💗அத்தியாயம் 21💗

காலைச்சூரியனின் மஞ்சள் கதிர்கள் ஜன்னல் வழியே வந்து கிருஷ்ணாவின் முகத்தை இதமாக வருடிக்கொடுக்க அதை அனுபவித்தபடி விழி திறந்தான் அவன். கண் திறந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு அவன் தற்போது அமர்ந்திருப்பது துளசியின் அறையில் என்பது புரியவே சில நிமிடங்கள் எடுத்தது.

சுற்றி முற்றிப் பார்த்தவன் துளசியைத் தேடவே அங்கே அவளது ஸ்கார்ஃப் மட்டுமே அனாதையாகக் கிடந்தது. அதை வேகமாகக் கையில் எடுத்துக் கொண்டவன் நேற்று என்ன நடந்தது என்பதை அசைபோட்டுப் பார்த்தான்.

அனைத்துக் காட்சிகளும் நினைவுக்கு வர இறுதியாக இதே பெட்டில் துளசியை அணைத்தக் காட்சி அவன் கண் முன் வரவும் கிருஷ்ணாவுக்குப் பகீரென்று இருந்தது. பதற்றத்தில் அவன் மூளை கன்னாபின்னாவென்று சிந்திக்க ஆரம்பித்தது.

முந்தைய இரவைப் பற்றிய தாறுமாறான சிந்தனைகள் ஓட “என்னடா கிரிஷ் பண்ணி வச்சிருக்க? துளசி உன்னைப் பத்தி என்ன நினைப்பா? படிக்கிறப் பொண்ணு கிட்ட தேவையில்லாம பேசவே கூடாதுனு கண்டிசன் போட்ட விஷ்வா இப்போ நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்தை நினைச்சா உன் மூஞ்சில காறித் துப்ப மாட்டானா? அதை விடு… ஃபர்ஸ்ட் துளசியைத் தேடு… அவ மனசு இப்போ என்ன கஷ்டப்படுதோ?” என்று எண்ணியபடி துளசியை அந்த வீடு முழுவதும் தேட அவனது எண்ணங்களின் நாயகி காபி கோப்பைகளுடன் அவன் முன்னர் பிரசன்னமானாள்.

ஆவி பறக்கும் கோப்பையை அவன் கையில் திணித்தவளின் முகம் வாடி இறுகிப் போயிருக்க, கிருஷ்ணா தயக்கத்துடன் “துளசி! ஐ அம் ரியலி சாரி… நான் வேணும்னு எதுவும் பண்ணலை… உனக்கு என் மேல கோவம்னு எனக்குப் புரியுது… நம்ம இதைப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்று மெல்ல மெல்ல கூறவும், அவனை ஏறிட்டுப் பார்த்த துளசியின் கண்ணில் மின்னியச் சீற்றத்தில் கிருஷ்ணா அரண்டு போனான்.

அதே சீற்றம் வார்த்தையில் வெளிப்பட “இதுக்கு மேல பேசுறதுக்கு என்ன இருக்கு கிரிஷ்? நீ இப்பிடி நடந்துப்பேனு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை” என்று அவனது நேற்றைய தெளிவற்ற நிலையைச் சுட்டிக்காட்டிப் பேச கிருஷ்ணா குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்தான்.

அவனது தவிப்பைக் காண இயலாதவள் “ஓகே! இனிமே நீ இப்பிடி நடந்துக்க மாட்டேனு நம்புறேன்… நீ காபி குடிச்சுட்டு குளிச்சுட்டு வா… பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணுறேன்” என்று அதே இறுகியக்குரலில் சொல்லிவிட்டுச் சென்றவளை நினைத்து மனதுக்குள் வருந்தினான் கிருஷ்ணா.

இப்போது கூடத் தனது வயிற்றுப்பசியை எண்ணி சமைக்கச் செல்லும் அவளது அன்புக்கு முன்னால் தான் மிகவும் சிறியவனாகிவிட்டதை எண்ணி வருந்தியவாறே குளிக்கச் சென்றான். சட்டையைக் கழற்றி பெட்டில் வீசியவன் அதற்குள் இருந்து புகைப்படங்கள் அடங்கிய கவர் விழுந்ததைக் கவனிக்கவில்லை.

கிருஷ்ணா குளிக்கச் சென்றதும் தனது போனை அறையிலேயே வைத்துவிட்டதை அறிந்து எடுக்கச் சென்ற துளசியின் கையில் சிக்கியது அந்தப் புகைப்படங்கள் அடங்கிய கவர். அது என்னவென்ற யோசனையுடன் கையில் எடுத்துக் கொண்டவள் கவருடன் ஹாலுக்குச் சென்று சோபாவில் அமர்ந்தபடி அதைப் பிரிக்க ஆரம்பித்தாள்.

ராகவேந்திரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அப்புகைப்படங்கள் அதை விட ஆயிரம் மடங்கு அதிர்ச்சியைத் துளசிக்கும் கொடுக்கத் தவறவில்லை. ஒவ்வொரு புகைப்படத்திலும் கிருஷ்ணாவுடன் இருந்தப் பெண் கடைசி புகைப்படத்தில் அவன் கன்னத்தில் முத்தமிடும் காட்சியைக் கண்டவள் அப்படியே உறைந்துவிட்டாள். அது எடுக்கப்பட்ட சூழ்நிலையும், எடுத்தவர்களின் நோக்கமும் துளசிக்கும் தெரியவில்லை, ராகவேந்திரனுக்கும் தெரியவில்லை.

ஆனால் துளசி ராகவேந்திரனைப் போல உடனடியாகக் கிருஷ்ணாவின் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. அவளைப் பொறுத்தவரைக்கும் காதலில் என்றுமே நம்பிக்கை முக்கியமானது. அப்படி இருக்க இந்தப் புகைப்படங்களை வைத்து அவளால் கிருஷ்ணாவைப் பற்றித் தப்பாக எண்ண இயலவில்லை. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் மார்ஃபிங்காகத் தான் இருக்கும் என்று நம்பினாள் அவள்.

ஆனால் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித் தள்ள தனது அறையை நோக்கிச் சென்றவளின் கால்கள் அறையினுள் நுழையும் முன்னர் பிரேக் போட்டது போல நின்றன. அதற்கு காரணம் கிருஷ்ணா யாரிடமோ போனில் கோபமாக உரையாடிக் கொண்டிருந்த போது உச்சரித்த வார்த்தைகள் தான்.

“ஷட் அப் கிரேசி… உனக்கு கிரேசினு நேம் வச்சது ஹன்ட்ரெட் பர்செண்டேஜ் கரெக்ட்… நீ என்ன நினைச்சிட்டிருக்கிற? இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படுவேன்னா? சில்லி கேர்ள்… உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்.. என் கிட்டவே ஆட்டிட்டியூட் காட்டுற நீ… ஐ னோ எவ்ரிதிங்… நானும் ஏஞ்சலினாவும் ஒன்னா இருக்கிற போட்டோ எல்லாமே நீ எடுத்தது தான்… நீ கத்திக்கோ, கதறிக்கோ…. ரொம்ப முடியலைனா சூசைட் கூட பண்ணிக்கோ…

பட் என் வாழ்க்கையில உனக்கு என்னைக்குமே இடமில்லை… என்னோட கரெண்ட் கேர்ள் ஃப்ரெண்ட் பத்தி நீ கவலைப்படவேண்டாம்… அவளை எப்பிடி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்… இனிமே இப்பிடி சில்லியா கேம் ப்ளே பண்ணுனா கிருஷ்ணாவோட இன்னொரு ரூபத்தை நீ பார்க்க வேண்டியிருக்கும்” என்று உறுமிவிட்டுப் போனை வைத்தான் கிருஷ்ணா.

அறைவாயிலில் நின்ற துளசிக்கு அவனது வாய்வார்த்தை மூலமாகவே இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்று புரிந்துவிட்டது. கிருஷ்ணாவின் ‘அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்’ என்ற வார்த்தையும், ‘கரெண்ட் கேர்ள் ஃப்ரெண்ட்’ என்ற வார்த்தையும் அவளுக்குள் மடமடவென்று கிருஷ்ணாவைப் பற்றிய தவறான எண்ணத்தை எழுப்பத் தொடங்க, அன்று போனில் பேசிய பெண்ணின் “நேத்தைக்கு நான், இன்னைக்கு நீ, நாளைக்கு வேற யாரோ” என்ற வார்த்தையின் அர்த்தம் முழுவதுமாக அப்போது புரிந்தது.

அதோடு சேர்த்து கோதை பாட்டியின் ஒழுக்கம் குறித்த வரையறைகள் அவள் காதில் ஒலிக்க ஆரம்பித்தன.

“துளசிக்குட்டி! ஒழுக்கம் இல்லாத மனுசன் பார்க்கிறதுக்கு அருவருப்பா தெரியுவான்” என்ற முதியப்பெண்மணியின் வார்த்தையில் கிருஷ்ணாவைப் பார்த்து முகம் சுளித்தவள், அவன் அவள் அருகே வந்து நிற்கவும் அவனது முகத்தைக் கூடப் பார்க்க இஷ்டமில்லாமல் போனது.

கிருஷ்ணாவோ அவளது கோபத்துக்கான காரணத்தை தவறாக ஊகித்தவன் அவள் கரத்தைப் பற்றியபடி “சாரி துளசி! இட் வோன்ட் ஹேப்பன் அகெய்ன்… நேத்து நான் செல்ஃப் கன்ட்ரோலை இழந்து உன் கிட்ட பிஹேவ் பண்ணுனது தப்பு தான்… ஐ அம் ரியலி சாரி” என்று கூறியபடி அவளது முன்னுச்சி கூந்தலைச் சரி செய்ய முயல, துளசி அதற்கு மேல் பொறுக்க முடியாது அவனது கரத்தை தட்டிவிட்டாள்.’

கையை உதறியவள் “நீ என்னைத் தொடாதே கிரிஷ்… எனக்கு அருவருப்பா இருக்கு” என்று சொல்லிவிட்டுத் தனது கையில் இருந்த புகைப்படங்களை அவன் முகத்தில் விசிறியடித்தாள்.

கிருஷ்ணா துளசியின் வார்த்தைகளில் காயம் பட்டிருந்தவன் தன் மேல் விழுந்த புகைப்படங்களை விரக்தியுடன் நோக்க, துளசி “கெட் அவுட் ஃப்ரம் மை ஹவுஸ்… என் வாழ்க்கையில இருந்தும் தான்” என்று தெளிவாக உச்சரிக்கவும் கிருஷ்ணாவுக்கு அடி மேல் அடியாக இதயத்தில் விழுந்தது.

“உன்னை மாதிரி ஒரு ஒழுக்கம் கெட்டவனைக் காதலிச்சதை நினைச்சா எனக்கு அருவருப்பா இருக்கு கிரிஷ்… இனிமே என்னைப் பார்க்கவோ பேசவோ நீ டிரை பண்ணுனேனா நான் செத்துப் போயிடுவேன்” என்று வார்த்தைகளை வாளாய் வீசி ஏற்கெனவே உதிரம் சிந்தும் கிருஷ்ணாவின் இதயத்தை இன்னும் ரணமாக்கினாள்.

கிருஷ்ணாவோ தன் தந்தையும் சரி, துளசியும் சரி வெறும் புகைப்படத்தை மட்டும் வைத்துத் தனது நடத்தையைச் சந்தேகித்து தன்னை வெறுப்பதை அறிந்து இனி யாருக்காக வாழ வேண்டுமென்ற ரீதியில் எண்ண ஆரம்பித்தான்.

கடைசி முயற்சியாகத் தன் தரப்பு நியாயத்தை விளக்க முயன்றவனாய் “துளசி இந்த போட்டோவை மட்டும் வச்சு என் கேரக்டரே தப்புனு முடிவு பண்ணாதே ப்ளீஸ்… நான் நீ நினைக்கிற மாதிரி….” என்று பேச ஆரம்பித்தவனைக் கையுயர்த்தி தடுத்தாள் துளசி.

“என் பாட்டி ஒழுக்கத்தை மனுச உடம்பைச் சுத்தியிருக்கிற தோல் மாதிரினு சொல்லுவாங்க கிரிஷ்… ஆனா உனக்கு அது உடம்பு மேல நீ போட்டிருக்கிற சட்டை மாதிரி… இஷ்டப்படுறப்போ கழட்டிப் போட்டுடுவல்ல” என்றவளின் வார்த்தையில் அவனுக்கும் கோபம் வரவே கைமுஷ்டி இறுகவும் அதை கட்டுப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணா.

“இனிமே என் வாழ்க்கையில காதல்ங்கிற விஷயத்தை நான் நம்பவே போறது இல்லை… என்னோட கண்மூடித்தனமான காதலை நான் தகுதியே இல்லாத ஒருத்தன் மேல வச்சிட்டேன்… இனி அந்தக் காதலும் எனக்குத் தேவையில்லை… நீயும் எனக்குத் தேவையில்லை… மரியாதையா வெளியே போயிடு கிரிஷ்… இல்லைனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது”

இவள் புரிந்து தான் பேசுகிறாளா என்று எரிச்சலுற்றான் கிருஷ்ணா. நேற்றைய இரவில் நடந்த சம்பவங்களை அவன் அனுமானித்தபடி பார்த்தால் துளசி முழுவதுமாய் கிருஷ்ணனின் துளசியாய் மாறிவிட்டிருந்தாள் உடலாலும் மனதாலும். அப்படி இருக்க இவள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது கிருஷ்ணாவுக்குக் கோபத்தை மூட்டியது.

ஆனால் கிருஷ்ணாவால் தான் என்றுமே துளசியின் மீது கோபத்தைக் காட்ட முடியாதே! அதோடு அவள் செத்துவிடுவேன் என்று சொன்னதில் ஆடிப்போயிருந்தவனுக்கு நன்றாகவே தெரியும் துளசி சொன்னதைச் செய்துவிடுவாள் என்று. அதோடு ஒழுக்கம் பற்றிய அவளது வரையறைகளும் அவன் அறிந்ததே.

இதற்கு மேல் அவளிடம் பேசி புரியவைக்க அவனுக்குமே திராணி இல்லை. அவள் தான் சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை என்ற எண்ணமே அவனுக்குள் பெரும் வலியை உண்டாக்கச் சட்டையை மாட்டிக்கொண்டான் கிருஷ்ணா.

துளசியின் இதயம் தனது காதல் பொய்த்துப் போன துயரத்தில் அழுது கொண்டிருக்க அவளது கண்ணிலும் கண்ணீர் தாரையாய் ஊற்றெடுத்துப் பெருகியது. எத்தனை கனவுகள் அவளது ராஜகுமாரனைப் பற்றி அவள் கண்டிருப்பாள்! அத்தனையும் ஒரு நொடியில் பொய்யாய்ப் போன வேதனையில் மவுனமாகக் கண்ணீர் வடித்தாள் அவள்.

கிருஷ்ணா அனைத்தும் உண்மையாகவே முடிந்துவிட்டதா என்ற வேதனை கலந்த கேள்வியுடன் அந்த அறையை விட்டு வெளியேற வாயிலுக்குச் சென்றவனைத் துளசியின் குரல் தடுத்து நிறுத்தியது.

“என் வாழ்க்கையில இனிமே நான் உன்னைப் பார்க்கவே கூடாது கிரிஷ்” என்ற துளசியின் வார்த்தையில் திரும்பி அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் நிதானமானக் குரலில் அவனது தரப்பை விளக்கிவிட்டான்.

“நேத்து நைட் நடந்த இன்ஸிடெண்டோட சீரியஸ்னெஸ் புரியாம பேசுற உன்னோட சின்னப்பிள்ளைத்தனத்தைப் பார்த்தா எனக்கு எரிச்சலா வருது… நல்லா கேட்டுக்கோ நானா உன்னைப் பார்க்கிறதுக்கு இனிமே ஊட்டிக்கு வரப்போறது இல்லை துளசி… ஆனா நீயா என்னைக்கு என் கண்ணு முன்னாடி வர்றியோ அன்னைக்கு உன்னோட இந்தப் பிடிவாதத்தை நான் மதிக்கவே போறது இல்லை… அப்போ நீ என்னை ஏத்துகிட்டுத் தான் ஆகணும்”

துளசி கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் “ஓகே! அதே மாதிரி தப்பித் தவறி நீ என் கண்ணுல பட்டேனு வை, அதுக்கு அப்புறம் நிரந்தரமா என்னை நீ பார்க்கவோ என் வாழ்க்கையில தலையிடவோ கூடாது” என்று தெளிவானக்குரலில் கூறிவிட கிருஷ்ணா சரியென்று தலையசைத்தவன் அங்கிருந்து அகன்று அவள் கண்ணிலிருந்து மறைந்தான்.

அவனது கார் கிளம்பும் சத்தம் கேட்கவும் மனதுக்குள் “இனிமே இந்தக் காரோட சத்தத்தை நான் கேக்கவே போறது இல்லை” என்று எண்ணும் போதே அவளின் விழியில் கண்ணீர்க்கடல்.

இடிந்து போய் அங்கேயே அமர்ந்தவள் கண்ணீர் உகுத்தபடி மாலை வரை அங்கேயே சிலையாய் சமைந்துவிட்டாள்.

உணர்வற்றவளாய் இருந்தவளின் செவியில் “துளசிகுட்டிக்கு என்னாச்சு?” என்ற தந்தை ஜனார்த்தனின் குரல் விழவும் உடனே வியூ பாயிண்டுக்குச் சென்று அவர்களிடம் தனது சோகத்தைச் சொல்லிக் கதற வேண்டுமென்று எழுந்தவளின் கால்கள் ஏதோ மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தது.

வானம் கருமேகங்களுடன் இருண்டக்கடலாய் காட்சியளித்தது. இரவுக்கான முன்னுரை கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்க அதற்கு அச்சாரமாய் ஒன்றிரண்டு நட்சத்திரப்பூக்கள் இருண்டக்கடலின் நடுவே எட்டிப்பார்க்க முயன்று கொண்டிருந்தன.

எப்போதும் போல அன்றும் அந்த வியூ பாயிண்ட் கொள்ளை அழகுடன் காட்சியளிக்க அதன் மரபெஞ்சில் அமர்ந்தவளின் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வடிய “மா! அப்பா! பாட்டி என்னோட பிரின்ஸ், என்னோட கிரிஷ்…. என்னை விட்டுப் போயிட்டான்… நான் கண்மூடித்தனமா காதலிச்சது எல்லாம் அவனுக்கு ஒரு விளையாட்டு மட்டும் தான்… இதுல பைத்தியக்காரி நான் தான்… அவனோட டிராமாவைக் காதல்னு நம்பி பிரின்ஸ் பிரின்ஸ்னு அவன் சொன்ன எல்லாத்தையும் நம்பி ஏமாந்துட்டேன்…

இந்த இடத்துல தான் என் வாழ்க்கையோட அழகான பக்கங்கள் ஆரம்பிச்சுதுனு நினைச்சேன்… இல்லை, இந்த ஆறு மாசமும் என் வாழ்க்கையோட இருண்ட காலம்… உண்மை எது பொய் எதுனு தெரியாம கண்ணை மூடிட்டு ஒரு ஒழுக்கம் கெட்டவனை நான் காதலிச்ச காலம் இது… இதை நான் மறக்கணும்னு முதல்ல நான் அவனை மறக்கணும்… ஆனா என்னால முடியலைம்மா” என்று கண்ணீர் விட்டுக் கதறியவளின் வேதனை இயற்கைக்கும் கேட்டதோ என்னவோ! வானம் மழைத்துளியைச் சிந்தத் தொடங்கியது.

அவளது கண்ணீருக்கு இணையாய் வானமும் மழையைக் கொட்ட ஆரம்பிக்க “கிருஷ்ணா…..” என்று கிருஷ்ணாவை நினைத்துக் கடைசியாய்க் கதறியவளின் குரல் ஆறு வருடங்களுக்குப் பின்னர் இன்னும் துளசியின் காதில் ஒலித்தது.

இந்த ஆறு வருடங்களில் எண்ணற்ற முறை இதே வியூபாயிண்டுக்கு வந்திருக்கிறாள். ஆனால் இம்முறை அவளது கடைசி கதறலுக்குக் காரணமானவனும் அருகில் நிற்பது அவளுக்கே வினோதமாக இருந்தது. ஆனால் அப்போது அழுத அழுகையை எண்ணியவளுக்கு இப்போதும் அந்த நினைவில் கண்கள் கலங்கியது.