🌞 மதி 61🌛

மத்திய அரசு மட்டும் தான் 1998 வரை மோனசைட் தாதுவை கையாண்டு வந்தது. அதன் பின்னர் சுண்ணாம்பு, கார்னெட் போன்ற தாதுப்பொருட்களை கையாள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மோனசைட்டுக்கு மட்டும் என்பதை அணுத்தாது இயக்குனரகம் தெளிவுபடுத்தியுள்ளது. எந்த தனியார் நிறுவனத்துக்கும் மோனசைட் தாதுவை எடுக்கவோ, ஏற்றுமதி செய்யவோ அனுமதியோ, தடையில்லா சான்றோ கொடுக்கப்படவில்லை. இதைத் தாண்டி சில தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி குறித்து அணுத்தாத் இயக்குனரகத்துக்குத் தெரியாது என்கிறார் அணுசக்தி துறை இயக்குனர் தினகரன்.

வினாயகமூர்த்தி சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தகவல் தொழில் வட்டாரங்களிலும் மீடியாவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்க இம்முறை அவர் கொடுத்த அதிர்ச்சியைத் தாங்க இயலாத சந்திரசேகர் அவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பதற்கு எம்முயற்சியும் செய்யவில்லை. சகோதரனின் சுயரூபம் தெரிந்த பின்னர் மந்தாகினியும் அவரிடம் வினாயகமூர்த்தியைக் குறித்து பேச விரும்பவில்லை.

ருத்ராவிடம் மட்டும் “அண்ணனை சேகர் எவ்ளோ நம்புனாரு தெரியுமா? அந்த நம்பிக்கையில தான் மினரல்ஸ் கம்பெனி பத்தி ஒரு வார்த்தை கேக்க மாட்டாரு… ஏன் அண்ணன் இப்பிடி பண்ணுனாரு ருத்ரா? அவருக்கு அப்பிடி என்ன பணம் சம்பாதிக்கிற வெறி?” என்று புலம்பித் தள்ள ருத்ரா அவரைச் சமாதானம் செய்வதற்குள் ஓய்ந்து போனான்.

அவனுக்குமே முதன்முறை ஜெயதேவ் வாயிலாக தமையனைப் பற்றி கேட்ட போது இப்படித் தானே இருந்தது. அவர் குடும்பத்தில் பற்றற்றவர், வியாபாரத்தில் மட்டும் கண்ணாக இருப்பார் என்று நம்பியிருந்த ருத்ராவுக்கே அவரது சுயரூபத்தை ஜெயதேவ் சொல்லாவிட்டால் தெரிந்திருக்குமோ என்னவோ! முன்பே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்திருந்ததால் அவரது கைது அவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

ஆனால் மந்தாகினியும் சந்திரசேகரும் அவரை முழுமையாக நம்பியதோடு அவர் ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடியவர்கள். எனவே அவர்களால் அவரது நடவடிக்கைகள் கொடுத்த அதிர்ச்சியைச் சமாளிக்க இயலவில்லை. அவர்களை இயல்புக்குக் கொண்டு வர ருத்ராவும் இஷானியும் அர்ஜூனுடன் சேர்ந்து செய்த முயற்சிகள் ஓரளவுக்குப் பயனளிக்க கடந்த ஒரு வாரத்தில் பழைய படி அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர் இருவரும்.

வினாயகமூர்த்தியின் கைது ஆர்.எஸ் குழுமத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கி இருந்தது. ஜெயதேவ் அவனால் முடிந்தமட்டும் பத்திரிக்கையாளர்கள், சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களைச் சமாளிக்க அஸ்மிதா அவனுக்கு அவர்களின் வாடிக்கை நிறுவனங்களைச் சமாளிக்கும் பணியைச் செய்து அவனது பணிச்சுமையைக் குறைக்க உதவினாள்.

இது குறித்து ஜஸ்டிஸ் டுடேவில் வந்த டாக்குமெண்ட்ரியில் பதிலளித்தவன் “இந்த ப்ளாண்ட்ல இவ்ளோ ப்ராப்ளம்ஸ் வந்ததால இது சம்பந்தமா கவர்மெண்ட் என்ன முடிவெடுத்தாலும் ஆர்.எஸ் மினரல்ஸ் அதை மதிக்கும்… என்கொயரி பண்ண வர்ற ஆபிசர்ஸ்கு எங்க கம்பெனி தரப்புல எல்லாவித சப்போர்ட்டும் பண்ணுவோம்” என்று சொல்லிவிட்டான்.

சொன்னபடி ஆழியூர் யூனிட்டில் உள்ள அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவன் தன் தரப்பில் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ வசம் ஒப்படைத்துவிட்டான். எல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்னர் மானசாதேவியும் ரிஷியும் சேகரித்தவை. பிஜூவின் மூலம் வினாயகமூர்த்தியின் கைக்குச் சென்ற ஆதாரங்கள் தவிர்த்து மிச்சமிருந்தது அவை மட்டுமே.

அனைவரின் சந்தேகமும் சந்திரசேகருக்கும் மந்தாகினிக்கும் கூட இதில் பங்கு இருக்கும் என்பது தான். ஆனால் உண்மை நிலவரத்தை அறிந்திருந்த ஜெயதேவ் பிரச்சனையின் மூலத்தை அவனால் இயன்றவரைக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கிவிட்டான். ஆனால் அஸ்மிதாவிடம்

“மிஸ்டர் சந்திரசேகர் இவ்ளோ பெரிய முட்டாளா இருப்பாருனு நான் நினைக்கல அஸ்மி… ஆப்டர் ஆல் ஒரு ஜி.எம்மை நம்பி கோடிக்கணக்கான பணம் புழங்குற யூனிட்டை, அதுவும் ரிஸ்கான யூனிட்டை எப்பிடி ஒப்படைச்சாரு? அட்லீஸ்ட் அங்க என்னென்ன வேலை நடக்குதுனு கூடவா கொஞ்சம் கவனிச்சிருக்கக் கூடாது?” என்று பொரிந்து தள்ளிவிட்டான்.

சந்திரசேகர் என்ன தான் இயல்புக்குத் திரும்பினாலும் அவரது மன உளைச்சல் இன்னும் தீரவில்லை. ஒரு நாள் விஸ்வநாதனை சந்திக்க வி.என் குழுமத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்றவர் நண்பரிடம் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிட்டார்.

“இப்பிடிப்பட்ட ஒரு ஏமாத்துக்காரனை நம்பி உன்னையும் மாமாவையும் நான் ஏமாத்திட்டேனே விஸ்வா” என்று தழுதழுத்தக் குரலில் உரைத்தபடி கண் கலங்கியவரை அணைத்து ஆறுதல் கூறினார் விஸ்வநாதன்.

அவர் என்றுமே சந்திரசேகரை வெறுத்தது இல்லை. இப்போது கூட நண்பனின் கண்ணீரைப் போக்குவதில் கவனமானவர் இனி தங்கள் நட்பு மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையுடன் சந்திரசேகரை ஆறுதல் படுத்தினார்.

மந்தாகினியின் மனதை எப்படி மாற்றுவது என்று ருத்ராவும் இஷானியும் புரியாது விழித்த நேரத்தில் தான் அர்ஜூனின் பிறந்தநாள் வந்தது. கூடவே அவர்களின் இல்லறவாழ்விலும் ஒரு இனியச்செய்தி வந்துவிடவே இதை சாக்காக வைத்து இப்போது கலங்கிப் போயிருப்பவர்களை இயல்பாக்கிவிடலாம் என்று கணவனும் மனைவியும் சேர்ந்து திட்டமிட்டனர்.

சந்திரசேகரிடமும் மந்தாகினியிடமும் அர்ஜூனின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடலாம் என இஷானி வேண்டிக்கொள்ள வீட்டுக்குப் புதிதாக வந்த மருமகளின் ஆசையை மறுக்க இயலாதவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர். கூடவே அவளும் ருத்ராவும் அளித்த நல்லச்செய்தியும் அவர்களின் புண்பட்ட உள்ளத்தை சற்று ஆற்றியது.

அவர்களின் சம்மதம் கிடைத்ததும் ருத்ராவும் இஷானியும் அடுத்துச் சென்றது சஞ்சீவினி பவனத்துக்குத் தான். அங்கே உள்ளவர்களும் வினாயகமூர்த்தியின் செய்கையின் விளைவால் அதிர்ந்து போய் தான் இருந்தனர். அதிலும் அலமேலுவும் ராஜகோபாலனும் தான் மிகவும் வருந்தினர்.

“கற்பகத்தோட வயித்துல இப்பிடி ஒருத்தன் பிறந்தானு என்னால நம்பவே முடியல… அவளும் சரி உங்கப்பாவும் சரி வெகுளியானவங்க… அவங்களால யாருக்கும் கெடுதல் நினைக்கவே முடியாது… ஆனா இந்த வினாயகம் ஏன் இப்பிடி புத்தி கெட்டுப் போனான்னு இப்போ வரைக்கும் புரிஞ்சுக்க முடியல ருத்ரா… என் தங்கச்சி பெத்ததுல ஒன்னு விஷமா இருக்கு, இன்னொன்னு சுயபுத்தி இல்லாம இருக்கு.. நீ ஒருத்தன் தான் அங்க தப்பி பிறந்தவன்டா” என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டார் அலமேலு.

பின்னர் ருத்ராவும் இஷானியும் அர்ஜூனின் பிறந்தநாளை சற்று விமரிசையாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொல்ல இரு பெரியவர்களும் அதற்கு ஒத்துக் கொண்டனர். அச்சமயத்தில் சஞ்சீவினி வீட்டுக்கு வர இருவரும் இது தான் தாங்கள் இனியச்செய்தி சொல்லவேண்டிய தருணம் என்று எண்ணியவர்களாய் மூவரிடமும் ஒரே நேரத்தில் சொல்லிவிட்டனர்.

“இஷியோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் வந்துடுச்சுக்கா! அவளால கன்சீவ் ஆக முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க… நேத்து தான் ரெண்டு பேரும் டாக்டரை கன்செல்ட் பண்ணிட்டு வந்தோம்”

ருத்ரா வெளியிட்ட இச்செய்தியில் சஞ்சீவினி கண் கலங்கியவர் மகளை அணைத்துக் கொண்டு முத்தமாரி பொழிந்தார்.

“நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுச்சு.. இப்போ நீ சொன்ன இந்த சந்தோசமான விசயமும் சீக்கிரம் நடந்துச்சுனா எனக்கு அதை தவிர வேற எதுவும் வேண்டாம் இஷி” என்று சொன்னவரின் மனம் நிறைந்து போனது.

எத்தனை நாட்கள் இவளது வாழ்க்கையை எண்ணி அவர் யோசித்தவண்ணமாய் உலாவி இருப்பார்! அனைத்துக்கும் நாட்டியாலயாவில் உறைந்திருக்கும் முக்கண்ணன் வழி காட்டிவிட்டதாக எண்ணி பூரித்துப் போனார். அலமேலுவும் ராஜகோபாலனும் கூட இச்செய்தியைக் கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த மனபாரம் அகல மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அர்ஜூனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கட்டாயம் தாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் என்று உறுதியளித்து கண்ணம்மாவிடம் இனிப்பு செய்யுமாறு கட்டளையிட்டார் சஞ்சீவினி.

அலமேலுவின் கையால் இனிப்பு சாப்பிட்டுவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய இஷானியும் ருத்ராவும் அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் சென்ற இடம் விஸ்வநாதனின் இல்லம்.

அன்றைக்கு ஞாயிறு என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க இஷானியும் ருத்ராவும் முதலில் அர்ஜூனின்  பிறந்தநாள் விசயத்தை வெளியிட்டவர்கள் பின்னர் மருத்துவ அறிக்கை வந்த இனியச்செய்தியையும் கூற அஸ்மிதா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவள் இஷானியை அணைத்துக் கொண்டாள்.

“அப்போ நான் சீக்கிரமா சித்தி ஆகப்போறேனா இஷி? வாவ்! நினைச்சாலே ஜாலியா இருக்கு… பேபி உன்னை மாதிரி இருந்தா கியூட்டா இருக்கும்… பட் மாமாவை மாதிரி இருந்தா கொஞ்சம் சந்தேகம் தான்” என்று இழுத்தவள் ருத்ராவை வம்பிழுக்க சாந்தினி இது தான் சாக்கென்று தன் மருமகளின் காதிலும் விசயத்தைப் போட்டுவைத்தார்.

“ரெண்டு கல்யாணமும் ஒரே நேரத்துல தான் நடந்துச்சு… நீங்க எப்போ குட் நியூஸ் சொல்லப் போறிங்க?” என்றவர் அஸ்மிதாவைப் பார்க்க அவளோ ஜெயதேவ்வை நோக்கினாள். அவன் நான் என்ன சொல்வது என்ற ரீதியில் தோளைக் குலுக்க அவனருகில் அமர்ந்திருந்த ருத்ரா

“அதுக்குலாம் இப்போதைக்கு வாய்ப்பில்ல சாந்தி ஆன்ட்டி.. ஆபிஸ்ல கூட ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறாங்க… நானே கண் கூடா அதை பார்த்திருக்கேன் விஸ்வா சார்… முதல்ல இவங்க ரெண்டு பேரையும் ஒரே ஆபிஸ்ல இருக்க விடாதிங்க… கூடவே இருந்தா நமக்கு யாரோட அருமையும் தெரியாது” என்று சொல்ல விஸ்வநாதனும் அதை ஏற்றுக்கொண்டார்.

“உண்மைடா! நான் காலையில ஆபிஸ் போயிட்டு ஈவினிங் ஆனதும் எப்போடா வீட்டுக்கு வந்து சாந்தி கூட ரெண்டு வார்த்தை பேசுவோம்னு நினைப்பேன்… கூடவே இருக்கிறதால தான் இவங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுக்கிறாங்க போல”

சங்கரராமன் அதை மறுத்தவராய் “இப்போதைக்கு அஸ்மியும் தேவ்வும் ஒரே இடத்துல இருக்கிறது தான் நல்லது… இன்னும் வினாயகமூர்த்தியோட கேஸ் கோர்ட்டுக்கு வரல.. அவனுக்கு ஜாமின் கிடைச்சுதுனா அவனோட கோவம் முழுக்க தேவ் மேல தான் திரும்பும்… அது அஸ்மிய தான் தாக்கும் ருத்ரா.. இந்த கேஸ் முடியுற வரைக்கும் அவங்க ஒரே ஆபிஸ்ல இருக்கிறது தான் நல்லது” என்று சொல்லிவிட அங்கிருந்த அனைவருக்கும் அப்போது விசயம் புரிந்தது.

ருத்ராவும் அதை ஏற்றுக்கொண்டவன் இஷானியுடன் கிளம்ப எத்தனிக்க சாந்தினி அவர்களைச் சற்று நேரம் பொறுக்குமாறு நிறுத்தியவர் சமையலறைக்குள் புகுந்துகொண்டார். அஸ்மிதா என்றோ பேச்சுவாக்கில் இஷானிக்கு நெய்விளங்கா பிடிக்குமென்று சொன்னதை நினைவில் வைத்து இஷானிக்காக அதைச் செய்து எடுத்துவந்தவர் நெய்விளங்கா அடங்கிய பிளாஸ்டிக் டப்பாவை அவள் கரங்களில் திணித்தார்.

இஷானி அதை ஆவலுடன் நோக்க அஸ்மிதாவோ “ஆக்சுவலி சாந்தி ஆன்ட்டிய சமையல்ல அடிச்சுக்கவே முடியாது… அடிக்கடி வெரைட்டி வெரைட்டியா எதாவது செய்வாங்க… நீ கூட கேட்டல்ல நான் எப்பிடி திடீர்னு வெயிட் போட்டேனு… அதுக்கு முழுமுதற்காரணம் இவங்க தான்” என்று மாமியாரை செல்லமாகக் குற்றம் சாட்ட அங்கே சிரிப்பலை.

ருத்ராவும் இஷானியும் மனம் நிறைந்தவர்களாய் அங்கிருந்து கிளம்பினர். இருவரும் வீட்டுக்குச் சென்று இரு குடும்பத்தினரையும் அழைத்துவிட்டச் செய்தியைப் பகிர்ந்துகொண்டவர்கள் வீணாக சந்திரசேகரும் மந்தாகினியும் எதையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அவர்கள் மகனது பிறந்தநாளைத் திட்டமிடுமாறு சொல்லிவிட்டு தங்கள் அறையை நோக்கி நடை போட்டனர்.

இஷானி ருத்ராவிடம் அர்ஜூனுக்கு நெய்விளங்காவைக் கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட அவன் மட்டுமே அவர்களின் அறையை அடைந்தான். அங்கே காணும் யாவற்றிலும் இஷானியின் பிடித்தங்களே நிறைந்திருந்தன.

சுவரின் வண்ணப்பூச்சிலிருந்து லேப்டாப் வைத்திருக்கும் குட்டி மேஜை வரை அனைத்தும் அவள் விரும்பியதால் அவன் வாங்கியது. இருவரும் விரும்பும் ஒரு விசயம் தங்களுக்கென்று ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே என்பது தான். அதற்கு இருந்த தடையும் அகல மனம் நிர்மலமான நீரோடை போல சளசளத்துக் கொண்டிருந்தது.

இஷானி அர்ஜூனின் அறையிலிருந்து திரும்பியவள் யோசனையுடன் சோபாவில் அமர்ந்திருந்த ருத்ராவைக் கண்டவள் “என்ன சார் பயங்கரமான யோசனையில இருக்கிங்க போல?” என்றவள் அவன் சிகையைக் கலைத்துவிட ருத்ரா அவளது கரத்தைப் பற்றியிழுத்தவன் தனது அணைப்புக்குள் அவளைக் கொண்டு வந்தான்.

“வேற என்ன யோசனை? முப்பொழுதும் உன் கற்பனை தான் என் செல்லப்பொண்டாட்டியே” என்றவன் அவனை வசீகரிக்கும் அவளது மூக்குத்தியின் ஜொலிப்பில் மயங்கித் தான் போனான் அப்போதும்.

“சரிங்க மாமா! கொஞ்சம் என்னை விட்டிங்கனா நான் போய் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வருவேன்” என்றபடி அவனிடமிருந்து விலக முயன்றவளை அலேக்காக தூக்கியவன்

“ஃப்ரெஷ் அப் ஆகணும் அவ்ளோ தானே! நானும் செம டயர்ட்.. ரெண்டு பேரும் சேர்ந்தே ஃப்ரெஷ் அப் ஆவோமா இஷி?” என்று கேட்டபடியே குறும்பாகச் சொன்னபடி குளியலறையை நோக்கி நடைபோட்டான் ருத்ரா. அதன் பின்னர் இஷானியின் அனைத்து ‘வேண்டாம்’களும் அவனது வேண்டுதலின் முன்னே வேண்டாதவை ஆகிவிட நல்லப்பெண்ணாய் கணவனின் பேச்சைக் கேட்டவள் அவனது குறும்புத்தனத்தில் கிளுக்கிச் சிரிக்க இருவரின் சிரிப்புச்சத்தம் தான் அந்த அறையை ஆட்சி செய்தது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛