🌞 மதி 36🌛

.நாவின் மனித உரிமைகள் ஆணையத் தகவலின் படி உலகமக்கள் தொகையில் 1.7% க்கு மேல் இடையிலிங்கமக்கள் உள்ளனர். இது கிட்டத்தட்ட தமிழகத்தின் மக்கள் தொகைக்குச் சமம் – கோபி ஷங்கர் (ஸ்ருஷ்டி அமைப்பு)

ருத்ராவைத் தன்னுடன் அழைத்துச் சென்ற அஸ்மிதா அவனிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டுமென்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கே சென்று நீண்டநேரமாகியும் எதுவும் பேசாமல் அமைதியுடன் நின்றிருந்தாள். ருத்ரா அவளது வழக்கத்துக்கு மாறான அமைதிக்கு என்ன காரணம் என்று புரியாது அமர்ந்திருந்தவன் கூடவே இஷானியின் மனநிலை என்னவாக இருக்குமோ என்ற குழப்பம் சூழ இருந்தான்.

அஸ்மிதா தயக்கத்துடன் “மாமா ஜெய் எங்களோட மேரேஜ் பத்தி பேசுனான்… திடுதிடுப்புனு நேத்து நைட் கால் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாமா அஸ்மினு கேக்கிறான்… நான் என்ன பதில் சொல்லுறது?” என்று கேட்க

ருத்ரா தலை நிமிர்ந்து அவளை ஏறிட்டவன் “இது நல்ல விசயம் தானே.. இதுக்கு ஏன் நீ இவ்ளோ யோசிக்கிற? லவ் பண்ணுனா எதாவது ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேக்க தான் செய்வான்… நீ அதுக்கு என்ன சொன்ன அஸ்மி?” என்று வினவ

“எனக்கு என்ன சொல்லணும்னு புரியல மாமா… காதலிக்கிறேனு டக்குனு சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லுறதுக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு… நீங்க அம்மா கிட்ட கேட்டு சொல்லுறிங்களா?” என்று கேட்டுவிட்டு அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“ப்ளீஸ் மாமா! நானே அம்மா கிட்ட போய் எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கனு எப்பிடி கேப்பேன்? எனக்கு ஒரு மாதிரி இருக்கு… நீங்க கேளுங்க மாமா” என்று கொஞ்சியபடி அவனைத் தன் திருமண விசயம் பேசுவதற்கு தயார் படுத்தினாள்.

ருத்ரா அவளது தயக்கத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டான். தானே சஞ்சீவினியிடம் பேசுவதாகச் சொல்லவும் அஸ்மிதா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இந்த விசயத்தை முதலில் ஜெய்யிடம் தெரிவிக்கச் செல்வதாக உற்சாகத்துடன் போனில் அவனுக்கு அழைத்தபடி அங்கிருந்து வீட்டை நோக்கி நடைப்போட்டாள்.

ருத்ரா காதல் திருமணத்தில் முடியப் போகும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துச் செல்பவளை வாஞ்சையுடன் பார்த்தவன் அடுத்த நொடி இன்னும் இழுபறியாக இருக்கும் தனது காதலை எண்ணி பெருமூச்சு விட்டபடி நாட்டியாலயாவை நோக்கிச் சென்றான்.

ஏனோ அந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்ததாக மாறிவிட்டது. தன் மனம் கவர்ந்தவளின் இஷ்டத்தெய்வம் அங்கே வீற்றிருந்ததாலா இல்லை அவளை அடிக்கடி அங்கேயே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டதாலா என்பது அவனுக்குப் புரியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே சென்றதோ மதியவுணவுக்காக அலமேலு அவனைத் தேடி அங்கே வரவும் தான் அவனுக்குத் தான் வெகுநேரமாய் நடராஜரை வெறித்தபடி அங்கே அமர்ந்திருப்பதே புத்தியில் உறைத்தது.

அலமேலு யோசனையுடன் கூடிய அவனது முகத்தைப் பார்த்தவர் “என்னடா ஆச்சு?” என்றபடி அவனருகில் அமர்ந்து அவன் சிகையைக் கோதிக்கொடுக்க

“ஒன்னுமில்ல பெரியம்மா! நான் கொஞ்சம் யோசனையா இருந்தேன்” என்று மெதுவாக உரைக்க

“அதான் என்ன யோசனைனு கேட்டேன்டா” என்று கேட்டார் அவர் விடாப்பிடியாக.

“அஸ்மிக்கும் ஜெய்கும் எப்போ கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கிங்க பெரியம்மா?”

“அதுக்கு இப்போ என்னடா அவசரம்? இஷி இப்போ தான் கொஞ்சம் நார்மல் ஆகிருக்கா… கொஞ்சநாள் அஸ்மி அவ கூட இருந்தா தான் அவளுக்கு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்டா”

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் பெரியம்மா? அஸ்மியும் ஜெய்யும் எதுக்காக இஷி மைண்ட் நல்லபடியா ஆகுறதுக்காக வெயிட் பண்ணனும்? நான் இஷியைப் பார்த்துக்கிறேன் பெரியம்மா”

அவனது பேச்சைக் கேட்டதும் அலமேலுவிற்கு ஆச்சரியம் எதுவுமில்லை. சில நாட்களாக அவனை அவர் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார். அவர் மட்டுமல்ல, சஞ்சீவினி, ராஜகோபாலனும் கூடத் தான். இஷானியைப் பற்றிய முழுவிவரமும் தெரிந்த பின்னர் அவன் மனம் மாறிவிடுமோ என்று எண்ணியிருந்தவர்களுக்கு இஷானியின் மீதான அவனது அக்கறை கலந்த காதல் இது போன்ற விசயங்களால் மாறவில்லை என்பது புரிந்த பிற்பாடு அவர்களும் அவளது வாழ்க்கையைப் பற்றிய கவலையை விட்டு நிம்மதியடைந்தனர்.

அலமேலுவிற்கு இப்போது ருத்ரா கூறியதைக் கேட்ட்தும் மூளையில் ஒரு எண்ணம் பளீச்சிட்டது. ஆனால் அதை ருத்ராவிடம் சொல்லி விவாதிப்பதை விட அஸ்மிதாவிடம் கேட்டால் அவள் இது சாத்தியம இல்லையா என்பதை தெளிவுபடுத்துவாள் என்று தோணவும் அவனது பேச்சுக்கு வெறுமெனே தலையாட்டிவைத்துவிட்டு அவனைக் கையோடு வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

மதியவுணவுக்கு சஞ்சீவினி வந்த போதே இஷானியின் முகமும், ருத்ராவின் முகமும் சரியில்லை என்பதைக் கண்டுகொண்டார். ஆனால் இதற்கு மாறாய் அலமேலுவும் அஸ்மிதாவும் கண்ணால் பேசிக்கொள்வதும், அஸ்மிதாவின் முகத்தில் மகிழ்ச்சி போட்டி போட்டுக்கொண்டு விகசிப்பதும் அவருக்கு மேலும் யோசனையை உண்டாக்கியது.

மதியவுணவு நேரம் மௌனமாய் கடக்க அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அலமேலு மெதுவாய் விசயத்தைச் சஞ்சீவினியின் காதில் போட ஆரம்பித்தார்.

“பையனும் நல்ல குணமா இருக்கான் சஞ்சு… ஏன் நம்ம காலம் தாழ்த்தணும்? பேசாம ஒரே முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் முடிச்சிடலாம்”

அலமேலுவினி ‘இரண்டு கல்யாணங்கள்’ என்ற வார்த்தையில் ருத்ராவும் இஷானியும் அதிர்ந்தபடி அவரைப் பார்க்க அவரது பார்வையோ அஸ்மிதாவிடம் பாய்ந்தது. இஷானி அஸ்மிதாவை அதிர்ச்சியுடன் பார்க்க அவளோ அப்புறமாக அனைத்தையும் விளக்குவதாகச் சைகை செய்தவள் பாட்டியைக் கட்டிக்கொண்டாள்.

“தேங்க்யூ சோ மச் பாட்டி” என்று சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிடவும் தொண்டையைச் செறுமி தான் இருப்பதை உணர்த்தினார் சஞ்சீவினி.

அனைவரின் பார்வையும் அவர் புறம் திரும்ப அவரோ ருத்ராவையும் இஷானியையும் ஒரு சேர நோக்கிவிட்டு

“அஸ்மி மேரேஜ்ல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… ஆனா உங்களோட கல்யாணம் அப்பிடி இல்லையே… இது நம்ம மட்டுமே பேசி முடிவு பண்ணுற விசயம் இல்ல… மந்தா, வினாயகம் அண்ணா, சந்துருனு மூனு பேர் இருக்காங்க…. மறந்துட்டிங்களா?” என்று எந்த வழியில் அவர்களுக்குப் பிரச்சனை வரும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ருத்ரா இவ்வளவு நேரம் தனது திடீர் திருமணவிசயத்தில் குழம்பி போய் நின்றவன் சுதாரித்துவிட்டு “அவங்க இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னு தான்கா… அவங்களை நான் என்னோட சொந்தமாவே நினைக்கல.. இதைத் தவிர இந்தக் கல்யாணத்துல உனக்கு வேற எதாச்சும் பிரச்சனை இருந்தா சொல்லு” என்றான் அநாயசமாக.

“அவ உன்னோட அக்கா… அது இல்லனு ஆகிடாது ருத்ரா… அது மட்டுமில்லாம மந்தாவுக்கு என் பொண்ணை உன்னோட மனைவியா பார்க்கிறதுக்குப் பிடிக்குமோ என்னவோ? இதால பின்னாடி இஷானி கஷ்டப்பட்டுடக் கூடாது… நீயும் என்னைக்காச்சும் ஒரு நாள் இந்தக் கல்யாணம் நடந்திருக்கவே கூடாதோனு யோசிச்சிடுவியோனு எனக்குப் பயம் ருத்ரா” – சஞ்சீவினி.

“இஷானியை நான் மனசாறக் காதலிக்கிறேன்.. அப்பிடிப்பட்டவன் ஏன் இந்தக் கல்யாணத்தை ஏன்டா பண்ணுனேனு யோசிக்கப்போறேன்? அதுவுமில்லாம என்னோட மனைவிய  விமர்சிக்கிற உரிமையை நான் யாருக்கும் குடுக்க மாட்டேன்கா… என்னை நம்பி உன் பொண்ணு இஷானியை எனக்கு மேரேஜ் பண்ணி வை… மகாராணி மாதிரி பார்த்துக்கிறது கஷ்டம்… ஆனா என்னோட சரிபாதியா அவளை நடத்துவேன்… இது என்னோட அம்மா மேல சத்தியம்” – ருத்ரா.

சஞ்சீவினிக்கு ருத்ராவின் இந்த ஒரு வார்த்தை உள்ளத்தை மகிழ்வித்து விட்டது. வெளியே காட்டிக்கொள்ளாவிடினும் இஷானியின் வாழ்க்கை தனக்குப் பிறகு எப்படி இருக்குமோ என்ற கவலைப்படுவது அவளைத் தத்தெடுத்த நாளிலிருந்தே அவருக்கு தொடர்கதையாகிவிட்டது. இப்போதையை தெளிவு அப்போது இஷானிக்கும் இல்லை எனலாம்.

அதோடு அவர் ருத்ராவை கைக்குழந்தையிலிருந்தே அறிந்தவர். மிக இளம்வயதில் அன்னையை இழந்து தாய்ப்பாசத்துக்குத் தவித்தவன் கட்டாயம் மனைவியைத் துன்பம் அனுபவிக்கவோ, துன்புறுத்தவோ மாட்டான் என்பது அவருக்கு நிச்சயம். ஆனால் மந்தாகினியோ, வினாயகமூர்த்தியோ இஷானியின் உடல்கூறை மனதில் வைத்து இந்த இருவரையும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற தயக்கம் தான் அவருக்கு.

இந்நாள் வரை அவளைப் பற்றிய விசயம் வெளியே தெரியாது மறைந்திருந்தது என்னவோ உண்மை. ஆனால் இன்றைய மீட்டிங்கில் இஷானி வெளிப்படையாகவே தான் ஒரு இடையிலிங்கம் என்பதை சொல்லிவிட்டு வந்ததால் இவ்விசயம் மந்தாகினி அல்லது வினாயகமூர்த்தியின் காதுகளைச் சென்றடையும் சமயத்தில் அவர்களது சுடுசொற்கள் இஷானியையும் ருத்ராவையும் தாக்கிவிடக் கூடாதே என்ற கவலை அவரது உள்ளத்தை வியாபித்திருந்தது.

அவை அனைத்தையும் அவனது உறுதியான பேச்சு தகர்த்தெறிந்துவிட்டது என்றே சொல்லலாம். அதே நேரம் இஷானி தன்னைத் தவிர அனைவரும் இதில் ஆர்வமாய் இருப்பதைக் கண்டுவிட்டு என்ன பேசுவதென்று புரியாது விழிக்க அஸ்மிதா அவளை அமைதி காக்குமாறு உதட்டில் விரல் வைத்து மிரட்டிக் கொண்டிருந்தாள்.

ராஜகோபாலன் இஷானியை அழைத்துத் தன்னருகில் அமரவைத்துக் கொண்டவர் “என்னடாமா உனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா?” என்று கேட்டுவைக்க அவர்கள் அமர்ந்திருந்த சோபாவின் அருகில் நின்றிருந்த அஸ்மிதா “ஆர்.கே என்னோட எல்லா ப்ளான்லயும் மண்ணை அள்ளி போட்டுடுவாரு போலயே” என்று மானசீகமாக நொந்து கொண்டாள்.

பின்னே என்னவாம்? சிவனே என்று அலுவலக வேலையில் கண்ணாய்  இருந்த ஜெய்கு போன் செய்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்களின் திருமணப்பேச்சை வீட்டில் எடுக்கப் போவதாகச் சொன்னதே அவள் தானே.

ருத்ரா இஷானியின் மீது உயிராய் இருப்பதையும் அவளிடமும் இதற்கு நேர்மறையான பிரதிபலிப்பு இருப்பதையும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள் அஸ்மிதா. என்ன தான் ருத்ராவின் சீண்டல்களுக்கு இஷானி சீறினாலும் தங்களின் அறையில் அவள் அதை எண்ணிச் சிரிப்பதையும் அவனறியா வண்ணம் காலையுணவை அர்ஜூனுக்கு ஊட்டும் சாக்கில் அவளது விழிகள் ருத்ராவைத் தொட்டு மீள்வதையும் அஸ்மிதாவோடு சேர்ந்து அந்த வீட்டில் அனைவருமே கவனித்திருந்தனர்.

அப்படி இருக்க தனது உடல்கூறை காரணமாக வைத்து அவள் திருமணத்துக்கு மறுப்பது அஸ்மிதாவுக்குப் பத்தாம்பசலித்தனமாகத் தோணியது. அவளைப் போன்ற இடையிலிங்கப்பிரிவினரில் பலர் திருமணம் முடித்து குழந்தைக்குட்டிகளுடன் அமோகமாக வாழ்வதை கேள்விப்பட்ட அஸ்மிதா இன்னும் சிலர் தாங்கள் இடையிலிங்கம் என்பதே தெரியாமல் இயல்பான பெண்ணாக வாழ்வதையும் சஞ்சீவினியின் வாயிலாக அறிந்த பின்னர் தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்.

தனது திருமணவிஷயத்தை ஆரம்பித்தால் அதில் இடைச்செருகலாக இஷானி, ருத்ரா விவாகத்தையும் சேர்த்துவிடலாம் என்பது அவளது எண்ணம். அதேநேரம் அஸ்மிதாவுமே அவளது மனம் கவர்ந்தவனின் கரம் பற்றும் நாளுக்காகத் தானே காத்திருக்கிறாள். அது சீக்கிரமாக நடந்தால் அவளது காதலும் கைகூடும், இஷானியின் வாழ்க்கையும் ருத்ரா என்ற நல்லவனின் பொறுப்பில் அடங்கும் என்ற கணக்குடன் தான் ருத்ராவிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தாள் அவள்.

வீட்டில் பெரியவர்களிடம் சென்று பேச அவளுக்கு வெட்கமும்  தயக்கமுமாக இருக்க ருத்ராவிடம் சொல்லிவிட்டால் அவன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு கையோடு அவனே அலமேலுவிடம் இஷானியின் மீதான பிரியத்தை வெளிப்படுத்தியது இரட்டை மகிழ்ச்சி.

இதோ இரண்டு திருமணங்களுக்கும் நாள் குறிப்பது ஒன்று மட்டும் தான் பாக்கி. அது பற்றி பேசுவதற்கு ஜெய்யை மாலையில் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்திருந்தார் சஞ்சீவினி. அஸ்மிதாவுக்கு இவற்றை எல்லாம் காணும் போது மகிழ்ச்சியில் சத்தம் போட்டுக் கத்தவேண்டும் போலத் தோன்ற இங்கே கத்தினால் சஞ்சீவினியின் கில்லட் பார்வை தன்னைக் கூறு போட்டுவிடும் என்பதால் தோட்டத்தை நோக்கிச் சென்றவள் ஏனோ திடீரென்று மனதில் உதயமான எண்ணத்தால் நாட்டியாலயாவை நோக்கி நடைபோட்டாள்.

கருங்கற்படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே சென்றவளின் பார்வை அங்கிருந்த ஆடல்வல்லானின் மீது படிய தன்னை அறியாது கூப்பியக் கரங்களுடன்

“தேங்க்யூ சோ மச்! ஜெய் மாதிரி ஒருத்தனை என் வாழ்க்கைக்குள்ள அனுப்பிவைச்சதுக்கு நான் உங்களுக்கு ஆயிரம் தடவை தேங்க்ஸ் சொன்னாலும் அது கம்மி தான்… என்னோட அழகான குட்டி உலகத்துக்குள்ளே இனிமே அவனும் ஒருத்தன்னு நினைக்கிறப்போவே மனசுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு… அப்புறம் மாமாக்கும் இஷிக்கும் கூட சீக்கிரமா கல்யாணம் ஆகப்போகுது…

என்னோட இஷியை உள்ளங்கையில வச்சு தாங்குற மாதிரி ஒருத்தரை அவ லைப்குள்ள அனுப்புனதுக்கும் உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்… ஐ திங் உங்களோட அருள் இப்போ என் மேலேயும் இஷி மேலேயும் அன்லிமிட்டட்டா பொழியுது… இது எங்களுக்கு லைப் லாங் கிடைக்கணும் பகவானே! எங்க மனசுக்குப் பிடிச்சவங்களோட அழகான ஒரு வாழ்க்கையை நாங்க வாழணும்… இது என்னோட குட்டி வேண்டுதல்… மறக்காம அப்ரூவ் பண்ணிடுங்க” என்று கடவுளிடம் செல்லமாகக் கட்டளையிட்டவள் மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛