💗அத்தியாயம் 20💗

துளசிக்குத் தேர்வு நடக்கும் சமயம் கிருஷ்ணா கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டான். இடையிடையே நலம் விசாரிப்புகள் மட்டும் போன் வழியாக நடந்து கொண்டிருக்க துளசி தனது தேர்விலும், கிருஷ்ணா தனது வேலையிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

கோயம்புத்தூர் சென்ற கிருஷ்ணாவுக்கு அங்கே வந்திருந்த சாரதாவையும் விஜயேந்திரனையும் கண்டதும் இன்ப அதிர்ச்சி. ஆனால் அவர்களின் முகத்தில் கவலை மட்டுமே நிறைந்திருக்க, கிருஷ்ணா அதைக் கவனித்தாலும் பெரிது படுத்தாமல் சஹானாவின் நலனைக் குறித்து விசாரித்தான்.

சாரதா சுரத்தே இல்லாமல் பதிலளிக்க விஜயேந்திரன் குரலில் வருத்தம் கொட்டிக் கிடந்தது. சாரதாவின் விழிகளில் தெரிந்த உயிரற்றத்தன்மை கிருஷ்ணாவை கலங்கடித்தது.

“என்னாச்சு சித்தி? எதுவும் பிரச்சனையா? நீங்க இப்பிடி இருந்து நான் பார்த்ததே இல்லையே” என்று கலக்கத்துடன் கேட்டவனின் சிகையை வருடிக்கொடுத்தார் சாரதா.

“ஒன்னும் இல்லைடா ராஜா… கொஞ்சம் எனக்கு உடம்புக்கு முடியலை… இதுக்கு மேல அமெரிக்கா சரிபடும்னு உன் சித்தப்பாக்கும் எனக்கும் தோணலை… சஹானா அவளோட ஃப்ரெண்டைப் பார்க்கிறதுக்காகக் குன்னூர் வரைக்கும் போயிருக்கா… நீ எதையும் நினைச்சு வருத்தப்படாதேடா… நீயாச்சும் நிம்மதியா இரு கிரிஷ்” என்று சகோதரியின் மைந்தனது முகத்தை வருடிக் கொடுத்துவிட்டு அகன்றார்.

கிருஷ்ணாவுக்கு எதுவோ சரியில்லை என்று தோணினாலும் அவனது தந்தையிலிருந்து சித்தப்பா வரைக்கும் யாருமே அவனிடம் விஷயம் எதையும் கூறுவேனா என்று பிடிவாதம் பிடித்தனர். சஹானா வேறு அங்கில்லாதது அவனுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.

மனம் நிறையக் கலக்கங்களோடு திரிந்தவனுக்குத் துளசியுடன் போனில் பேசும் நேரங்கள் மட்டுமே அவனுக்குச் சிறிது நிம்மதி.

துளசியும் காதலில் மூழ்கினாலும் படிப்பைக் கண்டுகொள்ளாமல் விடவில்லை. சுகன்யாவும் அவளும் தேர்வை முடித்துவிட்டு ராமமூர்த்தியிடமும் மீராவிடமும் பேசும்போது துளசி கிருஷ்ணாவைப் பற்றி தெரிவித்துவிட்டாள்.

“அப்பா நான் என்னோட பிரின்ஸைக் கண்டுபிடிச்சுட்டேன்” என்று குதூகலித்த மகளைக் கண்டதும் ராமமூர்த்தி சற்று அதிர்ந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டார். எந்த தகப்பனுக்கும் தனது மகளிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்! ஆனால் அவரது மகள் துளசி அவரிடம் எதையும் மறைக்காமல் சொன்னதே அவருக்குப் பெரும் நிம்மதி.

போன் பேசிவிட்டுப் புலம்பியவரிடம் மீரா “சும்மா இருந்த பொண்ணை உனக்குனு பிரின்ஸ் வருவான்னு சொல்லி ஏத்தி விட்டிங்கல்ல… அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சுப் பார்ப்போம்… நம்மப் பொண்ணுக்கு ஏத்தப் பையனா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லைங்க…” என்று மீரா இலகுவாகக் கூறிவிட ராமமூர்த்தியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நோ மீரா! என் பொண்ணு வளர்ந்த குழந்தை மாதிரி! இந்தக் காலத்துப் பசங்களை நம்பவே முடியலை… என் பொண்ணோட மனசை அவன் கஷ்டப்படுத்திருவானோனு மட்டுமே எனக்குத் தோணுது மீரா”

“க்கும்… எல்லா அப்பாக்கும் தோணுற விஷயம் தான்… மருமகன் தங்கக் கம்பியாவே இருந்தாலும் சந்தேகக்கண்ணோடவே பார்ப்பாங்க”

“வாட்? மருமகனா? மீரா நான் இன்னும் அந்த கிருஷ்ணா தான் என்னோட மருமகன்னு முடிவு பண்ணவே இல்லை” என்று அமர்த்தலாக மொழிந்தாலும் மனதுக்குள் திக் திக்கென்று தான் இருந்தது.

துளசிக்குத் தேர்வு முடிந்தச் சமயத்தில் தான் கிருஷ்ணாவின் வாழ்வில் அத்துயரச் சம்பவம் நடந்தது. ஒரு காலை நேரத்தின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் ராகவேந்திரனின் குரல் அந்த ஆர்.கே பவனத்துக்குள் ஆவேசமாக ஒலித்தது.

“கிருஷ்ணா………………..”

விஜயேந்திரனும் சாரதாவும் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு ஓடி வர, கிருஷ்ணா குழப்பத்துடன் தன் அறையிலிருந்து ஹாலுக்கு வந்தான்.

அங்கே சம்காரமூர்த்தியைப் போல கோபத்துடன் நின்று கொண்டிருந்த தந்தையைக் கண்டதும் அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.

“என்னாச்சு டாட்? ஏன் இவ்ளோ கோபமா இருக்கிங்க? எதுவும் பிரச்சனையா?” என்றவனை வெறித்து நோக்கினார் ராகவேந்திரன்.

“என் மானத்தை வங்கணும்னு எத்தனை நாளா காத்திட்டிருந்தடா கிருஷ்ணா? உன்னை அமெரிக்கா அனுப்புனது எதுக்கு? படிக்கத் தானே! நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” என்று கர்ஜித்தவரை எதுவும் புரியாமல் நெருங்கினான் கிருஷ்ணா.

“நான் என்ன பண்ணுனேன் டாட்? நீங்க சொல்லுறது என்னனு சத்தியமா எனக்குப் புரியலை” என்றவனின் கையில் ராகவேந்திரன் கொத்தாய்ச் சில புகைப்படங்களைத் திணித்தார்.

“பாரு! இதைலாம் பார்த்துட்டு உனக்கு நியாபகம் வருதானு சொல்லு” என்று வெறுத்துப் போனக் குரலில் சொல்லிவிட்டு நின்றார் ராகவேந்திரன்.

கிருஷ்ணா அந்தப் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தான். அவனது முகத்தில் ஆச்சரியத்தின் ரேகை ஒட்டிக்கொண்டது. ஏனெனில் அவையெல்லாமே அவன் அமெரிக்காவில் படித்தபோது ஏஞ்சலினாவுடன் இருந்தச் சமயத்தில் எடுத்தப் புகைப்படங்கள்.

முதல் புகைப்படத்தில் ஏஞ்சலினாவின் பிறந்தநாள் பார்ட்டியின் போது அவளும் கிருஷ்ணாவும் நடனம் ஆடுவது இடம்பெற்றிருக்க, அடுத்தடுத்தப் புகைப்படங்களில் கிருஷ்ணா ஏஞ்சலினாவின் தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அவை அனைத்துமே தற்செயலாக நடந்தச் சாதாரண நிகழ்வுகளே! ஆனால் பார்ப்பவருக்குத் தவறாகத் தெரியும்படியான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தன அப்புகைப்படங்கள்.

கிருஷ்ணா அதற்கு விளக்கமளிக்க முன்வர அவனைக் கையுயர்த்தித் தடுத்தவர் “நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா… போட்டோவிலேயே எல்லாம் தெள்ளத்தெளிவா தெரியுதே… ஆனா சஹானாவும் உன்னைப் பார்த்துக் கெட்டுப்போனது தான் என் நெஞ்சை அறுக்குது கிரிஷ்… முன் ஏர் போற வழியில தான் பின் ஏர் போகும்னு எங்கப்பா சொல்லுவாருடா… மூத்தவன் நீ சரியில்லாம சுத்துனதால தான் அந்தச் சின்னப்பொண்ணும் கிளப், பார்ட்டி, பாய்ஃப்ரெண்டுனு சுத்திருக்கா… இப்போ அவ இருக்கிற நிலைமைக்கும் நீ தான் காரணம் கிருஷ்ணா” என்று குற்றம் சாட்டினார் ராகவேந்திரன்.

விஜயேந்திரன் தமையனைத் தடுக்க வர ராகவேந்திரன் “போதும்டா! எல்லாருமா சேர்ந்து இவனுக்குச் செல்லம் குடுத்துத் தான் இந்த மாதிரி காரியங்களைலாம் சர்வசாதாரணமா பண்ணிருக்கான் இவன்… நீயும் சாருவும் குடுத்த அளவுக்கதிகமானச் சுதந்திரமும், செல்லமும் தான் இவன் கெட்டுச் சுவராப் போனதுக்குக் காரணம்.. சோ நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருங்க” என்று இறுகியக்குரலில் கூறிவிட்டு கிருஷ்ணாவிடம் திரும்பினார்.

ஆனால் அவனோ இறுதியாக இருந்த ஏஞ்சலினாவின் மரணப்படுக்கை புகைப்படத்தைப் பார்த்துச் சிலையானவன் தோழியின் கடைசிநிமிடம் கொடுத்த வலியில் கலங்கிப் போய் நிற்க, ராகவேந்திரன் தான் சொன்ன விஷயத்தைக் கேட்டுவிட்டு தனது தவறான நடத்தை தந்தைக்கு தெரிந்துவிட்டதென்று எண்ணியபடி கிருஷ்ணா சிலையாய் நிற்கிறான் என்று தவறாக எண்ணிக்கொண்டார்.

அந்த எண்ணத்தில் வார்த்தைகளை யோசிக்காமல் சிதறவிட்டார் ராகவேந்திரன்.

“நல்லா கேட்டுக்கோ! இனிமே நீ என் மகனும் இல்லை, நான் உனக்கு அப்பாவும் இல்லை… என் கிட்டப் பேசவோ என் மனசை மாத்தவோ முயற்சி பண்ணாதே கிருஷ்ணா… இப்பிடி ஒழுக்கம் கெட்ட மகன் எனக்குப் பிறக்கவே இல்லைனு நினைச்சுக்கிறேன்” என்று உறுதியாக உரைத்துவிட்டு தளர்ந்த நடையுடன் சென்றவரைக் கண்டு கண்ணீர் மல்க நின்றான் கிருஷ்ணா.

விஜயேந்திரன் அண்ணனை அழைத்தவாறு அவர் பின்னே ஓட சாரதாவுக்குச் சஹானாவிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வரவும் அவர் கிருஷ்ணாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“சஹாம்மா! எப்பிடிடா இருக்க?……. இங்கே எல்லாருமே நல்லா இருக்கோம்டா…. சரிடாம்மா, நான் இன்னைக்கு ஈவினிங்கே கிளம்புறேன்” என்றவர் கிருஷ்ணாவிடம் வந்தார்.

“கிரிஷ்! நம்ம குடும்பத்துக்கு ஏதோ கெட்டநேரம் மாதிரி இதுல்லாம் நடக்குது… நீ கொஞ்சநாளுக்கு ஊட்டி எஸ்டேட் பங்களாவுல இரு.. இன்னைக்கு ஈவினிங் நான் குன்னூர் போய் சஹானாவை அழைச்சுட்டு ஊட்டிப்பங்களாவுக்கே வந்துடுறேன்” என்று கூறிவிட்டு வேகமாகத் தனது அறைக்குள் சென்றவர் கையில் ஒரு பேக்குடன் திரும்பினார்.

கிருஷ்ணாவிடம் வந்தவர் “கிரிஷ்! அப்பாவோட கோவம் எல்லாமே இன்னும் கொஞ்சநாள்ல சரியாயிடும்… நீ ரொம்ப ஒரி பண்ணிக்காதே.. ஊட்டிக்குக் கிளம்பு… நான் சஹானாவோட வந்து மத்த விஷயங்களை உனக்குச் சொல்லுறேன்” என்று வலி நிறைந்த குரலில் இயம்பிவிட்டு அகன்றார்.

கிருஷ்ணா வெறும் புகைப்படங்களை மட்டுமே வைத்துத் தந்தை தனது நடத்தையைக் குற்றம் சொன்னதைத் தாங்க முடியாத வருத்தத்துடன் சிலையாய் நின்றிருந்தான்.

அதே நேரம் அகிலேஷ் தான் எய்த அம்பு இந்நேரம் கிருஷ்ணாவின் இதயத்தைத் துளைத்து உயிரைக் குடித்திருக்கும் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காதக் குறையாக அச்சந்தோசத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தான்.

அவனுக்குத் தகவலைத் தெரிவித்த தேவாவுக்கு நன்றி தெரிவித்தவன் “தேவா இதுக்கு மேலே தான் கிருஷ்ணாவை நீ கண்காணிக்கனும்… அவன் இன்னைக்கு இருக்கிற நிலைமைக்குக் கண்டிப்பா அவனோட காதலியைத் தேடித் தான் போவான்… இதை உன் கைவசம் வச்சுக்கோ… ஆல்ரெடி அவனோட எஸ்டேட் பங்களாவுல இருந்த சமையல்காரனைப் பயமுறுத்தி துரத்தி விட்டாச்சு… நம்ம ஆளு ஒருத்தன் தான் அங்கே வேலை செய்யுறான்…

அவன் கையில இதைக் குடுத்து கிருஷ்ணாவோட சாப்பாட்டுல கலந்துடச் சொல்லு.. இதைச் சாப்பிட்டதும் கண்டிப்பா அவனால தெளிவா யோசிக்க முடியாது… அந்த மனநிலையோட காரை டிரைவ் பண்ணுறவனுக்கு ஊட்டியோட ஹேர்பின் பெண்ட் மலர் வளையத்தோட காத்திருக்கும்.. கிருஷ்ணாவோட சேப்டர் இன்னையோட முடியப் போகுது” என்று வஞ்சத்துடன் உரைக்க அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்த தேவாவுக்கு அகிலேஷ் முகத்தில் தாண்டவமாடிய பழிவாங்கும் வெறி பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

அவன் சொன்னபடி கிருஷ்ணாவின் வீட்டு வாசலில் அவனறியா வண்ணம் மறைந்திருந்தவன் கிருஷ்ணாவின் கார் வெளியேறியதும் தனது காரில் அவனைத் தொடர்ந்தான். அகிலேஷ் சொன்னபடி கிருஷ்ணாவின் கார் ஊட்டியை நோக்கிச் செல்லும் பாதையில் செல்லவே தேவா கிருஷ்ணாவின் எஸ்டேட் பங்களாவின் புதிய சமையல்காரனான தங்களது ஆளுக்குப் போன் செய்து இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணா வருவான் என்ற தகவலைத் தெரிவித்தான்.

கூடவே தானும் வருவதாகக் கூறியவன் கிருஷ்ணாவின் சாப்பாட்டில் கலப்பதற்காக அகிலேஷ் கொடுத்த மாத்திரையைப் பற்றி தெரிவித்துவிட்டு அதை கிருஷ்ணாவுக்குத் தெரியாமல் தன்னிடம் இருந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறவே அந்தச் சமையல்காரனும் சரியென்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

போனை வைத்துவிட்டுச் சாலையில் கண் பதித்தான் தேவா. அன்று காலையில் ராகவேந்திரன் வாக்கிங் செல்லும் நேரத்தில் ஆர்.கே பவனத்தின் வாசலில் அகிலேஷ் கொடுத்தப் புகைப்படங்களை ஒரு கவரிலிட்டு வைத்தவன், அதை ராகவேந்திரன் எடுத்துப் பார்த்துவிட்டு முகம் மாறும் காட்சியை போனில் படம் பிடித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அதன் பின்னர் அனர்த்தங்கள் அனைத்துமே தேவாவும் அகிலேஷும் ஏற்கெனவே ஊகித்த விஷயங்கள் தான். இப்போது கிருஷ்ணாவைப் பின் தொடருபவன் அவன் பங்களாவுக்குச் சென்று சாப்பாட்டை முடித்துவிட்டு துளசியைத் தேடி செல்லும் நேரத்துக்காகக் காத்திருந்தான். அந்த மாத்திரை ஏற்படுத்தும் மயக்கத்தால் கிருஷ்ணா கொண்டை ஊசி வளைவில் காரை விட்டு மரணிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான் தேவா.

இது எதுவும் அறியாதவனாய் கிருஷ்ணா தனது காரை ஊட்டி நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அவனது வாழ்வில் துளசி என்பவளின் பிரசன்னம் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் இல்லாமல் போய்விடும் என்பதை அவன் அப்போது அறியவில்லை.

***************

ஊட்டி, எஸ்டேட் பங்களா…

“ஹலோ! சொல்லு தேவா…. இல்லைடா, அவரு இன்னும் மேல தான் இருக்காரு…. மதியம் எதுவுமே சாப்பிடலைடா…. இன்னைக்கு நைட் யாரோ அவரோட சித்தியும் தங்கச்சியும் வர்றேனு சொன்னாங்களாம்… அவங்களோட சேர்ந்துச் சாப்பிட்டிருக்கிறேனு சொல்லிட்டாரு…… நீ குடுத்த மாத்திரை என் கிட்டத் தான் இருக்கு, இனிமே நீ இங்கே வந்தா கொஞ்சம் கவனமா வா தேவா! வாட்ச்மேனோட பார்வையே சரியில்லைடா….. நீ எதுக்கும் கவலைப்படாதே! நைட் கிருஷ்ணா சார் சாப்பிட்டதும் நானே உனக்குப் போன் பண்ணி சொல்லுறேன்….. நான் போனை வச்சிடுறேன்” என்றபடி போனை வைத்தான் அகிலேஷின் ஆளான அந்த புதிய சமையல்காரன், முருகன்.

போனை வைத்துவிட்டு இரவுக்காகச் சமைக்கச் சென்றவன் சமையலை முடித்துவிட்டு நேரம் பார்க்க மணி ஏழரையைத் தாண்டியிருந்தது. கிருஷ்ணாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியவன் உள்ளேயிருந்து என்னவென்று கேள்வி வரவே “சாப்பிடுறிங்களா சார்? மதியமே நீங்கச் சாப்பிடலையே” என்று நைச்சியமாகப் பேச கிருஷ்ணாவும் தனது அறைக்கே சாப்பாட்டைக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டான்.

சமையலறைக்குச் சென்றவன் தேவா கொடுத்த மாத்திரையைப் பொடியாக்கி சாப்பாட்டில் கலந்து கிருஷ்ணாவின் அறைக்கு எடுத்துச் சென்றான். கிருஷ்ணா அவனது சூழ்ச்சியை அறியாதவனாய் மதியத்திலிருந்துச் சாப்பிடாததால் வேக வேகமாய் அள்ளிப் போட்டுக்கொண்டான்.

சஹானாவை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொன்ன சாரதா தாங்கள் இருவரும் நாளை வருவதாகச் சொல்லிவிடச் சாப்பாட்டை விருவிருவென்று முடித்தவன் துளசியைப் பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று எண்ணிக் கிளம்பினான். அவசரத்தில் கிளம்பியவன் தந்தை காலையில் அவனிடம் காட்டிய புகைப்படங்கள் அடங்கிய கவர் அவனது சட்டையின் உட்புற பாக்கெட்டில் இருப்பதை மறந்தே போனான்.

காரின் அருகே செல்லும் போதே தலைக்குள் ஏதோ வண்ணமயமாக வரிகள் ஓட கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. ஒரு நொடி நின்றவன் தலையை உலுக்கித் தன்னைச் சமன்படுத்திக்கொண்ட பின்னர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

அவன் கிளம்பியதும் தேவாவுக்குப் போன் செய்து முருகன் விஷயத்தைத் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் கிளம்பிய தேவா ஒரு இடத்தில் போலீசார் சோதனை நடத்தவும் அதில் சிக்கிக் கொண்டான்.

“சே! அவனா எங்கேயும் விழுந்துச் சாகலைனா நானே காரை இடிச்சுத் தள்ளலாம்னு நினைச்சா இங்கே போலீஸ்காரங்க கிட்ட மாட்டிகிட்டு நிக்கிறேனே! ஒரு வேளை அந்தக் கிருஷ்ணா இதுல இருந்து தப்பிச்சு வீடு போய்ச் சேர்ந்துடுவானோ!” என்றெல்லாம் சிந்தித்தபடி நின்று கொண்டிருந்தான்.

அதே நேரம் கிருஷ்ணா அவனது தாய் தந்தையர் செய்த புண்ணியத்தின் விளைவாகவும் போலீசாரின் சோதனையால் எந்த வாகனமும் வராமல் இருந்ததாலும் எதிலும் இடிக்காமல் பாதுகாப்பாய் துளசியின் வீட்டை அடைந்தான். காரை விட்டு இறங்கும் போதே கால்கள் அவன் சொல் பேச்சுக் கேளாமல் தள்ளாட, துளசியின் வீடு அவனுக்கு மங்கிய உருவமாய்த் தான் தெரிந்தது.

அதன் முன்னே இருக்கும் சிறியத் தோட்டத்தின் நடுவே ஓடிய பாதையில் தள்ளாடி நடந்தவன் தனக்கு என்னவாயிற்று என்று யோசிக்கக் கூட முடியாத நிலையில் இருந்தான் என்பதே உண்மை. குத்துமதிப்பாய் படிகளில் ஏறியவன் கதவைத் தட்ட சில நிமிடத் தாமதத்துக்குப் பின்னர் கதவைத் திறந்தாள் துளசி.

கண்ணை மூடி மூடித் திறந்தபடி நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவை அந்நேரத்தில் அவள் அங்கே எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே சுகன்யாவும் மீனாவும் வேறு அவர்கள் சொந்தக்காரர் ஒருவரின் மறைவுக்காகக் கோத்தகிரிக்குச் சென்றுவிட யாருமற்ற தனிமையில் இருக்கப் பயந்தவளாய் கதவை இறுக்கமாய் மூடிவிட்டு உறங்க முயன்றவளை யாரோ கதவைத் தட்டும் சத்தம் எழுப்பவே சற்று பயந்தவாறே தான் கதவைத் திறந்தாள் துளசி.

அங்கே தள்ளாடியபடி நின்ற கிருஷ்ணாவைக் கண்டதும் கண்ணில் குழப்பம் சூழ “நீ இங்கே என்ன பண்ணுற கிரிஷ்?” என்றபடி நின்றவளின் அருகே தள்ளாடி வந்து நின்றவனின் முகத்தில் தெரிந்த சோகம் துளசியின் நெஞ்சை வருத்தியது.

அவனுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடியே அவனது கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவள் அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு அவனுக்குத் தண்ணீர் எடுத்து வரத் திரும்புகையில் கிருஷ்ணா துளசியின் கரம் பற்றி இழுக்க, துளசி சமாளிக்க முடியாமல் அவன் மீதே விழுந்து வைத்தாள்.

தன் மீது விழுந்தவளை எழுப்ப விரும்பாமல் அணைத்துக் கொண்டவனின் மூளைக்குள் எதுவும் வேலை செய்யவில்லை. அவனது உதடுகள் மட்டும் “ஐ லவ் யூ துளசி” என்ற வார்த்தையை விடாது உச்சரித்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் துளசியோ கிருஷ்ணாவின் இந்தத் தள்ளாட்டத்துக்கு என்ன காரணமாக இருக்கக்கூடுமென்று யோசித்தவள் ஒரு வேளை குடித்திருக்கிறானோ என்று எண்ணமிட, அவளது மூளை “லூசே! அவன் மேல துளி கூட ஆல்கஹால் ஸ்மெல் வரலை… உன் யோசனையில தீயை வைக்க” என்று அவளைச் சபித்தது.

பின்னே ஏன் இவன் இவ்வாறு தெளிவின்றி இருக்கிறான் என்று யோசிக்கும் போதே கிருஷ்ணாவின் அணைப்பு இறுக ஆரம்பிக்க மெதுவாக அவனிடமிருந்து விடுபட்டவள் அவனை சோபாவிலிருந்து எழுப்ப முயற்சித்தாள்.

அவன் எழவும் கீழே விழாமல் தாங்கியவள் தனது அறைக்குள் அவனை உறங்க வைத்துவிட்டு ஹாலுக்குச் செல்ல எழவும், கிருஷ்ணா அவளை அகலவிடாமல் மீண்டும் இழுத்து அணைத்துக் கொள்ள, துளசி மனதிற்குள் “அடேய் பொசுக்பொசுக்குனு கையைப் பிடிச்சா இழுக்கிற? நாளைக்குக் காலையில நீ எழுந்திரு மகனே! உனக்குப் பொங்கல், தீபாவளி ரெண்டுமே சேர்த்துக் கொண்டாடுறேன்” என்று கறுவிக்கொண்டபடி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

அவள் எழ முயலும் போது அவனது உதடுகள் காதருகே உரசியபடி உச்சரித்த “ஐ லவ் யூ துளசி” என்ற வார்த்தை துளசிக்குள் சத்தமின்றி பூகம்பத்தை உண்டாக்க, இவ்வளவு நேரம் இருந்த சிறுபிள்ளைத்தனமான கோபம் அகன்றுவிட, தன் அருகே கண் மூடியபடி தன் பெயரை உச்சரிப்பவனை ஆழப் பார்த்தாள் துளசி.

அச்சமயத்தில் கிருஷ்ணா கண்ணைத் திறக்க, அவனை நோக்கிப் புன்னகையை வீசியவள் அவனது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு “ஐ லவ் யூ கிரிஷ்” என்றாள் காதலுடன். அந்த தெளிவற்ற நிலையிலும் அவளது காதல் நிறைந்த வார்த்தைகள் கிருஷ்ணாவின் காதில் தெளிவாக விழ அவனது கரங்கள் அவளை வளைத்துக் கொண்டது.