🌞 மதி 57🌛

நமது கடற்கரை பரப்புகளில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், ஜிர்கான், சிலிமினேட், லீஸோகென்ஸ் உள்ளிட்ட கனிமங்களுடன் மோனசைட் கலந்திருக்கும் போது கதிர்வீச்சு இருக்காது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தாது மணலில் இருந்து மோனசைட்டை மட்டும் பிரித்து விதிமுறைகளை மீறி ஒரு இட்த்தில் குவித்து வைக்கும் போது அதிலிருந்து வெளியேறும் அணுக்கதிர்வீச்சு அபாயகரமான அளவில் இருக்கும் சவுந்திரராஜன், பூவுலகின் நண்பர்கள்.

காலையில் கண் விழித்த ஜெயதேவ்வுக்குத் தன்னருகில் படுக்கை வெறுமையாக இருக்கவும் அஸ்மிதா எங்கே என்ற கேள்வி தான் உதித்தது. உடனே விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறியவன் மாடியின் வராண்டாவிற்கு வர அங்கே உள்ள இருக்கையில் துயில் கொண்டிருந்தாள் அவனது மனைவி.

கைகளை மடித்துவைத்து அதில் முகத்தைத் தாங்கியபடி குழந்தையைப் போல சுருக்கிக் கொண்டு கண் மூடிக் கிடந்தவளின் முகத்தில் விழித்திருக்கும் நேரத்தில் கொட்டிக் கிடக்கும் குறும்போ அல்லது அதில் துளியளவில் கலந்திருக்கும் அலட்சியமோ என எதுவும் இல்லை. அமைதியான நிர்மலமான தோற்றத்துடன் உறங்கிக் கொண்டிருந்தவளை தொந்தரவு செய்ய விரும்பாதவன் மீண்டும் அறைக்குள் சென்று விட்டான்.

அவன் பல் துலக்கி முகம் கழுவி ரிஷியைப் போனில் அழைத்துப் பேசிவிட்டு மீண்டும் வராண்டாவுக்குத் திரும்பும் போதும் அஸ்மிதாவின் உறக்கம் கலையவில்லை. இடுப்பில் கையூன்றி அவளைச் செல்லமாய் முறைத்தவன் அவளருகே முழந்தாளிட்டு அமர்ந்து தன்னை எது தான் அவளை நோக்கி ஈர்த்தது என்று சிந்திக்க தொடங்கினான்.

முதல் முறை ஆர்.எஸ் குழுமத்தின் பங்குதாரர்களின் புகைப்படங்களில் அவளைக் கண்ட போது பெரிதாய் ஒன்றும் தோணவில்லை. அவன் சிறுவயதில் வாஞ்சையாய் அழைத்த சஞ்சு அத்தையின் மகள் என்ற அளவில் மட்டும் அவளைப் பார்த்தவன் அதற்கு பின்னர் அவளை மறந்து போனான். பின்னர் தாத்தாவின் அறிவுறுத்தலால் தானே நேரடியாக துளி நிறுவனத்துக்குச் சென்ற கணமும் அங்கே தன்னிடம் அவள் சிறிதும் அலட்டலின்றி ஆனால் மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசியது மானசாதேவியை நினைவுறுத்தியதை அவனால் மறக்க இயலவில்லை.

அதன் பின் ஐடி கார்டால் தன் கழுத்தை நெறித்தவளின் முகம் அங்கிருந்து சென்ற பின்னரும் அவன் மனக்கண்ணில் பசை போட்டு ஒட்டிக் கொண்டதற்கு அவன் பொறுப்பல்லவே.

முதல் சந்திப்பில் அவளது அலட்டலற்ற பேச்சிலும் தைரியத்திலும் தன்னை இழந்தவன் அதன் பின்னர் அவளுடன் கழிக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அவளது கோபம், விகல்பமற்று பழகும் தன்மை, எரிச்சல் அனைத்துப் பரிமாணங்களையும் ரசிக்கத் தொடங்கிவிட்டான். அவளை ரசிக்கத் தொடங்கியதால் தான் என்னவோ சாந்தினி அவனுக்குப் பார்த்த பெண்களை அனைவரையும் வேண்டாமென்று ஒரேயடியாக மறுத்தவன் மானசாவின் பெயரை எடுத்தால் அவர் அமைதியாகி விடுவார் என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால் அஸ்மிதா காதலைச் சொன்ன அக்கணத்தில் குற்றவுணர்ச்சி எழுவதை அவனால் தடுக்க இயலவில்லை. அதிலும் அவள் காதலிப்பவனிடம் உரிமையாய் பழகும் தருணங்களில் எல்லாம் அவளது அருகாமையைத் தவிர்க்கவும் இயலாமல், அதே சமயம் அவளுடன் ஒன்றி அவளது காதலை அனுபவிக்கவும் இயலாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தான் ஜெயதேவ்.

அதே சமயம் மானசாவின் இழப்புக்குக் காரணமானவர்களுக்கு கிடுக்குப்பிடி போட தொடங்கிய ஆட்டத்தை நிறுத்தவும் அவன் விரும்பவில்லை.

ஆனால் இந்தத் தவிப்புக்கு முற்றுப்புள்ளியாகப் படித்துக் கூடப் பார்க்காது பத்திரத்தில் கையெழுத்திட்டவளின் காதல் அவன் முன்னே பூதாகரமாய் விஸ்வரூபம் எடுக்கவும் தனது குற்றவுணர்ச்சியைக் களைந்தவன் தாத்தாவுக்குக் கொடுத்த வாக்கை மனதில் நிறுத்தி அதே சமயம் அவளை இழக்கவும் மனமற்றவனாய் திருமணத்துக்குச் சம்மதித்தான்.

“எல்லா பிராப்ளமும் சால்வ் ஆகட்டும்… அப்புறமா என் மனசுல உள்ளத நான் அஸ்மி கிட்ட சொல்லிப்பேன்” என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவன் அந்தத் திருமணமும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளுமாய் சேர்ந்து அஸ்மிதாவை அவனிடமிருந்து வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டதை உணர்ந்த கணம் அவனது மனதுக்கு வேதனையாகத் தான் இருந்தது.

தான் விரும்பிக் காதலித்த பிரமித்த பெண்ணொருத்தி அவசரமாக தன்னை தனியனாக்கிவிட்டு சென்ற கவலையில் நான்கு ஆண்டுகளை கழித்தவன் தன்னை விரும்பிக் காதலித்தவளின் அருகாமையில் அமைதி காணத் தொடங்கிய கணத்தில் விதி அவளையும் தன்னிடம் இருந்து விலக்கிவிட்டதை சிரமத்துடன் ஏற்றுக்கொண்டான். இன்று வரை ஏற்றுக்கொண்டே இருக்கிறான்.

அவன் இப்போது காத்திருப்பது எல்லாமே ஒரு கணத்திற்காக தான். அது அஸ்மிதா அவனை ‘ஜெய்’ என்று அழைக்கும் கணம். அது அவ்வளவு எளிதில் கிட்டாது போல என்று பெருமூச்சு விட்டவன் உறங்கிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் சண்டித்தனம் செய்து கொண்டிருந்த கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டு அவளது நெற்றியில் முத்தமிட அவனது இதழ்களின் ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் அஸ்மிதா.

கண்ணைத் திறந்தவளுக்குப் பழக்கமற்ற இதழ்களின் ஸ்பரிசம் உள்ளுக்குள் குறுகுறுப்பை உண்டாக்க ஒரு கணம் அதில் மூழ்கியவள் மனக்கண்ணில் “நான் ஜெய் இல்ல… தேவ்…. ஜெயதேவ்… உன் அப்பா சந்திரசேகர் நம்பிக்கை துரோகம் பண்ணுன விஸ்வநாதனோட பையன் ஜெயதேவ் விஸ்வநாதன்” என்று சொன்னபடி அலட்சியத்துடன் நின்ற ஜெயதேவ்வின் உருவம் வரவும் சட்டென்று அவனை விலக்கினாள்.

ஜெயதேவ் இது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ இன்னும் சாதாரணமான முகபாவத்துடனே முழந்தாளிட்டபடி இருக்க அஸ்மிதா வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டாள். சோபாவில் சம்மணமிட்டவள் அவன் முகத்துக்கு நேராக விரலை நீட்டி

“இனிமே நீ என்னை டச் பண்ணுணேனு வையேன் அவ்ளோ தான்! என்ன நினைச்சிட்டிருக்க நீ? தூங்கிட்டிருக்கிறவளை வந்து கிஸ் பண்ணுறியா?” என்று அதட்ட

“முழிச்சிட்டிருக்கிறப்போ கிஸ் பண்ணுனா நீ கோவப்படுவியே! தட்ஸ் ஒய்” என்று தோளைக் குலுக்கினான் ஜெயதேவ்.

அவனது பதிலில் ஒரு கணம் திகைத்தவள் பின்னர் பட்டென்று அவன் புஜத்தில் அடித்துவிட்டு “என்னை நீ டச் பண்ணவோ கிஸ் பண்ணவோ கூடாது” என்று கட்டளையிட ஜெயதேவ் புரியாது அவளை நோக்கினான்.

அவளது பேச்சில் வாயடைத்துப் போனவனுக்கு இப்படி பதிலுக்குப் பதில் பேசுவது சுவாரசியமாகவே இருந்தது.

“ஏன் பண்ணக் கூடாது மேடம்ஜி?” – ஜெயதேவ்

“எனக்கு அன்கம்பர்டபிளா இருக்கு தேவ்… சோ இனிமே என் கிட்ட நெருங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசி… லைப் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி எதுவும் எடுத்திருக்கியா? இல்லனா சீக்கிரமா எடுத்துக்கோ… உனக்கு அது கண்டிப்பா தேவைப்படும்”

அமர்த்தலாகச் சொல்லி அவனை மிரட்டிவிட்டு எழுந்து செல்ல முற்பட்டவளிடம் “நீ ரொம்ப பேசுறியே” என்று ஒரு மாதிரி குரலில் சொல்லிவிட்டு புருவத்தை ஆட்காட்டிவிரலால் தேய்த்தான் ஜெயதேவ்.

“என்ன பண்ணுறதுப்பா? பிறவிக்குணம்” என்று சொல்லிவிட்டு அவனை விலக்க முயன்றவள் அடுத்த நொடியே அவளது தாடையைப் பற்றி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவனின் செய்கையில் மீண்டும் அதிர்ந்து தன்னிலை இழக்கத் தொடங்கினாள்.

ஜெயதேவ் விருப்பமின்றி அவள் கன்னத்திலிருந்து இதழைப் பிரித்தவன் நமட்டுச்சிரிப்புடன் “இனியாச்சும் என்னை மிரட்டாம இருப்பேனு நம்புறேன்” என்று அமர்த்தலாக மொழிய

“சே சே! உன்னை மிரட்ட மாட்டேன்” என்று மறுத்த அஸ்மிதா அவன் கழுத்தில் கைகளை வைத்தவள் “டேரக்டா உன்னை பரலோகத்துக்குப் பார்சல் பண்ணிடுவேன்டா… கொன்றுவேன் ராஸ்கல்” என்று கழுத்தில் அழுத்தியபோது தான் அவள் சுயநினைவுக்கு வந்துவிட்டதே ஜெயதேவ்வுக்கு உரைத்தது.

இனி பொறுத்தால் தன் உயிர் தனக்குச் சொந்தமில்லை. இந்த இராட்சசி சொன்னதை செய்துவிடுவாள் என்பதை அறிந்திருந்தவன்

“ஆமா ஆமா! உனக்கு இதுலாம் புதுசா என்ன்? ஃபர்ஸ்ட் மீட்லயே என்னைக் கொலை பண்ண பார்த்தவ தானே! கழுத்தை விடுடி ராட்சசி! பொண்ணா நீ” என்று அவளது கரங்களைத் தட்டிவிட்டுக் கொண்டான்.

அஸ்மிதா அவன் கழுத்தைத் தடவிக்கொள்வதை திருப்தியுடன் பார்த்தவள் தனது கழுத்தின் குறுக்கே ஆட்காட்டி விரலை வைத்து கோடிழுத்துக் காட்டிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

ஜெயதேவ்வுக்கு அவளது செய்கையில் புன்னகை மலர்ந்தது. இவ்வளவு நேரம் முழந்தாளிட்டிருந்த கால்கள் வலிக்கத் தொடங்கவும் எழுந்தவன் கால்களை உதறிக்கொண்டான். இன்னும் உதடுகளில் அவளது பட்டுக்கன்னங்களின் ஸ்பரிசம் ஒட்டிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை அவனுக்கு.

அதே நேரம் அஸ்மிதா அவனை மிரட்டி விட்டு குளியலறைக்குள் புகுந்தவள் அங்கிருந்த வாஷ்பேஷினில் முகம் கழுவிவிட்டு நிமிர்ந்து தன்னெதிரே இருந்த கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்தபடியே டவலால் முகத்தைத் துடைக்க ஆரம்பித்தாள். ஜெயதேவ் முத்தமிட்ட இடம் இன்னும் குறுகுறுக்க டவலால் அழுந்த துடைத்து அந்தக் குறுகுறுப்பைப் போக்க முயன்று தோற்றாள்.

“அவன் தான் கிஸ் பண்ணுனான்னா உனக்கு எங்க போச்சு புத்தி? உன்னோட பெரிய எனிமி நீ தான் அஸ்மி… நீ லவ் பண்ணுனது ஜெய்யை… இவன் ஜெய் இல்லடி… தேவ்” என்று உரக்கவே சொல்லிக் கொண்டாள்.

என்ன தான் அவன் அருகாமையில் மனம் நெகிழ்ந்தாலும் இந்த நெருடல் என்றைக்கு சரியாகிறதோ அன்றைக்குத் தான் மனதாற அவனைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று தீர்மானித்தவள் பிரஷ்ஷில் பற்பசையைத் தடவி பல் துலக்கத் தொடங்கினாள்.

பின்னர் நேரம் கடக்க இருவரும் பீச் ஹவுஸை நீங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். இருவரும் வீட்டினுள் காலடி எடுத்துவைக்கும் போது ருத்ராவின் குரல் கேட்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்தனர்.

அங்கே ருத்ராவும் இஷானியும் வந்திருக்க சாந்தினி இல்லத்தரசியாய் அவர்களை வரவேற்று உபசரித்ததன் அடையாளமாய் டீபாய் மீது பழச்சாறு அடங்கிய தம்ளர்கள் வீற்றிருந்தன. அஸ்மிதா அவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் முகம் விகசிக்க வேகமாக வீட்டினுள் சென்றவள் இஷானியை அணைத்துக் கொண்டாள்.

அவளது சகோதரியும் மாமாவும் முதல் முறை அவளது புகுந்தவீட்டுக்கு வந்த ஆனந்தம் அவளுக்கு. ஜெயதேவ் ருத்ராவைத் தோளோடு சேர்த்து அணைத்தபடி வரவேற்றவன் இஷானியிடம் மரியாதை கலந்த முறுவலை அளிக்க சாந்தினி இளையவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிக் கொண்டார்.

ஜெயதேவ் ருத்ராவிடம் “நம்ம போட்ட ரெண்டாவது ப்ளானை எக்ஸிகியூட் பண்ணிட்டு வந்திருக்கேன்.. எனக்கு விஷ் பண்ணு” என்று சொல்லி அவனை அஸ்மிதாவிடமும் இஷானியிடமும் மாட்டிவிட்டுச் சந்தோசப்பட

“கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறியா? உனக்கு இதே வேலையா போச்சு தேவ்… நேத்து இவள சமாதானம் பண்ணுறதுக்குள்ள நான் ஒரு வழியாயிட்டேன்… ப்ளான் போடுறது நீ, எக்ஸிகியூட் பண்ணுறதும் நீ தான்… ஆனா உனக்கு ஹெல்ப் பண்ணுற ஒரே காரணத்துக்காக நான் இதுங்க ரெண்டு கிட்டவும் திட்டு வாங்குறேன்” என்றான் ருத்ரா நொந்து போன குரலில்.

அதைக் கேட்டு ஜெயதேவுடன் சேர்ந்து இரு பெண்களும் நகைக்க ருத்ரா அவர்கள் மூவரையும் முறைத்தான். மூவரும் அவனது முறைப்பில் சிரிப்பைச் சுருக்கிக் கொண்டனர். அஸ்மிதா சிரிப்போடு சிரிப்பாக இருவரது கையிலும் ஜூஸ் தம்ளரைத் திணிக்க அதை அருந்த தொடங்கியபடி ஜெயதேவ்விடம் பேச்சு கொடுத்தான் ருத்ரா.

“அப்புறம் கபிள்ஸா வீட்டுக்கு வந்திருக்கிங்க? எனி குட் நியூஸ்?” என்று குறும்பாய்க் கேட்ட ஜெயதேவ்வின் பேச்சில் இஷானிக்கும் ருத்ராவுக்கும் குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் புரையேறியது.

சதிபதி இருவரும் இருமி முடிக்க அஸ்மிதா “இதுல இவ்ளோ ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு? குட் நியூஸ் இருந்தா சொல்லுங்க… இல்லனா எப்போ குட் நியூஸ் கிடைக்கும்னு சொல்லுங்க” என்று ஆர்வமாய் வினவ இஷானிக்கு முகத்தில் வெட்கச்சிவப்பு ஏறத் தொடங்கியது.

ருத்ரா அதைக் கண்டுகொண்டவனாய் “சும்மா இருங்கப்பா! என் ஒய்பை ரொம்ப வெக்கப்படுத்துறிங்க” என்று குறும்பாய் சொல்லிவிட்டு இஷானியைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவளும் கணவனின் அணைப்பில் வாகாய் அடங்கினாள்.

அஸ்மிதாவுக்கு இந்தக் காட்சியைக் காண காண திகட்டவில்லை. திருமணம் அறிவித்த நாளிலிருந்து சுரத்தில்லாமல் வலம் வந்தவள் இன்றைக்கு மாமாவின் அணைப்பில் முகம் மலர அடங்கிக் கொண்ட காட்சி ஒன்றே இஷானிக்கும் ருத்ராவுக்கும் இடையேயான அன்னியோன்யத்துக்கு அடையாளம் ஆகிவிட மனம் மகிழ்ந்தாள் அஸ்மிதா.

ஜெயதேவ் மெதுவாய் தொண்டையைச் செறுமிவிட்டு “ரெண்டு பேரும் ஹனிமூன் போறதா இருக்கிங்களா என்ன? அதை சொல்லிட்டுப் போகத் தான் வந்திங்களா?” என்று அவனாய் அவர்களின் வருகைக்கு ஒரு காரணத்தை ஊகித்துக்கொள்ள இஷானியும் ருத்ராவும் மறுப்பாய் தலையசைத்தனர்.

ஜெயதேவ்வின் புருவம் அதைக் கேட்டதும் குழப்பத்தில் முடிச்சிட்டுக் கொண்டது.

“வினாயகம் மாமா நேத்து போன்ல பேசுனத நான் கேட்டேன் தேவ்” என்றாள் இஷானி சட்டென்று.

அஸ்மிதாவும் ஜெயதேவ்வும் ஒருசேர அவளை நோக்க “நேத்து நைட் ஃபாரினுக்கு அனுப்பவேண்டிய கன்சைன்மெண்ட் பத்தி பேசிட்டிருந்தாரு… ஹார்பர்ல உள்ள ஆபிசரை காசு குடுத்து சரிகட்ட சொன்னத நான் என் காதால கேட்டேன் தேவ்” என்று ஆரம்பித்த இஷானி ஒரு வரி விடாமல் அவர்களிடம் தான் கேட்ட விஷயத்தை விளக்கிவிட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியுடன் ஜெயதேவ்வைப் பார்த்தாள்.

ஜெயதேவ் விழி மூடியிருந்தவன் இரு கரங்களையும் கோர்த்து ஆட்காட்டிவிரல்களால் புருவமத்தியில் தட்டிக் கொண்டபடி

“ம்ம்… அவரைக் கையும் களவுமா பிடிக்கிறதுக்கு இது தான் நல்ல சான்ஸ்… அவரு ஆழியூர் யூனிட்டுக்குப் போகட்டும்… இந்த கன்சைன்மெண்ட் கண்டிப்பா ஷிப்புக்குப் போகணும்… ஆனா தூத்துக்குடியில ஷிப் ஹார்பரை விட்டு போறதுக்கு முன்னாடி சரக்கோட சேர்த்து வினாயகமூர்த்தியைப் பிடிக்கணும்… இல்லைனா அந்தாளு மறுபடியும் தப்பிச்சிடுவாரு… முக்கியமா அவரு அரெஸ்ட் ஆனதுக்கு அப்புறமா சந்திரசேகர் அவருக்கு எந்த லாயரையும் அப்பாயிண்ட் பண்ணக் கூடாது… இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… நீ வினாயகமூர்த்தி வெளியூர் போற மாதிரி இருந்தா எனக்கு இன்பார்ம் பண்ணு ருத்ரா… இஷி மேடம்! நீங்க இனிமே லேடி ஜேம்ஸ்பாண்ட் அவதாராம் எடுக்க வேண்டாம்… இட்ஸ் மை ரெக்வெஸ்ட்” என்று சொல்லி நிறுத்தவும் இஷானியும் அஸ்மிதாவும் புரியாமல் விழித்தனர்.

அஸ்மிதாவின் கண்கள் ஏதோ புரிந்தாற்போல பளிச்சிட இஷானியிடம் “அது ஒன்னுமில்ல இஷி! எல்லாம் நம்ம பாதுகாப்புக்கு தான்னு சொல்லுவாங்க… நம்மளும் அதை நம்பணும்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு ஜெயதேவ்விடம் பேச ஆரம்பித்தாள்.

“நீ ஏன் எப்போவும் எங்களை வீக்கானவங்கனு நினைக்கிற தேவ்?” என்று ஆரம்பித்தவள் அவனோடு சேர்த்து ருத்ராவையும் விளாசவே இருவரும் ஆயாசமாய் அமர்ந்திருந்தனர்.

ருத்ரா ஒரு படி மேலே சென்று “உங்க சேப்டி மேல அக்கறை எடுத்துக்கிட்டது ஒரு குத்தமா? இதுக்குப் போய் மேள் சாவனிஷம் வரைக்கும் இழுக்கிறியே அஸ்மி?” என்று அங்கலாய்க்க

“குருட்டுத்தனமான தைரியம் என்னைக்குமே ஆபத்தானது.. அதுல ஆண், பெண் பாகுபாடு இல்ல அஸ்மி! நான் அவரோட சுயரூபம் தெரிஞ்சவன்… அந்த ஆளால இன்னொரு உயிர் அநியாயமா போயிடக் கூடாதேனு தான் ஒவ்வொரு நிமிசமும் யோசிச்சிட்டிருக்கேன்… சோ இதை நான் பார்த்துக்கிறேன்…. நீங்க ரெண்டு பேரும் இதுல தலையிட வேண்டாம்… முக்கியமா வினாயகமூர்த்தி பண்ணுற தப்பு உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்” என்று எச்சரித்தான் ஜெயதேவ்.

இஷானிக்கு அவன் சொன்ன வார்த்தைகளிலுள்ள தீவிரம் புரிபட இனி தான் அவர் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவள் அவர்களிடம் தெரிவித்தும் விட்டாள். ஆனால் அஸ்மிதா தான் அரைமனதாக தலையாட்டி வைத்தாள். ஜெயதேவ்வுக்கு அவள் தலையாட்டிய விதம் சரியில்லை என்று மனதில் பட்டது என்னவோ உண்மை. ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சனையின் தீவிரத்தன்மையை அவளுக்குப் புரியும்படி விளக்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என தான் கலங்கப்போகும் நாளில் தான் அஸ்மிதா அரைமனதாக தலையாட்டி வைத்ததன் பலனை அனுபவிக்கப் போகிறோம் என்பதை ஜெயதேவ் அப்போது அறிந்திருக்கவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛