🌞 மதி 9 🌛

பெரும்பாலான டைட்டானியம் டை ஆக்சைட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் துணைப்பொருளும் கழிவுமான ஃபெரஸ் சல்பேட் மற்றும் சல்பியூரிக் அமிலத்தை மறுசுழற்சி செய்யவோ முறைப்படி அகற்றவோ செய்யாமல் நீர்நிலைகளில் அல்லது கடலில் கலக்கவிடுகின்றன.

ஆர்டர் செய்த ஐஸ் க்ரீம் வந்துவிட்டதும் அர்ஜூனின் விழிகளில் அதைச் சுவைக்கும் ஆர்வம் சுடர்விட அவன் ஐஸ் க்ரீம் கிண்ணத்தை எடுக்க அவசரப்பட அஸ்மிதாவும் அதே அவசரத்துடன் அவனை முந்திக்கொண்டு அதை எடுத்துக் கொண்டாள்.

இஷானி அதைக் கண்டுகொள்ளாமல் போனில் கவனத்தைச் செலுத்த ஆரம்பிக்க ருத்ரா அவள் புறம் ஒரு கிண்ணத்தை நகர்த்தி விட்டு “ஹலோ மேடம்! ஐஸ் க்ரீம் வந்ததே தெரியாத மாதிரி நடிச்சது போதும்.. சாப்பிடுங்க” என்று அவள் தோளில் தட்டவும்

“எனக்கு ஒன்னும் தேவையில்லை… வேணும்னா நீங்களே ரெண்டு கப்பையும் காலி பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு உதட்டைச் சுழித்துப் பழிப்பு காட்டிவிட்டு மீண்டும் போனில் கண் பதிக்க ஆரம்பிக்கவே ருத்ரா அவளது போனைப் பிடுங்கி கொண்டவன்

“சஞ்சுக்கா பண்ணுன ரெண்டாவது மிஸ்டேக் சாப்பிடுறப்போ போனைப் பார்க்கக் கூடாதுனு சொல்லி வளர்க்காதது தான்” என்று சொல்லவும் இஷானிக்கு விட்டால் தான் மெதுவாக நடந்தால் கூட அதற்கும் சஞ்சீவினியைக் குறை சொல்வான் போல என்று பொருமியபடி ஐஸ் க்ரீம் கிண்ணத்தை எடுத்துக் கொண்டாள்.

அர்ஜூன் சாப்பிடும் போது சட்டையில் சிந்திவிட இஷானி தனது கைக்குட்டையால் அதைச் சுத்தம் செய்தவள்

“ட்வெல்வ் இயர்ஸ் ஓல்ட் பாய்க்குச் சிந்தாம சாப்பிடத் தெரியலை… டூ பேட்… உங்கம்மா சிந்தாமச் சாப்பிடச் சொல்லித் தரலையாடா?” என்று கேட்க

“அம்மா எனக்கு எதுவுமே சொல்லித் தரலைக்கா… எல்லாமே மாமா சொல்லிக் குடுத்தது தான்” என்றான் அர்ஜூன்.

“ஓ! இந்தப் பெரிய மனுசன் தானா?” என்று ருத்ராவைக் ஏளனம் தெறிக்கும் விழிகளுடன் ஏறிட்டுவிட்டு மீண்டும் ஐஸ் க்ரீமைச் சுவைக்க ஆரம்பித்தாள்.

அஸ்மிதா இதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இஷானி இவனிடம் இவ்வளவு பேசியதே ஆச்சரியம் என அவளுக்குத் தோணாமல் இல்லை.

அதேநேரம் ருத்ராவும் அவள் சொன்ன எதையும் தப்பாக எடுத்துக் கொள்ளாமல் நமட்டுச்சிரிப்புடன் நிறுத்திக் கொண்டது இரண்டாவது ஆச்சரியம். சிறுவயதில் அவன் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் முகம் கொடுத்துக் கூடப் பேசி அவள் பார்த்ததில்லை. மந்தாகினியை அவன் மனுசியாகக் கூடக் கருதாது அலட்சியம் செய்வதையும் ஆண்டுப் பொதுக்கூட்டங்களின் போது அவ்வபோது கவனித்திருக்கிறாள் தான்.

அப்படிப்பட்டவன் இஷானி இவ்வளவு பேசியும் பொறுமை காக்கிறான் என்றால் அதற்கு ஒரே காரணம் சஞ்சீவினியின் மீது அவன் வைத்திருந்த அன்பு மட்டுமே என அறியாதவள் இல்லை அஸ்மிதா. அவனது நியாயப்புத்தி சொந்தச்சகோதரியின் தவறுகளால் ஒன்றுவிட்டச் சகோதரியின் வாழ்க்கை நாசமானதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

அவன் சத்தியமாக நல்லவன் தான். அதே போலத் தான் அர்ஜூனும். அன்பானச் சிறுவன், அன்புக்கு ஏங்குபவனும் கூட. ஆனால் இவர்கள் இருவரையும் கண்டால் அஸ்மிதாவுக்கும் இஷானிக்கும் மந்தாகினியின் நினைவு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அதன் காரணமாகவே அர்ஜூனிடம் தங்களை அக்கா என அழைக்கத் தேவையில்லை கூறுவர் இருவரும்.

எந்தப் பெண்ணுக்கும் தந்தையின் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் மீது இயல்பான மறைக்கப்பட்டக் கோபமோ ஆதங்கமோ இருப்பது வாடிக்கையே. அதையே இரண்டு பெண்களும் மனதில் வைத்திருப்பதால் அவர்களால் அர்ஜூனிடமோ ருத்ராவிடமோ உறவு கொண்டாடத் தோணுவதில்லை.

ஆனால் அர்ஜூனும் சரி, ருத்ராவும் சரி இவர்களைக் காணும் போதெல்லாம் அன்பைப் பொழிய அஸ்மிதா வெடுக்கென்று பேசினாள் என்றால் இஷானி இவ்வளவு நாள் அமைதியாகக் கடந்தாள். ஆனால் கடந்த முறை ருத்ரா அவளைக் கொஞ்சம் அதிகமாகவே சீண்டிவிட்டான் என்பதால் அவளும் அவனிடம் அவளது இயல்பை மீறிச் சற்று அதிகமாகவே பேசிவிட்டாள்.

அஸ்மிதா இவ்வாறு யோசித்தாள் என்றால் ருத்ராவோ சஞ்சீவினியின் குடும்பத்தினரிடம் பழையபடி நல்ல உறவை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த இஷானி இப்போது பூனைக்குட்டி போலச் சீறுவது கூட அவனுக்குச் சுவாரசியத்தைத் தர இனி அடிக்கடி சீண்டிவிட வேண்டியது தான் என்று தனக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டான் அவன்.

ஒரு வழியாக ஐஸ் க்ரீம் கிண்ணங்கள் காலியானதும் ருத்ரா வாலட்டை எடுக்க அவனை முந்திக்கொண்டு இஷானி தனது கார்டை எடுத்து நீட்டினாள்.

“எங்களுக்கு நானே பே பண்ணிப்பேன்… நீங்க உங்களுக்கும் உங்க மருமகனுக்கும் பே பண்ணிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அஸ்மிதாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் அவள்.

அர்ஜூன் “இஷிக்கா” என்று அழைக்க அவர்கள் இருவரும் கண்டுகொள்ளாமல் அகலவே ருத்ரா பெருமூச்சுடன் ஐஸ் க்ரீமுக்குப் பணம் செலுத்திவிட்டு அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் சேகர் வில்லாவுக்குப் போய் சேர்ந்த போது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மந்தாகினி வீட்டிலிருந்தார். மகனும் தம்பியும் எங்கேயோ வெளியே சென்றிருப்பதாக வீட்டின் பணியாள் தெரிவிக்க வழக்கம் போல அவர்கள் வெளியே சென்றிருப்பார்கள் என்று எண்ணியவர் நிறுமத்திலிருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அறிக்கைகளை மடிக்கணினியில் பார்வையிடத் தொடங்கினார்.

வெளியே காரின் சத்தம் கேட்க இருவரும் வந்துவிட்டார்கள் போல என்று வாயிலைப் பார்த்தார் மந்தாகினி.

அர்ஜூன் “மாமா அடுத்த வாரமும் நம்ம அங்கே போவோம்.. அஸ்மிக்காவும் இஷிக்காவும் அங்கே வருவாங்கல்ல” என்று சொன்னபடி உள்ளே வர அவன் சொன்ன வார்த்தைகளில் மந்தாகினி சற்று அதிர்ந்தார்.

ருத்ரா அதைக் கவனித்தவன் வேண்டுமென்றே “சரிடா அஜ்ஜூ! நீ சொல்லி மாமா கேக்காம இருந்திருக்கேனா? கண்டிப்பா போவோம்… நாளைக்கு நான் அவங்க ஆபிஸுக்கு உன்னைக் கூட்டிட்டு போறேன்” என்று மந்தாகினியைச் சீண்டிவிட்டபடி சோபாவில் மருமகனுடன் அமர்ந்தான்.

மந்தாகினி அவனை முறைத்தவர் “அங்கே நீ போறதே எனக்குப் பிடிக்கலை.. இதுல அஜ்ஜூவை வேற கூட்டிட்டுப் போறியா? நீ நான் சொல்லுறதைக் கேக்கவே மாட்டியா?” என்று சத்தம் போட ருத்ரா அர்ஜூனை அவனது அறைக்குச் செல்லுமாறு கண் காட்டவும் அவன் மாடிப்படியில் ஓடி மறைந்த பின்னர் தமக்கையிடம் திரும்பினான்.

“உனக்கு என்ன பிரச்சனைக்கா இப்போ? எனக்கு சஞ்சுக்காவை எவ்ளோ பிடிக்கும்னு உனக்கே நல்லா தெரியும்… அப்பிடி இருந்தும் நீ இந்த மாதிரி கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?”

“அப்பிடி அடிக்கடி அங்கே போறதுக்கு என்ன அவசியம் ருத்ரா? எதாவது ஒரு காரணம் சொல்லு பார்ப்போம்”

“ஒரு காரணமா? ரெண்டு காரணம் இருக்கு? நம்பர் ஒன் என்னோட அஸ்மிக்குட்டி அங்கே தான் இருக்கா… நம்பர் டூ இஷி பேபியும் இப்போ அடிக்கடி துளி ஆபிசுக்கு வர்றானு கேள்விப்பட்டேன்… இப்போ சொல்லு நான் போறது தப்பா?”

அவனிடமிருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்காத மந்தாகினி வாயடைத்துப் போய்விட ருத்ரா கேலியாக அவளைப் பார்த்தவன் மருமகனைத் தேடி அவனது அறையை நோக்கி நடைபோட்டான்.

மந்தாகினிக்கு உடன் பிறந்தவனின் இந்த விளக்கம் எரிச்சலுடன் வருத்தத்தையும் சேர்த்து கொடுத்தது. அதோடு சஞ்சீவினியின் இரு மகள்களின் அழகு வேறு அவருக்கு இனம்புரியாத பயத்தை உண்டு பண்ணியது. இருவரில் ஒருத்தியை அவனுக்குப் பிடித்துவிடுமோ என்ற யோசனை அவருக்கு பல நாட்களுக்கு முன்னரே உதித்துவிட்டது.

அதிலும் அஸ்மிதா என்றால் அவனுக்கு இளம்பிராயத்தில் இருந்தே உயிர்.  ஒன்பது வயது சிறுமியாக இருந்தபோது மூச்சுக்கு முன்னூறு முறை மாமா என்று அழைத்தபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சுற்றியவளுக்கு ஒன்றென்றால் ருத்ரா என்றுமே பொறுத்துக்கொள்ள மாட்டான்.

அதோடு அந்த இரு பெண்களில் ஒருத்தி கூட தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதில் இவன் வேறு ஏன் அங்கே சம்மனின்றி ஆஜராக வேண்டும் என்று யோசித்தபடி மடிக்கணியை தொப்பென்று சோபாவில் வைத்தவருக்கு ருத்ரா ஏன் அங்கே செல்கிறான் என்பது இப்போது வரை தெரியவில்லை.

அவன் தனக்கென ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் குறிப்பிட்ட அளவு இலாபம் வந்த பின்னர் அவன் செய்த முதல் காரியமே சஞ்சீவினியின் நிறுவனத்துக்கு டொனேசன் கொடுத்தது தான். சஞ்சீவினி எவ்வளவோ மறுத்தும் ஆண்டுதோறும் இதை வழக்கமாக்கியவன் அதற்காக டொனேசன் கொடுத்தவர் என்ற முறையில் அந்நிறுவனத்துக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம்.

அப்படி தான் நாளையும் செல்வதாக இருந்தான். ஆனால் தான் அங்கே செல்வதற்கான காரணத்தை இன்று வரை சந்திரசேகருக்கும் மந்தாகினிக்கும் அவன் தெரிவிக்கவில்லை. விநாயகமூர்த்தி தோண்டித் துருவினாலும் “நான் என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன அண்ணா? என்னை தேவையில்லாம கேள்வி கேட்டுட்டே இருந்தா நான் இந்த வீட்டை விட்டு வேற இடத்துக்கு ஷிப்ட் ஆயிடுவேன்” என்று அசாதாரணமாக மிரட்டிவிட்டுச் செல்வான்.

மந்தாகினி இவனை இப்படியே விட்டால் சரி படாது என்று யோசித்தவர் அன்று இரவு சந்திரசேகர் வந்ததும் அவரிடம் விவரத்தைக் கூறிவிட்டு “ருத்ராவுக்கும் இருபத்தியெட்டு ஆகப்போகுது சேகர்… அவனா கல்யாணம் பண்ணிவைங்கனு கேக்க மாட்டான்… நம்ம தான் அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா, நம்ம ஸ்டேட்டசுக்குத் தகுந்தபடி பார்க்கணும்” என்று கூற

அவரோ “உன் தம்பிக்குப் பொண்ணு பார்க்கிறதுல பிரச்சனை ஒன்னும் இல்லை. ஆனா நீயும் நானும் பார்க்கிற பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கணுமே… அதுவுமில்லாம அவன் இந்தக் காலத்துப் பையன்.. அவன் யாரையும் மனசுல நினைச்சிருக்கானானு முதல்ல தெளிவா கேளு… அப்புறமா பொண்ணு பார்க்கலாமா வேண்டாமானு யோசிக்கலாம்” என்று முடித்தவரிடம் அவரால் சொல்லவா முடியும் அவரது முன்னாள் மனைவியின் மகள்களின் மீது அவன் பார்வை விழுந்துவிடக் கூடாதென்று தான் நான் இப்படி அவசரப்படுகிறேன் என்று.

சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது அவஸ்தையுடன் அன்றைய நாள் கடந்து போனது மந்தாகினிக்கு. மறுநாள் ருத்ரா சாம்பல்வண்ண ஹென்லி டபிள் லேயர் டிசர்ட்டும், கறுப்பு ஜீன்ஸுமாய் தயாராகி அர்ஜூனுடன் கிளம்பவும் அவருக்கு நேற்றைய எரிச்சல் திரும்பிவிட்டது. ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? எனவே தனக்குள் குமைந்தபடி கணவருடன் நிறுமத்துக்குக் கிளம்பினார் மந்தாகினி.

ருத்ரா அர்ஜூனுடன் துளி நிறுவனத்தில் வந்து இறங்கியவன் அலுவலக அறைக்குச் செல்ல அங்கே அஸ்மிதா தாம் தூம் என்று குதித்துக் கொண்டிருந்தாள்.

“உன்னை நான் என்ன சொன்னேன்? இந்தத் திசைப்பக்கமே நீ திரும்பிப் பார்க்கக்கூடாதுனு சொன்னேனா இல்லையா? எவ்ளோ தைரியம் இருந்தா நீ மறுபடியும் வந்திருப்ப? ஒழுங்கா நான் ஒன்னுல இருந்து பத்து எண்ணுறதுக்குள்ள இங்கேயிருந்து ஓடிரு… இல்லைனா பின்விளைவுக்கு நான் பொறுப்பில்ல”

மூச்சுவிடாமல் கோபத்துடன் இறைந்தவளின் குரலை அடுத்து ஒலித்தது ஒரு சாந்தமான ஆண்மகனின் குரல்.

“மேடம் நான் இங்கே ஜஸ்ட் டிராயிங் சொல்லிக் குடுக்கத் தான் வந்திருக்கேன்… நீங்க ஏன் என்னைத் தப்பா நினைக்கிறிங்க?”

ருத்ராவுக்கு ஆச்சரியம். அவன் அறிந்தவரை அஸ்மிதாவுக்கு முணுக்முணுக்கென்று கோபம் வருவது அவளது இயல்பு.

“என் கோவம் என்னோட மூக்கு மேலேயே குடியிருக்குது மாமா” என்று சொல்லி மூக்கைச் சுருக்கிக் காட்டுபவளின் பிள்ளைப்பருவ நினைவுகள் அனைத்துமே அவனுக்கு மனப்பாடம். ஆனால் அவள் தேவையின்றி கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பெண் இல்லை. அவளுக்குத் தவறென்று பட்டால் எப்படி கோபப்படுவாளோ அதே போல் தான் அவள் செய்த தவறுக்கும் தயங்காது மன்னிப்பு கேட்பாள்.

அப்படிப்பட்டவளா ஒரு அப்பாவியை மிரட்டிக் கொண்டிருக்கிறாள் என்று நம்ப முடியாமல் அர்ஜூனுடன் சேர்ந்து அலுவலக அறைக்குள் நுழைந்தவனின் புருவங்கள் அங்கே நின்றவனைக் கண்டதும் முடிச்சிட்டுக்கொண்டன.

அதே நேரம் அஸ்மிதாவிடம் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்த ஜெய் அறைவாயிலில் யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பியவன் அங்கே ஒரு நெடியவனும் சிறுவனும் சேர்ந்து நிற்கவும் அவர்களைப் பார்க்க அஸ்மிதாவும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் ருத்ராவைக் கண்டதும் குறைய

“மாமா! நீங்க இங்கே என்ன பண்ணுறிங்க?” என்று கேள்வியுடன் அவனிடம் வர ஜெய்யும் அவளைத் தொடர்ந்தான்.

ருத்ரா புன்னகையுடன் “எனக்கு டைம் பாஸ் ஆகலை… அதான் என் அக்கா மகள்களை ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்… ஆமா இஷி எங்கே?” என்று கேட்க

அஸ்மிதா அவளது சுடிதாரின் துப்பட்டாவை உதறிக் காட்டியவள் “இதுல தான் முடிஞ்சு வச்சிருந்தேன் மாமா… எப்பிடியோ ஓடிப்போயிட்டாளே” என்று பொய்யாய் அங்கலாய்க்க ருத்ரா, அர்ஜூனுடன் ஜெய்யும் சிரிக்க ஆரம்பிக்க அஸ்மிதாவின் கவனம் மீண்டும் ஜெய்யின் புறம் திரும்பியது.

“இப்போ நீ எதுக்கு சிரிக்கிற? உன்னை வெளியே போனு சொன்னேன்” என்று சொன்னவளிடம்

“மேடம் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் மீ… நான் வேற எந்த நோக்கத்தோடவும் இங்க வரலை… இங்க இருக்கிற குழந்தைங்களுக்கு டிராயிங் கத்துக் குடுக்க மாஸ்டர் வேணும்னு கேட்டிருந்தாங்க… வீக்கெண்ட்ல மட்டும் தான் கிளாஸ்னு சொன்னாங்க… அதான் நான் வந்தேன்” என்று பொறுமையாய் விளக்கினான் ஜெய்.

ஆனால் அஸ்மிதா அதைத் துளி கூட நம்பவில்லை. அவள் சந்தேகக்கண்ணுடன் ஜெய்யை அளவிட அவனோ இவளை எப்படி நம்ப வைப்பது என்று புரியாது விழித்தபடி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடி யோசிக்க ஆரம்பித்தான். இவர்கள் இருவரையும் பார்த்த ருத்ராவுக்கோ ஜெய்யை இதற்கு முன்னர் எங்கேயோ சந்தித்த நினைவு. நெற்றியைப் பெருவிரலால் கீறியபடி யோசித்தவனுக்கு நினைவு வந்துவிட்டது. 

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛