🌞 மதி 41🌛

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில், “இந்திய அருமணல் நிறுவனம்’ (இந்தியன் ரேர் எர்த் லிமிட்டெட்) எனும் மத்திய அரசு நிறுவனம் தனியார் பங்களிப்புடன் 1950ல் உருவானது. பின் முழுமையும் அரசு நிறுவனமானது. கடற்கரை மணலிலிருந்து கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் ஆகிய கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு பின்னர் இத்தொழிலில் இறங்கிய சில தனியார் நிறுவனங்கள் அரசு குத்தகைக்கு வழங்கிய நில அளவைத் தாண்டியும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் – தினமலர் (09.08.2013)

அஸ்மிதா தேவ்விற்காகக் காத்திருக்க அவனோ அவளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே தவிர்த்தான். அவனால் அவள் முகத்தில் தைரியமாக விழிக்க முடியவில்லை. அனைவருக்கும் அவன் தேவ்வாக இருக்கலாம், ஆனால் அஸ்மிதாவின் முன்னே சென்றதும் அவனை அறியாது அவன் ஜெய்யாக மாறி திணற ஆரம்பித்துவிடுவானோ என்ற பயம் அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது.

மற்றவர்கள் முன்னிலையில் அவன் தலை நிமிர்ந்து தைரியமாக நின்றாலும் அஸ்மிதாவின் விஷயத்தில் அவன் செய்த திருமணம் எனும் அனர்த்தம் தான் அவனைத் தடுமாற வைத்தது. ஆனால் நீண்டநேரம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடியாதல்லவா! அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மெதுவாக அவனது அறைக்குச் சென்றவன் அங்கே உறங்காது வெறித்திருந்த அஸ்மிதாவைக் கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த சலனமற்ற நிலை மாறி அலைக்கழிப்பு தோன்றியது அவனுள்.

அஸ்மிதா அவனைக் கண்டதும் கோபத்தில் முகம் சிவக்க எழுந்தவள் மௌனமாய் அவனருகில் வரவும் தேவ்விற்கு அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்பது தான் அப்போதைய கவலை. இது நாள் வரை ஜெய்யாக அவளிடம் நடித்த போது மிகவும் சிரமப்பட்டு முகத்தில் அப்பாவித்தனத்தைக் கொண்டு வந்தவனுக்கு இப்போது அவனது உண்மை இயல்பு தெரிந்து முன்னே வந்து நிற்பவளிடம் மற்றவர்களிடம் காட்டும் அலட்சியத்தைக் காட்ட யோசனையாக இருந்தது.

அஸ்மிதா விழியெடுக்காமல் அவனைப் பார்த்து வைக்க அவன் நன்கு அறிவான் அது ஒன்றும் புது மனைவி கணவனைக் காணும் நாணப்பார்வை அல்ல என்பதை. இருந்தாலும் தன் பக்க நியாயத்தை விளக்கிவிட்டால் இவள் சமாதானமாகி விடுவாள் என்று நம்பியவன், சமாதானம் ஆன பின்னர் என்ன என்பதை யோசிக்கவேயில்லை.

அதே எண்ணத்துடன் அழுத்தமானக் குரலில் “அஸ்மிதா…..” என்று ஆரம்பித்தவனின் கன்னத்தில் அதை விட அழுத்தமாகப் பதிந்தது அஸ்மிதாவின் கரங்கள். தேவ்வின் கன்னங்கள் எரிய ஆரம்பிக்க கண்ணில் சீற்றத்துடன் நிமிர்ந்தவனின் முகத்தில் தெரிந்த கோபம் அவன் ஜெய் அல்ல, தேவ் என்பதை அஸ்மிதாவுக்குப் புரியவைத்தது. ஆனால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவன் தனக்குச் செய்த காரியங்களுக்கு அவனுக்குக் கோபமே வரக் கூடாது என்று எண்ணியவளாக நிமிர்வுடன் நின்றாள் அவள்.

தேவ் கன்னத்தைத் தடவிவிட்டவன் “ஓகே! ஐ அண்டர்ஸ்டாண்ட்… உன்னோட பாயிண்ட் ஆஃப் வியூல நான் பண்ணுனது பெரிய தப்பு… ஐ அக்ரி… பட் உன் கிட்ட அந்த ஷேர்சை வாங்கிறதுக்காக நான் நடிக்கல” என்று கடினமானக் குரலில் கூற

“தென் ஒய் டிட் யூ மேரி மீ? உனக்கு ஷேர்ஸ் கிடச்சதுக்கு அப்புறமும் ஏன் என்னை மேரேஜ் பண்ணுனடா? என் கிட்ட விசயத்தைச் சொல்லிருந்தா நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்திருப்பேனே!” என்று கேட்டவாறு நின்றாள் அவள்.

காலையிலிருந்து அனைவரும் அவனிடம் கேட்கும் ஒரே கேள்வி இது தான். இந்த ஒரு கேள்விக்கு அவன் தான் எத்தனை முறை பதிலளிப்பான்? உள்ளுக்குள் மூண்ட எரிச்சலும், அஸ்மிதா கன்னத்தில் அறைந்ததால் உண்டான கோபமுமாய் ஒரு சேர நிமிர்ந்தவன் அலட்சியத்துடன்

“கல்யாணத்தை நிறுத்திட்டு என்ன பண்ணுவ? ம்ம்… நான் ஒன்னு சொல்லவா? இந்தக் கல்யாணம் நடக்காம இருந்திருந்தா நீ வெறும் அஸ்மிதா சந்திரசேகராவே இருந்திருந்தா, உன்னோட ஷேர்ஸ் என் கையில இருக்கிறது என்னைக்கு வினாயகமூர்த்திக்குத் தெரியவருதோ அன்னைக்குத் தான் உன் வாழ்க்கையோட கடைசி நாளா இருந்திருக்கும்… இப்போ நின்னு பேசுறியே அதுல்லாம் நடந்திருக்காது, உன்னைப் புதைச்ச இடத்துல இந்நேரம் புல்லு முளைச்சுருக்கும்… எனக்காக எதையும் யோசிக்காம அந்தப் பேப்பர்ஸ்ல சைன் பண்ணுன பொண்ணு உயிரோட இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்… அதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… ஏன்னா வினாயகமூர்த்தியால சந்திரசேகரோட முன்னாள் மனைவியோட மகளை ஈசியா மேல அனுப்பிட முடியும்… தேவ்வோட ஒய்பை அவனால நெருங்க கூட முடியாது… நெருங்கவும் நான் விடமாட்டேன்… இதோட கடைசி! இனிமே இந்த டாபிக்கை நீ எடுக்காத… எனக்குப் பதில் சொல்ல பிடிக்கல” என்று கட்டளையிடும் குரலில் முடிக்க அஸ்மிதாவுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

“எக்ஸ்கியூஸ் மீ! நான் ஏன் அமைதியா இருக்கணும்? நான் இங்கே வந்ததே உனக்கு பாடம் கத்துக் குடுக்கத் தான்…” என்று அவனைப் போலவே அவளும் எரிச்சல் மிகுதியில் கத்த

தேவ் புருவத்தை ஆட்காட்டிவிரலால் நீவியபடி “இஸிண்ட்? அப்போ அந்த ஓரமா நின்னு கிளாஸ் எடு… நான் கேட்டுக்கிட்டே டிரஸ் சேஞ்ச் பண்ணிடுறேன்” என்று சொன்னவன் அதற்கு அவள் பதிலளிக்கும் முன்னரே சட்டையின் பொத்தானில் கைவைக்கவும்

“சை! கொஞ்சம் கூட வெக்கமே இல்லாதவன், வீணாப்போனவன்! ஆளையும் மூஞ்சியையும் பாரு… என்னையவா கலாய்க்கிற? ஏன்டா இவளை மேரேஜ் பண்ணிக்கிட்டோம்னு உன்னை அழ வைக்கல, என் பேரு அஸ்மிதா இல்லடா… வந்து உன்னை வச்சிக்கிறேன்” என்று கடுப்புடன் முணுமுணுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் அஸ்மிதா.

அவள் சென்றதும் கன்னத்தை தடவிக்கொண்டான் தேவ். இன்னும் அவள் அறைந்தது வலித்தது. அவன் ஒன்றும் கல் மண்ணால் செய்த உருவமோ சிலையோ இல்லையே! ஆணாக இருந்தாலும் அவனுக்கும் அடிபட்டால் வலிக்கத் தானே செய்யும்.

*********

சஞ்சீவினி பவனம்….

இஷானி எப்போதும் அஸ்மிதாவின் வாய் ஓயாத பேச்சாலும் அவளுக்குப் பதிலடி கொடுக்கும் அலமேலுவின் குறும்புத்தனத்தாலும் கலகலப்பாக இருக்கும் வீடு இன்று அமைதியில் உறைந்திருப்பதைக் கண்டு மனம் வெறுத்தவளாய் அவர்கள் இருவரும் இதுவரை பொதுவாகப் பயன்படுத்தி வந்த அவர்களின் அறைக்குள் தஞ்சமடைந்திருந்தாள். படுக்கையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளின் கவனம் எதிர்புறமிருந்த சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் பதிந்திருந்தது.

அஸ்மிதாவும் அவளும் கல்லூரி முடிந்ததும் பட்டமளிப்புவிழாவின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் அது. முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவளும் அஸ்மிதாவும் சஞ்சீவினியுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் அது.

அதிலிருந்து சிரமப்பட்டு முகத்தைத் திருப்பியவளின் கவனம் டிரஸ்ஸிங் டேபிளின் மீதிருந்த வாஸ்லின் லோசன் மீது பட்டு மீண்டது. அழக்குப்படுத்திக் கொள்வதிலோ, சருமப்பராமரிப்பிலோ இஷானிக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அஸ்மிதா அப்படி அல்ல.

“செல்ப் க்ரூமிங் (SELF GROOMING) ஒவ்வொரு பொண்ணுக்கும் தன்னம்பிக்கையைக் குடுக்கும் இஷி… மேக்கப் வேற, ஸ்கின் கேர் வேற… ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காத… ஸ்கின்ல இருக்கிற இம்பெர்ஃபெக்சனை மறைச்சுப் பெர்பெக்டா பூசி மெழுகுறதுக்குப் பேரு மேக்கப்… ஆனால் ஸ்கின் கேர்ங்கிறது ஸ்கின்னை முடிஞ்சளவுக்குச் சுத்தமா வச்சிக்க டிரை பண்ணுறது தான்… அதுக்குத் தான் இதைலாம் நான் யூஸ் பண்ணுறேன்”

தனது தரப்பை விடாமல் வாதாடுவாள் அஸ்மிதா. அதோடு நிற்காமல் இதே வாஸ்லின் லோசனை இஷானியின் முகத்தில் பூசிவிட்டு அவள் கையில் அகப்படாமல் வீட்டையே ரவுண்ட் அடிக்க வைப்பாள். அதையெல்லாம் நினைத்துப் பார்த்த இஷானிக்கு இப்போது அஸ்மிதா என்ன செய்வாளோ என்ற சிந்தனை தான்.

புது வீடு, பழக்கமற்ற மனிதர்கள், அங்கே சூழ்நிலை எப்படியோ! சாதாரணமான திருமணமாக இருந்திருந்தால் கூட கணவனின் அருகாமையில் எத்தகைய தயக்கமும் பெரிய விசயமாகத் தோணாது எனலாம். ஆனால் இங்கே இத்தனை நாள் பழக்கமாகியிருந்த ஜெய்யே முற்றிலும் புதியமனிதன் தான் எனும் போது அவனது குடும்பத்தினர் எப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடுமென்ற கவலையும், அவர்கள் அனைவரையும் அஸ்மிதா எப்படி சமாளிக்கப் போகிறாள் என்ற யோசனையும் இஷானிக்குள் கோயிலிலிருந்து திரும்பியதில் இருந்தே ஓடிக்கொண்டிருந்தது.

பேசாமல் அவளுக்குப் போன் செய்து அவளது மனநிலை எப்படி உள்ளது என்று கேட்டுப் பார்ப்போம் என்று போனை எடுத்தவள் அஸ்மிதாவின் எண்ணுக்கு அழைக்கும் முன்னரே அவளது எண்ணுக்கு ருத்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனது எண்ணுடன் தோன்றிய அவனது புகைப்படம் இத்தனை நாட்கள் அவளுள் ஏற்படுத்திய வெட்கக்குறுகுறுப்பு இன்றைக்குச் சுத்தமாக எழவில்லை.

மாறாக தனது சகோதரியின் வாழ்வில் குழப்பம் ஏற்படுத்தியவனுக்கு உதவியவன் என்ற கசப்புணர்வு தான் அவள் மனதை ஆக்கிரமித்தது. அழைப்பைத் துண்டிக்க பரபரத்த கரங்களுக்கு மூளையின் சாம்பல் நிறச் செல்கள் அறிவுறுத்தியது யாதெனில்

“நீ இப்போ காலை கட் பண்ணு… ஆனா அவன் அடுத்த சிலமணி நேரத்துல வீட்டுல வந்து நிப்பான்.. அப்போ உன்னால தேவை இல்லாம இஷானிக்குத் தான் கஷ்டம்… சோ கொஞ்சநேரம் என் ஆர்டரை ஃபாலோ பண்ணு” என்பதே.

மூளையின் கட்டளையிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட விரல்கள் அழைப்பை ஏற்க செவி அவன் குரலைக் கேட்க ஆரம்பித்தது.

“என்ன பண்ணிட்டிருக்கிற இஷி?” என்று எடுத்தவுடன் குரலில் டன் கணக்கில் அக்கறையுடன் கேட்டவனுக்கு

“அஸ்மி இப்போ அங்கே எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறாளோனு யோசிச்சிட்டிருக்கேன்” என்று நறுக்கு தெறித்தாற்போன்ற பதில் கிடைத்தது அவளிடமிருந்து.

“அவ ஏன் கஷ்டப்படப் போறா? தேவ் அவளை நல்ல படி பார்த்துப்பான்” என்றான் ருத்ரா அவளுக்குப் பதிலளிக்கும் வேகத்துடன்.

“இசிண்ட்? ஆனா பாருங்க, அஸ்மி காதலிச்சது ஜெய்யை, தேவ்வை இல்லையே… யாரு வாழ்க்கை எப்பிடி போனாலும் அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” என்று விட்டேற்றியாக இஷானியிடம் இருந்து கேள்வி வரவும் ருத்ராவுக்குக் கோபம் உச்சந்தலை மீது ஏறி காளிங்கநர்த்தனம் புரிந்தது. ஆனால் அடக்கிக் கொண்டவன்

“நான் அவளைப் பத்தி கவலைப்பட்டதால தான் தேவ்வோட அவ இருந்தா பாதுகாப்புங்கிற முடிவுக்கு வந்தேன்” என்றான் அமர்த்தலாக.

இஷானிக்கு ‘பாதுகாப்பு’ என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தம் எரிச்சலை உண்டாக்கியது. இவனும் சரி, அஸ்மிதாவின் கழுத்தில் தாலி கட்டியவனும் சரி, பாதுகாப்பு என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தடியன்களும் தங்கள் வாழ்வில் வரும் முன்னர் சஞ்சீவினியின் பாதுகாப்பில் தாங்கள் சந்தோசமாகத் தானே இருந்தோம் என்ற எண்ணம் இஷானியை அவனது பேச்சை அலட்சியப்படுத்த வைத்தது.

“சும்மா சால்ஜாப்பு சொல்லாதிங்க… நீங்க சொல்லுற எதையும் நான் நம்ப மாட்டேன்… இப்போ எதுக்காக எனக்கு கால் பண்ணுனிங்க? அதான் நமக்கு இடையில இனிமே எந்த ரிலேசன்ஷிப்பும் இல்லைனு நான் தெளிவா சொல்லிட்டேனே”

“அதே மாதிரி நானும் உன்னை டெம்பரரியா தான் அக்கா வீட்டுல தங்கச் சொல்லிருக்கேனு தெளிவா சொன்னேனே… உனக்குச் செலக்டிவ் அம்னீசியாவா?”

“அம்னீசியாவும் இல்ல, ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இனிமே எனக்கு கால் பண்ணாதிங்க… எனக்கு உங்க கூட பேச இஷ்டமில்ல… உங்க குரலைக் கேக்கிறப்போலாம் ‘தேவ்கு நான் தான் ஹெல்ப் பண்ணுனேனு’ நீங்க சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வருது….. ப்ளீஸ்! அடிக்கடி போன் பண்ணி என்னை கோவப்படுத்தாதிங்க” என்றவள் போனை வைத்துவிட்டாள். மீண்டும் அவன் அழைத்துவிடுவானோ என்று பயந்தவளாய் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள்.

இப்படி எடுத்தெறிந்து கோபமாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டோமே என்று வருந்தியவள் பக்கவாட்டில் இருந்த டிரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை வெறிக்க அது அவள் இன்னும் இஷானி இல்லை, திருமதி ருத்ரா என்பதை அவள் கழுத்திலிருக்கும் மாங்கல்யம், நெற்றியில் மங்கலாகத் தெரிந்த குங்குமம் மூலமாகச் சொல்லாமல் சொன்னது.

இஷானியின் நிலை இவ்வாறிருக்க ருத்ரா அவளின் பேச்சு ஏற்படுத்திய கோபத்தையும் தாண்டி தனது கோணத்தைச் சிந்திக்காமல் குற்றம் சாட்டுபவளின் மனதை எப்படி மாற்றுவது என்பதை அறியாது தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்.

அதே நேரம் தேவ்வின் வீட்டில் அஸ்மிதா அவனது லேப்டாப்பை டீபாய் மீது வைத்தவள் தண்ணீர் ஜக்கை எடுத்து அதன் மீது தண்ணீரை ஊற்றவா வேண்டாமா என்று விழியாலேயே அவனை வினவிக் கொண்டிருந்தாள்.

தேவ் எரிச்சலுடன் “அஸ்மி! ஐ அம் வார்னிங் யூ, அந்த லேப்டாப்ல ஒரு ட்ராப் வாட்டர் பட்டாலும் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று எச்சரித்துக் கொண்டிருந்தான்.

அஸ்மிதா அப்படி வா வழிக்கு என்று மனதிற்குள் எண்ணியவள் “நான் தண்ணியை ஊத்தக் கூடாதுனா நீ இந்த ரூம்ல தூங்க கூடாதுடா… ஒழுங்கா எந்திரி” என்று பதிலுக்கு மிரட்டியவளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டவன் விறுவிறுவென்று படுக்கையிலிருந்து எழுந்து டீபாய் மீதிருந்த லேப்டாப்பை எடுத்துக் கொண்டான்.

அஸ்மிதாவை முறைத்தபடியே “உன்னோட ரவுடியிசத்தை ரொம்ப நாளுக்குப் பொறுத்துக்க முடியாது… பீ கேர்ஃபுல்” என்று மீண்டும் எச்சரிக்க

அவளோ “ஐயோ நீ சொன்னதுல நான் அப்படியே பயந்து நடுங்கிட்டேன்… எனக்குக் காய்ச்சல் கூட வந்துடுச்சு பாரேன்” என்று கேலி செய்ய அவன் தலையிலடித்துக் கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

அவளைக் கடக்கும் முன்னர் “பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரத்துல தொங்கித் தான் ஆகணும்” என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்து வைத்தது. அதைத்  துளியும் கண்டுகொள்ளாமல் அவன் சென்றதும் கதவை அறைந்து சாற்றியவள் அக்கடாவென்று படுக்கையில் விழுந்தாள்.

விளக்கை அணைத்துக் கண்ணையும் மூடிக்கொண்டாள். அறையை மட்டுமன்றி அவள் மனதையும் இருள் சூழ்ந்து கொண்டது. ஆனால் உறக்கம் தான் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மன அமைதி இல்லா இடத்தில் எப்படி உறக்கம் வரும்? அதே போல தனது அலுவலக அறைக்குள் கிடந்த சோபாவில் சிரமப்பட்டு படுத்திருந்த தேவ்வாலும் தூங்க இயலவில்லை. அவனுக்குத் தெரியும் அவ்வளவு எளிதில் அஸ்மிதா இந்தத் திருமண விசயத்தில் தனது தவறை மன்னிக்க மாட்டாள் என்று. ஆனால் அவளைச் சமாளிப்பது எப்படி என்பது தான் புரியவில்லை அவனுக்கு. சிறுபெண் தானே! அவளுக்குத் திருமணம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் என்று எண்ணினாலும் இன்னொரு மனமோ உயிருடன் இருந்தால் தானே அவளது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று சிந்திக்க அந்த விவாதங்களுக்குகிடையே உறங்க முயன்றான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛