💗அத்தியாயம் 17💗

மவுண்ட் காலேஜ், ஊட்டி…

துளசி கேண்டினில் சுகன்யாவுடன் அமர்ந்து ஐஸ் க்ரீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவளது சிந்தனை முழுவதுமே ஒரு வாரத்துக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கிருஷ்ணாவைச் சுற்றியே வட்டமிட்டது.

சுகன்யா சொன்னது போல அன்றைக்கு அவனது உடைமைகளை வேலுவிடமிருந்து வாங்கிக் கொண்டு சாப்பாட்டுடன் அவனைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற துளசி, கிருஷ்ணாவின் போனுடன் சாப்பாட்டையும் நீட்டிவிட்டு தனக்கு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட, கிருஷ்ணாவும் அதற்கு மேல் அவளைப் பேசச் சொல்லியோ, மொபைல் எண்ணைக் கேட்டோ தொல்லை செய்யவில்லை.

கல்லூரியில் பயிலும் மாணவியைத் தொந்தரவு செய்யும் எண்ணம் அவனுக்கும் இல்லாததால் உடனே போன் செய்து விஷ்வாவிற்கு விவரத்தைத் தெரிவித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தவன் நண்பன் வந்ததும் மருத்துவரிடம் தனது உடல்நிலை குறித்து விசாரித்து கொண்டான். அவர் இன்னும் சில நாட்கள் தங்குமாறு அறிவுறுத்தவே அதற்கு ஒப்புக்கொண்டவன் அங்கே சில நாட்கள் தங்கி உடல் முழுவதும் குணமானதுமே அவனது எஸ்டேட் பங்களாவுக்குக் கிளம்பினான்.

ஆனால் அன்று சாப்பாடு கொடுத்துவிட்டுச் சென்றதோடு சரி, துளசி மீண்டும் அவனைக் காண அங்கே வரவேயில்லை. அவள் வரவில்லை என்பதை விட சுகன்யா அவளை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

கிருஷ்ணா அவள் இன்று வருவாள், நாளை வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்துடனே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்றுவிட்டான்.

துளசிக்கு அவனைச் சென்று பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் சுகன்யாவின் முறைப்பை மீறி அவனைச் சந்திக்கும் எண்ணம் அவளுக்கு எழவில்லை. அதோடு “துளசி நீ அவனை உன்னோட பிரின்ஸ்னு நினைச்சு ஃபீல் பண்ணுற மாதிரி அவனும் ஃபீல் பண்ணனும்… ஒன் சைட் எமோசனை வச்சுகிட்டு ஊறுகா கூடப் போடமுடியாது.. சோ ஓவரா ட்ரீம்ல சுத்தாதே! அப்பிடி அவன் உன்னோட பிரின்ஸ்னா அவனே உன் கண்ணு முன்னாடி வந்து நிப்பான்” என்று எண்ணியவளாய் அதே நேரம் கிருஷ்ணா என்பவனை மறக்கவும் இயலாமல் மதில்மேல் பூனையாய் அவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

சுகன்யா ஐஸ் க்ரீமை சாப்பிட்டு முடித்தவள் “துளசி ஜான்சிக்காவோட டிரஸ்ஸுக்கு எம்ப்ராய்டர் போடணும்டி… பட் நூல் காலியாயிடுச்சு… நீ ஒன்னு பண்ணு, ஜேசன் ஸ்டோருக்குப் போய் நூல் வாங்கிட்டு வந்துடு… இந்தா துணியோட பீஸ்… இதுக்கு கொஞ்சம் லைட்டான கலர்ல வாங்கிடு” என்று அவளிடம் துணியின் ஒரு துண்டை நீட்ட

துளசி “ஓகேடி! பட் நீ எப்பிடி வீட்டுக்குப் போவ? லேடிபேர்ட் என் கூட தான் வரும்” என்று கூறிவிட சுகன்யா தான் ஆட்டோவில் சென்றுவிடுவதாகச் சொல்லிவிடவே துளசி தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜேசன் ஸ்டோர் என்ற கடை இருக்கும் இடத்தை நோக்கிச் சைக்கிளை அழுத்தினாள்.

அது நகரின் பிரதானமான இடம்… எனவே வாகன நெரிச்சல் அதிகமாக இருக்கச் சைக்கிளை அந்த கடையின் முன்னே ஓரமாக நிறுத்தியவள் உள்ளே சென்று தனக்கானப் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது வெளியே அவளது லேடிபேர்ட் கீழே விழுந்து கிடந்தது. அது நின்ற இடத்தில் ஜம்பமாய் நின்று கொண்டிருந்தது ஒரு கார்.

அதைத் தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு எரிச்சலுடன் அந்தக் காரின் கண்ணாடியைத் தட்டியவள், கண்ணாடி கீழே இறங்கவும் அதில் தெரிந்தவனின் முகத்தைக் கண்டதும் திகைப்பில் வாயைப் பிளந்தாள்.

ஏனெனில் காரினுள் அமர்ந்திருந்து கூலர்ஸை கழற்றியபடி “ஹாய் பேபி” என்று அவளை நோக்கிக் கையசைத்தவன் கிருஷ்ணா. துளசி சிறிது நேரத்துக்கு முன்னர் தானே தான் இவனை நினைத்தோம், எதிரிலேயே வந்து நிற்கிறானே என்ற ஆச்சரியத்துடன் நிற்க, அவளைக் கண்டுப் புன்னகைத்தபடி காரை விட்டு வெளியேறி அவளருகில் வந்து நின்றான்.

துளசியின் உள்ளம் “ஏதோ சொன்னியே! இப்போ பாரு, அவனே உன் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறான்… இப்போ சொல்லு இவன் தானே உன் பிரின்ஸ்?” என்று அவளிடம் கேட்டுவைக்க, துளசியோ “ம்ம்… இவன் என்னோட பிரின்ஸ் தான்… பட் நான் தானே அப்பிடி நினைக்கிறேன், அவன் என்ன நினைக்கிறானு எனக்குத் தெரியாது இல்லையா?” என்று தனது உள்ளத்தைச் சமாளிக்க ஆரம்பித்தாள்.

அவள் மனதின் போராட்டத்தை முகம் பிரதிபலித்ததோ என்னவோ, கிருஷ்ணா அவளைக் குறுகுறுவென்று நோக்கவும் துளசி முகத்தைச் சீர்படுத்திக் கொண்டாள்.

அமர்த்தலாக “ஏன் இப்பிடி வச்ச கண் வாங்காம பார்க்கிற நீ?” என்று கேட்டவளிடம்

“இவ்ளோ கியூட்டா ஒரு பொண்ணு எதிர்ல நிக்கிறாளே, இவ உண்மையான பொண்ணா, இல்ல ஏஞ்சலானு டவுட்… அதான் உத்துப் பார்த்துக் கன்ஃபார்ம் பண்ணிக்கிறேன்” என்று கூறி கண்ணைச் சிமிட்டினான் அவன்.

துளசி அவனது கண்சிமிட்டலில் துணுக்குற்றவள் “நீ ஏன் அடிக்கடி கண் அடிக்கிற? எனக்கு அது அன்கம்ஃபர்டபிளா இருக்கு” என்று கூறியபடி மூக்கைச் சுருக்கிக் கையைக் கட்டிக்கொண்டாள்.

கிருஷ்ணா அவள் சொன்ன விதத்தில் மீண்டும் ஒரு முறை அவளது அழகில் தடுக்கி விழுந்தவன் “சோ கியூட்! விட்டா இன்னைக்கு ஃபுல்லா நான் பார்த்துகிட்டே இருப்பேன்” என்று சொன்னபடி அவளின் மூக்கைச் செல்லமாக நிமிண்டி விடவே துளசி சட்டென்று நகர்ந்து நின்று கொண்டாள்.

கிருஷ்ணா “ஓ! சாரி சாரி! உடனே ஷாக் அடிச்ச மாதிரி ரியாக்ட் பண்ணாதே பேபி.. பை த வே ஒரு பையன் கஷ்டப்பட்டு ஆக்சிடெண்ட்ல இருந்து தப்பிச்சுருக்கேன்… எப்பிடி இருக்கேனு கேக்க மாட்டியா?” என்று அவள் தன்னை மறந்து விட்டாளோ என்ற தவிப்புடன் கேட்டுவைக்க

துளசி அவனை வேகமாக ஆராய்ந்தவள் “ஆர் யூ ஓகே? நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்துருக்கணும்.. பட் என்னால……” என்று படபடத்தவளை இடை மறித்தான் கிருஷ்ணா.

“ஹாஸ்பிட்டலுக்கு வர முடியலை, அவ்ளோ தானே! இட்ஸ் ஓகே! ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்…. பட் நீ வருவேனு நான் வெயிட் பண்ணுனேன்… வரலைனதும் கொஞ்சம் ஏமாற்றமா இருந்துச்சு”

“நீ ஏன் எனக்காக வெயிட் பண்ணுன?”

“நான் தான் ஆல்ரெடி சொன்னேனே! எனக்கு உன் கூட பேசணும், உன்னைப் பார்க்கணும், உன் கூட பழகணும்னு ரொம்ம்ம்ம்ப ஆசை” என்று இழுத்துப் பேசவும் துளசிக்கு அவனது பேச்சில் சிரிப்பு வந்துவிட்டது.

அவள் நகைக்கும் அழகை ரசிக்க ஆரம்பித்தவன் “உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை, அப்பிடி தானே துளசி?” என்று அவள் மனநிலையை உணர்ந்தவனாய் கேட்க

துளசி இருமனதோடு “அது… எனக்கு… வந்து…” என்று தந்தியடிக்க

கிருஷ்ணா “இட்ஸ் ஓகே! புதுசா வந்தவனை நம்புறது கஷ்டம் தான்… பட் நம்ம பழகிப் பார்த்துட்டு அப்புறமா நான் நல்லவனா இருக்கேனு உனக்குத் தோணுச்சுனா என்னை நம்பு” என்று இலகுவாகக் கூற

அவனது பேச்சில் துளசி எரிச்சலுற்று “ஹலோ என்னைப் பார்த்தா எல்லாரோடவும் பேசிப் பழகுற பொண்ணு மாதிரியா தெரியுது?” என்று வெடிக்க ஆரம்பிக்க

கிருஷ்ணா “ஐயோ நான் அப்பிடி சொல்லலை துளசி…” என்று மறுக்க

“வேற எப்பிடி?” என்று வெடுக்கென்று கேட்டவளைப் பொறுமையாகப் பார்த்த கிருஷ்ணா அவள் அருகில் வரவும் துளசி தங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கண்ணால் காட்ட, கிருஷ்ணா அதைக் கண்டுகொள்ளாமல் அவளை நெருங்கினான்.

அவளது கரத்தைப் பற்றி தனது நெஞ்சில் வைத்துக் கொண்டவன் “உள்ளே கேக்குதே லப்டப் பீட், இது எனக்குள்ள இன்னைக்குக் கேக்குறதுக்கு நீ தான் காரணம்… நீ அன்னைக்கு என்னைக் கண்டுக்காம போயிருந்தேனா கிருஷ்ணானு ஒருத்தன் செத்தது கூட யாருக்கும் தெரிஞ்சுருக்குமோ என்னவோ? என்னை மடியில தாங்குன அந்த நிமிசம் என் அம்மாவே வந்து என்னைத் தாங்குன மாதிரி இருந்துச்சு… வேற எந்த தப்பான நோக்கத்தோடவும் நான் உன் கிட்டப் பேசணும்னு டிரை பண்ணல…

நீ என் கூடவே இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் துளசி… எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு… பட் பார்த்த உடனே ஒரு பொண்ணு கிட்ட இப்பிடிலாம் பேசுனா அவளுக்கு என் மேல நம்பிக்கை வராதுனு எனக்கும் புரியுது… அதான் பழகிப் பார்ப்போம்னு சொன்னேன்” என்று ஆழ்மனதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக வெளியிட துளசிக்கு என்ன பதில் சொல்ல வேண்டுமென்று புரியாத நிலை.

மெதுவாக அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் “ஓகே!” என்று மட்டும் சொல்லிவிட்டுத் தனது சைக்கிளை நோக்கி நகர்ந்தாள். கிருஷ்ணா அவளது ஓகேவிற்கான அர்த்தம் புரியாதவனாக அவள் பின்னே ஓடினான்.

“ஹலோ வெறும் ஓகேனு சொல்லிட்டுப் போனா என்ன அர்த்தம் துளசி?”

“நீ சொன்ன மாதிரி பேசிப் பார்ப்போம்னு அர்த்தம்”

“எப்பிடி டெலிபதியிலயா? பின்னே என்னவாம், இன்னும் நீ உன்னோட நம்பர் குடுக்கலை… அப்போ எப்பிடி நான் உன்னை கான்டாக்ட் பண்ணுறது?”

“யாருக்குத் தெரியும்?” என்று துளசி அமர்த்தலாக உரைத்துவிட்டு நகர முற்பட்டாள்.

கிருஷ்ணா “அஹான்! ஆட்டிட்டியூட் காட்டுறிங்களோ? சரி போ…. நான் டேரக்டா மவுண்ட் காலேஜ்ல வந்து பி.எஸ்சி பேஷன் டெக்னாலஜி பர்ஸ்ட் இயர்ல படிக்கிற துளசி ராமமூர்த்தி கிட்டப் பேசணும்னு உன்னோட பிரின்ஸி கிட்டவே டேரக்டா பெர்மிசன் வாங்கி உன்னை மீட் பண்ணிக்கிறேன்” என்று அசராமல் கூறி அவளை மடக்கிவிட்டான்.

துளசி பதறிப் போய் “ஏய் அப்பிடி காலேஜுக்கு வந்துடாதே கிரிஷ்… ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சவும் அவளது பெயர்ச்சுருக்கம் அவனுக்குள்ளே சந்தோசத்தை ஏற்படுத்த

கிருஷ்ணா “அப்போ நம்பர் குடு… நான் காலேஜுக்கு வரலை” என்று கூற

“கிரிஷ் நீ இருக்கப் பாரு” என்றபடி வேறுவழியின்றி அவனிடம் தனது மொபைல் எண்ணைக் கொடுத்தவள் “ஓகே! பை” என்றபடி சைக்கிளில் அமர அதன் ஹேண்ட்பாரைப் பிடித்து நிறுத்தினான் கிருஷ்ணா.

“ஸ்டாப்… சப்போஸ் நான் போன் பண்ணுறப்போ நீ அட்டெண்ட் பண்ணலைனா என்ன பண்ணுறது?”

“நான் சொன்னா சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவேன் கிரிஷ்.. எனக்குப் பொய் சொல்லுறது சுத்தமா பிடிக்காது” என்று தெளிவாக உரைத்துவிட்டுச் சைக்கிளில் சென்றுவிட, தனது தேவதையை ரசித்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா.

சிறிதுநேரத்தில் வந்த விஷ்வா “என்னடா முகம் தவுசண்ட் வாட்ச் பல்ப் மாதிரி ஜொலிக்குது… என்ன விஷயம்?” என்று கேட்டபடி நண்பனின் தோளில் கையைப் போட்டபடி அவனுடன் சேர்ந்து காரில் சாய்ந்து நின்று கொண்டான்.

“என் ஏஞ்சலை நான் பார்த்தேன்டா… அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் எதிர்பார்க்காத சந்திப்பு தான்… அவ வந்துட்டுப் போனாலே அந்த இடம், சூழல் எல்லாமே அழகா மாறிடுதுடா… ஷீ ஹேஸ் சம் மேஜிக்டா விஷ்வா” என்று உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லியபடி நண்பனுடன் காரில் ஏறி அமர்ந்தவனின் நினைவலைகளில் துளசியே உலா வர அவளை நினைத்தபடியே அன்றைய நாளைப் புன்னகையுடன் கடத்தினான் கிருஷ்ணா.

அதன் பின்னர் அடிக்கடி அவர்கள் மொபைலில் பேசிக்கொண்டனர். கிருஷ்ணா துளசியின் குடும்பத்தினரைப் பற்றி அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவன் தன்னைப் பற்றிய விவரங்களையும் மறைக்காது அவளிடம் கூறிவிட்டான்.

அவன் மறைத்த ஒரே விஷயம் ஏஞ்சலினாவைப் பற்றி மட்டும் தான். மற்ற அனைத்தையும் மறைக்காமல் கூறியவன் தான் ஆர்.கே குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரின் மகன் என்பதை அப்போதைக்குக் கூறவில்லை.

துளசிக்குமே அவனுக்குச் சொந்தமாக ஊட்டியில் எஸ்டேட் உள்ள விவரம் மட்டுமே தெரியும். அது போக அவனது கண்டிப்பான தந்தை, தெய்வமாகிவிட்ட அன்னை, நண்பனைப் போலப் பழகும் சித்தப்பா, பெற்ற மகனுக்கு நிகராக அன்பைப் பொழியும் சித்தி, சண்டைக்கோழி மாதிரி அவனுடன் போட்டி போடும் அவனால் நூடுல்ஸ் என்று கிண்டல் செய்யப்படும் அன்பான தங்கை சஹானா என்று ஒருவர் பாக்கியின்றி அனைவரைப் பற்றியும் விளக்கமாகக் கூறிவிட்டான்.

அதே போல துளசியும் ஜனார்த்தனன், ராதா, கோதை பாட்டியைப் பற்றியெல்லாம் விலாவரியாகக் கிருஷ்ணாவுக்குக் கூறியவள் அவர்களுக்குச் சற்றும் குறையாதது ராமமூர்த்தி மற்றும் மீராவின் அன்பு என்று நெகிழ்ச்சியோடு பேசுவாள்.

இருவரும் அவர்களின் நண்பர்களைப் பற்றியும் கேலி செய்து சிரித்துக்கொள்வர். விஷ்வாவை ஓரிரு முறை கிருஷ்ணாவுடன் சேர்த்து துளசி பார்த்திருக்கிறாள் தான். பார்ப்பதற்கு கிருஷ்ணாவைப் போல இலகுவாகப் பழகுபவனாகத் தெரியும் விஷ்வா தான் கிருஷ்ணாவைக் கட்டுப்படுத்தும் முக்கிய நபர் என்றும், இன்னொருவன் ராகுல் என்றும் அவனிடமிருந்து அறிந்து கொண்டாள் துளசி. அதே நேரம் துளசியும் சுகன்யாவைப் பற்றி ஒளிவுமறைவின்றி கிருஷ்ணாவிடம் கூறிவிட்டாள்.

சுகன்யாவும் அவளது அன்னை மீனாவும் தான் இப்போதைய சூழலில் தன்னைப் பாதுகாக்கும் அரண்கள் என்று பெருமையாய்க் கூறுவாள் அவள். கிருஷ்ணாவுக்குமே தனது தேவதையைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும் அந்த அன்பானவர்களைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தது.

இவ்வாறு இருவரும் மனதளவில் நெருங்கினாலும் துளசியின் படிப்பு முற்றுபெறாத நிலை கிருஷ்ணாவின் மனதில் தனது காதலை அவளிடம் சொல்லுவதற்கான தைரியத்தை ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணமானவன் விஷ்வா.

“படிச்சிட்டிருக்கிற பொண்ணு கிட்டப் போய் லவ் அது இதுனு பேசி அவ மனசைக் கலைச்சிடாதேடா… அவ படிக்கட்டும்… அவளுக்கு ஃபேஷன் டிசைனராகணும்னு ஆசைனா அவ அந்த புரஃபசன்ல அவளுக்குனு ஒரு இடத்தைப் பிடிக்கட்டும்… அதுக்கு அப்புறமா உன் காதலை அவளுக்குப் புரியவைச்சு கல்யாணம் பண்ணிக்கோ… இப்போ நீ சொன்னா வீணா அவளோட கவனம் படிப்புல இருந்து தேவையில்லாம திசை மாறும்” என்று நீண்டதொரு விளக்கவுரையோடு கூடிய கட்டளையை நண்பனுக்கு இட்டுவிட்டான் விஷ்வா.

கிருஷ்ணாவும் அதை மதித்தவன் துளசியோடு போனில் பேசும் நேரங்களிலும் சரி, நேரில் சந்திக்கும் சமயங்களிலும் சரி அவனுக்கான எல்லையைத் தாண்டி அவளிடம் பேச முயலவில்லை… ஒரு வாழ்க்கைத்துணைவனாக அவனுக்கு அவளைப் பற்றிய விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதை மட்டும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்வான். அவளுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது போன்ற விஷயங்களை அவன் கிட்டத்தட்ட மனப்பாடமே செய்துவிட்டான்.

கிருஷ்ணாவின் ஏஞ்சல் ஜெபத்தை விஷ்வா கட்டுக்குள் வைத்திருந்தான் என்றால் தூக்கத்திலும் பிரின்ஸ் பிரின்ஸ் என்று புலம்பிய துளசியைச் சுகன்யா தான் தனது ஒற்றைப்பார்வையில் அடக்கி வைத்திருந்தாள். எங்கே துளசி விவரம் புரியாமல் தவறான ஒருவனை நம்பிவிடுவாளோ என்ற பயம் தான் அவளுக்கு.

சுகன்யாவுக்கு நன்றாகத் தெரியும் தனது தோழி துளசி அவளுக்கென ஒரு அழகிய கனவுலகைப் படைத்து அதில் அவளுடன் சேர்ந்து கோலோச்சும் ராஜகுமாரன் ஒருவனுக்காகத் தான் காத்திருக்கிறாள் என்று. ஆனால் அதற்காக கனவுலோகத்தில் மூழ்கி நிதர்சனத்தை மறந்துவிடுவாளோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். ஆனால் நண்பர்களின் கட்டுப்பாடுகளையும் மீறி துளசியும் கிருஷ்ணாவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்கு விதி தானாக வாப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.