின் பேச்சைக் கேட்டு ராமமூர்த்தியுடன் அனைவரும் நகைக்க, சாரதா மட்டும் “எத்தனை தடவை துளசியை அண்ணினு கூப்பிடுனு உனக்கு சொல்லுறது சஹா?” என்று கடிந்து கொள்ள

மீரா “விடுங்க அண்ணி! துளசி சஹாவை விடச் சின்னவ தானே… அதுவுமில்லாம இந்தக் காலத்து பசங்க இதைலாம் பெருசா எடுத்துக்க மாட்டாங்க” என்று சொல்லவும்

சஹானா “அப்பிடி சொல்லுங்கத்தை! இந்த மம்மி ஹிட்லர் மாதிரி புதுசு புதுசா ரூல் போடுறாங்க” என்று சலித்துக் கொண்டாள்.

கிருஷ்ணா அவர்களின் பேச்சிலிருந்து நழுவியவன் மகளின் அறைக்குச் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு துளசியின் கோபத்தைக் காணும் ஆவலுடன் படியேறினான்.

அங்கே அவனது மனைவி கையிலிருந்து எதையோ உரித்துக் கொண்டிருக்கவே கிருஷ்ணா “ஓஹோ! அப்போ நம்ம பிளான் சக்சஸ்” என்று எண்ணிக் குதூகலித்தபடி அவளிடம் வந்தான்.

“என்னாச்சு துளசி? எதையோ உரிச்சிட்டிருக்க போல! மாய்சுரைசர்ல   பெவிகால் கொஞ்சம் கம்மி ஆயிடுச்சு போல” என்று நக்கலடித்தபடி நிற்க

துளசி இதெல்லாம் இவன் வேலை தானா என்று பல்லைக் கடித்தவள் “உனக்கு அறிவில்லையா கிரிஷ்? எதுக்கு மாய்சுரைசர்ல பெவிகால் ஊத்தி வச்ச?” என்று மூக்கு விடைக்க அவனைத் திட்ட ஆரம்பிக்க

கிருஷ்ணா “காலங்காத்தாலே என்னை மிளகாய் சாப்பிட வச்ச புண்ணியவதியே! நீ பண்ணுனதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை” என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டுச் செல்ல துளசி அவனை வாய்க்குள் திட்டியபடி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவளின் முகம் மிளகாய்ப்பழம் போலச் சிவந்திருக்க, கிருஷ்ணாவை முறைத்தபடி அறைக்கதவை அடைத்துவிட்டு வந்தவள் பெட்ஷீட்டின் மீது அவன் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தவளாய் வேண்டுமென்றே அதை வேகமாய் இழுத்தாள்.

ஆனால் அவள் இழுத்த வேகத்துக்கு கிருஷ்ணாவின் கால்விரல் கூட அசைந்து கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு கட்டத்தில் களைத்துப் போனவளாய் அவள் பெட்ஷீட்டை விட்டுவிட கிருஷ்ணா அவள் செய்த காரியங்களை நமட்டுச்சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் “என்னடா சிரிப்பு?” என்று மிரட்ட, கிருஷ்ணா புருவத்தை உயர்த்தி விட்டு அவளை இடையோடு அணைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டு தன் கைவளைவுக்குள் கொண்டுவந்துவிட்டான்.

“நீ கொஞ்சம் கூட மாறலை துளசி… இந்த முட்டைக்கண்ணு, கத்திச்சண்டை போடுற புருவம், ஷார்ப் நோஸ், குட்டி லிப்ஸ்னு நீ அப்பிடியே தான் இருக்க… ஆனா வெயிட் கூட போடாம இருக்க பார்த்தியா… அதான் ஆச்சரியமா இருக்கு… உன்னைத் தூக்குறதுக்குக் கஷ்டப்படவே வேண்டாம் தெரியுமா? காத்தும் நீயும் ஒரே வெயிட் தான்” என்று கிண்டல் செய்ய

துளசி உதடுகளை இழுத்துவைத்து சிரிப்பது போல பாவனை செய்துவிட்டு “நீ பண்ணுன மொக்கை காமெடிக்கு இவ்ளோ சிரிச்சா போதுமா? விடுடா என்னை… உன்னை மாதிரி கடோத்கஜனுக்கு ஜப்பான் சுமோ கூட சுண்டைக்காய் வெயிட்டா தான் தெரியும்… இதுல நான் எம்மாத்திரம்?” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலக பகீரதபிரயத்தனம் செய்ய

கிருஷ்ணாவோ நீண்டநாளுக்குப் பிறகு அவளின் அருகாமை தந்த மயக்கத்திலிருந்தவன் அவளது கேலிப்பேச்சில் வளைந்து நெளிந்த செவ்விதழ்களில் தன் பார்வையைப் பதித்திருக்க, அதை அறியாத துளசி இவனுக்கு என்னவாயிற்று என்ற ரீதியில் பார்த்துவிட்டு அவனது கரங்களை விலக்குவதிலேயே கவனமாக இருந்தாள்.

கிருஷ்ணாவின் கரங்கள் அவளை விடுவித்துவிட்டு அவளது சந்திரவதனத்தைத் தனக்குள் ஏந்திக்கொள்ளவே, தன்னைக் கரைகாணாத காதலுடன் வருடும் அவனது பார்வையில் மெது மெதுவாய்த் தன்னைத் தொலைக்கத் தொடங்கினாள் துளசி.

கிருஷ்ணா துளசியின் கண்ணில் ஒரு கணமேனும் மின்னியக் காதலைக் கண்டதும் மெய்மறந்தவனாய் அவனுக்கே உரித்தான மதிமயக்கும் புன்னகையைச் சிந்தியபடி அவள் இதழில் தன் இதழ் பொருத்தி முதல் இதழ் யுத்தத்தைச் செவ்வனே ஆரம்பித்து வைத்தான்.

சில நிமிடங்களுக்கு நீடித்த வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட இந்த யுத்தத்தில் துளசி முதலில் தடுமாறிவிட்டாலும் தன்னவனின் ஸ்பரிசம் தந்த மாயாஜால உணர்வில் கண் மூடி கரைந்து போனாள். யுத்தத்தை ஆரம்பித்தவனே அதை முடித்தும் வைக்க, துளசி விழி மலர்ந்து தன் முகத்தினருகே மந்தகாசப்புன்னகை மின்ன இருந்த கிருஷ்ணாவைப் பார்த்து குறுநகை புரிந்தாள்.

கிருஷ்ணா அவளிடம் கோபத்தை எதிர்பார்த்தவன் அது இல்லாது போகவே அவளைச் சீண்டும் விதமாக “இனிமே நீ மூட்டை மூட்டையா மிளகாய் குடுத்தாலும் சாப்பிட நான் ரெடி பேபி… மிளகாய் மூட்டைக்கு ஆர்டர் குடுத்துடுவோமா?” என்று சொல்லி கண் சிமிட்ட, அதிசயத்திலும் அதிசயமாய் துளசிக்கு அப்போதும் கோபம் வரவில்லை.

தன்னவனின் இதழொற்றலில் மதிமயங்கி இருந்தவளின் முகத்தில் வெட்கச்சிவப்பு மட்டுமே எஞ்சியிருக்க, இதைக் காண எத்தனை வருடக்காத்திருப்பு என்ற பெருமூச்சு கிருஷ்ணாவிடம் இருந்து வெளிப்பட்டது.

துளசியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு “துளசி! உன் கிட்ட நான் எதிர்பார்க்கிறது ரெண்டே விஷயம் தான்… ஒன்னு உன்னோட நம்பிக்கை, இன்னொன்னு உன்னோட காதல்… இந்த ரெண்டும் உன் கிட்ட இருந்து எனக்குக் கிடைச்சதுக்கு அப்புறமா தான் நம்மளோட லைஃபை நம்ம ஸ்டார்ட் பண்ணனும்கிறது என்னோட ஆசை… அது வரைக்கும் நான் உனக்காக காத்திருப்பேன்” என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன்

“குட் நைட்” என்று மென்மையாக உரைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவன் படுத்ததும் விளக்கை அணைத்த துளசி கிருஷ்ணாவின் வார்த்தைகளை அசை போட்டபடி தலையணையில் சாய்ந்து கொண்டாள்.

தன்னருகே கண்களை மூடியவண்ணம் வரிவடிவமாய் படுத்திருந்தவனின் சீரான மூச்சுச்சத்தம் அவனது மனநிம்மதியைப் பிரதிபலிக்க, இவனுக்கு என்ன! திடீரென்று என் வாழ்வில் வந்து காதல் என்ற மெல்லிய உணர்வைப் பூக்கச் செய்துவிட்டு அதன் நறுமணம் நாசியைத் தீண்டும் முன் விலகிச் சென்றுவிட்டான்…

இன்று மீண்டும் தன் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்க வந்திருப்பதாகச் சொல்லித் திருமணம் என்னும் கூண்டுக்குள் தன்னை அடைத்துவிட்டு இவன் மட்டும் நிம்மதியாகக் கண்ணயர்கிறான் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் துளசி 

கிருஷ்ணாவின் மீதான தனது காதல் கூட திரும்பி வர வாய்ப்புண்டு… ஆனால் நம்பிக்கை வருமா என்பது துளசியைப் பொறுத்தவரை மிகப் பெரிய கேள்விக்குறி. காதலிக்க வேண்டுமென்றால் வெறுமெனே மனம் மட்டும் ஒத்திருந்தால் போதும்.

ஆனால் ஒருவரின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின் அதற்கு அவ்விரண்டு நபர்களுக்கிடையே ஆத்மார்த்தமான பந்தம் இருக்கவேண்டும். தனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான பந்தம் எப்போதோ முற்றுப்பெற்றுவிட்டது என்ற பலவாறான சிந்தனைகளுக்கிடையே துளசி கண் உறங்குகையில் நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது.