🌞 மதி 30 🌛

நீங்கள் சந்திக்கும் 200 பேரில் ஒருவர் இடையிலிங்க மனிதராக இருக்கலாம்என்கிறது .நா. இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இதுவரை, இந்தியாவில் எத்தனை இடையிலிங்க மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. வருடத்துக்குச் சுமார் பத்தாயிரம் பேர் இடையிலிங்க மனிதர்களாகப் பிறக்கிறார்கள் என்றும், அதில் எட்டாயிரம் பேர்வரை சிசுவிலேயே கொல்லப்படுகிறார்கள் என்றும், ஆயிரம் பேர்வரை செக்ஸ் செலக்டிவ் சர்ஜெரிக்கு உட்படுத்தப்பட்டு இறப்பைச் சந்திக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது ஆனந்தவிகடன் (20.12.2017)

தேவ் அவன் தந்தையுடன் இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கான்பரன்சுக்குச் செல்வதற்கான வேலைகளில் இறங்கியிருந்தான். விஸ்நாதனுக்கு முன்பு போல வெளிநாட்டுப் பிரயாணங்கள் ஒத்துக்கொள்வதில்லை. எனவே சாந்தினியைத் தன் உடன் வருமாறு கூற அவரோ தன்னால் வீட்டையும் மகனையும் இந்நிலையில் விட்டுவிட்டு வர இயலாது என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டார்.

வேறு வழியின்றி தேவ்வும், ரிஷியும் அந்த கான்பரன்சில் கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. தேவ் அதற்குள் ஆர்.எஸ்க் கெமிக்கலின் பங்கை கையகப்படுத்துவதற்கான தனது முயற்சியின் கடைசிக்கட்டத்தைச் செம்மையாக முடித்துவைப்பதற்கான வேலைகளில் இறங்கியிருந்தான். அது பற்றி அவன் விஸ்வநாதனிடமோ சங்கரராமனிடமோ விவாதிக்க விரும்பவில்லை.

இப்போது கூட ஆஸ்திரேலியா செல்வதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் சாந்தினி சங்கரராமனிடம் வழக்கமாகப் பேசும் விஷயத்தை ஆரம்பித்தார்.

“மாமா! ரஞ்சனியோட தூரத்துச்சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்காளாம்..  எம்.பி.ஏ முடிச்சுட்டு ஒரு எம்.என்.சியில ஒர்க் பண்ணுறானு சொன்னா… அவளை நம்ம தேவ்வுக்கு பார்க்கலாமானு…” என்று சொல்லும் போதே தேவ்வின் பார்வை அவரைத் துளைப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தினார் அவர்.

தேவ் அவரை எதுவும் சொல்லாமல் சங்கரராமனை நோக்க அவர் மருமகளிடம் “அவனை இப்போதைக்கு நம்ம இந்த விசயத்துல கட்டாயப்படுத்த வேண்டாம் சாந்திம்மா… அவன் கான்பரன்சை முடிச்சிட்டு வரட்டும்” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்ப

சாந்தினி இதற்கெல்லாம் அசராதவராய் “இது வரைக்கும் இப்பிடி சொல்லி சொல்லித் தான் இவன் தப்பிச்சிட்டான் மாமா! இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல… இவன் ஆஸ்திரேலியா போயிட்டு வந்ததும் அந்தப் பொண்ணைப் போய் பார்க்குறோம்… சம்பந்தம் பேசுறோம்… இது தான் என் முடிவு” என்றார் பிடிவாதமாக.

தேவ் விருட்டென்று எழுந்தவன் “லவ், மேரேஜ் எல்லாமே என் லைப்ல முடிஞ்சு போன சேப்டர்ஸ்…. அது இன்கம்ப்ளீட்டா நிக்கிறது என்னோட தலையெழுத்து… அதை கம்ப்ளீட் பண்ணுறதுக்காக இன்னொரு பொண்ணை என் வாழ்க்கையில நான் அனுமதிக்கவே மாட்டேன்… நீங்க என்ன பிடிவாதம் பிடிச்சாலும் மனுவைத் தவிர என் மனசுல வேற யாரையும் ஒய்பா நினைச்சுப் பார்க்க முடியாதும்மா.. ப்ளீஸ்! என்னைக் கம்பெல் பண்ணாதிங்க” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

விறுவிறுவென்று படிகளில் ஏறியவன் தனது அறையை அடைந்து மானசாதேவியின் புகைப்படத்தின் முன்னே நின்ற பிறகே அவனது படபடப்பு குறைந்தது.

அவனது விரல்கள் அப்புகைப்படத்தை வருடிக் கொடுக்க ஆரம்பிக்க இதழ்களோ வழக்கம் போல புலம்ப ஆரம்பித்தது.

“எல்லாத்துக்கும் நான் தான் காரணம் மனு! நான் கொஞ்சம் கேர்புல்லா இருந்திருந்தா இன்னைக்கு நீயும் சாரும் என்னை விட்டுப் போயிருக்க மாட்டிங்க…என்னால உன் இடத்துல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல”

அவன் புலம்பிக் கொண்டிருக்கும் போதே போன் அடித்தது. அவன் ஏற்பாடு செய்திருந்த ஆள் தான் அழைத்திருந்தான். போனை எடுத்தவன் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தான்.

“ஹலோ தேவ் சார்… நான் தான்”

“ம்ம்… பிளான் என்ன லெவல்ல இருக்கு? எப்போ எக்ஸிகியூட் பண்ணப் போற?”

“நாளைக்கே பண்ணலாம்னு இருக்கேன் சார்… ஆனா காயப்படுத்துற அளவுக்குப் போகணுமானு யோசிக்கிறேன்”

மறுமுனையில் பேசியவனின் குரலிலிருந்த தயக்கம் தேவ்விற்கு எரிச்சலூட்டியது. அதை மறைக்காமல் குரலில் காட்டினான்.

“நம்ம நினைச்சது நடக்கணும்னா காயப்படுறதை பத்தியோ காயப்படுத்தப் போறதை பத்தியோ யோசிக்கவே கூடாது… நான் சொன்னதை செய்… அந்தப் பொண்ணு மத்தப்பொண்ணுங்களை மாதிரி இல்ல… அவளை அவ்ளோ ஈசியா பயமுறுத்த முடியாது… பட் அவளுக்குப் பிடிச்சவங்க அவ கண்ணு முன்னாடியே காயப்பட்டா அவளால தாங்கிக்க முடியாது… அந்த சான்ஸை யூஸ் பண்ணி நீ வேலையை முடிச்சிடு… காயம் கொஞ்சம் பலமாவே இருக்கட்டும்… எவ்ளோ பிளட் வெளியே போகுதோ அவ்ளோ சீக்கிரம் அவ நம்ம சொன்னதுக்கு ஒத்துப்பா… இஸ் தட் கிளியர்?” என்று தெளிவாக விளக்கிவிட்டுப் போனை வைத்தவன் தான் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தபடி அவனது அறை சோபாவில் அமர்ந்தான்.

அதே நேரம் தேவ் யாருக்குக் கட்டளையிட்டானோ அந்த ஆள் அவன் சொன்ன திட்டத்தைச் செயல்படுத்தும் நாளுக்காகக் காத்திருந்தான். அவனது கணக்கு தப்பாகாத வகையில் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆளான பாலா திட்டத்தில் துளியும் பிசிறின்றி நிறைவேற்றியதன் பலனாக ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பழைய ஆலையில் ஜெய்யைக் கட்டிப் போட்டு வைத்திருந்தான் அவன்.

ஜெய்யின் நெற்றியில் இரத்தம் வழிந்து கொண்டிருக்க அவனுக்குக் காயம் சற்று பலம் தான். அந்நேரம் பார்த்து அஸ்மிதா அவனுக்குப் போன் செய்ய பாலா தாங்கள் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது என்ற உற்சாகத்துடன் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தான் அவன்.

எடுத்த உடனேயே அஸ்மிதா ஜெய் தான் பேசுகிறான் போல என்று எண்னி படபடக்கவும்

“ஹலோ மேடம் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க… நான் ஒன்னும் நீங்க சொல்லுற ஜெய் இல்ல” என்றவனின் பேச்சில் அஸ்மிதா அமைதியானாள். பின்னர் சுதாரித்தபடி

“அப்போ ஜெய் எங்கே? அவனோட போன் உங்க கிட்ட எப்படி வந்துச்சு? யாரு நீங்க?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினாள்.

“நீங்க சொல்லுற ஜெய் எங்களோட கஸ்டடியில தான் இருக்கான்… சார் கொஞ்சம் பெரிய அமவுண்டை கடன் வாங்கிட்டு சரியா கட்டாம ஏமாத்திட்டுச் சுத்துனாரு… அதான் எங்க பாஸ் ஆளைத் தூக்கச் சொல்லிட்டாரு”

இவன் இப்படி பேச ஆரம்பிக்கவுமே அஸ்மிதா ஒரு புறம் ஜெய்கு என்னவாகியிருக்குமோ என்று பதறியவள் மறுபுறம் புத்திசாலித்தனமாக அவனது பேச்சை போனில் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

“என்ன மேடம் என்னை பேச வச்சு ரெக்கார்ட் பண்ணுறிங்களா? அப்பிடி எதுவும் பண்ணி போலீஸ் கிட்ட போலாம்னு எண்ணம் இருந்துச்சுனா இந்த ஜெய்யை மறந்துடுங்க… ஆள் இப்போவே பாதி உயிரா ஆகிட்டான்… உங்களோட புத்திசாலித்தனம் அவனோட மீதி உயிரையும் குடிச்சிடாம பார்த்துக்கோங்க”

“ஏய்! ஜெய் மேல கையை வச்சேனா நான் உன்னை சும்மா விடமாட்டேன்டா” என்று பல்லைக் கடித்த அஸ்மிதா இப்போது என்ன செய்தால் ஜெய்யைக் காப்பாற்ற முடியும் என்பது புரியாமல் விழித்தாள்.

பாலாவே அதற்கு ஒரு உபாயமும் சொல்ல ஜெய்யின் மீதுள்ள நம்பிக்கையால் அவள் அந்தப் பாழடைந்த ஆலைக்குச் செல்லும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

அங்கே செல்ல எத்தனிக்கும் போது இஷானி எதிர்பட அவளிடம் மீண்டும் பொய் உரைக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டதை எண்ணி வருந்தியவள் ஜெய்யைப் பார்த்துவிட்டு வருவதாக முழுவதும் பொய்யும் இல்லாமல் அதே சமயம் மெய்யுமில்லாமல் ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

பாலா சொன்ன முகவரிக்குத் தனித்து வரத் துணிந்தவளுக்கு பயம் எல்லாம் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் அந்த ஆள் ஜெய் இப்போது பாதி உயிராக இருப்பதாகச் சொன்னது தான் அவள் பதற்றமாக இருந்ததற்கு முக்கியக்காரணம். ஆனால் அங்கே வந்த பின்னர் தான் தான் தனியாக வந்திருக்க கூடாதென்பது அவள் புத்தியில் உறைத்தது. ருத்ராவிடமாவது விஷயத்தைக் கூறியிருக்கலாம் என்று காலம் தாழ்ந்து யோசித்தவள் இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லையே என்ற எண்ணத்துடன் போனை எடுத்து ருத்ராவின் எண்ணுக்கு அழைக்க முயலும் போது ஜெய்யின் அப்பாவி முகம் நினைவுக்கு வந்தது.

தான் ருத்ராவுக்கு அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவன் கண்டிப்பாக காவல்துறை உதவியை நாடுவான். அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் ஜெய்யை அந்த ஆள் எதுவும் செய்யமாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம் என்ற எண்ணம் மூளைக்குள் குறுகுறுவென்று ஓட அதோடு

“கவனமா கேளுங்க மேடம்! போலீசுக்குத் தகவல் சொல்லலாம்னு யோசிச்சிங்கனா பணம் போனா போகுதுனு இவனைப் போட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்போம்… எங்க பாஸுக்குப் பணத்தை விட அவரோட மான மரியாதை முக்கியம்… போலீஸ் கேஸ்னு அவரை அலைய விடலாம்னு கனவுக்கோட்டை கட்டாதிங்க… அங்கேயும் எங்க ஆட்கள் இருக்காங்க” என்று எச்சரித்தவனின் குரலும் காதில் ஒலித்தது.

இவ்வளவுக்குப் பின்னரும் போலீசை அழைக்க அவள் என்ன பைத்தியக்காரியா? எனவே முதலில் இந்த ரௌடியிடமிருந்து ஜெய்யைக் காப்பாற்றிவிட்டு பின்னர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று திட்டம் தீட்டினாள். அதைச் செயல்படுத்தும் உத்வேகத்தோடு இவ்வளவு தூரம் தனியாகத் தானே வந்தோம், இனி பிரச்சனை வந்தாலும் சமாளிப்போம் என்று குருட்டுத்தைரியத்துடன் அந்த ஆலைக்குள் காலெடுத்து வைத்தாள்.

உள்ளே ஆண்டுக்கணக்காக உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த துரு ஏறிய இயந்திரங்களும், சிலந்திவலையுமாக இருக்க தரையில் ஷூ அணிந்த காலடித்தடங்கள் பதிந்திருந்தன. அஸ்மிதா உள்ளே நடக்கும் போதே அந்த இடத்தின் அமைதியைக் கிழித்தபடி அவளது காலணி எழுப்பிய ஓசை டக்டக்கென்று கேட்க மயான அமைதியுடன் இருந்த அந்த ஆலையில் மையப்பகுதியில் ஒரு பெரிய இயந்திரத்தின் அடிப்பாகத்துடன் கட்டிப் போடப்பட்டிருந்தான் ஜெய்.

அவன் தலை சரிந்திருக்க, நெற்றியில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதோடு அடி பட்டதற்கு அடையாளமாக சட்டை கசங்கி, தலைமுடியெல்லாம் கலைந்து போயிருக்க அஸ்மிதாவின் கண்கள் முதல் முறையாக அவளது காதலனின் காயங்களைக் கண்டு கலங்கியது.

வேகமாக அவனை நோக்கிச் சென்றவளின் பார்வையில் பட்டனர் பாலாவும் அவனுடைய ஆட்களும். ஜெய்யை ஆதரவாகத் தழுவிக் கொண்டவளின் கைகள் அவன் கன்னத்தில் தட்டி “ஜெய் நான் தான் வந்திருக்கேன்… கண்ணைத் திறந்து பாரு” என்று அழுகையை அடக்கியக்குரலில் அவனை மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றாள்.

ஜெய்யும் உணர்வு வந்தவனாய் கண்ணைச் சிரமத்துடன் திறந்தவன் தன்னைத் தழுவியிருந்தவளின் கரங்கள் கொடுத்த அழுத்தத்தில் அவனது உடலில் பட்ட காயம் வலி எடுக்க “ஷ்ஷ்! ம்மா” என்று முனக, அஸ்மிதா அங்கிருந்தவர்களை எரிப்பது போல முறைத்தாள்.

பாலா என்பவனோ “சும்மா முறைக்காதிங்க மேடம்.. இந்தாளு அவரு தங்கியிருந்த ஆசிரமத்தோட கன்ஸ்ட்ரெக்சனுக்குப் பணம் தேவைப்படுதுனு கடன் வாங்கினாரு… ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல, நாப்பத்தஞ்சு லட்சம்… லாஸ்ட் டைம் டியூ ஒழுங்கா கட்டலைனு மன்னிச்சு விட்டோம்… ஆனா இந்த மாசமும் வட்டியைத் தரலனா சும்மா விட முடியுமா?” என்று கேட்க

“அதுக்குனு ஒரு மனுசனை இப்பிடியா மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பிங்க? யோவ் பணம் கூட இப்போ இல்லைனா அப்புறமா சம்பாதிச்சிக்கலாம்… ஆனா இவனோட உயிர் போயிடுச்சுனா நீயா திருப்பிக் குடுப்ப?” என்று ஆவேசத்துடன் அவன் சட்டையைப் பிடித்த அஸ்மிதாவை ஜெய்யின் குரல் தடுத்து நிறுத்தியது.

“சண்ட்..டை போடாதிங்க…” என்று அவளைத் தடுத்தவன் பாலாவைச் சிரமத்துடன் ஏறிட்டுப் பார்த்து “ஆசிரமத்துக்கு முன்னாடி மாதிரி டொனேசன் வர்றது இல்ல… அதனால என் முக்கால் வாசி சேலரியை அங்கே தான் குடுத்திட்டிருக்கேன்… அடுத்த மாசம் கண்டிப்பா இன்ட்ரெஸ்ட் கட்டிடுவேன்” என்று சொல்லும் போதே அவன் முகம் வலியில் சுழித்தது.

அஸ்மிதா இவ்வளவு நேரம் இருந்த கோபம் மாறி அவனது வலியில் சுழித்த முகத்தில் பதறிப்போய் மீண்டும் அவனருகில் சென்று அமரவும் பாலாவுக்கு தேவ் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

“தைரியசாலிங்களை அடிச்சோ உதைச்சோ நம்ம வழிக்குக் கொண்டு வர முடியாது பாலா.. அவங்களுக்கு செக் வைக்கணும்னா முதல்ல அவங்களைச் சார்ந்தவங்களைத் தான் அட்டாக் பண்ணனும்… தனக்குப் பிடிச்சவங்களுக்கு ஒரு பிரச்சனைனு வந்துட்டா தைரியமான மனசு உள்ளவங்க உடைஞ்சு போயிடுவாங்க… அந்த உடைஞ்சு போற நேரத்தைத் தான் நம்ம யூஸ் பண்ணிக்கணும்… அந்த நேரத்துல அவங்களோட புத்திசாலித்தனம், தைரியம் எதுவுமே வேலை செய்யாது… அப்போ நம்ம காரியத்தைச் சாதிக்கணும்”

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இந்தப் பெண் உள்ளே வரும் போதே கட்டிப்போடப்பட்டிருந்தவனின் நெற்றிக்காயத்தைக் கண்டு பதறியது, பின்னர் தன்னிடம் கோபத்துடன் நியாயம் கேட்டது, காதலன் வலியில் துடிக்கிறான் என்றதும் மீண்டும் அவனுக்கு என்னவோ என்று பதறித் துடித்தது இவை எல்லாவற்றையும் பார்த்ததும் பாலாவுக்கு ஒன்று மட்டும் தெளிவானது.

வாழ்க்கையில் காதலிக்கவே கூடாது என்பது தான் அது. காதல் என்ற ஒன்று எப்பேர்ப்பட்ட புத்திசாலியையும் முட்டாளாக்கிவிடும் வல்லமை படைத்தது. எம்மாதிரியான தைரியசாலியையும் கோழையாக்கி வேடிக்கை பார்க்கும் குணம் கொண்டது. இப்போது அஸ்மிதாவின் நிலையும் அதுவே. இயல்பிலேயே தைரியமானவளான அவள் ஜெய்யின் காயத்தின் முன்னே கோழையாகிப் போய் நின்றாள்.

இப்போதைக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து அவனைக் காப்பாற்றினால் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் பாலாவிடம்

“என்ன பண்ணுனா என்னோட ஜெய்யை விடுவிங்க?” என்று நேரடியாகக் கேட்க அவன் சில முத்திரைத்தாள்களை அவள் கண் முன் காட்டினான்.

“இதுல அவன் குடுக்க வேண்டிய கடனுக்கு நீங்க தான் கேரண்டினு கையெழுத்து போட்டுக் குடுங்க… போதும்… அவன் அடுத்த மாசம் வட்டி தர்றேனு ஒத்துக்கிட்டதால தான் நான் இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்கேன்” என்று சொல்ல அஸ்மிதாவுக்கு இப்போதைக்கு இந்த ரௌடி கும்பலிடமிருந்து ஜெய்யைக் காப்பாற்றினால் போதுமென்று தோணவே அவனிடமிருந்து முத்திரைத் தாள்களை வாங்கியவள் என்னவென்று வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திட ஆரம்பித்தாள்.

இயந்திரத்துடன் கட்டிப்போடப்பட்டிருந்த ஜெய்யால் அவன் விழிகளையே நம்பமுடியவில்லை. படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்திடும் அளவுக்குத் தன் மேல் இவளுக்குக் காதலா என்று அதிசயித்தவனின் உள்ளம் இப்போது தேவையே இல்லாமல் அவளை இச்சிக்கலுக்குள் கொண்டு வந்துவிட்டோமோ என்று துடிக்க ஆரம்பித்தது.

அதற்குள் அஸ்மிதா கையெழுத்திட்டு முடித்தவள் அவனிடம் பேனாவை நீட்டிவிட்டு “இனிமே ஜெய் கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிற வேலை வச்சுக்காதிங்க… இது வரைக்கும் அவனுக்குனு யாரும் இல்லாம இருக்கலாம்…. ஆனா இனிமே நான் இருக்கேன்… அவன் மேல கை வைக்கிற எண்ணம் உங்களுக்கோ உங்க பாஸுக்கோ இனிமே வரவே கூடாது” என்று எச்சரித்தவளின் பார்வையில் அவள் எதிரே நின்ற தடி தாண்டவராயனின் மீதும் அவனது அடிபொடிகளின் மீதும் துளி கூட பயமில்லை.

பாலா முத்திரைத் தாள்களை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டவன் போனை எடுத்து “பாஸ் வேலை பக்காவா முடிஞ்சிடுச்சு” என்று தகவல் தெரிவித்தவன் அவனது ஆளுக்கு ஜெய்யின் கட்டுகளை அவிழ்க்குமாறு சைகை காட்டினான்.

கட்டுகளை அவிழ்த்தப் பிறகு ஜெய் தடுமாறியபடி எழுந்திருக்க அஸ்மிதா தனது கைக்குட்டையை அவனது நெற்றிக்காயத்தில் ஒற்றியெடுத்தவள் சுற்றி இருந்தவர்களை முறைத்தபடி அவனுடன் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினாள்.

ஜெய் நொண்டிக் கொண்டே வர “ரொம்ப அடிச்சிட்டாங்களா ஜெய்?” என்றவளின் குரலில் இருந்த வலி அவன் மனதை வருந்த செய்யவே இல்லையென்று மறுத்தவன் அவளைப் பிடித்திருந்த தனது கரங்களை விலக்கிக் கொண்டான்.

ஸ்கூட்டியில் வந்திருந்தவள் அவனை பின்னே அமரச் சொல்லிவிட்டு மெதுவாக வண்டியைக் கிளப்பினாள். நேரே அவர்கள் துளி நிறுவனத்துக்கு மாதாந்திர பரிசோதனைக்கு வரும் மருத்துவர் கமலகண்ணனின் மருத்துவமனையை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்தினாள். ஜெய் அவள் பின்னே அமர்ந்திருந்தவன் இந்தச் சிலமணி நேரங்களில் தனக்காக அவள் துடித்த துடிப்பைக் கண்ணெதிரே கண்டவன் அவளது இந்த அன்பில் உள்ளம் உருகியவனாய் பின்னே அமர்ந்திருந்தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛