🌞 மதி 56🌛

மோனசைட் என்பது கதிர்வீச்சை உமிழக்கூடிய ஒரு கனிமம். இதில் மோனசைட் –சிஇ, மோனசைட் –எல்ஏ, மோனசைட் என்டி, மோனசைட் – எம்எஸ் போன்ற பிரிவுகள் உள்ளன. தோரியத்துக்கான முக்கிய மூலப்பொருளான மோனசைட்டைப் பகுப்பதன் மூலம் ராடான் 220 என்ற கதிர்வீச்சு எரிபொருள் உற்பத்தியாகிறது. இது அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது – சவுந்திரபாலன், பூவுலகின் நண்பர்கள்.

நகம் கடித்தபடி அமர்ந்திருந்த அஸ்மிதாவுக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தார் அலமேலு. இருவரையும் முறைத்தவண்ணம் அமர்ந்திருந்த சஞ்சீவினி ராஜகோபாலனிடம் கண்ணாலேயே அஸ்மிதாவுக்கு அறிவுரை சொல்லும் படி வேண்ட அவரோ சற்று பொறுக்கும் படி மகளிடம் மௌனமாக உரையாடிக் கொண்டிருந்தார்.

அஸ்மிதா இதையெல்லாம் கவனித்தும் கவனியாதவளாய் சாதத்தை விழுங்கிக் கொண்டிருக்க சஞ்சீவினி பொறுக்க முடியாது கேட்டே விட்டார்.

“இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே இருக்கிறதா உத்தேசம் அஸ்மி? அண்ணி நீ வரலையேனு கவலைப்பட போறாங்க”

“நான் இன்னைக்கு இங்க தான் ஸ்டே பண்ணப் போறேனு ஆன்ட்டி கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் வந்தேன்மா… சோ நீங்க வொரி பண்ணிக்காதிங்க”

“அண்ணி கிட்ட சொன்னது சரி தான்… ஆனா தேவ் கிட்ட சொன்னியா?”

“அவன் கிட்ட எதுக்கும்மா சொல்லணும்? அவன் எங்க போறான் என்ன பண்ணுறானு நான் கேக்கிறேனா? அப்போ நான் மட்டும் ஏன் அவன் கிட்ட இன்ஃபார்ம் பண்ணனும்? இட்ஸ் ரிடிகுலஸ் ஆர்.கே” என்று தோளை அலட்சியமாய் குலுக்கியவளைக் கண்டு சஞ்சீவினிக்கு ஆயாசமாக வந்தது.

“முதல்ல அவன் இவன்னு சொல்லுறதை நிறுத்து… தேவ் உன்னை விட ஏழு வயசு பெரியவன்” என்று கண்டிக்கும் குரலில் மகளை அதட்டியவர் தந்தையிடம்

“நீங்களாச்சும் புத்தி சொல்லுங்கப்பா… இவ இப்படியே பண்ணிட்டிருந்தா என்ன அர்த்தம்? ஹஸ்பெண்ட் என்ன தப்பு பண்ணுனாலும் பொறுத்துட்டுப் போனு சொல்லுற அம்மா நான் இல்ல… ஆனா இவ இப்பிடி ஏகவசனத்துல பேசுறத கேட்டுட்டு என்னால சைலண்டா போக முடியல… அப்பா இருந்து கண்டிச்சு வளர்த்திருந்தா இந்தப் பொண்ணு இப்பிடி நடந்துப்பாளானு யாரும் கேட்டுடக் கூடாதுப்பா” என்று தன் கவலையை வெளியிட ராஜகோபாலன்

“அவ சின்னப்பொண்ணு தானே சஞ்சு… இப்போ என்ன தேவ்வுக்குக் கால் பண்ணி இன்னைக்கு இங்க தான் இருக்கப்போறேனு அஸ்மி சொல்லிட்டா எல்லா சரியாயிடும்” என்று சொல்லும் போதே வாயிலில் யாரோ வரும் அரவம் கேட்டது.

வீட்டிலுள்ள அனைவரும் வாயிலை எட்டிப்பார்க்க களைத்துச் சோர்ந்த முகத்துடன் வந்து நின்றான் ஜெயதேவ். சஞ்சீவினி அவனை உள்ளே வருமாறு அழைத்தவர் “ரொம்ப டயர்டா தெரியுறியேப்பா? வேலை அதிகமா?” என்று சிறு வயது தேவ்வை மனதில் வைத்துக் கேட்க அவனும் சோர்வை மீறி முறுவலித்தான்.

“ஆமா ஆன்ட்டி! இன்னும் கொஞ்சநாளுக்கு இப்பிடி தான்… அப்புறம் இவ்ளோ ஒர்க்ஸ் இருக்காது… பிகாஸ் அஸ்மியும் என் கூட சேர்ந்து வேலை பார்க்கிறப்போ ரெண்டு பேரும் ஷேர் பண்ணிப்போம்” என்றவனிடம் நீ ஏதேனும் திட்டத்துடன் தான் என் மகளை போர்டில் இயக்குனர் ஆக்கினாயா என்று கேட்க சஞ்சீவினிக்குத் தயக்கமாக இருந்தது.

அதே நேரம் அஸ்மிதா அவனைக் கண்டும் காணாது அமர்ந்திருக்க ஜெயதேவ் அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சஞ்சீவினியிடம் “கொஞ்சநாளுக்கு ஆர்.எஸ்.கெமிக்கலோட மேனேஜ்மெண்டை எனக்கு நம்பகமான ஆள் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணனும்னு நினைக்கிறேன் ஆன்ட்டி… இன்னைக்கு நிலமைக்கு என்னால அஸ்மிய தவிர யாரையும் நம்ப முடியல” என்று பெரிய ஐஸ் பாரை தூக்கி அவரது தலையில் வைத்துவிடவே அதற்கு மேல் சஞ்சீவினிபவனவாசிகளை அஸ்மிதாவால் கட்டுப்படுத்த இயலவில்லை.

அதன் விளைவு அடுத்த பத்து நிமிடத்தோடு அவளது சஞ்சீவினிபவனவாசம் முடிந்து விட்டது. அன்னைக்கும் தாத்தா பாட்டிக்கும் டாட்டா காட்டிவிட்டு தேவ்வுடன் காரில் ஏறியவள் அவன் காரை வீட்டை நோக்கிச் செலுத்தாமல் வேறு வழியில் செல்லவும் துணுக்குற்றவள்

“நீ எங்க போற தேவ்? வீட்டுக்கு அந்த ரூட்ல தானே போகணும்?” என்று சொல்லிவிட்டுப் புருவங்களைச் சுருக்கிக் கேட்க

“யாரோ எனக்கு லவ் பண்ணவே தெரியலைனு சொன்னாங்க… அதான் ஒரு டெமோ காட்டலாம்னு கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு அவள் புறம் திரும்பி ஒரு பார்வையை வீச அஸ்மிதாவுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது.

“இஸிண்ட்? ஆனா பாரு எனக்கு உன்னை லவ் பண்ணுற ஐடியா சுத்தமா இல்ல… சோ மரியாதையா காரை வீட்டுக்கு விடு” என்று சுள்ளென்று விழ தேவ் அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

கார் சென்று நின்ற இடம் அவர்களின் பீச் ஹவுஸ். இங்கே அழைத்து வந்த காரணத்தைக் கேட்க எண்ணியவளுக்குப் பதிலளிக்காது அவன் வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன் விளக்குகளை ஒளிரச் செய்தான்.

அஸ்மிதா அவன் பின்னே வந்தவள் இன்னும் முகத்தில் கேள்விக்குறியுடன் அவனை நோக்க அவளை சோபாவில் உட்காருமாறு சைகை காட்டியவன் தானும் அமர்ந்தான். அஸ்மிதா வாக்குவாதம் எதுவும் செய்யாது அமர்ந்தவள் “இப்போவாச்சும் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்கனு சொல்லுங்க சார்” என்று கறாராக கேட்கவும் சட்டையின் கழுத்துப்புற பொத்தானைக் கழற்றிவிட்டவன்

“உனக்கு ஆர்.எஸ் மினரல்ஸ்ல இருக்கிற ஷேர்ஸ் இப்போ எனக்கு வேணும்… சோ இதுல சைன் பண்ணு” என்றபடி கையோடு கொண்டு வந்திருந்த கோப்பிலிருந்த பங்குமாற்ற ஒப்பந்தத்தை அவர்கள் இருவருக்கும் நடுவிலிருந்த டீபாயின் மீது வீச அஸ்மிதாவின் முகம் இறுகியது. அவளது இதழில் ஒரு கேலிப்புன்னகை தவழ ஆரம்பிக்கவும் தேவ் அவசரமாக

“உடனே உன் இஷ்டத்துக்கு எதுவும் இமேஜின் பண்ணிட்டு என்னை வில்லனாக்கிடாதே தாயே! ஆர்.எஸ் மினரஸ்ல எவ்ளோ தப்பு நடக்குதுனு ரிஷி உனக்கு ஆல்ரெடி சொல்லிருப்பான்… அதை தடுத்து நிறுத்துற பவர் எனக்கு வேணும்னா நான் அதுல ஷேர்ஹோல்டரா இருக்கணும்… சோ உன்னோட ஷேர்ஸ் அண்ட் மிஸ்டர் சந்திரசேகரோட ஷேர்ஸை நான் வாங்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டுப் பேனாவை அவள் புறம் நீட்டினான்.

அஸ்மிதாவும் ஏற்கெனவே ரிஷி மூலமாக ஆர்.எஸ் மினரல்சில் நடந்த முறைகேடுகளைக் கேட்டறிந்திருந்தவள் எவ்வித யோசனையுமின்றி அவன் கையிலிருந்து பேனாவை வாங்கியவள் விறுவிறுவென்று கையெழுத்திட்டு அவன் வசம் பத்திரங்களை நீட்ட மீண்டும் மீண்டும் அவள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணும் போது ஜெயதேவ்வுக்கு இப்போதும் பிரமிப்பு அகலவில்லை.

அதே நேரம் வீட்டில் வைத்து இவளிடம் கையெழுத்து கேட்டால் எங்கே சண்டையிட்டுத் தன்னை விஸ்வநாதனிடம் காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்று யோசித்து இவ்வளவு தூரம் அழைத்து வந்து கையெழுத்து வாங்கிய தனது மூளையையும் திட்டித் தீர்த்துக் கொண்டான்.

பேனாவை வாங்கிக் கொண்டவன் அவளைச் சீண்டுவதற்காக “யூ நோ ஒன் திங் ஒவ்வொரு தடவையும் நீ எனக்காக யோசிக்காம சைன் பண்ணுறப்போ உன் லவ்வ நினைச்சு எனக்கு புல்லரிக்குது அஸ்மி” என்று பொய்யாய் சிலாகிக்க

அஸ்மிதாவும் பொய்யாய் இளித்துவைத்தவள் “இஸிண்ட்? நான் ஃபர்ஸ்ட் டைம் சைன் பண்ணுனப்போ நிஜமாவே உன் மேல நிறைய லவ் இருந்துச்சுனு ஒத்துக்கிறேன்… இப்போ ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… ஜஸ்ட் நீ எடுத்து வைக்கிற ஸ்டெப்புக்கு என்னால முடிஞ்ச உதவி தான் நான் ஷேர் ட்ரான்ஸ்பர்க்கு சைன் பண்ணுனது… ஆனா இன்னும் மிஸ்டர் சந்திரசேகர் இருக்காரே! அவரை எப்பிடி சமாளிக்கப் போறிங்க சார்?” என்று நக்கலாய் கேட்க

“அதுக்குத் தான் நீ இருக்கியே” என்று சொல்லி அவளை மீண்டும் திகைப்பில் ஆழ்த்தினான் ஜெயதேவ்.

அஸ்மிதா புரியாது விழிக்க அவளைத் தன்னருகே வருமாறு அழைத்தவன் அவள் அமர்ந்ததும் மெதுவான குரலில் “நீ என்ன பண்ணுற மிஸ்டர் சந்திரசேகர் கிட்ட என் புருசனுக்கு ஆர்.எஸ் மினரல்சோட ஷேரும் வேணுமாம், குடுக்கலனா அவன் என்னை டிவோர்ஸ் பண்ணிடுவேனு மிரட்டுறான் டாடினு ஒரு ரெண்டு சொட்டு கண்ணீர் விடு… இனாஃப்… உன் டாடி என்னை திட்டிக்கிட்டேனாலும் ஷேர் டிரான்ஸ்பர் அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிடுவாரு” என்று சொல்லிவிட்டுப் புருவமுயர்த்த

“அவர் சத்தியமா நான் சொல்லுறத நம்பவே மாட்டாரு… நான் யாருனு அவருக்கு நல்லாவே தெரியும்” என்றாள் கேலியாக.

“அவர் நம்புற அளவுக்கு நீ ஆக்ட் பண்ணுனு சொல்லுறேன்மா”

“எனக்கு ஆக்ட் பண்ணவே வராது… ஜெயதேவ் மாதிரி ஆக்ட் பண்ண இன்னொருத்தன் பிறந்து தான் வரணும்” என்று அவனுக்கு விடாது ஒரு குட்டு வைத்தவளை ஆயாசத்துடன் பார்த்தவன்

“நீ இந்தப் பேச்சை விடவே மாட்டியா அஸ்மி? நான் ஒன்னும்…” என்றவனை இடைமறித்தவள்

“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதடா… இப்போ உனக்கு என்ன சந்திரசேகரோட ஷேர்ஸ் வேணுமா? நான் அவர் கிட்ட பேசி டிரான்ஸ்பருக்கு ஏற்பாடு பண்ணுறேன்” என்று சொல்ல அவளை மெச்சுதலாகப் பார்த்தவன்

“ஓகே நீ டின்னர் முடிச்சிட்ட… நானும் ஆபிஸ்லயே டின்னரை முடிச்சிட்டு தான் வந்தேன்… எனக்குத் தூக்கம் வருது… ஆனா உன்னோட தூக்கம் தொலைஞ்சு போயிடுச்சுனு உன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது… நான் தூங்கப்போறேன்” என்று சொன்னவனின் முகத்தில் அமைதியும் நிம்மதியும் மட்டுமே தெரிய அஸ்மிதா சரியென்று தலையசைத்தாள்.

அதன் பின் ஜெயதேவ் அவனது அறையில் சென்று துயிலில் ஆழ அஸ்மிதா அவனுடன் மாடிக்கு வந்திருந்தவள் வராண்டாவிலேயே இருந்துவிட்டாள். எங்கேயோ தூரத்தில் கேட்ட கடல் அலைகளின் இரைச்சல் உனக்கு நாங்கள் துணையாய் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்ல அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.

அதே நேரம் சேகர் வில்லாவின் தோட்டத்தில் ருத்ரா இஷானியிடம் கையும் களவுமாகச் சிக்கியவன் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாது விழிக்க அவள் எதுவும் பேசாது வீட்டை நோக்கி அடியெடுத்து வைக்க அவனும் மனைவியின் பின்னே ஓடினான்.

அதன் பின்னரும் இரவுணவின் போதும் இஷானி ருத்ராவின் முகத்தைப் பார்க்கவுமில்லை. அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இல்லை. சந்திரசேகரும் மந்தாகினியும் இதைக் கண்டு மனதிற்குள்ளேயே அவர்களுக்குள் எதுவும் பிரச்சனையோ என்று கலங்கியவர்கள் கேட்க வழியின்றி அமைதியாய் இரவுணவை முடித்துவிட்டுத் தங்கள் அறையில் முடங்கினர்.

இஷானி அர்ஜூன் உறங்கியதும் அவன் அறைக்கதவைத் தாளிட்டுவிட்டுத் திரும்பியவள் வினாயகமூர்த்தி யாருடனோ போனில் உரையாடுவதைக் கேட்டுவிட்டு பூனை போல மறைந்து நின்று அவர் பேசுவதை ஒட்டுக் கேட்டாள்.

“அவனோட கவனம் ஆர்.எஸ் கெமிக்கல் மேல தான் இருக்கு.. அவங்கப்பனை கம்பெனிய விட்டுத் துரத்துன கோவத்தை இப்பிடி தீர்த்துக்கிட்டான் அந்த தேவ்… இப்போ அவன் கண்ட்ரோல்ல கம்பெனி போனதும் அதோட வேலையில மூழ்கிட்டான்யா… சோ நம்ம பயப்பட வேண்டாம்… அடுத்த கன்சைன்மெண்ட் எப்போ ஹார்பருக்குப் போகப் போகுது?”

அவர் சொன்ன கன்சைன்மெண்ட் என்னவென்று அஸ்மிதாவின் வழியாக ஏற்கெனவே அறிந்திருந்தவள் காதுகளைக் கூர்த்தீட்டிக் கொள்ள வினாயகமூர்த்தி அனைவரும் உறங்கிவிட்டனர் என்ற எண்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

“அந்த ஆபிசருக்கு எத்தனை பர்சண்டேஜ் குடுத்தா சரி கட்டலாம்னு பாரு… என் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுறான்யா… நான் வேற ஃபாரின் கிளையண்ட் கிட்ட மூனு மாவட்ட கடற்கரையும் என் கன்ட்ரோல்ல தான் இருக்குனு பெருமையா சொல்லி வச்சிருக்கேன்… சொன்ன டைமுக்கு ஹார்பர்ல இருந்து சரக்கு போயாகணும்.. இல்லனா இத்தனை வருசமா வாங்குன பேர்லாம் நாசமா போயிடும்” என்று மறுமுனையில் இருந்தவரிடம் கர்ஜித்தவர் இம்முறை தனது திட்டத்தில் ஓட்டை எதுவும் விழுந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்.

இதில் அவருக்குக் கிடைத்த நிம்மதி இப்போதைக்கு ஜெயதேவின் கவனம் ஆர்.எஸ் மினரல்ஸ் பக்கம் திரும்பவில்லை. மானசாவின் மறைவுக்குப் பழிவாங்க என்று அவன் மீண்டும் ஆரம்பித்தால் இம்முறை அவனுக்குப் பலத்த அடியைக் கொடுக்கத் திட்டம் தீட்டியபடி உலாவினார்.

அவரது மன எண்ணங்களை அறியாவிடினும் இஷானி அவரது தொழில் திட்டங்களை கேட்டுவிட்டவள் இதை கட்டாயம் அஸ்மிதாவிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களின் அறைக்குச் சென்றாள்.

அங்கே ருத்ரா இன்னும் உறங்காமல் காத்திருக்க அவன் ஜெயதேவ்விடம் பேசியது நினைவில் வரவும் இஷானியும் முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ள ருத்ரா அவளருகில் வந்தவன் அவளது கரங்களை பற்றிக் கொண்டான்,.

“அரைகுறையா கேட்டத வச்சு என்னைப் பத்தி தப்பா நினைச்சிடாத இஷி” என்றவன் ஜெயதேவ்வின் திட்டங்களை அவளிடம் உரைக்க அதே போல இஷானியும் தான் கேட்ட வினாயகமூர்த்தியின் பேச்சை ருத்ராவிடம் ஒரு வார்த்தை விடாமல் சொல்லிவிட்டாள்.

“தேவ்வோட திட்டம் மட்டும் உங்க அண்ணனுக்குத் தெரிய வந்துச்சுனா அதுவும் அஸ்மியோட ஹெல்பால தான் தேவ் எல்லாத்தையும் பண்ணுறாருனு தெரிஞ்சுச்சுனா அவரால அஸ்மி உயிருக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோனு பயமா இருக்கு மாமா” என்றவளின் கலக்கம் ருத்ராவுக்குப் புரிந்தது.

அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “அவளுக்கு எதுவும் ஆகாது… பிகாஸ் அவளை தேவ் பார்த்துப்பான்” என்று சொல்லிவிட்டு மனைவியின் முகத்தை நிமிர்த்தியவன்

“எல்லாரை பத்தியும் கவலைப்படு… என்னை மட்டும் டீல்ல விட்டுடு… யூ ஆர் சோ மீன் இஷி” என்று பொய்யாய் முறைக்க இஷானி அவன் கன்னத்தைப் பிடித்துத் திருகியவள்

“அச்சோ! மாமாக்கு கோவம் வந்துடுச்சா?” என்று கேட்க ருத்ரா ஆமென்று தலையாட்டினான்.

“என்ன பண்ணுனா மாமாவோட கோவம் போகும்?”

குறும்பாகக் கேட்ட மனைவியின் கண்ணில் தெரிந்த குறுகுறுப்பும் அவளது இயல்பான அழகிய வதனமும் அவனுக்குள் இருந்த காதலை மீட்டத் தொடங்கியது.

“ம்ம்ம்… ஒன்னும் பண்ண வேண்டாம்” என்றபடி அவள் முகத்தினருகே குனிந்தவன் மூக்கில் மின்னிய மூக்குத்தியை நோக்கியவண்ணம் கைகளால் அவள் கன்னத்தில் விரல்களால் கோலமிட்டபடியே நின்றிருந்தவன் அவளது கண்ணில் என்ன கண்டானோ விரல்களால் போட்ட கோலத்தை இதழ்களால் போட ஆரம்பித்தான்.

இஷானி அவனது இதழில் ஸ்பரிசத்தில் மின்சாரம் தாக்கியது போல நின்றவள் அதன் அதிர்வு உடலெங்கும் இழையோட நிமிர இப்போது அவள் கணவன் அவள் கன்னத்தை விட்டுவிட்டு அவளது இதழில் தன் இதழால் கோலமிட கண் மூடி மருகி நின்றாள்.

சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த அந்த மோனநிலையிலிருந்து விடுபட்ட இருவருக்கும் அது ஒரு யுகம் போலத் தோன்ற ருத்ரா காதலுடன் மனைவியை நோக்கியவன்

“மொத்தக் கோவமும் இந்த முத்தத்துலயே கரைஞ்சு போயிடுச்சு இஷி… கார்டன்ல நீ கூட என் மேல கோவமா இருந்த மாதிரி தெரிஞ்சுது… சோ உன் கோவத்தையும் நீ தீர்த்துக்கோ” என்று சொல்லி கண் சிமிட்டி குறும்பாய் பேச்சை வளர்க்க இஷானி வெட்கிச் சிவந்தவள் “போங்க மாமா” என்ற சிணுங்கலுடன் மீண்டும் அவன் அணைப்புக்குள் சிறை புகுந்தாள்.

அவளை இறுக்கமாய் அணைத்தவனுக்கு இந்தக் காதலே வாழ்நாள் முழுமைக்கும் போதுமென தோண அவன் அணைப்பில் இருந்த இஷானியும் அவ்வாறே எண்ணி அவன் இதயத்துடிப்பின் லயத்தில் தன்னை மறக்க ஆரம்பித்திருந்தாள்.

ஜன்னல் வழியே வந்த காற்று அந்த இளம் ஜோடிகளைத் தீண்டி தொல்லை செய்ய வேண்டாமென எண்ணி திரைச்சீலையை மட்டும் தொட்டுத் தழுவிச் சென்றது அமைதியாக.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛