💗அத்தியாயம் 1💗

ஆர்.கே இன்டர்நேஷனல் ஸ்கூல், கணபதிபுதூர்….

கோயம்புத்தூரின் பிரபலமான பள்ளிகளில் ஒன்று. அன்று பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுவதற்குரிய பரபரப்புடன் இருந்தது பல ஏக்கரில் விரிந்து கிடந்த அப்பள்ளி. எங்கெங்கு நோக்கினும் சின்னஞ்சிறு பூங்கொத்துகள் போல சிறுவர், சிறுமியர் அங்குமிங்கும் பள்ளியின் கேரிடாரின் புல்வெளியில் நடை போட்டுக்  கொண்டிருக்க அப்பள்ளியின் ஊழியர்கள் மற்றப் பள்ளி ஆசிரியர்களிடம் அவர்கள் மாணவர்களுடன் செல்ல வேண்டிய இடத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தனர்.

மாணவர்கள் கலைநிகழ்ச்சிக்காகத் தயாராகும் அறையில் சிறார்களின் பேச்சுச்சத்தம் இனிய சங்கீதமாய் ஒலித்துக் கொண்டிருக்க அங்கே குட்டி ரோஜா மொட்டுகளுக்கு நடுவில் முழங்காலிட்டு நின்று ஒரு சிறுமிக்கு அவளது கவுனின் கழுத்துப்பகுதி இணைப்பான ஹூடியை அவளது தலையில் அணிவித்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.

மிகவும் ஒல்லியான கொடி போன்ற மேனி, அழகான அலைபாயும் தீர்க்கமான கண்கள், கூரிய நாசி, அதோடு சிறிய ஸ்ட்ராபெர்ரி இதழ்களில் எப்போதும் நிலைத்திருக்கும் குறுஞ்சிரிப்பு இவையாவும் அவளைப் பேரழகியாகக் காட்ட, கழுத்தில் புரண்டுக் கொண்டிருந்த கூந்தலை பின்னே ஒதுக்கிவிட்டவளின் அழகுக்கு அழகு சேர்த்தது அவள் அணிந்திருந்த எளிமையான இளம்ரோஜா வண்ண லாங்க் டாப்.

அந்தச் சிறார்களுடன் வந்திருந்த ஆசிரியை “மேம் எப்பிடி இவ்ளோ அழகா டிரஸ் செலக்ட் பண்ணுறிங்க நீங்க? எல்லாமே சிம்பிள் அண்ட் எளிகண்ட்” என்று பாராட்டத் திரும்பினாள் அவள்.

அவள் தான் துளசி. அவளது உடையின் நேர்த்தியை ஒரு பெண்ணாக ரசித்துப் பாராட்டிய அந்த ஆசிரியைக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்தவள் “தேங்க்யூ சமீரா மேம்.. இது எங்க பொட்டிக்ல நானே டிசைன் பண்ணுனது..” என்று பதிலளித்துவிட்டு “ஓகே! ஸ்டூடண்ட்ஸோட டிரஸ்லாம் உங்களுக்கு திருப்தி தானே” என்று வேலையில் கண்ணாகிவிட்டாள்.

ஊட்டியில் மித்தி பொட்டிக் என்ற பெயரில் ஒரு பொட்டிக்கை நடத்தி வந்தவள் இந்த இருபத்து நான்கு வயதிலேயே அந்த வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ஆடை வடிவமைப்பாளாராகி விட்டாள். அன்று நடைபெறப் போகிற நாடகப்போட்டியில் அந்த ஆசிரியை அழைத்து வந்திருந்த பள்ளி மாணவ மாணவிகளின் உடையை வடிவமைத்தது அவளே. எனவே அதில் திருப்தியின்மை ஏதாவது உள்ளதா என்று வினவ

சமீரா என்ற அந்த ஆசிரியை “நோ மேம்! ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணிருக்கிங்க. இவங்க டிரஸ்ஸைப் பார்த்துட்டு நானே ஒன் செகண்ட் ஃபேரி டெயில் உலகத்துக்குள்ள போயிட்டேன்னா பார்த்துக்கோங்க..

அதுலயும் ஈவில் குயின், ஸ்னோ ஒயிட் ரெண்டு பேரோட காஸ்டியூமும் பக்காவா இருக்கு. ஓகே ஈவில் குயின் இங்கே இருக்காங்க. ஸ்னோ ஒயிட் எங்கே போனாங்க?” என்று கேட்கும் போதே “அம்மு” என்று அழைத்தபடி அந்த அறைக்குள் ஓடி வந்தாள் வெள்ளைநிற லாங்க் கவுன் அணிந்த சிறுமி ஒருத்தி.

ஓடி வந்து துளசியின் அருகில் நின்றபடி “அம்மு என் கவுனோட பேக் ஹூக் சரியில்லை” என்று சொன்னவளுக்கு ஆறு வயது பிறந்துவிட்டது. ஆனால் துளசிக்கு இன்னும் அவள் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கைகளில் ஏந்திய பச்சிளம் குழந்தை தான். துளசியைப் பொறுத்தவரை கடவுள் அவளுக்குக் கொடுத்த வரம் தான் அவளின் செல்லமகள் மித்ரா.

துளசி அவளின் அருகில் முழங்காலிட்டபடி கவுனின் பின்புற கொக்கியைச் சரி செய்தவள் அவள் முதுகில் நீளவாக்கில் தெரிந்த மச்சத்தைக் கண்ணுற்றவாறு மகளின் முன்னுச்சி பேங்க்ஸை(BANGS) அவள் வைத்திருக்கும் மலர்க்கீரிடத்திற்குள் அடக்கி விட்டு “மை டியர் மித்திகுட்டி! இன்னைக்கு நீங்க பார்க்கிறதுக்கு எவ்ளோ கியூட்டா இருக்கிங்க!” என்றுக் கொஞ்சியபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மித்ரா தன் கோலிகுண்டு விழிகளை உருட்டியபடி “அம்மு நான் பார்க்க ஸ்னோஒயிட் மாதிரி இருக்கேனா?” என்று அன்னையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு துளசியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

உடை சரியாகிவிட்டத் திருப்தியில் “அம்மு நான் பிரின்ஸைத் தேடிப் போறேன்” என்றுச் சொல்லிவிட்டு மித்ரா அங்கிருந்து ஓடவே அந்த ‘பிரின்ஸ்’ என்ற வார்த்தை துளசிக்குள் சத்தமில்லாமல் ஒரு பூகம்பத்தை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சியில் இருந்து அவளை மீட்கும் விதமாக போன் அடிக்க எடுத்து “ஹலோ” என்றவள் ஆசிரியை சமீராவிடம் “மேம் என் ஃப்ரெண்ட் கால் பண்ணுறா… நீங்க ஸ்டூடண்ட்ஸை ஸ்டேஜுக்குக் கூட்டிட்டுப் போயிடுவிங்கல்ல” என்றுக் கேட்டு உறுதிப்படுத்திவிட்டு போனுடன் வெளியேறினாள்.

அதே நேரத்தில் அந்தப் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் இருந்து அறிவிப்பு வந்தது.

“இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் ஆர்,கே இண்டர்நேஷனல் ஸ்கூலின் சார்பாக மனதாற வரவேற்கிறோம்… மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சிகள் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கவுள்ள இந்த அழகானப் பொழுதில் ஆர்.கே குழுமத்தின் இயக்குனரும், இந்தப் பள்ளியின் தாளாளருமான திரு.கிருஷ்ணா ராகவேந்திரன் அவர்களை ஆர்.கே இண்டர்நேசனல் ஸ்கூலின் அனைத்து மாணவச்செல்வங்கள் சார்பாக வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்ற அறிவிப்பு துளசியின் காதில் விழும் முன்னரே அவள் பள்ளியின் கேரிடாரை நோக்கி முன்னேறியிருந்தாள்.

அதே நேரம் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் முரளிதரனுடன் ஆடிட்டோரியத்துக்குச் செல்லும் வழியில் அவனை வரவேற்க கையில் பூக்களுடன் நின்று கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து புன்னகை சிந்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. ஆர்.கே குழுமத்தின் கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் டெக்ஸ்டைல் மில்கள் அனைத்துமே தற்போது அவனது மேற்பார்வையில் தான் இருந்தது.

சராசரிக்கும் அதிகமான உயரத்துடன், பளபளத்த சிகை மின்ன, ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் அக்மார்க் இக்கால இளைஞனாக காட்சியளித்தவனுக்கு வயது முப்பது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

கிருஷ்ணா என்ற பெயருக்கு ஏற்றபடி மாயக்கண்ணனின் மந்திரப்புன்னகையை இதழில் தாங்கி தலைமை ஆசிரியருடன் ஆடிட்டோரியம் செல்லும் பாதையில் நடந்து வந்தவனின் மீது மோதிக் கொண்டாள் மித்ரா என்ற வெண்ணிற வானவில்.

அவளை விழாமல் பிடித்து நிறுத்தியவன் குழந்தையின் உயரத்துக்குக் குனிந்து அந்த முகம் ஏனோ பழக்கப்பட்டதாகத் தோன்ற “ஏன் செல்லம் இவ்ளோ வேகமா ஓடுறிங்க? யாரைத் தேடுறிங்க?” என்று அவளைக் கொஞ்ச

மித்ரா “அங்கிள் நான் பிரின்ஸை தேடுறேன்… எங்க டிராமா ஸ்டார்ட் ஆகுற டைம் ஆயிடுச்சு… அவன் வரலைனா எல்லாமே ஸ்பாயில் ஆயிடும்” என்று கண்ணை மூடி உதட்டைப் பிதுக்க, அந்தப் பாவனையும் அவளின் ‘பிரின்ஸ்’ என்ற வார்த்தையும் அவனுக்கு நெஞ்சில் பூந்தென்றலை வீச வைக்கவே ஆறு வருடம் கழித்தும் உள்ளுக்குள் அந்தத் தென்றலின் சுகத்தை உணர்ந்தான் கிருஷ்ணா.

அதற்குள் மித்ரா தேடிய அந்த நாடகத்தில் இளவரசனாக நடிக்கும் சிறுவன் வந்துவிட அவள் “நீ வந்துட்டியாடா? சமீரா மிஸ் இஸ் ஒரியிங் அபவுட் யூ.. கம் ஆன்! லெட்ஸ் கோ” என்று பெரியமனுசி மாதிரி கூறிவிட்டு அவனது கரத்தைப் பற்றிக் கொண்டு

கிருஷ்ணாவிடம் “பை அங்கிள்” என்றுச் சொல்லிவிட்டு அந்தச் சிறுவனுடன் ஓடியளைப் புன்னகையுடன் பார்த்தவனுக்கு ஏனோ அந்தச் சிறுமி அவனது மனதில் வீசிய தென்றலுக்குக் காரணமானவளை நினைவுப்படுத்துவதாகத் தோன்ற பெருமூச்சு விட்டபடி தலைமையாசிரியருடன் ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழையவும் நிகழ்ச்சி சிறப்பாக ஆரம்பித்தது. ஒரு வழியாக மித்ரா நடிக்கப்போகும் நாடகமும் வந்துவிட துளசி அடித்துப் பிடித்து ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்தாள். குழந்தைகளின் பெற்றோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைப்பகுதிக்குச் சென்று அமர்ந்தவள் நாடகத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

மீரா சொன்னபடி குழந்தைகள் ஃபேரி டெயில் உலகத்துக்கே அங்கிருந்த அனைவரையும் தங்களின் இயல்பான நடிப்பால் அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

கதையின் படி ஈவில் குயின் மாயக்கண்ணாடியிடம் “மிரர் மிரர் ஆன் தி வால், ஹூ இஸ் த ஃபேரஸ்ட் ஆஃப் தெம் ஆல்?” என்று கேட்கும் காட்சி வரவே அந்த ஆடிட்டோரியத்தின் மேடையிலிருக்கும் திரையில் ஸ்னோ ஒயிட்டாகத் தோன்றினாள் மித்ரா.

அவளை அடையாளம் கண்டுகொண்ட கிருஷ்ணா நாடகத்தோடு ஒன்றிவிட்டான். அந்தச் சிறுமியின் முகபாவம், நடிப்புத்திறமை எல்லாம் அவனைக் கவர மீண்டும் அவன் நெஞ்சில் இளந்தென்றல் வீச ஆரம்பித்தது.

மேடையில் மித்ராவோடு சேர்ந்து ஏழு குள்ளர்களும் தோன்ற நாடகம் அருமையாக நகர்ந்தது. இறுதியில் இறந்துப் போன ஸ்னோ ஒயிட்டைக் காணக் குதிரையிலிருந்து இறங்கி வந்தான் இளவரசன்.

அதைக் கண்டதும் துளசிக்கு ஒரு காலத்தில் தான் பேசிய உளறல்கள் எல்லாம் மனதுக்குள் வரிசை கட்டிவர சரியாகப் போனும் அடித்தது. மகளின் நாடகம் முடியும் வரை காத்திருந்தவள் முடிந்ததும் போனுடன் வெளியேறினாள்.

ஒரு காதில் விரலை வைத்து மூடியபடி போனில் பேச ஆரம்பித்தவள் “ஹலோ சுகி! என்னடி பிரச்சனை உனக்கு? நீ கல்யாணப்பொண்ணுக்கு லெஹங்காவையும், பிளவுஸையும் காட்டிட்டு அவங்களுக்கு டிசைன் பிடிச்சிருக்கானு கேட்டுட்டு வரப் போற… அதுக்கு இவ்ளோ அலம்பலா? மித்தியோட கல்ச்சுரல் ப்ரோகிராம் முடியவும் உன்னோட ஜாயின் பண்ணிக்கிறேன்… நீ ரொம்ப டென்சன் ஆகாதே.. ரிலாக்ஸ்” என்று மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த தோழியை அமைதிப்படுத்தினாள் துளசி.

போனில் பேசியவள் தான் துளசியின் உயிர்த்தோழி. துளசியைத் தனியாகக் கோயம்புத்தூருக்கு அனுப்பிவைத்த பதற்றத்தில் அடிக்கடி போன் செய்து அவளை அன்புத்தொல்லை செய்து கொண்டிருந்தாள் அவள். துளசிக்குமே அந்நகரம் சில தேவையற்ற மனிதர்களை நினைவூட்ட என்ன தான் நடந்துவிடும் என்று பார்த்துவிடலாம் என குருட்டுத்தைரியத்துடன் தான் அங்கே மகளுடன் வந்திருந்தாள்.

இருவரும் பயந்தபடி ஒன்றும் நடக்கவில்லை என்று தோழியிடம் தெரிவித்தவள் அதன் பின் தோழியிடம் இன்னும் சில தகவல்களை விளக்கியபடி போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

அங்கே ஆடிட்டோரியத்தில் நாடகப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்க கிருஷ்ணாவை மேடைக்கு அழைத்தனர் விழாக்குழுவினர்.

மேடைக்கு வந்தவனின் கையில் மெடலைக் குடுத்த அறிவிப்பாளர் “நாடகப்போட்டியில் முதல் பரிசு பெறுபவர் ஸ்னோ ஒயிட்டாக நடித்து தன் நடிப்பால் நம்மைக் கதையுலகிற்கே அழைத்துச் சென்ற மித்ரா” என்று அறிவிக்க மித்ரா மேடைக்கு வெள்ளைநிற கவுனில் வர கிருஷ்ணாவுக்கு அவளைக் கண்டதும் இனம்புரியா சந்தோசம்.

தன் அருகில் நின்றவளின் கழுத்தில் மெடலைப் போடப் போக அதற்குள் மித்ரா அவனிடம் “அங்கிள் என்னோட அம்முவையும் கூப்பிடுங்க ப்ளீஸ்… அவங்களுக்கு தான் மெடல் போடணும்… நான் அவங்க கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்” என்று தலையைச் சரித்து கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி கேட்க அதற்கு பின்னர் அவனால் மறுக்க இயலவில்லை.

அறிவிப்பாளரிடம் மித்ராவின் அம்முவை அழைக்குமாறு கூற அறிவிப்பாளர் “மித்ராவோட அம்மா கொஞ்சம் மேடைக்கு வாங்க” என்று அழைக்க துளசிக்கு அவ்வளவு தீவிரமானப் பேச்சிலும் மகளின் பெயர் தனித்து ஒலிக்க போனில் பேசிக் கொண்டிருந்த தோழியிடம் “சுகி! மித்ராவோட நேமை அனவுன்ஸ் பண்ணுறாங்க… நான் அப்புறமா பேசுறேன்” என்றபடி தனது இளம்ரோஜா வண்ண லாங்க் டாப்பின் கீழ்ப்பகுதி அழகாக குடை போல் விரிய வேகமாக ஆடிட்டோரியத்தை நோக்கி ஓடினாள்.

ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்தவள் மேடையில் மித்ரா தன்னை அழைக்கச் சொன்னதை அறிவிப்பாளர் தெரிவிக்கவும் வேகமாக லாங்க் டாப் தடுக்கிவிடாமல் மேடையேறத் தொடங்கினாள்.

மேடையின் மேலேச் செல்வதற்கான கடைசிப்படியில் காலடி எடுத்து வைக்கவும் மித்ரா கிருஷ்ணாவிடம் மேடையேறும் துளசியைச் சுட்டிக்காட்டி “அங்கிள் அவங்க தான் என்னோட அம்மு” என்று சொல்லவும் சரியாக இருந்தது.

கிருஷ்ணா மித்ராவின் அம்முவைப் பார்க்கும் ஆவலில் திரும்ப அதே நேரம் மகள் பேசிக்கொண்டிருக்கும் அங்கிள் யாரென்றுப் பார்க்கும் ஆவலில் துளசி தலையுயர்த்திப் பார்க்க இருவரின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்த அக்கணம் கிருஷ்ணாவின் முகத்தில் பிறவிப்பயனை அடைந்த ஆனந்தம் அப்பட்டமாகத் தெரிய துளசியின் முகத்திலோ நூறு சதவீத வெறுப்பு மட்டுமே.

துளசியின் முகத்தில் தெரிந்த வெறுப்பு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல கிருஷ்ணா அவளை உரிமையோடு ரசிக்க ஆரம்பிக்க துளசி வாய்க்குள் “பார்க்கிற பார்வையைப் பாரு! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இவனை….” என்று பல்லைக் கடிக்க ஆரம்பித்தாள்.

அதே சமயம் மித்ரா கிருஷ்ணாவிடம் “அங்கிள் இவங்க தான் என்னோட அம்மு… மெடலைப் போடுங்க அங்கிள்” என்று கூறவும் தான் கிருஷ்ணாவுக்கு புரிந்தது மித்ராவைப் பார்த்த போது ஏன் மனதிற்குள் இதமான உணர்வு வந்தது என்று. அப்போது அவனுக்குப் புரிந்தது தனக்கும் மித்ராவுக்குமான உறவு என்ன என்பது. அவள் கூறி அவன் மறுப்பானா இனி!

அவளின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியவன் “நீ சொல்லிக் கேக்காம இருப்பேனா ஏஞ்சல்? உன்னோட அம்முவுக்கு கழுத்துல தானே கட்டணும்? கட்டிடுவோம்” என்றவன் அவனது  பேச்சைக் கேட்டு துளசி முறைக்கவும்

தொண்டையைச் செருமிக் கொண்டு “ஐ மீன் மெடலை கழுத்துல போட்டுருவோம்னு சொல்ல வந்தேன்” என்று சொன்னபடி துளசியின் அருகில் மெடலுடன் வந்தான் கிருஷ்ணா.

ஆறு வருடத்துக்கு முன்னர் இருந்த அதே குறும்பு மின்னும் கண்கள், மந்தகாசப்புன்னகை மின்னும் இதழ்கள் என்று அவன் கிஞ்சித்தும் மாறாமல் அதே பிருந்தாவனத்தின் கிருஷ்ணனாக அவள் முன்னர் நிற்க, துளசி எப்படி இவனது பார்வை தன்னுள் ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்கலாம் என்று யோசித்தபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று சுதாரித்தவளாக மகளைத் தூக்கிக் கொண்டவள் மெடலுக்காக அவன் முன்னே நிற்க கிருஷ்ணா சொல்லவொணா ஆனந்தத்துடன்  துளசியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவன் அவளது கழுத்தில் மெடலைப் போட்டுவிட்டான். மித்ரா அதைப் பார்த்து கைதட்ட மொத்த அரங்கமும் கரகோசத்தால் அதிர்ந்தது.

அடுத்து அறிவிப்பாளர் இரண்டாவது  பரிசுக்கானப் பெயரை அறிவிக்க துளசி இடத்தைக் காலி பண்ணி நகரவும் கிருஷ்ணாவும் மந்திரத்தால் கட்டுண்டது போல அவள் பின்னே செல்லவே அறிவிப்பாளர் “கரெஸ்பாண்டெண்ட் சார் இன்னும் ப்ரைஸ் டிஸ்டிரிபியூசன் முடியலை” என்றுச் சொல்ல அவனது கால்கள் பிரேக் போட்டது போல் நின்றது.

ஆனால் மனமோ “கிரிஷ் நீ இங்கேயே நின்னா என்ன அர்த்தம்டா? ஆறு வருச தவம் முடிஞ்சுடுச்சு.. துளசிக்கும் உனக்குமான சேலஞ்ச்ல நீ ஜெயிச்சிட்ட.. இன்னும் ஏன் காத்திருக்க? இன்னைக்கு விட்டுட்டா நீ மறுபடியும் துளசியை மிஸ் பண்ணிடுவ” என்று அறிவுறுத்த கிருஷ்ணா அறிவிப்பாளரிடம் தனக்கு ஒரு அவசரவேலை என்று சொல்லிவிட்டு ஆடிட்டோரியத்தைத் தாண்டிச் செல்லும் துளசியைப் பிடிக்க வேகமாக நடந்தான் அவன்.

துளசியோ “என்ன காரியம் பண்ணிருக்க துளசி? அவன் இங்கே இருக்கான்னு தெரிஞ்சும் நீ சிட்டியை மிதிச்சிருக்கக் கூடாது. இப்போ அவன் வந்து மித்ரா பத்தி கேட்டா நீ என்ன சொல்லுவ? யாரை பார்க்கக் கூடாதுனு ஆறு வருசம் கட்டுப்பாட்டோட இருந்தேனோ அவன் முன்னாடி நானே வந்து நிக்கிற மாதிரி பண்ணிட்டியே கடவுளே! நான் விட்ட சவால்ல நான் தோத்துப் போய் நிக்கிறேன்… இனிமே நான் என்ன செய்வேன்?” என்று மனதிற்குள் எண்ணியபடி வேகமாக நடக்க மித்ரா அம்மாவிடம் கேள்விமழை பொழிந்தபடி நடந்தாள்.

ஒரு வழியாக அம்மாவும் மகளும் பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியேறி அந்த வழியாகச் சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினர். துளசி நல்லவேலையாக கைப்பையை தன்னுடனே வைத்திருந்தாள்.

குனிந்து ஆட்டோ டிரைவரிடம் “அண்ணா சாய்பாபா காலனி பஸ் ஸ்டாண்ட் போகணும்” என்று சொல்ல அவர் மீட்டரைப் போட்டுவிட்டு அமரச் சொல்லவும் இருவரும் உள்ளே அமர ஆட்டோ பேருந்து நிலையத்தை நோக்கி வேகமெடுத்தது.

கிருஷ்ணா விறுவிறுவென்று பள்ளிக்கு வெளியே வந்தவன் ஆட்டோ தொலைவில் சென்று விட்டதைப் பார்த்து ஏமாற்றத்துடன் சிகையைக் கோதிக் கொண்டான்.

பின்னர் புன்னகைத்தவன் “உன்னோட சேலஞ்ச்ல நீ தோத்துப் போயிட்ட துளசி… இனிமே என் கிட்ட இருந்து உன்னை யாராலயும் பிரிக்க முடியாது…. என்னோட ஸ்வீட் லிட்டில் பிரின்சஸை என் ஆறு வருச தவத்துக்கு எனக்கு சர்ப்ரைஸ் கிப்டா குடுப்பேனு நான் நினைக்கவேயில்லை… இனிமே என் கூடத் தான் நீயும் நம்ம பிரின்சஸும் இருக்கப் போறிங்க…. நம்ம சேலஞ்ச் இன்னையோட முடிஞ்சுப் போச்சு” என்று சந்தோசத்துடன் சொல்லிக் கொண்டான் கிருஷ்ணா. ஆனால் அவன் நினைப்பது எதுவுமே அவ்வளவு எளிதில் நடப்பதற்கு துளசி அனுமதிக்க மாட்டாள் என்பதை கிருஷ்ணா அறியவில்லை அப்போது….

தொடரும்💗💗💗