🌞 மதி 55 🌛

உலகில் தாது மணல் இருப்பில் 35 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. ஏற்றுமதி செய்வதில் 1988 வரை இந்தியா 14வது இடத்திலேயே இருந்து வந்தது. 1999 முதல் உலக கார்னெட் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது ரோஸ்கில் அமைப்பு.

விஸ்வநாதன் முன்னே தர்மசங்கடத்துடன் அமர்ந்திருந்தார் சந்திரசேகர். சங்கரராமன் எதுவும் பேசாதவராய் இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்க சாந்தினி அவர்களுக்கு பழச்சாறு கொடுத்துவிட்டு இத்தோடு என் வேலை முடிந்தது என்று நகரப் போனார்.

“சாந்திம்மா”

சந்திரசேகரின் குரல் தான். நீண்டநாட்களுக்குப் பின்னர் அவர் செவிகளில் இத்துணை ஆதுரத்துடன் சந்திரசேகரின் குரல் விழுகிறது. சாந்தினி என்னவென்று அவரை ஏறிட

“உங்க எல்லாருக்கும் நான் பெரிய துரோகம் பண்ணிருக்கேன்… நான் ஒத்துக்கிறேன்… ஆனா அதுக்கான தண்டனையை என் பொண்ணுக்குக் குடுத்துடாதிங்க… அவ என் பொண்ணா பிறந்ததை தவிர எந்தத் தப்பும் செய்யலையே!” என்று கிட்டத்தட்ட இறைஞ்சும் குரலில் வேண்டிய சந்திரசேகர் விஸ்வநாதனுக்கும் சங்கரராமனுக்கும் முற்றிலும் புதியவராகத் தெரிந்தார்.

விஸ்வநாதன் இவ்வளவு நேரம் பேசாதிருந்தவர் மெதுவாகத் தொண்டையைக் கனைத்தார்.

“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல சந்துரு… அஸ்மிய நாங்க எங்க வீட்டுப் பொண்ணா தான் பார்க்குறோம்… தேவ்வும் அவளும் பண்ணிக்கிட்ட மேரேஜ் வேணும்னா வித்தியாசமானதா இருக்கலாம்… ஆனா அவளை அவன் என்னைக்குமே மரியாதைக்குறைவா நடத்துனதே இல்ல… நீ இனிமே அஸ்மிய நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத” என்றார் நிதானமாக.

சங்கரராமன் இன்னும் பேசாதிருப்பது சந்திரசேகருக்கு என்னவோ போலிருக்க தயக்கத்துடன் “மாமா! உங்களுக்கு இன்னும் என் மேல உள்ள கோவம் போகல தானே” என்று வினவ

“கோவம் இல்ல சந்துரு! ஆதங்கம்… உன்னையும் விஸ்வாவையும் நானும் ராமமூர்த்தியும் என்னைக்காச்சும் பிரிச்சுப் பார்த்திருப்போமா? உங்க ரெண்டு பேரையும் புத்திசாலிங்கனு நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டோம்… ஆனா நீங்க ரெண்டு பேரும் மூளைய அடகு வச்சிட்டு ஒருத்தன் கிட்ட ஏமாந்துட்டு நிக்கிறிங்களே” என்றவரின் குரலில் வயோதிகத்தின் சோர்வுடன் கலந்த விரக்தி நிரம்பி வழிந்தது.

அவரது கூற்றில் சந்திரசேகர் திடுக்கிட்டு நிமிர சங்கரராமன் அதைக் கண்டுகொள்ளாதவராய் தொடர்ந்தார்.

“வினாயகமூர்த்திங்கிற கருப்புத்துணியைக் கண்ணுல கட்டிக்கிட்டு இருக்கிற உனக்கு எந்த விசயமுமே தெரியப்போறதில்ல சந்துரு… அதே போல விஸ்வாவுக்கு உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பைத் தவிர வேற எதுவும் பெருசா தோணப்போறதில்ல… ஆனா என் பேரன் உங்களை மாதிரி முட்டாள் இல்ல.. அதனால அவனைப் பத்தி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்ல… அவனையும் அஸ்மியையும் தொல்லை பண்ணாம இருக்கிறது தான் நாம அவங்களுக்குப் பண்ணுற மிகப்பெரிய உதவி”

இதைச் சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட விஸ்வநாதன் நண்பரிடம்

“நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத… தேவ்கும் அஸ்மிக்கும் இடையில என்னைக்குமே நமக்குள்ள நடந்த பிரச்சனை குழப்பத்தை ஏற்படுத்தாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே காரின் சத்தம் கேட்க அதைத் தொடர்ந்து ஜெயதேவ் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு வரும் சத்தமும் கேட்டது.

உள்ளே வந்தவன் அங்கே தந்தையையும் அவரது நண்பரையும் பார்த்துவிட்டு எதுவும் பேசாது அவனது அறைக்குச் செல்லப்போக அவனது தந்தையின் குரல் தடுத்து நிறுத்தவே என்னவென்று திரும்பிப் பார்த்தவனிடம்

“ஹால்ல ரெண்டு பேரு இருக்கோமே பார்த்தும் பார்க்காம போனா என்ன அர்த்தம்? முன்னாடி எப்பிடியோ இப்போ சந்திரசேகர் உன்னோட மாமனார்… அதுக்காகவாச்சும் மரியாதை குடுக்கணும்” என்று விஸ்வநாதன் அழுத்தமாக உரைக்க ஜெயதேவ் இறுக்கமான முகத்துடன் அவர்களருகில் வந்தான்.

“இவரு நம்ம வீட்டு ஹால்ல உங்களோட பேசுறத பார்த்துட்டு நான் அமைதியா போறேனே இதுவே இவருக்கு நான் குடுக்கிற அதிகபட்ச மரியாதை தான்பா… இதுக்கு மேல மரியாதை குடுக்கிற அளவுக்கு இவர் சொந்த வாழ்க்கையிலயும் சரி தொழில்லயும் சரி ஒழுங்கா இல்லையே” என்று நக்கலாய் மொழிந்துவிட்டு விருட்டென்று அகன்றான்.

விஸ்வநாதனுக்கு மகன் நண்பனிடம் காட்டிய அலட்சியத்தில் சங்கடமாகிவிட்டது. சந்திரசேகரோ தேவ் சொன்னபடி தான் செய்து வைத்த காரியங்களுக்கு நண்பன் இவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்துகொண்டதே பெரிய விசயம் என்று தோண அத்துடன் சங்கரராமன் சொன்ன தனது கண்ணைக் கட்டியிருக்கும் கருப்புத்துணி விசயத்தில் இத்தனை நாட்கள் தான் கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டோமோ என்ற ஐயமும் தோன்றியது.

இதற்கு மேல் இங்கேயே இருந்தால் வீணாய் தன்னால் விஸ்வநாதனுக்கும் ஜெயதேவ்வுக்குமிடையே மனக்கசப்பு உண்டாகும் என்று புரிந்து கொண்டவர் விஸ்வநாதனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப எழுந்தார்.

செல்லும் முன்னர் “நான் செஞ்ச துரோகத்தை மன்னிச்சுடுடா விஸ்வா” என்றவரின் கண்கள் கலங்கிப்போய் விட்டது.

இங்கு வரும் போது விஸ்வநாதன் தன்னைப் பற்றி என்ன மாதிரி எண்ணவோட்டத்துடன் இருக்கிறாரோ என்ற தயக்கத்துடன் தான் வந்திருந்தார். ஆனால் விஸ்வநாதனோ எதுவும் நடக்காததைப் போல மலர்ந்த முகத்துடன் சந்திரசேகரை வரவேற்றார். அதிலேயே சந்திரசேகரின் மனசாட்சி அவரைக் கெக்கலி கொட்டிச் சிரித்தது.

தனது சின்னத்தனம், துரோகம் அனைத்தும் அவர் முன்னே பூதாகரமாய் தெரிந்தது. சங்கரராமனும், சாந்தினியும் கூட முகம் காட்டாமல் வரவேற்ற பாங்கு அவரது குற்றவுணர்ச்சியைத் தூண்டவே இதோ இப்போது நண்பரின் முன்னிலையில் இதற்கு மேல் பொறுக்க முடியாது கலங்கிவிட்டார் அவர்.

விஸ்வநாதனுக்குத் தன் பழைய நண்பன் திரும்பி வந்தது போன்ற பிரமை. அவரைத் தோளோடு சேர்த்து அணைத்து வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவர் சங்கரராமனிடமும் சாந்தினியிடமும் இனி சந்திரசேகர் வந்தால் யாரும் முகம் காட்டக்கூடாது என கண்டிப்பாகக் கூறிவிட்டார்

*************

மாலை நேரம்…

நாட்டியாலயாவில் இளஞ்சிறுமிகள் கால் சதங்கைகள் செல்லமாய்ச் சிணுங்க நடனமாடிக் கொண்டிருக்க இஷானி அவர்களது பாவனைகளைக் கவனித்தவண்ணம் இருந்தாள். அச்சமயத்தில் ருத்ராவின் கார் சஞ்சீவினி பவனத்துக்குள் நுழைய அவளின் கவனம் சிறுமிகளிடம் இருந்து விலகி காரிலிருந்து இறங்கிவந்தவனிடம் சென்றது.

இஷானி தன்னை கவனிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவாறு வராண்டாவின் நாற்காலிகளில் அமர்ந்திருந்த ராஜகோபாலன் அலமேலுவிடம் சென்று வளவளக்க ஆரம்பித்தான். அவர்கள் அன்றைய தினம் வீட்டின் நிலவரம் எப்படி என்று கேட்க ருத்ரா வழக்கம் போலத் தான் என்று சொல்லவும் அந்த வயோதிகத் தம்பதியினருக்கு ஆச்சரியம்.

அன்றைய தினம் தான் ஆர்.எஸ்.குழுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நிறைவுற்றிருந்தது. அதன் தலைமை ஜெயதேவ் வசம் போய்விட்ட விரக்தியில் சந்திரசேகர் வினாயகமூர்த்தியுடன் சேர்ந்து ஏதும் தில்லுமுல்லு செய்யத் திட்டமிடுவாரோ என்ற ரீதியில் யோசித்திருந்தனர் அவர்கள்.

ஆனால் மந்தாகினியும் சரி, சந்திரசேகரும் சரி அஸ்மிதாவின் திருமணத்துக்குப் பின்னர் வெகுவாக மனம் மாறியிருந்தனர் என்பதை ருத்ரா அவர்களின் நடவடிக்கைகள் மூலம் கண்டிருந்தான். அதை இருவரிடமும் பகிர்ந்து கொள்ள இருவராலும் அதை முழுவதுமாக நம்ப இயலவில்லை.

இத்தகவலை இஷானி வாயிலாகத் தான் இருவரும் அறிந்திருந்தனர். கூடவே அஸ்மிதாவை ஜெயதேவ் போர்டின் மெம்பராக நியமித்ததையும் அறிந்திருந்தனர். இதில் என்ன திட்டம் மறைந்திருக்கிறதோ என்ற கலக்கம் வேறு அவர்களைச் சூழ்ந்திருந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இஷானி நடன வகுப்பை முடித்து விட்டு அங்கே வந்தவள் “எப்போ வந்திங்க மாமா?” என்ற கேள்வியுடன் அமர

“அப்போ நான் வந்தது உனக்கு தெரியாது” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனுக்கு ஒரு தோள்குலுக்கல் மட்டுமே அவளிடமிருந்து பதிலாக வந்தது.

ராஜகோபாலன், அலமேலுவிடம் பேச்சு கொடுத்தவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்த ருத்ராவின் கண்கள் அவளைப் படம் பிடித்ததை அவள் அறியவில்லை.

நடனவகுப்பு முடித்து விட்டு வந்திருந்ததால் நெற்றியில் வியர்வைப்பூக்கள் ஆங்காங்கு பூத்திருக்க புருவங்களும் கண்களும் அவள் பேசுவதற்கேற்ப அபிநயித்தன. சில நிமிட இடைவெளிகளில் விதவிதமான உணர்ச்சிகளின் உறைவிடமாய் மாறி வித்தியாசமான முகபாவனைகளை வார்த்தைக்கேற்ப கொடுத்தவளுக்குத் தன்னை ரசித்துக் கொண்டிருக்கும் கணவனின் பார்வை உறைக்காமல் போனது தான் நகைச்சுவை.

மாலைநேர பொன்னிற வெயிலில் அவள் அணிந்திருந்த மூக்குத்தி வெட்டி ஜொலிக்க செல்லமாக அவளது மூக்கை நிமிண்ட எழுந்த கரங்கள் அக்கம் பக்கம் பார்த்து நாசூக்காகத் தணிந்தது.

அதன் பின் அலமேலு நேரமாகிவிட்டதை நினைவுபடுத்தவும் இஷானி எழுந்து “போலாமா மாமா?” என்று கேட்க அவளது கணவன் தான் எப்போதோ கனவுலகில் பறந்து கொண்டிருந்தானே! எனவே காதில் அவள் சொன்ன எதுவும் விழாமல் போக இஷானி இரண்டு முறை அவன் தோளில் தட்டியபின்னர் தான் ருத்ராவின் மனம் மீண்டும் சஞ்சீவினி பவனத்துக்கு வந்தது.

அவள் தோளில் தட்டியதும் திடுக்கிட்டு விழித்தவன் அவள் நின்று கொண்டிருப்பதைய அப்போது தான் கவனித்தான். வீட்டிற்கு செல்லவேண்டும் என்ற நினைவு வரவே தானும் எழுந்தவன் ராஜகோபாலனிடமும் அலமேலுவிடமும் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

இருவரும் காரில் சென்று சேகர் வில்லாவை அடையும் வரையும் இஷானி அஸ்மிதாவிடம் போனில் பேசிக்கொண்டிருக்க ருத்ரா தனது கனவுலகில் சஞ்சரித்தபடியே காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இருவரும் வீட்டினுள் செல்ல ஹாலில் அதிசயத்திலும் அதிசயமாக அர்ஜூன் அவனது தந்தையுடன் அமர்ந்து ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட கணவன் மனைவி இருவருக்கும் மனம் இலேசானது போன்ற உணர்வு.

என்ன தான் தாங்கள் இருவரும் அவனைத் தாங்கினாலும் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தான் அவனை பண்படுத்தும் என்பதில் இருவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. எனவே மகனும் தந்தையும் பேசிக் கொண்டிருக்கட்டும் என இருவருக்கும் ஒரு புன்னகையைப் பதிலாக அளித்துவிட்டு இருவரும் அவர்களின் அறைக்குச் சென்றனர்.

இஷானி வழக்கம் போல முகம் கழுவிவிட்டு பூஜையறையில் விளக்கேற்றியவள் அதன் பின்னர் பொழுதுபோக்குக்காகப் படிக்கும் புத்தகங்களில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டபடி அமர்ந்துவிட்டாள். ருத்ராவுக்குப் பெரிதாய் வேலை ஒன்றும் இல்லாது போகவே குட்டி போட்ட பூனை மாதிரி போனை நோண்டிக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தவனுக்கு மாலை நேரத்தில் கண்ட இஷானியின் அழகுத் தோற்றமே மனமெங்கும் சாரல் வீசச் செய்து கொண்டிருந்தது.

நேரம் அது பாட்டுக்குச் செல்ல அவனுக்குத் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் செல்ல மனமில்லை. இந்த இளந்தென்றலும் நிலா வெளிச்சமும் அதில் அசைந்தாடும் மரக்கிளைகளும் வீட்டிற்குள் காணக் கிடைக்காத காட்சிகள் அல்லவா!

அங்கேயே அமர்ந்திருந்தவனுக்குச் சஞ்சீவினியிடம் இருந்து போன் வந்தது. அஸ்மிதாவை போர்டில் உறுப்பினராக்கிய விசயத்தைச் சொன்னவர் அவன் சென்ற பின்னர் அஸ்மிதா சஞ்சீவினி பவனத்துக்கு வந்தச் செய்தியையும் கூறினார்.

“இன்னும் சந்துரு என்ன தான் பண்ணி வச்சிருக்காரு? அவரு விஸ்வா அண்ணாக்குப் பண்ணுன துரோகத்துக்குத் தான் என் பொண்ணோட வாழ்க்கை அந்தரத்துல தொங்குது ருத்ரா… இன்னும் அவரு என்ன செஞ்சு அந்தப் பையனோட கோவத்தைச் சம்பாதிச்சு வச்சிருக்கிறாரோ? ஒருவேளை மானசா இறந்ததுக்கு சந்துரு தான் காரணமா?” என்று பதறியவரது குரலில் மகள் நிறும மேலாண்மையில் முக்கியப்பதவி வகிக்கும் சந்தோசம் இல்லை. மாறாக இதிலும் உள்கூத்து எதுவும் இருக்குமோ என்ற கவலை தான் இருந்தது.

ருத்ரா அவரைச் சமாதானம் செய்தவன் “அக்கா ப்ளீஸ்! நீ இன்னுமா தேவ்வை புரிஞ்சிக்கல? அவன் இப்போ செஞ்சதுக்குப் பின்னாடி காரணம் இருக்கும்.. ஆனா அது கண்டிப்பா அஸ்மிய பாதிக்காதுக்கா… நீ வீணா டென்சன் ஆகாத… நான் பார்த்துக்கிறேன்… இன்னும் டூ வீக்ஸ்ல ஏதோ மெடிக்கல் கேம்ப் இருக்குனு சொன்னியே அதுல கான்செண்ட்ரேட் பண்ணு” என்று சகோதரிக்குத் தைரியம் கொடுத்துவிட்டுப் போனை வைத்தவன் அடுத்து அழைத்தது ஜெயதேவ்வுக்குத் தான்.

அவன் அழைப்பை ஏற்றது தான் தாமதம், ருத்ரா படபடக்க ஆரம்பித்தான்.

“தேவ் இப்போ என்னய்யா ப்ளான் வச்சிருக்க? உன்னால என் தலை தான் உருளுது” என்று ஆரம்பித்தவன் மறுமுனையில் ஜெயதேவ் என்ன சொன்னானோ தெரியவில்லை., அடுத்தச் சில நிமிடங்களில் உம் கொட்டும் சத்தம் மட்டும் தான் கேட்டது. அதைத் தொடர்ந்து

“ஓகே! எதுக்கும் நீ கொஞ்சம் கேர்புல்லா இரு தேவ்… ப்ளான் பக்கா… பட் அஸ்மிய சமாளிக்கிறது இந்தத் தடவை ரொம்ப கஷ்டமா இருக்காது.. எனக்குத் தெரிஞ்சு நீ வேலைய முடிச்சிட்டு அவ கிட்ட சொன்னா போதும்” என்று அஸ்மிதாவின் மன நிலையைக் கருத்தில் கொண்டு பேசியபடி திரும்பியவன் அங்கே அனல் பறக்கும் விழிகளுடன் நின்றிருந்த இஷானியைக் கண்டதும் திகைத்தவனாய் போனை நழுவ விட அவனது மனைவி அதை லாவகமாய் பிடித்து மீண்டும் அவனிடமே நீட்டவே தயக்கத்துடன் வாங்கியவன் இப்போது இவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாது விழித்தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛