💗அத்தியாயம் 22💗

தனது அருகில் நின்றபடி வியூபாயிண்டின் பள்ளத்தாக்கு அழகை வெறித்துக் கொண்டிருந்த துளசியைப் பார்த்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா. ஆறு வருடங்களுக்கு முந்தைய துளசி அல்ல இவள். அந்தத் துளசிக்கு சிரிக்காமல் இரண்டு வார்த்தைக்கு மேல் வராது. அவளது முகத்தில் இருந்து காணாமல் போயிருந்த சிரிப்பிலிருந்து அவன் மிகவும் ரசித்துச் சிலாகித்த அலையான கூந்தல் வெட்டப்பட்டு கழுத்தோடு நின்றது வரைக்கும் அனைத்துமே கிருஷ்ணாவின் மீதான துளசியின் வெறுப்பைப் பறைச்சாற்றியது.

அதைக் கண்டு வேதனையாக இருந்தாலும் இன்று மித்ராவின் மூலம் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட விரும்பாதவனாய் தன் முகம் நோக்காதவளின் கரம் பற்றினான் கிருஷ்ணா.

துளசி அவனது கரத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் எந்த உணர்ச்சியுமின்றி கல் போன்ற முகத்துடன் அமர்ந்திருக்க கிருஷ்ணா பேச ஆரம்பித்தான்.

“நமக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம்.. ஆனா மித்ராவுக்கு எதுவும் ஒன்னுனா உனக்கு எப்பிடி வலிக்குமோ அப்பிடித் தான் எனக்கும் வலிக்கும்… அவ நம்மப் பொண்ணுங்கிறதை நீயோ நானோ மறுக்கவே முடியாது துளசி” என்று அவன் சொல்லவும் வெடுக்கென்று தனது கரத்தை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் துளசி.

கிருஷ்ணா எதற்கும் மனம் தளராதவனாய் அவளது கரத்தை மீண்டும் தனது கரத்தினுள் அடக்கிக்கொண்டபடி “இன்னொரு விஷயம் தெரியுமா? இது வரைக்கும் என் மனசையும் சரி, உடம்பையும் சரி டச் பண்ணுன ஒரே பொண்ணு நீ மட்டும் தான் துளசி” என்று அவன் சொல்லவும் அவனது வார்த்தையில் திகைத்த துளசி தனது கரத்தை வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டாள்.

இவன் என்ன இப்படி உளறுகிறான் என்ற ரீதியில் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சீற்றம் எழ பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்தாள் துளசி. கிருஷ்ணா இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியுடன் எழுந்தான். அவனைத் தொடர்ந்து எழுந்த துளசி அவனது சட்டையின் காலரைப் பற்றியபடி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள்.

“மனசைத் தொட்ட முதல் பொண்ணுனு சொல்லு, அதைக் கூட ஒத்துக்கிறேன்… அது என்னடா உடம்பைத் தொட்ட முதல் பொண்ணும் நான் தானு சொல்லுற… உனக்கும் எனக்கும் கல்யாணமே ஆகலைனு நம்ம சரவுண்டிங்க்ல எல்லாருக்குமே தெரியும். அப்புறம் எந்த தைரியத்துல நீ அப்பிடி சொன்னடா? என்னைப் பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது கிரிஷ்? கல்யாணத்துக்கு முன்னாடியே எதுக்கும் தயாரா இருக்கிற பொண்ணு மாதிரியா? எவ்ளோ தைரியம் இருந்துச்சுனா இந்த வார்த்தையை நீ சொல்லிருப்ப?” என்று ஆவேசத்துடன் படபடத்தாள் அவள்

கிருஷ்ணாவுக்குத் தான் இப்போது குழப்பம் அதிகரித்தது. இவள் என்ன தான் சொல்ல வருகிறாள் என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டான் அவன்.

இருந்தாலும் “துளசி நீ ஒரு விஷயத்தை மறந்துட்டேனு நினைக்கிறேன்… நம்ம ரெண்டு பேரும் பிரியுறதுக்கு முந்தின நாள் நைட் தான் அதுக்குச் சாட்சி” என்று எப்போதும் போல அதே வார்த்தையை அழுத்திச் சொல்லவும், துளசிக்கு இப்போது தான் அவன் சொன்ன அந்த இரவின் அர்த்தம் புரிந்தது.

மறுபடியும் கோபம் உச்சிக்கு ஏற அவனது கன்னத்தில் பளாரென்று இரண்டாம் முறையாக அறையவும் கிருஷ்ணா “ஏய் இப்போ எதுக்குடி நீ மறுபடியும் அறைஞ்ச?” என்று கன்னத்தின் வலியுடன் கேட்க

துளசி எரிச்சலுடன் “அன்னைக்கு நைட் என்ன நடந்துச்சுனு கூடத் தெரியாம கிறுக்குத்தனமா உளறுனா இப்பிடித் தான்டா அடிப்பேன்” என்று கூறவும்

கிருஷ்ணா சாதாரணமாக “அன்னைக்கு நைட் நான் உன்னை ஹக் பண்ணுன வரைக்கும் எனக்கு நியாபகம் இருக்கு… அதுக்கு அப்புறம்….” என்று இழுக்கவும் அவனை நிறுத்துமாறு சைகை காட்டியவள் அவனது கற்பனை சிறகடித்த விதத்தை நினைத்துத் தலையிலடித்துக் கொண்டாள். இதனால் தான் மித்ரா தன்னுடைய மகள் தான் என்று அடித்துப் பேசினானா இவன் என்று பொருமிக் கொண்டாள் அவள்.

“உன் இமேஜினேசனைக் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணு கிரிஷ்… நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை அன்னைக்கு” என்றவள் அன்று இரவு நடந்ததை அவனுக்கு விளக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.

அன்றைக்கு துளசியை கிருஷ்ணா அணைக்கவும் அவளது இயல்பான உள்ளுணர்வு விழித்துக்கொண்டு அவளது பாட்டியின் போதனையை நினைவுறுத்தியது.

சிரமப்பட்டு கிருஷ்ணாவின் அணைப்பிலிருந்து விலகியவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டாள். புன்னகையுடன் அந்த அறையின் கதவைப் பூட்டிவிட்டு அகன்றாள். அதே புன்னகையுடன் ஹாலின் சோபாவில் போர்வையை இழுத்து மூடியபடி படுத்தவள் அவளை அறியாது உறங்கியும் போனாள்.

இது தான் அன்றைக்கு இரவு நடந்தது என்று கிருஷ்ணாவிடம் துளசி சங்கடத்துடன் விளக்கி முடிக்கவும் அவன் இன்னும் குழப்பமான மனநிலைக்குத் தள்ளப்பட்டான்.

அதிர்ச்சியுடன் “அப்போ மித்ரா நம்ம பொண்ணு இல்லையா?” என்றவனின் இதயத்தில் இனம்புரியாத வலி.  

துளசி எரிச்சலுடன் அவன் புறம் திரும்பியவள் “லுக் கிரிஷ்! நான் மறுபடியும் சொல்லுறேன்.. மித்ரா என் பொண்ணு மட்டும் தான், உன்னோட பொண்ணு இல்லை” என்றாள் சட்டென்று.

கிருஷ்ணா தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டவன் “வாட்? அப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? மித்ராவோட அப்பா எங்கே போனான்? ஒருவேளை அவனை டிவோர்ஸ் பண்ணிட்டியா? நீ சிங்கிள் மதர்னு அப்பா கிட்டச் சொன்னதுக்கு அர்த்தம் இது தானா?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்க, துளசி அவனுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புரிந்துவிட்டது.

மீண்டும் வியூபாயிண்டை வெறித்தபடி “நீ சொன்னது எதுவுமே சரி கிடையாது… நடந்த எதுவுமே உனக்குத் தெரியாது… மித்ராவோட வயசு ஆறு… அதை வச்சுக் கூட உன்னாலப் புரிஞ்சுக்க முடியலையா?” என்றவள் அவர்களின் பிரிவு நேர்ந்தநாளில் இதே இடத்தில் நின்று கண்ணீர் விட்டுக் கதறியதை கிருஷ்ணாவிடம் விளக்க ஆரம்பித்தாள்.

அன்று காதலன் பொய்த்துப் போனானே என்ற துயரத்துடன் “கிருஷ்ணா” என்று கண்ணீர் விட்டுக் கதறினாள் துளசி. மழைத்துளிகள் வேறு பலமாக விழ ஆரம்பிக்க, இடிமுழக்கத்தில் துளசியின் அழுகையொலி அதில் கரைந்தது. மின்னல் மின்னியதும் முகத்தில் வழிந்த மழைநீருடன் கண்ணீரும் கலந்துவிட துளசி கேவியழும்போது அவள் செவியில் விழுந்தது ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம்.

மழை வேறு பலமாகப் பெய்ய எங்கே இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்று யோசித்தவளின் மனம் அந்நிமிடம் காதல் பிரிவின் வலியை ஒதுக்கிவிட்டு கதறும் குழந்தையின் குரல் எங்கிருந்து வருகிறது என்று பரபரக்க ஆரம்பித்தது.

துளசி சத்தம் வரும் திசையில் ஓடியவள் கொண்டை ஊசிவளைவின் அருகில் இருந்த குப்பைத்தொட்டியிலிருந்து அச்சத்தம் வரவும் வேகமாக அதை நோக்கிச் சென்றாள். அந்தக் குப்பைத்தொட்டி இலைதழைகளால் நிறைந்திருக்க அதன் மேலே கை கால்களை உதைத்த வண்ணம் அழுதுகொண்டிருந்தது ஒரு பச்சிளங்குழந்தை.

பிறந்து அதிகநேரம் ஆகியிரா நிலையில் இந்தக் குழந்தையை இப்படி தவிக்கவிட்டுச் சென்றவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்கக் கூடும் என்ற கோபம் எழ, இதற்கு மேலும் குழந்தையை அழவிடாமல் அள்ளியெடுத்தாள் துளசி.

கொள்ளை அழகுடன், மழையில் ஈரமாகிப் போன பட்டுப் போன்ற மேனி சில்லிட்டிருக்க துளசி குழந்தையை மார்பொடு அணைத்துக்கொண்டாள். வேகமாக வேலுவின் டீக்கடையை நோக்கி ஓடினாள். குழந்தையை இந்நேரம் அழைத்துச் செல்ல வேண்டிய இடம் எதுவென்று அவளுக்குப் புரிந்துவிட்டது.

“அண்ணா! கொஞ்சம் உங்க பைக்கில சைல்ட் ஜீசஸ் ஆர்ஃபனேஜ்ல என்னை டிராப் பண்ணுறிங்களா? ப்ளீஸ்ணா… இந்தக் குழந்தை மழையில நனைஞ்சிருக்கு… அங்கே போனா டாக்டர் கிட்ட காட்டிடுவேன்” என்று சொன்னது தான் தாமதம், வேலு ஏற்கெனவே மழையின் காரணமாகக் கடையை மூடியவர் தனது மழைக்கோட்டைத் துளசியிடம் கொடுத்து அணியச் சொல்லிவிட்டு இருவரையும் குழந்தை இயேசு சிறார் சரணாலயத்தை நோக்கி அழைத்துக்கொண்டு விரைந்தார்.

கட்டிடவளாகத்தினுள் பைக்கை நிறுத்தியவரிடம் துளசி மழைக்கோட்டைக் கழற்றி அவரிடம் கொடுத்து நன்றி கூற அவரோ “முதல்ல குழந்தையைப் பாரும்மா… நாளைக்கு வந்து நான் பார்த்துக்கிறேன்” என்று மனிதாபிமானத்துடன் கூறிவிட்டுக் கிளம்பினார்.

துளசி குழந்தையுடன் மதரின் அலுவலக அறையை நோக்கி ஓடியவள் அங்கே இருந்த மதரிடம் “மதர் இந்தக் குழந்தையைக் காப்பாத்துங்க” என்று மட்டும் தான் கூறினாள்.

அடுத்தச் சில நிமிடங்களில் அங்கேயே தங்கியிருந்த மருத்துவர் குழந்தைக்கு முதலுதவி அளித்துவிட்டுச் சிகிச்சையும் அளித்தார். அங்கேயே குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருந்ததால் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லை.

குழந்தையை நினைத்து இனி பயப்படத் தேவையில்லை என்று மருத்துவர் கூறிய பிறகு தான் துளசிக்கு மூச்சே வந்தது. அந்தக் குழந்தையை வாஞ்சையுடன் பார்த்தபடி நின்றவளின் தோளை யாரோ தொடுவது போல உணர்ந்து திரும்பினாள் துளசி.

அங்கே குழப்பம் கலந்த புன்னகையுடன் நின்று கொண்டிருந்த மதர் அவளை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார். அதற்குள் ஊழியர் ஒருவர் சூடான தேநீருடன் வர துளசியைக் குடிக்கச் சொன்னார் அவர்.

வெளியே பெய்து ஓய்ந்த மழை கிளப்பிவிட்டக் குளிருக்கு அந்த தேநீர் இதமாக இருக்க, குழந்தைக்கு இனி பயப்படும்படி ஒன்றுமில்லை என்று மருத்துவர் கூறிவிட்டதால் நிம்மதியடைந்த துளசி தேநீரைப் பருக ஆரம்பித்தாள்.

மதர் அவள் தேநீர் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவர் துளசி கோப்பையை வைத்து விட்டு நிமிரவும் அவளிடம் குழந்தையைப் பற்றி வினவினார் அவர்.

துளசி “மதர் நான் வியூபாயிண்டுக்கு எப்போவும் போல போனேன்… வேடிக்கை பார்த்துகிட்டிருந்தப்போ மழை பெய்ய ஆரம்பிச்சது… நான் வீட்டுக்குக் கிளம்பலாம்னு வர்றப்போ இந்தக் குழந்தையோட அழுகைச் சத்தம் குப்பைத்தொட்டியில இருந்து கேட்டுச்சு… அங்கே போனா யாரோ இந்த குழந்தையைக் குப்பைத்தொட்டியில போட்டுட்டு போயிருக்காங்க… எனக்கு ஹாஸ்பிட்டல் போற அளவுக்குப் பொறுமை இல்லை… அதான் இங்கே தூக்கிட்டு வந்துட்டேன்” என்று விஷயத்தை விளக்கினாள்.

மதர் அவளுக்கு மாற்றுடை கொடுக்குமாறு பணித்தவர் அன்று இரவு அங்கேயே தங்கிக்கொள்ளுமாறு சொல்லிவிட குழந்தை உறங்கிக்கொண்டிருந்த படுக்கையின் அருகிலேயே கட்டிலைப் போட்டுக்கொண்டாள் துளசி.

அன்றலர்ந்த மலர் போல உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் அழகில் தன்னையும் தனக்கு நேர்ந்த சோகத்தையும் மறந்தவள், அதன் பூங்கரத்தை மென்மையாக வருடிக்கொடுக்க குழந்தையின் பட்டுமேனி கொடுத்த சுகம் வேறு எதற்கும் ஈடாகாது என்று பூரிக்கும் தாய்மார்களின் கூற்றின் பின்னே இருக்கும் உண்மையை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தாள் துளசி.

குழந்தை தூங்கும் அழகைப் பார்த்தபடி இருந்தவளுக்கு இவ்வளவு அழகானப் பெண்குழந்தையைத் தவிக்கவிட எப்படி இவளது தாய்க்கு மனம் வந்தது, அதுவும் பெண்குழந்தையை என்று எண்ணி மருகினாள். பார்த்த உடன் அள்ளிக் கொள்ளத் தூண்டும் அதன் பூமுகம் கூடவா அவளை இளக்கவில்லை என்று வெதும்பியவள் அதன் கரத்தைப் பற்றச் செல்லவும் குழந்தை உறக்கத்தில் அவளது ஆட்காட்டிவிரலைப் பிடித்துக் கொண்டது.

துளசிக்கு குழந்தையின் ஸ்பரிசம் அவளது நெஞ்சத்தின் காயத்துக்கு மருந்திட அவளது கண்ணில் கரகரவென்று வழிய ஆரம்பித்த கண்ணீரைத் துடைத்தபடி

“உனக்கு எல்லாவுமா இருக்கிறவங்க உன்னை விட்டுட்டுப் போன மாதிரி நானும் எனக்கு எல்லாவுமா இருந்தவனை இழந்துட்டு நிக்கிறேன்… நம்ம ரெண்டு பேரோட அழுகையும் தவிப்பும் ஒரே மாதிரியானது தான்…. உன்னைப் பார்த்த இந்தக் கொஞ்சநேரத்துல என்னால மத்தக் கவலையை மறக்க முடிஞ்சுது செல்லம்… நீ வாழ்க்கை முழுக்க என் கூட இருந்தேனா என்னால எல்லா கவலையையும் மறக்க முடியும்னு தோணுது….

இனிமே நீ எதுக்காகவும் அழக்கூடாது… நானும் அழமாட்டேன், சரியா… உனக்கு நான் இருக்கேன் கண்ணம்மா! நான் உன்னை இனிமே அழவிடவே மாட்டேன்… உன் கூடவே இருந்து உன்னை நல்லா பார்த்துப்பேன்… நான் தான் உன்னோட அம்மா… நீ இந்த துளசியோட பொண்ணு” என்று சொல்லிவிட்டு குழந்தையின் பட்டுக்கன்னத்தைப் பிடித்து உதட்டில் முத்தமிட்டுக் கொண்டாள்.

அக்கணமே துளசி தாயற்ற அக்குழந்தைக்கு தாயாகி விட்டாள். அடுத்து என்ன என்று புரியாமல் விழித்தவளுக்கு வாழ்க்கை ஒரு அழகான தேவதையை ஒப்படைத்து விட்டது. இனி அந்தத் தேவதையை தனது மகளாக வளர்க்கும் முடிவை எடுத்துவிட்டத் திருப்தியோடு தனது ஆட்காட்டி விரலைப் பற்றியபடி உறங்கியக் குழந்தையின் அருகில் ஒருக்களித்துப் படுத்தபடி உறங்கிப் போனாள் துளசி.

மறுநாள் காலையில் கண் விழித்தவளுக்கு மனது எவ்வித குழப்பமுமின்றி தெளிவாக இருந்தது. குழந்தையும் கண் விழித்து ‘ங்ங்கா ங்ங்கா’ என்று காலை உதைத்தபடி துளசியை நோக்க அவளுக்கு உற்சாகத்தில் தலை கால் புரியவில்லை.

“செல்லக்குட்டி முழிச்சிட்டிங்களா? அம்மாவைக் கூப்பிடுறிங்களா செல்லம்? என் ராஜாத்தி” என்றபடி மார்போடு அள்ளிக்கொண்டவள் சிறிது நேரத்தில் குழந்தை பசியால் அழவும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு செல்ல மதரின் அலுவலக அறையை நோக்கிச் சென்றாள் துளசி.

அங்கே மதரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே குழந்தையின் பசியாற்றி விட்டு அவள் வசம் கொடுத்துவிட்டு நீங்கினார் அந்த ஊழியர். துளசி குழந்தையைக் கொஞ்சுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மதர் “அப்போ இந்தக் குட்டிப்பொண்ணுக்கு அட்மிசன் போட்டுடலாமா துளசி?” என்று கேட்கவும் துளசிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் “வேண்டாம் மதர்… இவளை நான் என்னோட பொண்ணா வளர்க்கப் போறேன்” என்று கூறி மதருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாள்.

மதர் ஒரு நொடி அதிர்ந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு “துளசி பதினெட்டு வயசு பொண்ணால ஒரு கைக்குழந்தையை வளர்க்க முடியாதும்மா. பிடிவாதம் பிடிக்காதடா. நான் இவளை வளர்க்கிறேன். உனக்குனு ஒரு ஃபியூச்சர் இருக்கு. புரிஞ்சுக்கோம்மா” என்று அவளுக்கு விளக்கி புரிய வைக்க முயன்றார் மதர்.

துளசி தன் மார்போடு அணைத்திருக்கும் குழந்தையை இன்னும் சற்று இறுக்கமாக அணைத்தபடியே “இல்ல மதர்! என் பொண்ணு எனக்கு கடவுள் குடுத்த பரிசு. இவளை நான் யாருக்கும் குடுக்க மாட்டேன். இழக்கக் கூடாததை இழந்துட்டேனு எனக்குள்ள மருகிட்டு இருந்தப்போ இந்த தேவதை தான் எனக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரிய வச்சா. இவ எப்போவுமே துளசியோட பொண்ணா தான் வளருவா” என்று பொம்மையைத் தர மறுக்கும் சிறுமி போல பேச மதர் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

“துளசி! குழந்தை வளர்ந்தா எல்லாரும் உன்னை கேள்வியாலேயே குத்திக் கிழிப்பாங்கடா! இவளுக்கு அப்பா யாருனு கேட்டா நீ என்ன செய்வ?” என்று மெய்யான அக்கறையுடன் அவர் வினவ

துளசி உறுதியான குரலில் “இவ வயித்துல இருந்தப்போவே அவங்க அப்பா செத்துட்டாருனு சொல்லுவேன் மதர்” என்றாள்.

அதன் பின்னர் அவளது பிடிவாதத்தை யாராலும் அசைக்க இயலவில்லை. மதர், சுகன்யா மட்டுமன்றி மும்பையிலிருந்து அவளைப் பார்க்க வந்த ராமமூர்த்தி, மீராவுமே அவளது பிடிவாதத்தின் முன் தோற்றுப் போயினர்.

குழந்தையை வளர்ப்பதில் உறுதியாக இருந்தவள் அதற்கு ‘மித்ரா’ என்று பெயரிட்டு பெற்றவளுக்கும் மேலாய்ப் பாசம் காட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.

ஆரம்பகாலத்தில், அவள் கல்லூரி செல்லும் சமயங்களில் மீனா முழுநேரமும் மித்ராவைப் பார்த்துக் கொள்ள கல்லூரி முடித்து வந்தவள் முதலில் தேடுவது மகளைத் தான். குழந்தைக்கு செக்கப் செய்வதற்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் கூட அவள் முதுகின் பின்னர் கிசுகிசுக்கும் சிலரை எண்ணி அவள் வருந்தவில்லை. ராமமூர்த்தியும் மீராவும் முதலில் யோசித்தவர்கள் கூட மித்ராவின் பொக்கைவாய்ச்சிரிப்புக்கு அடிமையான பின்னர் வேறு எதையும் கண்டுகொள்ளவில்லை.

சுகன்யாவுக்கோ தோழியின் மகளை அள்ளி அணைத்துக் கொஞ்சியதில் மனம் நிறைய, அனைவருமே மித்ராவின் வருகையால் கிருஷ்ணாவின் காதல் துளசிக்கு ஏற்படுத்திய காயத்தை மெல்ல மெல்ல மறந்தனர். அவளுக்கு எந்தக் குறையும் தெரியாது வளர்க்க விரும்பியவள் தனக்கென ஒரு பொட்டிக்கை ஆரம்பித்தது கூட மித்ராவுக்காகக் தான்.

இடையிடையே மகளைப் பார்க்க வருவதென்றால் அவள் சொந்தமாகத் தொழிலை நடத்தினால் மட்டுமே முடியுமென்று எண்ணியவளாய் ராமமூர்த்தியிடம் அனுமதி பெற்று சுகன்யாவுடன் சேர்ந்து பொட்டிக்கை ஆரம்பித்தாள்.                               

இருவரின் கடின உழைப்போடு சேர்ந்து பொட்டிக் வளர ஆரம்பிக்க மித்ராவும் வளர்ந்து கொண்டிருந்தாள். அவளைப் பள்ளியில் சேர்க்கும் போது கூட மித்ராவுக்கு தந்தை இல்லை என்றே பதிவு செய்தவள், பொட்டிக்கில் நல்ல வருமானம் வர ஆரம்பிக்கவும் குறித்த வயதில் சட்டப்படி மித்ராவைத் தத்தெடுப்பதற்காகக் காத்திருந்தாள்.

இவ்வளவையும் மறைக்காமல் கிருஷ்ணாவிடம் சொல்லிவிட்டு சாதாரணமாக நின்றவளைக் கண்டு கிருஷ்ணாவுக்குப் பெருமிதமாக இருந்தது.

“அம்மா இல்லாத குழந்தையை தன்னோட குழந்தையா வளர்த்து, அவளுக்காக எல்லா அவமானத்தையும் பொறுத்துகிட்ட இந்தத் துளசியை என்னோட மனைவினு சொல்லிக்கிறதுல எனக்குப் பெருமை தான்” என்று மனதிற்குள் எண்ணியவன் அதை வாய்விட்டுச் சொல்லியும் விட்டான்.

துளசி அதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் “சோ இனிமே நீ மித்ராவை உன்னோட பொண்ணுனு சொல்லிட்டு என்னை டார்ச்சர் பண்ண மாட்டேனு நம்புறேன்… ரொம்பநேரம் ஆயிடுச்சு… வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்க

கிருஷ்ணா “போலாம்! பட் மித்ராவோட பேரண்ட்ஸா போலாம்…:” என்று கூறவும் துளசி மறுபடியும் முதலில் இருந்து இவனுக்கு விளக்க வேண்டுமா என்று எண்ணியவளாய் சலித்துக் கொண்டாள்.

கிருஷ்ணா அவளைப் பெருமிதமாகப் பார்த்தபடி அவள் அருகில் வந்தவன் ஆறு வருடங்களாக அவன் மனதில் உறங்கிக்கொண்டிருந்த காதல் விழித்துக்கொள்ள, துளசியை அணைத்துக் கொண்டான். அவள் என்னதென்று சுதாரிக்கும் முன்னரே அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“ஐ லவ் யூ துளசி… ஆறு வருசத்துக் காதலை வேண்டாம்னு சொல்லி என்னை வாழ்க்கை முழுக்க பேச்சிலராவே இருக்க வச்சிடாதே” என்று சொல்லவும் துளசி பேசாமல் அவனை நோக்கவே அவனது மனதை மயக்கும் புன்னகையை வீசி அவளைத் தன்வசப்படுத்தினான் துளசியின் கிருஷ்ணா.