🌞 மதி 53🌛

அரசின் மோனசைட் அளவு பற்றிய விளக்கத்துக்கு தனியார் தாது மணல் நிறுவனங்கள் அளிக்கும் விளக்கம் ‘அந்த மணலில் இருந்து கிடைக்கும் மோனசைட்டிலிருந்து கிடைக்கும் யுரேனியம் மற்றும் தோரியத்தைக் கொண்டு எந்த அணு ஆயுதமோ அல்லது அணு உலைக்குத் தேவையான எரிபொருளோ தயாரிக்க முடியாது; கடல்நீரை எரிபொருளாக கொண்டு ஓடும் கார்களுக்கான ஆராய்ச்சி போல இந்த மோனசைட் பற்றிய இந்திய விஞ்ஞானிகளின் கூற்றும் இப்போதைக்கு சாத்தியமல்ல; 2085ல் வேண்டுமானால் அவர்களின் இந்த ஆராய்ச்சி பகுதியளவுக்கு வெற்றியடைய வாய்ப்புள்ளது’ என்பதே.

அன்று காலையில் ருத்ரா விழித்த போது அறையில் இஷானி இல்லை. கடந்த தினங்களில் அவள் முகத்தைப் பார்த்த பின்னர் தான் அவனுக்கு வைகறை வெளிச்சமே வந்தது. அப்படிப்பட்டவளின் பூமுக தரிசனமின்றி இன்றைய நாள் ஒளியிழந்து போய்விடுமே என்ற சிந்தனையுடன் சோம்பல் முறித்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் அலுவலகம் செல்லத் தயாராகி கீழே வந்தவன் இஷானியைப் பற்றிய நினைவுகளில் அர்ஜூனை பள்ளிக்குத் தயார் செய்ய மறந்துவிட்டோமே என்று மீண்டும் மாடியை நோக்கிச் செல்லத் திரும்பிய அக்கணம் சமையலறையில் இருந்து இஷானியும் அர்ஜூனும் நகைக்கும் ஒலி ரீங்காரமாய் அவன் செவியின் நரம்புகளை மீட்டியது.

அதை ரசித்தபடியே சமையலறையின் வாயிலில் நின்றவன் கையைக் கட்டிக்கொண்டபடி மனைவியும் மருமகனும் அங்கே அடித்துக் கொண்டிருந்த லூட்டியை ஒரு புன்னகையுடன் பார்க்க ஆரம்பித்தான்.

“எனக்கு தோசை தான் பிடிக்கும் இஷிக்கா! இட்லி இஸ் போரிங்” என்று சிணுங்கிய அர்ஜூனுக்கு இட்லியின் மகத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த இஷானியை அவள் கணவனின் கண்கள் கபளீகரம் செய்து கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

அதோடு அவன் கேட்டக் கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்தவள் அவனது சிறுபிள்ளைத்தனமான ஜோக்குகளைக் கேட்டு கலகலவென்று நகைக்க இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ருத்ராவின் இதழ்களில் மலர்ந்திருந்த குறுஞ்சிரிப்பு சற்று சத்தமான நகைப்பாக மாறியது.

அவனது சிரிப்புச்சத்தத்தில் இருவரும் திரும்ப “அக்காவும் தம்பியும் மார்னிங்ல கிச்சனை கதம் பண்ணுறிங்க போல?” என்றபடி அவர்களை நெருங்கியவன் அர்ஜூனிடம்

“நீ ஸ்கூல் பேக்கை எடுத்து வை… உன்னோட இஷிக்காவுக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்று சொல்லவும் அர்ஜூன் சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து ஓடினான்.

அவன் சென்றதும் இஷானி இட்லி குக்கரில் கவனம் செலுத்தியவள் சாம்பாரைத் தாளிக்க ஆரம்பித்திருந்தாள்.

ருத்ரா அதை வாசம் பிடித்தவன் “தாளிப்புக்கு வெங்காயம் வெட்டவே இல்லையே! நீ என்ன தான் சமையல் கத்துக்கிட்டியோ?” என்று சலித்துக் கொள்ள

“வாட்? இட்லி சாம்பாருக்கு வெங்காயம் போட்டுத் தாளிப்பாங்கனு நீங்க சொல்லி தான் நான் கேள்விப்படுறேன் மாமா…. அர்ஜூன் சொன்னதை வச்சு நான் உங்களை மாஸ்டர் செஃப் லெவலுக்கு இமேஜின் பண்ணிருந்தேன்… ஹூம்… நீங்க டாட்’ஸ் லிட்டில் பிரின்சஸ் கூட போட்டி போடுற ஆளுனு இப்போ தானே தெரியுது” என்று அவனைக் கேலி செய்து விட்டு தாளித்த சாம்பாரை வேறு பாத்திரத்தில் மாற்றினாள் இஷானி.

“நீ ஏன் கேலி பண்ண மாட்ட? சரி நம்ம ஒய்ப் தனியா கிச்சன்ல கஷ்டப்படுறாளே, கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேனு வந்தேன் பாரு… என்னைச் சொல்லணும்” என்றபடி சமையலறைத் திண்டின் மீது சாய்ந்து கொண்டான் ருத்ரா.

“நான் உங்க கிட்ட ஹெல்ப் கேக்கவே இல்லையே”

“கேக்காட்டாலும் நாங்க பண்ணுவோம்… ஏன்னா இது இரக்கமுள்ள மனசு”

“அஹான்! இப்போ நீங்க பண்ணுற பெரிய உதவியே இங்கே இருந்து போறது தான்… என் சீரியஸான குக்கிங் டைமை காமெடி ஆக்கிடாதிங்க”

“நோ வே… நீ என்ன பண்ணனுமோ பண்ணு… நான் இப்பிடியே நின்னு வேடிக்கை பாக்குறேனே ப்ளீஸ்”

இதற்கு மேல் சொன்னாலும் அவன் கேட்கப் போவதில்லை. அதனால் வேலையில் கண் ஆனாள் இஷானி. ருத்ரா அவளுக்கு இல்லாத வியர்வையைத் துடைக்கிறேன் பேர்வழியாக அவளைச் சீண்டிக்கொண்டே இருக்க அவனது சீண்டலில் முகத்தில் தோன்றிய வெட்கச்சிவப்பையும் இதழ்களில் மலர்ந்த புன்னகையையும் மறைக்க இயலாது திண்டாடியபடியே காலை உணவைச் சமைத்து முடித்தாள் இஷானி.

அத்துடன் அவனது சேட்டைகள் முடிந்ததா என்று கேட்டால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். உணவுமேஜையில் அமர்ந்திருந்த அர்ஜூன் தனக்கு ஊட்டிவிடுமாறு இஷானியிடம் கேட்க அவளும் சந்தோசமாகவே அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

அவர்களுடன் காலையுணவில் கலந்துகொண்ட மந்தாகினியும் சந்திரசேகரும் இதை ஒரு வித நெகிழ்ச்சியுடன் பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அன்று வினாயகமூர்த்தி இல்லாததால் உணவுநேரம் அர்ஜூனின் பேச்சுச் சத்தத்தால் கலகலப்பாக இருந்தது.

அவன் கூடவே லூட்டியடித்த ருத்ரா மருமகனிடம் “அஜ்ஜூ! உன்னோட அக்காக்கு என் மேல பாசமே இல்லடா… உனக்கு மட்டும் ஊட்டி விடுறா… என்னைக் கண்டுக்கவே இல்ல பாரு” என்று குறைபடவே அர்ஜூனின் பார்வை இஷானியின் புறம் திரும்பியது.

அவள் “அவ்ளோ தானே மாமா! ஊட்டி விட்டுட்டா போச்சு” என்று சொன்னபடி முழு இட்லியை எடுத்து ருத்ராவின் வாயில் திணிக்க முற்பட அவன் திடுக்கிட்டு போனவனாய்

“அடியே உன்னைச் சாப்பாடு ஊட்டிவிடச் சொன்னா நீ என்னை ஒரேயடியா மேல அனுப்ப பிளான் போடுற… நீ ஊட்டியே விட வேண்டாம்… நானே சாப்பிட்டுக்கிறேன்” என்று தனது தட்டுடன் விலகி அமர்ந்து கொண்டான்.

இஷானி அர்ஜூனைப் பார்த்து நமட்டுச்சிரிப்பை உதிர்த்தவள் ருத்ராவிடம் “என்ன மாமா இது? கொலையும் செய்வாள் பத்தினினு நீங்க கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டுவிட்டுக் கண்ணைச் சிமிட்ட

“அது அடுத்தவங்களை தான்… சொந்தப்புருசனை இல்ல… உன்னைச் சொல்லி பிரயோஜனம் இல்ல… இப்பிடி பழமொழி எழுதி வச்சு நிறைய ஆம்பளைங்க உயிருக்கு உத்திரவாதம் இல்லாம பண்ணுனாங்களே அவங்கள சொல்லணும்” என்று சொல்லிவிட்டுச் சாப்பாட்டில் கண் பதித்தான்.

இவர்களின் இந்தச் செல்லச்சண்டையைக் கண்டு சந்திரசேகரும் மந்தாகினியும் நமட்டுச்சிரிப்புடன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றனர். அவர்கள் சென்றதும் அர்ஜூனுடன் ருத்ராவும் கிளம்ப இஷானி அவனிடம் மெதுவாக வினாயகமூர்த்தி எங்கே என்று வினவ

“நீ அவரைப் பத்தி யோசிக்காத இஷி… தேவ் அவரை கவனிச்சுப்பான்… நம்ம அவரைக் கண்காணிக்கிறோம்னு தெரிஞ்சா மனுசன் உசாராயிடுவாரு… அப்புறம் அவருக்குச் சட்டப்படி தண்டனை வாங்கிக் குடுக்கணும்னு நினைக்கிற தேவ்வோட எண்ணம் நிறைவேறாம போய்டும்” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறினான்.

இஷானி அவன் சொன்னதை யோசித்தவள் அதுவும் சரி தான்… தாங்கள் எதுவும் செய்து அது தேவ்வின் முயற்சிக்குத் தடையாகிவிட்டால் கஷ்டம் தேவ்வுக்குத் தான் என்பதை உணர்ந்தவளாய் வழக்கம் போல எப்போது மாலை வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தாள். இப்போதெல்லாம் மாலை நேரத்தில் அவள் சஞ்சீவினி பவனத்தில் நடனப்பயிற்சியைப் பழையபடி ஆரம்பித்துவிட்டாள். நேரத்தை மட்டும் மாற்றிக் கொண்டாள்.

சேகர் வில்லாவில் பணியாட்களுக்குப் பஞ்சமில்லை தான். ஆனால் சில வேலைகளை அவளே செய்தால் தான் இஷானிக்குத் திருப்தி. அதில் ஒன்று காலை நேர காபியும் உணவும். மற்றதை சமையல் செய்பவரின் பொறுப்பில் விட்டுவிடுவாள்.

மாலை ஆனதும் வீட்டில் அவளது உபயோகத்துக்குக் கொடுத்திருந்த காரில் சஞ்சீவினி பவனம் செல்பவள் நாட்டியாலாயாவில் சென்று அங்கிருக்கும் சின்னஞ்சிறு தளிர்களுக்கு நாட்டியப்பயிற்சி அளிப்பாள். பின்னர் சிறிதுநேரம் ராஜகோபாலனிடமும் அலமேலுவிடமும் பேசிவிட்டு விளக்கேற்றும் முன்னர் சேகர் வில்லாவுக்கு வந்துவிடுவாள். இது கடந்த சில தினங்களில் அவளது தினசரி நடவடிக்கையாகவே மாறிவிட்டிருந்தது.

அதே நேரம் அஸ்மிதாவும் ஜெயதேவ்வும் முன்பு போல காரணமின்றி சண்டையிடுவதில்லை. அதற்கு பதிலாகச் சண்டை போடுவதற்கு ஏதாவது காரணத்தை உருவாக்கிக் கொண்டு வாதிடுவர். முதலில் சாந்தினி இவர்கள் இப்பிடி சண்டையிடுவதை வருத்தத்துடன் நோக்கியவர் இப்போதெல்லாம் இருவரும் சண்டையிட்டால் “கொஞ்சம் ஓரமா போய் சண்டை போடுங்க” என்று சொல்லுமளவுக்கு முன்னேறியிருந்தார்.

அன்றைய தினம் இருவரும் அமைதியின் திருவுருவங்களாகச் சாதாரணமாகப் பேசி சிரிக்கவும் அவருக்கே போரடித்துப் போய் விட்டது. ஆனால் அவரது மகன் மாலையில் சீக்கிரம் வீடு திரும்பி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். ஜெயதேவ் அன்று சீக்கிரமாக அலுவலகத்திலிருந்து வந்தவன் நேரே தனது அறைக்குச் செல்ல சாந்தினி சமைத்துக் கொண்டிருந்த ஏதோ புதுவகை ரெசிபியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஸ்மிதா அந்த ரெசிபி தயாரானதும் ஒரு பிடி பிடித்தாள்.

சாந்தினி அஸ்மிதாவிடம் ஜெயதேவ்வுக்குக் கொடுக்குமாறு ஒரு தட்டை நீட்ட மறுக்காது வாங்கிக் கொண்டவள் தங்களின் அறையில் சென்று தேடிய போது தேவ் அங்கில்லை. அப்படி என்றால் அவனது அலுவலக அறையில் இருப்பான் என்று யூகித்தவள் அங்கே செல்ல அவன் லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்மிதா அவனிடம் தட்டை நீட்ட அவனோ ஒரு கரத்தால் அதை மறுத்துவிட்டு வேலையில் மூழ்க அவள் எரிச்சலுடன் லேப்டாப்பை பட்டென்று மூடியவள் மீண்டும் தட்டை நீட்ட ஜெயதேவ் கோபத்துடன் நிமிர்ந்தவன் சோபாவை விட்டு எழுந்து

“அறிவில்ல உனக்கு? முக்கியமான டாக்குமெண்டை ரீட் பண்ணிடிருக்கிறவன் கிட்ட வந்து ப்ளேட்டை நீட்டுற” என்று கத்தியதோடு மட்டுமன்றி அந்தத் தட்டைச் சற்று பலமாகவே தட்டிவிட அதிலிருந்த சிற்றுண்டி அஸ்மிதாவின் அழகிய க்ரீம் வண்ண டாப்பில் கொட்டி அதை பாழ்படுத்திவிட்டது.

கூடவே அதைச் சுடச் சுட எடுத்து வந்திருந்ததால் சூடு மேனியைத் தாக்க வலி பொறுக்க முடியாது பொங்கிய சினத்துடன் ஜெயதேவ்வின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் அவள்.

ஜெயதேவ் வேண்டுமென்று எதையும் செய்யாதவன் தெரியாமல் தட்டை விலக்கிவிட்டதற்கு இவள் தன் கன்னத்தில் அறைவாளா என்ற கோபத்துடன் அடுத்த நொடியே அஸ்மிதாவின் கன்னத்தில் அறைய இம்முறை சூடு பட்ட எரிச்சலோடு அவன் கன்னத்தில் அறைந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள அவள் காச்மூச்சென்று கத்த துவங்கினாள்.

“ஹவ் டேர் யூ டு ஸ்லாப் மீ? ஐயோ பாவமேனு உனக்கு ஸ்னாக்ஸ் கொண்டு வந்ததுக்கு நீ என் கன்னத்துலயா அறையுற? இருடா இப்போவே ஆன்ட்டி கிட்ட சொல்லுறேன்” என்று கத்திவிட்டு விறுவிறுவென்று வெளியேற ஜெயதேவ்வும் அவள் பின்னே சென்றான்.

ஏனெனில் அவனது கெட்ட நேரத்துக்கு அங்கே விஸ்வநாதனோ சங்கரராமனோ இருந்துவிட்டால் ஜெயதேவ்வின் நிலை பரிதாபமாய் போய்விடுமே!

அஸ்மிதா விறுவிறுவென்று சாந்தினியிடம் சென்றவள் தன் கன்னத்தைக் காட்டிவிட்டு “நான் ஒன்னுமே செய்யல ஆன்ட்டி… ஸ்னாக்ஸ் கொண்டு போனதுக்கு உங்க பையன் என்னை அடிச்சிட்டான்” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.

ஜெயதேவ் அவள் பின்னே வந்திருந்தவன் “பொய் சொல்லாத அஸ்மி… நீ என்னை அறைஞ்சதுக்கு தான் நானும் உன்னை அறைஞ்சேன்.. பின்ன நீ அறைஞ்சுக்கோனு கன்னத்தை காட்டிட்டு நிக்கிறதுக்கு நான் ஒன்னும் ஜானி டெப் இல்ல” என்று சொல்ல

“நீ தான் ஃபர்ஸ்ட் என் மேல சூடா இருந்த ப்ளெட்டை தட்டிவிட்ட… அதுக்குத் தான் நான் அறைஞ்சேன்” என்றாள் அஸ்மிதா வெடுக்கென்று.

“லேப்டாப்பை க்ளோஸ் பண்ணி என்னை இரிட்டேட் பண்ணுனது நீ தான்… அதான் நான் ப்ளேட்டை தட்டிவிட்டேன்” இது ஜெயதேவ்.

இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டியதில் சாந்தினிக்குத் தான் மயக்கம் வரும் போலிருந்தது.

“நிறுத்துறிங்களா ரெண்டு பேரும்? சண்டை போடுற விசயத்துல  உங்க கிட்ட குழந்தைங்க தோத்துருவாங்க… நல்லா கேட்டுக்கோங்க இனிமே உங்க சண்டைக்கு நான் பஞ்சாயத்து பண்ண மாட்டேன்… அதே மாதிரி ஹால்ல நின்னு இப்பிடி சண்டை போட்டு எங்களுக்கு பி.பியை ஏத்தாதிங்க… உங்க ரூம்ல போய் சண்டை போட்டுக்கோங்க” என்று கிட்டத்தட்ட உச்சஸ்தாயியில் கட்டளையிட இருவரும் வாய் மூடி கப்சிப்பென்று நின்றனர்.

சாந்தினி இருவரையும் ஒரு நிமிடம் ஏறிட்டவர் இவர்களை என்ன தான் செய்வது என்று புரியாதவராய் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தார்.

அஸ்மிதா அவர் சென்றதும் ஜெயதேவ்வை முறைத்தவள் விறுவிறுவென்று அவர்களின் அறையை நோக்கிச் சென்றாள். ஜெயதேவ்வும் அவளைத் தொடர்ந்து சென்றவன் நேரே அலுவலக அறைக்குள் சென்று விட்டான். அதன் பின் அவன் வேலை முடித்து அவர்களின் அறைக்குத் திரும்பிய போது அஸ்மிதா இஷானியிடம் போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாது இஷி… எங்க மாமாக்கு ஊட்டி விட்டா நீ ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்ட” என்றவளின் கேலிக்கு மறுமுனையில் இஷானி என்ன கேட்டாளோ தெரியவில்லை. அஸ்மிதா அதற்கு

“அடேங்கப்பா! அவனுக்கு ஊட்டிவிட்டுட்டாலும் அப்பிடியே சாப்பிட்டிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான்… எப்போ பார்த்தாலும் லேப்டாப்பையே கட்டிக்கிட்டு அழுறது தான் அவனுக்குத் தெரியும்..” என்று நொடித்துக் கொண்டாள் அஸ்மிதா.

மீண்டும் இஷானி அவளை மறுமுனையில் ஏதோ கேலியாகச் சொல்லி சீண்டியிருக்க வேண்டும். அதற்கு அவள் பதிலில் அது தெரிந்தது.

“ஆமாடி இப்போ மட்டும் அவன் காதல் மழையில நனைஞ்சு நான் ஜன்னி கண்டு கிடக்கிறேன் பாரு… இவ ஒருத்தி… இவனை மேரேஜ் பண்ணுனதுக்கு சிட்டி மாதிரி ஒரு ரோபோவைக் கல்யாணம் பண்ணிருக்கலாம்… அதுக்குக் கூட ஒரு கட்டத்துல காதல் வந்துச்சு.. ஆனா தேவ்வுக்கு இந்த ஜென்மத்துல அவன் லேப்டாப்பைத் தவிர வேற எது மேலயும் காதல் வராது… நீ காமெடி பண்ணாம போனை வை தாயே” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

போனைப் பார்த்தபடி திரும்பியவள் தன்னெதிரே கையைக் கட்டியபடி நின்றிருந்தவனைக் கண்டதும் விதிர்விதிர்த்துப் போனாள். தான் பேசியதைக் கேட்டிருப்பானோ என்ற பதற்றத்தில் கண்ணின் கருமணிகள் அங்குமிங்கும் உருண்டோட தப்பு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல அவள் நின்ற கோலத்தை ஆர்வத்துடன் ரசிக்கத் தொடங்கினான் ஜெயதேவ்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛