💗அத்தியாயம் 18💗

துளசியின் மனம் இன்றைக்கு மிகவும் சோர்வாக இருந்தது. இப்போதெல்லாம் அவளது காலைப்பொழுது விடிவதே “பேபி குட் மார்னிங்” என்ற கிருஷ்ணாவின் போன் அழைப்பில் தான். இன்று ஏனோ வெகுநேரமாகியும் அவனிடமிருந்து போன் வராதது அவளுக்குத் தவிப்பை உண்டாக்கியது.

அவனுக்கு என்னவாகியிருக்கும் என்ற குழப்பமான மனநிலையுடன் நேரத்தைக் கடத்தியவள் பொறுக்க முடியாமல் கிருஷ்ணாவின் எண்ணுக்கு அழைக்க போனை எடுத்தான் கிருஷ்ணா.

“துளசி……………….” என்று மட்டும் உரைத்தபடி அமைதியாயிருந்தவனின் குரலைக் கேட்டதும் தான் அவளுக்கு மனம் கொஞ்சம் அமைதியுற்றது.

“கிரிஷ்! உனக்கு என்னாச்சு? நீ நல்லா தானே இருக்க? உனக்கு எதும் பிரச்சனையா கிரிஷ்?” என்று படபடத்தவளின் அக்கறை அவன் மனதுக்கு இதத்தை அளித்தது.

“துளசி எனக்கு ஒன்னுமில்லை… ஐ அம் ஓகே! நீ டென்சன் ஆகாதே… உனக்கு எக்சாம் இருக்குனு சொன்னல்ல, அதுக்குப் பிரிப்பேர் பண்ணாம எனக்குப் போன் பண்ணி விசாரிச்சிட்டிருக்க? முதல்ல போய் படி… நாம அப்புறமா பேசிக்கலாம்”

“முடியாது கிரிஷ்… நான் உன்னைப் பார்க்கணும்… அப்போ தான் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்… நீ ஏதோ என் கிட்ட மறைக்குற”

“துளசி ஐ அம் ஆல்ரைட்…. நீ டென்சன் ஆகுற அளவுக்கு எதுவுமில்லை பேபி… நான் நாளைக்கு உன் கிட்ட பேசுறேன்” என்று கூறிவிட்டுப் இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

துளசி “கிரிஷ்… ஹலோ…ஹலோ….” என்று மறுமுனையில் கத்தியதையோ, அவனைப் பார்க்க வேண்டுமென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பியதையோ கிருஷ்ணா அறியவில்லை.

சுகன்யா கூட “துளசி எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… அவன் தான் தெளிவா சொல்லுறானே எக்சாமுக்குப் படி, நாளைக்குப் பேசிக்கலாம்னு… நீ கண்டிப்பா அவனைப் போய் பார்த்து தான் ஆகணுமா?” என்றவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை துளசி.

“சுகி! கிரிஷ் விஷயத்துல நீ சொன்ன எதையும் நான் மீறுனது இல்லை… ஆனா அவன் இன்னைக்கு நார்மலா இல்லைடி… என்னால அவனைப் பார்க்காம அவன் குரலைக் கேக்காம இருக்க முடியாது… அவனைப் பார்த்துட்டு வந்தா தான் என் மனசு ஒரு நிலைக்கு வரும்… ப்ளீஸ்டி” என்றபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

சுகன்யாவோ “பார்த்துப் பத்திரமா போ துளசி” என்று கத்தியவள் அவளைத் தடுக்க முடியாமல் கையாலாகத்தனத்துடன் அவள் செல்வதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

***********

கிருஷ்ணா பங்களாவின் மாடியில் நின்று சுற்றிலும் தெரிந்த இயற்கை காட்சியில் மனவலியைப் போக்க முயன்று கொண்டிருந்தான். இன்று அவனது அன்பான அன்னை தெய்வமாகிப் போன நாள். எல்லா வருடங்களும் இந்நாளில் அவன் கடவுளிடம் சண்டையிடுவது வழக்கம்.

“ஏன் என்னோட அம்மாவை என் கிட்ட இருந்து கூட்டிட்டுப் போயிட்ட? அவங்க இல்லாம நான், டாட், பாட்டி எல்லாருமே எவ்ளோ கஷ்டப்படுறோம் தெரியுமா? ஐ மிஸ் ஹெர் அ லாட்… உனக்குக் கொஞ்சமாச்சும் இரக்கம் இருந்தா நீ இப்பிடி பண்ணிருப்பியா காட்?” என்று தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்தே கடவுளிடம் முறையிட்டு அழுதவன் பெரியவனானதும் அழுவதை மட்டும் நிறுத்திக் கொண்டான், ஆண்பிள்ளை அழக்கூடாது என்ற சமூகத்தின் வரையறைக்குக் கட்டுப்பட்டு.

ஆனால் அன்னையின் மறைவை நினைத்து மனதில் உண்டாகும் வலியை அவனால் மறக்க இயலவில்லை. அவனது மவுனமே அதற்கு சாட்சி.

இன்றும் அப்படி மவுனமாக மாடியில் நின்று சுற்றிலும் தெரிந்த மரக்கூட்டங்கள், படிக்கட்டுகளைப் போய் விரிந்திருந்த எஸ்டேட்டின் பயிர்களைப் பார்த்து மனவலியைப் போக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பங்களாவின் நுழைவுவாயில் காவலாளி உரக்கப் பேசுவது அவன் காதில் விழுந்தது.

“சின்ன முதலாளியை இப்போ பார்க்க முடியாதும்மா… நீ கிளம்பிப் போம்மா… சும்மா என் கிட்ட சண்டை போடாதே” என்றவரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தவள் சாட்சாத் துளசியே தான்.

கிருஷ்ணா அவளை மாடியிலிருந்து பார்த்ததும் திகைத்தவன் விறுவிறுவென்று படிகளில் இறங்கத் தொடங்கினான். நுழைவுவாயிலில் காவலரிடம் வீராவேசமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த துளசியைப் பார்த்தபடி அவ்விடத்தை அடைந்தான் அவன்.

“துளசி” என்றபடி பழுப்புவண்ண டிசர்ட்டில் வந்து நின்றவனைக் கண்டதும் துளசியின் விழிகளில் விண்மீன்கள் எட்டிப் பார்க்க “கிரிஷ், இவரு என்னை உள்ளேயே விட மாட்றாரு பாரு” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தவளை கிருஷ்ணாவின் கண்கள் அளவிடக் காவலாளியிடம் கண் காட்டவும் அவர் அங்கிருந்து அகன்றார்.

அவர் சென்றதும் சைக்கிளிலிருந்து அவளை இறங்குமாறு கூறிவிட்டு அதை ஓரமாக நிறுத்தியவன் அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றான். துளசி ஏதோ பேச முயல அதை அவன் காது கொடுத்துக் கேட்க முயன்றால் தானே…

இருவரும் அவன் சற்று முன்னர் நின்று கொண்டிருந்த அதே மாடிவராண்டாவில் வந்து நின்றனர். கிருஷ்ணா துளசியைப் பார்த்து தலையிலிருந்து கால் வரைச் சுட்டிக் காட்டியவன் “வாட் இஸ் திஸ் துளசி?” என்று கேட்கும் போதே அவளது முன்னுச்சிக்கூந்தல் காற்றில் கரைய அதில் அடிப்பட்டிருந்த காயம் வெளியே தெரிய

“அடி பட்டிருக்கு… என்னாச்சு துளசி?” என்று பதறிப்போய் அவளது நெற்றியை ஆராய்ந்தவனின் பார்வையில் தெரிந்தது நூறு சதவீத கலக்கமே.

“நான் வேகமா வந்தேன் கிரிஷ்… வளைவுல திரும்புறப்போ எதிர்ல வந்த காரை கவனிக்கல… அது சைக்கிள் மேல மோதி, சைக்கிள் மேல இருந்த நான் கீழே விழுந்துட்டேன்… அதுல சின்னக் காயம்” என்று சாதாரணமாகக் கூறவே கிருஷ்ணா தனது அறைக்குள் சென்றவன் முதலுதவிப்பெட்டியுடன் திரும்பிவந்தான்.

“கவனமா வர மாட்டியா துளசி? பாரு நெத்தி, கையில எவ்ளோ சிராய்ப்புனு?” என்று அவளைக் கடிந்தபடி மருந்திட்டவனின் நெஞ்சம் பதறிக் கொண்டிருந்ததை துளசி அறியவில்லை.

எப்போதும் போல விளையாட்டுப்போக்கில் “கிரிஷ்! சாதாரண அடிக்கு இவ்ளோ ஒரி பண்ணுற நீ… நான் என்ன செத்தா போயிட்டேன்?” என்று கூறிவிட அடுத்த நொடி அவனது கரம் அவளது கன்னத்தைப் பதம் பார்த்தது.

துளசிக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை… ஆனால் கன்னத்தில் வலியும், அவள் எதிரே நரசிம்மமூர்த்தியாய் கோபத்தில் முகம் சிவந்து நின்ற கிருஷ்ணாவுமே நடந்ததை அவளுக்கு உணர்த்த துளசியின் கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

கிருஷ்ணா “என்ன பேசுறேனு புரிஞ்சுப் பேச மாட்ட நீ? சாவுனா என்னனு தெரியுமாடி? செத்துப் போனவங்க அதுக்கு அப்புறம் நம்ம அழுது புரண்டாலும் திரும்பி வரமாட்டாங்க… ஏற்கெனவே நான் என் அம்மாவை இழந்துட்டேன்… என்னால இன்னொரு ஆளை இழக்க முடியாது… அவ்ளோ தைரியம் என் மனசுக்கு இல்லை” என்று வேதனையுடன் வெடிக்கத் தொடங்க

துளசி தன் கன்னத்தைப் பிடித்தபடி “விளையாட்டுக்குத் தானே சொன்னேன் கிரிஷ்? என்னமோ நான் நாளைக்கே செத்துப்போகப் போற மாதிரி நீ பேசுற? அப்பிடியே செத்தாலும் அதுக்கு என்ன பண்ண முடியும்?” என்று அழுகையுடன் கூற

கிருஷ்ணா அடுத்தக்கணமே “அப்போ நானும் செத்துடுவேன்… என்னால நீ இல்லாம வாழ முடியாது துளசி” என்று சட்டென்று சொல்லவும் துளசி விழி விரித்து அவனைப் பார்க்கும் போதே கன்னத்தில் வலியையும் தாண்டி அவளது இதயத்துக்குள் வயலின் இசைக்கத் தொடங்கியது.

கிருஷ்ணா அவளது கயல்விழிப்பார்வையில் கரைந்தவன் “ஐ லவ் யூ துளசி” என்று மனதில் இத்தனை நாட்கள் புதைத்து வைத்திருந்த காதல் மொத்தத்தையும் வெளிக்காட்டி விட, துளசி அந்த நிமிடம் இந்த உலகத்தையே ஜெயித்த மகிழ்ச்சியில் இருந்தாள்.

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவள் கிருஷ்ணா எதிர்பாராவிதமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஐ லவ் யூ சோ மச் கிரிஷ்” என்று இவ்வளவு நேரம் இருந்த கன்னத்தில் வலியை மறைந்து விட்டு மார்பில் சாய்ந்து கொண்டவளின் குரலில் இருந்த காதல் கிருஷ்ணாவின் இன்றைய மனவலியை சுத்தமாகத் துடைத்துப் போட்டுவிட்டது. அவனது கரங்கள் தானாக அவளை அணைத்தது. அந்த அணைப்பில் இருந்தது தவிக்கும் குழந்தையாய் அவன் மனம் தேடிய ஆதரவும், நேசமும் மட்டுமே.

துளசி கிருஷ்ணாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவனது தாடையில் இதழ் பதிக்க அவனுக்குள் இனம் புரியாத இதம் பரவுவதை உணர்ந்தான் கிருஷ்ணா.

அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் எப்போதும் போல அவளது மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டு அவளது கன்னத்தில் பதிந்திருந்த தனது ஐவிரல்களின் தடத்தை வருத்தத்துடன் தடவிக் கொடுத்தான்.

“வலிக்குதா துளசி?”

“ம்ஹூம்! நீ கோவப்பட்டது என் மேல உள்ள அக்கறையில தானே கிரிஷ்… ஃபியூச்சர்ல நான் கூட உன் மேல உள்ள அக்கறையில இதே மாதிரி உன்னை அறைஞ்சாலும் நீ என்னன்னு கேக்க மாட்டேனு எனக்குத் தெரியும்”

“அடிப்பாவி! அப்போ இது தான் நீ கோவப்படாததுக்குக் காரணமா? நான் கூட என் மேல உள்ள லவ்ல நீ பெருசா எடுத்துக்கலனு நினைச்சேன்”

“நீ தப்பு தப்பா நினைச்சா அதுக்கு நானா பொறுப்பு?” என்று கேட்டு அழகாய் இதழ் சுழித்து பழித்தவளைக் கண்டு வாய் விட்டு நகைத்தவனோடு சிறிதுநேரத்தில் துளசியின் சிரிப்பும் சேர்ந்து கீதமாய் ஒலிக்க ஆரம்பித்தது.

அவனது கரத்தைப் பற்றி தோளில் சாய்ந்திருந்தவள் “கிரிஷ்! ஏன் நீ இன்னைக்கு ஒரு மாதிரி சோகமா இருக்க? என் கிட்ட சொல்ல மாட்டியா?” என்று மென்மையாகக் கேட்க

கிருஷ்ணா “உன் கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்கணும்னு நினைக்கலை துளசி… பட் சில சோகமான விஷயங்களைச் சொல்லி உன் மனசையும் கஷ்டப்படுத்த வேண்டாமேனு நான் ஷேர் பண்ணிக்கலை” என்று பெருமூச்சோடு உரைத்துவிட்டு தன் தோளில் சாய்ந்திருந்தவளின் தலையில் அவனும் தலையைச் சாய்த்துக் கொண்டான்.

“கிரிஷ் லைஃப் பார்ட்னர்னா கஷ்ட நஷ்டம், சுக துக்கங்களை ஷேர் பண்ணிக்கனும்னு அம்மா அடிக்கடி என் கிட்ட சொல்லுவாங்க… நான் பிராமிஸ்ஸா நீ சொன்ன எதையும் சுகி கிட்ட சொல்ல மாட்டேன்”

“பெரிய ரகசியம் எதுவுமில்லை துளசி… இன்னைக்குத் தான் என்னோட அம்மா என்னை விட்டுட்டுப் போன நாள்” என்று சொல்லி கண்களை இறுக மூடிக் கொண்டான்.

அவனது முகத்தில் இழையோடிய சோகம் மனதைப் பிழிய அவன் கரத்தை அழுத்திய துளசி “கிரிஷ் கிளம்பு… நம்ம ஒரு இடத்துக்குப் போறோம்” என்று கூறி அவனை இழுத்துச் செல்ல

“எங்கே போறோம் துளசி?” என்றபடி அவளது இழுப்புக்கு அவள் பின்னே சென்றபடி கேட்டான் கிருஷ்ணா.

துளசி திரும்பி நின்று அவன் உதட்டில் விரல் வைத்து “மூச்! இனிமே நான் மட்டும் தான் பேசுவேன்… நீ கேக்கணும்” என்று உரைக்க சரியென்று தலையாட்டியபடி அவளுடன் நடந்து வந்தான் அவன்.

துளசி அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்தவள் “உனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமா கிரிஷ்?” என்று கேட்க கிருஷ்ணா தெரியுமென்று தலையாட்டினான்.

“அப்போ நீ சைக்கிள் ஓட்டு, நான் உன் பின்னாடி உக்காந்துக்கிறேன்” என்று கட்டளையிடும் குரலில் அவள் உரைக்க கிருஷ்ணா மறுபேச்சின்றி முன்னே அமரவும் துளசி சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவள் சொன்ன வழித்தடத்தில் சைக்கிளை ஓட்டத் தொடங்கிய கிருஷ்ணாவின் காதைப் பஞ்சராக்கும் வேலையைப் பொறுப்பாக ஆரம்பித்தாள் துளசி. தங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி அவள் கூறிய கதைகளைக் கவனமாகக் கேட்டபடி சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.

சிறிது நேரத்தில் துளசி சொன்ன இடம் வந்துவிடவே இருவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினர். மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே அழகாய் கையை விரித்துச் சிரித்துக் கொண்டிருந்த குழந்தை இயேசுவின் சிலையைத் தாங்கி நின்று கொண்டிருந்தது அந்த ஆங்கிலேயே பாணி கட்டிடம்.

அதன் நுழைவுவாயிலின் இருபுறமும் இருக்கும் சிவப்புக்கற்களால் ஆன தூண்கள் குழந்தை இயேசு சிறார் சரணாலயம்என்ற பெயர்ப்பலகையைத் தாங்கி கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன.

கிருஷ்ணாவின் மனதுக்கு அந்த இடத்தின் அமைதியான சூழல் இதமாக இருக்க, துளசியின் கரத்தைப் பற்றியபடி அந்த கட்டிடவளாகத்தினுள் நுழைந்தான் அவன். ஒரு இடத்தில் பெரிய தேவாலயமும் அதனோடு இணைந்த அலுவலக அறையும் இருக்க, மறுபுறத்திலோ அழகான குட்டி குட்டி பிரிவுகளாய் கட்டிடங்கள் தனித்து நின்று கொண்டிருந்தன.

துளசி “இந்த இடம் எங்க ஜனா அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச இடம் கிரிஷ்… அப்பா இருக்கிறப்போ நான், ஜனாப்பா, ராதாம்மா, பாட்டி மூனு பேருமே இங்கே மன்த்லி ஒன்ஸ் வந்துடுவோம்… அவங்க மூனு பேரும் என்னைத் தனியா விட்டுட்டு போனதுக்கு அப்புறமா நானும் இந்த பசங்க கூடவே வந்துடவானு மதர் கிட்ட கேட்டேன்… அவங்களும் என்னை வரச் சொல்லிட்டாங்க…

ஆனா அதுக்குள்ள அப்பாவும் அம்மாவும் என்னை அவங்க பொண்ணா அழைச்சுட்டுப் போயிட்டாங்க… அப்பா மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகுற வரைக்கும் நாங்க மூனு பேரும் அடிக்கடி இங்க வருவோம்… இப்போ நானும் சுகியும் வீக்லி ஒன்ஸ் வந்து இங்க இருக்கிற குட்டிப்பசங்களுக்கு எதாவது வேணும்னா கேட்டு வாங்கிக் குடுப்போம்…” என்று பேசிக்கொண்டே வந்தாள்.

அந்த சிறிய சிறிய கட்டிடங்களுக்கிடையே ஏன் இடைவெளி என்று கேட்ட கிருஷ்ணாவிடம் “அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஏஜ் பசங்களுக்கானது… ஃபர்ஸ்ட் பிளாக் கைக்குழந்தைகளுக்கு… செகண்ட் பிளாக் ப்ளே ஸ்கூல் போகற ஏஜ்ல இருக்கிற குழந்தைங்களுக்கு… அதுக்கு அப்புறம் எல்லாருக்குமே ஒரே பிளாக் தான்… கொஞ்சம் ஏஜ் ஆனதுக்கு அப்புறம் கேர்ள்ஸுக்குத் தனி பிளாக், பாய்ஸுக்குத் தனி பிளாக்” என்று விளக்கமளித்தபடி நடந்தாள்.

உம் கொட்டியபடி அவளைத் தொடர்ந்தவனை மதரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள் அவள். கதவைத் தட்டி “மே ஐ கம் இன் மதர்?” என்று கேட்டவளின் குரல் கேட்டு நிமிர்ந்தார் தூய வெண்ணிற ஆடையுடன் அறுபது வயது நிரம்பிய, சாந்தம் வழிந்த முகத்தில் மூக்குக்கண்ணாடி அணிந்தபடி அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த கன்னியாஸ்திரி ஒருவர்.

துளசியைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் “துளசி! உள்ளே வாம்மா” என்று அன்பாய் அழைக்க துளசி கிருஷ்ணாவுடன் உள்ளே சென்றாள்.

கிருஷ்ணாவைத் தயக்கத்துடன் பார்த்த மதரிடம் “மதர் இவர் கிருஷ்ணா… இவரைத் தான் நான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்” என்று அதிரடியாய் அறிவித்தவளைக் கண்டு மதர் மட்டுமல்ல கிருஷ்ணாவே கூட அதிர்ந்து போய்விட்டான்.

துளசி புன்னகை மின்ன “ஷாக் ஆகாதிங்க மதர்… அதுக்கு இன்னும் நாள் இருக்கு… நான் என்னோட ஸ்டடீஸை கம்ப்ளீட் பண்ணி, என்னோட புரஃபசன்ல எனக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகிட்ட அப்புறமா தான் மேரேஜ் பண்ணிப்பேன்… கிரிஷ் அது வரைக்கும் எனக்காக வெயிட் பண்ணுவான்… அப்பிடித் தானே கிரிஷ்?” என்று நம்பிக்கையுடன் கேட்டவளிடம் முகம் மலரத் தலையசைத்தான் கிருஷ்ணா.

மதர் அதே சாந்தமான முகத்துடன் இருவரையும் அமரச் சொன்னவர் அவர்களுக்கு காபி கொண்டு வர பணித்துவிட்டு கிருஷ்ணாவிடம் திரும்பி அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

கிருஷ்ணாவும் தனது எஸ்டேட் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு அவருடன் சகஜமாக உரையாட ஆரம்பிக்கவே ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போடும் சாமர்த்தியசாலியான அந்த கன்னியாஸ்திரி அவனது நல்ல உள்ளத்தைக் கண்டுகொண்டார். துளசி மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மனதுக்குள் பூரித்துக் கொண்டவர் துளசியிடம் ராமமூர்த்தி மற்றும் மீராவைப் பற்றி விசாரித்துக் கொண்டார்.

அதன் பின் சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள் பின்னர் விடைபெற்றுக் கொண்டனர்.

வெளியே வரும் போது துளசி கிருஷ்ணாவிடம் “இங்கே இருக்கிற குழந்தைகள்ல நிறைய பேருக்குத் தன்னோட அப்பா, அம்மா யாருனு தெரியாது. சில பேருக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இருந்தாலும் சூழ்நிலை காரணமா குழந்தைங்களை இங்கே தவிக்கவிட்டுருவாங்க… இன்னும் சில குழந்தைங்க யாரோ ஒரு சிலரோட சில நிமிச சபலத்துக்காகப் பிறந்தவங்க…

இப்பிடி எல்லாம் இல்லாம நமக்குனு ஒரு குடும்பம் இருக்கு கிரிஷ்… நம்ம மேல அன்பைக் கொட்டுறதுக்கு பேரண்ட்ஸ் இருக்காங்க… நம்ம தப்பான வழிக்குப் போகாமத் தடுக்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க… இது எல்லாம் இருந்தும் நீ வருத்தப்படுறது எப்பிடி இருக்குது தெரியுமா? காலே இல்லாதவங்களுக்கு மத்தியில இருந்த ஒருத்தன் என் காலுக்கு சரியான சைஸ்ல ஷூ இல்லைனு வருத்தப்படுற மாதிரி இருக்கு…

அம்மா எப்போவுமே ஸ்பெஷல் தான் கிரிஷ்… பட் ஒவ்வொரு தடவையும் நீ இப்பிடி வருத்தப்படுறதால அவங்க திரும்ப வரப்போறது இல்லையே… அவங்களோட இருந்த சந்தோசமான தருணத்தை நியாபகம் வச்சு அதை நினைச்சுச் சந்தோசப்படு கிரிஷ்” என்று அவனுக்கு அறிவுறுத்த கிருஷ்ணா மவுனமாக அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.

ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கியவன் “எவ்ளோ அருமையா சொல்லிட்டே நீ? என்னை விட ஆறு வயசு சின்னப்பொண்ணு, உனக்கு இருக்கிற மெச்சூரிட்டி எனக்கு ஏன் இல்லாம போச்சு?” என்று கேட்க

துளசி இல்லாதக் காலரைத் தூக்கிவிட்டவள் “ஏன்டா எல்லாரும் துளசி ஆயிடுவாங்களாடா?”  என்று பெருமைப் பேச

கிருஷ்ணா அவள் காதைப் பிடித்துச் செல்லமாகத் திருகியவன் “இந்த வாய் மட்டும் குறையாதே உனக்கு… வாய்க்குப் பூட்டு போட்டா சரியாகிடும்” என்று சொன்னபடி அவளின் செவ்விதழ்களை ரசனையுடன் பார்க்க ஆரம்பிக்க

துளசி அவன் சொன்னதன் பொருளை உணர்ந்தவளாய் சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டவள் “யூ ஆர் சோ மீன் கிரிஷ்” என்று கூறிவிட்டுத் தனது கரத்தால் வாயை மூடிக்கொண்டாள்.

“நான் ஒன்னுமே பண்ணலையே துளசி” என்று அப்பாவியாய் நடித்தவன் அவளைத் தொடர

“க்கும்… நீ யாருனு எனக்குத் தெரியும், நான் யாருனு உனக்குத் தெரியும்.. ஏன்டா நடிக்கிற? வந்து சைக்கிளை எடு… இதுக்கு மேல நான் வீட்டுக்குப் போகலைனா சுகி நேரா இங்கே வந்துடுவா” என்று சைக்கிளைச் சுட்டிக்காட்டவே கிருஷ்ணா சைக்கிளை எடுத்துக்கொண்டான்.

துளசி பின்னே அமர்ந்ததும் “உனக்குக் கீழே விழுந்துடுவோமோனு பயமா இருந்துச்சுனா நீ முன்னாடி வேணா வந்து உக்காந்துக்கோ துளசி” என்று பெரிய மனதுடன் உரைத்தபடி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் கிருஷ்ணா.

துளசி “என்னைச் சொல்லிட்டு நீ மட்டும் கம்மியாவா பேசுறடா?” என்று சொல்லிவிட்டு அவனது இடுப்பில் கிள்ளவே கிருஷ்ணா நிலை தடுமாறவும் சைக்கிள் தள்ளாடியது.

ஒருவாறு சமாளித்து ஓட்டத் தொடங்கியவன் “துளசி வீட்டுக்குப் போனதும் உன் இஷ்டத்துக்கு கிச்சுகிச்சு மூட்டிவிடு… இல்லைனா ரெண்டு பேரும் சேர்ந்து மேல போயிடுவோம்” என்று கேலி செய்ய துளசி அவனது முதுகில் இரண்டு அடிகள் போட்டுவிட்டு அவனது முதுகிலே சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

இரு மருங்கிலும் பச்சை பசேலேன்ற பாதையின் நடுவில் பென்சிலால் கோடிழுத்தது போல ஓடிய சாலையில் சென்ற சைக்கிளில் அந்த அழகான ஜோடிகளின் காதல் பயணம் ஆரம்பித்தது.