💑அத்தியாயம் 39💑

கிருஷ்ணா துளசியின் பொட்டிக்குக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவனின் மனம் முழுவதும் துளசி மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள். அவனுக்கும் தன் மீது அவள் காட்டிய அக்கறை மனதுக்கு இதமாக இருந்தாலும் அவள் தன்னை நம்பாமல் இருந்ததை இன்னும் கிருஷ்ணாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

இவ்வாறு யோசனையுடன் பொழுதைப் போக்கியவன் மாலையில் மித்ரா வீடு திரும்பியதும் அவளுடன் விளையாடி நேரத்தைக் கடத்தினான். சிறிது நேரம் கழித்ததும் சாரதா கவலையுடன் வாசலைப் பார்ப்பதை நோக்கியவன்

“என்னாச்சு சித்தி? யாரைத் தேடுறிங்க?” என்று கேட்க

“துளசி எப்போவுமே ஆறு மணிக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துடுவா கிரிஷ்… ஆனா இன்னைக்கு ரொம்ப நேரமாகியும் அவளைக் காணுமே” என்றார் சாரதா மருமகள் இன்னும் வீடு திரும்பாதக் கவலையுடன்.

கிருஷ்ணா நேரத்தைப் பார்த்தவன் கடிகாரம் ஆறே முக்காலைக் காட்டவும் துளசியின் எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினான்.

ஆனால் ‘நீங்கள் அழைக்கும் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிதுநேரம் கழித்துத் தொடர்பு கொள்ளவும்’ என்ற அறிவிப்பு வரவே அவனுக்குத் திக்கென்றது.

உடனே சுகன்யாவுக்கு அழைத்தவன் “சுகன்யா! துளசி இன்னும் வீடு திரும்பலை… உன் கூட வந்திருக்காளா?” என்று கேட்க

“இல்லையே கிருஷ்ணா… நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் கிளம்புனோம்… ஃபைவ் தேர்ட்டிக்கு என்னை வீட்டுல ட்ராப் பண்ணிட்டுப் போயிட்டாளே” என்று சொல்லவும் கிருஷ்ணாவுக்குப் பதற்றமானது.

“ஹலோ! கிருஷ்ணா நீ ஏன் இவ்ளோ டென்சனா கேக்கிற? எதும் பிரச்சனையா?” என்று சுகன்யா சந்தேகத்துடன் வினவ கிருஷ்ணா அதை அவசரமாக மறுத்தான்.

“ஏய்! ஜிஞ்சர் பிரெட் மேடம்! அப்பிடி எதுவுமில்லை…. அவ வர லேட் ஆச்சே… அதான் உன் கிட்ட கேக்கலாம்னு கால் பண்ணுனேன்… அவ வியூபாயிண்ட்ல தான் இருப்பா… நான் போய் அழைச்சுட்டு வர்றேன்” என்று சுகன்யாவைச் சமாதானம் செய்துவிட்டுப் போனை வைத்தவனுக்குத் துளசி எங்கே சென்றிருப்பாள் என்று எந்த யூகமும் இல்லை.

சாரதாவிடம் சொல்லிவிட்டு வியூ பாயிண்டை நோக்கிக் காரைச் செலுத்தினான். அங்கே காரை நிறுத்தியவன் “துளசிஈஈஈ” என்று சத்தம் போட்டுக் கத்த அவன் குரல் தான் அவனுக்கு எதிரொலித்ததே தவிர அவள் அங்கே இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அங்கே கிடந்த மரபெஞ்சில் அமர்ந்தவனின் சிந்தனை முழுவதுமே இன்று மதியம் நடந்த உரையாடலில் தான் இருந்தது. துளசியிடம் தான் இன்று கொஞ்சம் அதிகப்படியாகத் தான் நடந்துகொண்டோமோ என்று எண்ணி வருந்த தொடங்கியவன் வீட்டுக்குப் போன் செய்து துளசி வந்துவிட்டாளா என்று விசாரிக்கவே, சாரதா இன்னும் துளசி வரவில்லை என்று சொல்லிவிடவும் அவன் செய்வதறியாது திகைத்தான்.

தான் சொன்ன வார்த்தையில் கோபமுற்றவள் தன்னிடம் சொல்லாமல் எங்கேயோ சென்றுவிட்டாள் என்று எண்ணியவனுக்குத் தன் சிந்தனை செல்லும் திசை சரியில்லை என்று புரிந்தாலும் வேறு வழியில்லையே. இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் தானும் துளசியும் எங்கெல்லாம் சென்றிருக்கிறோம் என்று நினைவுறுத்திக் கொண்டவன் காரை எடுத்துக்கொண்டு அங்கே எல்லாம் சென்று தேடத் தொடங்கினான்.

எங்கு தேடியும் துளசி கிடைக்கவில்லை. அப்படி எங்கே தான் போயிருப்பாள் இவள் என்ற சோகம் சிறிது நேரத்தில் ஆதங்கமாக உருமாறி, பின்னர் கோபமாகப் பிறவியெடுத்தது.

அவன் துளசியைத் தேடிக் கலைத்துப் போய் வீடு திரும்பும் போது மித்ராவின் அழுகுரல் தான் அவனை வரவேற்றது. துளசி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்து போனவள் அழத் தொடங்க, தாத்தா பாட்டி அனைவரின் சமாதானமும் அவளது அழுகைக்கு முன்னே செல்லாக்காசாகிப் போனது.

கிருஷ்ணாவும் எவ்வளவோ முயன்றும் மித்ராவின் அழுகையை அவனால் நிறுத்தமுடியவில்லை. துளசியை மனதில் வறுத்தெடுத்தவன் குடும்பத்தினரையும் மகளையும் ஒருவாறு தேற்றிக் கொண்டிருக்கையில் வெளியே காரின் சத்தம் கேட்டது.

சாரதா அதைக் கேட்டதும் ஓடோடிச் சென்று பார்க்க துளசி காரை பார்க் செய்துவிட்டுச் சாவகாசமாக வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சாரதாவின் கலங்கிய முகம்  அவளைக் கண்டதும் தான் தெளிவுக்கு வந்தது.

“எங்கே போயிட்ட துளசி? நீ வரலைனதும் மித்ரா அழ ஆரம்பிச்சிட்டா… எப்போவும் சீக்கிரமா வர்ற பொண்ணு இன்னும் வரலையேனு நானும் பயந்துட்டேன் தெரியுமா?”

“ஐயோ சாரி அத்தை… இன்னைக்கு ஜெயா ஆன்ட்டி வந்தாங்க… நான் அவங்களோட சேர்ந்து அவங்க வீட்டுக்குப் போயிட்டேன்… கல்யாண விஷயமா ஊட்டியில இருக்கிற ரிலேஷன்ஸ்கு இன்விடேசன் குடுக்க வந்திருக்காங்க.. இன்னும் டூ டேய்ஸ் இங்கே தான் இருப்பாங்க” என்று மாமியாரிடம் கதை பேசியபடி வந்தவள் கிருஷ்ணாவின் கோபப்பார்வையைக் கண்டதும் துணுக்குற்றாள்.

இருந்தாலும் அதை ஒதுக்க முயன்றவாறு மாமனார்களிடம் விஷயத்தைச் சொன்னவள் கிருஷ்ணாவின் முறைப்பைப் பொருட்படுத்தாமல் அவனிடமிருந்து மகளை வாங்கிக் கொண்டாள்.

“என்னடாம்மா அழுதியா நீ? மித்தி பெரிய பொண்ணாச்சே… இப்பிடிலாம் அழலாமா?” என்று மகளைச் சமாதானம் செய்தவளை இடைமறித்தது  கிருஷ்ணாவின் கோபக்குரல்.

“அம்மாவைக் காணும்னா குழந்தை அழத் தான் செய்வா…நீ பொறுப்பான அம்மாவா இருந்தா இப்பிடி அழ விட்டிருப்பியா? வீட்டுக்கு வர லேட் ஆகும்னு ஒரு கால் பண்ணிச் சொன்னா என்ன கேடு உனக்கு?” என்றவனின் பேச்சில் துளசி எரிச்சலடைந்தாலும் பெரியவர்கள் முன்னிலையில் அவனை எதிர்த்துப் பேச மனமின்றி

“சாரி கிரிஷ்… மொபைல் பேட்டரி லோ ஆயிடுச்சு… அதனால தான் சொல்ல முடியலை… ஐ அம் ரியலி சாரி” என்று அனைவரிடமும் பொதுவாக மன்னிப்பு கேட்டவள் மனதுக்குள்,

“ஆமா இவன் பெரிய லார்ட் கவர்னர்… இவர் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டுத் தான் நான் எதையும் பண்ணனும் பாரு… நீ ரூமுக்கு வாடா… அப்போ தெரியும் நான் யாருனு” என்று கறுவியபடி அறைக்குச் செல்ல முயல

சாரதா “துளசி டின்னர் சாப்பிடுட்டு போடாம்மா… அதான் டைம் ஆயிடுச்சே” என்று சொல்ல

துளசி “நான் ஜெயா ஆன்ட்டி வீட்டுல டின்னர் சாப்பிட்டுட்டேன் அத்தை… நீங்க எல்லாரும் சாப்பிடுங்க… மித்தி இன்னைக்கு அம்மு உனக்கு ஊட்டிவிடவா?” என்று கேட்க

கிருஷ்ணா “தேவையில்லை… என் பொண்ணு அவளே சாப்பிட்டுக்குவா… நீ டயர்டா இருப்ப… போய் ரெஸ்ட் எடு” என்றான் வெடுக்கென்று.

பெரியவர்களுக்கு கிருஷ்ணாவின் கோபத்தில் உள்ள நியாயம் புரிந்தாலும் இப்படி அவன் கத்துவது அவர்களுக்குச் சங்கடமாகத் தான் இருந்தது.

ராகவேந்திரன் மனதுக்குள் “ஏதோ துளசியா இருக்கப் போய் இவ்ளோ சைலண்டா இருக்கா… அதை இவன் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு ஓவரா திட்டுறானே… டேய் மகனே! உனக்கு வாயடக்கம் இல்லைடா” என்று புலம்பிக் கொண்டார்.

துளசி கிருஷ்ணா சொன்னதைக் கேட்டு இலகுவாகத் தோளைக் குலுக்கியவள் மனதுக்குள் குமைந்தபடி தங்களின் அறைக்குச் சென்றாள். அறைக்குள் நுழைந்தவள் கசகசவென்று இருந்ததால் குளிக்கச் சென்றாள்.

குளித்துவிட்டுத் திரும்பியவளுக்குக் காட்டன் குர்தாவும் பைஜாமாவும் அணிந்த பின்னர் தான் நிம்மதியாக இருந்தது. அப்படியே தூங்கலாமென்று யோசிக்கும் போது தான் கிருஷ்ணா இன்னும் குறையாதக் கோபத்துடன் அறைக்குள் நுழைந்தான்.

துளசி அதைக் கண்டுகொள்ளாத மாதிரி இருக்கவே, அவனது எரிச்சலும் கோபமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கடி? வீட்டுக்கு வர லேட் ஆகும்னா போன் பண்ணி இன்பார்ம் பண்ண மாட்டியோ? மேடம் அவ்ளோ பிஸியா?” என்று எகத்தாளமும் கோபமும் விரவியக் குரலில் கேட்டவனை ஏறிட்ட துளசி,

“நான் தான் சொன்னேனே என் மொபைல் சார்ஜ் தீர்ந்து போச்சுனு” என்று சொல்லவும்

“இஸிண்ட்? இங்கே நீ வர லேட் ஆனதும் சித்தி ஒரு பக்கம் பயந்துட்டாங்க… மித்ரா இன்னொரு சைட் அழ ஆரம்பிச்சிட்டா… அப்பாவும் சித்தப்பாவும் இன்னொரு பக்கம் டென்சனாக ஆரம்பிச்சிட்டாங்க… நான் வேற இன்னைக்கு மதியம் உன்னைக் கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டேனே, அதுக்காகக் கோவிச்சிக்கிட்டு நீ எங்கேயோ போயிட்டனு நினைச்சு எவ்ளோ கவலைப்பட்டேன் தெரியுமா? நீ அதைல்லாம் புரிஞ்சிக்காம சார்ஜ் தீர்ந்து போச்சுனு எவ்ளோ அசால்ட்டா பதில் சொல்லு” என்று பொங்கிவிட்டான் கிருஷ்ணா.

அவன் சொன்ன அனைத்தையும் தீவிரமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்த துளசி அவன் சொன்ன கடைசி வாக்கியங்களில் அடக்க முடியாமல் நகைக்க ஆரம்பித்தாள்.

கிருஷ்ணாவின் மனது அவளது அழகிய புன்னகையில் மயங்கத் தொடங்கினாலும் “கிரிஷ்! இப்போ விட்டுட்டேனா இவ இதே மாதிரி அடிக்கடி உன்னை டென்சன் பண்ண ஆரம்பிச்சிடுவா.. சோ டெரர் ஃபேஸை சேஞ்ச் பண்ணாதே” என்று அவனது மூளை அவனுக்குக் கட்டளையிட்டது.

மூளையின் கட்டளையை ஏற்று முகத்தை உர்ரென்று வைத்தபடி “இனாஃப்! உன் சிரிப்புச்சத்தம் கேட்டு தூங்கிட்டிருக்கிற மித்ரா பேய் ஏதோ வந்துருச்சுனு நினைச்சு எழுந்துக்கப் போறா” என்று எரிச்சலுடன் உரைக்க, துளசியும் மெதுவாகச் சிரிப்பை நிறுத்தினாள்.

படுக்கையில் அமர்ந்தவள் எழுந்து கிருஷ்ணாவிடம் வந்தாள். சில நிமிடங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கோலவிழிப்பார்வையில் தன்னை மறக்கத் தொடங்கியவனின் முகத்தைப் பற்றிக் கொண்டன துளசியின் கரங்கள்.

“லுக் கிரிஷ்! உன்னை டென்சன் பண்ணனும்னு எனக்கு ஆசை இல்லை… இன்னைக்கு நடந்த இன்சிடெண்ட் எதேச்சையா நடந்தது தான்… இதால நான் உன்னைப் பிரிஞ்சுப் போயிடுவேனு நீ எப்படி நினைச்ச? நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோ” என்று சொல்லி இடைநிறுத்த, அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கிருஷ்ணாவின் மனம் அடித்துக் கொண்டது.

“நீ என்னை ஹர்ட் பண்ணுனாலோ கோவப்பட்டாலோ உன்னை எப்பிடி ஹேண்டில் பண்ணனும்னு எனக்குத் தெரியும்… இதுக்காகல்லாம் நான் உன்னைப் பிரிஞ்சு போக மாட்டேன் கிரிஷ்… எனக்கு உன் கூட சேர்ந்து அழகான ஒரு வாழ்க்கையை வாழணும்… அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன் கிரிஷ்! எப்பிடி நீ ஆறுவருசமா நான் பண்ணுன தப்பையும் மன்னிச்சு எனக்காகக் காத்திருந்தியோ அதே மாதிரி” என்று ஆழ்ந்த குரலில் சொல்லிவிட்டுத் தன் எதிரே இருந்தவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

கிருஷ்ணாவின் மனம் அவளது காதல் நிறைந்த வார்த்தைகளில் நெகிழ்ந்து சிறிது சிறிதாகத் துளசியின் வசம் செல்லத் தொடங்கியது. அதை உணர்ந்தவள் அவன் கன்னத்திலிருந்து இதழைப் பிரித்துவிட்டு குறும்புடன் அவனை நோக்கி,

“சோ என் ஆருயிர் கணவரே! இனிமே நான் உன்னைப் பிரிஞ்சிடுவேனு யார் சொன்னாலும் நீ சொல்லக் கூடாது… பிகாஸ் என்னைக் காதலிச்சக் குத்தத்துக்காக என் கோர்ட்ல உனக்கு ஆயுள் தண்டனை குடுத்தாச்சு… அதனால உனக்குப் பிடிக்குதோ இல்லையோ, இந்த ஜென்மத்துக்கு நான் உன் கூடவே இருந்து உன்னை டார்ச்சர் பண்ணத் தான் செய்வேன்… அதுக்கு பிரிப்பேர் ஆகிக்கோ.. ரொம்ப கோவப்பட்டு உன் முகமே சிவந்து போயிடுச்சு ஹப்பி… முகம் அலம்பிட்டு வந்து தூங்கு… குட் நைட்” என்று முத்துப்பற்கள் மின்ன புன்னகையுடன் இயம்பிவிட்டு படுக்கைக்குச் சென்றவள், சிலை போல நின்ற கணவனைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு உறங்குவதற்கு தயாரானாள்.

கிருஷ்ணாவுக்கு என்ன தான் துளசியின் மீது கோபம் இருந்தாலும் அவளது ஒற்றைப் புன்னகையும், காதல் பார்வையுமே போதும் அவன் கோபமெனும் பாறையைச் சுக்குநூறாக்க.

இப்போது இந்தத் தருணத்தில் அவள் மீதிருந்த கோபம் முற்றிலுமாக வடிய, அவன் மனமும் சிறியளவில் அவளது முந்தையச் செய்கைகளை மறக்க ஆரம்பித்தது. அவனது கரங்கள் தானாகக் கன்னத்தைத் தடவிக்கொள்ள இன்னும் அவள் இதழின் ஸ்பரிசம் கன்னத்தில் ஒட்டியிருப்பது போல மாயை. முகம் கழுவி அதை அழிக்க விரும்பாதவன் உடையை மட்டும் மாற்றிவிட்டுப் படுக்கையில் விழுந்தான்.

துளசியின் வார்த்தைகள் கொடுத்த நிம்மதியில் நீண்டநாள் கழித்து ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றான் கிருஷ்ணா. இந்த உலகில் எதற்குமில்லாத அற்புதச்சக்தி மனிதனின் நாவினால் உச்சரிக்கப்படும் வார்த்தைகளுக்கு உள்ளது. வார்த்தைகள் என்பவை ஒரு மனிதனின் மன எண்ணங்களின் ஒலிவடிவமே. எனவே தான் அவற்றால் இன்னொரு மனிதனின் மனதிலுள்ள குமுறல்களை அடக்கி மனதைச் சாந்தப்படுத்த முடியும்.