🌞 மதி 6 🌛

மிகப்பெரிய பாலியல்சந்தையாக கருதப்படும் இடம் இந்தியநேபாள எல்லை. இங்கு விற்கப்படும் பெண்களை மீட்க அனுராதா கொய்ராலா எனும் சமூகசேவகிமைத்தி நேபாள்என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமன்றி குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் போராடி வரும் இவர் 1993ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் பன்னிரண்டாயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் இருந்தும், ஆள்கடத்தலிலிருந்தும் மீட்டுள்ளார்.

சஞ்சீவினிக்கு உண்ணும் உணவு தொண்டையை அடைப்பது போன்ற உணர்வு. மதியவுணவுக்காக வீடு திரும்பியவருக்கு ஹாலில் அமைதியின்றி அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்ததுமே வித்தியாசமாகத் தோணியது. அதுமட்டுமன்றி சஞ்சீவினியின் கார் சத்தம் கேட்டதுமே எட்டிப்பார்க்கும் அலமேலுவும் இன்றைக்கு அறையைக் காவல் காத்தபடி உள்ளே முடங்கியிருந்தது இன்னொரு ஆச்சரியம்.

சரி போகட்டும் என்று இரு மகள்களிடமும் திரும்பியவருக்கு அவர்களின் சுரத்தே இல்லாத முகம் தான் பதிலாய்க் கிடைத்தது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இஷானியிடமிருந்து வார்த்தைகளை வாங்குவது சிரமம் என்பதால் அஸ்மிதாவை கேள்வியாய் நோக்கினார். அவள் இது போன்ற தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டுத் தடுமாறி அவர் பார்த்ததில்லை.

அவர் எதிர்பார்த்தது போலவே அஸ்மிதா வாயைத் திறந்து பேச ஆரம்பித்தாள். தானும் இஷானியும் காய்கறி வாங்கச் சென்ற போது நடந்த நிகழ்வுகளை அன்னையிடம் கூற ஆரம்பித்தாள். முழுவதையும் கேட்ட பிறகு சஞ்சீவினியால் எதுவும் பேச இயலவில்லை.

முகம் கறுக்க உணவுமேஜைக்குச் சென்று அமர்ந்தவருக்கு கண்ணம்மா சாதம் வைக்க ஆரம்பித்தார். மல்லிகைப்பூவாய் முன்னே சரிந்திருந்த அன்னம் கூட விழுங்குகையில் கல்லை விழுங்குவது போல இருந்தது சஞ்சீவினிக்கு. தண்ணீரைக் குடித்துச் சாதத்தை வாயில் அடைத்தவரின் கை அடுத்தக் கவளத்தை வாயில் வைக்கும் போதே அந்தரத்தில் நின்றுவிட்டது. ஏனெனில் வாயில் நிலையைத் தொட்டபடி நின்றிருந்தவன் ருத்ரா.

வழக்கம் போல சாந்தமான அவனது முகத்தில் சங்கடம் கலந்திருக்க நெற்றியில் வியர்வை துளிர்த்திருந்தது. அதைத் துடைத்தபடி உள்ளே வந்தவன் தயக்கத்துடன் “சஞ்சுக்கா அஜ்ஜூ……” என்று ஆரம்பித்தவன் சஞ்சீவினியின் பார்வைவீச்சில் தலை கவிழ்ந்து கொண்டான்.

அந்த வீட்டில் இருந்த அனைவரும் அவனைச் சங்கடத்துடன் பார்வையிட அவனால் தலை நிமிர்ந்து யாரையும் நோக்க இயலவில்லை. அந்நேரம் பார்த்து அலமேலுவின் அறையிலிருந்து வெளியே வந்த இஷானி “மா! ஏன் இன்னும் சாப்பிடாம வெறிச்சுப் பார்த்திட்டிருக்கிங்க?” என்று சாதாரணமாகக் கேட்டபடி உணவுமேஜையின் அருகில் வந்தவள் ஹாலின் நடுநாயகமாக நின்றிருந்த ருத்ராவைக் கண்டதும் சிலையாய்ச் சமைந்தாள்.

இவனா என்ற திகைப்புடன் கண்களை உருட்டியவண்ணம் நின்றவளின் தோற்றம் அந்த இக்கட்டான தருணத்திலும் ருத்ராவை ரசிக்கத் தூண்டியது. ஆனால் அதை மறக்கடிக்கும் விதமாக அஸ்மிதா கடுகடுப்புடன்

“பன்னிரண்டு வயசு பையனுக்கு மொபைல் ரொம்ப அவசியமோ? உங்க வீட்டுல குழந்தைக்குப் பொம்மைக்குப் பதிலா போன் வாங்கிக் குடுத்து தான் பழக்கமா?” என்று கேட்கவும்

“அந்தப் போன் இருந்ததால தான் நீ என்னை கான்டாக்ட் பண்ணி அஜ்ஜூவோட நிலமையைச் சொல்ல முடிஞ்சுது அஸ்மி” என்று அவன் சொன்னது தான் தாமதம் அஸ்மிதாவின் முகத்திலிருந்த கடுகடுப்பு மறைந்து அவள் வாயடைத்துப் போய்விட்டாள். அவளால் என்றுமே அவனிடம் கடுகடுக்க முடியாது என்ற உண்மை சுடவும் அமைதியாகிவிட்டாள் அஸ்மிதா.

சஞ்சீவினி பாதி சாப்பாட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்தவர் “உன்னோட மருமகன் உள்ளே தூங்குறான் ருத்ரா… அவனைக் கூட்டிட்டுக் கிளம்பு” என்று அழுத்தமானக் குரலில் உரைத்துவிட்டு அங்கிருந்து நகர முயல அதற்குள் வாசலில் யாரோ இருவரின் காலடிச்சத்தம் கேட்கவும் ஹாலில் இருந்த அனைவருமே திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்தனர் சந்திரசேகர் மந்தாகினி தம்பதியர்.

இருவரையும் கண்டதும் வீட்டிலிருந்தோரின் முகங்கள் பலவிதமான உணர்வுகளைப் பிரதிபலித்துவிட்டு கடைசியில் வெறுப்பு என்ற உணர்ச்சியை அணிந்து கொண்டன, ருத்ராவின் முகத்தையும் சேர்த்து.

சஞ்சீவினி மட்டும் உணர்ச்சியற்ற முகத்துடன் அவர்களை ஏறிட்டவர் எதுவும் பேசாமல் ருத்ராவிடம் “உன் மருமகனைக் கூட்டிட்டுக் கிளம்புனு சொன்னேன் ருத்ரா… தேவையில்லாதவங்க யாரும் என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறதை நான் விரும்பலை” என்றார் கடினமானக் குரலில்.

ருத்ரா அதைப் புரிந்துகொண்டவன் அர்ஜூன் இருக்கும் அறை தெரியாது விழிக்கவும் இஷானி சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். ருத்ரா அர்ஜூனின் கன்னத்தில் தட்டவும்

“அவன் டேப்லட் போட்டுட்டுத் தூங்கிட்டிருக்கான் சார்… ஏன் எழுப்புறிங்க? அப்பிடியே தூக்கிட்டுப் போங்க” என்று சொல்ல இஷானியைப் புருவம் உயர்த்தி ஆச்சரியப்பார்வை பார்த்தான் அவன்.

இத்தனை வருடங்களாக அஸ்மிதாவின் வெறித்தப்பார்வையை எதிர்கொண்டவன் இஷானியின் மௌனமான புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு தான் இருக்கிறான். அவள் பேசி நோகச் செய்தாள் என்றால் இவள் பேசாமலே வதைப்பாள் போல என எண்ணிக்கொண்டவன்

“ஸ்மாஸ் கரெக்சன்… சார் இல்லை… நான் உனக்கு மாமா…  சோ இனிமே நீ என்னை மாமானு கூப்பிடுறது பெட்டர்… காலேஜ் முடிச்சாச்சு, இன்னும் உறவுமுறைகள் தெரியலையே” என்று கேலி போலக் கட்டளையிட்டவனது தோரணையில் எரிச்சலுற்றாள் இஷானி.

“சாரி சார்! எங்களுக்கு மாமானு யாரும் கிடையாது” என்று அழுத்தமானக் குரலில் உரைக்க அதைக் கேட்டதும் அதிர்ந்தவன் கண்ணை இறுக மூடித் திறந்து தனது அதிர்ச்சியை மட்டுப்படுத்த முயன்றான்.

“அஸ்மி கொஞ்சம் அவசரப்படுவா… நீ நிதானமானவனு நினைச்சேன் இஷி… நீயும் இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுனா என்ன அர்த்தம்?” என்று ஆதங்கத்துடன் பேசினான் அவன்.

“பாருங்க மிஸ்டர் ருத்ரா… உங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… எங்களை ஏன் சார் உங்களோட ரிலேட் பண்ணிப் பேசுறிங்க? எதுக்கு வந்திங்களோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டுக் கிளம்புங்க” என்று நுனிமூக்குச் சிவக்கப் பேசிய இஷானியைக் கண்டு திகைத்துப் போனான் ருத்ரா.

இத்தனை நாட்கள் அமைதியுடன் கடப்பவளின் கோபம் அவனுக்குச் சிறுகுழந்தையின் செல்லக்கோபத்தை நினைவூட்டக் கேலியாக

“நீ என்ன தான் இல்லை இல்லைனு தண்டோரா போட்டு கத்துனாலும் இது தான் உண்மை… சோ இனிமே ருத்ரானு நேம் சொல்லி கூப்பிடாம பிளீஸ் கால் மீ மாமா… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று கட்டளையிட்டவனின் பாவனையில் அவள் தான் வாயடைத்துப் போனாள் இப்போது.

விரைவில் சுதாரித்தவள் “உங்க கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்று முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து அகல, அவள் பின்னே அர்ஜூனைத் தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டபடி வெளியேறினான் ருத்ரா.

இருவரும் ஹாலுக்கு வரும் போது வாயிலில் நின்று கொண்டிருந்த மந்தாகினி மகன் தூக்கத்திலிருப்பதை அறியாதவராய் பதற்றத்துடன் வீட்டிற்குள் வந்தவர் “ஐயோ என் பையனுக்கு என்னாச்சு? நீங்க எல்லாரும் அவனுக்கு எதை குடுத்து இப்பிடி மயக்கி வச்சிருக்கிங்க? அஜ்ஜூ! எந்திரிடா” என்று அவனது முகத்தைத் தட்டிப் பார்க்க, அர்ஜூனோ மாத்திரை கொடுத்த நித்திரையின் பிடியிலிருந்ததால் விழிக்கவில்லை.

மந்தாகினியின் உளறல்களைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் முகம் சுளிக்க ருத்ராவின் பற்கள் நறநறக்கும் சத்தம் அவனருகில் நின்று கொண்டிருந்த இஷானியின் காதில் தெளிவாக விழுந்தது.

ஆனால் மந்தாகினியின் உளறல் வார்த்தை அஸ்மிதாவைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல ஆத்திரத்துடன்

“இங்க பாருங்க மயக்குறது, மயங்க வைக்கிறதுலாம் உங்க வேலை… உங்களை மாதிரி எங்களை நினைக்காதிங்க” என்றாள் வெடுக்கென்று.

இதைக் கேட்டு சஞ்சீவினி பவனத்தார் கலங்கினாலும் சந்திரசேகரும் ருத்ராவும் கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் சொன்னது எதுவுமே பொய் இல்லை என்னும் பட்சத்தில் என்ன சொல்ல இயலும் அவர்கள் இருவராலும்?

அவளது வெளிப்படையான குற்றஞ்சாட்டலில் அதிர்ந்த சஞ்சீவினி “அஸ்மி நீ உள்ளே போ” என்று அதட்ட

அவளோ “முடியாதும்மா… ஏதோ இரக்கப்பட்டு இவங்க மகனை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போய் டிரஸ்ஸிங் பண்ணிட்டு வந்தா இந்தம்மா என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? இதைலாம் கண்டும் காணாம போறதுக்கு நான் ஒன்னும் சஞ்சீவினியோ சந்திரசேகரோ இல்லை” என்று வெறுப்பு உமிழும் கண்களோடு சந்திரசேகரையும் மந்தாகினியையும் பார்க்க

சந்திரசேகர் தயக்கத்துடன் “அஸ்மிமா! கோவப்படாதேடா! மந்தா அர்ஜூனுக்கு என்னவோ ஏதோனு பயந்துட்டா… அதான் டென்சன்ல பேசிட்டாடா” என்று அவளைச் சமாதானம் செய்ய முயல ராஜகோபாலனும் மற்றவர்களும் இதை வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

“ஓ! பொண்டாட்டிக்குச் சப்போர்ட் பண்ணுறிங்களா மிஸ்டர் சந்திரசேகர்? அவங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை அள்ளி வீச இது ஒன்னும் உங்களோட வீடு இல்லை… இது எங்க வீடு… அதை மனசுல வச்சுக்கோங்க… முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க… கண்ணம்மா! இவங்க கிளம்புனதும் ஹாலை டெட்டால் போட்டுக் கழுவி விட்டிருங்க”

அஸ்மிதாவின் கடைசி வார்த்தையில் தொனித்த அருவருப்பில் மந்தாகினிக்கு ஆத்திரம் வரவே

“ஏய்! சின்னப்பொண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப அதிகமா பேசுற? அவரு உன்னோட அப்பா… அவரு இல்லைனா நீ இந்த பூமிக்கே வந்திருக்க மாட்ட… அவரு கிட்ட மரியாதையா பேசக் கத்துக்கோ” என்று ஆவேசமாய் மொழிந்தார்.

அவரது அப்பா என்ற வார்த்தை அஸ்மிதாவுக்குள் பிரளயத்தை உண்டு பண்ணியது. வெறுப்புடன் சந்திரசேகரை உறுத்துவிழித்தவள் இந்த மனிதரால் தானே தானும் தன் குடும்பமும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் படாத அசிங்கத்தையெல்லாம் பட்டோம் என்ற கோபம் அவளுக்கு.   

அதே கோபத்துடன் மந்தாகினியை ஏறிட்டவள் அவள் தானே அதற்கு சூத்திரதாரி என்ற வெறுப்புடன்

“அவரு என்னோட அப்பாங்கிறது பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி தனக்கு ஒரு குடும்பம் இருக்கு, பொண்டாட்டி இருக்காங்கிறதை மறந்து உங்க கூட ரிலேசன்ஷிப் வச்சிக்கிட்டாரே, அப்போ உங்களுக்குத் தெரியலையா?… கேவலமா ஒரு குடும்பத்தை உடைச்சு புறவாசல் வழியா வந்த நீங்கலாம் எனக்கு மரியாதையைப் பத்தி கிளாஸ் எடுக்காதிங்க” என்று சொன்னது தான் தாமதம் அஸ்மிதாவின் கன்னத்தில் பலமாய் இறங்கியது சஞ்சீவினியின் கரம்.

இமைப்பதற்குள் நடந்துவிட்ட அந்நிகழ்வில் அஸ்மிதா கலங்கிப் போய் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் அவளது அன்னையைப் பார்க்க வீட்டிலுள்ள அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.

“தப்பு பண்ணுனது உன்னைப் பெத்தவரு… உனக்குக் கோவம் வந்துச்சுனா அதை நீ அவரு கிட்ட காட்டணுமே தவிர, இவ யாரு உனக்கு? இவ மட்டும் தான் குடும்பத்தை உடைச்சாளா? உங்கப்பாவுக்குப் பொண்டாட்டி குடும்ப நியாபகம் இருந்திருந்தா, சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்திருந்தா இப்பிடி வழி மாறிப் போயிருப்பாரா? தகாத உறவு வச்சுக்கிட்டதுக்கு எப்போவுமே சம்பந்தப்பட்ட பொண்ணையே குற்றவாளி ஆக்கிறது வழக்கமா போயிடுச்சு… அப்போ அந்த ஆண்கள் மட்டும் நல்லவங்களா? மத்தவங்க இப்பிடி பேசுனா கூட நான் பொறுத்துப்பேன்… ஆனா நீ ஒரு பொண்ணு, உனக்குப் பிடிக்காதவளாவே இருந்தாலும் நடத்தையைச் சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தக் கூடாது… அப்பிடி அசிங்கப்படுத்தணும்னா உன் அப்பாவை தான் முதல்ல கேள்வி கேக்கணும் நீ” என்று அஸ்மிதாவை எச்சரித்தவர் சந்திரசேகரின் புறம் திரும்பினார்.

அதற்குள் அர்ஜூனின் உறக்கம் மெல்ல மெல்ல கலைந்தது. ருத்ராவின் தோளில் சாய்ந்தபடி நடப்பவற்றை அவன் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கவும் இஷானிக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்டால் இச்சிறுவனின் மனம் கலங்கிவிடுமே என்ற தவிப்புடன் சந்திரசேகரைப் பார்க்கவும், அவர் ருத்ராவிடம் அர்ஜூனுடன் இங்கிருந்து செல்லும்படி கூற அவனும் கிளம்பினான். இன்று அஸ்மிதா கேட்ட கேள்விகளால் அவனுக்கும் சற்று மனநிம்மதி. தன்னால் கேட்க முடியாதக் கேள்விகளை ஒரு சின்னப்பெண் கேட்டுவிட்டாள் என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினான் அவன்.

மந்தாகினியோ அஸ்மிதாவின் வார்த்தைகளில் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தார். தம்பியோ கணவரோ தனக்காகப் பரிந்து பேசுவர் என்றெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. இருவருமே இவ்விஷயத்தில் மௌனம் காப்பது இன்று நேற்று அல்ல, பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிற வழக்கமான விஷயம் தான். ஆனால் இம்முறை அஸ்மிதாவின் ‘புறவாசல் வழியாக வந்தவள்’ என்ற வார்த்தையில் பூமிக்குள் புதையுண்டது போல அவமானம் அவருக்கு. என்றைக்கும் போல அன்றைக்கும் சஞ்சீவினி தனக்காக நடுநிலையோடு பேசியது ஒன்றே மந்தாகினிக்கு ஆறுதல்.

அதே நேரம் சஞ்சீவினியின் பார்வை தன் புறம் திரும்புவதை உணர்ந்த சந்திரசேகர் அவரது வெறுப்பைத் தாங்கும் சக்தியற்று “அஸ்மி பேசட்டும் சஞ்சு… நான் பண்ணுனது தப்பு தான்… அதை என்னைக்குமே நான் மறுத்துப் பேசமாட்டேன்” என்று நலிந்த குரலில் கூறும்போது ஹாலுக்கு வந்தார் அலமேலு.

அவரது விழியில் தெரிந்த விரக்தியில் சந்திரசேகரும் மந்தாகினியும் தலை குனிய, மந்தாகினி மெதுவாக “பெரியம்மா” என்று அழைக்கவும் பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டார் அலமேலு.

“போதும்மா தாயே! பெரியம்மா, அக்கானு சொல்லி சொல்லியே என்னையும் என் பொண்ணையும் ஏமாத்துனது போதும்… நீ நல்லா இருப்ப, மறுபடி என் கண்ணுல பட்டுடாதே! இல்லைனா என் தங்கச்சிக்குச் செஞ்சு குடுத்த சத்தியத்தை மீறி நானே உன்னைச் சபிச்சிடப் போறேன்” என்று வேதனையுடன் கூற மந்தாகினியின் கன்னத்தில் நீர்க்கோடுகள்.

அதை எல்லாம் பார்த்துக் கலங்க அவர் ஒன்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்ததெற்கெல்லாம் பரிதாபப்படும் அலமேலு இல்லையே. அவர் எல்லாருக்கும் பரிதாபம் பார்த்து கடைசியில் பரிதாபமான நிலையில் நின்றது அவரது மகள் தானே என்ற வேதனை அவருக்கு.

ஒரு சங்கடமான மௌனம் அந்த அறையைச் சூழ இஷானி அலமேலுவின் கரத்தைப் பற்றியவள் “நீங்க கோவப்படாதிங்க பாட்டி.. அதால எதுவும் மாறப்போறதில்லை” என்று மெல்லியதாக உரைத்துவிட்டுச் சந்திரசேகரிடம்

“ப்ளீஸ்! இவங்களைக் கூட்டிட்டுக் கிளம்புறிங்களா?” என்று சொல்லிவிட்டு இறைஞ்சும் பார்வை பார்க்க சந்திரசேகர் அவளிடம் புன்னகைக்க முயன்று தோற்றவர் கலங்கிப் போய் நின்ற மந்தாகினியின் தோளைப் பற்றி அங்கிருந்து வெளியேறினார்.

இருவரும் வெளியேறுவதை வீட்டினர் அனைவரும் ஒரு வித வேதனையுடன் நோக்க, சஞ்சீவினி உணர்வற்ற முகத்தோடு அக்காட்சியை வேடிக்கை பார்த்தவர் “கண்ணம்மா! எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க” என்று கட்டளையிட்டுவிட்டு உணவுமேஜையில் அமர்ந்தார்.

சிலையாய்ச் சமைந்த தந்தை, வேதனையுடன் நிற்கும் தாயார், கன்றிப் போன கன்னத்துடன் இன்னும் சினம் தீராமல் நிற்கும் அஸ்மிதா, கலக்கத்துடன் அலமேலுவின் கையைப் பற்றியிருந்த இஷானி என அனைவரையும் ஒரு முறை நோட்டமிட்டவர்

“ஏன் எல்லாரும் பேயறைஞ்ச மாதிரி நிக்கிறிங்க? வந்து சாப்பிடுங்க வாங்க!” என்று அதட்ட, வேறு வழியின்றி அனைவரும் உணவுமேஜையில் ஆஜராயினர். அஸ்மிதாவின் கன்னத்தின் கன்றிப்போன கைவிரல் தடத்தை வருத்தத்துடன் பார்த்த அலமேலு மகளை முறைக்க, சஞ்சீவினி

“மா! முருங்கயை முறிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்னு அடிக்கடி சொல்லுவிங்கள்ல! அதை நான் அப்போ செய்யாம விட்டுட்டேன்… அதான் உங்க பேத்தி யாரை என்ன பேசணும்னு தெரியாம பேசிட்டிருக்கா… இனிமே அப்பிடி பேசுறப்போ அம்மா அன்னைக்கு அறைஞ்சாங்களேனு யோசிச்சு இவ பயப்படுவாங்கிறதுக்காக ஒன்னும் நான் அறையலை… இவளை அமைதியாக்க எனக்கு வேற வழி தெரியலை… அதுவுமில்லாம எல்லாரும் மந்தாவை மட்டுமே குறை சொல்லி என்ன பிரயோஜனம்? சந்துருவும் தப்பு பண்ணிருக்காரு தானே!” என்று நியாயத்தைச் சொல்லவும் அவர் அமைதியாகி விட்டார்.

ஆனால் அஸ்மிதாவோ “நீங்க என்ன சொன்னாலும் என்னால அந்த லேடி பண்ணுன தப்பை மறக்க முடியாது… என் அப்பாவை என் கிட்ட இருந்து பிரிச்சது அந்த லேடி தான்.. ஐ ஹேட் ஹெர்” என்று துவேசத்துடன் மொழிந்தவள் தட்டைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று தனது அறையை நோக்கி விரைய “அஸ்மி கொஞ்சம் நில்லுடி” என்றபடி இருவரின் தட்டுகளையும் எடுத்துக் கொண்ட இஷானி

“மா! நீங்க எல்லாரும் சாப்பிடுங்க… நான் அஸ்மி கூட ரூம்ல வச்சு சாப்பிட்டுக்கிறேன்” என்று உரைத்துவிட்டு தட்டுகளுடன் அகன்றாள்.

சஞ்சீவினி இரு பெண்களையும் பற்றி நினைத்தபடி பெருமூச்சு விட்டவர் சாப்பாட்டில் கண் பதித்தார். அவரது மனமோ மந்தாகினியின் தோளைப் பற்றிக் கொண்டு வெளியேறிய அவரது முன்னாள் கணவரிடம் நிலைத்திருந்தது.

முன்னாள் கணவர் என்ற இவ்வார்த்தை தான் எவ்வளவு சங்கடமானது. அந்த வார்த்தைக்குரிய நபரைச் சொந்தம் கொண்டாடவும் முடியாது; அவரை முழுவதும் வெறுத்து ஒதுக்கவும் முடியாது. இந்த இரண்டுகெட்டான் மனநிலை இன்னும் ஒரு வாரத்துக்குத் தனக்கு நீடிக்கும். அதன் பின்னர் வழக்கமானப் பணிகளில் தான் அந்த வார்த்தைக்குரிய நபரை மறந்துவிடப் போகிறோம் என்று பலவாறான சிந்தனைகளுடன் மதியவுணவை முடித்தார் சஞ்சீவினி.

மகளின் முகம் கண்ணாடி போல அவர் மனவுணர்வுகளைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கவுமே ராஜகோபாலனும் அலமேலுவும் கண்டுபிடித்துவிட்டனர். இந்த வயதிலும் தாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருக்க மகள் மட்டும் தனியாய் நிற்கும் நிலை அவர்களுக்கு எப்போதும் போல நெஞ்சில் வலியை உண்டாக்கியது. ஆனால் இது அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛