👑துளி 27🖊️

ஸ்ராவணி சிறிது நேரம் சிலையாய் சமைந்தவள் கோயில் மணி சத்தத்தில் திடுக்கிட்டவளாய் பார்க்க அவள் முன்னே அவளின் கையை பிடித்தபடி நின்ற அபிமன்யூவை கண்டதும் மனதிற்குள் திகைத்தவளாய் “ஹலோ!” என்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

இது சரி வராது என்று எண்ணியபடி அவனது தோளில் கை வைத்து “என்னாச்சு எம்.எல்.ஏ சார்?” என்றது தான் தாமதம் அவளின் தொடுகையில் தன்னிலை அடைந்தான் அவன். அவள் கண்களால் கையை சுட்டிக்காட்ட சட்டென்று அவளின் கையை விடுவித்தான்.

ஸ்ராவணி அவனை குழப்பமாக பார்த்துவிட்டு நகர முயல அபிமன்யூ “வனி ஒரு நிமிசம்” என்று மூன்றாவது முறையாக அழைக்க இம்முறை இடுப்பில் கை வைத்து புருவம் உயர்த்தி அவனை பார்த்தாள் ஸ்ராவணி.

“இப்போ என்ன?”

அபிமன்யூ சட்டையில் மாட்டியிருந்த கூலர்ஸை எடுத்து கண்ணில் மாட்டிக் கொண்டபடி “இந்த சாரில பாக்கிறதுக்கு நீங்க அழகா அம்சமா ஒரு பொண்ணு மாதிரி இருக்கிங்க ரிப்போர்ட்டர் மேடம்” என்றான் ரசனையுடன்.

ஸ்ராவணி “அப்போ இத்தனை நாள் நான் எப்பிடி இருந்தேன்?” என்று கேட்டுவிட்டு குறுகுறுவென்று பார்க்க

அவன் அலட்சியமாக “இத்தனை நாளா உன்னை நான் பொண்ணுங்க லிஸ்ட்லயே சேர்க்கலையே! எப்போ பார்த்தாலும் உர்ருனு முகத்தை வச்சிக்கிட்டு எங்கே என்ன நியூஸ் கெடைக்கும்னு சுத்தி வர்ற ஒரு ரிப்போர்ட்டர் அவ்வளவு தான்” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பிக்க ஸ்ராவணி கடுப்புடன் “போடா! நீயெல்லாம்….” என்று ஏதோ சொல்ல வர இடை மறித்தான் அவன்.

“ரிப்போர்ட்டர் மேடம் என்ன தான் கோவம் இருந்தாலும் இன்னைக்கு என்னை சபிச்சிடாத. டு டே இஸ் மை பர்த் டே” என்று திரும்பி நின்று ஸ்ராவணியை பார்த்து சொல்ல அவள் கேலியாக “ஓ! அதான் இந்த நல்லப்பிள்ளை கெட்அப்பா? நான் கூட நீ திருந்திட்டியோன்னு நெனைச்சு அப்பிடியே ஷாக் ஆயிட்டேன் போ” என்று சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவனின் தோளில் திடீரென்று ஒரு கை பட திடுக்கிட்டு பார்க்க அஸ்வின் தான் அபிமன்யூவை கேலியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா அபி கடைசியில ரிப்போர்ட்டர் கிட்ட மாட்டிகிட்ட போல?”

“அப்பிடிலாம் இல்லடா. அவளோட திங்ஸை அவளுக்கு திருப்பிக் குடுத்தேன். அவ்ளோ தான்”

“ஏன் அதை கையில குடுத்தா ஆகாதா? கண்டிப்பா விரல்ல போட்டுவிட்டே ஆகணுமா? நான் நம்பிட்டேன்டா நல்லவனே”

“அச்சு! நீ ரொம்ப யோசிக்கிற. அந்த அளவுக்கு எதுவும் இல்ல”

“ஓ! எதுவும் இல்லாம தான் சார் அந்த விக்ரமை நேத்து வீட்டுக்குப் போய் வார்ன் பண்ணிட்டுத் திட்டினிங்களோ? நான் எல்லா விஷயத்தையும் பார்த்துட்டுத் தான் இருக்கேன்டா”

விடாது தன்னை கேலி செய்தவனை என்ன சொல்லி சமாளிக்க என்று புரியாமல் விழித்த அபிமன்யூ ஒரு பெருமூச்சுடன் “லிசன் அச்சு! என்னோட மைண்ட் ஆல்ரெடி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு. இதுல நீ வேற கூட கொஞ்சம் கன்ஃபியூஸ் பண்ணி விடாதடா. நான் ஒத்துக்கிறேன் ரிப்போர்ட்டரை நான் பாக்கிற விதம் மாறியிருக்கு தான். பட் அதுக்கு வேற எதுவும் அர்த்தம் இல்லடா. ஷீ இஸ் ரியலி கார்ஜியஸ் இன் சாரி! அழகா இருந்தா ரசிக்கிறது ஒன்னும் தப்பில்லயே. அவ்ளோ தான். இதை தேவை இல்லாம எதோட சேர்த்து வச்சும் குழப்பிக்காத” என்று சொல்லிவிட்டு அவனுடன் சேர்ந்து சுபத்ரா இருக்கும் இடத்துக்கு செல்ல அங்கே ஸ்ராவணி மற்றும் மேனகா நான்ஸியுடன் சேர்ந்து சுபத்ராவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

இருவரும் அவர்கள் அருகில் செல்ல ஜனனி ஸ்ராவணியிடம் “வனிக்கா! வாங்க நம்ம ரெண்டு பேரும் பிரசாதம் வாங்கிட்டு வருவோம்”என்று கையோடு  அழைத்துச் சென்றுவிட நான்ஸியும், மேனகாவும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அதை ஏற்று நன்றி சொன்னவன் சுபத்ராவிடம் “மா! எனக்கு இன்னைக்கு தொகுதியில சின்னதா ஒரு வேலை இருக்கு. நானும் அச்சுவும் போயிட்டு வந்துடுறோம். நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க” என்று சொல்ல சுபத்ரா மதியம் சீக்கிரம் வருமாறு சொல்லிவிட்டு  அவன் செல்ல சம்மதித்தார்.

அதன் பின் அவன் நீங்கிய சில நிமிடங்களில் ஸ்ராவணியும், ஜனனியும் பிரசாதத்துடன் வர அனைவரும் அமர்ந்து பிரசாதத்தை உண்டுமுடித்துவிட்டு கிளம்பினர். செல்வதற்கு முன் சுபத்ரா மீண்டும் அந்த ஈசனிடம் தன் மகனுக்கு ஒரு நல்ல வழி காட்டுமாறு வேண்டிக்கொள்ள தவறவில்லை.

ஸ்ராவணியும், மேனகாவும் வீட்டுக்கு திரும்பி உடை மாற்றிவிட்டு நான்ஸியிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பினர். அவர்கள் சென்றது உணவு இடைவேளை என்பதால் அலுவலகம் அமைதியாக இருக்க சுலைகாவையும் ரகுவையும் தேடி காஃபடேரியாவுக்கு சென்றனர் இருவரும்.

அதன் ஒரு புறமாக ரகுவும், சுலைகாவும் வர்தனுடன் மதியவுணவை கதம் செய்து கொண்டிருக்க இருவரும் அவர்கள் இருக்கும் மேஜைக்கருகில் நாற்காலிகளை போட்டுஅமர்ந்தனர். சுலைகா இருவரையும் ஏன் லேட் என்பது மாதிரி பார்க்க ரகு “என்ன வனி கோர்ட்டுக்கா போயிட்டு வர்ற? நெக்ஸ்ட் ஹியரிங்குக்கு இன்னும் அஞ்சு மாசம் இருக்கே” என்று கேள்வியுடன் முடித்தான்.

அவர்களுக்கு அடுத்த மேஜையில் தன் தோழிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அனுராதாவை அவர்கள் கவனிக்கவில்லை. அவள் ரகுவின் கோர்ட், ஹியரிங் இந்த வார்த்தைகளை கேட்டதும் சளசளத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய தோழிகளை பார்வையாலே அமைதியாக்கிவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள்.

அதை கவனிக்காமல் ஸ்ராவணி “இல்லடா ரகு. கோர்ட்டுக்கு போகல. நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன். நான்ஸி கபாலீஸ்வரர் கோயில் போகணும்னு சொன்னா” என்று சொல்ல

ரகு கிண்டலாக “வனி உனக்கு நெஜமாவே பெரிய மனசு தான். இந்த உலகத்துலயே புருஷனோட எக்ஸ் லவ்வரை தன்னோட வீட்டுல வச்சு மூனு வேளை சாப்பாடு போட்டு அவளுக்கு ஊர் வேற சுத்திக் காமிக்கிற பொண்ணு நீ மட்டும் தான்” என்று கலாய்த்துவிட்டு ஸ்ராவணியின் கையால் இரண்டு அடிகளையும் வாங்கிக் கொண்டான்.

இதை கேட்ட அனுராதா மனதிற்குள் “வனிக்கு கல்யாணம் ஆயிடுச்சா எப்போ? அந்த விக்ரம் தான் நிச்சயத்தை நிறுத்திட்டானே” என்று கேட்டுக்கொண்டபடி அடுத்து வருவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

ரகுவை அடித்த ஸ்ராவணி “ரகு இன்னொரு தடவை அவனை புருசன்னு சொல்லாதடா. எனக்கு அந்த எம்.எல்.ஏவை சுத்தமா பிடிக்காது” என்று முகம் சுளித்தபடி கூறினாள்.

மற்ற மூவரும் இதை சினிமா பார்ப்பது போல வேடிக்கை பார்க்க ரகு வாங்கிய அடி போதாமல் “என்ன வனி இது? புருசன் பேரை சொல்லலாமா? இதுல்லாம் ரொம்ப பெரிய தப்பும்மா! ஆனா நான் நினைச்சேன் வனி. அந்த மனுசன் இண்டர்வியூ அப்போவே நீ வணக்கம் சொன்னப்போ பதில் சொல்லாம உன்னையே பாத்துட்டு இருந்தப்போவே எனக்கு தோணுச்சு. என்னடா இவரு நம்ம ஃப்ரெண்டை இப்பிடி பப்ளிக்கா சைட் அடிக்கிறாரேனு” என்று சொல்ல வர்தனும் அதை ஆமோதித்தான்.

ஸ்ராவணி மேனகாவை முறைக்க அவள் “ஏய் நிறுத்துங்கடா! நீங்க பேசுனதுக்குலாம் சேர்த்து வச்சு அவ என்னை கழுவி ஊத்துவா. இந்த கல்யாணம் ஏன் நடந்துச்சுனு உங்களுக்கு தெரிஞ்சும் அடிக்கடி அவளை சீண்டிவிட்டு அவ கிட்ட என்னை திட்டு வாங்க வைக்காதிங்கடா. நல்லா இருப்பிங்க!” பரிதாபமாக கை கூப்ப சுலைகாவுடன் சேர்ந்து மற்ற மூவரும் நகைக்க அனுராதா இவை அனைத்தையும் ஒரு வார்த்தை மிச்சம் இல்லாமல் கேட்டுவிட்டாள்.

மனதிற்குள் “அப்போ வனியை கல்யாணம் பண்ணிக்க தான் அவளை பத்தி டீடெய்ல்ஸ் கேட்டாரா அபிமன்யூ? அப்போ எதுக்கு டிவோர்ஸ் பண்ணிக்கப் போறாங்க ரெண்டு பேரும். அபி சார் அவளை எவ்ளோ லவ் பண்ணுனாருனு அவளுக்கு தெரிஞ்சா அவ இந்த டிவோர்ஸ் முடிவை மாத்திப்பா” என்று எண்ணியபடி கை கழுவச் சென்றாள். அவள் ஒரு கணக்கு போட விதியோ வேறு விதமாக கணக்குப் போட்டபடி காத்திருந்தது.

அதற்குள் சுலைகா, ரகு மற்றும் வர்தனும் மதியவுணவை முடித்துவிட அனைவரும் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அனுராதா ஸ்ராவணி வருவதை கண்டதும் மனதிற்குள் “இத்தனை நாள் தப்பு பண்ணிட்டோமோனு வருத்தப்பட்டியே அனு! போய் வனி கிட்ட சொல்லு! அபி அவளை லவ் பண்ணுனதால தான் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினாருனு சொன்னா இந்த டிவோர்ஸை அவ வேண்டானு சொல்லிடுவா” என்று எண்ணியபடியே ஸ்ராவணியை பார்த்து புன்னகைத்தவள் அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லவே ஸ்ராவணி மேனகாவையும் மற்றவர்களையும் அவரவர் கேபினுக்கு செல்ல சொல்லிவிட்டு அனுராதாவுடன் அவளது கேபின் வாயிலுக்கு சென்றாள்.

அனு அவளை பார்த்தபடி தயக்கத்துடன் “வனி! நான் உன் கிட்ட ஒன்னு சொல்லுவேன்! கோவப்படக்கூடாது” என்று பீடிகை போட ஸ்ராவணி சரியென்று தலையசைக்க அவள் பேசத் தொடங்கினாள்.

அபிமன்யூ ஸ்ராவணியை பற்றிய தகவல்களை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டது முதற்கொண்டு அதற்காக அவள் பணம் பெற்றது வரை சொல்லிமுடித்தவள் ஸ்ராவணியின் உணர்ச்சியற்ற பார்வையை சந்தித்தவாறு “ஆனா இது எல்லாமே அவர் உன் மேல வச்சிருந்த லவ்காக பண்ணுனது தான். சோ நீ அவரை தப்பா நெனைக்காத வனி. நீ அபிமன்யூ சாரை டிவோர்ஸ் பண்ணாத” என்று சொன்னவள் அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த பூர்வியை கவனிக்கத் தவறினாள்.

ஸ்ராவணி அபிமன்யூ மீது எழுந்த கோபத்தில் ஏதோ பேச வந்தவள் அந்த கேபினின் இன்னொரு ஓரமாக நின்று கொண்டிருந்த பூர்வியின் திகைத்தப் பார்வையைக் கண்டதும் தாங்கள் இருவரும் பேசியதை அவள் கேட்டுவிட்டாள் என்று புரிந்து கொண்டவள் ” மேம்” என்று சொல்வதற்குள் அவள் “கேபினுக்கு வா வனி” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அனுராதா செய்வதறியாது கையை பிசைய ஸ்ராவணி “சரி நீ டென்சன் ஆகாத. நான் பாத்துக்கிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு பூர்வியின் கேபினுக்கு சென்றாள். சிறிது நேரம் பூர்வி எதுவும் பேசாமல் அமைதி காக்க ஸ்ராவணி மெதுவாக “மேம் ஆக்சுவலி என்ன நடந்துச்சுனா…” என்று தொடங்கி நடந்த விஷயங்களை கோர்வையாக சொல்லிமுடித்தாள்.

“இன்னும் அஞ்சு மாசம் தான் மேம். அப்புறம் எங்களுக்கு டிவோர்ஸ் கிடைச்சிடும்” என்று சொல்லிவிட்டு பூர்வியை பார்க்க அவள் ஆச்சரியத்துடன் “எப்பிடி உன்னால இவ்ளோ ஈஸியா டிவோர்ஸ் கிடைச்சிடும்னு சொல்ல முடியுது வனி? கல்யாணம்கிற வார்த்தை உனக்கு அவ்ளோ ஈஸியா போயிடுச்சா? இது உன்னோட பேரண்ட்ஸுக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பார்த்தியா? ஒரு வீட்டுக்காக கல்யாணமா வனி? என்னால இதைப்  புரிஞ்சிக்கவே முடியல” என்றாள் மனத்தாங்கலுடன்.

ஸ்ராவணி மெல்லிய குரலில் “எனக்கும் புரியுது மேம்! பட் என்னால எதுவும் செய்ய முடியாது. இது ஒன்னும் ஊரறிய நடந்த கல்யாணம் இல்லையே. வெறும் பேப்பர்ல கையெழுத்து போட்டதால வந்த ரிலேசன்ஷிப் தானே! அதே மாதிரி இன்னொரு பேப்பர்ல சைன் போட்டு முடிச்சுக்கப் போறோம். அவ்ளோ தான். நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்க. அந்த டைம்ல நீங்களோ சீஃபோ இங்க இல்ல. இருந்திருந்தா நானோ, மேகியோ இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டோம்” என்று சொல்லிமுடித்தாள்.

பூர்வி அதை கேட்டு தலையாட்டியவள் “நான் வேணும்னா அந்த எம்.எல்.ஏ ஃபேமிலி கிட்ட விச்சுவை பேச சொல்லவா?” என்று கேட்க ஸ்ராவணி ஏற்கெனவே அனுராதா சொன்ன விஷயத்தால் அபிமன்யூவின் மீது கடுப்பில் இருந்தவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு தன்னுடைய கேபினுக்கு சென்றாள்.

தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தவள் நெற்றியைத் தடவிக்கொண்டே “ஏன் கடவுளே இப்பிடி ஒரு இக்கட்டான நெலமையில என்னை மாட்டி விட்டுட்ட?” என்று மனதிற்குள் புலம்பியபடியே கண்ணை மூடிக்கொண்டாள்.

அவள் மனக்கண்ணில் அபிமன்யூவின் முகம் வரவும் விழித்தவள் அவன் எண்ணுக்கு அழைத்து அவனை மாலையில் சந்திக்க விரும்புவதாகக் கூற அவனும் சரியென்று சொன்னவன் அவனும், அஸ்வினும் புதிதாக ஆரம்பித்த அவர்களின் அலுவலகத்துக்கு வரச் சொன்னான். அவள் சரியென்று சொல்லி போனை வைத்துவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள்.