💗அத்தியாயம் 15💗

பல வண்ண டேலியாக்கள் அழகாகக் காற்றில் அசைய அதன் நடுவில் சைக்கிளைப் பிடித்தபடி நின்று சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்தாள் அவள். கருநீலத்தில் லாங்க் டாப் அணிந்திருந்தவளின் கால்களை வெள்ளை நிற லெக்கிங்ஸ் அலங்கரித்திருந்தது. காலை நேரத்தில் இளந்தென்றலில் அலை அலையான அவளின் கூந்தல் அசைந்தாடச் சைக்கிளைப் பிடித்தபடி தோட்டத்தின் நடுவே நின்று மீண்டும் கத்தினாள் அவள்.

“அடியே சுகி! இப்போ வர்றியா இல்லையாடி? ஆல்ரெடி டைம் ஆச்சு… நீ வரலைனா நானும் லேடிபேர்டும் உன்னை விட்டுட்டுப் போயிடுவோம்”

அவளின் கத்தலைக் கேட்டபடி அந்த தோட்டத்தின் நடுவே ஓடிவந்து கொண்டிருந்தாள் சுகன்யா. ஆரஞ்சு வண்ண டாப்பும் இளம்மஞ்சள் வண்ண லெக்கிங்ஸும் அணிந்து குளிருக்காக இளம்மஞ்சள் ஸ்வெட்டருடன் மூச்சிரைத்தபடி கத்தியவளிடம் வந்து நின்றாள்.

“ஏன்டி பிறக்குறப்போவே மைக்கை முழுங்கிட்டுப் பிறந்தியா? நீ கத்துன சத்தத்துல எங்க வீட்டுப் பின்வால்ல மாட்டியிருந்த பல்ப் உடைஞ்சுப் போச்சுடி துளசி” என்று குறைபேசியபடி சைக்கிளில் அமர கலகலவென்று நகைத்தாள் துளசி.

சைக்கிளை மிதித்தபடியே “அது இப்போவாச்சும் உடைஞ்சுதே! இல்லைனா நானே கல்லை விட்டெறிஞ்சு உடைச்சிருப்பேன்… நம்ம போர்ட் எக்சாம் முடிஞ்சதும் மாட்டுன பல்ப்… நம்மளும் செகண்ட் செமஸ்டருக்கு வந்தாச்சு… இனியும் அது இருந்தா ரொம்ப தப்புடி சுகி” என்று கிண்டலடித்தபடி சைக்கிள் ஓட்டியவளின் கையில் கடுப்புடன் கிள்ளி வைத்தாள் சுகன்யா.

“இந்த வாய் மட்டும் இல்லையோ உன்னை நாய் தூக்கிட்டுப் போயிடும்டி” என்று கடுகடுத்தவளின் பேச்சில் சத்தமாக நகைத்த துளசி

“ஓ! நோ! ஐ அம் வெயிட்டிங் ஃபார் மை பிரின்ஸ்… அவன் தான் என்னைத் தூக்கிட்டுப் போகணும்” என்றாள் அமர்த்தலாக.

சுகன்யா பின்னே அமர்ந்திருந்தவள் “உன்னோட பிரின்ஸ் பைத்தியத்துக்கு எப்போ தான் முடிவு வருமோ? பகவானே இந்தப் பொண்ணுக்குப் புத்தியை வர வையேன்” என்று தலையிலடித்துக் கொள்ள

துளசி கைகள் இரண்டும் ஹேண்ட்பாரைப் பிடித்திருக்க “பகவானே! அதுக்குப் பதிலா என் பிரின்ஸை சீக்கிரமா அனுப்பி வையேன்” என்று வானத்தைப் பார்த்து உரைக்க

சுகன்யா பதறிப் போய் “அடியே! உன்னைத் தேடி பிரின்ஸ் வர்றானோ இல்லையோ, நம்மளைத் தேடி எமதர்மன் வந்துடுவான் போலேயே! கொஞ்சம் ரோட்டைப் பார்த்து ஓட்டு ராஜாத்தி! உன் பிரின்ஸ் கதையை காலேஜுக்குப் போனதும் ரெண்டு காதும் வீங்குற அளவுக்குக் கேட்டுக்கிறேன்” என்று கூறவும் துளசி பெரியமனது பண்ணிச் சாலையில் கண் பதித்தாள்.

“ஓடோ ஓடோ ஓடோடிப் போறேன்… காதல் பாதை தேடோடிப் போறேன்” என்று பாடலைப் படித்தபடி சைக்கிளை அழுத்தத் தொடங்க

அவள் பின்னே அமர்ந்திருந்த சுகன்யாவோ “உனக்குக் காதல்பாதை தெரியுது… ஆனா உன் கூட சைக்கிள்ல வர்ற எனக்கு எமலோகம் போற பாதை தான் தெரியுதுடி” என்று பயந்தபடியே கூற இருவரும் மாறி மாறிப் பேசியபடி கல்லூரியை அடைந்தனர்.

மவுண்ட் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற வளைவுடன் கம்பீரமாய் நின்றது அக்கல்லூரி.

மாணவமாணவிகள் தோட்டத்தில் பூக்களை மொய்க்கும் தேனீக்களைப் போல அங்குமிங்குமாய் நடமாட, வாகனங்களை நிறுத்திமிடத்தில் அவளது சைக்கிளை நிறுத்திவிட்டு முன்னே இருந்த கூடையில் வைத்திருந்த இருவரது பேக்கையும் துளசி எடுத்துக் கொள்ள சுகன்யா சைக்கிளைப் பூட்டிச் சாவியைத் தனது டாப்பின் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டாள்.

அவளிடம் பேக்கை நீட்டிவிட்டு தனது பேக்கை உடலின் குறுக்கே மாட்டிகொண்டபடி “போலாமாடி?” என்று கேட்டபடி கல்லூரி செல்வதற்கான நடைபாதையில் நடக்கத் தொடங்கினாள் துளசி.

கல்லூரிக்குள் செல்வதற்கு முன் இருக்கும் கல்லால் ஆன நீண்ட படிகளின் இருமுனையிலும் மாணவர்கள் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க துளசி வருவதைக் கண்டதும் ஓடோடி அவள் அருகில் வந்து வழியை மறிப்பது போல நின்றான் ஒருவன்.

அவனைக் கண்டதும் எரிச்சலாய் உறுத்து விழித்த துளசி “லிசன் கிஷோர்… உன் உளறலைக் கேக்க எங்களுக்கு டைம் இல்லை.. இன்னைக்கு எங்களுக்கு காம்படிசன் ரிசல்ட் அனொன்ஸ் பண்ணப் போறாங்க.. ரொம்ப நல்ல மூடோட இருக்கேன்… வீணா என் மூடை ஸ்பாயில் பண்ணாதே” என்று எச்சரித்தபடி சுகன்யாவுடன் அவனைக் கடந்துச் சென்றாள் துளசி.

அவன் “துளசி ப்ளீஸ்! ஒரே ஒரு தடவை என்னைப் பத்தி யோசி… இந்த ஊட்டியில என் அப்பா எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? நான் உன்னை மகாராணி மாதிரி பார்த்துப்பேன் துளசி… டெய்லி நீ கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு வர்றதைப் பார்த்து என் மனசு எவ்ளோ வலிக்குது தெரியுமா? பிகாஸ் ஐ லவ் யூ துளசி… ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் மை லவ்” என்று கெஞ்சியபடியே அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

துளசி நின்றவள் “இப்போவும் சொல்லுறேன், எனக்கு உன் மேல எந்த இன்ட்ரெஸ்டும் இல்லை… நான் உன்னை லவ் பண்ணலை, இனியும் பண்ண மாட்டேன்… அண்ட் ஒன் மோர் திங் எப்போவும் எங்க அப்பன் பெரிய ஆளு, எங்க தாத்தன் பெரிய ஆளு உளறிட்டு ஸ்டாக்கர்(STALKER) மாதிரி என் பின்னாடி சுத்தாம நீ பெரிய ஆளா வளர்றதுக்கு என்ன பண்ணனும்னு யோசி… இல்லைனா நீ என் பின்னாடியே வந்து தொந்தரவு குடுக்கிறேனு போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கிறதைப் பத்தி நான் யோசிக்க வேண்டியதா இருக்கும்” என்று முகம் நிறைய கோபத்துடன் எச்சரித்துவிட்டு சுகன்யாவுடன் நடக்கத் தொடங்கினாள் துளசி.

சுகன்யா துளசியின் தோளில் இடித்தவள் “அடியே முப்பொழுதும் பிரின்ஸ் பத்தி கற்பனையிலேயே வாழுற நீயா இவ்ளோ ஸ்ட்ரிக்டா பேசுற? ஒரு வேளை இவனே உன் பிரின்ஸா இருந்தா என்ன பண்ணுவ?” என்று கேட்க

ஆடிட்டோரியம் செல்வதற்காகத் திரும்பி நடந்தபடி “சத்தியமா இவன் என்னோட பிரின்ஸா இருக்க வாய்ப்பே இல்லை… லாஸ்ட் மன்த் வரைக்கும் கெமிஸ்ட்ரி டிப்பார்ட்மெண்ட் அனிதாக்கு நூல் விட்டவன் இப்போ என் பின்னாடி சுத்துறான்… இவனா என்னோட பிரின்ஸ்?

என்னோட பிரின்ஸுக்கு முதலும் கடைசியுமானக் காதல் நானா மட்டும் தான் இருப்பேன்… அவனோட மனசும் உடம்பும் எனக்காகக் காத்திருக்கும்… கற்பனையில கூட என் பிரின்ஸ் வேற ஒருத்தியை நினைச்சுப் பார்க்க மாட்டான்.. என்னை மாதிரியே அவனும் ஒழுக்கத்தை முக்கியமா நினைப்பான்… பிரின்ஸ் பிரின்ஸ்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுறது அவன் பெரிய பணக்காரனா இருக்கணும்ங்கிற அர்த்தத்துல இல்லை…

ஒரு இளவரசனுக்கே உண்டான கம்பீரம், ஆளுமை, தைரியம் இதெல்லாம் தான் அவனோட அடையாளமா இருக்கணும்… முக்கியமா இதோ இவனை மாதிரி எங்கப்பா எவ்ளோ பெரிய ஆளு தெரியுமானு ஆரம்பிக்காம சொந்தக்கால்ல நிக்கிறவனா இருக்கணும்… அவன் மாசா மாசம் கொண்டு வர்ற பதினஞ்சாயிரமோ இருபதாயிரமோ வச்சு அவன் கூட பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்த நான் தயார்..” என்று பெரிதாக விளக்கவுரை கொடுக்க

சுகன்யா இரு கரங்களையும் தலை மேல் உயர்த்திக் கும்பிடு போட்டவள் “சுவாமி துளசியானந்தா! உங்க கதாகாலட்சேபத்தை இத்தோட நிறுத்துங்க… இனிமே உங்க பிரின்ஸ் காஸ்பியன் பத்தி நான் கேட்கவே மாட்டேன்” என்று பாவமாக உரைக்க துளசி வாயைப் பொத்திக் கொண்டு நகைத்தபடி அவளுடன் ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்தாள்.

இருவரும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து போனில் எதையோ பார்த்துப் பேசிக்கொண்டிருக்க நேரம் பறந்தது. சிறிது நேரத்தில் கல்லூரி முதல்வர், தாளாளர், இவர்களின் துறையான பி.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜியின் ஹெச்.ஓ.டி என அனைவரும் மேடையில் அமர்ந்துவிட வழக்கமான முன்னுரை, பதவுரைகளோடு விழா ஆரம்பித்தது.

சமீபத்தில் அவர்கள் துறையின் சார்பில் கோயம்புத்தூரின் பெரிய ஆடையகத்தின் உடை வடிவமைப்பு போட்டி ஒன்று கல்லூரியில் நடத்தப்பட்டது. அதன் வெற்றியாளர்களை அறிவிக்கும் விழா தான் இது. அந்த அறிவிப்பைக் கொடுப்பதற்காக அவர்களின் ஹெச்.ஓ.டி எழும்பவும் அந்த ஆடிட்டோரியமே அமைதியில் ஆழ்ந்தது.

“த வின்னர்ஸ் ஆர் துளசி ராமமூர்த்தி அண்ட் சுகன்யா தாமோதரன்” என்று அவர் சொல்லிமுடிக்கவும் இரு பெண்களுக்கும் உற்சாகம் கரை புரண்டோடியது.

மடமடவென்று எழுந்து இருவரும் கரம் கோர்த்தபடி மேடையேறி அந்த ஆடையகத்தின் உரிமையாளரின் கையால் கோப்பையை வாங்கிக் கொண்டனர்.

அவர்கள் வடிவமைத்த சிறுவர் சிறுமியருக்கான ஆடையை அவ்வருடம் தீபாவளிக்கு தங்களது ஆடையத்தில் அறிமுகப்படுத்தப்போவதாக உரிமையாளர் அறிவிக்கவும் ஆடிட்டோரியமே கரகோசத்தில் அதிர்ந்தது.

சுகன்யாவுக்கும் துளசிக்கும் அது அவர்கள் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று. முகத்தில் மகிழ்ச்சி மின்ன அந்நாள் முழுவதும் உற்சாகமாகக் கழிந்தது இருவருக்கும். மதியம் கல்லூரி முடிந்ததும் துளசியுடன் வீடு திரும்பிய சுகன்யா கோப்பையை அவளது அன்னையிடம் காட்டிப் பெருமைப்பட, துளசி ராமமூர்த்திக்குப் போன் செய்தாள்.

போனை எடுத்ததும் மகளது உற்சாகக்குரலைக் கேட்ட ராமமூர்த்தி அவள் கூறிய விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தவராய் “மீரா நம்ம பொண்ணு காம்படிசன்ல வின் பண்ணிட்டா” என்று வெற்றிச்செய்தியை அன்னையுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்ட துளசிக்கு உள்ளுக்குள் ஆனந்தம். இருவரிடமும் நீண்டநேரம் கொஞ்சி முடித்துப் போனை வைத்தவள் கடிகாரத்தைப் பார்க்க நேரம் நான்கைத் தொட்டிருந்தது.

இந்த மகிழ்ச்சியான விஷயத்தை இன்னும் மூவரிடம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்று எண்ணியவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை நோக்கிச் சென்றாள்.

அங்கே சென்றதும் பெற்றோரின் நினைவில் கண் மூடி நின்றவளின் கூந்தலைக் கோதையின் கரங்கள் வருடுவது போன்ற பிரம்மை. அதை அனுபவித்தபடி மரப்பெஞ்சில் அமர்ந்தவள் எதிரே தெரிந்த மலைமுகட்டை ரசித்தபடி பேசத் தொடங்கினாள்.

“அப்பா! மா! நானும் சுகன்யாவும் காம்படிசன்ல வின் பண்ணிட்டோம்மா… எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? பாட்டி நீ அடிக்கடி சொல்லுவியே ஒவ்வொரு பொண்ணுக்கும் குறிப்பிட்ட வயசுல ஒரு இளவரசன் அவளைத் தேடி வருவான்னு… அதை மையமா வச்சுத் தான் டிசைனை வரைய ஆரம்பிச்சோம்… சோ உனக்கும் இந்த வெற்றியில பங்கு இருக்கு…”

என்ன தான் அவர்கள் இருப்பதாகப் பாவனை செய்து பேசினாலும் அவர்கள் உயிருடன் இல்லை என்ற நிதர்சனம் மனதைச் சுட, சூட்டின் வலி பொறுக்காமல் அவளது விழிகள் நீரைச் சிந்தத் தொடங்கியது.

ஒரு தும்மல் போட்டாலே “துளசிக்குட்டி என்னாச்சுடா?” என்று பதறும் ஜனார்த்தனனும், “சொல்லச் சொல்லக் கேக்காம குளிர்ல நின்னு விளையாடி இப்போ பாரு ஜலதோசம் பிடிச்சிருச்சு” என்று அக்கறையுடன் அதட்டும் ராதாவும், “தூதுவளை, துளசி போட்டுக் கஷாயம் வச்சுக் குடு ராதா” என்ற கோதை பாட்டியின் கனிவும் பன்னிரெண்டு வயதுடன் கனவாய்ப் போய்விட்ட உண்மையை அவள் உணர்ந்தாலும் அவளின் மனம் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே!

அவள் இவ்வாறான நினைவுகளில் மூழ்கி சோகத்துடன் அமர்ந்திருக்கும் அவ்வேளையில் தான் அந்தச் சத்தம் அவளது காதில் விழுந்தது.

‘டமார்’ என்ற சத்தத்துடன் எதுவோ எதன் மீதோ பயங்கரமாக மோதிக்கொள்வது போல கேட்டச் சத்தத்தில் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க அங்கே கொண்டை ஊசி வளைவின் பெரிய மரங்களின் மீது மோதி நின்றிருந்தது ஒரு ரெனால்ட் க்விட்.

அதன் முன்பாகம் மோதியதன் விளைவாய் சிதைந்திருக்க துளசி உள்ளே இருந்தவர்களுக்கு என்னவாயிற்றோ என்று பதறிப்போய் அங்கே ஓடினாள். காரின் அருகில் சென்றவள் கதவைத் திறக்க முயல கதவு லாக் ஆகிவிட்டிருந்தது புரிந்தது.

கண்ணாடியை உடைக்கக் கல்லுடன் திரும்பியவள் தன் முழு பலத்தையும் பிரயோகித்துக் கல்லை கண்ணாடியில் வீச கண்ணாடி உடைந்துச் சிதறியது. அந்தச் சிறு இடைவெளி மூலமாக உள்ளே கைவிட்டு கதவைத் திறந்தாள் அவள்.

கதவைத் திறந்ததும் உள்ளே இருந்து சரிந்து கீழே விழப் போனான் வாலிபன் ஒருவன். துளசி பதறிப்போய் துளசி பதறிப்போய் அவனை மடியில் தாங்கிக் கொள்ள அவனது முகமெங்கும் இரத்தவெள்ளம்.

“யாராவது வாங்களேன் ப்ளீஸ்! இங்கே ஒருத்தருக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள் துளசி.

அதே நேரம் அடிப்பட்டிருந்த அவ்வாலிபன் துளசியைக் கண் திறந்துப் பார்க்க முயன்றபடியே “மா! நானும் உன் கூடவே வர்றேன்மா” என்று சிரமத்துடன் சொன்னபடியே நினைவிழந்தான்.

அதற்குள் துளசி கத்திய சத்தம் கேட்டு அந்த கொண்டை ஊசி வளைவின் எதிர்புறம் டீக்கடை வைத்திருந்தவர் ஓடி வர துளசி “அண்ணா ஆம்புலன்சுக்கு கால் பண்ணுங்கண்ணா” என்று பதற

அவரோ “ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம்மா… நம்ம வர்ற வண்டிகளை மறிச்சு விஷயத்தைச் சொல்லுவோம்” என்று சொன்னதோடு நில்லாமல் நிஜமாகவே ஒரு காரை மறித்து விஷயத்தைக் கூற அவர்களும் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாய் உடனே அவ்வாலிபனை காரில் ஏற்றும்படி கூறினர்.

டீக்கடைக்காரர் அவ்வாலிபனை தோளில் தாங்கியபடி காரில் ஏற்ற துளசியும் அவனுடன் அமர்ந்து கொண்டாள்.

அவர் துளசியிடம் “உன் சைக்கிள் நிக்குதேம்மா” என்க

துளசி “என் ஃப்ரெண்ட் வந்து எடுத்துக்குவாண்ணா… நீங்க செஞ்ச ஹெல்புக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று கூற அவர் தலையசைத்ததும் கார் அவள் கூறிய மருத்துவமனைக்கு விரைந்தது.

கே.கே ஹாஸ்பிட்டல், ஊட்டியின் பெரிய மருத்துவமனை…

அதன் தலைமை மருத்துவரும் நிறுவனருமான கமலகண்ணன் துளசியின் தந்தை ராமமூர்த்தியின் நெருங்கிய நண்பர். மற்ற மருத்துவமனை என்றால் விபத்து என்றதும் போலீஸ் புகார் அது இதென்று நேரம் கடத்துவர் என்பதால் துளசி இங்கே செல்லுமாறு வாகனத்தில் இருந்தவரிடம் கூறிவிட காரும் அங்கே வந்து நின்றது.

காரின் உரிமையாளர் துளசியின் கூடவே இருந்து அவ்வாலிபனை உள்ளே அட்மிட் செய்த பிறகு தான் சென்றார்.

அவர் சென்றதும் துளசி ஐ.சி.யூவின் வாயிலில் நின்றவள் வாழ்வில் முதல் முறையாக விபத்தைப் பார்த்த அதிர்ச்சியின் நடுக்கம் இன்னும் குறையாதிருக்க, யாரென்று தெரியாத அவ்வாலிபன் எவ்வித ஆபத்துமின்றி உயிர் பிழைக்க வேண்டும் என கடவுளிடம் மன்றாடத் தொடங்கினாள்.

ஏனெனில் இதே மாதிரியான ஒரு விபத்தில் தானே அவளது குடும்பத்தினரை துளசி பறிகொடுத்தாள். அவள் காப்பாற்றிய இவ்வாலிபனுக்கும் குடும்பம் இருக்குமல்லவா? சென்றவன் திரும்புவதற்காக அவர்கள் காத்திருக்கலாம். அவர்களுக்காகவேனும் கடவுள் இவனைக் காப்பாற்றித் தான் ஆகவேண்டும் என்ற எண்ணியபடி அமர்ந்திருந்தவள் நேரம் காற்றிலிட்டக் கற்பூரமாய் கரைவதை அறியவில்லை.

உள்ளே அவனுக்கான சிகிச்சைகள் முடிந்ததும் வெளியே வந்த மருத்துவர் துளசியிடம் “ஹீ இஸ் அவுட் ஆப் டேஞ்சர் நவ்.. நெற்றியில காயம் கொஞ்சம் ஆழம்… மத்தபடி பயப்பட எதுவும் இல்லைமா…” என்று சொல்லிவிட துளசி நிம்மதி பெருமூச்சுடன் தலையசைத்தாள்.

அவனது சிகிச்சைக்கான பணத்தை ஏ.டி.எம் கார்ட் மூலம் செலுத்திவிட்டு ஐ.சி.யூவின் வாயிலில் கிடந்த இருக்கையில் ஓய்ந்து போய் அமர்ந்தாள் துளசி.

சிறிது நேரத்தில் சுகன்யாவின் அழைப்பு வரவே போனை எடுத்து விவரம் சொன்னவள் இரவில் அவன் உடனிருக்க யாருமில்லாததால் தான் மருத்துவமனையில் தங்குவதாகக் கூறிவிட்டு அங்கே கேண்டினிலேயே இரவுணவைப் பார்த்துக் கொள்வதாகக் கூற, அவளுக்குச் சில பல அறிவுரைகளை வழங்கிவிட்டுப் போனை வைத்தாள் சுகன்யா.

சுகன்யாவிடம் சொன்னபடி கேண்டினில் இரண்டு இட்லிகளை விழுங்கிவிட்டு ஐ.சி.யூவின் முன்னே வந்தவளிடம் நர்ஸ் உள்ளே செல்லுமாறும் எதுவும் அவசரம் என்றால் அலாரத்தை அழுத்துமாறும் விளக்கிவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் உள்ளே சென்ற துளசி அங்கே படுக்கையில் கிடந்தவனைப் பார்க்க அவன் முகத்தைத் திருப்பிப் படுத்திருந்ததால் அவனது தலையைச் சுற்றிப் போடப்பட்டிருந்த கட்டு மட்டுமே அவள் கண்ணில் பட்டது.

அவனது பெட் அருகில் இருந்த முக்காலியில் அமர்ந்தவளின் பார்வை அவனது கரங்களில் படிந்து மீண்டது.

இப்படியே இருந்தவளுக்கு தூக்கம் கண்களைச் சுழற்ற அவன் கரம் அருகே சிரம் வைத்து தூங்க ஆரம்பித்தாள் துளசி.

கடவுள் அவளுக்கான ராஜகுமாரனை அனுப்பிவைத்த விஷயமறியாது அவளும், தனக்கான தேவதை இவள் தான் என்ற விஷயமறியாத அவனும் உறக்கத்தில் ஆழ, விதி அவர்களைச் சேர்த்து வைத்து முடிச்சிட்டுவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

தொடரும்💗💗💗