💗அத்தியாயம் 14💗

மகளை அணைத்தபடி இருந்த இருவரையும் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வந்த சுகன்யா பார்த்ததும் அவள் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவளுக்கும் கிருஷ்ணாவைப் பிடிக்காது தான். ஆனால் இன்று மித்ரா தங்கள் கண் முன்னே வந்து நிற்பது அவனால் தான்.

மித்ரா கடத்தப்பட்டப் பின்னர் கிட்டத்தட்ட நடைபிணமாகிப் போன துளசியாகட்டும், வீட்டின் பெரியவர்களாகட்டும் இன்று நிம்மதியாய் மூச்சு விடுவதற்குக் கிருஷ்ணா தானே காரணம் என்று எண்ணியவளுக்கு துளசி இனி அவனைப் பற்றிச் சிறிது யோசித்தால் கூடத் தவறு இல்லை என்றே தோன்றியது.

ஏனெனில் சுகன்யாவுக்குத் தெரியும் ஒரு காலத்தில் துளசி எவ்வளவு கண்மூடித்தனமாகக் கிருஷ்ணாவைக் காதலித்தாள் என்று. இடையில் நடந்த சில சம்பவங்கள் இருவரது வாழ்வையும் ஒரே அளவில் தான் பாதித்திருக்கிறது என்பதற்கு ஆறு வருடங்களைக் கடந்தும் தனிமரங்களாய் வாழ்க்கையை நகர்த்தும் கிருஷ்ணாவும் துளசியுமே சாட்சி.

துளசிக்காவது மித்ரா இருந்தாள். ஆனால் கிருஷ்ணாவுக்கு என்று எந்தப் பிடிப்புமே இல்லையே. அவன் நினைத்திருந்தால் அவர்களின் வட்டாரத்தில் நல்லப் பணக்காரப்பெண்ணாகப் பார்த்து மணந்து பிள்ளைக்குட்டிகளுடன் வாழ ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இன்று வரை துளசியை மட்டுமே ஊனும் உயிருமாய் நினைப்பதிலேயே கிருஷ்ணாவின் காதலில் ஆழத்தைச் சுகன்யாவால் புரிந்துகொள்ள முடிந்தது.

அதுவும் மித்ராவுக்கு ஒன்று என்றதும் அவன் துடித்ததைக் காவல் நிலையத்தில் கண்கூடாகப் பார்த்தவளுக்கு தனது துளசிக்கேற்ற கிருஷ்ணன் இவனே என்று மனதில் தோன்றிவிட்டது.

நிறைந்த மனதுடன் மூவரையும் நெருங்கினாள் சுகன்யா. அவளது செருப்பின் ஓசையில் தாய் தந்தையரின் அணைப்பிலிருந்து வெளியே வந்த மித்ரா சுகன்யாவைக் கண்டதும் “சுகி ஆன்ட்டி அம்மாவும் அப்பாவும் சேர்ந்துட்டாங்க பாருங்க” என்று கண்களில் ஆர்வம் மின்னக் கூற, துளசி தனது கையைப் பிணைத்திருக்கும் கிருஷ்ணாவின் கரத்தைச் சட்டென்று உதறிவிட்டு எழுந்தாள்.

சுகன்யாவைக் கேள்வியுடன் நோக்கியத் துளசியைப் பார்த்தவாறே எழுந்த கிருஷ்ணா மகளை நோக்கிப் புன்னகைத்தான்.

சுகன்யா மித்ராவைத் தூக்கிக்கொண்டவள் “துளசி இன்னைக்கு மித்ரா நம்ம கண்ணு முன்னாடி சின்னக் கீறல் கூட இல்லாம நிக்கிறதுக்குக் காரணம் கிருஷ்ணா தான். அவளைக் காப்பாத்துற முயற்சியில அவனோட கையில காயம் பட்டுடுச்சு… அதனால தான் நேத்து நைட் மித்ராவைக் காப்பாத்தியும் நம்ம கிட்ட கூட்டிட்டு வரமுடியலையாம்” என்று கூறவும் துளசியின் கண்கள் பதற்றத்துடன் கிருஷ்ணாவை ஆராயத் தொடங்கியது.

அவன் அருகில் விறுவிறுவென்று சென்று நின்றவள் அவனது கரங்களைப் பிடித்துக் காயம் பட்டிருக்கிறதா என்று திருப்பிப் பார்க்க ஆரம்பிக்கவும் கிருஷ்ணாவுக்கு அவளது அக்கறையில் கண்கள் கலங்க, சுகன்யாவுக்குத் தோழியின் மனதில் கிருஷ்ணாவின் மீதான காதல் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருப்பது புரிந்தது.

கிருஷ்ணாவிடம் “வீட்டுல பெரியவங்க வெயிட் பண்ணிட்டிருப்பாங்க கிருஷ்ணா… நான் மித்தியை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்… நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு மித்ராவுடன் தனது நானோவை நோக்கி நடைபோட்டாள் சுகன்யா.

நானோ கிளம்பி சென்றபிறகும் துளசியின் கவனம் முழுவதும் கிருஷ்ணாவின் காயத்தை ஆராய்வதிலேயே இருக்க, அவளைக் கையமர்த்தியவன் தனது இடது புஜத்தைத் தொட்டுக்காட்டி “இங்கே தான் காயம் பட்டுச்சு துளசி… கொஞ்சம் இரத்தம் வந்துச்சு… பட் இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை” என்று சொல்ல அவளால் அப்போதும் அவனுக்கு ஒன்றுமில்லை என்பதை நம்ப முடியவில்லை.

அவளது நம்பிக்கையற்றப் பார்வையைச் சந்தித்தவன் “அட நம்புமா! வேணும்னா ஷேர்ட்டைக் கழட்டிக் காட்டவா?” என்று சட்டையின் பட்டனைக் கழட்ட ஆரம்பிக்க

துளசி “வேண்டாம்… உனக்கு ஒன்னுமில்லைனா சரி தான்” என்று வேகமாக மறுத்துவிட அவளது பதற்றத்தைக் கண்டு சிரித்தபடி பட்டனைப் போட்டுக்கொண்டான் அவன்.

துளசிக்கு அப்போது தான் உறைத்தது தான் இவ்வளவு பதறியது தனது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியவனுக்காக, தனது உள்ளத்தில் உதித்த தூயக்காதலை விளையாட்டுப்பொருளாகக் கருதியவனுக்காகத் தான் என்பது.

அந்தக் கணம் வெறுப்பானது எங்கிருந்தோ வந்து அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டது. அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவள் எதிரிலிருந்த மலைமுகடுகளை வெறிக்கத் தொடங்கினாள்.

கிருஷ்ணாவுக்கும் அவளது மனநிலை புரிந்தது. பெருமூச்சுடன் சென்று அந்த மரபெஞ்சில் அமர்ந்து கொண்டவனின் விழிகள் மலைமுகடுகளை வெறிக்கும் துளசியின் மீது சோகத்தோடு படிந்து மீண்டது. அனைத்தும் ஆரம்பித்த இடம் இது தானே! தங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த இடம், தங்கள் காதலின் இனிய நினைவுகளைச் சுமந்த இடம்… அங்கே அமர்ந்ததும் அருகில் நின்றவளை நினைத்து வருந்தத் தொடங்கியது கிருஷ்ணாவின் மனம்.

பட்டாம்பூச்சி போல கவலையின்றி யாவரிடமும் சிரித்த முகமாய் பேசும் அவனது தேவதை இன்று இப்படி இறுகிக் கல்லாய்ப் போய் நிற்பது தன்னால் தானே என்று தன்னைக் குற்றம் சாட்டிக் கொண்டவனின் நினைவு ஆறரை வருடங்களுக்கு முன்னர் பயணிக்கத் தொடங்கியது.

ஆறரை வருடங்களுக்கு முன்னர்…..

சரியாக ஆறரை வருடங்களுக்கு முன்பு அவன் பல வருடங்களுக்குப் பின்னர் இந்தியா வந்த சமயம் அது. அமெரிக்காவில் நடந்த பல கசப்பானச் சம்பவங்களை மறக்க எண்ணிய கிருஷ்ணா தனியாளாய் மொத்த ஆர்.கே குழுமத்தையும் நிர்வகித்துக் கொண்டிருந்த தந்தையின் சுமையைக் குறைக்க எண்ணியவன் இருபத்து நான்கு வயதில் இந்தியாவில் கால் பதித்தான்.

அவனது தந்தை ராகவேந்திரனுக்கும் மகன் பொறுப்பில் தொழிலை விட்டுவிட்டு தான் அவ்வபோது மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். இது குறித்து அவர்களின் அமெரிக்க கிளைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரது தமையன் விஜயேந்திரனிடம் கலந்தாலோசித்துவிட்டு சில தொழில்களை மட்டும் மகன் வசம் ஒப்படைத்திருந்தார் அவர்.

கிருஷ்ணாவும் முழு முனைப்புடன் தொழிலில் கால் பதித்தவன் மனம் முழுவதும் ஆர்.கே குழுமத்தை வர்த்தக உலகத்தில் முதலிடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது. தந்தையிடமிருந்து சில சூட்சுமங்களைக் கற்றுக் கொண்டவன் முதலில் கவனம் செலுத்தியது அவர்களின் ஆர்.கே. ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட்டெட்டில் தான்.

அதற்குத் தேவையான கச்சாப்பொருளான நூலையும் அவர்கள் தான் ஆர்.கே. ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் தயாரித்து வந்தனர். இவ்விரண்டிலும் கவனம் செலுத்தியவன் ஒரு மாதத்துக்குள் தந்தையிடம் இருந்து அதன் நிறை குறைகளைத் தெரிந்து கொண்டு நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். அவனது அதிரடி மாற்றங்களுக்கு முதலில் தொழிலாளர்கள் சுணங்கினாலும் பின்னர் அவர்களும் அவனது வேகத்துக்கு ஈடுகொடுத்து உற்சாகமாக வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

ஏற்றுமதியிலும் கால் பதித்தவன் ஆர்.கே குழுமத்தின் இந்த இரண்டு தொழில்களையும் சிறிய கால இடைவெளியிலேயே பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான். அவனது வேகமான வளர்ச்சி அந்த வட்டாரத்தில் நிறைய பேருக்குப் புகைச்சலை உண்டாக்கியது. அதில் முக்கியமானவன் அகிலேஷ் சக்கரவர்த்தி.

அவனும் அமெரிக்காவில் தான் படிப்பை முடித்திருந்தான். கிருஷ்ணாவும் அவனும் ஒரே பல்கலைகழகத்தில் ஒரே வகுப்பில் தான் படித்தனர். இருவருக்கும் இடையே புகைச்சல் உண்டாகக் காரணமானவள் ஏஞ்சலினா. ஹூஸ்டனின் மிகப்பெரிய துணி உற்பத்தி நிறுவனமான லிபர்ட்டி ஃபேப்ரிக் கம்பெனி உரிமையாளரின் இரண்டாவது வாரிசு.

பல்கலைகழகத்தில் சேர்ந்த முதல் நாளே அவளைக் கண்டதும் காதலில் விழுந்தான் அகிலேஷ். ஆனால் ஏஞ்சலினாவோ அவனிடம் காதல் எல்லாம் தனக்குச் சரிவராது என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டாள். அதற்குப் பின் அவனைக் கண்டுகொள்ளவில்லை அவள்.

ஆனால் இது நடந்து ஒரு வாரத்திலேயே கிருஷ்ணாவுடன் அவள் நெருங்கிப் பழகுவதைக் கண்ட அகிலேஷுக்கு உள்ளுக்குள் தீ மூள அன்றிலிருந்து கிருஷ்ணாவைத் தன் விரோதியாகவே பாவிக்க ஆரம்பித்தான் அகிலேஷ்.

அதில் அவன் அறியாதது கிருஷ்ணாவும் ஏஞ்சலினாவும் நல்ல நண்பர்கள் என்பதைத் தான். ஏஞ்சலினா பிறவியிலேயே நோய் எதிர்ப்புச்சக்தியற்றப் பெண். அவளுக்கு நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படுவது வழக்கம். பருவநிலை மாற்றங்கள் அவள் உடலை அடிக்கடி பாதிக்கும். அப்போதெல்லாம் அவளைக் குழந்தையாய் கவனித்தது அவளது சகோதரன் மார்க்.

ஆனால் அவன் அவர்களின் நிறுவனத்தை நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து அண்ணனுக்கும் தங்கைக்குமான சந்திக்கும் நேரங்கள் குறைந்து போக அச்சமயம் தான் கிருஷ்ணா அவள் வாழ்வில் வந்தான். ஒரு முறை அவள் வகுப்பறையில் மயங்கிவிழுந்த நேரம் அவளைப் பல்கலைகழக வளாகத்தினுள் இருக்கும் கிளினிக்கிற்குக் கொண்டு சென்றது அவன் தான்.

அவனது இச்செயல்கள் யாவும் ஏஞ்சலினாவுக்கு அவளது தமையனை நினைவுறுத்தவே கிருஷ்ணாவைத் தனது நண்பன் எனும் நிலையைத் தாண்டி ஒரு சகோதரனாகவே பாவித்தாள் அவள்.

ஆனால் அகிலேஷோ காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர்களைக் காதலர்கள் என்று எண்ணிக் கொண்டான். தனது காதலியைத் தன்னிடமிருந்து கிருஷ்ணா பிரித்துவிட்டதாக அவனை வெறுக்கத் தொடங்கினான் அகிலேஷ்.

அதிலும் ஒரு முறை நண்பர்கள் அளித்த பார்ட்டியின் போது ஏஞ்சலினா கிருஷ்ணாவுடன் வந்திருக்க, அகிலேஷ் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் ஏஞ்சலினாவின் கையில் காயம் படவும் கிருஷ்ணாவும் பொறுமையிழந்து அகிலேஷிடம் கை நீட்டி விட்டான்.

ஏனெனில் அகிலேஷ் அடிக்கடி ஏஞ்சலினாவிடம் தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்துவதை அவனே நேரில் கண்டிருக்கிறான். சில முறை வாய் வார்த்தையாய் எச்சரித்திருக்கிறான் தான். இன்னும் சில முறை இருவரும் சட்டையைப் பிடித்தபடி முறைத்துக்கொண்டு நின்றிருக்கின்றனர். ஆனால் இம்முறை ஏஞ்சலினாவின் கைக்காயம் கிருஷ்ணாவின் பொறுமையைத் துடைத்துப் போட்டுவிட்டது. எனவே வேறு வழியின்றி அகிலேஷிடம் கை நீட்டிவிட்டான்.

அங்கிருந்த அனைவரின் கண்ணுக்கும் கிருஷ்ணா ஹீரோவாகத் தெரிய அகிலேஷ் தனது நடத்தையால் வில்லன் என்ற பெயரைச் சம்பாதித்துவிட்டான். அன்றிலிருந்து ஏஞ்சலினா அவனை விஷமாக வெறுத்துவிட்டு கிருஷ்ணாவுடன் இன்னும் நெருக்கமாக ஆரம்பிக்கவே அகிலேஷுக்கு கிருஷ்ணா ஜென்ம விரோதியாகவே மாறிவிட்டான்.

இதற்கிடையே ஏஞ்சலினாவின் மரணமும் நிகழ அது கிருஷ்ணாவையும் அகிலேஷையும் வெவ்வேறு விதமாய் பாதித்தது. கிருஷ்ணா தனது தோழியை இழந்த வருத்தத்தில் உடைந்து போக, அகிலேஷ் தனது காதலி மறைந்த துக்கத்தில் முழு பைத்தியக்காரனாகவே மாறிவிட்டான்.

அந்தப் பகை நெஞ்சிலிருக்க அமெரிக்காவை விட்டு இந்தியா வந்தப் பின்னரும் கிருஷ்ணாவைத் தனது விரோதியாகப் பாவிக்கும் மனப்பான்மையை அவன் விடவில்லை. அதிலும் அனைத்துத் தொழில்களிலும் ஆர்.கே குழுமத்திற்கு அடுத்த இடத்தையே சக்கரவர்த்தி குழுமம் பிடிப்பது அவனுக்குத் தீரா வெஞ்சினத்தை உண்டாக்கியது.

இவை எல்லாவுமாகச் சேர்ந்து கிருஷ்ணாவை இல்லாமல் செய்யும் வேலையில் இறங்கினான் அவன். அதாவது கிருஷ்ணாவைக் கொல்லும் முயற்சியில் யாரும் அறியாவண்ணம் இறங்கினான். இதை அவனது தந்தை கூட அறியவில்லை.

அவனுக்கு ஏற்றக் கையாளாய் கிடைத்த தேவாவுடன் சேர்ந்து வியூகம் வகுத்தவன், அந்த வியூகத்துக்குள் கிருஷ்ணாவை அடைத்து அவனை அழிக்கும் நாளுக்காய் காத்திருந்தான்.

அச்சமயத்தில் தான் கிருஷ்ணா தொழிலில் உண்டான இறுக்கத்தைக் குறைப்பதற்காக அவர்களின் ஊட்டி எஸ்டேட் பங்களாவுக்கு ஓய்வு எடுப்பதற்காகச் சென்றான். ராகுலும் விஷ்வாவும் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிவிட, கிருஷ்ணா உற்சாகத்துடன் சில நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டவன் மலைப்பகுதிச்சாலைகளில் பயணம் செய்ய ஏதுவாக ரெனால்ட் க்விட்டில் கிளம்பினான்.

கோயம்புத்தூர் சிறிது சிறிதாக மறைய மியூசிக் ப்ளேயரில் ஹரிஷ் ராகவேந்திரா ‘தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்’ என்று தனது மனம் மயக்கும் குரலில் பாடிக்கொண்டிருக்க அதை ரசித்தவாறே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

கார் ஊட்டிக்குள் நுழைந்ததும் வேகத்தை மட்டுப்படுத்தியவன் அவர்களது எஸ்டேட் பங்களாவுக்குச் செல்வதற்காக ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது அவனது காருக்குப் பின்னே வந்த லாரி ஒன்று கிருஷ்ணாவின் ரெனால்ட் க்விட்டின் பின்புறத்தை ஆக்ரோசத்தோடு தாக்க, கிருஷ்ணாவால் அந்த லாரி ஏன் இவ்வளவு கோபத்துடன் தன்னைத் தாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

காரைக் கட்டுப்படுத்த முயன்றவனின் கவனம் சாலையிலிருந்து விலகிய நொடி அந்தக் கொண்டை ஊசி வளைவில் நின்ற பெரிய மரமொன்றில் மோதி நின்றது கிருஷ்ணாவின் ரெனால்ட் க்விட். அதில் இருக்கும் ஏர்பேக் ஏதோ கோளாறு காரணமாக விரியாது போய்விட மோதிய வேகத்தில் கிருஷ்ணாவின் தலையில் படுகாயம்.

நெற்றியிலிருந்து சூடான இரத்தம் முகத்தில் வழிய அவனது கண்கள் மெதுவாக மூடத் தொடங்கிய நேரம், கண் இமையில் குருதி ஏற்படுத்திய பிசுபிசுப்பினிடையே மங்கலாய்த் தெரிந்தது ஒரு உருவம்.

அவனது காரின் கதவைத் திறக்க முயன்று முடியாது விழித்த அவ்வுருவம் அங்கே கிடந்தக் கல்லால் கண்ணாடியை உடைத்துக் காரின் லாக்கைத் திறக்கவும் கார் இருக்கையிலிருந்து வேரற்ற மரமெனச் சரிந்தான் கிருஷ்ணா.

அவ்வுருவம் பதறிப் போய் அவனைத் தன் மடியில் ஏந்திக் கொண்டு “யாராவது வாங்களேன் ப்ளீஸ்! இங்கே ஒருத்தருக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு” என்ற குயிலை ஒத்த குரலுடன் பேசவும், அவ்வுருவம் ஒரு பெண்ணென அறிந்த அடுத்த நொடி அவனது தாயார் சாவித்திரியின் முகம் மனக்கண்ணில் வர “மா! நானும் உன் கூடவே வர்றேன்மா” என்று உளறியபடி நினைவிழந்தான் கிருஷ்ணா.